இயக்குனர் கே.பாலசந்தரின் நிழல் நிஜமாகிறது [1978] அற்புதமான மாஸ்டர் பீஸ்16 வயதினிலே பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என இயக்குனர்  பாலசந்தர் மனமாரப் பாராட்டினார்,அந்த அளவுக்கு   மயிலும் சப்பாணியும் அவர் மனதை  ஆக்கிரமித்திருந்தனர்.அதற்கு தன் பாணியில் மரியாதை செய்ய விரும்பிய இயக்குனர் தன் பாணியில் நிழல் நிஜமாகிறது படத்தை எடுத்தார்.16 வயதினிலே ஒரு  வண்ணப்படம்,

ஒரு வருடம் கழித்து வந்த நிழல் நிஜமாகிறது கருப்பு வெள்ளைப் படம், தன் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான பி.எஸ்.லோகநாத் தான் இதற்கும் ஒளிப்பதிவு, தன் ஆஸ்தான புகைப்படக்கலைஞர் E.K.S.நாயருக்கு இப்படத்தில் மறக்க முடியாத ஆத்ம திருப்தியை அளித்த பணியை அவர் கொடுத்தார். படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் மொத்தம் 22 ஸ்டில்கள் வரும்,அத்தனையும் புதுமுகம் ஷோபா அவர்களின் பிரத்யேக போட்டோ ஷூட்கள்,


அவை மேக்கப் டெஸ்டின் போது எடுத்தவை,அது அத்தனையையும் மிக அழகாக படத்தின் டைட்டில்ஸ்க்ரோலில் பயன்படுத்தினார் இயக்குனர், அவை அத்தனையும் பாலசந்தருக்குப் பிடித்த கருப்பு பின்னணியில்  எடுக்கப்பட்ட படங்கள் ,புதுமுக நடிகை என்ற எண்ணம் மக்களுக்கு தோன்றா வண்ணம் ஷோபாவை மக்களும் ஏற்றுக்கொண்டனர்.
1969ஆம் ஆண்டு வெளியான எழுத்தாளர் பம்மனின் கதையைத் தழுவி கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய அடிமகள் என்னும்  மலையாள திரைப்படத்தின் கதை உரிமையை வாங்கி திரைக்கதை எழுதி இயக்கினாலும், முழுக்க முழுக்க தன் பாணியில் மயில்,சப்பாணி என்கிற கோபாலகிருஷ்ணன் கதாபாத்திரங்களுக்கு ஈடான இந்த திலகம் [ஷோபா] ,செவிடன் என்கிற காசி [அனுமந்து] கதாபாத்திரங்களைப் படைத்தார் இயக்குனர்.

சிலக்கம்மா செப்பிண்டி என்னும் தெலுங்கு திரைப்படம் Eranki Sharma [பாலசந்தரின் Aaina -அரங்கேற்றம் இந்தி வடிவத்தின் அசோசியேட் டைரக்டர்] இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியானது இப்படமும் அடிமகள் படத்தை தழுவி உருவான படமே, இதில் தமிழில் கமல்ஹாசன் செய்த வெளியூர் நண்பன் கதாபாத்திரத்தை ரஜினிகாந்த் செய்திருந்தார், ரஜினிகாந்திற்கு தெலுங்கில் இதுதான் கதாநாயகனாக முதல் படம். சுமித்ராவின் கதாபாத்திரத்தை தெலுங்கில் சங்கீதா செய்திருந்தார், நடிகை ஷோபா செய்த ஏழை பணிப்பெண் கதாபாத்திரத்தில் தெலுங்கில் ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். சரத்பாபு செய்த சகோதரன் கதாபாத்திரத்தில் லக்‌ஷ்மிகாந்த் நடித்தார் , அனுமந்து நடித்த வேலைக்காரன் கதாபாத்திரத்தில்  நாராயணராவ் நடித்திருந்தார். எல்லோரும் இப்படத்தின் தழுவல் தான் நிழல் நிஜமாகிறது திரைப்படம் என்பர்,ஆனால் உண்மை அதுவல்ல,தன் படத்தில் அடிமகள் படத்துக்கே க்ரெடிட் தந்தார் இயக்குனர்.

இன்று பல உலக சினிமா இயக்குனர்கள் ஃபிலிமில் தான் உயிரோட்டமான சினிமாவைப் படைக்க முடியும், டிஜிட்டல் எனக்கு ஒப்பவில்லை என்று சொல்கிறார்களோ? அதே போல பாலசந்தரும் கருப்பு வெள்ளையில் தான் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு தத்ரூபமாக உயிரூட்ட முடியும் என்று நம்பினார். வண்ணப்படத்துக்கு வியாபார ரீதியான உத்திரவாதம் இருந்த அன்றைய சூழலில் கருப்பு வெள்ளையிலேயே படங்கள் செய்தார், அவை இன்றும் தனித்துத் தெரிகிறது, பேசப்படுகிறது.

கமல் தன் குருவுக்காக சின்னஞ்சிறு வேடம் முதல் பல்லன் , சோடாபுட்டிக் கண்ணாடி எல்லாம் அணிந்து , தான் உச்சத்தில் ஆணழகன் அந்தஸ்தில் நடித்து வந்த   நாட்களிலும்  தன்னைத் தாழ்த்தி நடித்திருக்கிறார். தப்புத்தாளங்கள் படத்தில் அப்படி மனைவியால் ஏமாற்றப்படும் அவலட்சணமான சாயபு வேடத்தில் நடித்திருப்பார்.அப்படிப் பட்டவருக்கு இதில் தூண் போன்ற சஞ்சீவி என்னும் ஒரு ஏழைப் பங்காளன் கதாபாத்திரம். இதில் இவர் ஒரு சிவில் இஞ்சினியர், ஒரு கட்டிட வேலை இன்ஸ்பெக்‌ஷனுக்காக  ஆறு மாத வேலையாக சென்னை வருவார். அங்கே நண்பர் சரத்பாபுவின் வீட்டின் எதிரே இருக்கும் மன்மத நாயுடு[மௌலி] வீட்டில் தங்கியிருப்பார்.

நண்பன் வெங்கடாசலத்தின் தங்கை இந்துமதி நாட்டியப்பள்ளி நடத்துகிறார், ஆண்களை வெறுப்பவர், இவரைக் கண்ட நாள் முதல் இவர்கள் இருவருக்கும் எதைத் தொட்டாலும் குற்றம்,என்னும் ரீதியாக சண்டை நிகழ்கிறது,அவரின் திமிரை இவர் அடக்கி இறுதியில் மணம் முடிப்பார். தன் வீட்டில் வேலை பார்த்த ஏழை சமையல்காரப்பெண் திலகத்தை ஆசை வார்த்தைகள் கூறி சுமித்ராவின் அண்ணன் வெங்கடாசலம் தன் ஆசைக்கு இணங்க வைத்து கர்ப்பமாக்கி விடுவார்.

வெங்கடாசலம் மனம் திருந்தி வந்து ஏற்றுக் கொள்ளும் வரை திலகத்தை ஒரு குடிசை எடுத்து தங்க வைப்பார் கமல், துணைக்கு அனுமந்துவை அமர்த்திவிட்டு தன் வேலை விஷயமாக சென்றவர் வாரா வாரம் வந்து பார்த்தும் செல்வார்.இந்நிலையில் அக்கம் பக்கத்தவர்கள் ஷோபாவுக்கும் அனுமந்துவுக்கு என்ன உறவு? என அவர் அம்மாவின் பேச்சைக் கேட்டு பஞ்சாயத்துக்கு வர, அனுமந்து இக்குழந்தைக்கு நான் தான் தகப்பன், திலகத்துக்கு நான் தான் கணவன் என்பார்,இதில் பேட்டை வஸ்தாதாக வந்து பகலில் பஞ்சாயத்து செய்துவிட்டு இரவில் திலகத்தை அடைய வரும் இயக்குனர் நட்ராஜை சாதுவாக இருந்த இவர் மிரண்டு ஒரு டீக்கடையில் வைத்து வெளு வெளு என வெளுப்பார்.

இந்நிலையில் திலகத்துக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. ஒரு பக்கம் கமல் வெங்கடாசலத்தின் மனதை சாந்தமாக கரைக்க, மறு பக்கம் அனுமந்து சாதுவாக இருந்தவர் மிரண்டு அரிவாளுடன் சென்று மிரட்டி அவர் செய்த தவற்றை யோசிக்கச் செய்கிறார். தன் தங்கை இந்துமதி தன் நண்பன் சஞ்சீவியை விரும்புவதை மன்மத நாயுடு மூலம் ஆணித்தரமாக அறிந்த வெங்கடாசலம் அவள் சஞ்சீவியின் மீது இருக்கும் காதலை ஒத்துக்கொண்டால் திலகத்துக்கு தான் இழைத்த அநீதிக்கு விமோசனம் தேடத் தயாராக இருக்கிறேன் என்று தன் மன்னிப்பை அங்கே பணயம் வைப்பார்.

இவர் ஊராரைக் கூட்டி மேள தாளத்துடன் திலகத்தை அழைக்கச் செல்கையில் திலகம் ஒரு அயோக்கியனைக்கூட ஒரு பெண் மன்னித்து ஏற்பாள்,ஆனால் ஒரு கோழையை எப்போதும் ஏற்க மாட்டாள்,என் குழந்தைக்கு யார் வேண்டுமானாலும் தகப்பனாக இருக்கக்கூடும்,ஆனால் எனக்கு ஏற்ற கணவன் அனுமந்து தான் என்று புரட்சிகரமான முடிவை எடுப்பாள்,பணக்காரத் திமிரை அங்கே நசுக்குவாள், அதில் கமல் மிகுந்த மகிழ்ச்சியடைவார், அவரின் அம்முடிவை தான் கூட எதிர்பார்க்கவில்லை,என்று உச்சிமோர்ந்து பாராட்டி அனுமந்துவையும் ஷோபாவையும் சேர்த்து வைப்பார். உன்னை விட ஒரு நாள் சின்னவனாக இருந்தாலுமே உன் காலில் விழுந்திருப்பேன் என்பார்.

 காம்ரேட் கமல் இதில் எல்லா காட்சிகளிலுமே சிகரெட்டுடன் தான் இருப்பார். கூடவே செயின் ஸ்மொக்கர்களிடம் இருக்கும் வறட்டு இருமலையும் அழகாக வசனத்தினூடே பயன்படுத்தி இவர் தோன்றும் காட்சிகளை பேசும் வசனங்களை இயற்கையானதாக மாற்றி விடுவார்.படத்தில் அவர் ஒரு கம்யூனிஸ்ட் முதல் காட்சியிலேயே ஒரு பழக்கார அம்மாளின் கூடையை பஸ் க்ளீனர் மேலேயிருந்து தூக்கி போட பழங்கள் சிதறும்,


அவர் அழுது புலம்ப,கமல் அவன் சட்டையை கொத்தாக பிடித்து அறை விட்டு பழங்களை பொறுக்கச் சொல்லுவார்,பின்னர் இயல்பாக தன் விட்டுப்போன வாட்ச் பட்டையை சரி செய்வார். இவரது சிகரட் லைட்டரை சுமித்ரா எடுத்து ஒளித்து வைத்ததை திலகம் மூலம் அறிந்தவர், அவரின் அறைக்குள் சென்று அவரை மூர்க்கமாகக் கட்டிப் பிடிப்பார். லைட்டரை கொடுத்தால் விட்டு விடுகிறேன் என்பார், சுமித்ரா இவரது செய்கையை எதிர்பார்த்திருக்க மாட்டார், அங்கே இவரது லைட்டரை தலையணை அடியில் இருந்து எடுத்து வீசி எறிவார்.

அங்கே  வரும் ஒரு அருமையான வசனம்,ஏண்டா படவா உனக்கு ஒளிந்துகொள்ள இந்துமதி அம்மாவின் தலகாணி கேக்குதா?!!!  அவரின் அந்த ஆண்செருக்கை அடுத்த காட்சியிலேயே அனுமந்து நொறுக்குவார்,தான் ஷோபாவிடம் காதலைச் சொல்ல வழி தெரியாமல் கட்டிப்பிடித்துவிட்டதாகச் கூறுவார்,


தனக்கு 25 பைசாவுக்கு இவர் ஏதேனும் வேலை தந்தால்,அதில் மல்லிகைப்பூ வாங்கித்தந்து ஷோபாவிடம் தந்து தன்னை மன்னிக்கும்படி கேட்பேன் என்பார், கமல் 50 பைசாவாகத் தந்தவர் ,அதை தனக்கு ஒரு பாடமாகவே எண்ணி, சுமித்ரா சென்றிருக்கும் கோவில் வாசலில் அவரின் செருப்பை கையில் ஏந்திக் காத்திருப்பார்,அவரிடம் அவர் அறையில் வைத்து ஆண்மையின் செருக்கில் தவறாக நடந்தமைக்கு மன்னிப்பு கேட்கும் அந்த இடம் மிக அழகான ஒரு காட்சி.

கமல்ஹாசனின் நாட்டியத்திறமையை படத்தில் உபயோகப்படுத்த நல்ல சமயம் பார்த்த இயக்குனர், இப்படத்தின் ஒரு காட்சியில் சுமித்ரா கடைக்குச் சென்றிருந்த நேரத்தில் அங்கே குழுமியிருக்கும் நடனம் கற்க வந்த சிறுமிகளுக்கு பரத் வகுப்பெடுப்பார், கமல்ஹாசன் வெற்று மார்புடன், பெல்பாட்டம் அணிந்து அங்கே பரதம் ஆடுவார்,உள்ளே நுழைந்த சுமித்ராவுக்கு அது ஆச்சர்யமாகவும்,அவரை கற்பூர வாசம் தெரியாத கழுதை என முன்பு திட்டியதற்கு நாணமாகவும் இருக்கும்,அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கல்லுளிமங்கத்தனமாக கமலின் சட்டையை விட்டெறிவார்.மிக அருமையான காட்சியது,


இயக்குனர்  பாலசந்தரால் கமல்ஹாசனை முழு நடனக்கலைஞனாக தோன்ற வைக்கமுடியாமலே போனது,ஆனால் அவரின் ஆப்த நண்பர் கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளியான சலங்கை ஒலி பார்த்துவிட்டு மிகவும் சிலாகித்தார்,உச்சிமோந்தார்,அதன் பின்னர் அப்படத்துக்கு மரியாதை செய்யும் வண்ணம் தன் பாணியில் ஒரு இசைக்கலைஞன் பற்றி இயக்கிய படம் தான் சிந்து பைரவி.

 

சுமித்ரா கமலின் ஆண்மை கம்பீரத்தில் தன்னை மெல்ல தோற்கும் இடங்கள் மிக அருமையானவை, அதை இலக்கணம் மாறுதோ பாடலில் மிக அழகாக மாண்டேஜ் ஷாட்களாக சித்தரித்திருப்பார் இயக்குனர், கலைப் பொக்கிஷம் அவை.அப்பாடலை இங்கே பாருங்கள் https://www.youtube.com/watch?v=gPFHSbywEicஇப்படத்தில் ஷோபாவும் அனுமந்துவும் தான் பிரதானமானவர்கள், ஷோபாவின் கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளத்தை அப்படியே பயன்படுத்தினார் இயக்குனர்.அதில் வெற்றி கண்டார்.அவர் ஒரு மான் போல தாவித்தாவி வீட்டை பெருக்குவது,அரிசி கல் நீக்கி புடைப்பது,லாவகமாக விரைவாக சமையல் முடிக்கும் காட்சிகள்,எஜமானி சுமித்ராவைப் போலவே காற்கறிக் குப்பையில் தனக்கு கண்ணாடி செய்து அணிந்துகொள்வது, தன்னை அரசியாக பாவனை செய்வது,எஜமானி இந்துமதி அம்மாவின் ஏகாதிபத்யத்தை எதிர்க்க முடியாமல் இருந்தவர்,


அதை கமல் எதிர்க்க அதற்கு மறைந்து நின்று வாயைப் பொத்தி சிரிப்பது, காது மந்தமான வேலைக்காரன் அனுமந்துவின் மீது இவர் கொண்டிருக்கும் இரக்கம், ஆச்சர்யம், அன்பு எல்லாமே மிக அற்புதமானவை, கிளி ஜோசியம் கேட்டு நல்ல கணவன் வருவான் என நம்பிக்கையோடு இருந்தவரை காமாந்தக எஜமானர் சரத்பாபு நம்பிக்கை வார்த்தைகள் பேசி பெண்டாளும் காட்சிகள் அத்தனை தத்ரூபமான சித்தரிப்புகள், அப்போதும் இப்போதும் ஏழை பணிப்பெண்களை எஜமானர்கள் பார்க்கும் பார்வையில் மாற்றமேதுமில்லை, சந்தர்ப்பம் கிடைக்கும் வரை தான் யோக்கியர்கள்,அதை மிக அருமையாக சொன்னார் இயக்குனர்.

நிழல் நிஜமாகிறது படத்தில் ஷோபா தான் நாயகி, அனுமந்து தான் நாயகன்,கமல்ஹாசன்,சரத்பாபு,சுமித்ரா, மௌலி இவர்கள் எல்லாம் உப கதாபாத்திரங்கள் தான். இதில் அனுமந்துவிடம் சப்பாணி கமல்ஹாசனின்  பாதிப்பை ஒருவர் பார்க்கவே முடியாது, இத்தனைக்கும் இவரது அம்மா புகையிலைக்காரி இவரை சப்பாணி என்றும் அழைப்பார்,ஆனால் செவிட்டுப் பிணம் என்றே அதிகம் அழைப்பார். சஞ்சீவி [கமல்] இவரிடம் அறிமுகமாகையில் உன் பெயர் என்ன என்று கேட்பார், செவிடன் என்பார் அனுமந்து, உன அம்மா எப்படி கூப்பிடுவார்? செவிட்டுப் பொணம் என்று அனுமந்து சொல்ல ,வருந்தியவர்.

 நீ போய் உன் அம்மா நீ பிறந்த போது ஒரு பெயர் வைத்திருப்பார்,அது என்ன என்று கேட்டு வந்து சொல்லு என்பார். மறுநாள் அனுமந்து இவரிடம் ஆவலுடன் வந்து தன் பெயர் காசி என்பார். சரி நான் இனி அப்படியே கூப்பிடுகிறேன் என்றவர் அனுமந்து படியிறங்குகையில் காசி எனக்கூப்பிட, அவர் முதன் முறையாக தன்னை ஒருவர் கௌரவமாக பெயர் சொல்லி கூப்பிட்ட ஆனந்தத்தில் இவரை நன்றியுடன் பார்க்க,கமல் பெயர் நன்றாக இருந்தது,அது தான் கூப்பிட்டுப் பார்த்தேன் எனச் சொல்ல, அனுமந்து காலில் விழுவார், அவரைத் தூக்கிய கமல் அட செவிடா என அக்காட்சியை முடித்து வைப்பார், இப்படி நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் அடுத்தடுத்து வரும். , தன்னளவில் தனித்து அப்பாத்திரத்திற்கு உயிரூட்டியிருப்பார் அனுமந்து.
அனுமந்துவின் இயற்பெயர் அனந்து,இவர் ஒரு நாடக நடிகரும் கூட,இவரின் ஒரு சமையல்காரர் கதாபாத்திரத்தை கண்ட இயக்குனர் இவருக்கு இந்தப் படத்தில் வரும் சுமித்ரா வீட்டின் முரட்டுவேலைகளைச் செய்யும் வேலைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். மனிதர் அசத்தியிருப்பார். பாலசந்தரின் நூல்வேலி படத்திலும் இவருக்கு வீட்டு வேலைக்காரன் கதாபாத்திரம் தான்.

பின்னாளில் கவிதாலயாவின் சகோதர நிறுவனமான கலைவாணி பிக்சர்ஸ் தயாரிப்பில் மௌலி இயக்கிய அண்ணே அண்ணே படத்தில் இவர் மௌலிக்கு டிரைவர். இவரை நான் மேற்கு மாம்பலத்தில் ஏரிக்கரை தெருவில் வைத்து அடிக்கடி பார்த்துள்ளேன்,மிகுந்த குடிப்பழக்கம் இருந்தது சிவந்த கண்களிலும்,பலநாள் தாடியிலும் தெரியும்,இவர் 2003 ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் இறந்து விட்டார்.இவர் பாலசந்தர் மற்றும்,மௌலி அவர்கள் படங்களில் தொடர்ந்து கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார்.

இதில் மன்மத நாயுடுவாக வரும் மௌலியின் கதாபாத்திரம் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம். சரத்பாபுவிடம் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் சமையல்காரி திலகம் பற்றி ஆர்வமாக விசாரித்தவர்.  கொஞ்சோண்டு பாத்துட்டு தர்ரேனே கூப்பிடுடா, என்பார். பின்னொரு சமயத்தில் கமலிடம்  பொம்பள வாசன வர்ரதே, இந்த செண்டை போட்டால் ஆம்பள பொணம் எழுந்து பொம்பள பிணத்த தேடிக்கொண்டு போயிடும் போலருக்கே. வாத்ஸாயனா என்பார்.  எத்தனை க்ரியேட்டிவிட்டியுடன் இப்படத்துக்கு காமெடி ட்ராக் எழுதி இருப்பார்.


தமிழ் சினிமாவில் சற்றும் ஆபாசமின்றி voyeurism தொனிக்கும் கதாபாத்திரங்களில் முதன்மையானது மன்மத நாயுடு கதாபாத்திரம்,மௌலி அவர்கள் 1973ல் வெளியான சூர்யகாந்தி திரைப்படத்திலேயே அறிமுகமாகிவிட்டாலும், நடிப்பில் முறையான அங்கீகாரம் நிழல் நிஜமாகிறது படத்தில் கே.பாலசந்தர் அவர்களால் தான் அமைந்தது.ஒரே பார்வையாலேயே கடந்து போகும் பெண்ணின் அங்க அளவுகளையும் எடையையும்  துல்லியமாகச் சொல்லிப் பெருமை பட்டுக்கொள்வார்,


யாராவது உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா?என்று ஏதாவது புத்திமதி சொன்னால்,நான் அரசமரத்தடிப் பிள்ளையாராட்டம், ஹார்ம்லெஸ் ஃபெல்லொ,பார்க்கிறதோட சரி,அழகை ரசிப்பேன்,அடைய நினைக்க மாட்டேன் அவ்வளவு தான் என்பார்.அப்படத்துக்காக தன்னுடைய காமெடி ட்ராக்கிற்கு 16 சீன்கள் இவரே எழுதி இயக்குனரிடம் தந்து படத்தில் சேர்த்தாராம்.இயக்குனர் முழு சுதந்திரம் தந்து பணியாற்ற வைத்ததை அவ்வப்பொழுது பொதுமேடைகளில் நினைவுகூர்வார் மௌலி.


மௌலி அவர்களின் முழுப்பெயர் T. S. B. K. Mouli,அதன் விரிவாக்கம் திருவிடைமருதூர். சம்மந்தமூர்த்தி கனபாடிகள்.பால்கிருஷ்ண சாஸ்த்ரிகள் .மௌலி.என்பதாகும்,இப்பெயரை  படிக்கையில் தில்லுமுல்லு படத்தில் ரஜினியின் அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் சந்திரன் என்னும் பெயர் நினைவுக்கு வரும்,அப்பெயரை விட பெரிதாக இருக்கும்.

இவரின் இயல்பான நடிப்புக்காகவே நான் நாதஸ்வரம் சீரியல் பார்ப்பேன்.அதில் பல நீளமான ஷாட்களை[அதிக பட்சம் 18 நிமிடங்கள்]  ஒரே டேக்கில் ஓக்கே செய்து பிரமிப்பூட்டும் திறமைசாலி நடிகர்.
ஒருவிரல் கிருஷ்ணாராவ் பாலசந்தரின் எல்லா படங்களிலுமே இருப்பார். இப்படத்தில் ஷோபாவுக்கு இருக்கும் ஒரே உறவினர் மிகுந்த கோபக்காரர், அதில் அவர் சலவைத் தொழிலாளியாதலால்,அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அக்காட்சிக்கான  சூழலையும்,துணியின் தரத்தை, வண்ணத்தை, அது சாயம் போகும் தன்மையையும் ஒப்பிட்டு இணைத்து பேசுவது போல இயல்பான நகைச்சுவையில் மௌலி அவர்களை வைத்து எழுதப்பட்டிருக்கும். அப்படம் பார்க்கையில் கவனித்துப் பாருங்கள்.பல சுவையான அம்சங்கள் பிடிபடும்.உதாரணமாக சுமித்ரா இவரிடம் ரொம்ப சின்னப் பொண்ணா இருக்காளே?பொண்ணு எப்படி,இவர் ,சில துணிங்க பழசாயிட்டாலும் சாயம் போகாதும்மா,அது போல இவ என்பார்.

இப்படத்தில் வரும் கம்பன் ஏமாந்தான் பாடல் என்ன ஒரு நவீனமான ,நளினமான ஈவ் டீசிங் பாடல்?!!!,அதில்  என்ன ஒரு இருள் கவிந்த ஒளிப்பதிவு, கமல்ஹாசனின் குறும்பு சுமித்ராவின் சீற்றம், சரத்பாபுவின் பம்மாத்து, அத்துடன் கவிஞரின் பாடல் வரிகள் ,வசீகரம்.


இப்பாடல் நிகழும் இடம் ஹைதராபாத் சாரதி ஸ்டுடியோ, இப்படத்தில் ஷோபாவின் கிராமம் திருவிடந்தை, ஷோபா அவர்கள் தன்னை அரசியாக கற்பனை செய்யும் காட்சிகள் அங்கே எடுக்கப்பட்டன, அவருடன் அவரது கண்டிப்பான உறவினர் ஒருவிரல் கிருஷ்ணாராவ் மந்திரியாக வலம்  வருவார். கமல் சுமித்ராவின் எதிரெதிர் வீடு ஆளரவமற்ற சாலை இயல்பாக இருக்க தேடியதில் சாரதி ஸ்டுடியோ அப்படி அமைந்தது. இதில் கமல் தங்கியுள்ள வீட்டிற்கு பி.எஸ்.லோகநாத் அவர்கள் செய்த  ஒளியமைப்பை பாருங்கள்.இப்படத்திற்கு உதவி ஒளிப்பதிவு ரகுநாதரெட்டி,ரகுநாத ரெட்டி அவர்கள் கவிதாலயாவுக்கு பணியாற்றியது போக சின்ன வாத்தியார் தாலாட்டு கேக்குதம்மா போன்ற நிறைய வெளிநிறுவனப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார், ஆனால் அவரின் குருவான பி.எஸ்.லோகநாத் அவர்கள் பாலசந்தர் அவர்களிடம் மட்டுமே சுமார் 55 படங்கள் பணியாற்றியிருக்கிறார்,அதில் ரகுநாத ரெட்டி உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், பி.எஸ் லோகநாத்துக்கு பின்னர் சுமார் 25 படங்கள் பாலசந்தருடன் பணியாற்றினார்.
அப்பாடலை இங்கே பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=CvgO_P-xlgs&feature=youtu.be


இப்படம் கட்டுக்கோப்பான கலைப்பெட்டகம், எத்தனை வருடம் கழித்துப் பார்த்தாலும் அதன் புதுமை மெருகேறிக்கொண்டே இருக்கிறது,இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் மாஸ்டர் பீஸ் இப்படம்,இதன் முன் வடிவங்களான அடிமகள் [மலையாளம்]சிலக்கம்மா செப்பிண்டி[தெலுங்கு] அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டுத் தெரியும் ஒரு Auteur ரின் ஆக்கத்தை ஒருவர் உணரலாம்.நடிகை சுமித்ராவை அழகாக ரசிக்கும் படி காட்டிய திரைப்படம் இது,அதிலும் அவரின் ஊரைக் குறிக்கும் படி குண்டூர் மிளகாய் இது,அத்தனை லேசில் காரம் குறையாது என்று வசனமும் வைத்திருப்பார் இயக்குனர் , எலியும் பூனையும் போல நாயகன் நாயகி மோதிக்கொள்ளும் தீமில் இதன் பின்னர் வந்த எந்த படமும் இதற்கு உறை போடக்கூடக் காணாது.


கமல் கடைசியில் நாயகன் நாயகி போட்டியில் ஜெயித்து சுமித்ராவை தன் சைக்கிளின் முன்னால் பாரில் அமர வைத்து டபுள்ஸ் அடித்துக் கொண்டு போவார்.மிக அழகான முடிவு,நம் பழைய மஹாபலிபுரம் சாலை அது,தன் கம்பெனி ஜீப்பில் உற்றார் உறவினரை ஏற்றுவதில்லை,இது என் சைக்கிள் இதில் வந்தால் கூட்டிப்போகத் தயார்,என்று அத்தனை பெரிய இந்துமதி அம்மாளின் அகங்காரத்தை அடக்கி,பெட்டிப்பாம்பாக ஆக்கி புதிய எளிமையான பெண் அவதாரமாக மாற்றிவிடுவார் கமல்.
 

இதன் பெயரும் கொலை அமரர் சுஜாதாவின் சைக்கோபாத் கில்லர் பாணி துப்பறியும் நாவல்


இதன் பெயரும் கொலை 1997-98 ஆம் ஆண்டு வாக்கில் குமுதம் இதழில் தொடராக வந்த  சைக்கோபாத் கொலைகாரன் பற்றிய துப்பறியும் நாவல்.  இதில் வாத்தியார் கூடுதல்  சோமாறி போன்ற கலைச் சொற்களை வசந்த் வாயால் அறிமுகம் செய்திருந்தார்.

வஸந்த் இணைந்து துப்பறிந்த   நாவல். இதில் ஒரு முக்கியமான விஷயம் கணேஷுக்கு[40+] மிகவும் வயதாகிக்கொண்டே போவதை உணர்ந்த வாத்தியார் இன்ஸ்பெக்டர் இன்பா[இன்பானந்தி] என்னும் அழகிய ஐபிஎஸ் ஆஃபிஸருக்கும் கணேஷுக்கும் காதல் மலர்ந்து திருமணப் பேச்சில் முடிவது வரை சுவையாக எழுதியிருந்தார்,இது இந்த ஜோடி துப்பறிந்த 25ஆம் நாவலாம்.

வசந்த் அநியாயத்துக்கு அந்த ஐபிஎஸ் அதிகாரி இன்பாவிடம் வம்பிழுப்பார்,அக்கிரமத்துக்கு வர்ணிப்பார்.அவரே தன் எஜமானன் கணேஷின் காதலுக்கு ரூட்டும் போட்டு கொடுப்பார்.அதன் பின்னர் திருமணம் ஆனதா?என்பதை அடுத்த நாவலை வாசித்த வாத்தியாரின்  டைஹார்ட் ரசிகர்கள் தெளிவு படுத்தவும்.இக்கதையை வாசிக்கையில்  சைலன்ஸ் ஆஃப் த லாம்ப் [1991] என்னும் படம் நினைவுக்கு வந்தது,வாத்தியார் அப்படத்தைக் கூட நாவலில் அடுத்தடுத்து நிகழும் கோல்ட் பளட் கொலைகளுக்கு உந்துதலாகக் கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

கதைச் சுருக்கம் 
வாழ்க்கைப் படகு உள்ளிட்ட தனியார் டீவி சீரியல் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருக்கும் நடிகை ப்ரேரணா தன் கணவன் தூக்கில் தொங்க முயற்சிப்பதாக சொல்லி வழக்கம் போல கணேஷை  அழைக்கிறாள், அவர்கள் ஆஜராகி கணவனுக்கு முதலுதவிக்கு கொண்டு செல்கையில் இறந்து போகிறான்.

கொடிய சந்தேக நோயாளியான  கணவனின் மறைவு அவளுக்கு துக்கத்துக்கு மாறாக நிம்மதியையே தருகிறது. இந்நிலையில் ப்ரேர்னா செல்லும் இடங்களில் எல்லாம் சந்தேகமாக மரணங்கள் நிகழ்கின்றன, 

 அவளை தேற்றி தங்க இடம் தந்து  உதவும் கணேஷ்-வசந்த்துக்கும், நடக்கும் கொலைகளுக்கு ப்ரேரணாவை வாரண்டுடன் கைது செய்ய வரும் இன்ஸ்பெக்டர் இன்பாவுக்கும் அந்த சைக்கோ பாத் செல்போன், டெலிபோன், பேஜர் ஈமெயில் என எல்லா வழிகளிலும் நூதனமாக அனுப்பும் கொலை மிரட்டல்கள் எல்லாம் நம்மை 90களின் பிற்பாதிக்கே இட்டுச் செல்கின்றன.

கணேஷ்வசந்த் மற்றும் இன்பாவை திசைதிருப்ப அந்த சைக்கோ மயக்க மருந்தும் செக்ஸ் லேகியமும் கலந்த சாக்லேட்டை பிரயோகிக்கிறான்,அதை உண்ட வசந்தின் காரியதரிசியும்,இன்பாவும் ஆடை அவிழ்ப்பு செய்து வசந்த் மற்றும் கணேஷிடம் அத்துமீறும் கொடுமையும் நடக்கிறது.

நகரில் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் குடும்பப் பெண்கள் மூன்று பேர் ரேண்டமாக  அடுத்தடுத்து கழுத்தறுத்து கொல்லப்படுகின்றனர், நகரில் சட்டம் ஒழுங்கு கெடுகின்றது,போலீசுக்கு தூக்கம் கெடுகின்றது. அந்த கம்ப்யூட்டர் சவ்வியான சைக்கோபாத் கொலையாளி   இன்பாவின் மனவளர்ச்சி குன்றிய தங்கையை   பிணைக் கைதியாக கடத்திக்கொண்டு சென்று விடுகிறான்,

கடைசியில் பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி நிருபர்கள் சூழ அந்த சைக்கோபாத் கொலையாளி செல்லப்பா மிகுந்த கூல் ஆட்டிட்யூடுடன் கைது செய்யப்படுகிறான்.

வீரதீர சாகசங்களுக்குப் பின்னர் கணேஷ் இன்பாவின் திருமணப்பேச்சுடன் முடிகிறது நாவல்

தென்னிந்திய சினிமாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஏ.வின்செண்ட் நினைவுகூறல்

 

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர், மற்றும் 30 படங்களின் இயக்குனர் வின்சென்ட் அவர்கள்,24 பிப்ரவரி 2015 அன்று தனது 86ஆவது அகவையில் சென்னையில் மறைந்தார்.

இவரின் மகன்கள் ஜெயனன் வின்சென்ட்,அஜயன் வின்சென்ட் இருவரும் இன்றைய தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்கள் ஆவர்,

அவர் ஒளிப்பதிவு செய்த இயக்குனர் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் ஒளிப்பதிவில் மிகுந்த தொலைநோக்கான படைப்பு, அதில் மருத்துவமனை 15’x15’அறைக்குள்ளேயே இவர் படமாக்கிய பரீட்சார்த்தமான வெரைட்டியான ஷாட்கள் இன்றும் அதிசயமானவை.

நடிகர்கள் தேவிகா ,முத்துராமனுக்கு அப்படி வளைத்து வளைத்து க்ளோஸப் போட்டிருப்பார். அக்காலத்தில் செயற்கை வெளிச்சத்தில் ,இப்படி ஒளியமைப்பு செய்து, அதற்கு பொருத்தமான லென்ஸ்கள் கொண்டு இப்படி பிரமிக்கத்தக்க ஃப்ரேம்கள் வைத்து ஷாட் கம்போஸ் செய்வது பிரம்மப் பிரயத்தனமானது.

நடிகர் முத்துராமனின் ஆஸ்பத்திரி கட்டிலுக்கு அடியில் ராட்சத சைஸ் கேமராவை  லாவகமாக நுழைத்து தேவிகாவின் முகத்துக்கு அருகே கொண்டு சென்று க்ளோஸ் அப் போட்டு முடிப்பார். இதில் தேவிகாவுக்கு முகத்துக்கும் வீணையை ஏந்தி வாசிக்கும் இரு கைகளுக்கும் எத்தனை டீடெய்ல்கள் வைத்தார் பாருங்கள்.

 இந்த சொன்னது நீ தானா பாடலை பார்த்துவிட்டு அந்த மேதையின் மற்ற பிற படைப்புகளையும் நினைவுகூறுவோம். https://www.youtube.com/watch?v=4WGVo1Zh3Yw

 அவரின் தவறவிடக்கூடாத முக்கியமான படைப்புகள் இங்கே
 1. அமரதீபம்
 2. உத்தம புத்திரன்
 3. எங்க வீட்டுப் பிள்ளை [சுந்தரம் மாஸ்டருடன் இணைந்து]
 4. கல்யாணப் பரிசு
 5. விடிவெள்ளி
 6. தேன் நிலவு
 7. கௌரவம்
 8. வசந்த மாளிகை
 9. போலீஸ்காரன் மகள்
 10. நெஞ்சம் மறப்பதில்லை
 11. காதலிக்க நேரமில்லை
 12. பிரேம் நகர்
 13. அன்னமய்யா

தமிழ் சினிமா இயக்குனர் ஆர்.சி.சக்தி நினைவுகூறல்

 
ஆர்.சி.சக்தி அவர்களின் உணர்ச்சிகள் 70களிலேயே மிகவும் முற்போக்கான படம்,கொடிய பால்வினை நோயான எயிட்ஸ் கண்டறியப்பட்டதற்கு முன்னால் புழங்கிய மேகநோய் அல்லது வெட்டை நோய் முற்றி சானிட்டோரியத்தில் சிகிச்சை பெற்று மரணப்படுக்கையில் அவதியுரும் நோயாளியாக கமல்ஹாசன் தோன்றியிருப்பார்.அவருக்கு இளம் வயதில் மிகவும் சர்ர்சையான கதாபாத்திரமாக அமைந்தது.
 
இதில் ஸ்ரீவித்யா சோபிஸ்டிகேட்டட் விலைமங்கை, ஸ்ரீவித்யா மீது லாட்ஜ் அட்டெண்டரான கமல் வேட்கை கொண்டிருக்க,அவர் இவரைத் தன் உடன்பிறவாத் தம்பியாக நினைப்பார். விபத்தில் காயமுற்ற கமல்ஹாசனை இதிலும் காப்பாற்றி அடைக்கலம் தருவார். தம்பியாகவும் தத்து எடுத்துக்கொள்வார்,ஆனால் கமலின் மனதில் வக்கிரம் இன்னும் மீதமிருக்கும்,அதன் விளைவாக ஸ்ரீவித்யா செலவுக்குத் தரும் பணத்தில் எளிதில் கிடைக்கும் விலைமங்கைகளை கண்டபடி கூடுவார்.அதில் நோயால் பீடிக்கப்படுவார்.
 
இதில் மேஜர் சுந்தர்ராஜன் ரகசிய நோய் டாக்டராக வருவார். வி.கோபாலகிருஷ்ணன் நல்ல நடிகர் இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் செய்திருப்பார்,அவரை நன்கு பயன்படுத்தியவர்களில் இயக்குனர் ஸ்ரீதருக்கு அடுத்த படியாக ஆர்.சி .சக்தியும் ஒருவர்.
மனைவியின் கள்ளத்தொடர்பு துரோகம் சகித்து அவளை மன்னிக்கும் கணவன் கதாபாத்திரம் தமிழுக்கு முதன்மையானதும் புதுமையானதும் ஆகும்.
 
அதே போல இளம்விதவை கதாபாத்திரமும் உண்டு, அந்நாட்களில் இளம் விதவைக்கு மறுமணம் செய்யாமல் அவளை விரகத்தில் ஏங்க விட்ட சமூகத்துக்கு நல்ல சவுக்கடி தந்த படம் இது,
 
இதே போல பெண்களால் பயன்படுத்தப்பட்டு அவர் வீட்டாரால் வஞ்சிக்கப்பட்ட ஏழை வேலைக்காரன் கதாபாத்திரத்தை கமல் பின்னாட்களில் சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் தொடர்ந்து செய்தார்,
 
ஆர்.சி.சக்தியின் கூட்டுப்புழுக்கள் என்னும் ரகுவரன் நடித்த திரைப்படம் ஒரு அருமையான படைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்,
 
அவரின் சிறை,தர்மயுத்தம் ,மனிதரில் இத்தனை நிறங்களா? எல்லாம் அவரின் அருமையான படைப்புகள்.90 களுக்குப் பின்னர் அவர் வாய்ப்புகள் இன்றி படம் இயக்கவில்லை, 
 
கமல்ஹாசனுக்கு ஒரு வகையில் ஏணியாகவும் தோனியாகவும் இருந்தவர் ஆர்.சி.சக்தி,அவரை கௌரவிக்கும் வண்ணமாகவே தன் தேவர்மகன் திரைப்படத்தின் நாயகன் பெயரை சக்தி என்று வைத்தார் என நினைக்கிறேன். அவர் புதுமையான கதைகளை படமாக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார்,முடிந்தவரை படைத்தார்,அதில் சில குப்பைகளும் உண்டு,ஆனால் அவரின் முயற்சிகள் முக்கியமானவை,தமிழ் சினிமாவின் மிகவும் அண்டர்ரேட்டட் இயக்குனர்,அவருக்கு என் அஞ்சலிகள்.அவரின் படைப்புகளை இனி தேடி  பார்ப்போம்.

இயக்குனர் கே.பாலசந்தரின் பட்டினப்பிரவேசம் [1977] மறக்கப்பட்ட மாணிக்கம்இயக்குனர் கே.பாலசந்தரின் பட்டினப்பிரவேசம் திரைப்படம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்தது,அண்ணன் தம்பிகள் கிராமத்திலிருந்து பிழைப்பிற்காக பட்டினம் வந்து கஷ்டப்படும் படங்களுக்கு இதுவே ட்ரெண்ட் செட்டர் படமாகவும் அமைந்தது.

இது முழுக்க ஸ்டூடியோவுக்கு வெளியே படமாக்கப்பட்டது,ஆனால் அதே 1977 ஆம் வருடம் வெளியான 16 வயதினிலே படம் தான்,முழுக்க ஸ்டூடியொவுக்கு வெளியே படமாக்கப்பட்ட படம் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளது. ஏனெனில் இதை சினிமா விமர்சகர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதனால் தான்.

படத்தில் வரும் கிராமப்புரக் காட்சிகளுக்கு தர்மபுரிக்கு அருகே உள்ள கரிமங்களம் என்னும் ஊரில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் , படத்தின்  நகரசூழல் காட்சிகளுக்கு முழுக்க முழுக்க சென்னை நந்தனம்[11 மாடி விருந்தினர் மாளிகை],அண்ணாசாலை,மண்ணடி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது,


புற நகர் காட்சிகள் அப்போது வளராத பழவந்தாங்கல்[நங்கநல்லூர்] பல்லாவரம் பகுதிகளில் படமாக்கப்பட்டது, இது தமிழின் முதல் ஆர்வோ ஃபிலிமை பயன்படுத்தி எடுத்த வண்ணப்படம்,இதன் ஒளிப்பதிவு பி.எஸ்.லோகநாத் அவர்கள்,உதவி ரகுநாதரெட்டி அவர்கள். இதில் உதவி இயக்குனர்களாக அமீர்ஜானும், கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்புவும் பணியாற்றியிருப்பர்,

இதன் கதை வசனம் விசு அவர்கள்.எனவே இதில்   உதவி கதை வசனம் : அனந்து என்ற பெயர் டைட்டில் ஸ்க்ரோலில் இல்லை. அன்றைய 70களின் காலக்கண்ணாடி இப்படம்,ஆனால் இப்படத்தை சினிமா விமர்சகர்கள் இயக்குனர் பாலசந்தரின் படைப்புகளை விமர்சிக்கையில் கருத்தில் கொள்ளாமல் போனது வியப்பூட்டுகிறது.

தெற்கே ஒரு குக்கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபெயரும் குடும்பம் அநேகமாக வந்து சேர்வது  புறநகர் பகுதிகளுக்குத்தான். அதை மிக அழகாக நம்பகத்தன்மையுடன் சித்தரித்திருப்பார் இயக்குனர். பார்வையாளர்களுக்கு இன்று பார்க்கையில் பல நோஸ்டால்ஜிக்கள் கிளம்புவது தவிர்க்கமுடியாதது.

இதில் மூத்த அண்ணனாக டெல்லிகணேஷ்[அறிமுகம்],அடுத்த அண்ணன் ஜெய்கணேஷ், அடுத்தவர் சிவச்சந்திரன். அடுத்தவர் காத்தாடி ராமமூர்த்தி, அதற்கடுத்த தங்கை ஜெயஸ்ரீ[அறிமுகம்],அம்மா மீரா[அறிமுகம்] இவர்கள் கரிமங்களம் கிராமத்திலிருந்து சொத்துக்களை விற்றுவிட்டு ,தங்களின் படித்த தம்பியான சிவச்சந்திரனின் மீது வைத்த நம்பிக்கையில் நகரத்துக்கு குடிபெயர்கிறார்கள் , அவர்கள் படும் அல்லல் துயரங்கள் நகைச்சுவையாகவும் ,சிந்திக்கத்தூண்டும் வண்ணமும், உண்மைத்தன்மையுடன் சொல்லப்பட்டிருக்கும்.


 குறிப்பாக டெல்லிகணேஷின் கம்பீரமான குரலும் உடல்மொழியும், முகபாவங்களும் பாலசந்தரை கவர்ந்ததால் இதில் நிரூபனமான நடிகர்களான ஜெய்கணேஷ், காத்தாடி  ராமமூர்த்திக்கு அவரை மூத்த  அண்ணனாக தோன்ற வைத்து வெற்றி கண்டார். அதில் டெல்லி கணேஷ் அவரின் நம்பிக்கையை காப்பாற்றினார், இயக்குனர் பாலசந்தரின் முத்தான அறிமுகமாக மாறினார். பின்நாட்களில் பாலசந்தரின் பல அருமையான தந்தை கதாபாத்திரங்களுக்கு அவர் உயிர் கொடுத்தார்.

இதில் சில்வர் பெயிண்ட் அடிக்கப்பட்ட EMU தாம்பரம் -பீச் எலக்ட்ரிக் ட்ரெயின்கள் ஒரு கதாபாத்திரமாகவே வரும்.அதன் சப்தம் படத்தில் மிகச் சுவையாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.தமிழில் இந்த அளவுக்கு நகரிய சூழல் இயல்பாக உண்மைத்தன்மையுடன்  சொன்ன படம் எனக்குத் தெரிந்து வேறில்லை.


இக்குடும்பம் வளரும் புறநகரான பழவந்தாங்கல் ரயிலடி அருகே குடியேறி ,அங்கே வீட்டுடன் சேர்ந்த மளிகைக் கடை துவங்கும் காட்சிகள் மிக நன்றாக இருக்கும்.அங்கே வியாபாரம் சுத்தமாக இல்லாததால் தம்பி ஜெய்கணேஷ் மண்ணடியில் கடை போடுகிறேன் என்று அங்கே சென்று 2500 ரூபாய் பகடிக்காசு தந்து ஏமாறும் காட்சிகள் எல்லாம் மிகுந்த தீஸீஸ் செய்து எடுக்கப்பட்டிருக்கும்.

இவருக்கு கடையை கைமாற்றி விடுவதாகச் சொன்ன தரகன் பணத்தை வாங்கிக்கொண்டு கம்பி நீட்ட,மறு நாள் இவர் கடை திறக்கலாம் என கந்தன் மளிகைக் கடை என்னும் பெயரெல்லாம் மனதுக்குள் வைத்துப்பார்த்தவர் ஆசையாகப் போவார்,அதை அங்கே கார்பரேஷன் காரர்கள் இடித்துக்கொண்டிருப்பார்கள்.

இதே போன்ற ஏமாற்றுதலை சமீபத்தில் ராஜ்குமார் நடித்த சிட்டிலைட்ஸ் இந்திப் படத்தில் மும்பையில் வைத்து கிராமவாசியான அவரை ஒரு தரகன் 10000 வாங்கிக்கொண்டு ஏமாற்றுவதைப் பார்த்தேன்.காலங்கள் எத்தனை மாறினாலும் ஏமாற்றுத் தரகர்களுக்கும் பஞ்சமில்லை,ஏமாறுபவர்களுக்கும் பஞ்சமில்லை என்று தோன்றியது.சிட்டிலைட்ஸ் படம் பற்றி படிக்க http://geethappriyan.blogspot.ae/2014/08/citylights-2014.html

சென்னை தேனாம்பேட்டையில் எல்.ஆர்.ஸ்வாமி பில்டிங் மிகப் பிரபலம்,அன்றைய வானொலியில் அதை நிறைய விளம்பரம் செய்வர்,அங்கே அவர்களின் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் கிராமவாசியான டெல்லி கணேஷ் சென்று இவர்களின் குடும்பம் தங்க விசாலமான ஒரு வீடு கேட்பார்.

அங்கே பணிபுரியும் ஸ்வர்ணா [அறிமுகம்]  சென்னை நகருக்குள் 30 ரூபாய் வாடகையில் ஒரு திண்ணை கூட கிடைக்காது என்று தங்கள் வீட்டின் அருகே உள்ள ரயிலடிக்கு சமீபமாக உள்ள போர்ஷனை காட்டி வாடகைக்கு கொண்டு வந்து விடுவார்,தம்பிகளில் படித்த நாகரீகமான சிவச்சந்திரனை விரும்புவார்.[சிவச்சந்திரன் மூன்று முடிச்சு படத்தில் அறிமுகம்]இதில் ஒரு ஃபவுண்ட்ரியில் வேலைக்குச் சேர்வார்,அதன் முதலாளியாக கே.நட்ராஜ் தோன்றியிருப்பார்.

நான்கு அண்ணன்களின் தங்கையாக ஜெயஸ்ரீ அறிமுகம்,அதில் மிகவும் கள்ளம் கபடமற்ற கிராமத்துப் பெண்,பட்டினம் வந்து வேலைக்குப் போகும் ஆசை வர,அண்ணன்களின் கண்டிப்புக்கு பயந்து விடாப்பிடியாகச் சாதித்து வேலைக்குச் செல்வார்,

பல்லாவரத்தில்  டிடிகே பார்மா,ஆர்,கே.கார்மெண்ட்ஸ், பாண்ட்ஸ் ,இங்லிஷ் எலக்ட்ரிக் கம்பெனி போன்ற நிறுவனங்கள் அப்போது 70களில் வேலைக்கு ஆட்களை குறிப்பாக அதிகம் படிக்காத பெண்களை பணியில் அமர்த்தினர்,

அது போல ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் இவர் தையல் வேலைக்குச் சேர்ந்து மாதம் 140 ரூபாய் பணம் சம்பாதிக்கத் துவங்கியதும் ,ஊரில் தனக்கு மணம் பேசி பரிசமிட்ட அய்த்தானை துச்சமாக எண்ணி தூக்கி எறிவார்,இதில் நடிகர் சரத் பாபு [அறிமுகம்] அந்நிறுவனத்தின் மேனேஜர்,ஏழைப்பெண்ணான இவருக்கு பரிசுகள் வாங்கித்தந்து படுக்கையில் அனுபவித்து ஏமாற்றும் வில்லன் கதாபாத்திரம்.

இப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் தீவிர மதுவிலக்கு அமலில் இருந்திருக்கிறது,கட்டிடம் கட்டுகையில் மஸ்டர் ரோலில் 25 பேரை ஈடுபடுத்தி 50 பேர் வேலை செய்ததாக கணக்கு காட்டப்பட்டு போலி கைரேகைகள் பதிக்கப்பட்டு நிறைய ஊழல் நடந்துள்ளது,வேலை தேடிப்போய் எதுவும் கிடைக்காமல் டெல்லிகணேஷ் இப்படி ரேகை வைத்து பணம் சம்பாதிப்பார், பாலசந்தரின் மன்மதலீலை படத்தை தொடர்ந்து இப்படத்திலும்  மனைவி கையாலாகாத டிபி நோயாளி கணவனால் வேலி தாண்டும் காட்சி வருகிறது, சாருவின் சொல்லில் சொன்னால் ஜெய்கணேஷ் தான் தமிழ் சினிமாவின் முதல் ஜிகிலோ, சமீபத்தில் ஹிந்தியில் BA PASS என்னும் படம் இப்படி ஜிகிலோவின் வாழ்வை இயல்பாகப் பேசும்.அப்படம் பற்றி படிக்க http://geethappriyan.blogspot.ae/2013/11/ba-pass-201318.html

அப்போது டாக்ஸி ஃபேர் மினிமம் 1.60ஆக இருந்துள்ளது,பாண்ட்ஸ் 400கிராம் பவுடர் டப்பாவின் விலை 10 ரூபாய் இருந்துள்ளது.அப்போது எலக்ட்ரிக் ரயிலில் யாரேனும் அடிபட்டால் ரயிலில் பயணிகளுக்கு அலுவலகம் செல்ல 2 மணிநேரம் வரை தாமதமாகியுள்ளதும் அறிந்தேன்.சென்னை அரசு மருத்துவமனையில்
உயிரற்ற சடலத்தை ஏற்றிச்செல்ல குதிரை வண்டி கிடைப்பது குதிரைக்கொம்பாம்,டாக்ஸியில் ஏற்றினால் கைகால் மடிக்க வேண்டியிருக்கும் என்னும் மனக்குறையினால் குதிரை வண்டிக்கு மவுசாம்.இவையெல்லாம் எலக்ட்ரிக் ரயிலில் அடிபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சிவச்சந்திரனைப் பார்க்க வரும் அண்ணன்கள் அறிய வரும் தகவல்கள்.

படத்தில் நடிகர் லூஸ் மோகன் கோவில் வாசலில் ப்ரொஃபெஷனல் பிச்சைக்காரராக ஒரு காட்சியில் வருகிறார்.பாய்ஸ் படத்தின் செந்தில் கதாபாத்திரத்துக்கெல்லாம் முன்னோடி இக்கதாபாத்திரம்,படத்தில் இவர் பெயர் மோகன் என்றே வருகிறது,இவரது தந்தை நடிகர் லூஸ் ஆறுமுகத்தின் நினைவாக இவர் பெயரின் முன்னாலும் லூஸ் என்னும் அடைமொழியை சேர்த்துக்கொண்டாராம்.

படத்தின் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்,இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள்.இப்படத்தின் வான்நிலா நிலா அல்ல பாடல்37 வருடங்களாகியும் இன்னும் புதுமை குறையாத பாடலாக மிளிர்கிறது.

படத்தின் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்,இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் வி அவர்கள்.இப்படத்தின் வான்நிலா நிலா அல்ல பாடல்37 வருடங்களாகியும் இன்னும் புதுமை குறையாத பாடலாக மிளிர்கிறது.

படத்தில் சிவச்சந்திரனின் காதலி ஸ்வர்ணா வயலின் நன்றாக வாசிப்பவர்,அதை ரசிக்கும் சிவச்சந்திரன்,அருகே ஓயாமல் பெருஞ்சத்தத்துடன் ஓடும் எலக்ட்ரிக் ட்ரெய்ன்,எனவே இவர்கள் தனிமையில் சென்று வாசிக்க ,அப்பாடல் உருவாகும்[அப்பாடலை விஜிபி கோல்டன் பீச்சில் படமாக்கியிருப்பர்] ,எஸ்.பி.பி அவர்களுக்கு எம் எஸ் வி அவர்கள் தந்த காலத்தால் அழியாத வரம் அப்பாடல்,

இப்பாடல் வானொலியில் எத்தனை முறை ஒலிபரப்பப்பட்டது என்ற கணக்கேதும் இருந்தால் , கின்னஸுக்கு கூட அனுப்பியிருக்கலாம். சிவச்சந்திரனுக்கு ஒரு ராசி அவர் நடித்த திரைப்படங்களில் அவருக்கு மிக அருமையான ரேர்ஜெம் பாடல்களாக அமைந்துவிடும்,அப்படி ஆடிவெள்ளி தேடிஉன்னை நானடைந்த நேரம்[மூன்று முடிச்சு],உறவுகள் தொடர்கதை [அவள் அப்படித்தான்] ,என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்[ரோசாப்பூ ரவிக்கைக்காரி] ,மனதில் என்ன நினைவுகளோ[பூந்தளிர்], என சொல்லிக்கொண்டே போகலாம்.வான்நிலா பாடலை இங்கே கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=M5rjiJuMKh8

வான்நிலா பாடலுக்கு படத்தில் பெண் பாடும் பேத்தோஸ் வடிவமும் உண்டு அதை எல்.ஆர்.ஈஸ்வரியும்,அவர் சகோதரி எல்.ஆர்.அஞ்சலியும் பாடியிருப்பார்கள்.

இதில் இன்னொரு ரேர்ஜெம்மான தர்மத்தின் கண்ணைக்கட்டி என்னும் எம் எஸ் வி  பாடும் பாடலும் உண்டு அதை இங்கே கேளுங்கள்.

https://www.youtube.com/watch?v=KHtqJNmbVQg

பட்டினப்பிரவேசம் திரைப்படம் இங்கே பார்க்கக் கிடைக்கிறது
https://www.youtube.com/watch?v=skVSwdi4uIc


ஸ்ரீராகவேந்திரர் படத்தில் வரும் உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம் பாடல்
https://www.youtube.com/watch?v=a4iI111uP7A

நாம் கவிதாலயா தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ரஜினியின் 100வது படமான ஸ்ரீராகவேந்திரா பார்த்திருப்போம்,அதில் அதோனி நவாப்பின் கதாபாத்திரம் ஒன்று உண்டு,நடிகர் சத்யராஜ் அந்த நவாப் மஸூத் கான் க்கதாபாத்திரத்தில் தோன்றி தூள் கிளப்பியிருப்பார்,

அவர் ராகவேந்திரரின் மகிமைகளை அறியாமல் அவரை மாட்டுக்கறிப் படையலை சபையில் பரிசளிக்க,அதை ராகவேந்திரர் மலர்ப்படையலாக மாற்றுவார்,இப்படத்தின் மொத்த நீளம் 17 ரீல்கள் ,ஆகவே இந்த அந்தப்புறப் பாடலை படத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.ஒரு முறை சென்னை சென்றிருக்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முதன் முறையாக இந்த அந்தப்புறப் பாடலை பார்த்து அசந்து போனேன்.

1985ல் இசைஞானியின் இசையில் கவிஞர் வாலியின் வாலிப வரிகளில் வெளியான இந்த உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம் பாடலை  இயக்குனர் கே.பாலசந்தர் தன் ஒரு வீடு இருவாசல் திரைப்படத்தின் இரண்டாம் வாசலில் ஒரு கிளப் டான்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் படப்பிடிப்பு காட்சிக்கு பயன்படுத்தி அழகு பார்த்தார்.

மேலும் 2005 ஆம் ஆண்டு ப்ளாக் ஐட் பீஸ் குழு கேட்டுவிட்டு இதன் துள்ளலான தாளக்கட்டில் மிகவும் வியந்தவர்கள் அதை தங்கள் The Elephunk Theme  என்னும் ஆல்பத்தில் அப்படியே பயன்படுத்தி ரீமிக்ஸ் செய்தனர், அது இங்கே Black Eyed Peas The Elephunk Theme
https://www.youtube.com/watch?v=_m6oueaWRic

ஒரு மிகவும் அரிய தமிழ் திரைப்படப் பாடல் வெளியாகி 20 வருடங்கள் கழிந்த நிலையில் ஒரு பிரபலமான அமெரிக்க ஹிப் ஹாப் குழுவினர் அதை தங்களின் ஆல்பத்தில் அப்படியே பயன்படுத்தியது இதுவே முதன் முறையாகும்.
http://en.wikipedia.org/wiki/The_Black_Eyed_Peas

ஜானகி அம்மா 1985ல் பாடிய உனக்கும் எனக்கும் ஆனந்தம் பாடலுக்கு உறை போடக் கூட காணாது இங்கே மது ஐயர் பாடிய இந்த வடிவம். https://www.youtube.com/watch?v=EXEn_O0dkt8

இப்பாடலை எப்போதும் போல மிகுந்த துள்ளலுடனும்,அற்பணிப்புடனும்  ஜானகி அம்மாவும் மலேசியா வாசுதேவன் அவர்களும் போட்டி போட்டுப்  பாடியிருப்பார்கள்.சொல்லப்போனால் இதில் யார் பாடலை பாடி சிறப்பித்தார் என கணிக்கவே முடியாது.இதில் மிகுந்த திறமையுடன் மலேசியா வாசுதேவன் அவர்கள் அண்டர்ப்ளே செய்து பாடியதை ஒருவர் உணரலாம்.இதில் ஜானகி அம்மாவுக்கு தான் அதிக வரிகள்,மலேசியா வாசுதேவன் அவர்கள் இதில் இந்தி சொற்களை லாவகமாக இடையிடையே போட்டு அமர்க்களம் செய்து விட்டிருப்பார்.ஆக இதன் ரிசல்ட் மிகுந்த குதூகலமாக இருக்கும்.

இப்பாடல் படத்தின் நீளம் கருதியும் பக்திப் படத்தில் இப்படி ஒரு டிஸ்கோ நம்பர் தேவையா? என்னும் பத்திரிக்கையாளர் விமர்சனம் கருதியும் திரையரங்குகளில் நீக்கப்பட்டது,

ஆனால் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்புகையில் இப்பாடல் கண்டிப்பாக இடம் பெறும்.அப்போது அவசியம் இப்பாடலை கண்டு களியுங்கள்.

இப்பாடலை இணையத்தில் தேடினேன் ஆனால்  எடுக்க முடியவில்லை, ஆவணக்காப்புக்காக தட்டச்சும் செய்து விட்டேன்.

[ஜானகி]
இக்குச்சான் இக்குச்ச இக்குச்சான்
இக்குச்சான் இக்குச்ச இக்குச்சான்
இக்குச்சான் இக்குச்ச இக்குச்சான்
சான்ன்ன்ன்ன்ன்ன்

உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்...பம்
புதிய புதிய இன்பம்

பாலாடை தான் ஆடுதோ
ஓர் நூலாடை தான் மூடுதோ வா
நெருங்க நெருங்க ஏன் வெக்கம்
நாந்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்

உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம்
விடிய விடிய சொந்தம்

[மலேசியா வாசுதேவன்]
பொஹுத் அச்சா!!!

[ஜானகி]
படுக்கை அறையில் ஆரம்பம்...பம்
புதிய புதிய இன்பம்

[மலேசியா வாசுதேவன்]
ஓ ஓ!!!

[ஜானகி]
கிள்ளிப் பார்த்தால் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தால் அதிசயம் விளங்க

[மலேசியா வாசுதேவன்]
கிள்ளிப் பார்த்தால் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தால் அதிசயம் விளங்க

[ஜானகி]
பெண்பார்வை கண் தான்அது காம பாணமே

[மலேசியா வாசுதேவன்]
மஸா ஆகயா!!!

[ஜானகி]
எங்கேயும் உண்டாகும் சோமபானமே
உன் அருகில் இருக்கும் தேன்கிண்ணம்
என் அழகு வடியும் கன்னம்

[மலேசியா வாசுதேவன்]
என் அருகில் இருக்கும் தேன்கிண்ணம்
உன் அழகு வடியும் கன்னம்

[ஜானகி]
பூமேனி பொன்மேனி இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி

உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம்
விடிய விடிய சொந்தம்

[மலேசியா வாசுதேவன்]
படுக்கை அறையில் ஆரம்பம்...பம்
புதிய புதிய இன்பம்
[ஜானகி]

லலலலலா லலலலலா
லலலலலா
லலலலலா

லால்லலால்லலா
லால்லலா
லால்லலா

[ஜானகி]

தேக்கோ தேக்கோ
தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ
தினசரி இரவு

[மலேசியா வாசுதேவன்]
தேக்கோ தேக்கோ
தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ
தினசரி இரவு
[ஜானகி]
தாளாது தாங்காது ஜோடி தேடுது...ஹா

[மலேசியா வாசுதேவன்]
ஹா!!!
[ஜானகி]
தில்ருபா ஒண்ணு தில்லானா பாடி ஆடுது

[மலேசியா வாசுதேவன்]
ஹஹா!!!

[ஜானகி]
நீ எடுக்க எடுக்கத் தீராது
உன் புதையல் இருக்கு இங்கே
இரவும் பகலும் மூடாது
பொன் சுரங்கம் இருக்கு இங்கே

[மலேசியா வாசுதேவன்]
பூமேனி பொன்மேனி
இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி
[ஜானகி]

உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம்
விடிய விடிய சொந்தம்

[மலேசியா வாசுதேவன்]
படுக்கை அறையில் ஆரம்பம்...பம்
புதிய புதிய இன்பம்

[ஜானகி]
பாலாடை தான் ஆடுதோ
ஓர் நூலாடை தான் மூடுதோ வா
நெருங்க நெருங்க ஏன் வெக்கம்
நாந்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்

உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம்
விடிய விடிய சொந்தம்

[மலேசியா வாசுதேவன்]
கமால் ஹேய்!!!
[ஜானகி]
படுக்கை அறையில் ஆரம்பம்...பம்
புதிய புதிய இன்பம்

[மலேசியா வாசுதேவன்]
ஹஹ.ஹஹாஹ!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)