மௌன குரு|தமிழில் ஓர் உலக சினிமா!!!

அருமை நண்பர்களே!!!
நல்ல படங்கள் வருவதே மிக அரிதாகிவிட்ட காலம் இது, சமீபத்தில் மௌனகுரு படம் பார்த்தேன்,மிகவும் சிலாகித்தேன்,சமீபகாலத்தில் கண்ட மிக தரமான ஆக்‌ஷன் த்ரில்லர்,மிக இண்டெலிஜெண்டான  ஒரு ஆக்கம்!!! எப்போதோ பார்க்க வேண்டியது,சனிவிலகிய அன்றே மீண்டும் பிடித்தது போல மயக்கம் என்ன என்னும் திராபையை பார்த்ததால் எந்த படத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இதை மிக தாமதமாய் பார்த்தது. என்னளவில் சமீப காலத்தில் வெளியான உயர்ந்த படைப்பு இது, ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் ஊடாக மிக அருமையான கருத்துக்களையும் சொன்ன படம். உலக சினிமா என சொல்வதற்கேற்ற தகுதியுள்ள படம்.

அமெரிக்க இரட்டை இயக்குனர்கள் கோயன் பிரதர்ஸின் ஃபார்கோவுக்கு ஈடான காட்சியாக்கங்கள்,முக்கியமாக உமா ரியாஸின் நடிப்பு மிக இயல்பான ஒன்று, ஃபார்கோவில் ஜோயல் கோயனின் மனைவி ஃப்ரான்கஸ் மெக்டார்மெண்ட் செய்த துப்பறியும் அதிகாரி பாத்திரத்துக்கு ஈடாக அப்படி ஒரு இயல்பான நடிப்பை பார்த்ததில்லை.அதில் ஒரு கோமாளித்தனம் இருக்கும்.இவரிடம் இல்லை,ஆனால் அனைத்து பாத்திரப்படைப்பும் மிக நேர்த்தி .ஃபார்கோவில் முடிந்து விட்ட காட்சியை மேட்ச் செய்வது போல அடுத்த காட்சி தொடங்கும், அதை இவர் பெரிதும் இன்ஸ்பைர் ஆகியிருக்கிறார் என நினைக்கிறேன்,அவற்றுள் பல காட்சிகள் நன்றாக இருந்தன,மஹேஷ் முத்துசாமியுடன் இணைந்து இவர் ஒளியமைப்பில் நிறைய உழைத்தது புரிந்தது,சாலையில் நாம் விளக்கு அணைக்கப்பட்ட காரில் பயணிக்கையில்,நாம் விளக்கு கம்பத்தை கடக்கும் போதோ?அல்லது அருகே செல்லும் வாகனம் கடக்கும் போதோ நம்மீது வெளிச்சம் கவிழும்,அதை கூட பிரமிக்கத்தக்க வகையில் பயன்படுத்தி முக்கிய பாத்திரங்களை அறிமுகம் செய்கிறார் இயக்குனர்.இப்படத்துக்கு விகடன் எப்படி விமர்சனம் செய்தனர் என அறிய ஆவல் மேலிடுகிறது,அவர்கள் வேட்டை படத்துக்கும் இதைப்போல படத்திற்கும் ஒரே அளவு மதிப்பெண் கொடுப்பவறாயிற்றே?!!! ,

என்கவ்ண்ட்டர் காட்சியில் துப்பாக்கி வேலை செய்யாமல் போய் நாயகன் உயிர் தப்புவது தமிழுக்கு புதிது,நம் வழக்கத்தில் வில்லனின் துப்பாக்கியில்  ரவை வெளியேறுகையில் சாக வேண்டிய நாயகன் அதை பல்லால் கடித்து பற்றி பிடிப்பது தான் நடக்கும்,இண்டர்வல் ப்ளாக்குக்கு முன்னரோ அல்லது எந்த கேப்பிலுமோ  ஐடம் சாங்கே இல்லை,அதற்கே சபாஷ்.

பேராசை பெரு நஷ்டம்,குற்றவாளி தப்ப முடியாது,பலநாள்திருடன் ஒருநாள் அகப்படுவான் போன்ற மெசேஜையும் அருமையாக இப்படத்தில் சொன்ன சாந்தகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனதுக்குப் பிடித்தமான வேலையை குறைந்த வருவாயில் செய்வதை பலரும் விரும்புவதில்லை,இனி மாணவர்கள் சிறிதேனும் யோசிப்பர்.படத்தில் அந்த தெரெசா எம்ப்ராய்டரியை வைத்து இப்படி ஒரு மேசேஜை டெவலப் செய்தது மிகஅருமை,சின்ன சின்ன விஷங்கள் வைத்து டெவலப் செய்வது தான் சினிமாவே அன்றி அந்நிய மொழி படத்தில் இருந்து உருவி நம் சூழலுக்கு ஒவ்வாத காட்சிகளை படைப்பது அல்ல .

பெரிய நிம்மதி!!! படத்தின் நாயகன் ,செல்வராகவன்  மற்றும் இன்ன பிற பட இயக்குனர்களின்  க்ளிஷே நாயகர்கள் போலானதோர் தட்டையான திராபையான பாத்திரம் அல்ல. வானத்தையும் பூமியையும் லோ ஆங்கிளில் காட்டி நம்மை வதைக்கவுமில்லை,முகத்தில் கோணிப்பை மாட்டிக்கொண்டு  அடுத்தடுத்து வரிசையில் யாரும் வந்து உதை வாங்கவுமில்லை. முக்கியமாக எங்கேயிருந்தும் மூலக்கதையை திருடவில்லை. மனநிலை பிழண்றவர்களை மதிக்க வைத்திருக்கிறார்கள். அதற்கே ஒரு நன்றி. இவருக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கெட்ட போலீஸ்காரர்களின் மிக இயல்பான நடிப்பு,டயலாக் டெலிவரிகள், ஒளியமைப்பு என மார்வெல்லஸ் ஒர்க் அது,அதன் இயக்குனர் சாந்தகுமார் எப்படி இருப்பார்? என பார்க்கத் தேடினேன், உடனே இந்த பேட்டி கிடைத்தது, நல்ல பாதுகாக்க வேண்டிய கட்டுரை, தெனாலிக்கு நன்றி, எழுத்துப் பிழைகளை நீக்கி வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாயிருக்கும்., எனக்கு படத்தைப் பற்றி சிலாகித்து கேட்க நிறைய கேள்விகள் உண்டு, ஆனால் இதில் அவை கேட்கப்படவில்லை,

ஹாலிவுட் சினிமாவின் மலினமான பிரதிகளாக, பார்வையாளரை செருப்பாலே அடிப்பது போன்ற அதிமேதாவித்தனமான, லூசுத்தனமான படங்கள் வரும் வேளையில் இதுபோல இயக்குனர் படைப்புகள் வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,நல்ல வேளையாக இயக்குனர் 15 கோடி வாங்கும் சப்பைக் கிறுக்கர்களிடம் கால்ஷீட் கேட்டு மோசம் போகவில்லை, பின்னர் இயக்குனர் தன்னை எங்கும் சமாதானம் செய்து கொள்ளாமல் இப்படி ஒரு படைப்பை தந்திருக்கமுடியாது.ஒரு நல்ல படத்துக்கு என்னை விட யாரும் தாமதமாக விமர்சனம்  எழுத முடியாது.:)))தாமதத்துக்கு வருந்துகிறேன்.எழுதாமலே போவதை விட தாமதமாகவேனும் எழுதுவது நல்லது தானே?!!!


தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் குறிஞ்சி மலர் பூக்கும். வளர்ந்து வரும் தமிழ்பட நாயகன் அருள்நிதியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு , அறிமுக இயக்குனர் சாந்தகுமார் இயக்கியிருக்கும் மௌனகுரு படத்தை, சந்தேகமில்லாமல் ஒரு மிடில் சினிமா என்று சொல்லி விடலாம். தமிழ் கமர்ஷியல்  சினிமாவின் வழக்கமான வரையரைகளை உதறிவிட்டு, ஆனால் கமர்ஷியல் சினிமாவை கைதட்டி விசிலடித்து ரசிக்கும் அதே ரசிகர்களை இருக்கையில் ஆணியடித்து அமர வைத்துவிடும் ஜாலத்தை மௌனகுரு படத்தின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார் சாந்தகுமார்.

சினிமா இயக்குனர்களின் மீடியம் என்பதை சாந்தகுமார் போல அபூர்வமாக, ஆனால் காலம் தோறும் பல புதுமுகங்கள்  நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான், மாஸ் மசாலா ஹீரோக்களின் பிடியில் சிக்குன்டு கிடக்கும்  தமிழ் சினிமா அவ்வப்போது தனது உண்மையான முகத்தை பார்த்துக் கொள்கிறது. மௌனகுரு போன்ற படங்களின்  மூலம் அவ்வப்போது தன்னை புதுபித்துக் கொள்ள முயற்சி  செய்கிறது.  மௌனகுரு இயக்குனரை தெனாலிக்காக சந்தித்தோம்!

 மதுரைக்கு பக்கத்தில் உள்ள ஒரு சின்ன ஊரில் இருந்து உங்கள் படத்தின் நாயகனை நீங்கள் சென்னைக்கு அழைத்து வரும்போதே  தெரிகிறது நீங்கள் நிச்சயமாக நகரத்து மனிதர் அல்ல என்று?

நிச்சயமாக! நான் கிராமத்துக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு கர்வம் உண்டு. அம்மா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம். அப்பா குற்றாலாம் அருகில் சிவகிரி. இரண்டு ஊர்களிலுமே நான் வளர்ந்திருக்கிறேன். அதேபோல நான் பள்ளிக்கல்வி பயின்ற திருப்புவனமும் ஒரு சிறுநகரம். அதன்பிறகு கல்லூரிக் கல்விக்குத்தான் மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு வந்தேன். மதுரைக்கு இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இருந்தாலும் எனது பார்வையில் தமிழ் வாழ்கையின் எல்லா கூறுகளையும் தனக்குள் இன்னும் தக்கவைத்திருக்கும் ஊர் என்று சொல்வது சரியாக இருக்கும்.

பாலா உட்பட அமெரிக்கன் கல்லூரி நிறைய பேரை தமிழ் சினிமாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. நீங்கள் அங்கே படிக்கும்போதுதான் சினிமாவுக்கான தூண்டுதல் கிடைத்ததா?

இல்லை. எனக்கு சினிமா மீதான ஆர்வம் 9-ஆம் வகுப்பு படிக்கும்போதே வந்துவிட்டது. ஆனால் அமெரிக்கன் கல்லூரியில் நிறைய உலக சினிமாக்களை திரையிடுவார்கள்.  நண்பர்கள் பார்க்க விடமாட்டார்கள். ஆனால் அவர்களையும் மீறி நான் பார்ப்பதுண்டு. பைசைக்கிள் தீவ்ஸ் உட்பட சினிமா மீடியத்தின் வலிமையை புரியவைத்த பல படங்களை அங்கேதான் நான் பார்த்தேன். நானும் ஒரு ஆசிரியராக வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் விரும்பினார்கள்.

அவர்களுக்காக பி.எஸ்.சி விலங்கியல் படித்தேன். ஆனால் எனது விருப்பம் சினிமா என்பதைப் புரிந்துகொண்ட பிறகு என்னை அவர்கள் தடுக்கவில்லை. ஆனால் இதற்கும் முன்பு நான் பள்ளியில் படிக்கும்போதே எனது சினிமா ஆர்வத்தை புரிந்துகொண்டு என்னை தரமான தமிழ்ப்படங்களை பார்க்க தியேட்டருக்கு கூட்டிட்டுப் போவாங்க! ’இது பீம்சிங் படம், இது ஸ்ரீதர் படம், இது கே.பாலச்சந்தர், இது மகேந்திரன் படம்’ன்னு ஒவ்வொரு இயக்குனருக்குமான வித்தியாசங்களை எனக்குச் சொல்லிக் கொடுப்பார். சினிமா இயக்குனரோட மீடியம்ன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்ததே அவங்கதான்! சினிமான்னு இல்ல எதுல எனக்கு சந்தேகம்னாலும் க்ளினிக்கலா எனக்கு எக்ஸ்பிளைன் பண்ணுவாங்க. எல்லா வகையிலேயும் அவங்கதான் என்னோட முதல் குருன்னு சொல்லணும்!

உங்க அம்மா இப்போ எப்படி ஃபீல் பன்றாங்க?

அம்மா இப்போ உயிரோட இல்லை. கேன்சர் அவங்கள பறிச்சிடுச்சு! திருப்புவனம்ங்கிற ஒரு சின்னஞ்சிறு நகரத்தில வாழ்ந்துகிட்டு சினிமாவை எனக்கு பவர்ஃபுல் மீடியம்ன்னு அவங்க சொல்லிக் கொடுத்திருக்காங்க. பாட்டும், டான்ஸும் இருந்தாபோதும்ன்னு படமெடுக்க நிறையபேர் இருக்காங்கப்பா… ஆனா மகேந்திரன் ஒருத்தர்தான் இருக்கார். நீ படமெடுக்கனுன்னு நினைச்சா அந்த மாதிரி எடுன்னு அம்மா சொல்லிக் கொடுத்ததை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. அம்மா மாதிரி எத்தனை தாய்மார்கள் நல்ல கதையம்சம் கொண்ட சினிமாக்களை விரும்ப்பி இருக்காங்கன்னு! அவங்க இப்போ இருந்திருந்தா, எனக்கு கிடைக்கிற பாராட்டுகளைப் பார்த்து அழுது தீர்த்திருப்பாங்க. ஆனா, முதல் நாள் படம் ரிலீஸாகி பாராட்டுகள் வந்தப்போ மனைவிக்குக் கூட தெரியாம நான் அம்மாவை நினைச்சு ரகசியமா அழுதேன்!

உங்கள் நாயகன் குறைவாகவே பேசுகிறான். கொஞ்சமாகப் பேசினாலும் அழுத்தமாகப் பேசுகிறான். உங்கள் குணமும் அதுதானோ?


இப்போது கொஞ்சம் அதிகமாகப் பேசுகிறேன். ஆனால் அடிப்படையில் நான் கூச்சசுபாவமான ஆள்! எனது பால்யம் முழுக்க என்னை வீட்டுக்குள்ளேயே வைத்துதான் வளர்த்தார்கள். நான் தெருவில் இறங்கி நண்பர்களோடு விளையாடப் போனால் தவறான வார்த்தைகளை, கொச்சையான வார்த்தைகளை கற்றுக்கொண்டு வந்துவிடுவேன் என்று நினைத்தார்கள் அப்பாவும் அம்மாவும். அது ஒரு வகையில் சரிதான்! என்னை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தாலும் எனது எல்லா சந்தேகங்களுக்கும் மிகச்சரியான விளக்கம் தருவார்கள். சிறு வயதிலேயே எனக்கு வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். வாசிக்க வாசிக்க இன்னும் இறுக்கமான ஆளாக மாறினேன். எதிலும் ஒரு நிதானம் வந்து உட்கார்ந்து கொண்டது. அம்மாவின் மரணமும், என் உயிர் நண்பன் மார்டீன் மரணமும் என்னை மேலும் தனிமைப்படுத்திவிட்டது. எனது நண்பன் கண் இமைப்பதற்குள் மாரடைப்பால் இறந்து போனான். மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் என் மடியிலேயே இறந்துபோனான். நாம் சந்திக்கிற இழப்புகள் நம்மை அமைதியாக்கி விடுகின்றன. அதுவே காலப்போக்கில் குணமாகி விடுகிறது என்றாலும் நமது தனிப்பட்ட குணங்களை எல்லா கதாபாத்திரங்கள் மீதும் அப்ளை பண்ணமுடியாது.

சென்னைக்கு வந்தபிறகு நேரடியாக உதவி இயக்குனர் ஆனீர்களா?

இல்லை! திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினேன். ஆனால் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு பிரசாத் ஸ்டூடியோ நடத்திவரும் 3 டி அனிமேஷன் டிப்ளமோவை ஓராண்டு படித்தேன். அப்போதுதான் சுசி.கணேசனின் அறிமுகம் கிடைத்து, அவரது முதல் படமான விரும்புகிறேன் படத்தில் ஆறு மாத காலம் வேலை செய்தேன். அதன்பிறகு கரு. பழனியப்பன் இயக்கிய ’டிவிஎஸ் ஸ்கூட்டி’ கார்பரேட் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தேன். அப்புறம்தான் தரணியிடம் ‘தில், தூள், கில்லி’ படங்களில் வேலை செய்தேன்.

தரணி ஒரு மாஸ் மசாலா இயக்குனர்! ஆனால் உங்கள் பாதை வேறாக இருக்கிறது? ஆனால், குருவின் பேரைக் காப்பாத்தணும் என்று இங்கே கற்பிக்கப்படுகிறதே?

குருவிடம் இருக்கும் நல்ல குணங்களை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக சொன்ன விஷயம் அது! நானே தரணியிடம் சொல்லியிருகிறேன். ’சார் நான் உங்க அசிஸ்டெண்ட்ன்னு சொன்னா தில், தூள் மாதிரி ஸ்கிரிப்ட் இருக்கான்னு கேக்குறாங்க?’ன்னு சொன்னா அவரும் சிரிப்பார். உண்மையில் ஒரு திறமையான இயக்குனரிடம் வேலை செய்வதன் மூலம் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாமே தவிர, கிரியேட்டிவிட்டி என்பது தனிமனித தேடல் சார்ந்து உருவாவதுதான்!

மௌனகுரு எப்படி உருவானது?

நேஷ்னல் ஜியாகரபி சேனல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டு போராளிகளை என்கவுண்டர் செய்வதற்காக பின்னால் கைகளை கட்டி அவர்களின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்திருந்தார்கள் ராணுவ வீரர்கள். அப்போது அந்த இரண்டு முகங்களிலும் வந்துபோன ஆயிரம் உணர்ச்சிகளை பார்த்தபோது அந்த அதிர்ச்சி அப்படியே எனக்குள் கடந்துபோனது. சிலநொடிகளில் உயிரை இழக்கப்போகிற அந்த இரண்டு பேரின் எண்ண அலைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோதுதான் மௌனகுரு உருவானது. இந்தக் காட்சியோடு, ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது அவருக்கு இருபுறங்களிலும் சிலுவையில் தொங்கவிடப்பட்ட இரண்டு பேரோடு கூடிய அந்தக் கல்வாறி கொலைக்களம் ஒரு ப்ளாஷ் போல என் கண் முன்னாள் வந்து போனது. மரணத்தின் விளிம்பில் அதை முத்தமிடக் காத்திருக்கும் மூன்று பேர், அந்த இடத்துக்கு வருவதற்கு முன்னாள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் என்பதை ரிவைண்ட் செய்து பார்த்தேன். இண்டர்வெல் பிளாக்கில் இருந்து கதை கிடைத்தது.

இந்தக் கதையை எழுதி முடித்தவுடனேயே அருள்நிதிதான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டீர்களா?

நிச்சயமாக இல்லை! அருள்நிதி உதயன் படத்தில் முதலில் நடித்திருந்தால் முதலில் அவர் மீது எனக்கு அத்தனை ஈர்ப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், வம்சம் படத்தில் கையில் கத்தாழையை வைத்துக் கொண்டு ஒரு கிராமத்துப் பையனின் வெகுளித்தனமும், தெனாவட்டுமாக பார்த்தபோது இவர்தான் மௌனகுரு என்று முடிவு செய்தேன். உதயநிதி ஸ்டாலின் உட்பட நிறைய பேருக்கு கதை சொல்ல வேண்டியிருந்தது. எனக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அவஸ்தையே எழுதி முடித்த கதையை வாயால் இரண்டைரை மணிநேரம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது. தமிழ்சினிமாவில் இருக்கும் மிகத் தவறான முட்டாள் தனமான எதிர்பார்ப்புகளில் இதுவும் ஒன்று.

கதைக்கான ஒளிப்பதிவை தருவதில் மகேஷ் முத்துசாமி தன்னை நிரூபித்தார். ஆனால் மௌனகுருவில் இயக்குனரின் கண்கள் வழியாக ஒவ்வொரு ஷாட்டையும் வடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது...

உண்மை! அதற்குக் காரணம் என்னுடைய டீட்டெய்ல் ஸ்கிரிப்ட். இருநூற்றி ஐம்பது பக்கங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருந்தேன். மகேஷ் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருந்தது. அதனால் கதைக்கான ஒளிப்பதிவை கொண்டுவருவதில் இன்னும் சுதந்திரமாக எங்களால் பணிபுரிய முடிந்தது.

திரை வாழ்க்கையில் சவாலான தருணமாக அமைந்த கணங்கள்?

சினிமாவில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஒவ்வொரு கனமும் சவாலான கணம்தான். ஒரு பட வாய்ப்பு கிடைத்து, அடையாளம் பெறுவதற்கு 14 ஆண்டுகளை செலவிட வேண்டி வந்திருக்கிறது. 24 வயதிலேயே திருமணம் செய்துகொண்டேன். இந்த பதினாலு ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் வாடகைக்கும் வயிற்றுப் பாட்டுக்கும் ஓடிய நாட்கள் அதிகம். கிரியேட்டிவிட்டி நம்மிடம் கண்ணீர் விட்டு அழுத நாட்கள் சவாலான நாட்கள்தான். பசியோடு இருப்பவனுக்கு கற்பனையின் சிறகுகள் விரியாது. முறியும்!
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)