நாயகன் 3
மீண்டும் நாயகன் படம் பற்றி, எந்த படத்தின் டைட்டில் ஸ்க்ரோலையும் நான் விருப்பத்துடன் பார்ப்பேன்,நாயகன் படத்தின் டைட்டில் ஸ்க்ரோல் அட்டகாசமான கதை திருப்பத்தின் போது வருகிறது,
தந்தையை சுட்டுக் கொன்ற போலீசை கொன்றுவிட்டு பம்பாய்க்குத் தப்பும் வேலு நாயகரின் இளம் பிராயம் , மும்பையின் பரபர நெரிசல், தாராவியில் தமிழ் மக்கள் வசிக்கும் சூழல்,நாயகனை கடத்தல் தொழிலுக்கு வரச்செய்யும் சூழ்நிலை என மிக அழகாக நம்முள் பதிய வைக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தந்தை யூனியன் லீடர், 1950 களில் கம்யூனிச சிந்தனை உள்ளவர்களை கம்யூனிச அனுதாபிகளை மற்ற முதலாளிமார்கள் வெறுத்தனர்.
அது போல ஒரு போராட்டத்தில் தந்தை குற்றவாளியாக தேடப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார், தந்தை கிட்டியின் அறிமுகமும் முடிவும் வெறும் வெறும் இரண்டே நிமிடங்கள் தான் வரும், ஆனாலும் மிகுந்த அழுத்தமாக நம்முள் பதியும் காரணம் பின்னணியில் ஒலிக்கும் சூழலுக்கேற்ப மாறி மாறி பயணிக்கும் இசை , அபாரமான நேச்சுரல் லைட்டிங் ஒளிப்பதிவு,பின்னர் வேலு ஊர் விட்டதும் ஒரு அகண்ட மௌனம்.
அது கழிந்து இசைஞானி குரலில் ஐந்து நொடிகள் வரும் ஆலாபனை முடிந்து இசை எதுவுமற்ற தென் பாண்டிச் சீமையிலே பாடல் சரியான இடத்தில் பாடலாக ஒலிக்கும்,பின்னர் கமல் பாடலை வாங்கிப் பாடுகையில் இசை கூடவே ஒலிக்கும், இசைஞானி எழுதிய ஒரு சிறிய தாலாட்டு பாணி பாடலை விஸ்தரித்து படத்திலும் ஆடியோ வெளியீட்டிலும் மாற்றங்களை செய்து எத்தனை ஆப்ஷன்களை பரீட்சித்துள்ளனர் பாருங்கள், விசுவல் மற்றும் இசை ப்ளெண்ட் ஆகி அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கமல்ஹாசனின் வளர்ப்புத் தந்தையாக வரும் ஹுசைன் பாய் இந்திய பேரலல் சினிமாவின் முக்கியமான நடிகர் , அவரின் பெயர் எம்.வி. வாசுதேவராவ், இவர் மணி ரத்னத்தின் முதல் படமான பல்லவி அனுபல்லவி படத்திலும் வந்திருந்தார்,
இவர் ஷ்யாம் பெனகல் இயக்கிய தெலுங்குப் படமான கொண்டுராவில் பிரதான கதாபாத்திரம் ஏற்றிருந்தார்.மிருனாள் சென் இயக்கிய தெலுங்குப் படமான ஒக்க ஊரி கதா படத்திலும் பிரதான கதாபாத்திரம், ஷிவ்ராம் காரந்த் இயக்கிய சோமனா தேதி படத்துக்காக தேசிய விருதைப் பெற்ற நடிகர், இவரை மணிரத்னம் விரும்பி மீண்டும் இந்தக் கதாபாத்திரத்துக்கு சிபாரிசு செய்தாராம்.
இப்படத்தின் ஸ்க்ரோலில் டைட்டில்ஸில் புதுமை செய்திருந்தனர்.கம்ப்யூட்டர் எழுத்துக்களை ஸ்க்ரோலுக்கு உபயோகித்திருந்தனர், இதை மீடியா மென் என்ற நிறுவனம் செய்திருந்தனர்.
எழுத்துக்கள் சரியாக Rule of Thirds இலக்கில் அமைந்திருக்கும்.
மணிரத்னத்தின் முந்தைய படமான மௌனராகத்துக்கு கரிசல்ராஜா Handwritten டைட்டில்ஸ் செய்திருந்தார்.
இப்படம் உருவான சமயத்தில் கமல் விவாகரத்து ஆகியிருந்ததால் அவரின் முந்தைய படங்களுக்கு உடையமைத்த வாணி பெயர் இல்லை, கமல்ஹாசனின் உடைகளை ரவி வடிவமைத்திருந்ததாக க்ரெடிட் இருக்கிறது, ஆனால் அன்க்ரெடிட்டாக காஸ்ட்யூம் டிசைனராக சரிகா இதில் பணியாற்றத் துவங்கி விட்டாராம், ஒரு முறை அவரால் கமல் குறிப்பிட்ட ஒரு அத்தரை தேடி வாங்க முடியவில்லை என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
இளம் கமல் அணிந்து வரும் narrow pant அட்டகாசமாக இருக்கும், அந்த தீபாவளிக்கு நேரோ பேண்ட் தைத்துவிட்டு படம் பாரத்தவர்களை அறிவேன்.
இப்படத்தின் கோர்ட் காட்சிகள் அண்ணா யுனிவர்சிட்டி வளாகத்திலேயே எடுக்கப்பட்டிருக்கும், அட்மோஸ்பியர் மட்டும் பாம்பே மக்கள் போல மேட்ச் செய்திருப்பார்கள், நன்றி கார்டில் கிண்டி இஞ்ஜினியரிங் காலேஜ் என்றே வருகிறது.
#நாயகன்