குமாஸ்தாவின் மகள் திரைப்படம் 1974 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்கள் இயக்கி வெளியானது, இப்படம் நடிக்கையில் கமல்ஹாசனுக்கு வயது 20.
கமல்ஹாசன் இதில் பெரிய மிராசுதார், பிராமணர், அவர் மனைவியாக உஷா, இதில் கமல் எப்போதும் புகையும் 555 சிகரட், ரோலக்ஸ் வாட்ச், வைரப் பதக்கம் வைத்த தங்கச் சங்கிலி, கழுத்தைச் சுற்றிய இரண்டங்குல தங்க சரிகை வஸ்திரம் ,அன்றைய ஃபேஷனுக்கு ஏற்ப ஆடம்பர புதுத் துணிகள் , ஊரைச் சுற்ற ப்ரீமியர் பத்மினி கார் என்று சரியான கபட வேடதாரியாகவே வலம் வருகிறார்.
அவரிடம் கணக்கு வழக்கு பார்க்கும் பிராமண குமாஸ்தா வி.எஸ்.ராகவன், இப்படம் 1926 ஆம் ஆண்டு குமாஸ்தாவின் பெண் என்ற நாடகமாக எழுதப்பட்டு அரங்கேற்றம் கண்ட படைப்பு, ஆனால் படம் 70 களின் சூழலுக்கு திரைக்கதை எழுதியிருந்தார் ஏபிஎன் அவர்கள்.
மணமான கமல் ஒரு ஒண்ணாம்தரம் ஸ்த்ரி லோலர், அவரின் பெண் பித்துக்கு தூபம் போட்டு உதவி தம்படி தேற்றும் தரகராக இதில் கட்டுக்குடுமி பஞ்சகச்சம் திறந்த மார்புடன் வலம் வரும் நாகேஷ்,
கமலுக்கு தன் ஏழை குமாஸ்தா வி.எஸ்.ராகவனின் அழகு மகள் ஆர்த்தி ( மூத்த கன்னட நடிகை ) மீது அப்படி ஒரு மையல், எத்தனையோ முறை வலை வீசியும் அவர் படியவில்லை , ஆர்த்தியும் கமலின் மனைவி உஷாவும் பால்யத் தோழிகள் ஆதலால் அவர் கமல் மனைவியிடமும் தன் அப்பாவிடமும் இவரின் முன்னெடுப்புகளைப் பற்றி புகார் சொல்லாமல் இருக்கிறார்.
இந்நிலையில் சிவகுமாருக்கு ஆர்த்தியை நிச்சயம் செய்ய முடிவாகிறது, ஆனால் கமல் & நாகேஷ் சதி செய்து எழுதிய மொட்டைக் கடிதாசியால் சிவகுமாரின் தாய் பண்டரி பாய் அந்த திருமணத்தை ஐயமுற்று பிடிவாதமாக நிறுத்துகிறார்.
இதனால் மனமுடைந்த ஏழை பிராமணர் வி.எஸ்.ராகவன் தன் மகள் உஷாவுக்கு வயதான விதவை பிராமணர் ஒருவரை அதே முகூர்த்தத்தில் திருமணம் செய்து வைக்கிறார், மணமேடையில் ஆர்த்தி வலம் வருகையில் அந்த கிழபுருடர் வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்து மரணமடைகிறார்,
ஆர்த்தி கன்னியாகவே விதவையாகிறார்,இந்தக் கோலத்தில் மகளைப் பார்க்க முடியாமல் வி.எஸ்.ராகவன் நெஞ்சு வெடித்து சாகிறார்.
இப்போது கமலுக்கு திராட்சை தோட்டம் கண்ட ஒற்றை நரியாக குதூகலம், எப்படியாவது ஆர்த்தியின் வறுமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவரைத் தன் ஆசைநாயகியாக அடையத் துடிக்கிறார்.அதற்கு வேண்டி அடுக்கடுக்கான பல சதிச் செயல்களைச் செய்கிறார், இனி என்ன ஆகும்? படத்தில் பாருங்கள்.
அப்போது துவக்க 70 களில் வெளியான கமல் திரைப்படங்களில் கடைசி ரீலில் தான் பால் வடியும் baby face வில்லனான கமல் திருந்துவார், எல்லோரிடமும் மன்னிப்பு கேட்பார், இது தான் பதிவான பரிவாடி, இப்படத்திலும் அது உண்டு. கமலுக்கு படம் நடிக்கையில் இருபது வயது தான் என்றாலும் அவர் தன் நடிப்பால் உடல்மொழியால் அதை முப்பது என நம்ப வைக்கிறார், சிறிதும் தயக்கமில்லாத ஒரு நடிப்பு.
நல்ல வேளையாக நடிகர் கமல்ஹாசன் மலையாள சினிமா பக்கம் சென்று தன்னைப் புடம் போட்டுக்கொண்டு நல்ல படங்கள் செய்து திரும்பினார், இல்லாமல் போனால் கமலை வீணர்களுக்கு எல்லாம் வில்லனாக நடிக்க வைத்து அவரை ஒழித்து கட்டியிருப்பார்கள் தமிழ் சினிமாவில்.
இப்படத்தின் இசை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்,படத்தில் நான்கு இனிய பாடல்கள் உண்டு, ஒரு பாடல் மலேசியா வாசு என்ற க்ரெடிட்டில் மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியது, ஒளிப்பதிவு k.s.பிரசாத்.பாடல்களை எழுதியது கவிஞர் பூவை செங்குட்டுவன், மற்றும் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம்.
சமீபத்தில் ARR உடனான லைவில் கமல்ஹாசன் , தன் நண்பர் தசரதன் என்ற ஐயப்பசாமி பட இயக்குனர் ஒருவர் பற்றி உயர்வாகக் குறிப்பிட்டிருந்தார், அவர் இப்படத்தின் உதவி இயக்குனர்.
இதே உதவி இயக்குனர் தசரதன் தான் பின்னாளில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் பாடலை தான் எழுதியதாக டைட்டிலில் கிரெடிட் போட்டுப் புகழ் தேடினார்.
படத்தின் அற்புதமான பாடல்கள் இங்கே கேளுங்கள்.
https://youtu.be/DL4hjnBXS5o
https://youtu.be/259W94DWzwU
https://youtu.be/FfIcfH2iUaE
https://youtu.be/Xwudk1QbCAc
#கமல்ஹாசன்,#ஏபி_நாகராஜன்,#குமாஸ்தாவின்_மகள்,#குன்னக்குடி_வைத்யநாதன்,#ஆர்த்தி,#நாகேஷ்,#விஎஸ்_ராகவன்,#சிவகுமார்,#சூலமங்கலம்_சகோதரிகள்,#மலேசியா_வாசுதேவன்,#சீர்காழி_கோவிந்தராஜன்,#எம்ஆர்_விஜயா,#பூவை_செங்குட்டுவன், #உளுந்தூர்பேட்டை_சண்முகம்