அட… சரியான டுபாக்கூர் மேட்டர் போல’ என்றுதான் உடனடியாக நம்
வாயிலிருந்து வார்த்தைகள் வந்துவிழும். ஆனால், புதுச்சேரி-தமிழக எல்லையில்
அமைந்துள்ள ‘ஆரோவில்’ சர்வதேச நகரத்துக்குச் சென் றால்… உங்களின் கண்
முன்பாகவே அந்த வீடுகள் விரிந்து உண்மையை உணர்த்தும். அங்கே உள்ள ‘பசுமை
இல்லங்கள்’ (க்ரீன் பில்டிங்) எல்லாம் ஏழு, எட்டு நாட்களில்
கட்டபட்டவைதான். ‘சென்டர் ஃபார் சயின் டிஃபிக் ரிசர்ச்’ என்ற தொண்டு
நிறுவனம்தான் இந்த தொழில்நுட்பத்தை இங்கு பிரபலப்படுத்தி வருகிறது.
”இது
ஒன்றும் மாய மந்திரம் அல்ல. ‘ஃபெரோசிமென்ட்’ (Ferrocement) என்று
அழைக்கப்படும் தொழில்நுட்பத்தைதான் இதில் பயன்படுத்துகிறோம். ‘ஃபெரோஸ்’
(Ferrous) என்ற வார்த்தைக்கு இரும்பு சார்ந்த பொருள் என்று அர்த்தம்.
செங்கல் இல்லாமல்… இரும்பு, சிமென்ட் மற்றும் மணலைக் கொண்டு மட்டுமே
கட்டப்படுவதால் அதற்கு ‘ஃபெரோசிமென்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நன்றாக கட்டட வேலை தெரிந்த ஒரு கொத்தனார், ஒரே நாளில் இந்தத்
தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளமுடியும்” என்கிறார் கடந்த இருபத்தி ஆறு
ஆண்டுகளாக இந்தத் தொழில் நுட்பத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்து வரும்
தொழில்நுட்ப பயிற்றுநர் ராஜாராமன்.
தொடர்ந்தவர், ”சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் பூகம்பம்
ஏற்பட்டபோது, அங்கிருந்த பெரிய, பெரிய கட்டடங்கள்கூட சரிந்து
விழுந்துவிட்டன. ஆனால், ஒரே ஒரு கட்டடம் மட்டும் அசையாமல் நின்றது. அது…
ஆரோவில்லில் பயிற்சி பெற்ற ஒருவரால் ‘ஃபெரோசிமென்ட்’ தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்திக் கட்டப்பட்ட கட்டடம். அதைப் பார்த்து ஆச்சர்யத்தால் அதிசயத்து
நின்றவர்கள், தற்போது குஜராத்தில் இந்த வகைக் கட்டடங்களை அதிகமாக உருவாக்க
ஆரம்பித்துவிட்டனர்” என்று பெருமையுடன் கூறிய ராஜாராமன், அடுத்து சொன்ன
விஷயம் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!
”ஒரு
இடத்தில் நீங்கள் நிறைய செலவு செய்து வீடு கட்டுகிறீர்கள். ஆனால், அந்த
இடம் உங்களுக்கு ஏற்றதாக இல்லை. ‘இனி என்ன செய்ய முடியும்?’ என்று
சகித்துக் கொண்டு வாழ்வீர்கள். ஆனால், ஃபெரோசிமென்டில் இப்பிரச்னை
கிடையாது. காரணம்… வீட்டை அப்படியே பிரித்து, வேறு இடத்தில் கட்டிக் கொள்ள
முடியும்! நம்பித்தான் ஆகவேண்டும்! இந்த வகை வீடுகளில் பத்து அடிக்கு ஒன்று
என்று, குறைந்தது ஐந்தடி ஆழத்தில் வைக்கப்படும் பில்லர்களை வீட்டை
பிரிக்கும்போது வேறு இடத்துக்கு கழற்றிக்கொண்டு சென்றுவிடலாம். கூடவே,
சுவர்கள், கூரை போன்றவை அச்சு போன்ற அமைப்பின் மீது வைத்து வடிவமைக்கப்
படுகிறது. கதவு, ஜன்னல் என்று எதற்கும் மரங்களை பயன்படுத்தாமல்
ஃபெரோசிமென்ட்டை வைத்தே வேலையை முடிப்பதால் இதை ‘க்ரீன் பில்டிங்’
என்கிறோம்” என்றவர்,
”ஆக… இரும்புக் கம்பி, இரும்பு வலை, சிமென்ட், மணலை எல்லாம் தயார்
செய்யும் அதே நிமிடமே, புதுமனை புகுவிழா அழைப்பிதழையும் சொந்த,
பந்தங்களுக்கு கொடுத்துவிடலாம். அடுத்த ஒரு வாரத்தில் அழகான வீடு எழுந்து
நிற்கும். சாதாரண முறையில் கட்டடம் கட்டுவதை காட்டிலும் இந்த முறையில்
கட்டினால் 30% செலவு குறையும்! இப்படி இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு
கட்டப்பட்ட கட்டடம்கூட, இன்றைக் கும் நன்றாக உள்ளது. ஆகவே பூமி உள்ள காலம்
வரை இந்தக் கட்டடமும் இருக்கும்” என்று உத்தரவாதம் தந்தார் ராஜாராமன்.
அடுத்த ஆச்சரியம், சென்னைப்பட்டின வீடு!
சென்னை, பம்மலில் இருக்கிறது ‘ஹோம் எக்ஸ்னோரோ’ அமைப்பின் தலைவர் இந்திரகுமாரின் வீடு! வீட்டின் ஸ்பெஷல்… இயற்கை ஏ.சி.!
”1983-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள அறிவியல் மையத்தில் ஏ.சி. இல்லாத
கட்டடம் கட்டத் திட்டமிட்டார்கள். இங்கிலாந்து நாட்டு கட்டடக் கலை
வல்லுநர்கள் வந்து அதைக் கட்டி முடித்தார்கள். திறப்பு விழா அன்று ‘இவ்வளவு
அருமையான தொழில்நுட்பத்தை எங்கு கற்றுக் கொண்டீர்கள்?’ என்று
பத்திரிகையாளர்கள் கேட்க, ‘உங்கள் ஊரில் உள்ள கோயில் கோபுரங்களையும்,
அரண்மனை டூம்களையும் பார்த்துதான்!’ என்றார்களாம் அந்த வல்லுநர்கள்! நம்
தொழில்நுட்பத்தை, நமக்கே திருப்பிக் கொடுத்த அவர்களுக்கு, அன்றைய தேதியில்
வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா… 27 லட்ச ரூபாய்!
இதைச் செய்தித்தாள் வழியாக அறிந்துகொண்ட நான், ‘நாம் வீடு கட்டும்போது
இயற்கை ஏ.சி. அமைப்பு வைத்துதான் கட்ட வேண்டும்’ என்று முடிவு செய்து அது
தொடர்பான விவரங்களைத் திரட்டினேன். எங்கள் வீடு 800 சதுர அடியில்
அமைந்துள்ளது. இது, விமானம் நிலையத்தின் அருகிலுள்ள பகுதி என்பதால், ஒரு
மாடிக்கு மேல் கட்ட அனுமதியில்லை. ஆகவே, ஒரு மாடி கட்டி அதன் மீது இந்த
இயற்கை ஏ.சி-யை அமைத்துள்ளேன்.
அதென்ன இயற்கை ஏசி? பெரிதாக ஒன்றும் இல்லை. நம் கிராமங்களில் கூரை வீடு
கட்டுவதைப் போல மொட்டை மாடியில் கான்கிரீட் மூலம் ஒரு அமைப்பை உரு
வாக்குவதுதான். இந்த கான்கிரீட் கூரையானது… நீளம், அகலம், உயரம் அனைத்தும்
நான்கு அடி கொண் டது. அதன் அடிப் பாகத்தில் அரை அடி இடைவெளி விட்டு
கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக காற்று உள்ளே சென்று எளிதாக வெளியே
வருவதால், வீட்டில் எப்போதும் குளுமையான சூழல் இருக்கும். இந்தக் கூரையின்
மீது கண்ணாடி பதித்துவிட்டால், சூரிய வெளிச்சமும் பகல் முழுவதும்
கிடைக்கும். இதைக் கட்டுவதற்கு பதினைந்தாயிரம் ஆயிரம் ரூபாய் செலவானது. ஒரு
ஏ.சி. மெஷின் வாங்கும் செலவைவிடக் குறைவுதான். ஆனால், வாழ்நாள் முழுக்க
இயற்கையான ஏ.சி. கரன்ட் பில்லை எகிற வைக்காமலே உங்களை குளுகுவென
வைத்திருக்கும்!” என்றார் மகிழ்ச்சியுடன்.
கூடவே,
இவரது மொட்டை மாடி முழுவதும் கத்திரி, வெண்டை, மிளகாய் என்று காய்கறி
செடிகள் தலையசைக்கின்றன. ”இவ்வளவு செடிகளுக்கும் தண்ணீர்?” என்றோம்
வியப்புடன்.
” ‘பேசிலஸ்’ எனப்படும் நன்மை செய்யும் ஒரு வகை பாக்டீரியாவை கப்பல்,
விமானங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகளில், கொட்டிவிடுவார்கள். அவை மனிதக்
கழிவுகளைச் சிதைத்துவிடும். இதனால் கழிவறைத் தொட்டிகளில் கழிவு எதுவும்
இருக்காது. தண்ணீர் மட்டும்தான், துர்நாற்றம் துளிகூட வீசாது.
இந்த பேசிலஸ் பாக்டீரியாவைத்தான் இப்போது எங்கள் வீட்டுக் கழிவறைகளிலும்
பயன்படுத்துகிறேன். ஐந்து பேர் கொண்ட குடும்பம் வசிக்கும் வீட்டில் உள்ள
ஒரு செப்டிக்டேங்குக்கு, 50 கிராம் பேசிலஸ் பாக்டீரியா போதும். போட்ட ஒரு
வாரத்தில் செப்டிக் டேங்கில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களை, இந்த
பேசிலஸ் பாக்டீரியாக்கள் உண்டு விடுவதால், வெறும் தண்ணீர் மட்டும்தான்
இருக்கும். அந்தத் தண்ணீரைச் செடி, கொடிகளுக்குப் பயன்படுத்தலாம். இதன்
மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்
வேலையும் இல்லை. செடி, கொடிகளுக்குத் தண்ணீரும் கிடைக்கிறது!” என்றவர்,
”இந்த பேசிலஸ் பாக்டீரியா ஒன்றும் குதிரைக் கொம்பு அல்ல… குதிரை
சாணத்தில் இருந்துதான் பிரித்து எடுக்கப்படுகிறது” என்று சிரிப்போடு
சொன்னவர், ”இந்த பாக்டீரியா கிடைக்காதவர்கள், குதிரை சாணத்தையே கூட
பயன்படுத்தலாம். ஒரு முறை இந்த பாக்டீரியாவை போட்டாலே போதும். அது பெருகி
வளர்ந்து கொண்டே இருக்கும். மொத்தத்தில், இந்த பாக்டீரியாக்கள் சம்பளம்
வாங்காத சுத்திகரிப்பு தொழிலாளர்கள்!” என்றார் புன்னகையுடன்.
பளிங்கு நீராக பளிச்சிடும் கழிவுநீர் !“வீட்டில் உள்ள குளியல் அறை, கழிவறை, சமையல் அறை ஆகியவற்றில் இருந்து வெளியே செல்லும் நீரில் ரசாயனங்கள் கலந்து இருக்கும். அவற்றை அப்படியே செடி, கொடிகளுக்குப் பாய்ச்சினால்… அவை பாதிப்படையும். அதேசமயம், இந்த நீரை எளிய முறையில் சுத்திகரித்துவிட முடியும். அதைப் பயன்படுத்தினால் செடி, கொடிகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது” என்று சொன்ன இந்திரகுமார் அதைப் பற்றியும் விளக்கினார்.”நீளம், அகலம், ஆழம் அனைத்தும் மூன்று அடி அளவுள்ள ஒரு சிமென்ட் தொட்டியின் வழியாக கழிவுநீர் செல்வது போல் அமைக்க வேண்டும். தொட்டியின் அடிபாகத்தில் தண்ணீர் வெளியேற துளை இருக்க வேண்டும். தொட்டியில் நீரை விடுவதற்கு முன்பு, மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றை பாதி அளவுக்கு நிரப்பி, அதில் கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நடவு செய்யவும். ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும். கல்வாழை செடிகள் சுத்திகரிக்கப்பட்ட நீர் தொட்டியின் கீழ்ப் பகுதிக்குச் செல்ல உதவும். தொட்டியில் நீரை விட்ட ஒரு மணி நேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வரத் தொடங்கும். இப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரில் செடி, கொடிகள் ஜோராக வளரும்!” |
-பொன்.செந்தில்குமார், படங்கள் கே.கார்த்திகேயன்
|
நன்றி: அவள் விகடன் |