'தி இங்கிலிஷ் பேஷன்ட்' திரைப்படம், மைக்கேல் ஒண்டாட்ஜே என்பவர் எழுதிய புதினத்தைத் தழுவி 1996 ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளிவந்தது. இக்கதையின் மையக் கருத்து, இரண்டாம் உலகப் போரின்போது உடல் முழுக்க எரிந்து உருக்குலைந்த தீக்காயங்களுடன் நினைவுகளை இழந்த நிலையில் இருக்கும் ஒரு மர்மமான மனிதனைப் பற்றியதுதான். இவருக்குப் பணிவிடை செய்யும் ஹானா என்ற கனடிய செவிலியர், அவருடைய கடந்த காலத்தை அறிய முற்படுகிறாள். அப்போது, அவருக்கு எகிப்தியப் பாலைவனத்தில் ஒரு சாகசப் பயணத்தின்போது ஏற்பட்ட தீவிரமான கள்ளக் காதலும், அதனால் நிகழ்ந்த துரோகம் மற்றும் விமான விபத்து பற்றியும் தெரிய வருகிறது. இந்தச் சிக்கலான கதையை மிக நேர்த்தியாக இயக்கியவர் அந்தோணி மிங்கெல்லா ஆவார்.
இப்படத்தில் கதாநாயகனாக அல்மாசி வேடத்தில் நடித்தவர் ரால்ஃப் ஃபைன்ஸ். அவர் ஒரு மர்மமான, உணர்வுகளை வெளிக்காட்டாத மனிதராகத் தனது நடிப்பில் முத்திரை பதித்தார். அவருடைய காதலியான காதரீன் கிளிஃப்டன் கதாபாத்திரத்தில் கிரிஸ்டின் ஸ்காட் தாமஸ் நடித்திருந்தார். அவருடைய தவிப்பு, காதல் மற்றும் துயரம் நிறைந்த நடிப்பிற்காக அவர் பெரிதும் பாராட்டப்பட்டார். மேலும், செவிலியர் ஹானாவாக ஜூலியட் பினோச் தனது அற்புதமான நடிப்பிற்காகப் புகழ்பெற்றார். குறிப்பாக, அவர் நடித்த இந்த ஜூலியட் பினோச்சும், ஆதிக்கப் பார்வைகளைக் கேள்வி கேட்கும் பாத்திரத்தில் நடித்த நவீன் ஆண்ட்ரூஸ் ஆகியோரும் இந்தப் படத்திற்கு வலிமை சேர்த்தனர்.
இப்படத்தின் மிகப் பெரிய பலமே அதன் ஒளிப்பதிவு ஆகும். பாலைவனத்தின் பிரம்மாண்டத்தையும், அதன் தனிமையையும், காதல் காட்சிகளின் நெருக்கத்தையும், போர்ச் சூழலின் சிதைவுகளையும் மிக அழகாகப் படமாக்கியவர் ஜான் சீல் ஆவார். அவரின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காட்சியையும் ஒரு ஓவியம் போலக் காட்டியது. இத்திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் உரையாடல்களை, இந்தப் படத்தின் இயக்குநரான அந்தோணி மிங்கெல்லா அவர்களே எழுதியிருந்தார். அவர் கதையின் முற்காலம் மற்றும் பிற்கால நிகழ்வுகளை மாறி மாறிச் சொல்லும் விதத்தில், கதையின் ஆழத்தையும், மர்மத்தையும் கூட்டினார். இந்தக் கதையைத் தாங்கி நிற்கும் இசையை அமைத்தவர் கேப்ரியல் யாரெட் ஆவார். அவருடைய உணர்ச்சிபூர்வமான இசை, காதலர்களின் தவிப்பு, பாலைவனத்தின் அமைதி மற்றும் போரின் சோகம் ஆகியவற்றைத் திரையில் பார்ப்பவர்களின் மனதிற்குள் கடத்தி, படத்தின் உணர்வுக்கு வலு சேர்த்தது.
இந்தப் படத்தின் தரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக, அது பல உயரிய விருதுகளை அள்ளியது. இந்தப் படம் ஒன்பது ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. அதில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகை (ஜூலியட் பினோச்), சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இசை ஆகிய முக்கிய விருதுகள் அடங்கும். மேலும், இந்தத் திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகை உட்பட ஐந்து பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளையும் (பாஃப்டா) மற்றும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் உட்பட இரண்டு கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றது. இந்த விருதுகள் மூலம், 'தி இங்கிலிஷ் பேஷன்ட்' உலக சினிமா வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்தது.
'தி இங்கிலிஷ் பேஷன்ட்' திரைப்படத்திற்கான மூலக்கதை, புகழ்பெற்ற எழுத்தாளரான மைக்கேல் ஒண்டாட்ஜே என்பவரால் எழுதப்பட்ட 'தி இங்கிலிஷ் பேஷன்ட்' என்ற அதே பெயரைக் கொண்ட நாவலாகும். இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்தப் புதினமானது 1992 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நாவலுக்காக மைக்கேல் ஒண்டாட்ஜே பல உயரிய இலக்கிய விருதுகளை வென்றார். அதில் மிக முக்கியமான விருது, இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் சிறந்த புதினத்திற்காக வழங்கப்படும் மதிப்புமிக்க புக்கர் பரிசு ஆகும். மேலும், இந்தப் புதினம் 2018 ஆம் ஆண்டில், ஐம்பது ஆண்டுகால புக்கர் பரிசுக் காலத்தின் சிறந்த புதினமாக வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 'கோல்டன் புக்கர் பரிசு' என்ற சிறப்பு விருதையும் வென்றது, இதுவே அந்த நாவலின் உலகளாவிய வரவேற்பைக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, இந்தப் படைப்பிற்காக அவர் கில்லர் பரிசு மற்றும் கவர்னர் ஜெனரலின் இலக்கியப் பரிசு ஆகியவற்றையும் பெற்றுள்ளார். இந்தக் கதையின் ஆழமான உணர்வுகளும், சிக்கலான கதை அமைப்பும் தான் திரைப்படமாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது.
'தி இங்கிலிஷ் பேஷன்ட்', வெறும் காதல் கதை மட்டும் அல்ல. இது, பெரிய நாடுகள் விதிக்கும் சட்டங்களும், கட்டுப்பாடுகளும், தனிப்பட்ட மனிதர்களின் காதலை எப்படிச் சிதைக்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது.
பொதுவாகக் கதைகளில், ஒரு நல்ல நாடு அமைய வேண்டும் என்றால், நல்ல திருமணம் நடக்க வேண்டும் என்று காட்டுவார்கள். ஆனால் இங்கே, நாடுகள் உருவாக்கிய சண்டைகளும், எல்லைகளும் தான், அல்மாசி மற்றும் காதரீன் போன்ற காதலர்களின் சட்டவிரோத உறவுக்குத் தடையாக அமைந்து, இறுதியில் காதரீன் இறந்து போகக் காரணமாகிறது.
அதாவது, நாடுகள் அமைக்கும் விதிகள்தான் காதலுக்கு விரோதியாக இருக்கின்றன. அதனால், இதில் வரும் திருமணத்தை மீறிய உறவு என்பது, அந்தப் பெரிய கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாகக் காட்டப்படுகிறது.
அல்மாசி என்பவர் வரைபடங்களை உருவாக்குபவர். அவர் பாலைவனத்தில் எல்லையற்ற இடங்களைக்கூட, "இது என்னுடையது" என்று வரைபடங்கள் மூலம் பிரித்துக் காட்டுகிறார். அவர் காதரீனை ஆழமாகக் காதலித்தாலும், ஒரு நிலத்தை ஆக்கிரமிப்பது போலவே, அவளுடைய உடலின் ஒரு பகுதியையும் 'எனக்குச் சொந்தம்' என்று உரிமை கோருகிறார். இது, நாடுகள் மற்ற நிலங்களை ஆக்கிரமிப்பது போலவே, காதலில் கூட ஒரு ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை இருப்பதைக் காட்டுகிறது.
ஒருவரை ஒருவர் பார்க்கும்போதுகூட, திரை மறைவில் இருந்து பார்ப்பது போல, ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதையே இந்தப் படம் காட்டுகிறது.
ஆனால், இந்த ஆதிக்கப் பார்வைகளும், எல்லைகளும் எல்லோரையும் காயப்படுத்துகின்றன.
காரவஜியோ என்றவருக்குக் இரு கைகளிலும் கட்டை விரல்கள் வெட்டப்படுவது, வரைபடங்களால் நிலம் துண்டு துண்டாக்கப்படுவதைப் போலவே, மனித உடலும் சிதைக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
ஆனால், இந்தக் காயத்தையும், வலியையும் பார்க்கும்போது, பார்வையாளர்களாகிய நமக்கு ஒருவிதமான அனுதாபம் பிறக்கிறது. அந்த அனுதாபத்தின் மூலம், "இது என் பிரச்சனை அல்ல" என்று விலகி நிற்கும் மனப்பான்மை உடைந்து போகிறது.
காதரீன் குகையில் தனிமையில் இறக்கும்போது, அவள் தன்னுடைய புத்தகத்தில், "நாங்கள் தான் உண்மையான தேசங்கள், அதிகாரமுள்ள மனிதர்கள் வரைந்த எல்லைகள் அல்ல" என்று எழுதுகிறாள்.
அதாவது, ஒருவரின் உணர்வுகளும், உடலும் தான் உண்மை; வரைபடத்தின் பெயர்கள் பொய் என்று கூறுகிறாள்.
ஹானா என்ற செவிலியர், அல்மாசியின் கருகிய உடலைத் தொட்டு, அவனுடைய கஷ்டங்களுக்காகக் கண்ணீர் விடும்போது, அது வெறும் சோகமில்லை. அந்த அழுகை என்பது, நாட்டு எல்லைகளைப் பற்றிய எந்த ஒரு எண்ணமும் இல்லாமல், ஒரு மனிதனின் துயரத்தைப் பார்த்து, மனிதன் மனிதனுடன் கொள்ளும் பாசத்தின் வெளிப்பாடு. இந்தக் கண்ணீர், வரைபடங்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஆதிக்கப் பார்வையை நீக்கிவிட்டு, ஒருவருக்கு ஒருவர் உதவும் மற்றும் எல்லைகள் இல்லாத ஒரு புதிய உலகத்தைப் பற்றி நாம் அனைவரும் நினைக்க வைக்கிறது.
படத்தின் கதை:-
இக்கதை இரண்டாம் உலகப் போரின்போது நடக்கும் ஒரு துயரமான காதல் மற்றும் நினைவுகளின் இழப்பைப் பற்றியது. கதை ஆரம்பத்தில், ஒரு ஜெர்மன் துப்பாக்கிப் படையினர் பாலைவனத்தில் பறந்து சென்ற பிரிட்டிஷ் இரட்டை இறக்கை விமானத்தைச் சுட்டு வீழ்த்துகிறார்கள்.
அதில் பலத்த காயமடைந்த விமானியை, அங்கு வந்த பெடூயின் பழங்குடியினர் தூக்கி வந்து மூலிகை மருந்து பத்துகள் இட்டு, மம்மிஃபிகேஷன் செய்வது போல துணிகளை சுற்றி காப்பாற்றுகிறார்கள்.
போரின் பிந்தைய காலத்தில், 1944 அக்டோபர் மாதம் இத்தாலியில், போரில் கொல்லப்பட்ட காதலனையும் சக செவிலியரையும்,தீயில் கருகி இறந்து போன தந்தையையும் நினைத்துத் துயருற்ற ஹானா என்ற பிரெஞ்சு-கனடிய செவிலியர், கடுமையான தீக்காயங்களுடன் சாகக் கிடக்கிற, ஸ்பஷ்டமான ஆங்கில உச்சரிப்புடன் பேசும் ஒரு நோயாளிக்குப் பணிவிடை செய்கிறாள்.
அவனுக்குத் தன் பெயர் கூட நினைவில்லை என்று அனைவரிடமும் சொல்கிறான். அவனிடம் இருப்பது , ஹெரோடோடஸ் எழுதிய 'வரலாறுகள்' என்ற ஒரு பழமையான புத்தகம் மட்டும்தான். அந்தப் புத்தகத்திற்குள் அவன் தனக்குப் பிடித்த விஷயங்கள், குறிப்புகள், படங்கள் மற்றும் நினைவுக் குறியீடுகளை வைத்துப் பாதுகாத்து வருகிறான்.
தன் கண்முன்னே ஒரு சக செவிலியர் கொல்லப்பட்டதால், தான் நேசிப்பவர்களுக்கு எல்லாம் மரணம் நேர்வது தன் சாபம் என்று ஹானா நம்புகிறாள். அதனால், மருத்துவமனைப் பிரிவை வேறு இடத்திற்குக் மாற்றும்போது, அந்த நோயாளிக்கு அதிகம் வலி ஏற்படுவதால், அவள் தனக்கு சிறப்பு அனுமதி பெற்று, குண்டு வீசப்பட்டு இடிந்த ஒரு தேவாலயத்திற்கு அவனை அழைத்துச் சென்று , தீக்காயங்களால் இறந்து போன தன் தந்தையைப் போல கவனித்துக் கொள்கிறாள்.
அவளுடன் லெப்டினன்ட் கிப் சிங் என்ற இளம் சீக்கிய வீரர் சேப்பர் இணைகிறார். அவர் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில், ஜெர்மன் நாட்டவரின் கண்ணிவெடிகள் மற்றும் கண்ணிவெடிகளைத் அகற்றி போர் வீரர்களுக்கு வழி ஏற்படுத்தும் வேலையில் இருக்கும் ஒரு படைவீரர்.
இவர்களுடன், ஜெர்மன் ராணுவத்தின் பிடியில் சித்திரவதைக்கு ஆளாகி, கைவிரல்கள் துண்டிக்கப்பட்ட டேவிட் காரவஜியோ என்ற கனடிய உளவு அதிகாரியும் வந்து சேர்கிறார்.
காரவஜியோ அந்த இங்லீஷ் பேஷண்ட் என பெயரிடப்பட்ட நோயாளியை விசாரித்து அவனுடைய கடந்த கால விவரங்களை மெதுவாக வரவழைக்கிறார். இதற்கிடையில், ஹானாவுக்கும் இந்திய வீரர் கிப்புக்கும் காதல் மலர்கிறது.
1930-களின் பிற்பகுதியில் கதை பின்னோக்கிப் பயணிக்கிறது: அந்த நோயாளியின் உண்மையான பெயர் லாஸ்லோ அல்மாசி என்பதும், அவர் ஒரு ஹங்கேரிய வரைபட நிபுணர் (கார்ட்டோகிராஃபர்) என்பதும் தெரிய வருகிறது. அவர் சஹாரா பாலைவனத்தில் ஒரு தொல்பொருள் ஆய்வுக் குழுவின் ஒரு பகுதியாகப் பயணிக்கிறார்.
அதில் அவருடைய நண்பன் பீட்டர் மேடாக்ஸ், மற்றும் ஜெஃப்ரி மற்றும் காதரீன் கிளிஃப்டன் என்ற ஒரு பிரிட்டிஷ் தம்பதியினர் உடன் இருக்கின்றனர்.
அல்மாசி நீந்துபவர்களின் குகை (Cave of Swimmers) என்ற பண்டைய பாலைவன மலைக்குகையை கண்டுபிடிக்கிறார். அங்குக் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களைப் பற்றி இவர்கள் அனைவரும் ஆவணப்படுத்தும்போது,
பாலைவனத்தில் மணல்புயல் அடிக்கும் கொடிய இரவில் ஜன்னல்கள் அடைத்த காருக்குள் ஒண்டிக்கொண்டு தங்கும் தருணத்தில் அல்மாசிக்கும் காதரீனுக்கும் இடையே காதல் மலர்கிறது.
தான் வரைந்த குகை ஓவியங்களின் இரண்டு நீர் வண்ணப் படங்களை அவளிடமிருந்து பரிசாகப் பெற்று , அதை ஹெரோடோடஸ் புத்தகத்தில் ஒட்டுமாறு சொல்கிறார். அப்போது, அவள் அதைப் பிரித்த போது, அதனுள் தன்னைப்பற்றி அவர் வர்ணித்த குறிப்புகளும், எழுதியவையும் இருக்கக் கண்டு கொள்கிறாள்.
அவர்கள் கெய்ரோவுக்குத் திரும்பியதும் அல்மாஸியின் விடுதி அறையில் , தங்கள் ரகசிய உறவைத் தொடங்குகிறார்கள். அல்மாசி காதரீனுக்கு ஒரு வெள்ளியால் ஆன , குங்குமம் அடங்கிய தையல் கூடை லாக்கெட்டை கடை வீதியில் பரிசாக வாங்கிக் கொடுக்கிறான்.
ஜெஃப்ரி இவர்களின் உறவு எல்லை மீறுவதை தன் காரில் இருந்து இரகசியமாகக் கவனிக்கிறான், தன் மனைவி துரோகம் செய்வதை உணர்ந்து கொள்கிறான். ,அதிகம் குடிக்கிறான், சில மாதங்களுக்குப் பிறகு, ஜெஃப்ரிக்கு பயந்து காதரீன் இந்த ரகசிய உறவை முறித்துக் கொள்கிறாள்.
இதற்கிடையில், போர் தொடங்கியதால் தொல்பொருள் ஆய்வுகள் சுத்தமாக நின்று போகின்றன. அல்மாசியின் நண்பன் மேடாக்ஸ் தனது விமானத்தை குஃப்ரா ஓயாசிஸ் என்ற இடத்தில் மறைத்து வைத்துவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பி விடுகிறான், அங்கே தேவாலயத்தில் போருக்கு ஆதரவாக பாதிரியார் பிரசிங்கிப்பதை காணச் சகியாமல் அனைவர் முன்பும் துப்பாக்கியால் சுட்டு இறக்கிறான்.
தன் விரல்கள் பறிக்கப்பட்ட சித்திரவதைக்குப் பழிவாங்க விரும்பும் காரவஜியோ, தன்னைச் சித்திரவதை செய்த ஜெர்மன் அதிகாரியையும், தனக்குத் துரோகம் செய்த ஒற்றனையும் கொன்ற பிறகு, ஜெர்மனியர்களுக்குப் பாலைவனத்தின் வரைபடங்களைக் கொடுத்து, கெய்ரோவில் ஊடுருவ உதவியது யார் என்று கண்டுபிடிக்க அல்மாசியை இங்கே தேடி வந்து எதிர்கொள்கிறார்.
கிளிஃப்டன் தம்பதியினரின் மரணம் குறித்து அவர் அல்மாசியிடம் கேட்க, அவர் "ஒருவேளை... நான் தான்" என்று ஒப்புக்கொள்கிறார்.
ஹானா இதை மேலே இருந்து கேட்கிறாள். 1941-ல் முகாமைக் கலைக்கும்போது, ஜெஃப்ரி தன் இரட்டை இறக்கை விமானத்தில் அல்மாசியை நோக்கி மேலே ஏற்ற வந்ததாகவும், மயிரிழையில் குதித்து தாவி விலகியதாகவும் அல்மாசி காரவஜியோவிடம் கூறுகிறார்.
அல்மாசியைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் குறி வைத்து மணலில் சொருக. அல்மாசி விலகியதால், விமானம் கடும் விபத்துக்குள்ளாகிறது. அல்மாசி அங்கே பார்த்தபோது, ஜெஃப்ரி பின் இருக்கையில் கழுத்து உடைந்து செத்துக் கிடக்கிறான், ஆனால் முன் இருக்கையில் இருந்த காதரீன் பலத்த காயமடைந்து உயிருடன் இருக்கிறாள், அவளுக்கு கணுக்கால் முறிவு, கால்கள் முறிவு ,வலியால் அப்படி துடிக்கிறாள். தன் மனைவியின் ரகசிய உறவு தெரியவந்ததால், ஜெஃப்ரி அவர்களைக் கொன்று தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறான்.
அல்மாசி காதரீனை குழந்தை போல தூக்கிக் கொண்டு அந்த நீந்துபவர்களின் இருண்ட குளிர் குகைக்குள் ஏறிக் கொண்டு போய் பாதுகாப்பாக படுக்க வைக்கிறார். அவள் இன்னும் தான் பரிசளித்த அந்த வெள்ளித் தையல் கூடையை அணிந்திருப்பதைக் கண்டவர் , அவள் விரும்பியபடி அந்த லாக்கெட் கூடையில் இருந்த குங்குமத்தை உடல் முழுக்க பூசுகிறார், அவள் அல்மாஸியை தான் எப்போதும் நேசித்ததாக அவனிடம் சொல்கிறாள்.
காதரீனுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும்,ஒரு டார்ச் லைட்டையும், எழுது பொருட்களையும் தன் புத்தகத்தையும் கொடுத்துவிட்டு, அல்மாசி மார்ஃபின் , மருத்துவ உதவி தேடி மூன்று நாட்கள் ஊண் உறக்கமின்றி பாலைவனத்தில் நடந்தே சென்றவர் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த எல் தாக் என்ற ஊரை அடைகிறார். அங்கே தன் மனைவி காயத்துடன் இருப்பதாகவும், உதவிக்காகவும் கெஞ்சுகிறார். ஆனால் அந்த இளம் அதிகாரி, அல்மாசியை ஒரு உளவாளி என்று சந்தேகித்துக் கைது செய்கிறான்.
பின்னர், இரயிலில் சிறை பிடித்து கொண்டு செல்லப்பட்ட அல்மாசி குதித்து தப்பித்து, ஒரு ஜெர்மன் இராணுவப் பிரிவைச் சந்திக்கிறார்.
அவர்கள் அல்மாசியை, இவரது நண்பர் மாடாக்ஸ் விமானத்தை மறைத்து வைத்திருந்த ஓட்டுநர் ஓயாசிஸுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே, தனது கைப்பிரதி வரைபடங்களைக் கொடுத்தவர், அதற்கு ஈடாக இந்த விமானத்திற்கு லண்டன் செல்லும் அளவுக்கு எரிபொருள் வாங்குகிறார். பத்து நாட்கள் கடந்த நிலையில் அல்மாசி விமானத்தில் பறந்து குகைக்குள் சென்று பார்க்கையில், காதரீன் கடும் குளிரால் இறந்து கிடக்கிறாள், அவளது ஆசைப்படி ஜெஃப்ரியை நல்லடக்கம் செய்துவிட்டு. அவள் உடலை விமானத்தில் ஏற்றிக் கொண்டு பறக்கும்போது தான் அவருடைய விமானம் சுட்டு வீழ்த்தப்படுகிறது.
முழுதும் எரிந்து போய் குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்தவரை நாடொடி பிதோயின்கள் காப்பாற்றி சிகிச்சை அளிக்கின்றனர்,அதன் பிறகு அவரின் ஆங்கில உச்சரிப்பு அவரை இங்க்லிஷ் பேஷண்ட் ஆக்கியிருக்கிறது.
இந்தக் கதையைக் கேட்ட காரவஜியோ, தன் கட்டை விரல்களுக்காக இவரை பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுகிறார்.
இந்த தேவாலயத்தில் வெடிகுண்டுகள் அகற்றப்பட்ட பிறகு, கிப் இத்தாலியில் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுகிறான், இருவரும் மீண்டும் சந்திப்போம் என்று உறுதியளிக்கிறார்கள்.
கடைசியில், தனக்கு போதும் என்று சலிப்படைந்த, அல்மாசி நான்கிற்கும் மேற்பட்ட மார்ஃபின் குப்பிகளைக் ஹானாவின் மேஜைப்புறத்தில் குழந்தையின் கெஞ்சலுடன் தள்ளிவிடுகிறான். மிகுந்த துயரத்துடன் வெடித்து அழுதபடி, ஹானா அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறாள், அவனுக்கு அதிகப்படியான உயிரைப் போக்கும் மார்ஃபின் அளவை செலுத்துகிறாள். அவன் மெதுவாகத் தூங்கச் செல்லும் நேரத்தில், காதரீன் குகையில் தனியாக இருந்தபோது எழுதிய கடைசிக் கடிதத்தை ஹானா அவனுக்குப் படித்துக் காட்டுகிறாள். அடுத்த நாள் காலையில், ஹானா அந்த ஹெரோடோடஸ் புத்தகத்தை இறுகப் பிடித்துக் கொண்டு, காரவஜியோவுடன் புளோரன்ஸ் நகருக்குப் பயணிக்கையில் படம் நிறைகிறது.
அல்மாஸி ,அவர் தனது காதலியான காதரீன் கிளிஃப்டன் மீதான காதல் எப்படித் தொடங்கியது, அதனால் ஏற்பட்ட விளைவுகள், மற்றும் போரில் தனது பங்களிப்பு ஆகியவற்றைச் சற்று குழப்பமான மனநிலையுடன் நினைவு கூர்கிறார்.
காதல் எப்படி உண்டானது என்று அவர் விவரிக்கிறார்: காதரீனை அவர் முதன்முதலில் ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்தில் இருந்து பார்த்தபோது, அவள் அதிக ஆர்ப்பாட்டமும் ஆர்வமும் கொண்டவளாக இருந்ததால், அவருக்குப் பிடிக்கவில்லை. அவளுடைய கணவன் ஜெஃப்ரி கிளிஃப்டன், தேனிலவு மகிழ்ச்சியில் திளைத்து, தன் மனைவியைப் புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தான். கெய்ரோவில் ஒரு மாதம் கழித்து, காதரீன் அமைதியடைந்தவள், எந்நேரமும் வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பதில் மூழ்கியிருந்தாள். அவளுடைய கணவனின் வெளிப்படையான புகழ்ச்சி அவளுக்கு முக்கியமாக இருக்கவில்லை, ஆனால் இங்கிலிஷ் பேஷன்ட்டின் நுணுக்கமான, மறைமுகமான பேச்சு அவளைக் கவர்கிறது. அவர் தன் குறிப்புகளுடன் வைத்திருந்த ஹெரோடோடஸ் என்ற பழங்கால வரலாற்று நூலை அவள் படிக்கக் கேட்டபோது, அதில் தன் சொந்தக் குறிப்புகள் இருப்பதால் தர மறுத்து, திரும்பி வந்த பின் தருவதாகக் கூறுகிறார். அவர் திரும்பி வந்த விருந்தில், காதரீன் அந்த ஹெரோடோடஸ் புத்தகத்தில் இருந்து மன்னன் காண்டவுலிஸ் என்பவன் தன் மனைவி உடை மாற்றுவதை ரகசியமாகப் பார்க்க கைஜஸ் என்ற நண்பனுக்கு அனுமதி கொடுத்த கதையை பாலைவன விருந்தில் பலரின் முன்பில் படிக்கிறாள். இதைக் கேட்ட நொடியில், இங்கிலிஷ் பேஷன்ட் காதரீனை ஆழமாகக் காதலிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறார்.
அதற்குப் பிறகு, அவர்கள் ஒரே சமூக வட்டத்தில் தொடர்ந்து சந்திக்க நேரிடுகிறது. இங்கிலிஷ் பேஷன்ட், காதரீனைப் பார்ப்பதற்காகவே எல்லா இடங்களுக்கும் செல்கிறார், அவளைப் பற்றிய நினைப்பைத் தவிர வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை. அவளுடைய உடலமைப்பு, அவரது பயணக் குறிப்புகளில் கூட உத்வேகமாக மாறுகிறது.
அவர் தன் ரகசியக் காதலை வெளிப்படுத்தாமல் இருக்க, அவளிடம் வேண்டுமென்றே மிகவும் சம்பிரதாயமாகவும், கடுமையாகவும் நடந்து கொள்கிறார். ஆனால், ஒரு தோட்ட விருந்தில், காதரீனே தைரியமாக அவரிடம் வந்து, "நீங்கள் என்னிடம் பலவந்தமாக உறவு கொள்ள வேண்டும்" என்று கேட்கிறாள். அதன் பிறகு, இருவரும் ஒரு ரகசியக் காதலைத் தொடங்குகிறார்கள். அவர்கள் கணவன் ஜெஃப்ரியின் கண்களில் படாமல், எல்லையற்ற திருட்டுத்தனமான பார்வைகளையும், தொடுதல்களையும் பரிமாறிக் கொள்கின்றனர்.
ஆனால் இந்த உறவில் ஒரு சிக்கல் உண்டாகிறது. இங்கிலிஷ் பேஷன்ட், எதன் மீதும் "உரிமை" கொண்டாடுவதையோ அல்லது தனக்கென ஒரு "அடையாளம்" வைத்துக்கொள்வதையோ வெறுக்கிறார்.
காதரீன் தன்னுடைய உறவில் பாதுகாப்பைத் தேடினாள். தான் அவருக்குச் சிறப்பானவள் என்று உறுதிப்படுத்த ஒரு வார்த்தை கேட்டாள். ஆனால், உரிமை கொண்டாட அவர் தயாராக இல்லை. இந்த மனிதத்தன்மையின்மையால் கோபமுற்ற காதரீன், அவரைக் விட்டுப் பிரிந்து தன் கணவன் ஜெஃப்ரியுடன் செல்ல முடிவு செய்கிறாள்.
இந்தக் கட்டத்தில், அவர் தனது நெருங்கிய நண்பன் மாக்ஸ்டாக்ஸ் (Madox) என்பவனைப் பற்றி நினைவு கூர்கிறார். மாக்ஸ்டாக்ஸ் பாலைவனத்தின் மீது கொண்ட காதலை வெளிப்படையாகச் சொல்ல முடிந்தது, ஆனால் இவரால் தன்னுடைய உணர்வுகளை எழுத்தில் வெளிப்படுத்த முடியவில்லை. மாக்ஸ்டாக்ஸ், இங்கிலாந்தில் இருந்த தன் மனைவிக்கு மிகுந்த விசுவாசமாக இருந்தவர். 1939-ல் போர் தொடங்கியபோது இங்கிலாந்துக்குத் திரும்பிய மாடாக்ஸ், அங்கு தேவாலயத்தில் போருக்கு ஆதரவான வெறித்தனமான பிரசங்கத்தைக் கேட்டு மனம் வெறுத்துப்போய், அங்கேயே தன்னைச் சுட்டுக் கொண்டு இறந்து விடுகிறார். மாக்ஸ்டாக்ஸ் என்பவர் நாடுகளின் வெறித்தனத்தால் இறந்த ஒரு மனிதன் என்று அல்மாஸி முடிவெடுக்கிறார்.
பின்பு, காரவஜியோ அதிக மயக்க மருந்தை கொடுத்த பிறகு, இங்கிலிஷ் பேஷன்ட் குழப்பமான மனநிலையில் பேசத் தொடங்குகிறார். அவர் தன்னை "நான்" என்றும், சில சமயங்களில் "அவன்" என்றும் மாற்றி மாற்றிப் பேசுகிறார்.
காரவஜியோ ஏன் மூன்றாம் நபராக பேசுகிறீர்கள் என்று கேட்க, "மரணம் என்று வருகையில் நீங்கள் மூன்றாம் நபராக இருக்கிறீர்கள்" என்று பதிலளிக்கிறார். இந்தச் சமயத்தில் தான், அவர் தான் காதரீனை விபத்தில் இருந்து காப்பாற்றி, குகையில் வைத்து விட்டு, உதவி தேடிப் பாலைவனத்தில் நடந்த கதையை விவரிக்கிறார்.
அவர் குகையில் இருந்து வெளியேறி மூன்று நாட்கள் கழித்து எல் தாஜ் என்ற இடத்திற்கு வந்தபோது, பிரிட்டிஷ் வீரர்கள் அவரைக் கைது செய்கிறார்கள். காயம்பட்ட பெண் பற்றி இவர் கூறியதை அவர்கள் நம்ப மறுத்தார்கள். ஏனெனில், இங்கிலிஷ் பேஷன்ட் தன் அல்மாஸி என்ற பெயரைச் சொன்னதாலோ அல்லது அவர் மிகவும் அந்நியமாகக் காட்சியளித்ததாலோ, பிரிட்டிஷ் வீரர்கள் அவரொரு உளவாளி என்று நினைத்து அடைத்து விட்டனர்.
அப்போது தான், காரவஜியோ உண்மையை வெளிப்படுத்துகிறார்:
ஜெஃப்ரி கிளிஃப்டன் ஒரு சாதாரண கணவன் அல்ல. அவர் பிரிட்டிஷ் உளவுத்துறைக்காகப் பணிபுரிந்த வான்வெளி புகைப்படக்காரர். அல்மாசிக்கும் காதரீனுக்கும் இருந்த கள்ள உறவு குறித்து உளவுத்துறைக்கு ஆரம்பம் முதலே தெரியும். ஜெஃப்ரியின் விமான விபத்து மரணம் அவர்களுக்குச் சந்தேகமாகத் தோன்றியதால் தான், அவர்கள் அல்மாசியை உளவாளியாகப் பிடித்து வைத்திருந்தார்கள்.
மேலும், அல்மாசி பிரிட்டிஷ் உளவுத்துறையின் ரகசிய எதிரி என்றும், அவர் ஜெர்மன் தளபதி ரோம்மெலுக்காக ஒரு உளவாளியை பாலைவனம் வழியாக வழிநடத்தினார் என்றும் காரவஜியோ அவனிடம் வெளிப்படுத்துகிறார்.
உளவுத்துறையினர் அல்மாசியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தார்கள் என்று கூறுகிறார். காரவஜியோ, தான் உளவுத்துறையில் பணியாற்றிய முன்னாள் திருடன் என்று கூறுகிறார். இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களைக் கேட்ட பிறகு, அல்மாசி தன் கதையின் மீதியை மெல்ல நிறைவு செய்கிறார்.
அவர் எப்படி விபத்தில் உயிர் தப்பித்தார், காதரீனை எப்படிச் சுமந்து குகைக்குக் கொண்டு சென்றார் என்பதை உருக்கமாக விவரிக்கிறார், நம் மனம் கரைகிறது. இறுதியில், அவர் உண்மையான காதலின் தன்மை மற்றும் புனித இடங்களில் இறப்பதன் முக்கியத்துவம் பற்றித் தத்துவ ரீதியாகப் பேசிவிட்டு உறக்கத்தில் ஆழ்கிறார்.
இப்படத்தின் தாக்கத்தில் இருந்து ஒருவர் மீளவே முடியாது, அத்தனை வலிமையான மூலக்கதை, திரைக்கதை,இயக்கம், படத்தின் காட்சிகளைப் பற்றி மனம் அசை போட்டபடியே தான் இருக்கும்.
தமிழில் வெளியான குணா 1991 திரைப்படத்திற்கும் 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த த இங்க்லீஷ் பேஷண்ட் மூல நாவலுக்கும் பல ஆச்சர்யமான வியத்தகு ஒற்றுமைகள் உண்டு, கொடைக்கானல் டெவில்ஸ் கிச்சன் குகையில் குணா,இரு இதோ மருத்துவ உதவியுடன் வருகிறேன் என கால் ஒடிந்த நிலையில் கடும் காய்ச்சலுடன் கிடத்திச் சென்ற அபிராமியின் காதலையும் , அல்மாஸி பாலைவனத்தில் நீந்துபவர்களின் குகையில் இரு, இதோ மருத்துவ உதவியுடன் வருகிறேன் என கிடத்திச் சென்ற கேத்ரினின் காதலையும் நினைத்து நினைத்து அசைபோடுகிறது மனம், இந்த இரண்டும் ஒப்பற்ற, மனிதர் உணர்ந்து கொள்ளாத புரிந்து கொள்ளாத காதல்கள்.
குணா (1991 திரைப்படம்) மற்றும் தி இங்க்லீஷ் பேஷண்ட் (1992 நாவல் / 1996 திரைப்படம்) ஆகியவற்றில் வரும் குகைப் புகலிட அமர காதல் காட்சிகளைத் தொகுத்து, அதன் முக்கிய அம்சங்களை மட்டும் இங்கே விவரிக்கிறேன்:
பாலைவனத்தின் பரந்த வெறுமையில், கவுண்ட் லாஸ்லோ அல்மாஸி, காதலி கேத்தரின் கிளிஃப்டனை நீச்சல் வீரர்களின் குகையில், உடல் முழுக்க காயங்களுடன், கால் முறிந்த நிலையில் விட்டுச் சென்றான். அவளது தனிமையைப் போக்க, தனக்கு மிகவும் பிடித்த ஹெரோடோட்டஸின் புத்தகம், பென்சில் மற்றும் காகிதம் ஆகியவற்றை வைத்துவிட்டுப் பிரிந்தது, அவளது ஆன்மாவைப் பாதுகாப்பதற்கான அவனது கடைசி முயற்சியாகும். அதேவேளையில், கொடைக்கானலின் ஆபத்தான குணா குகையில், குணா தன் காதலி அபிராமிக்கு முதலுதவி செய்து, அவளுக்குச் சிறு தின்பண்டங்கள் மற்றும் எழுதுபொருட்களை வைத்துவிட்டு வெளியேறியது, அவனது தூய்மையான பக்தியின் வெளிப்பாடு. அல்மாஸியின் மருத்துவ உதவி தேடல், பிரிட்டிஷ் அதிகாரிகளின் நிராகரிப்பு மற்றும் சந்தேகம் காரணமாகத் தோல்வியடையவே, அவன் காதலுக்காகத் தன் தேசத்தின் வரைபடங்களை ஜெர்மனியிடம் விற்று எரிபொருள் வாங்கினான். அந்த எரிபொருளால், காதலியின் உடலைச் சுமந்து பறந்தபோது, ஜெர்மனியால் சுட்டு வீழ்த்தப்பட்டு, உடல் முழுவதும் எரிகிறான். உடல் கருகி, நினைவை இழந்த நிலையில் அவன் மீட்கப்பட்டாலும், அவன் தனது காதலின் சோகத்தை மட்டுமே சுமக்கும் 'தி இங்க்லீஷ் பேஷண்ட்'டாக அமரத்துவம் அடைகிறான். அதேசமயம், குணா, காவலர்களின் சட்டங்களை மீறி ஒரு மருத்துவரை அபிராமிக்காகக் கடத்தி வந்தும், சிகிச்சை பலனளிக்காததால், அபிராமியின் ஆசையை ஏற்று, இருவரும் கைகோர்த்துக்கொண்டு, குகையின் ஆழமான பிளவுக்குள் குதித்து உயிர் தியாகம் செய்கின்றனர். இந்த இரு நாயகர்களும், தங்களது காதலிகளுக்காக உடல், உயிர், சமூக சட்டம், மற்றும் தேசப்பற்று ஆகிய அனைத்தையும் துறந்து, குகைப் புகலிடங்களை அமரக் காதலின் சாட்சியாக மாற்றினர்.
இப்படத்தை சினிமா ஆர்வலர்கள் இரண்டு முறையாவது பாருங்கள், இந்த நாவலையும் வாசியுங்கள், உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா தரும் அபாரமான அனுபவத்தை தவற விடாதீர்கள்.