எங்கள் தெருவில் நேற்று ஒரு தாய் தன் ஐந்து குட்டிகளுடன் தஞ்சம் அடைந்துள்ளது, தெருநாய் காய்ச்சல் பொல்லாதது, அந்த தெருவே தனதென்று நிறுவ வேண்டி ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழித்தும் மலம் கழித்தும் எல்லை நிர்ணயிக்கும், இதை இங்கே கட்டுப்படுத்தவே முடியாது.
இந்த புதிய குடும்பத்துக்கு உணவளித்தால் ஏற்கனவே உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் அந்த உணவை தின்று ,இந்த தாயையும் குட்டியையும் கடித்து தாக்கி விரட்டுகின்றன, ஒரு குட்டியை கொன்று விட்டன, இன்று நகராட்சியில் அகற்றியுள்ளனர், ஆனாலும் தாயின் வைராக்கியம் இந்த புதிய இடத்தில் பிடித்து நிற்கிறது.
கார்த்திகை மாதம் இங்கே ஒவ்வொரு தெருவிலும் இந்நிலை கண்கூடு, அதிவேக நெடுஞ்சாலையில் கூட மாடுகளும் நாய்களும் இங்கே சாதாரணமாக திரியும் , ஊடே பாய்ந்து குறுக்கிடும் .
நகராட்சியின் தீர்வு வேடிக்கையானது,
தீர்வு 1 : வருடத்துக்கு ஒரு முறை நாய்களை பிடித்து போய் கருத்தடை செய்து திரும்ப கொண்டு வந்து விடுவர், அந்த கணக்கில் பழைய நாய்களும் அடக்கமாயிருக்கும்,
தீர்வு 2: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலை 10 முதல் மதியம் 12 வரை நாய்கடி தடுப்பூசி இலவசமாக செலுத்துகின்றனர், தம் தெரு நாய்களிடம் கடிபட்டவர்கள் ஆதார் அட்டை மட்டும் காட்டி ஐந்து நாள் தொடர்ந்து சென்று இலவச தடுப்பூசி செலுத்தி பயனடையலாம்.
ஆனால் நகராட்சி இவற்றிற்கென்று சரகத்துக்கு ஒன்றாக தனியே விலங்குகள் புகலிடம் அமைத்தால் மட்டுமே இதற்கு நல்ல நிரந்தர தீர்வாக அமையும், அங்கிருந்து வேண்டியவருக்கு தத்து எடுக்க தரலாம், இதன் மூலம் இந்த உயிர்கள் மதிக்கப்படுகின்றன, தெருவில் விலங்குகள் திரியாத சுற்றம் அமையும்.
கொள்வாரின்றி இருக்கும் எந்த உயிருக்கும் இது தான் நிலை,அதிகமாக விளைந்த தக்காளி உரிய விலை போகாததால் ஆற்றில் கொண்டு கொட்டுவது போல இங்கே இந்த உயிர்கள் சீப்படுகின்றன.