கே.பாலசந்தரின் மீள் அறிமுகமான குணச்சித்திர நடிகர் மன்மதலீலை புகழ் ஹரிஹரசுப்ரமணியம்மன்மதலீலை[1976] திரைப்படத்தில் கே.பாலசந்தரின் மற்றுமோர் மீள் அறிமுகமான ஹரஹரசுப்ரமணியம் என்னும் குணச்சித்திர நடிகரின் பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியாது,

ஆனால் அவர் மன்மதலீலை படத்தில் செய்த குமாஸ்தா விசுவையர் கதாபாத்திரம் எல்லோர் மனதிலும் இன்றும் பசுமையாக நின்றிருக்கும்.

இதில் பெண்பித்தரான கமல்ஹாசன் மனைவி ஆலத்துக்கு தெரியாமல் பல லீலைகளை நிகழ்த்துவார்,ஒவ்வொரு பெண்களாக வலைவிரித்து வீழ்த்தி சாபம் பெறுவதையே வழக்கமாக வைத்திருப்பார்.படத்தில் கமலைப் பற்றி கவிஞர் எழுதிய  இப்பாடலின் வரிகளைப் பாருங்கள்.

”மன்மத லீலை,மயக்குது ஆளை
மந்திரம் போல சுழலுது காளை
மயக்கம் பிறக்க வைக்க உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள் நினைத்து கொண்டு தொடர்பவர் உண்டு”

அந்த பாவங்களுக்கான வடிகாலாக அலுவலகத்தில் பாலக்காடு பிராமண பாஷை பேசிக்கொண்டு, மிகுந்த பக்திமானாக வலம் வரும் இவரைச் சிக்கெனப் பற்றிக்கொண்டு விடுவார் கமல்.ஒருகாட்சியில் இவர் கமலின் அறைக்கு வெளியே நின்று ஒருவாரம் லீவு கேட்பார்,கமல் என்ன காரணம் என்று கேட்க,அதுதான் விளக்கமாக எழுதியிருக்கேனே?என்பார். கமல் இவரை உள்ளே வரச் சொல்லியும்,வந்தால் ஒட்டுவாரொட்டி நோயாயிருந்தால் உங்களையும் ஒட்டிக்கொள்ளுமே என மறுப்பார். வெளியே சிரித்து உள்ளே ராட்சஸா,க்ராதகா என கமலை திட்டிப் புழுங்கும் அவஸ்தையை மிக அழகாக கொண்டு வந்திருப்பார்.

அலுவலகத்தில் பாவமன்னிப்பு கேட்டது போதாமல்,இவரின் வீட்டுக்கும் போன் செய்து பாவ மன்னிப்பு கேட்பார் கமல். ஒரு முறை கமலுக்கு காம இச்சைகள் தலைதூக்குவதை தவிர்க்க உணவில் உப்பை குறைத்துப் போட்டு உண்டு பழகு என்பார், மறுமுனையில் கமல் அப்பதிலில் திருப்தியடையாமல் அப்படியும் காமம் அடங்காவிட்டால்?!!! என்று கேட்க, இவர் அவள் உடம்பை கண்டதுண்டமாக வெட்டி உப்பை அதில் போடு என்று அழுது கொண்டே சொல்வார்.

அன்னமிட்ட வீட்டிலேயே கன்னம் வைப்பது போல கமல் விஸ்வய்யரின் மகளுக்கே கன்னம் வைக்கப் பார்ப்பார்.விசுவய்யர் வீட்டுக்கும் திடீரென வருவதை வழக்கமாக்கிக் கொண்ட கமல் அன்று அவரின் வீட்டுக்குச் சென்றவர் அவருடைய வயது வந்த மகள் அங்கே தென்படாமல் போக எம்ஜிஆர் என் காரில்தான் உள்ளார் என்று சொன்னவுடன் அப்பாவின் கண்டிப்பால் அறையில் மறைந்திருந்த அப் பெண் என்ன  எம்ஜிஆரா ?!!!   எங்கே எங்கே? என்று கேட்டபடி வெளிப்படுவார். இப்படி ஒவ்வொருவரின் பலவீனத்தையும் அறிந்து குறி பார்த்து அடித்து வீழ்த்துவார் கமல்.

ஒரு சமயம் வீட்டு டெலிபோன் பில் எக்கச்சக்கமாக எகிறிவிட,கமலின் மைத்துனரான ஒய்.ஜி,மகேந்திரன் அதன் காரணத்தை துப்பறிந்தவர் கமலின் மனைவி ஆலத்திடம் ராங்நம்பர் ஒய்.விஜயாவின் நம்பருக்கு பதிலாக இவருடைய நம்பரைத் தவறுதலாக தந்துவிட,ஆலம் இவரின் ஆச்சாரமான மனைவிக்கு போன் செய்து அனாச்சாரமாக பேச,அங்கே பெரிய ரகளையான சிரிப்பு வெடிக் காட்சியாக  அது மாறும்.

ஒரு கட்டத்தில் கமல் பாவங்கள் செய்து கொண்டு போகப் போக இவர் மிகுந்த மன உளைச்சல் கொள்வார், இவர் கொடுத்த பாவமன்னிப்புக்கு ஏற்ப இவரது தாடியும் வளர்ந்து பெரிதாகி விடும்,கடைசியாக வேலைக்கு முழுக்கு போட்டு விட்டு,  இல்லறத்தையும் வெறுத்தவர் சந்நியாசியாக மாறி ஹரி கதாகாலட்சேபம் நிகழ்த்தப் போய்விடுவார்.

இவரை பாலசந்தர் தன் பெரும்பாலான படங்களில் ஒரு காட்சியிலேனும் தோன்ற வைத்து விடுவார்.அப்படி பொய்க்கால் குதிரை படத்திலும் நாயகன் ராமகிருஷ்ணா காணுகிற தேர்வு ஹால் கனவில் இவரை எக்ஸாமினராக தோன்ற வைத்திருப்பார்.அதுவும் ஒரு சுவையான காட்சி.

சிந்துபைரவி படத்தில் ஜேகேபி குடிக்கு அடிமையான தருணத்தில் சபாக்கள் காற்றாடும்,அல்லது கச்சேரிகள் ரத்து  செய்யப்படும்.அது போன்ற ஒரு தருணத்தில் ஒரு சபாவில் உப்புமா பாகவதர் ஒருவரை அமர்த்தி பாட வைக்க.அவர் தர்பார் ராகத்தில் அழுது வடிந்தபடியே யோச்சனா கமல லோச்சனா என பாடுவார்,

அவரின் போதாத நேரம் ஜேகேபி அங்கே போதையில் தள்ளாடியபடி வர,முன்வரிசையில் ஒருவர் கும்பிட்டு விட்டு எழுந்து அமர இடமும் தருவார்,சபையே அவரையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் , உப்புமா பாகவதர் முகத்தில் ஈயாடாது,பாட குரல் எழும்பாமல் எப்படியோ யோச்சனாவை முடித்து விட்டு ஜேகேபியைப் பார்த்து கூழைக்கும்பிடு போடுவார்,

அவர் அருகே எழுந்து வந்த  ஜேகேபி ,என்னய்யா பாடறே நீ, ஜலதோஷம் பிடிச்சா மாதிரி!!!ஜீவனே இல்லாமே,என்ன பாட்டிது?, புலிநகச் சங்கிலி போட்டுகிட்டா  ஜேகேபி ஆயிடமுடியுமா நீ?அல்பனுக்கு பவுசு வந்தா மாதிரி அலங்காரம்,ஆடம்பரம்,பட்டு ஜிப்பா,நெத்தில விதவிதமா பொட்டு, பத்து விரலுக்கு மோதரம், வெளியே ஆளுயரத்துக்கு கட்டவுட்,இந்த தர்பார்ல எல்லாம் குறைச்சல் இல்ல,

தர்பார் ராகமா பாடற நீ,நான் தர்பார் ராகம் பாடட்டுமா? என ஆவேசமாக முழங்கி விட்டு,அவர் ரீரீரீ என்று லோச்சனாவை ஆலாபனை செய்து முடித்தவர், தர்பார்னா அப்படி பாடனும் , பாடு!!! என்று சொல்லிவிட்டுப் புறப்படுவார்.அங்கு பல்பு வாங்கும் உப்புமா பாகவதர் வேறு யாருமல்ல ஹரிஹரசுப்ரமணியம் தான்.

படத்தில் ஜேகேபி பாடிய எல்லா பாடல்களுக்கும் தாஸேட்டா குரல்கொடுத்தது நமக்கு தெரியும், இந்த உப்புமா பாகவதருக்கு பின்னனி பாடியது கோவிந்தராஜ் என்னும் பாடகர், அவருடைய பெயரையும் மறக்காமல் இயக்குனர் பாலசந்தர் டைட்டில் ஸ்க்ரோலில் இடம்பெறச் செய்ததைப் பாருங்கள்,அது தான் அவரது நேர்மை,மனிதாபிமானம்.ஒரு கலைஞன் தன் படத்தில் சிறு வேடம் செய்தாலும் மறக்காமல் குறிப்பிட்டுவிடுவார்.

இந்த சிந்துபைரவி படத்தின் காட்சியை இங்கே பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=823eiypugfs&x-yt-cl=85114404&x-yt-ts=1422579428#t=71சிந்துபைரவி படத்தின் இக்காட்சிக்கான இன்ஸ்பிரேஷனை இயக்குனர் கே.பாலசந்தர். அவர்கள் அவரின் ஆப்த நண்பரான இயக்குனர் கே. விஸ்வநாத்திடமிருந்து தான் பெற்றார் என்றால் மிகையில்லை, 1984ஆம் ஆண்டு வெளியான சலங்கை ஒலி படத்தை மிகவும் ரசித்துக் கொண்டாடியவர் , அதே போல ஒரு கலைஞனின் கதையை தமிழ் சினிமாவில் பதிவு செய்ய வேண்டும் என தீராத ஆசை கொண்டார்.

சலங்கை ஒலி படத்தில் குறிப்பாக போலி நடனக் கலைஞரை இனம் கண்டு தினசரியில் விமர்சனம் எழுதி நாட்டிய-மயூரி!!! என்று கிண்டலாக பாடம் புகட்டிய தன் சீடன் கமல்ஹாசன் செய்த அக்காட்சி அவருக்கு நெஞ்சில் நின்று விட்டது,அதற்கு தக்க மரியாதை செய்வது போல இந்த தர்பார் ராகக் காட்சியை சிந்து பைரவி படத்தில் வைத்தார், இரண்டுமே அழிவின் விளிம்பில் இருக்கும் இரு ஒப்பற்ற கலைஞர்கள் ,தெய்வீகமான  கலை சபையில் யார் யாரிடமோ சிக்கி சின்னாபின்னமாவதைப் பார்க்க சகிக்காமல் உள்ளம் குமுறுவதைச் சொன்ன படைப்புகள்.

அந்த சலங்கை ஒலி திரைப்படத்தின் காட்சியை இங்கே பாருங்கள்
https://www.youtube.com/watch?v=M5KpxQysdmoஅப்போதைய படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ஆலத்தை துணிந்து  மன்மதலீலை படத்தின் கதாநாயகி ஆக்கினார்.ஆலத்தை இதில் குடும்பத்தலைவி ரேகாவாகவே மாற்றியிருந்தார் இயக்குனர்.ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக் கண்டு பிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் கே.பாலசந்தர்.

மன்மதலீலை  நடிகை ஜெயப்பிரதாவுக்கு  தமிழில் முதல் படம்,அதே ஆண்டில் பாலசந்தர் அவள் ஒரு தொடர்கதை படத்தின் தெலுங்கு வடிவமான அந்துலேனிகதா படத்திலும் இவரை மீள் அறிமுகம் செய்தார்,ஜெயப்ரதா 1974ஆம் ஆண்டே பூமிகோசம் என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிவிட்டாலும் பரவலாக அவருக்கு அங்கீகாரம் அளித்த அறிமுகம் இயக்குனர் பாலசந்தருடையது தான்,

 1976 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தெலுங்கில் இவருக்கு ஏறுமுகம் தான். கே.விஸ்வநாத்தின் படைப்புகளில் தொடர்ச்சியாக இடம் பெற்றார், இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனரான சத்யஜித் ரே அவர்கள் இவரின் ரசிகராவார், இவரை வைத்து அவர் படம் இயக்க இருந்தது முடியாமலே போனது, உலகின் பேரழகிகளில் ஜெயப்ரதாவு ஒர்வர் என்று அவர் சொல்லியிருக்கிறார். இப்படத்தில் அவர் கண்ணகி என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னாளில் கே.பாலசந்தர் எங்க ஊரு கண்ணகி என்று மாதவியை வைத்து ஒரு படம் எடுத்தார். ராதாரவிக்கும் இதுதான் அதிகாரபூர்வமான முதல் படம் ,

கே.பாலசந்தரின் மீள் அறிமுகமான குணச்சித்திர நடிகர் நந்தகுமார்

நடிகர் நந்தகுமார் என்னும் குணச்சித்திர நடிகரின் பெயர் மட்டும் சொன்னால் நம்மில் பலருக்குத் தெரியாது,ஆனால் அவரைப் பார்த்தால் உடனே சிரிப்பு வரும்படியான முகம். தெளிவான வசன உச்சரிப்புடன் கூட சேர்ந்து கொள்ளும், அவர் ஏற்ற கதாபாத்திரங்களும் அக் கதாபாத்திரத்தின் பெயர்களும் நம்மில் அப்படி பதிந்து போயிருக்கும்,

உதாரணமாக காதல் சடுகுடு என்னும் படத்தில் விவேக்கின் அப்பா மைனர் குஞ்சுக்கு தீர்ப்பு சொல்லும் பஞ்சாயத்து தலைவர் சாத்தப்பன். இவர் பெயரை இரட்டை அர்த்தமாக சொல்லிக் காமெடி செய்வார் விவேக்.  இவர் திரைபடத்திலோ ரேடான் தயாரிக்கும் சீரியல்களில் வருகையிலோ கண்டிப்பாக நாம் சேனல் மாற்ற மாட்டோம்,இவர் இத்தனை கதாபாத்திரங்களில் நடித்தும் இவருக்கு தமிழ்சினிமாவில் முறையான க்ரெடிட் இல்லாதது ஒரு பெருங் குறையே,இவரின் பெயரை விக்கியிலோ கூகுளிலோ எளிதில் தேடிக்கண்டு பிடித்து விட முடியாது.

மைனர் குஞ்சு பஞ்சாயத்து சாத்தப்பனாக நடிகர் நந்தகுமார்
இவருக்கு முதன் முதலாக நல்ல நகைச்சுவைக் கதாபாத்திரமும் வசனமும் கொடுத்தது கே.பாலசந்தர் தான்.அழகன் திரைப்படத்தில் இவர் நாரதகான சபாவில் டிக்கெட் கிழித்து பார்வையாளரை அனுமதிப்பவர், இவரை மதுபாலா ஒரு முறை போட்டோ எடுத்து தாஜா செய்து,விஐபி நுழைவுவாயிலில் நுழைந்து அமர்வார்,

அதே போல மதுபாலா மம்மூட்டியுடன் காரில் செல்கையில் நந்தகுமார் காருக்குள் குனிந்து போட்டோ என்னாச்சு? என்று கண்டிப்புடன் கேட்டு விட்டு நகர்ந்ததும், மம்மூட்டியிடம் இவர் தன் ஊதாரி அப்பா எப்போதும் சிக்னல் சிக்னலாக அலைவார் என்று கூறி இரக்கம் சம்பாதிப்பார்.அதே போல தன் தாய் என்று ஆசிரியரான கே.எஸ்.ஜெயலட்சுமியின் புகைப்படத்தைக் காட்டி இருவருக்கும் சதா சண்டை அதனால் தான் எனக்கு வீட்டுக்கே போக பிடிக்கவில்லை என்பார்.
ஒருசமயம் இவரகள் மூவரின் உறவுச் சிக்கலை தீர்த்து வைக்க எண்ணிய மம்மூட்டி,கே.எஸ்.ஜெயலட்சுமியை பின்தொடர்ந்து சென்று நாரத கான சபாவில் வைத்து சந்திப்பார்,அங்கே நந்தகுமாரும் வாயிலில் டிக்கெட் கிழித்துக்கொண்டு இருப்பார், இருவரையும் கேண்டீனுக்கு அழைத்துச் சென்று கவுன்சிலிங் செய்ய ஆரம்பித்து மம்மூட்டி பல்பு வாங்கும் காட்சி மிக அருமையான ஒன்று.


அங்கே இவரை கே.எஸ்.ஜெயலட்சுமி அய்யனார் சிலைக்கு எண்ணெய் தேய்த்தார் போல இருக்கும் இவரைப் போயா?என்னுடன் முடிச்சு போடுறீங்க என்று மம்மூட்டியிடம் சண்டைக்கு வர, நந்தகுமார் கடும் மன உளைச்சல் அடைந்தவர் இவரை நீ என்ன அழகியோ?!!! பப்புளி மாஸு,புகாரி ஓட்டல் பிரியாணி டேக்ஸா என்று கண்டமேனிக்கு கே.எஸ்.ஜெயலட்சுமியை ஏசுவார், ரகளையான காட்சி அது.
https://www.youtube.com/watch?x-yt-cl=85114404&v=ZmAzhZKEl6U&x-yt-ts=1422579428#t=15

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு அழகன் திரைப்படத்தில் கே.பாலசந்தர் செய்த மரியாதை

அழகன் [1991] திரைப் படத்தில் நடிகர்  மம்மூட்டி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கவிதைத் தொகுப்பில் இருந்து குடும்ப விளக்கு என்னும் அத்தியாயத்தில் வரும் இந்த கவிதை வரிகளை அவர் படிக்கும் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியர் கீதா முன்பாக சரளமாக பேசுவார்.

அது மிகவும் அருமையான காட்சி, இயக்குனர் கே.பாலசந்தர் கலை,மற்றும் இலக்கியத்தில் தான் சிலாகித்தவற்றை அழகாக  தன் படைப்புகளுக்குள்ளாக வைத்து மரியாதை செய்யும் கலை கைநிரம்பப் பெற்றவர். பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த ட்ரிப்யூட்டை வைத்தார். அவரின் கவிதைகளை ஆங்கிலக் கவிஞர் கீட்ஸின் [John Keats] கவிதைகளுக்கு நிகரானது என்னும் வசனமும் வைத்தார். http://en.wikipedia.org/wiki/John_Keats

இக்காட்சியில் மலையாள நடிகரான மம்மூட்டிக்கு அப்படி அழகாக லிப் சிங்க் ஒத்து வந்திருக்கும்.அவருக்கு படத்தில் பல காட்சிகளில் டைட் க்ளோஸப்பும் ”அனாயசமான” போன்ற கடினமான வசன உச்சரிப்புகளும் வசனமாகத் தரப்பட்டிருக்கும்,அதை மிக அழகாக பேசி ஸ்கோர் செய்திருப்பார் மம்மூக்கா.

படத்தில் அவர் பேசும் அந்த கவிதை வரிகள்  இங்கே

உவப்பின் நடுவிலே,"ஓர்
கசப்பான சேதியுண்டு கேட்பீர்"

"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த

மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?
அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.

"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
எப்போது தமிழினுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"
 
கே.பாலசந்தரின் அழகன் [1991] திரைப்படத்துக்கு இசைஞானி தான் இசை அமைக்க வேண்டும் என்று பாலசந்தர் விரும்பினார், அவரை எப்படியாவது சமாதானம் செய்து விட அனந்து, வி.நடராஜன் [நடிகர்][பாலசந்தரின் ஆஸ்தான தயாரிப்பு நிர்வாகி] மூலமாக முயற்சிகள் நடந்தன, பின்னர் அண்ணாமலைப் படத்துக்கு ரஜினி, சுரேஷ் கிருஷ்ணா,மூலமாக திரும்பவும் முயற்சிகள் நடந்தன ,

இசையமைப்பாளர் கீரவாணி AKA மரகதமணி
ஆயினும் அது கைகூடவில்லை, அழகன் படத்தில் தெலுங்கு சினிமாவின் நிரூபனமான இசையமைப்பாளர் கீரவாணி மரகதமணி என்ற பெயரில் இசைவானில் ஒரு புதிய நம்பிக்கை நட்சத்திரம் என்று டைட்டில் கார்ட் போட்டு அறிமுகப்படுத்தப்பட்டார்,


 பின்னாளில் பாலசந்தரின் வானமே எல்லை ,ஜாதிமல்லி உள்ளிட்ட படங்களுக்கும் மரகதமணி இசையமைத்தார்.
அதே சமயத்தில் பாலசந்தரின் தயாரிப்பான அண்ணாமலைக்கு இசையமைப்பாளர் தேவா ஒப்பந்தம் செய்யப்பட்டு,பின்னர் கல்கி படத்துக்கும் தேவாவே இசையமைத்தார்.

புலவர்.புலமைப்பித்தன்
ஒருவேளை அழகன் படத்தில் இசைஞானி கடைசி நேரத்தில் சம்மதிக்கூடும் என இயக்குனர் நினைத்ததால் இதில் கவிஞர் வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்படவில்லை,

அப்போது இசைஞானியுடன் அதிக படங்கள் பணியாற்றிய புலவர்.புலமைப்பித்தன் தான் அழகன் படத்தின் எல்லாப் பாடல்களையும் சிறப்புற இயற்றினார்.

 இதில் அகரமுதல எழுத்தெல்லாம் என்று கவிதாலயாவின் பெயர் போடுகையில் வரும் திருக்குறள் வடிவத்தை , சிந்து பைரவி[1985] படத்துக்கு என்று இசைஞானி பாடியதை மாற்றாமல் அப்படியே வைத்திருப்பார்,

பார்த்தாலே பரவசம்,டூயட் படங்களிலும் அதே இசைஞானியின் குரல் தான் முதன்மையாக ஒலித்தது, அது பாலசந்தரின் கடைசி படமான பொய் வரை தொடர்ந்தது.

பாலசந்தரின் 70களின் படங்கள் துவங்கி கல்யாண அகதிகள்  வரை எம் எஸ்வி அவர்களின் குரலில் வரும் குறள் தான் முதன்மையாக ஒலித்தது.

இசைஞானி நெற்றிக்கண் [1981] படத்தின் போதே கவிதாலயத்துடன் இணைந்துவிட்டாலும் அதில் பயன் படுத்தப்பட்ட அகரமுதல் எழுத்தெல்லாம் குறள் வடிவம் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினரின் குரலில் ஒலிக்கிறது,அதை அடுத்த புதுக்கவிதை [1982] படத்திலும்  சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினரின் குரலில் தான் ஒலிக்கிறது,


பாரதி தாசன் வரிகளுக்கு தன் படைப்பில் மரியாதை செய்ய, பாரதிதாசனின் மானசீக சீடரான புலமைப்பித்தனை வைத்தே சாதி மல்லை பூச்சரமே பாடலை இயற்ற வைத்தார். அப்பாடல் வரிகளை கவனியுங்கள்.

சாதிமல்லி பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னன்னு முன்னேவந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம்
இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
சாதிமல்லிப் பூச்சரமே ...

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல
ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும்
ஒன்றுதான்
கடுகுபோல் உன்மனம் இருக்கக்கூடாது
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோணும்
அதில் இன்பத்தைத் தேடோணும்
சாதிமல்லி பூச்சரமே

உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு
சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன்
சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ்நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

என்று முடித்திருப்பார்.

இக்காட்சியில் உதவி இயக்குனர் சரவணன் என்ற சரண் [அமர்க்களம்],மம்மூக்காவின் அருகே நீல அட்டை அணிந்து அமர்ந்திருப்பார் பாதி கையை மட்டும் தூக்குவார், ஏனென்றால் அவர் பாரதி தாசனின் பாதி கவிதைத் தொகுப்பை தான் படித்திருப்பார்.

இப்படத்தில் அஷோக் லோகநாத் என்பவரும் உதவி இயக்குனர்,அவர் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் அவர்களின் மகனுமாவார்.அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என தெரியவில்லை.

கலை அழியாமல் பாதுக்காக்க வேண்டுமென்றால் முன்னோரின் படைப்புகள் அழியாவண்ணம் அவற்றை இது போல நவீன படைப்புகளுக்குள்ளே வைத்து  மரியாதை செய்ய வேண்டும் என்று சொல்லியும் இயங்கியும் வந்தவர் இயக்குனர் கே.பாலசந்தர்.

அந்த அழகின் சிரிப்பு கவிதை வரிகளின் வீடியோ இங்கே
https://www.youtube.com/watch?v=9G8e0uaWzLw

மக்கள் முதல்வரின் ஒளிமயமான எதிர்காலம்!!!


சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டை மறு விசாரனை செய்யும் நீதிபதி குமாரசாமி புண்ணியத்தில் மக்கள் முதல்வர் எல்லா சொத்து வழக்கிலிருந்தும் விடுதலை ஆகி வெளியே வரும் காலம் தொலைவில் இல்லை,

அந்த அளவுக்கு நீதிபதியின் பாண்டித்யம் இருக்கிறது, உதாரணத்துக்கு அவர் கேட்கும் ஆர்வம் மிகுந்த சில கேள்விகளைப் பாருங்கள்.

//கருணாநிதிக்கு 92 வயதாகிறதா? (கன்னத்தில் கை வைத்து ஆச்சர்யமடைந்தார்.)

முதலில் தி.மு.கதான் தொடங்கப்பட்டதா?

டி.கேவுக்கு விளக்கம் சொல்லுங்கள்.[அதாவது திராவிடர் கழகத்துக்கு]
''அரசு ஊழியர்கள் கிஃப்ட் வாங்கலாமா?'

(தி.மு.க வக்கீல் குமரேசனைப் பார்த்து) உங்கள் தலைவருக்கும் கிஃப்ட் தருவார்களா?

நமது எம்.ஜி.ஆர். நியூஸ் பேப்பர் ஆரம்பிக்க யார் மூளையாக இருந்தது?//

இந்தியரின் தலை விதி , ஊழல் செய்து பிடிபட்ட அரசியல்வாதிகள் குன்ஹா போன்ற நல்ல நீதிமான்களால் தண்டிக்கப்பட்டாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து  எளிதாக வெளியே வந்து மீண்டும் தங்கள் ஊழலைத் தொடர்வார்கள்.

கடந்த 26 ஆம் தேதி தமிழக அரசு குடியரசு தின  ஊர்வலத்தில் ஊர்திகளில்  மக்கள் முதல்வர் படங்கள் பூதாகாரமாக இடம் பெற்ற போதே  பெங்களூர் வழக்கு விசாரனையின் டீசர் வெளிவந்தது போலிருந்தது.

வாழ்க ஜனநாயகம்,பெங்களூர் சொத்து வழக்கின் ட்ரெய்லரை ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலின் வெற்றி விழாவில் பார்க்கலாம்.


மேலும் விபரங்களுக்கு இந்த விகடன் கட்டுரையைப் படியுங்கள்
கருணாநிதிக்கு 92 வயது ஆகிறதா?
சூப்பராகப் போய்க்கொண்டு இருக்கும் பெங்களூரு வழக்கு!

Which Annie Gives It Those Ones [1988] ஆர்கிடெக்சர் தீஸிஸ் பின்னனியில் அருந்ததிராய் நடித்த படம்53 வயதாகும் எழுத்தாளரும் சமூக நல ஆர்வலருமான அருந்ததி ராய் டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பிரிவின் 80களின் மாணவியுமாவார்,

இவர் பி.ஆர்க் பட்டப் படிப்பை முடிக்கும் முன்னரே கல்லூரியிலிருந்து தன் காதலர் Gerard da Cunha வுடன் வெளியேறி விட்டார்.[http://www.tehelka.com/the-visionary-reformer-gerard-da-cunha/?singlepage=1]

 பின்னர் அந்தக் காதலும் உறவும் பொய்த்தது, [இதை மையமாக வைத்தோ வைக்காமலோ 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஃபஹாத் ஃபாஸிலும் ,ஆன் அகஸ்டினும் நடித்த ஆர்டிஸ்ட் என்னும் திரைப்படம் ஷ்யாம் ப்ரசாத் இயக்கத்தில் வெளிவந்தது]

அதன் பின்னர் பேரலல் சினிமா இயக்குனரான  Pradip Krishen உடன் இவர் இன்னுமோர் வாழ்க்கை அமைத்துக் கொள்ள அதுவும் பொய்த்தது. இல்வாழ்க்கையில்  சாதிக்க முடியாததை இவர் பொதுவாழ்வில் சாதித்து விட்டார் என்றால் சற்றும் மிகையில்லை.

1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான The God of Small Things என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு பெற்றார். இவர் புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியரும் ஆவார்,2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட இருந்த சாகித்ய அகாடமி விருதை அதில் நிலவும் சிபாரிசு அரசியலால்   இவர் வாங்க மறுத்தும் விட்டார்.  2004 ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசை இவர் பெற்றிருக்கிறார்.


இவர் திரைக்கதை எழுதி நடித்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இண்டிபெண்டண்ட் வகைப் படமான In Which Annie Gives It Those Ones , பி ஆர்க் படிக்கும் மாணவர்களின் இறுதி வருட தீஸீஸை மிகவும் தத்ரூபமாகவும், திறம்படவும் பேசுகிறது, design crit செஷனுக்கு வருகை தரும் Visiting Professional களின் யதார்த்த மனோ நிலையை மிக அருமையாக இப்படத்தில் கேலி செய்திருப்பார்கள்.

Visiting Professional கள்  அழகான பெண் மாணவிகள் வடிவமைத்த ப்ராஜெக்டில் இல்லாத ஒரு symbolism மற்றும் concept ஐ தாங்களே உருவகப்படுத்திக்கொண்டு இருப்பதிலேயே அதிக மதிப்பெண்களை வாரி வழங்குவதையும்,

ஒர் ஆண் மாணவன் வடிவமைத்த ப்ராஜெக்டில் இருக்கும்  ஒரு symbolism மற்றும் concept ஐ மறுத்தும்  மட்டம் தட்டி அந்த ப்ராஜக்டையே திரும்பச் செய்ய வலியுறுத்துவதையும் அருந்ததி ராய்  திரைக்கதையில் வெளிப்படையாக எழுதி தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

கட்டிடக்கலைஞர்கள், கட்டிடக்கலை மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. இதில் இளம் வயது ஷாரூக்கானும் சீனியர் மாணவராக சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். அருந்ததி ராய் ராதா என்னும் பி.ஆர்க் மாணவியாக பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நித்யா மேனன் ஆர்கிடெக்டாக நடிக்க மணிரத்னம் இப்போது இயக்கி வரும் ஓக்கே கண்மணி அருந்ததிராயின் ஆரம்ப கால கல்லூரி வாழ்க்கையைத் தழுவியதாக இருக்கலாம் என்ற வதந்தியும் நிலவுகிறது.

இந்தப் படம்  முழுதாக யூட்யூபில் கிடைக்கிறது , https://www.youtube.com/watch?v=P_r4mzD1_Bc

1988 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆங்கில மொழிப்படத்துக்கான தேசிய விருதையும் ,சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பெற்ற இப்படத்தை ஒரு வெள்ளிக்கிழமை இரவு டெல்லி தூர்தர்ஷனில் பார்த்த அமரர் சுஜாதா  ஜூலை 1989 ன் கணையாழி கடைசி பக்கங்களில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக செய்த அறிமுகம் இங்கே.

கணையாழி கடைசி பக்கங்களில் அவர் 70களின் துவக்கத்திலிருந்து 90கள் வரை இடையில் பல நீண்ட தடைகளுடன் எழுதினாலும் அர்த்தமுள்ளதாக எழுதினார். அப்பகுதிக்காகவே கணையாழிக்கு சந்தாகட்டி அதை பொக்கிஷமாக சேர்த்து வைத்தவர்களை நான் அறிவேன், அதில் அவர் சிலாகிக்கும் பெண் எழுத்தாளர்களை அல்லது  நடிகைகளை அவள் என்றே எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். பெண்களை குறிக்க  மரியாதைக்கு ஆணுக்கு சேர்க்கும் “ர்” அவர் சேர்த்து எழுதியதே இல்லை.
 
மேலும் நம் பாரதி மணி பாட்டையா அருந்ததி ராய் திரைக்கதையில் , அவரின் கணவர் ப்ரதிப் கிருஷ்ணனின் இயக்கத்தில்  எலக்ட்ரிக் மூன் என்னும் இந்திய ஆங்கில மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார்.அப்படம் 1992ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான  தேசிய விருதும் பெற்றுள்ளது. அந்த சுவையான தருணத்தை உயிர்மையில் கட்டுரையாக எழுதியிருக்கிறார் பாட்டையா,அதை இங்கே படிக்கலாம்.

அருந்ததி ராயும் என் முதல் ஆங்கிலப்படமும் — பாரதி மணி (Bharati Mani)
https://balhanuman.wordpress.com/2011/02/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/ 

ஆசை வெட்கம் அறியாது!!!


 

புன்னகை மன்னன் படத்தில் ரேவதி கார் கண்ணாடியின் தூசியில் சிங்களத்தில் ஏதோ எழுதுவார்,கமல் அவரிடம் ஆர்வம் கலந்த கண்டிப்புடன்

எம் பேர் எழுதியிருக்க?!!!

அவர் மறுக்க

பின்ன உம்பேரா?!!!

அவர் மீண்டும் மறுக்க

என்ன தான் எழுதிருக்க?

மாருதி, என்று அவர் பயந்தபடி சொல்ல

அது யார் பேரு?என்று பொறாமை கலந்த கோபத்தால் கமல் கேட்க

ரேவதி: காரோட பேரு

கமல் உள்ளூர மகிழ்ந்தவர்

வெளக்கெண்ண முண்டம் இத கிறுக்கிக்கிட்டிருக்கற நேரத்துல உள்ள கொஞ்சம் டான்ஸ் கத்துக்கலாம்ல?!!!

அப்புறம் ரோடுல போய் ரோடுன்னு எழுதுவியா?சிங்களத்துல,
பைத்யக்காரி,பைத்யக்காரி என்பார்.

யாரோ இரண்டரை லட்சம் செலவு செய்து இந்த சூட்டை இவருக்குப் பரிசளித்தாலும்? இதை எப்படி லஜ்ஜையின்றி அணிந்து வலம் வந்தார்?!!!

நிறைய பணம் கொடுத்து இலவசமாக இது போல என் பெயரை பொரித்து யாரேனும் சூட் தைத்து என்னை அணியச் சொன்னால் நானே அணிய மாட்டேன், அசிங்கம் பார்ப்பேன்,

இதைத் தான் ஆசை வெட்கம் அறியாது என்பார்கள் போல

புன்னகை மன்னன் படத்தின் மிக அருமையான அந்த காதல் அரும்பும் காட்சி,இன்று பார்க்கையிலும் எத்தனை இளமை?எத்தனை புதுமை பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=K6gC1frSeJU

மதுவிலக்கும் தமிழ் சினிமாவும் ஒரு பார்வைதிரைப்படப் பாடல்கள் கூட நமக்கு வரலாற்றைச் சொல்லும்,1983 ஆம் ஆண்டில் வெளி வந்த தனிக்காட்டுராஜா படத்தில் வரும் ”நான் தாண்டா இப்போ தேவதாஸ்” என்ற கவிஞர் வாலி அவர்கள் இயற்றி எஸ்.பி,பி பாடிய பாடலில் "தொறந்தான் கடைய எடுத்தான் தடைய" என்று ஒரு வரி வருகிறது. உடனே நான்  வரலாற்றை புரட்டிப் பார்த்தேன்.

1974 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தீவிர மதுவிலக்கை சுமார் 9 வருடம் கழித்தே 1983ல் தமிழக அரசு திரும்பப் பெற்றிருக்கிறது.அதையே இப்பாடல் புகழ்ந்து பேசுகின்றது.

======000======
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த காலப் பட்டியல் இங்கே

1937-1973= 36  வருடங்கள் தீவிர மது விலக்கு அமலில் இருந்த காலம் [பெர்மிட் ஹோல்டர் மட்டுமே மது அருந்த முடிந்த காலம்] ஏனையோருக்கு கள்ள சாராயம் தான் கதி

1971–74=3 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
இக்காலத்தில் கள்ளுக்கடைகளும், சாராயக் கடைகளும்,பிராந்திக் கடைகளும் பார்களும் இயங்கின.

1975-1982= 3 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனையை  தடை செய்திருந்த காலம்  [வெளிநாட்டு மது விற்ற பிராந்திக் கடைகள் மட்டும் உண்டு  குடிக்க பார்கள் கிடையாது பொது இடங்களில் எங்கு வைத்தும் மது அருந்தக் கூடாது]

1983–87=4 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
இக்காலத்தில்  சாராயக் கடைகளும்,பிராந்திக் கடைகளும் பார்களும் இயங்கின.

1988–90=2 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
இக்காலத்தில் ஒயின்ஸ் ஷாப்கள் மட்டும் இயங்கின,பார்கள் கிடையாது. கள்ளுக்கடை, சாராயக்கடைகளுக்கு அனுமதி இல்லை.பொது இடங்களில் எங்கு வைத்தும் மது அருந்தக் கூடாது

1990–91 =1 வருடம் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
 [இந்த காலகட்டத்தில் தான் உறை என்று அன்புடன் அழைக்கப்பட்ட மலிவு விலை அரசு பாக்கெட் சாராயக் கடைகள் ஊரெங்கிலும் திறக்கப்பட்டன, பல்லாவரத்திலேயே 4 கடைகள் இருந்தன,இது தவிர ஒயின்ஸ் ஷாப் கடைகளும் பார்களும் நிரம்ப உண்டு,குடிகாரர்களுக்கு கொண்டாட்டமான காலகட்டம் இது]

1992-2000 எட்டு வருடங்கள் தமிழக அரசு மலிவு விலை மதுக்கடைகளை மூடிவிட்டு  தனியார் ஒயின் ஷாப்களையும் பார்களையும் மட்டும் நடத்த அனுமதித்த காலம்,

2001-2002 வரை=2 வருடங்கள் தமிழக அரசு தனியார் ஒயின் ஷாப்களையும் பார்களையும் மட்டும் நடத்த அனுமதித்த காலம்,

2003-இன்று வரை=சுமார் 12 வருடங்களாக தமிழக அரசே டாஸ்மாக் என்ற பெயரால் ஒயின் ஷாப்களை நடத்தி வரும் காலம்
======000======
அந்த  1971–74 மதுவிலக்கு காலத்தில் எழுத்தாளர் ஜி.நாகராஜனும் தன் குடிநோயால் பல  துன்பங்கள் அனுபவித்திருப்பார் போலும் , தமிழக அரசே குடிமகன்களிடையே பணக்காரன் குடிக்கலாம், ஏழை குடிக்கக் கூடாது என்று பாரபட்சம் காட்டுவது போல மதுவிலக்கை அமல்படுத்தியதை டார்க் ஹ்யூமராக   தன் நாளை மற்றுமொரு நாளேவில் கந்தன் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.

அப்போது கள்ள சாராயத்துக்கு மாற்றாக மதுரை நகரின் விறகு கடைகளில் போலீசாருக்கு மாமூல் தந்துவிட்டு ஜிஞ்சர் என்னும் உற்சாக பானத்தை மறைத்து விற்றதைப் பற்றி விளாவாரியாக எழுதியிருப்பார்.[அது போல டீடெய்ல்களால்  தான் கடந்த காலத்தை வாசகனின் கண் முன்னே நிறுத்த முடியும்]

1974 ஆம் ஆண்டு அரசு மதுவிலக்கை திரும்பப் பெற்ற பிறகு வெளிவந்த கே,பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் 10 ஆம் நம்பர் சாராயக்கடையை நிஜமாகக் காட்டியிருந்தார்,  சமுதாயத்தில் வேலைவெட்டிக்குப் போகாதவர்கள் கூட  குடிக்கு அடிமையாகி ,எதிர்படுபவரிடம்  மீட்டர் போட்டு காசு கறந்து நடைபிணமாய்  வாழ்வதை ஜெய்கணேஷ் கதாபாத்திரம் மூலம் மிக அருமையாக சித்தரித்திருந்தார்.

அதன் பின்னர் மீண்டும் மதுவிலக்கு[தடை]1975-1982

1983ல் மதுவிலக்கு திரும்பப் பெற்ற பிறகு வெளி வந்த அனேகம் படங்களில் சாராயக் கடையும்,ஒயின் ஷாப்பும் ஒரு அங்கமாகவே வந்தன,அப்படி மதுவைக் கொண்டாடிய ஒரு ரசனையான பாடல் நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு பாடல்,கவிஞர் வாலியின் வரிகளை எஸ்.பி.பி பாடினார், நிரம்ப இரட்டை அர்த்த வசனங்கள் விரவியிருக்கும் பாடல், நாட்டுக் கட்டையான ஒய்.விஜயாவும் கமலும் குத்தாட்டத்தில் கலக்கிய பாடல்.ஏவிஎம் ஸ்டுடியோவுக்குள்ளே படமாக்கியிருப்பார்கள்.

https://www.youtube.com/watch?v=eszK86c7p44


1986 ஆம் ஆண்டு எழுத்தாளர் சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை என்னும் தனியார் தயாரித்த தொலைக்காட்சி நாடகம் நடிகர் ரகுவரன் நடித்து வெளிவந்து குடும்பத்தாரிடம் குறிப்பாக பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கே.பாலசந்தரின் சிந்து பைரவியில் [1985] பூமாலை வாங்கி வந்தான்,பாடலில் உற்று கவனித்தால்  அப்போது தமிழகத்தில் விற்கப்பட்ட வெளிநாட்டு மது வகைகளான அரிஸ்டோக்ராட், நெப்பொலியன், பேண்ட் மாஸ்டர், ராயல் ரிசர்வ்,ஹனி பீ, ஃபைன் க்ரேப், நம்பர்.1 மெக்டவல், ஜான் எக்‌ஷாவ்,ஓல்ட் டாவர்ன், எம்ஜிஎம் ,பேக்பைப்பர், வின்டேஜ், சிக்னேச்சர், என நடிகர் சிவகுமார் விதவிதமான பிராண்டு  மதுவகைகளையும் முயன்று பார்த்து போதை ஏறாமல் குடிநோய் முற்றி அவதியுறுவதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார், பின்னணியில் வைரமுத்துவின் வலுவுள்ள வரிகளை இங்கே கவனியுங்கள்.
https://www.youtube.com/watch?v=DZZ6cfm0AS0”கையில் கிண்ணம் பிடித்து விட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான்
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான்
கடற் கரை எங்கும் மணல்வெளியில்
காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும்
சிந்துபில் ராகம் பாடினான்
விதி எனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழிந்திட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே”

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று.. அஹ.. அஹ..
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலை தான் இன்று சுரம் பிரித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று”

அதே போலவே தண்ணி தொட்டி பாடலின் காட்சியாக்கத்திலும் நுணுக்கமான பல டீடெய்ல்கள் இருக்கும்,இப்பாடலில் வைரமுத்துவின் குடிக்கெதிரான வரிகளைக் கவனியுங்கள்.
https://www.youtube.com/watch?v=5zSLQh1Rp-g”புட்டி தொட்டதால புத்திகெட்டுப் போனேன்
ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கிறன்

அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா

மகாராஜா பிச்ச கேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கல்லாகும்

இன்னும் கொஞ்சம் ஊத்து... சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து

எனக்கு ராகம் எல்லாம் தண்ணிப்பட்ட பாடு
இன்னைக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு

ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது...
மானம் போச்சு ஞானம் போகாது
ரோசம் பார்த்தாலே போதை தான் ஏறாது”

சிந்து பைரவி படம் பெரும்பாலும் விசாகப்பட்டினத்தில் எடுத்திருந்தாலும், சென்னையின் ஒய்ன் ஷாப்புகளை பேக்ரவுன்டில் காட்டி லோக்கேஷன் மேட்ச் செய்திருப்பார்.தவிர இதில் மிருதங்க வித்வானான டெல்லி கணேஷை ஒரு குடிநோயாளியாகவே சித்தரித்திருப்பார்.

கே,பாலசந்தர் தன் 1983 ஆம் ஆண்டு வந்த அச்சமில்லை அச்சமில்லை படத்தில் டெல்லி கணேஷ்  நடிகர் ராஜேஷின் தந்தை,அதிலும்  ஒரு குடிநோயாளி கதாபாத்திரம் தான் செய்திருப்பார்.

கே,பாலசந்தர் தன் 1986 ஆம் ஆண்டு வெளி வந்த புன்னகை மன்னன் படத்தில் டெல்லி கணேஷ்  கமல்ஹாசனின் தந்தை, ஒரு குடிநோயாளி கதாபாத்திரம் தான் செய்திருப்பார்.

கே,பாலசந்தர் தன் 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தில் குடிப்பழக்கத்தால் மனைவியை [ஒய்.விஜயா] தன் நண்பனுக்கே கூட்டிகொடுக்கும் ஒரு இழிபிறவி கதாபாத்திரத்தில் நடிகர் நாசரை அறிமுகம் செய்தார்.அதீத குடி வெறியால்  சமூகத்தில் பலப்பல அவமானங்களை சந்தித்து மனைவிக்கும் பிறருக்கும் பல அநீதிகள் இழைத்து கடைசியாக ஒரு பெண் டாக்டரால் கார் ஏற்றி கொலை செய்யப்படுவார் நாசர்.

கே,பாலசந்தரின் 1992 ஆம் ஆண்டு வெளியான ஒரு வீடு இருவாசல் படத்தில் சார்லி தன் அதீத  குடிப்பழக்கத்தால் தமிழ் சினிமாவில்  இயக்குனராக வெற்றி பெற முடியாமல் துணை நடிகராகவே இருப்பார்.புதிதாக யாரைப் பார்த்தாலுமே நான் புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பயின்றவன்,நஸ்ருதீன் ஷா எனக்கு சீனியர்,ஷப்னா ஆஸ்மி என் பேட்ச் என்று புருடா விட்டு இரக்கமும் பணமும் சம்பாதித்து குடிப்பார்.

கே,பாலசந்தரின் 1987ல் வந்த உன்னால் முடியும் தம்பி படத்தின் பிற்பாதி முழுக்க குடிக்கு எதிரான கருத்துக்களை படத்தின் நாயகன் உதயமூர்த்தி [கமல்]எடுத்துரைத்து அவ்வூரின் குடிநோயாளிகளைத் திருத்துவது போல பல காட்சிகள் உண்டு, நாயகன் உதயமூர்த்தி பாடும் உன்னால் முடியும் தம்பி என்னும் பாடலின் குடிப்பழக்கத்துக்கு எதிரான வலுவான வரிகளைப் பாருங்கள்.இப்பாடலை கவிஞர் முத்துலிங்கம் இயற்றி எஸ்,பி.பி அவர்கள் பாடினார்.

https://www.youtube.com/watch?v=tf6L-rg76C8


”ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல்
நம் நாடு திருந்தச் செய்யோணும்”

கொசுறுச் செய்தி [உன்னல் முடியும் திரைப்படத்தில் அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா இசைஞானி எழுதிய தத்துவப் பாடல், அவருக்கு பாடல்களும் வெண்பாவும், எழுத வரும் என்றாலும் ,அவர் சினிமாவுக்கு எழுத மாட்டார், ஆனால் குரு ரமண கீதம், ராஜாவின் ரமணமாலை, உள்ளிட்ட பல பக்திப் பாடல்களின் தொகுப்பு முழுக்க அவரே இயற்றியிருக்கிறார் , இப்பாடல் உருவாக்கத்தில் கே.பாலசந்தர் அவர்களுடன் அமர்ந்திருக்கையில்   மெட்டுடன் பாடலின் வரிகளும் உற்சாகமாகப் பிறக்க முழுப்பாடலையும் அவரே எழுதிவிட்டார்.]

எழுத்தாளர் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே குறித்து வாத்தியார்.சுஜாதா எழுதிய அறிமுகம்எழுத்தாளர் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே குறித்து வாத்தியார்.சுஜாதா அவர்கள் நவம்பர் 1974 கணையாழி கடைசி பக்கங்களில் எழுதிய அறிமுகம்.வாத்தியார் எழுத்துக்களை எப்போது படித்தாலுமே ஃப்ரெஸ்ஸு தான்[சிவாஜியில் கொச்சின் ஹனீஃபா சொல்லும் ஃப்ரெஸ்ஸு] அவர் அறிமுகங்களும் அப்படியே

கட்டக் கடைசியாக டான்லீவியைப் [பி]படித்த கனவான்களுக்கு ஜி.நாகராஜனையும் மிகவும் பிடிக்கும் என்றிருக்கிறார்.

டான் லீவி பற்றிய விக்கி லின்க்
http://en.wikipedia.org/wiki/J._P._Donleavy
டாவி லீவியின் மிகச்சிறந்த படைப்பான த ஜிஞ்சர் மேன் பற்றிப் படிக்க
http://en.wikipedia.org/wiki/The_Ginger_Manஇந்திய அவசர நிலை பிரகடன சட்டம் குறித்து மௌனம் கலைத்த திரைப்படங்கள்


இந்தியாவின் அவமானங்கள் என்று இந்தியப் பிரிவினை உயிர்பலிகள், இந்து முஸ்லீம் வகுப்புக் கலவரங்கள், சீக்கிய இன அழிப்பு என்று பட்டியலிட்டுக் கொண்டே போனாலும், இந்திய அரசே முன்னின்று செய்த 21 மாத [ 25 June 1975 to 21 March 1977] அரக்க ராஜ்ஜிய அராஜகங்களான இந்திய அவசரநிலை சட்டம் நம் சரித்திரத்தில் தீராத அவமானமாகும்.

பெங்காலியில் 1970களின் சத்யஜித்ரேவின் படங்கள் எமர்ஜென்சியை முழுமையாக சித்தரிக்காவிட்டாலும் சர்காஸிசமாக கிண்டல் செய்தவை, அந்த வகையில் அரசியல் விமர்சன சினிமாவுக்கு வங்காளம் முன்னோடி.

மலையாளத்தில் 1988 ஆம் வருடம் வெளியான ஷாஜி கருனின் பிறவி எமர்ஜென்சியில் லாக்கப் டெத் ஆன பிள்ளையை ஊரெங்கும் பல்லாண்டு காலம் தேடி அலையும் தகப்பனின் கதை , இப்படத்தில் அர்ச்சனா காணாமல் போன தம்பியின் சகோதரியா நடித்திருப்பார்.மிக அருமையான மாற்று சினிமா,முழுப்படமும் இங்கே யூட்யூபில் கிடைக்கிறது.
https://www.youtube.com/watch?v=6sZ-iyQ733Aஎமர்ஜென்சி பற்றி இந்தியிலேயே விரல் விட்டு எண்ணும் படியாகத் தான் படங்கள் வந்துள்ளது, அதில் சுதிர் மிஸ்ராவின் Hazaaron Khwaishein Aisi 2003 ல் தான் வந்தது என்றாலும் மிக முக்கியமான படைப்பு, எமர்ஜென்சி காலத்தை கண் முன்னே நிறுத்தும் முக்கோண காதல் கதை , இதில் லாக்கப் சாவுகள், வாசக்டமி அராஜகங்கள் காட்சியாக வருகின்றன,

மிட்நைட்ஸ் சில்ட்ரன் படத்தில்  சித்தார்த் எமர்ஜென்சியை அமல்படுத்தும் காவல் துறை அதிகாரி, இதில் காவியத் தொலைவன் சித்தார்த்தை அப்படி வேலை வாங்கியிருப்பார் தீபா மேத்தா.

சரிதா சவுத்ரி [காமசூத்ரா படத்தின்  இளவரசி தாரா] இந்திரா காந்தியாகவே உருமாறியிருந்தார் ,இது மேஜிக் ரியாலிச படம் என்பதால்.எமர்ஜென்சியை கருமேகம் ஊரை சூழ்ந்தது போல காட்சிப்படுத்தியிருப்பார்கள்.கற்பனைக்கு ஏது கட்டுப்பாடு என்று எழுத்தாளரும் இயக்குனரும் குழுவும் நிரூபித்த திரைப்படம்.

இது தில்லியின் பெரிய சேரி  ஒரே இரவில் காலி செய்யப்பட்ட சரித்திர நிகழ்வைச் சொன்ன காட்சி. இங்கே
http://www.youtube.com/watch?v=0aBGiTj1tJ8 
ஹீரோயின் ஸ்ரேயாவின் அழகு என் கதைக்கு தேவைப்படவில்லை என்றார் பெண் இயக்குனர் தீபா மேத்தா. சர்ச்சைக்குரிய ஃபயர், எர்த், வாட்டர் படங்களை இயக்கிய பெண் இயக்குனர் தீபா மேத்தா. அடுத்ததாக, அவர் இயக்கியுள்ள படம் மிட்நைட்ஸ் சில்ட்ரன். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன் படத்தை அவர் இயக்கி இருக்கிறார். இப்படம் சர்ச்சையை கிளப்பி உள்ளதுடன் படத்தை திரையிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் போராட்டம் நடத்தினர். இப்படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடித்திருக்கிறார். ஸ்ரேயாவின் நடிப்பு பற்றி தீபா மேத்தா கூறும்போது, ‘ஸ்ரேயா நல்ல நடிகை. அவரது அழகுபற்றி எனக்கு தெரியும். ஆனால் இப்படத்தில் அவரது அழகு தேவைப்படவில்லை. அழுத்தமான நடிப்பு தேவைப்பட்டது. இதை அவரிடம் சொன்னபோது உடனே புரிந்துகொண்டார். பார்வதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஆழமான நடிப்பை வெளியிட்டிருக்கிறார். இப்பாத்திரத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு நடித்தார். அதை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் மிகவும் இனிமையானவர் என்றார். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=38076#sthash.sKi7sEqn.dpuf
இயக்குனர் தீபா மேத்தா நடிகை ஸ்ரேயாவின் அழகு என் கதைக்கு தேவைப்படவில்லை என்றார்  சர்ச்சைக்குரிய ஃபயர், எர்த், வாட்டர் படங்களை தீபா மேத்தா. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை அவர் இயக்கியுள்ளார்.

இப்படம் இந்தியாவில் வெளியாகாமல் மிகுந்த சர்ச்சையை கிளப்பியதுடன் இப்படத்தை திரையிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் போராட்டம் நடத்தினர்.

இப்படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். நடிகை ஸ்ரேயா பற்றி தீபா மேத்தா கூறுகையில், ‘ஸ்ரேயா நல்ல நடிகை. அவரது அழகுபற்றி எனக்கு தெரியும். ஆனால் இப்படத்தில் அவரது அழகு தேவைப்படவில்லை. அழுத்தமான நடிப்பு தேவைப்பட்டது. இதை அவரிடம் சொன்னபோது உடனே புரிந்துகொண்டார் என்றார்,ஸ்ரேயா இதில் பார்வதி எனும் கதாபாத்திரமாகவே மாறி ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி லண்டனில் நடந்த இப்படத்தின் விழாவுக்கு நடிகை ஸ்ரேயாவுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியாவில் பிறந்த சல்மான் ருஷ்டி. தான் எழுதிய சாத்தானிக் வெர்சஸ் என்றப் நூல் மூலம் ஈரான் மதத் தலைவர் கொம்னியின் கடும் கோபத்துக்கு உள்ளானவர், மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் நிரந்தரமாக வசித்து வரும் விட்ட சல்மான் ருஷ்டி தொடர்ந்து இங்கிலாந்து அரசின் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வாழ்ந்து வருகிறார்.இவர் 1981ம் ஆண்டு எழுதிய இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ நாவல் நவீன இலக்கியத்தில் மிகவும் முக்கியமான முயற்சி.

உலகசினிமா ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்பவர்கள் இதைப் பாருங்கள், இது போல உலகத்தரமான காட்சிகள் வெகுஜன சினிமாவில் வரவே வராது.

2012ல் வெளியான இந்த மிட்நைட்ஸ் சில்ட்ரன் சல்மான் ருஷ்டியின் கதையைத் தழுவி தீபா மேத்தா மிகுந்த சிரத்தையுடன் இயக்கிய படைப்பு, ஒரு புத்தகத்தை எப்படி காட்சிப்படுத்தவேண்டும் என்பதற்கான ரெஃபரன்ஸ் மெட்டீரியல் இப்படம்.

இது 1947 துவங்கி எமர்ஜென்சி வரை நீளும் கதை. இது தில்லியின் மிகப்பெரிய சேரி அழிப்பு, முஸ்லிம் இன சுத்திகரிப்பு ,மாற்று கருத்து கொண்டோர் மீதான வன்முறை, இவை பற்றி சர்காஸிசமாக பேசிய படைப்பு. இந்திராவை வெகுவாக கிண்டல் செய்த படம் சினிமா வரலாற்றிலேயே இது ஒன்றாகத்தான் இருக்கக் கூடும்.

நிம்போமேனியாக் வால்யூம்-1 உமா தர்மேனின் மனம் கவர்ந்த காட்சி


பிறன்மனை நோக்கும் கன்னிகைகளுக்கு சமர்ப்பணம்.


லார்ஸ் வான் ட்ரையரின் நிம்போமேனியாக் வால்யூம்-1 மற்றும் வால்யூம்-2 செக்ஸைப் பற்றி மட்டும் பேசும் படைப்பு என்றால் அது அறிவீனம், இப்படைப்புகள் பேசாத விஷயமே இல்லை, இப்படம் பற்றி முழுக்க ஆலசி ஆராய்ந்து எழுத நெடுந்தொடர்கள் எழுத வேண்டும்.இப்போதைக்கு உமா தர்மேன் தோன்றிய இக்கதாபாத்திரம் பற்றி மட்டும் இப்பதிவில் சொல்லியிருக்கிறேன்.
 
இல்லறத் திருட்டு என்பது நாம் சமுதாயத்தில் அனுதினமும் கண்ணுறும் சர்வ சாதாரணமான ஒன்று தான் என்றாலும், அதன் வலி அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

நிம்போமேனியாக் வால்யூம்-1ல் ஜோ என்னும் இளம் பெண்ணிடம் தன் கணவனைப் பறிகொடுத்து விட்டு கணவன் ஜோவின் வீட்டுக்குள் நிரந்தரமாக பெட்டி படுக்கையுடன் சென்ற மறு நிமிடமே, தன் மூன்று மகன்களுடன் அங்கே சென்று இருவருக்கும் புத்தி புகட்டும் மிஸஸ் H என்னும் மிக அருமையான கதாபாத்திரம் செய்திருக்கிறார் உமா தர்மேன்,

வீட்டின் வரவேற்பறை:-

வேண்டா விருந்தாளியாக ஜோவின் வீட்டு வரவேற்பறையின் உள்ளே நுழைந்த உமா தர்மேன் கணவனுக்குப் பிடித்தமான அவனுடைய காரின் சாவியை  வலுக்கட்டாயமாக அவனிடமே திணித்தவர். மகன்களிடம் இனி அப்பா நம்மிடம் வரமாட்டார், நாம் இனி பொது போக்குவரத்தில் தான் போகவேண்டும்,இனி சமூகத்தில் குறைந்த வசதிகளுக்கு நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும் என்பார்.
மூன்று மகன்களில் ஒருவன் கையில் உள்ள சாக்குத் தலையனையைப் பார்த்து அது என்ன? என சக்களத்தி ஜோ கேட்க, அது அவனே செய்து Mrs. H என்று எம்ப்ராய்டரி இட்டு DADDY க்கு பரிசளித்தது ,இதன் அழகு வெளிப்பார்வைக்குத் தெரியாது,ஆனால் உள்ளத்தால் மட்டுமே அந்த அன்பை உணர முடியும் என்றவர், இதை உன் அப்பாவிடம் கொடு என்பார் .மகன்களிடம்  இனி DADDY என்று நீங்கள் அவரைக் கூப்பிட முடியாது, இனி அவரை HIM, HE, THAT MAN என்று தான் அழைக்க வேண்டியிருக்கும் என்கிறாள்.

 உமா தர்மேன் தன் கணவனைக் கவர்ந்த ஜோவிடம் நாங்கள் உங்களுடைய whoring bed ஐ பார்க்கலாமா? என்றவர், அவள் மௌனிக்க, கேவலம் அது வேலைக்காரர்கள் கூட வேலைக்கு வருகையில் பார்க்கும் ஒரு வஸ்து தானே என்றவர்
படுக்கை அறை:-

தன் மகன்களை நோக்கி உங்கள் அப்பாவின் மனம் கவர்ந்த இடத்தைப் நீங்கள் பார்க்க வேண்டாமா? என குதூகலமாகக் கேட்டவர், அவர்கள் ஆவலுடன் தலையசைக்க,  அந்தக் கட்டிலில் சென்று அவர்களுடன் சென்று அமர்ந்து ஆடிப்பார்பார்.

ஜோவையும் கணவனையும் மையமாகப் பார்த்து இங்கு தான் எல்லாம் நடந்தது அல்லவா?!!! இப்படித்தான் அவரை வளைத்தாய் அல்லவா?!!! என்று கேள்வி மேல் கேள்விகள் தொடுப்பார், அங்கே கட்டிலில் மகன்களை ஆதூரமாக அணைத்துத் தேற்றியவர் இந்த அறையை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.

இத் தருணம் உங்கள் மூவர் வாழ்வில் முக்கியமானது, உங்கள் வாழ்வுக்கான படிப்பினையாக இதைக் கருதுங்கள். எந்தப் பெண்ணுக்கும் இந்த வலியைத் தராதீர்கள், எந்தக் குழந்தையும் இந்த வலியை வேதனையை அனுபவிக்கக் காரணமாக அமையாதீர்கள் என்று சொல்லிவிட்டு உடைவாள். இப்படியெல்லாம் பேசுவதற்கு மன்னியுங்கள் என்றவர் தேநீர் அருந்தலாம் என்று சொல்வார்,இதற்கே அங்கே ஆடிப்போயிருப்பார்கள். இவர் முன்னாளும் ஜோவும்,

இப்போது டைனிங் டேபிள்:-
அவரே மூவருக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டு வருவார், ஜோவிடம் மகன்களின் அப்பா குடிக்கும் தேநீரில் எப்போதும் 2 சர்க்கரைக் கட்டிகள் இட வேண்டும் என அறிவுருத்துவார்.

அங்கே கதவு தட்டப்பட, ஜோவை வலுக்கட்டாயமாக அமர்த்திவிட்டு,அவர் போய் கதவை திறக்க அங்கே, ஜோவின் மற்றோர் நண்பன் இவள் அழைப்பின் பேரில் அங்கே டேட் செய்ய பூச்செண்டுகளுடன் வந்திருப்பான், அவனிடமிருந்து பூச்செண்டை வாங்கி முகர்ந்து பார்த்தவர், மகன்களை நோக்கி பசங்களா ஓடி வாங்க, உங்களுக்கு இந்த விஷயம் ஆர்வமூட்டக்கூடும் என்று கலாய்ப்பார். அங்கே இறுக்கம் தளர்ந்து மெல்லிய அவல நகைச்சுவை தாண்டவமாடும்.

அவனை உள்ளே அழைத்து வந்தவர், ஜோவை நீண்ட நாட்களாகத் தெரியுமா? எனக்கேட்க அவன் இல்லை இப்போது தான் பழக ஆரம்பித்துள்ளோம் என்பான். மகன்களிடம் திரும்பி இவரின் கண்களை நன்றாகப் பாருங்கள் என்பார். ஜோவை ஏறிட்டவர் நீ அத்தனை பரந்த மனப்பான்மை கொண்டவளா? என்றவர் கணவனை நோக்கி நான் அத்தனை பரந்த மனப்பான்மை கொண்டவள் இல்லை,அது தான் நான் செய்த பிழை என்பார்.

மகன்களிடம் திரும்பி உங்களுக்கு இந்த இருவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் இப்போதே கேட்டு விடுங்கள் .இது போன்ற குரூர மனம் கொண்ட மனிதர்களை நீங்கள் சந்திப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றவர்,ஜோவை நோக்கி ஒரு நாளைக்கு உன்னால் எத்தனை இதயங்களை நொறுக்கிவிட முடியும் என்று நினைக்கிறாய்?5,50?தன் மூக்கை சிந்தி ஜோவிடம் காகிதத்தை எறிவார். அவள் காதலன் அதை பொருக்கியவன், ஜோவை தேற்றுவான்.

ஜோ நீண்ட மௌனத்துக்குப் பின்னர் வாய் திறந்தவள்,மகன்களை நோக்கி நான் உன் தந்தையை மனதார விரும்பவில்லை என்பாள், உமா தர்மேன் ஜோவை நோக்கி இத்தனை பெரிய பேரிடியை எங்கள் வாழ்க்கையில் இறக்கிவிட்டு எத்தனை எளிதாக உன்னால் இப்படி நகைச்சுவையாகப் பேசமுடிகிறது?!!!  , நீயும் ஒருநாள் இதே போன்ற சூன்யத் தனிமையால் பீடிக்கப்படுவதை என் மனக்கண்ணில் காண்கிறேன் என்றவர் மகன்களை கிளம்ப தயார் செய்வார்.

பொது படிக்கட்டு வராந்தா:-

எல்லாம் முடிந்து வெளியேறுகையில் வீல்ல்ல்ல்ல் என்று தன் துக்கத்தை எல்லாம் வெளியேற்றி கணவனை நோக்கிக்  கத்துவார்  உமா தர்மேன்,  வாசலுக்கு வந்து வழியனுப்ப நிற்கும் தந்தையை தழுவிக்கொள்ள முயலும் ஒவ்வொரு மகனாக பிரித்தவர், நீ உன் தந்தைக்கு குற்ற உணர்வை அளிக்கக்கூடாது என்று படியில் இறங்கச் செய்வார், கடைசியாக கணவனை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு விட்டு விலகுவார் இந்த நடிப்பு ராட்சஸி.

கணவனை வேறு பெண்களிடம் பறிகொடுக்கும் ஏமாளி மனைவியின், பாசமுள்ளத் தாயின் மன வலியை மிகத் தத்ரூபமாக பதிவு செய்திருக்கிறார் உமா தர்மேன். சுமார் 8 நிமிடம் நீளும் இக்காட்சி. உலக சினிமாவின் பெருமையான ஒரு காட்சி.
http://www.filmlinc.com/blog/entry/uma-thurman-lars-von-trier-nymphomaniac-interview

Mrs. H Teaser Trailer for Nymphomaniac on TrailerAddict.

நடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி இயக்குனர் கே.பாலசந்தரின் முக்கியமான குணச்சித்திர நடிகர்காலஞ்சென்ற நடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வைரம் நாடகசபாவில் தன் நாடக வாழ்க்கையைத் துவங்கியதால் வைரம் கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டார்,இவர் குலதெய்வம் ராஜகோபால், உள்ளிட்டோர் சேர்ந்து நடத்திய கலைமணி நாடக சபாவில்  மனோரமா தான் கதாநாயகி.1960களில் வீரபாண்டிய கட்டபொம்மன்,சபாஷ் மாப்பிளே உள்ளிட்ட  நிறைய படங்களில் குணச்சித்திரம் வேடங்கள் செய்திருந்தாலும்.இவரை இயக்குனர் மீள் அறிமுகம் செய்த திரைப்படங்களில் வந்த கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவை.அதில் மூன்றை இங்கே குறிப்பிடுகிறேன்,வேறு சிலவற்றை தேடி தொகுத்து எழுதுகிறேன்.


அச்சமில்லை அச்சமில்லை [1984]படத்தில் இவர் பெயர் உமையோர் பாகம்,சரிதாவின் தந்தை,இவருக்கு சுதந்திரத்துக்கு முன்னர் போன கண் பார்வை 1980 களில் தான் இவரின் எம் எல் ஏ மருமகன் ராஜேஷ் செய்த மருத்துவ உதவியால் திரும்பக் கிடைக்கும்,இவரது நண்பர் கோமல் ஸ்வாமிநாதன் இவரிடம் பேசும் வசனங்கள் மிக முக்கியமானவை.கண் பார்வை கிடைத்த உடன் இவர் பார்க்கும் சுதந்திர இந்தியாவில் எச்சில் இலைக்கு மக்கள் அடித்துக் கொள்வர்,அதைக்கண்டு இவர் இதற்கு கண் பார்வையின்றியே போயிருக்கலாமே என வருந்துவார்.

மகளால் கொலை செய்யப்பட்ட மருமகன் ராஜேஷின் போஸ்டரின் மேல் அடித்த சாணியை கோமல் ஸ்வாமிநாதன் கழுவிவிட்டு இவருக்கு அவரின் முகத்தை அறிமுகம் செய்யும் காட்சியில் ரத்தக்கண்ணீர் விடுவார்.

சிந்து பைரவி [1985] படத்தில் இவர் பென்ஷன் தாத்தா,மருமகன் ஜேகேபி இவர் பென்ஷன் வாங்க வெளியே கிளம்புவதைப் பார்த்து அன்று 1ஆம் தேதி என உறுதி செய்வார்.பின்னொரு சமயம் இவரின் சொத்தான தகரப்பெட்டியை உடைத்து அழிவின் விளிம்பிலிருக்கும் ஜேகேபி குடிக்க பணம் திருடிவிடுவார்,குடித்து விட்டு வந்தால் வீட்டின் வாசலில் செருப்புகளாக இருக்கும்,மனிதர்களாக இருப்பர்,தாத்தா இறந்து விட்டிருப்பார்.மிக அற்புதமான கதாபாத்திரம் அது.

உன்னால் முடியும் தம்பி[1988] படத்தில் இவர் சமையல்காரரான ரங்கூன் தாத்தா,சமையல் முடிந்த உடன் ஓய்வு வேளைகளில் அனு தினமும் இரு மரக்கன்றுகளையேனும் ஊருக்குள் கரட்டிலும் முரட்டிலும் சென்று நட்டு வைத்துவிட்டு திரும்புவதை வழக்கமாக வைத்திருப்பார்,இல்லாவிடில் தூக்கம் வராது,அவர் வளர்த்த மரக்கன்றுகள் பெரிய மரமாகி பூத்துக் குலுங்குவதைப் பார்த்து ஆனந்தப்படுவார்.

படத்தில் கமல்ஹாசனுக்கு 2 முறை மூன்றாம் மனிதர் வாயிலாக தன்னலம் களைய சமூக சிந்தனை போதிக்கப்படும்.ஒன்று அக்கம்பக்கம் பாரடா சின்னராசா பாடலுக்கு முன்னே படித்துறையில் , அங்கே இவரிடம் ஒரு தலையாரி இவரை நிறுத்துவார்,


சிறுவன் கமல் அங்கே படித்துறையில் பார்வையில்லாத மூதாட்டிக்கு உதவாமல் தன்னலத்துடன் காக்க காக்க கனகவேல் காக்க என்று மந்திரம் உச்சரிப்பதை மெல்லிய கேலியுடன் சுட்டிக்காட்டி.கடவுள் மனிதனுக்கு இரு கைகள் கொடுத்தது ஒன்று நமக்கு,மற்றொன்று இயலாதோருக்கு உதவத்தான் என்பார்.அற்புதமான காட்சியாக்கம் அது.

அதே போல ரங்கூன் தாத்தா மரக்கன்றுகளுடன் வெளியே கிளம்புவதை கேலி செய்யும் சக வேலைக்காரனுக்கு சொல்லும் பதிலை கமல் பால்கனியிலிருந்து கேட்டு சமூக  மாற்றம் கொண்டுவரும் உத்வேகம் பெறுவார்.அதுவும் அற்புதமான காட்சியாக்கம் 

இயக்குனர் கே.பாலசந்தர் இவருக்கு கொடுத்த கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா வரலாற்றில்  மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.

தப்புத்தாளங்கள் [1978]படத்தின் அறிமுகங்கள் தொடர்ச்சி 3

புதுவாழ்வுக்கு தயாராகும் தேவு மற்றும் சரசு

தப்புத்தாளங்கள் படத்தில் தரமான சிறுகதை போல ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவர்கள் தொடர்பான காட்சிகளும் இருக்கும்,அனந்து அவர்களின் கைவண்ணம் இயக்குனர் பாலசந்தருடன் இணைந்து இப்படத்திலும் நுணுக்கமாக வெளிப்பட்டிருக்கும்.

இதில் தேவு [ரஜினி]  விலைமங்கை சரசுவை [சரிதா] திருமணம் செய்த பின்னர் அடிதடி தொழிலை விட்டு விடுவார், எழுத்தறிவும் , படிப்பறிவில்லாததால் கௌரவமான எடுபிடி வேலை தேடுவார், சரசுவும் தன் தொழிலுக்கு முழுக்கு போட்டு விடுவார். ரஜினியின் குழந்தையை வயிற்றில் சுமப்பார்.

இந்நிலையில் ரஜினி முன்பு காசுக்காக மரண அடி அடித்த தொழிற்சங்கத் தலைவரிடமே சென்று தன்நிலையைச் சொல்லி வேலை கேட்பார்,அவர் இவரின்  நிலையை  நன்கு புரிந்து கொண்டவர்,தனக்கு தெரிந்த நிறுவனத்தில் ஸ்டோர் ரூம் அட்டெண்டர் வேலை இருப்பதாகவும்,அதற்கு பணம் 2000 ரூபாய் டெப்பாசிட் கட்டவேண்டும் என்றும் சொல்வார்.

சரசு பணத்துக்காக யார் யாரிடமோ கேட்பார்,எங்கும் தகையாது,தன் சக தொழில் செய்து இப்போது தன் இயக்குனர்-காதலரை வைத்து சினிமா எடுக்கும் ஒரு பெண்ணைச் சென்று சந்தித்து பணம் கேட்பார்,
சரிதா மற்றும் சுதா சிந்தூர்

அவர் சினிமாத் தொழில் ஒரு நாய் படாத பாடு,வேசியாக இருக்கையில் சிரித்தால் மட்டும் போதும் பணம் கொட்டும் ,இங்கே சிரிக்கவும் வேண்டியிருக்கிறது பணமும் கொட்டி அழுதாலும் வேலை நடக்க மாட்டேன் என்கிறது என்று அலுத்துக் கொள்வார்.

என் பணம் அனைத்தையுமே இப்படத்தில் முடக்கிவிட்டேன்,அதனால் பணம் தர இயலாது,ஆனால் அவரிடம் சொல்லி சரசுவுக்கு வேஷம் வாங்கித்தர முடியும், அதில் 50 100 கிடைக்கும் என்கிறாள். சரசு மறுத்து விட்டு கிளம்ப எத்தனிக்க.

வந்தது தான்  வந்தாய் ,எங்கள் படத்தின் போட்டோ ஆல்பத்தை பார்த்துவிட்டுப் போ என்கிறாள்,சரசு நான் தியேட்டரிலேயே பார்த்துக் கொள்கிறேன் என எழுந்திருக்க,

இவள் அவளை அழுத்தி அமரவைத்து விட்டு இல்லை இந்தப் படம் தியேட்டருக்கு வராது!!! என்று அர்த்தத்துடன் அவளை ஊடுறுவிப்  பார்த்து விட்டு காட்சியை முடித்து வைப்பாள்.

ஆயிரம் கதை சொல்லும் கதாபாத்திரம் அது ,அக்கதாபாத்திரம் செய்த நடிகை சுதா ஸிந்தூர் என்பவரையும் கே.பாலசந்தர் தமிழ்,கன்னடம் என இப்படம் மூலம் அறிமுகம் செய்தார்.

அதன் பின்னர் இவர் என்ன படம் செய்தார் என்ன ஆனார் என்று ஒரு விபரமும் தெரியவில்லை.

இயக்குனர் கே.பாலசந்தர் தன் படைப்புகளில் சினிமாவில் தோற்றவர்கள் ,சோரம் போனவர்கள் கதையை வாய்ப்பு கிடைக்கையில் நிறைய பதிவு செய்திருக்கிறார்,நூல்வேலி படத்திலும் இதே போல சினிமாவில் தோற்றுபோன ஒரு முன்னாள் நடிகை இனிஷியல் இல்லாத தன் பதின்ம வயது மகளுடன் [சரிதா] தனியே வசித்து இன்னலுறுவதை காட்டியிருப்பார்.

கன்னடத்தின்  பிரபல நாடக நடிகரும், ஆசிரியரும்,இயக்குனருமான B.V.Karanth [http://en.wikipedia.org/wiki/B._V._Karanth]  அவர்களின் குழுவில் நடித்து வந்த  நல்ல திறமையான கன்னட நாடக நடிகர்களை இப்படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தார் இயக்குனர்.அதில் சுந்தர் ராஜ்,பிரமிளா ஜோஷாய் போன்றவர்கள் மட்டும் வெற்றி பெற முடிந்தது,ஏனையோர் சினிமாவில் கால ஓட்டத்தில் காணாமல் போயினர்.

I had a black dog, his name was depression

மாதொருபாகன் நாவல் சர்ச்சையின் ஆணிவேர்

மாதொருபாகன் நாவலின் முன்னுரையை படித்தாலே எல்லோருக்கும் புரியும் படி இது உண்மையாக திருச்செங்கோட்டில் நடந்த தான் கேள்விப்பட்ட சம்பவங்களின் பாதிப்பில் எழுதியது என்று அதில் விளக்கியிருந்தார் பெருமாள் முருகன்,

முன்னுரையின் தலைப்பே “ரகசிய ஊற்றுக்களின் ஒன்று” என்றிருக்கிறது.இந்த நான்கு பக்கங்களால் விளைந்த வினை தான் இத்தொடர் போராட்டங்கள்.

 டாட்டா அறக்கட்டளைக்கு [IFA] மாதொருபாகன் நாவலின் உள்ளடக்கத்துடன் இவர் விண்ணப்பித்து,அவர்கள் அதை அங்கிகரித்து.இவருடைய கள ஆய்வை விரிவு படுத்தி  செய்யத் தந்த உதவித் தொகையில் சுமார் 2 வருடம் ஆராய்ந்து ஆறபோட்டு இதை எழுதினேன் என்று புளி போட்டே விளக்கி விட்டிருந்தார் பெருமாள் முருகன்,

நாவல் உருவாக தனக்கு உதவிய அத்தனை நபர்களின் பெயரையும் வெள்ளந்தியாக குறிப்பிட்டும் இருந்தார்.

இப்படி நியோகா [http://en.wikipedia.org/wiki/Niyoga] முறையில் பிறந்தவர்களை சாமி கொழந்த ,சாமி குடுத்த பிள்ள என திருச்செங்கோட்டின் சுற்று வட்டார ஊரார் அழைப்பர் என்றும் அவர் தன் முன்னுரையில் எழுதியிருக்கிறார்,

இவை மட்டும் அந்த முன்னுரையில் இல்லை என்றால் யாரும் மாதொருபாகனை எதுவுமே சொல்லியிருக்க முடியாது, இது மற்ற எழுத்தாளர்கள் எழுதிய குழந்தையில்லா தம்பதிகள் நாவல்கள் போல மற்றோர் புனைவாகவே இருந்திருக்கும்.

2010ல் எழுதிய இந்நாவல் ஐந்து வருடம் கழித்து இப்படி நெகடிவ் பப்ளிசிட்டியைப் பெற்றிருக்கிறது, இதை பட்டவர்த்தனமாக களப்பணி செய்து எழுதியியதாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார் என்றால்,இப்படி என்றேனும் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்பார்த்தாரா?சாதி வெறி கும்பல் இவரை எப்படி துன்புருத்தியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)