விருமாண்டி திரைப்படத்தில் s.n.லட்சுமி நடித்த அப்பத்தா கதாபாத்திரம் முக்கியமான ஒன்று, தனி மனுஷியாக இயற்கை விவசாயம் செய்பவர், விருமனின் தந்தை புலியேறு படியானுக்கு இயற்கை விவசாயம் கற்றுத் தந்தவர்.
ஜல்லிக்கட்டில் மாடுமுட்டியதில் ரத்தம் கொப்பளிக்கும் விருமன் தன் பேச்சை மீறி மாடு பிடித்தான் என்ற செல்லக் கோபத்தில் , அவனது ஏறு தழுவிய காயத்தில் தன் முன் மண்டையை வைத்து வலிக்கும் படி முட்டுவார் பாருங்கள்,
ஜல்லிக்கட்டில் என் பேரன் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் நீயா தருவே என்று மேடையில் உள்ளவர்களை நோக்கி ஆவேசப்படுகையில் , அங்கு நிற்கும் ராசுக்காளை (பாலாசிங்) நிலத்தை கொத்தாள தேவருக்கு தந்தால் பணம் நிறைய வாங்கித்தருவதாக சொல்ல, அவரிடம் அப்பத்தா பேசும் வசனம் கவனியுங்கள், அந்த மனுஷியின் விசாலமான அறிவு புலப்படும்,
"அஞ்சு அழகில ஓரழகில்லாத கருவா நாயி நீ , என் நெலத்த வெல பேசறியா? நீ என் நெலத்த இங்க்லீஷ் உரம் போட்டு கெடுத்துருவ " நான் உனக்கு நெலத்த தரமாட்டேன், அவங்கப்பனுக்கு நான் தான் வெவசாயம் சொல்லித் தந்தேன், அதே போல விருமனுக்கும் சொல்லித் தரப்போறேன்" என்பார்.
இந்த ஐந்து அழகு என்ன என்று சிறுபஞ்சமூலத்தில் 37 ஆம் பாடலில் வருகிறது,
"
மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு"
1.முதல் அழகு முடி
2.இரண்டாம் அழகு மார்பு
3.மூன்றாம் அழகு நகம் (உகிர்)
4.நான்காம் அழகு காது
5.ஐந்தாம் அழகு பல்
என்று காரியாசன் இப்பாடலில் கூறியுள்ளார்.
அப்பத்தாவுக்கு ஐந்து என்றால் பிரியம் போலும், விருமன் அப்பத்தா சவ மரியாதையில் குடித்து விட்டுப் பேசும் வசனம் உண்டு,
ஏ பெரிய மனுஷய்ங்களா!!! நீங்கள்லாம் மூணு சாமி (சிவன், விஷ்ணு ,பிரம்மா ) கும்புடறவய்ங்க, ஆனா அஞ்சு சாமி கும்பிடனும்னு அப்பத்தா சொல்லிருக்கு , நிலம் , நீர் காற்று(அபான வாயுவை சுட்டுவார் ) ,நெருப்பு(சிகரெட் போல காட்டுவார் ), ஆகாயம் , ஒண்ணு தப்பு விட்டாலும் பஞ்சம் வந்துரும், நான் அஞ்சு சாமி கும்புடறவன்.
"மேல்கதிர் வீட்டுக்கு
நடுக்கதிர் மாட்டுக்கு
அடிக்கதிர் மண்ணுக்கு"
அப்படி விட்டதாலதான் இங்க பதினஞ்சடில தண்ணி என கல்லை கிணற்றை நோக்கி விட்டு எறிவார்,(ப்ளக் என சத்தம் மட்டும் கேட்கும், கிணற்றைக் காட்ட மாட்டார்கள், கிணற்றின் நீர் செழுமையைக் காட்ட அங்கே கமலையை அமைத்திருப்பார் கலை இயக்குனர்.)
தேனி மாவட்டங்களை ஒட்டிய சுற்று வட்டார கிராமங்களில் மூணு சாமி கோவில் வழிபாடு என்பது மிகவும் புகழ் பெற்றது,சிவனின் அம்சமாக காசி கலியுக சிதம்பர ஐயன், பிரம்மாவின் அம்சமாக விருமன் மற்றும் அவன் தங்கை பேச்சி, விஷ்ணுவின் அம்சமாக ஆங்காள ஐயன் ஆகிய மூவரும் தனித்தனிக் கோயிலில் தரிசனம் தருகின்றனர்.
இந்த நாட்டார் காவல் தெய்வங்கள் மற்றும் தலவரலாறு "கருமாத்தூர் காட்டுக்குள்ளே" பாடலில் முழுக்க திரித்தலின்றி அப்படியே வருகிறது, அது பற்றி தனிப்பதிவு வரும்.
#17yearsofvirumaandi,#விருமாண்டி,#கமல்ஹாசன்,#இசைஞானி,#பசுபதி,#நெப்போலியன்,#நாசர்,#அபிராமி,#sn_லட்சுமி,#ரோஹினி,#சண்முகராஜன்,#கு_ஞானசம்பந்தம், ,#பாலாசிங்,#oak_சுந்தர்,#காந்திமதி,#பிரமிட்_நடராஜன்,#பெரியகருப்பத்தேவர்,#சுஜாதா_சிவகுமார்,#ராஜேஷ்,#DOP_கேஷவ்_பிரகாஷ்,#art_பிரபாகர்,#editing_ராம்_சுதர்ஷன்,#கவிஞர்_முத்துலிங்கம்