தமிழில் மிகவும் தரமாக எடுக்கப்பட்ட விலங்குகள் பற்றிய நல்ல ஒரு திரைப்படம் முதலை,1988 ஆம் ஆண்டு சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பானது, பலமுறை மீள் ஒளிபரப்பும் கண்டது, இது CFSI தயாரிப்பு.
இது தெலுங்கு இந்தி என மொழி மாற்றம் செய்யப்பட்டது.
காக்காமுட்டை போன்ற படங்களுக்கு முன்னோடி , ஏழைச் சிறுவன் மற்றும் அவனின் விலங்குகள் மீதான நேசத்தை மிக இயல்பாக காட்டிய படைப்பு இது, இந்தப் படத்தை என் எட்டு வயது மகன் இது வரை பத்து முறைக்கும் மேல் பார்த்து விட்டான்.
இப்படத்தில் மீனவர் குப்பத்தின் ஏழைச் சிறுவனாக வந்த ஏழுமலை மற்றும் அவனது சகோதரி நடிப்பு மிகவும் இயல்பானது, ஏழுமலையைத் தவிர யாரும் இத்தனை அழகாக முதலையுடன் பழகி பயமின்றி நடித்திருக்கவே முடியாது, இன்று ஏழுமலை என்ன செய்கிறார் தெரியவில்லை.
ஒரு பெரும் புயல் மழைக்குப் பின் ஊருக்குள் தஞ்சமடைந்த கர்ப்பிணி முதலையை சிறுவன் ஏழுமலையும் அவன் சகோதரியும் காப்பாற்றி உணவளித்து அதனுடன் நட்பாகின்றனர், விஷயமறிந்த ஊரார் முதலையைக் கொல்ல திரண்டு வருகையில் அதை எப்படி லாவகமாக காப்பாற்றி தப்ப விடுகின்றனர் என்பது தான் படத்தின் கதை, அதை மிகுந்த சுவாரஸ்யமாக சிறார் திரைமொழியில் படமாக்கியுள்ளனர்.
இப்படத்தில் கிராமவாசியாக கடம் வாசிப்பவராகவே வருகிறார் விக்கு விநாயகராம் அவர்கள்.படத்தின் ஒளிப்பதிவு மது அம்பாட் அவர்கள்.இரண்டாம் யூனிட் ஒளிப்பதிவாளர் சேகர் தத்தாத்ரி.
படத்தின் உருவாக்கத்தில் ஆரோவில் வாசிகளின் கடும் உழைப்பு அடங்கியுள்ளது.படத்தின் இசை:நடாகா , ஆரோவில் வாசி
திரைக்கதை:ஷாகிதா விட்டேகர்
இயக்கம்: ரோம் எ ரோமுலஸ் விட்டேகர்.இவர் முட்டுக்காடு முதலைப் பண்ணையின் நிறுவனர்.
இயக்குனர் ரோமுலஸ் விடேகர் எழுதிய இந்திய பாம்புகள் என்ற புத்தகம் தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது
மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படத்திற்கு தொழில்நுட்பக் கலைஞர்கள் யாருமே சம்பளம் பெறவில்லை.மது அம்பட் அஞ்சலி படத்தின் ஒளிப்பதிவாளர்.
இப்படத்தை முட்டுக்காடு அதைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் படமாக்கியுள்ளனர்.இது சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தவற விடக் கூடாத படைப்பு.படத்தில் ஒரு கிராமவாசிக்கு நடிகர் பார்த்திபன் டப்பிங் குரல் தந்திருந்தார்.
முழுப்படம் காணொளி இங்கே.
https://youtu.be/3AC8eicUONE
#முதலை,#மது_அம்பாட்,#சிறுவர்_சினிமா,#the_boy_and_the_crocodile