ஒரு மனிதர் வாழ்நாள் முழுவதும் நேர்மையாகப் பணியாற்றி சம்பாதித்த ஓய்வூதியத்தைக்கூட, அவர் நேசித்த ஒருவருக்கு வழங்குவதற்கு அரசு மறுத்தால், அது சட்டத்தின் பிரச்சினையா அல்லது சமூகத்தின் பாரபட்சமா?
இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு, காதல், மரணம், சமத்துவம், மனித உரிமை ஆகியவற்றை அரசியல் மற்றும் சமூகப் போராட்டத்துடன் இணைக்கும் அழுத்தமான படைப்பு சிந்தியா வேட் இயக்கிய 40 நிமிட ஆங்கில ஆவணப்படமான ஃப்ரீஹெல்ட் Freeheld (2007).
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக 25 ஆண்டுகள் பணியாற்றிய லாரல் ஹெஸ்டர், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் ஓராண்டு மட்டுமே உயிருடன் இருப்பார் என்ற மருத்துவ நிலையை எதிர்கொள்கிறார்.
தனது மரணத்திற்குப் பிறகு, ஐந்து ஆண்டுகளாகத் தன்னுடன் குடும்பமாக வாழ்ந்துவரும் வாழ்க்கைத்துணை ஸ்டேசி ஆண்ட்ரீக்கு தனது ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்பதே அவரது கடைசி விருப்பம்.
ஆனால், ஓஷன் கவுண்டி நிர்வாகம் ஒரே பாலின வாழ்க்கைத்துணைக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க மறுக்கிறது.
இதனால், தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படைப் பாதுகாப்புக்கான கோரிக்கை, சமத்துவத்திற்கான பொதுப் போராட்டமாக மாறுகிறது.
2004ஆம் ஆண்டு நியூ ஜெர்சி மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட Domestic Partnership Benefits and Obligations Act, மாநில அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களைத் தங்களின் ஒரே பாலின வாழ்க்கைத்துணைக்கு வழங்குவதற்கு வழிவகுத்திருந்தது.
ஆனால், அந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் ஊழியர்களுக்கு இந்த உரிமையை விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுக்கலாம் என்ற நிலை இருந்தது.
இதைப் பயன்படுத்தி ஓஷன் கவுண்டி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால், லாரலின் தனிப்பட்ட போராட்டம் சட்டத்திற்கும் நிர்வாக அதிகாரத்திற்கும் இடையிலான முரண்பாடாக உருவெடுக்கிறது.
மாநிலத்தின் LGBTQ+ உரிமைகளுக்காகப் போராடும் Garden State Equality அமைப்பு இந்தப் பிரச்சினையைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்கிறது.
ஒவ்வொரு நிர்வாகக் கூட்டத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.
லாரலுடன் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள், அவரது 25 ஆண்டுகால நேர்மையான சேவையையும் துணிச்சலையும் எடுத்துரைத்து, அவர் சம்பாதித்த ஓய்வூதியத்தை அவரது வாழ்க்கைத்துணைக்கு வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அவரது முதல் காவல்துறைப் பணித்துணையான டேன் வெல்ஸ், இனவெறி காலத்தில் அமெரிக்காவில் நிலவிய தனித்தனி குடிநீர்க் குழாய்கள் மற்றும் பேருந்தின் பின்பகுதியில் அமர வைக்கப்பட்ட கறுப்பின மக்களின் அவலத்துடன் இந்தப் பாகுபாட்டை ஒப்பிடுகிறார்.
இத்தகைய ஒப்பீடு, பாலின அடையாளத்தின் அடிப்படையில் உருவாகும் உரிமை மறுப்பின் சமூகத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
ஆனால், நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோசப் விகாரி, லாரலின் நிலை தங்களுக்கு வேதனையளிப்பதாகக் கூறியபோதும், சட்டமன்றத்தின் அதிகாரம் காரணமாகத் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூட்டத்தை முடிக்க முயல்கிறார்.
அதற்கு எதிராக மக்கள், அதிகாரம் நிர்வாகத்திடமே இருக்கிறது என்று முழக்கமிடுகின்றனர். செய்தியாளர்கள் டான் பென்னட், மார்கரெட் பொனாஃபைட் ஆகியோர் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து ஆராய்கின்றனர்.
நிர்வாக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை முன்வைப்பதையும், தொழிற்சங்க ஒப்பந்தம், திருமணத்தின் புனிதத்தன்மை போன்ற வாதங்களைப் பயன்படுத்தி முடிவைத் தள்ளிப்போடுவதையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
இதற்கிடையில், லாரலும் ஸ்டேசியும் தங்களுடைய வீட்டையும் எதிர்காலத்தையும் காப்பாற்றப் போராடுகின்றனர்.
வாகனப் பழுதுபார்ப்புத் தொழிலில் ஈடுபடும் ஸ்டேசியின் வருமானம், லாரலின் மரணத்திற்குப் பிறகு வீட்டைத் தனியாகப் பராமரிப்பதற்குப் போதுமானதாக இருக்காது.
புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவச் செலவுகளும் இருவரையும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுகின்றன. லாரல் ஒரு முக்கியமான முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறார்:
அவர்கள் எதிர்பாலினத் தம்பதியாக இருந்திருந்தால், இந்த ஓய்வூதியத்தைப் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவருக்கு, ஸ்டேசியுடன் செலவிடும் நேரமும் தனக்குரிய உரிமையைப் பெற்றுத்தரும் நீதிப் போராட்டமுமே முக்கியமாக இருக்கின்றன.
இந்தப் போராட்டத்தில் லாரலுக்கு ஆதரவாக நிற்பவர்களில் டேன் வெல்ஸின் மாற்றம் குறிப்பிடத்தக்கது. தன்னைப் பழமைவாதியாகவும் குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பவராகவும் அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர், முன்பு பாலினச் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து அதிகம் சிந்தித்ததில்லை.
ஆனால், லாரலின் நிலை அவருடைய பார்வையை மாற்றுகிறது. காவல்துறையில் பணியில் சேர்ந்தபோதே லாரல் ஓரினச்சேர்க்கையாளர் என்பது உயர் அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தாலும், அந்த அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.
தனது பாலின அடையாளத்தைவிடப் பணித்திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்த அவர், இப்போது அதே சமூகத்தின் முன் தனது அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
முன்னாள் காவல்துறைத் தலைவர் டிக் சினெரியும் அவரது பணித்திறனையும் துணிச்சலையும் நினைவுகூர்ந்து ஆதரவு தெரிவிக்கிறார்.
போராட்டம் தீவிரமடையும் நேரத்தில் லாரலின் உடல்நிலை மேலும் மோசமடைகிறது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் MRI பரிசோதனையில் புற்றுநோய் மூளைக்கும் பரவியிருப்பது தெரியவருகிறது.
கீமோதெரபி சிகிச்சையால் அவரது தலைமுடி உதிரத் தொடங்குகிறது. ஸ்டேசி அவரது தலைமுடியை மழித்து உதவுகிறார்; பின்னர் லாரலும் ஸ்டேசியின் தலைமுடியை மழிக்கிறார்.
ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் இந்தச் சிறிய குடும்பத் தருணம், ஆவணப்படத்தின் உணர்ச்சிகரமான பகுதிகளில் ஒன்றாக அமைகிறது.
அதேசமயம், மருத்துவச் செலவுகளுக்கான தவணை ஏற்பாடுகளைச் செய்வதும், வாழ்க்கைத்துணையின் உடல்நிலையைப் பார்த்துக்கொள்வதும் ஸ்டேசியின் அன்றாடப் போராட்டமாகத் தொடர்கிறது.
இதற்கிடையில், நியூ ஜெர்சியின் ஆறு மாவட்டங்கள் தங்களுடைய ஊழியர்களின் ஒரே பாலின வாழ்க்கைத்துணைகளுக்கும் ஓய்வூதியப் பலன்களை வழங்க முடிவெடுக்கின்றன.
இதனால் ஓஷன் கவுண்டி நிர்வாகத்தின் மறுப்பு மேலும் தனிமைப்படுத்தப்படுகிறது. நிதி நெருக்கடியே தங்களது முடிவுக்குக் காரணம் என்று நிர்வாகம் வாதிட்டாலும், அந்தக் காரணம் நம்பகத்தன்மையை இழக்கிறது.
டேன் வெல்ஸ், நிர்வாகக் குழுவில் உள்ள சிலரின் தனிப்பட்ட எதிர்ப்பே மற்றவர்களையும் முடிவெடுக்க விடாமல் தடுக்கிறது என்று கருதுகிறார்.
லாரலின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, மூச்சுவிடுவதற்குக்கூட சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. நேரில் நிர்வாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாததால், காணொளி வழியாகத் தனது கோரிக்கையை முன்வைக்கிறார்.
தனது வாழ்க்கைத்துணைக்கு ஓய்வூதிய உரிமையை வழங்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு, நியாயத்திற்கும் நன்மைக்கும் வழிவகுக்குமாறு நிர்வாக உறுப்பினர்களிடம் வேண்டுகிறார்.
ஆனால், அவர் சிறந்த பணியாளர் என்பதை ஒப்புக்கொண்ட நிர்வாகம், தொழிற்சங்க ஒப்பந்தம் இல்லாமல் ஓய்வூதியப் பலன்களை வழங்க முடியாது என்று மீண்டும் மறுக்கிறது.
பணம் வழங்குவதற்கான வசதி இருந்தும், உரிமையை வழங்க மறுக்கும் இந்த முடிவு நிர்வாகத்தின் அணுகுமுறையைத் தெளிவுபடுத்துகிறது.
வீட்டில் இறுதிக்கட்ட மருத்துவப் பராமரிப்பைப் பெறும் லாரலிடம், ஹாஸ்பிஸ் சமூகப் பணியாளர் கோலீன் மார்கி டோஷ், தற்போது அவருக்கு மிகவும் முக்கியமானது எது என்று கேட்கிறார்.
அதற்கு அவர் ஒரே வார்த்தையில், “ஸ்டேசி” என்று பதிலளிக்கிறார். மரணத்தின் நெருக்கடியிலும் அவருடைய சிந்தனையின் மையமாக இருப்பது தன்னுடைய துணையின் எதிர்காலமே என்பதை இந்தப் பதில் வெளிப்படுத்துகிறது.
பொதுமக்களின் தொடர் போராட்டமும் ஊடகங்களின் கவனமும் அதிகரிக்க, நியூ ஜெர்சி ஆளுநர் ஜான் கோர்சைனும் தலையிடுகிறார்.
இதன் விளைவாக ஓஷன் கவுண்டி நிர்வாகம் அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறது. சக்கர நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஸ்டேசியுடன் லாரலும் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
நிர்வாக உறுப்பினர் ஜான் பார்ட்லெட், இனியும் இந்த நிலையைத் தொடர முடியாது என்று தெரிவிக்கிறார். மாவட்ட ஊழியர்களுக்கும் சட்டத்தின் அடிப்படையில் ஓய்வூதியப் பலன்களை விரிவுபடுத்தும் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது.
கூட்டத்தில் கலந்துகொண்ட நான்கு உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளிக்கின்றனர். தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த ஜான் கெல்லி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, லாரல் செய்தியாளர்களிடம் பேசுகிறார்.
அங்கிருந்த பொதுமக்களும் நிர்வாக உறுப்பினர்களும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
லாரல் தனது வீட்டிற்குத் திரும்பி தைரியமாக மரணத்தை எதிர்கொள்கிறார். அவரது நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஸ்டேசி, டேன் வெல்ஸ் மற்றும் காவல்துறைப் பணித்துணைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
அவர் மறைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, நியூ ஜெர்சி உச்ச நீதிமன்றம் ஒரே பாலினத் தம்பதிகளுக்கும் எதிர்பாலினத் தம்பதிகளுக்கு இணையான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறது.
இதன் விளைவாக மாநிலத்தில் சிவில் யூனியன்களைச் சட்டப்பூர்வமாக்க வேண்டிய நிலை உருவாகிறது. தனிப்பட்ட ஓய்வூதிய உரிமைக்காகத் தொடங்கிய போராட்டம், மாநிலத்தின் சட்ட அமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வுடன் நிறைவடைகிறது.
இயக்குநர் சிந்தியா வேட் இந்தப் படத்தை வெறும் அரசியல் போராட்டத்தின் ஆவணமாக உருவாக்கவில்லை. ஒரு பெண்ணின் இறுதிக்கால வாழ்க்கை, அவரது துணையின் அச்சம், சக ஊழியர்களின் ஆதரவு, செய்தியாளர்களின் தொடர் கண்காணிப்பு, நிர்வாகத்தின் மறுப்பு ஆகியவற்றை ஒன்றோடொன்று இணைத்து, தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொதுச் சட்டத்திற்கும் இடையிலான உறவை ஆராய்கிறார்.
நிர்வாகக் கூட்டங்களின் நேரடிக் காட்சிகள், செய்தியாளர்களின் விளக்கங்கள், லாரலுக்கும் ஸ்டேசிக்கும் இடையிலான உரையாடல்கள் ஆகியவை திரைப்படத்தின் கதைசொல்லலை இயல்பாக நகர்த்துகின்றன.
டேவிட் டீக்கின் படத்தொகுப்பு, நிர்வாகத்தின் நீண்டகாலத் தாமதத்தையும் லாரலின் உடல்நிலை வேகமாகச் சரிவதையும் இணையாகக் காட்டி, காலத்தின் அழுத்தத்தை உணரச் செய்கிறது.
சிந்தியா வேடின் ஒளிப்பதிவு, நிகழ்வுகளை அலங்காரமின்றி அணுகுவதால் ஆவணப்படத்தின் நேரடித்தன்மை காக்கப்படுகிறது. ராப் ஸ்விம்மரின் இசையும் காட்சிகளின் உணர்ச்சியைத் தேவையற்ற வகையில் மிகைப்படுத்தாமல் துணைநிற்கிறது.
2007ஆம் ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் விருதைப் பெற்ற இந்த ஆவணப்படம், உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 14 விழா விருதுகளை வென்றது.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற 80வது அகாடமி விருது விழாவில் சிறந்த குறும்பட ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதையும் பெற்றது.
2009ஆம் ஆண்டு GLAAD ஊடக விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் இந்த ஆவணப்படத்தின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு ஜூலியான் மூர், எலியட் பேஜ் நடிப்பில் ஒரு முழுநீளத் திரைப்படமும் வெளியானது.
Freeheld திரைப்படத்தின் மிக முக்கியமான பலம், சமத்துவம் என்ற பெரிய அரசியல் கருத்தை ஒரு மனிதரின் வாழ்வாதாரப் பிரச்சினையாக மாற்றிக் காட்டுவதுதான்.
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற கோட்பாடு, ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு அவரது துணை வீடிழக்காமல் வாழ முடியுமா என்ற அடிப்படையான கேள்வியுடன் இங்கே இணைகிறது.
லாரலின் வாழ்க்கை முடிவடையும் நேரத்தில் கிடைக்கும் நிர்வாக அங்கீகாரம், அவரது தனிப்பட்ட போராட்டத்திற்கு வெற்றியாக இருந்தாலும், அந்த வெற்றியைப் பெறுவதற்காக அவர் செலவிட்ட உடல்நலமும் காலமும் திரும்பக் கிடைப்பதில்லை.
அதுவே இந்த ஆவணப்படத்தின் ஆழமான வலியாகவும் அதன் வரலாற்று முக்கியத்துவமாகவும் நிற்கிறது.
ஒரு மனிதருக்கு உரிய உரிமையை வழங்குவதற்கு அவர் மரணத்தின் விளிம்பை அடையும் வரை காத்திருக்க வேண்டிய சமூகத்தின் மனசாட்சியையே இந்தப் படம் கேள்விக்குள்ளாக்குகிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்மூன்றாம்நூறு
#கீதப்ப்ரியன்ஆவணப்படம்