கிருஸ்துமஸ்ஸும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்ததென்றால் கேட்கவும் வேண்டுமா? அதுவும் இபன் படூடா மாலில் அவதார் திரைப்படத்திற்கு வேறு போகப்போகிறோம்,படம் முடிந்ததும் துபாய் மெட்ரோவில் வேறு பயணிக்கப்போகிறோம் என்றால் கேட்கவும் வேண்டுமா? இபன் படூடா ஒரு 12ஆம் நூற்றாண்டின் அரேபிய உலகசுற்றுலாப்பயணியும் சாகசவிரும்பியும்,சிறந்த தீர்க்க தரிசியும் ஆவார். இவர் கண்ட நாடுகளை அழகாக பழமையோ அதன் கலாச்சாரமோ மாறாமல் இங்கு அப்படியே வடிவமைத்துள்ளனர்.
அதிலும் பாசக்காரன் சென்ஷியுடன் ஊர்சுற்ற வேண்டும் என்றால் கசக்குமா? கிளம்பியே விட்டேன். படம் ஆரம்பிக்க 3-00 மணி நேரம் இருக்கு என்ன பண்ணட்டும் என்று சென்ஷி கேட்க, வுட்ரா போட்டும் வண்டிய மாலுக்கு,என்று நடையைக்கட்டினோம்,பலூன் சஃபாரிக்கு டிக்கெட் வாங்க போகையில் காற்று பலமாக வீச ஆரம்பித்ததால் , அவர்களே சவாரியை ரத்து செய்து விட்டனர். நாங்கள் ஏமாற்றத்துடன் வெங்கலக்கடையில் யானை புகுந்தாற்போல மாலை ஒரு அலசு அலசி தோண்டி துருவி விட்டோம், சென்ஷி விடாமல் போட்டோவுக்கு போஸ்கொடுத்து தள்ளி விட்டான்.
மாலின் அழகு எங்களை கட்டிப்போட்டுவிட்டது, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் கூற்றுக்கேற்ப நாங்கள் கண்ட காட்சியை சிறைபிடித்து உங்களுக்கும் பகிர்ந்துள்ளோம்.மவுசை கிளிக்கி படங்களை பார்த்து ரசிக்கவும்,(கொஞ்சம் கஷ்டம்தான்) கலை பயபுள்ள அவசர அவசரமாக அபுதாபி போற வேலை இருக்குன்னு புலுகிச்சாம், அவன் வந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். ஆதவனுக்கு அவசர வேலையாம்.சரி நாங்க மட்டும் போய்விட்டோம்,அடுத்த வாரம் எப்படியும் பலூனில் ஏறிவிடுவோம். பலூனில் ஏற 60 திர்காம் கட்டணம், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் கிளம்பும்,இறங்கும், 150 மீட்டர் உயரம் போவோம்.
துபாய்வாசிகள் அவசியம் மிஸ்பண்ணக்கூடாத சவாரியிது. கூட வர நினைப்பவர்கள் சென்ஷியை தொடர்பு கொள்ளவும். சேர்ந்து போய் வரலாம். நல்ல அனுபவமாக இருக்கும்.
7-30 மணிக்கு ஐமெக்ஸ் தியெட்டரில் அவதார் படம் துவங்கியது, சரியான தியேட்டர்,800 பேர் அமரக்கூடிய அரங்கு, நிரம்பி வழிய அருமையாக திரையிடப்பட்டது,
ஒன்றே ஒன்று தான் சொல்லுவேன், காமரூனின் மூளையை ஆராச்சி செய்து மனித மூளையின் உச்சக்கட்ட படைப்புத்திறனுக்கு அளவுகோல் செய்யலாம் என்றால் மிகை இல்லை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.இந்த படைப்புக்கு நாம் செய்யும் மரியாதை இதை த்ரீடியில் அதுவும் ஐமெக்ஸில் பார்த்து பரவசப்படுவது தான்.
ஒட்டுமொத்த உழைப்புக்கு ஒரு சல்யூட். இனி தல ஹாலிவுட் பாலாவின் உழைப்பில் உருவான அவதார் விமர்சனம்,அவதார் டெக்னாலஜி-1 , அவதார் டெக்னாலஜி-2 ஆகிய மூன்று பதிவையும் மீண்டும் படித்தால் படத்தில் புலப்படாத பலவிஷயங்கள் புலப்பட்டன. இனி நான் வேறு இந்த படத்துக்கு விமர்சனம் எழுதனுமா? என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.
அடுத்து அதே பரவசங்களுடன் மெட்ரொவுக்கு பயணித்தோம்.அங்கிருந்து இலவச ஷட்டில் பஸ் ஏறி நகீல் ஸ்டேஷனுக்கு வந்து முதல் முறையாக துபாய் மெட்ரோவில் பயணித்தோம். என்ன ரயிலு?என்ன வேகம்? என்ன அழகு ? ஆண்டவா?
ஒரு நாளைக்கு மனிதன் எவ்வளவு தான் வியப்பது. ஆண்டு முழுக்க வியந்து கொண்டே இருப்பதற்கு போதுமான பரவசங்களுடன் யூனியன் ஸ்கொயர் ச்டேஷனில் இறங்கி டாக்ஸி பிடித்து ஷார்ஜா வந்து சேர்ந்தோம். எல்லோருக்கு என் முன்கூட்டியே புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
////////////////////////////////////////////////
