விண்டர் லைட் Winter Light 1963

கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்ற கேள்வியைவிட, கடவுள் அமைதியாக இருக்கிறார் என்று மனிதன் உணரும் தருணம் எவ்வளவு பயங்கரமானது?

 அந்தக் கேள்வியை உரக்கக் கேட்காமல், பார்வையாளரின் மனதுக்குள் மெதுவாக இறக்கிவைக்கும் திரைப்படம்தான் இங்மர் பெர்க்மனின் விண்டர் லைட் Winter Light. 

1963-ல் வெளியான இந்த 81 நிமிட ஸ்வீடன் திரைப்படம், மதத்தைப் பற்றிய படம் என்ற எளிய அடையாளத்துக்குள் அடங்கிவிடாதது. 

நம்பிக்கை, சந்தேகம், தனிமை, மனித அச்சம், அன்பு, கடவுளின் மௌனம் ஆகியவற்றை மிகக் குறைந்த காட்சிகளிலும் மிக அதிகமான மன அழுத்தத்துடனும் ஆராயும் படைப்பு இது.

பெர்க்மனின் இயக்கத்தின் மிகப் பெரிய பலம், பெரிய சம்பவங்களைத் தேடாமல் மனிதனின் உள்ளுக்குள் இருக்கும் சிறிய அசைவுகளையே நாடகமாக மாற்றுவதில் இருக்கிறது.

 இங்கு வெளிப்புற உலகம் பெரிதாக இயங்குவதில்லை; மனிதர்களின் முகங்களும், மௌனங்களும், தயக்கங்களும், சொல்லப்படாமல் நிற்கும் உணர்ச்சிகளுமே திரைப்படத்தின் உண்மையான இயக்கமாக மாறுகின்றன.

 அதனால் படம் வேகமாகச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் பார்வையாளருக்கு இது மெதுவானதாகத் தோன்றலாம்.

 ஆனால் அந்த மெதுவான நடைதான் கதாபாத்திரங்களின் ஆன்மிகக் குழப்பத்தை நமக்குள் ஊடுருவச் செய்கிறது.

திரைக்கதையை பெர்க்மன் மூன்று அத்தியாயங்களைக் கொண்ட  இசையைப் போன்ற கட்டமைப்பில் உருவாக்கியிருப்பது அதன் இறுக்கத்தை உணரச் செய்கிறது. 

தேவையற்ற கிளைக் கதைகள் இல்லை; ஒவ்வொரு உரையாடலும் மனிதனின் நம்பிக்கையையும் மனநிலையையும் ஆராயும் கருவியாகிறது. 

குறிப்பாக, மதத்தைப் பற்றி பேசும் திரைப்படமாக இருந்தாலும், பதில்களைத் தயாராக வழங்குவதில்லை. 

ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது; அதற்கு இன்னொரு கேள்வி உருவாகிறது. இதனால் பார்வையாளர் திரைப்படத்தைப் பார்ப்பவராக மட்டும் இல்லாமல், தன்னுடைய நம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளும் ஒருவராக மாறுகிறார்.

தோமஸ் எரிக்சன் (குன்னர் ப்யோர்ன்ஸ்ட்ராண்ட்) என்ற பாத்திரத்தில் வெளிப்படும் உள்ளார்ந்த சிக்கல்தான் படத்தின் உணர்ச்சி மையம்.

 ஆனால் அந்தக் கதாபாத்திரத்தைப் பெர்க்மன் நல்லவன்–கெட்டவன் என்ற எளிய அளவுகோலில் உருவாக்கவில்லை. 

அவனுடைய பலவீனங்கள், சுயநலம், அன்புக்கான ஏக்கம், ஆன்மிகத் தடுமாற்றம் ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்படும் மனிதத் தன்மைகளாகவே இருக்கின்றன.

 அதனால் அவனைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் பார்வையாளர் தன்னையே அளவிடத் தொடங்குகிறார்.

மார்த்தா லுண்ட்பெர்க் (இங்க்ரிட் துலின்) பாத்திரமும் அதே அளவு சிக்கலானது. அவள் வெறும் காதல் பாத்திரமாக எழுதப்படவில்லை. 

அன்பு என்பது மற்றொருவரை மாற்றிவிடும் சக்தியா, அல்லது பதில் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து அன்பு செலுத்தும் மனித இயல்பா என்ற கேள்வியை அவளுடைய இருப்பு எழுப்புகிறது. 

இவ்வாறு முக்கியமான ஒவ்வொரு பாத்திரமும் ஒரு குறிப்பிட்ட கருத்தின் பிரதிநிதியாக இல்லாமல், தனித்தனி வேதனைகளும் தேவைகளும் கொண்ட மனிதர்களாக நிற்கின்றனர்.

நடிப்பில் மிகப்பெரிய சிறப்பு வெளிப்படையான உணர்ச்சிப் பெருக்கைத் தவிர்ப்பதுதான்.

 முகத்தில் தோன்றும் சிறிய மாற்றம், குரலில் ஏற்படும் இடைவெளி, கண்களின் பார்வை, நீண்ட மௌனம் ஆகியவற்றின் வழியே உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன.

 குறிப்பாக தோமஸின் உள்மனக் குழப்பத்தை குன்னர் ப்யோர்ன்ஸ்ட்ராண்ட் மிகக் கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பால் உருவாக்குகிறார்.

 பார்வையாளரை நோக்கி “இந்த மனிதன் இப்போது இப்படித்தான் உணர்கிறான்” என்று படம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல், அதை நாமே உணரும்படி செய்கிறது.

ஸ்வென் நிக்விஸ்டின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்தின் தனித்துவத்தை மேலும் உயர்த்துகிறது.

 குளிர்ச்சியான, இயற்கையான ஒளி, தேவாலயத்தின் வெறுமையான பரப்பு, மனித முகங்களைத் தெளிவாகப் பதிவு செய்யும் நெருக்கமான காட்சிகள் ஆகியவை சேர்ந்து ஒரு காட்சியுலகை உருவாக்குகின்றன. 

ஒளி இங்கே வெறும் காட்சியைப் பார்க்க உதவும் தொழில்நுட்பம் அல்ல; கதாபாத்திரங்களின் மனநிலையோடு இணைந்த திரைப்பட மொழியாக மாறுகிறது. 

அதிகப்படியான அலங்காரமின்றி உருவாக்கப்பட்ட இந்தப் படங்களின் கடுமையான எளிமை, மனித முகத்தைத் தானே ஒரு காட்சியாக மாற்றுகிறது.

படத்தொகுப்பும் இதே கட்டுப்பாட்டைப் பின்பற்றுகிறது. காட்சிகளை வேகமாக வெட்டி உணர்ச்சியைத் தூண்டுவதற்குப் பதிலாக, பார்வையாளருக்கு ஒரு தருணத்துக்குள் தங்குவதற்கான இடத்தை அளிக்கிறது. 

அதனால் ஒரு பார்வை, ஒரு மௌனம், ஒரு உரையாடலின் இடைவெளி ஆகியவை வழக்கத்தைவிட அதிக எடையைப் பெறுகின்றன. 

படம் நம்மைத் தொடர்ந்து இழுத்துச் செல்லவில்லை; நாமே அதற்குள் சென்று பார்க்க வேண்டிய சூழலை உருவாக்குகிறது.

இசையில், திரைப்படத்தில் தனிப்பட்ட பின்னணி இசை இல்லாதது மிகவும் குறிப்பிடத்தக்க முடிவு. 

தேவாலய ஆர்கன் இசை மட்டுமே இசை உலகின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இதனால் காட்சிகளின் உணர்ச்சியை இசை கட்டுப்படுத்துவதில்லை.

 மாறாக, மௌனம், குரல்கள், தேவாலயத்தின் இயற்கையான ஒலிகள் ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

 இதன் விளைவாக படம் பார்ப்பதைக் காட்டிலும் கேட்பதிலும் ஒரு தனியான அனுபவத்தை உருவாக்குகிறது.

கலை இயக்கத்திலும் ஆடை வடிவமைப்பிலும் பெர்க்மன் ஆடம்பரத்தைத் தவிர்க்கிறார்.

 சாதாரண உடைகள், எளிமையான தேவாலயச் சூழல், கிராமப்புற ஸ்வீடனின் இயல்பான பின்னணி ஆகியவை திரைப்படத்திற்கு அலங்காரமற்ற நிஜத்தன்மையைத் தருகின்றன.

 தேவாலயம் ஒரு மதக் கட்டிடமாக மட்டுமல்லாமல், மனிதனின் நம்பிக்கையும் சந்தேகமும் நேருக்கு நேர் நிற்கும் மனவெளியாக மாறுகிறது.

காலப்பின்னணியும் படத்தின் மனநிலைக்கு முக்கியமானது. அணு ஆயுதப் போட்டி உலகளாவிய அச்சத்தை உருவாக்கியிருந்த காலகட்டத்தில், மனித வாழ்க்கையின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் தனிப்பட்ட ஆன்மிக நெருக்கடியையும் பெர்க்மன் இணைக்கிறார்.

 ஆனால் இதை அரசியல் திரைப்படமாக மாற்றாமல், உலகின் பெரும் அச்சம் ஒரு தனி மனிதனின் உள்ளத்தில் ஏற்படுத்தும் அதிர்வாகவே அணுகுகிறார். 

இதுவே 1963-ல் உருவான படமாக இருந்தாலும், இன்றைய பார்வையாளருக்கும் அது அந்நியமாகத் தெரியாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று.

பெர்க்மனின் திரைப்பட மொழியில் மிக முக்கியமான அம்சம், “கடவுள் இருக்கிறாரா?” என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் அல்ல; 

அந்தக் கேள்வியுடன் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்துவதுதான். 

இப்படைப்பு மதநம்பிக்கையைப் பிரச்சாரம் செய்யவும் இல்லை; அதைக் கேலி செய்யவும் இல்லை. 

நம்பிக்கை உடையும் தருணத்தையும், மனிதன் அதற்குப் பிறகு தன்னை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதையும் மிக நேர்மையாக அணுகுகிறது. 

இதனால் மத நம்பிக்கை உள்ளவருக்கும், அதில் நம்பிக்கை இல்லாதவருக்கும், ஆன்மிகக் கேள்விகளில் ஒருபோதும் ஈடுபடாதவருக்கும் கூட வெவ்வேறு விதமான சிந்தனைகளைத் தூண்டக்கூடிய படமாகிறது.

மனிதநேயத்தின் கோணத்தில் பார்த்தால், படம் கடவுளைப் பற்றிய கேள்வியை மனிதர்களுக்கிடையேயான அன்பின் கேள்வியிலிருந்து பிரிக்கவில்லை. 

ஒருவரை நேசிப்பது, அவரை காப்பாற்ற முடிவது, மற்றொருவரின் துயரத்தை உண்மையில் புரிந்துகொள்வது போன்ற அடிப்படை மனித அனுபவங்களே இங்கே ஆன்மிகக் கேள்விகளுடன் கலக்கின்றன. 

அதனால் படம் தத்துவ விவாதமாக மட்டுமே நிற்காமல், மிகவும் தனிப்பட்ட உணர்ச்சி அனுபவமாக மாறுகிறது.

திரைப்படத்தின் தனித்துவம் அதன் “குறைவு”களில்தான் இருக்கிறது. குறைந்த நேரம், குறைந்த கதாபாத்திரங்கள், குறைந்த இடங்கள், குறைந்த இசை, குறைந்த காட்சியழகு—ஆனால் மிகப்பெரிய கேள்விகள். எதையும் பெரிதாக்கிக் காட்டாமல், எளிமையைப் பயன்படுத்தி உணர்ச்சியின் ஆழத்தை அதிகரிப்பது பெர்க்மனின் கலைத்திறன்.

 அதனால்தான் இந்தப் படம் பார்வையாளரை மகிழ்விக்க முயலும் திரைப்படமாக இல்லாமல்,  அமைதியாக உட்கார வைத்து சிந்திக்கச் செய்யும் திரைப்படமாகிறது.

உலகளாவிய விமர்சன வரவேற்பிலும் இப்படைப்புக்கு முக்கியமான இடம் கிடைத்தது.

 அமெரிக்க விமர்சனங்கள் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், அதன் காட்சியமைப்பு, சிந்தனையின் தீவிரம், நடிப்பு ஆகியவை தொடர்ந்து பாராட்டப்பட்டன. 

1963-ஆம் ஆண்டில் தேசிய விமர்சக வாரியத்தின் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றது;

 பின்னர் Cahiers du Cinéma ஆண்டின் சிறந்த பத்து திரைப்படங்களில் மூன்றாவது இடத்தை வழங்கியது. 

ரோஜர் ஈபர்ட் இதை தனது “Great Movies” பட்டியலில் சேர்த்து அதன் கடுமையான எளிமையையும் ஆழமான சக்தியையும் பாராட்டினார். 

பெர்க்மனே தன் திரைப்படங்களில் இதை மிகவும் விரும்பிய படைப்பாகக் குறிப்பிட்டிருப்பதும் அதன் தனித்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

Winter Light அனைவருக்கும் எளிதாக ரசிக்கக்கூடிய திரைப்படம் அல்ல. 

ஆனால் சினிமா என்பது வெறும் கதையைச் சொல்லும் கருவி அல்ல; மனிதனின் உள்ளே பதில் இல்லாமல் கிடக்கும் கேள்விகளையும் திரையில் உயிர்ப்பிக்க முடியும் என்பதை அறிய விரும்புபவர்களுக்கு இது தவிர்க்க முடியாத அனுபவம்.

 படம் முடிந்த பிறகும் அதன் கேள்விகள் முடிவதில்லை. படம் முடிந்த பின் கதையை நினைவுகூர்வதைவிட, “நான் நம்புவது என்ன?”, “நான் நேசிப்பது உண்மையில் என்ன?”, “பதில் கிடைக்காதபோது மனிதன் எதைப் பற்றிப் பிடித்துக்கொள்கிறான்?” என்ற கேள்விகள் மனதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்.

 அதுவே இப்படத்தை பார்க்கப்பட வேண்டியதன் மிகப்பெரிய காரணம், இப்படத்தை பார்த்த பிறகு எம்.டி.வாசுதேவன் உருவாக்கிய மிகவும் அர்த்தமுள்ள காத்திரமான படைப்பு தான் "நிர்மால்யம் ".

===============================
படத்தின் கதை:-

ஸ்வீடனின் கிராமப்புறத்தில் உள்ள ஒரு சிறிய தேவாலயத்தில் மதிய நேரப் பிரார்த்தனை முடிவடைகிறது.

 அங்கு வழக்கம்போல் கூட்டம் பெரிதாக இல்லை; சிலர் மட்டுமே வந்திருக்கிறார்கள். அவர்களில் மீனவர் ஜோனஸ் பெர்சன் (மேக்ஸ் வான் சிடோ), அவரது கர்ப்பிணி மனைவி கரின் பெர்சன் (குன்னெல் லிண்ட்ப்லோம்), மேலும் தேவாலயப் பாதிரியாரான தோமஸ் எரிக்சனின் (குன்னர் ப்யோர்ன்ஸ்ட்ராண்ட்) முன்னாள் காதலியும், தற்போது ஆசிரியையாக இருப்பவருமான மார்த்தா லுண்ட்பெர்க் (இங்க்ரிட் துலின்) ஆகியோர் இருக்கிறார்கள்.

பிரார்த்தனை முடிந்ததும், உடல்நிலை சரியில்லாமல் சளி பிடித்திருந்தாலும் தோமஸ், வேறொரு ஊரில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவிருக்கும் அடுத்த பிரார்த்தனைக்குச் செல்லத் தயாராகிறார். 

ஆனால் அதற்கு முன்பு ஜோனஸும் கரினும் அவரைச் சந்திக்க வருகிறார்கள்.

 அண்மையில் சீனா அணுகுண்டை உருவாக்கி வருவதாகக் கேள்விப்பட்டதிலிருந்து ஜோனஸ் கடுமையான மனவேதனையில் இருக்கிறான்.

 உலகமே அழிவை நோக்கிச் செல்கிறது என்ற பயம் அவனை ஆட்கொண்டிருக்கிறது.

 அவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்ள முயலும் தோமஸ் அவனிடம் சிறிது நேரம் பேசுகிறார். 

ஆனால் உடனடியாக அவனுக்கு என்ன ஆலோசனை கூறுவது என்று தோமஸுக்கே தெரியவில்லை. 

எனவே, முதலில் மனைவியை வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டுவிட்டு மீண்டும் தனியாக வரும்படி ஜோனஸிடம் கூறுகிறார்.

ஜோனஸும் கரினும் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்திலேயே மார்த்தா தோமஸிடம் வருகிறாள்.

 அவள் தோமஸை மிகவும் நேசிக்கிறாள். ஆனால் தோமஸ் அவளிடம் காட்டும் அக்கறை குறைந்து வருவதால் அவள் வேதனையில் இருக்கிறாள்.

 அவள் முன்பு தோமஸுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள்; அதை அவர் படித்தாரா என்று கேட்கிறாள். 

தோமஸ் இன்னும் அந்தக் கடிதத்தைப் படிக்கவே இல்லை. ஜோனஸின் துயரத்தைப் போக்குவதற்குக்கூட தன்னால் முடியவில்லை என்று அவன் மார்த்தாவிடம் கூறுகிறார்.

 அதைவிட மோசமாக, ஜோனஸுக்கு நம்பிக்கையைப் பற்றிப் பேச வேண்டிய தோமஸுக்கே இப்போது எந்த நம்பிக்கையும் இல்லை.

 இப்படிப்பட்ட நிலையில், இன்னொருவருக்கு எப்படி நம்பிக்கையைக் கொடுப்பது என்று அவருக்குத் தெரியவில்லை.

மார்த்தா தனது காதலை வெளிப்படையாகச் சொல்கிறாள். ஆனால் தோமஸ் தன்னை உண்மையில் நேசிப்பதில்லை என்பதையும் அவள் உணர்கிறாள். 

அதனால் மனவேதனையுடன் அங்கிருந்து செல்கிறாள். பின்னர் தோமஸ் அவள் எழுதிய கடிதத்தைப் படிக்கத் தொடங்குகிறார்.

அந்தக் கடிதத்தில் மார்த்தா, தோமஸ் தன்னை எவ்வாறு புறக்கணித்துவருகிறார் என்பதை விரிவாக எழுதுகிறாள்.

 ஒருகாலத்தில் தனது உடலில் ஏற்பட்ட ஒரு தோல் நோய் போன்ற தடிப்பால் தனது தோற்றம் மாறியபோது, தோமஸ் தன்னிடம் வெறுப்புடன் நடந்துகொண்டதை அவள் நினைவுகூர்கிறாள். 

அந்த வேதனையான காலத்தில் தோமஸின் மதநம்பிக்கையும் பிரார்த்தனைகளும் தன்னை எந்த வகையிலும் காப்பாற்றவில்லை என்று அவள் கூறுகிறாள். 

மதம் இல்லாமலேயே தன் குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் நிறைந்திருந்ததாகவும் எழுதுகிறாள். 

அதனால் இயேசுவைப் பற்றிப் பேசும் தோமஸிடம் உண்மையான அன்பும் நம்பிக்கையும் ஏன் இல்லை என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

 கடிதத்தை முழுவதுமாகப் படித்துவிட்டு தோமஸ் சோர்வில் தூங்கிவிடுகிறார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு ஜோனஸ் மீண்டும் திரும்பி வருகிறான். 

அவனுக்கு உதவ வேண்டும் என்ற பொறுப்பு தோமஸுக்கு இருக்கிறது. ஆனால் ஜோனஸிடம் பேசும்போது தோமஸ் அளிக்கும் ஆறுதலும் ஆலோசனையும் தடுமாறுகின்றன. 

இறுதியில் தன்னிடம் நம்பிக்கையே இல்லை என்பதை தோமஸ் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

தோமஸ் தனது பழைய நம்பிக்கையைப் பற்றி ஜோனஸிடம் கூறுகிறார். ஒருகாலத்தில் கடவுள் மனிதர்களை நேசிக்கிறார் என்று நம்பியதாகவும், அதில் தன்னையும் குறிப்பாக கடவுள் நேசிக்கிறார் என்று எண்ணியதாகவும் சொல்கிறார்.

 அந்த நம்பிக்கை உண்மையில் கடவுளை விடத் தன்னையே மையமாகக் கொண்ட ஒரு சுயநலமான நம்பிக்கையாக இருந்திருக்கலாம் என்று அவன் இப்போது உணர்கிறார்.

இதற்குப் பின்னால் தோமஸின் கடந்தகால அனுபவம் இருக்கிறது. ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் காலத்தில் லிஸ்பனில் பணியாற்றியபோது, உலகில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் இழைத்த கொடுமைகளை அவர் பார்த்திருக்கிறார். 

மனிதர்களை நேசிக்கும், அவர்களைக் காப்பாற்றும் கடவுள் இருக்கிறார் என்ற தனது நம்பிக்கையுடன் அந்தக் கொடுமைகளை அவனால் ஒத்திசைக்க முடியவில்லை.

 ஆனால் அந்த முரண்பாட்டை எதிர்கொள்ளத் துணியாமல், அவர் அந்தக் கொடுமைகளைப் பற்றியே சிந்திக்காமல் தன்னைத் தானே விலக்கிக்கொண்டார்.

இப்போது ஜோனஸின் அணுகுண்டுப் பயத்தையும், உலகில் மனிதர்களின் கொடுமையையும் எதிர்கொள்ளும்போது, தோமஸின் பழைய நம்பிக்கை முழுவதுமாக உடைந்துவிடுகிறது. 

கடவுள் இல்லை என்று மறுத்துவிட்டால் உலகில் நடக்கும் மனிதக் கொடுமைகளுக்கு எந்த விளக்கமும் தேவைப்படாது என்று அவர் ஜோனஸிடம் கூறுகிறார். 

கடவுள் இல்லையென்றால், மனிதனின் கொடுமை மனிதனுடையதே; அதற்கு மேலிருந்து எந்த அர்த்தத்தையும் தேட வேண்டியதில்லை என்பதே அவருடைய எண்ணமாகிறது.
இதைக் கூறிவிட்டு ஜோனஸ் அங்கிருந்து செல்கிறான்.

 தோமஸ் தேவாலயத்தில் உள்ள சிலுவையின் முன் நிற்கிறார். தன்னை இத்தனை காலமாகப் பிடித்திருந்த நம்பிக்கையிலிருந்து இப்போது விடுதலை பெற்றுவிட்டதாக அவன் அறிவிக்கிறார்.

இந்த உரையாடலை தேவாலயத்தில் மறைந்து நின்று கேட்டுக்கொண்டிருந்த மார்த்தா, தோமஸ் தனது பழைய கடவுள் நம்பிக்கையை விட்டுவிட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறாள்.

 தன்னிடம் தோமஸ் இப்போது நெருக்கமாக வருவார் என்று அவள் நம்புகிறாள். அவனை அணைத்துக்கொள்கிறாள்.

 ஆனால் தோமஸ் அவளுடைய அன்புக்கு மீண்டும் எந்த உணர்ச்சிப்பூர்வமான பதிலும் அளிக்கவில்லை.

அந்த நேரத்தில் விதவை மக்டலீனா லெட்ஃபோர்ஸ் (எல்சா எபெசென்) அங்கு வந்து ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்கிறாள். 

சிறிது நேரத்துக்கு முன்பு அங்கிருந்து சென்ற ஜோனஸ், துப்பாக்கியால் தன்னையே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறான்.

தோமஸ் உடனடியாக அந்த இடத்துக்குச் செல்கிறார். அங்கு காவல்துறையினர் ஜோனஸின் உடலை மூடுவதற்கு உதவுகிறார். 

அவர் அதிர்ச்சியில் வெளிப்படையாக எந்த உணர்ச்சியையும் காட்டாமல், அமைதியாக அந்தப் பணியில் ஈடுபடுகிறார். 

மார்த்தாவும் நடந்ததை அறிந்து நடந்தே அங்கு வந்து சேர்கிறாள். பின்னர் இருவரும் மார்த்தாவின் வீட்டை நோக்கிச் செல்கிறார்கள்.

 சளி பிடித்திருக்கும் தோமஸுக்கு மருந்து எடுத்துக்கொள்ள மார்த்தா தனது வீட்டுக்குள் வரும்படி அழைக்கிறாள்.

மார்த்தாவின் வீட்டுடன் இணைந்திருக்கும் அவளுடைய வகுப்பறையில் இருவரும் இருக்கும்போது, தோமஸ் திடீரென்று அவள்மீது கடுமையாகப் பேசத் தொடங்குகிறார். 

முதலில், அவர்களுடைய உறவைப் பற்றி ஊரில் பரவும் பேச்சுகளால் தான் சோர்ந்து போயிருந்ததாகவும், அதனால்தான் அவளை நிராகரித்ததாகவும் கூறுகிறார். ஆனால் இதைக் கேட்டும் மார்த்தாவின் காதல் குறையவில்லை.

அதனால் தோமஸ் இன்னும் கொடூரமாகப் பேசுகிறார். மார்த்தாவின் பிரச்சினைகளாலும், தன்னைப் பார்த்துக்கொள்ள அவள் தொடர்ந்து முயல்வதாலும், அவள் இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பதாலும் தான் சோர்ந்துவிட்டதாகக் கூறுகிறார். 

மேலும், தன் மறைந்த மனைவியுடன் மார்த்தாவை ஒப்பிடுகிறார். தான் உண்மையாக நேசித்த ஒரே பெண் தனது மனைவிதான் என்றும், அந்த இடத்தை மார்த்தா ஒருபோதும் அடைய முடியாது என்றும் கூறுகிறார்.

இந்த வார்த்தைகள் மார்த்தாவை கடுமையாகப் பாதிக்கின்றன. இருந்தாலும் அவள் தோமஸை விட்டுவிடவில்லை. ஜோனஸின் வீட்டுக்குச் சென்று அவனது மனைவியிடம் நடந்ததைத் தெரிவிக்க அவருடன் செல்ல சம்மதிக்கிறாள்.

இருவரும் ஜோனஸ்–கரின் வீட்டை அடைகிறார்கள். ஜோனஸ் தற்கொலை செய்துகொண்ட செய்தி கரினுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 கணவனை இழந்த அதிர்ச்சியையும், இனி தனது குழந்தைகளுடன் வாழ்க்கையை எப்படித் தொடர்வது என்ற பயத்தையும் தாங்க முடியாமல் கரின் படிக்கட்டுகளில் சரிந்து விழுகிறாள். 

தன் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்று அவள் வேதனையுடன் கேட்கிறாள். தோமஸ் அவளுக்கு உதவுவதாக ஒரு முறையான, உணர்ச்சியற்ற உறுதியை மட்டும் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.

இதற்கிடையில் பிற்பகல் மூன்று மணிக்கான பிரார்த்தனை நடைபெற வேண்டிய இரண்டாவது தேவாலயத்துக்கு தோமஸும் மார்த்தாவும் செல்கிறார்கள். 

ஆனால் அங்கு யாரும் வரவில்லை. தேவாலயத்தில் தோமஸைத் தவிர உடல் ஊனமுற்ற பணியாளர் அல்கோட் ஃப்ரோவிக் (அல்லன் எட்வால்), தேவாலய இசைக்கலைஞர் ஃப்ரெட்ரிக் ப்லோம் (ஒலோஃப் தூன்பெரி) ஆகிய இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.

தோமஸ் உடைமாற்றும் அறையில் இருக்கும்போது அல்கோட் அவரிடம் இயேசுவின் சிலுவைத் துன்பத்தைப் பற்றிக் கேட்கிறான்.

 இயேசுவின் உடல் அனுபவித்த வேதனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன் என்று அவன் சிந்திக்கிறார். 

அந்த உடல் வேதனை நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆனால் இயேசு தன்னைப் பின்பற்றிய சீடர்களிடமிருந்து தொடர்ந்து மறுப்பையும் துரோகத்தையும் எதிர்கொண்டார். 

இறுதியில் சிலுவையில் இருந்தபோதும் கடவுளிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அல்கோட்டின் கேள்வி மிகவும் நேரடியானது: இயேசு அனுபவித்த உடல் வேதனையைவிட, கடவுள் அமைதியாக இருந்தது இன்னும் மோசமான வேதனையாக இல்லையா? இதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த தோமஸ், அது உண்மைதான் என்று பதிலளிக்கிறார்.

மற்றொரு பக்கத்தில் ஃப்ரெட்ரிக், மார்த்தாவிடம் பேசுகிறான். இந்தச் சிறிய ஊரையும் தோமஸையும் விட்டுவிட்டு அவள் தனது வாழ்க்கையை வாழச் செல்ல வேண்டும் என்று அவன் அறிவுறுத்துகிறான்.

 இல்லையெனில், தங்களுடைய கனவுகள் நசுங்கிப்போனதைப் போல அவளுடைய கனவுகளும் நசுங்கிவிடும் என்று எச்சரிக்கிறான். 

ஆனால் மார்த்தா அவனுடைய அறிவுரையை ஏற்கவில்லை. அவள் அங்கேயே இருந்து பிரார்த்தனை செய்யத் தொடங்க முடிவு செய்கிறாள்.

தேவாலயத்துக்குள் யாரும் வராததால் பிரார்த்தனையை நடத்த வேண்டுமா வேண்டாமா என்று ஃப்ரெட்ரிக்கும் அல்கோட்டும் சந்தேகிக்கிறார்கள். 

இருந்தாலும் தோமஸ் பிரார்த்தனையை நடத்த முடிவு செய்கிறார். யாரும் வரவில்லை என்றாலும் தேவாலய மணிகள் ஒலிக்கப்படுகின்றன.

தோமஸ் பிரார்த்தனையைத் தொடங்குகிறார். வெறிச்சோடிய தேவாலயத்தில் அவர் தனியாகவே வழிபாட்டை நடத்துகிறார். 

அவர் முதலில் புனிதப் பாடலின் வார்த்தைகளை உச்சரிக்கிறார்: “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வவல்லமையுள்ள ஆண்டவரே; வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்திருக்கின்றன.”

அவ்வாறு, கடவுள்மீது இருந்த தனது நம்பிக்கையை இழந்துவிட்டதாகச் சொன்ன ஒரே நாளிலேயே, யாரும் இல்லாத தேவாலயத்தில் தோமஸ் மீண்டும் வழிபாட்டைத் தொடங்குகிறார். 

அவருடைய உள்ளத்தில் நம்பிக்கை மீண்டும் வந்துவிட்டதா, அல்லது கடவுளின் மௌனத்தை ஏற்றுக்கொண்டபடியே தனது கடமையைத் தொடர்கிறானா என்பது தெளிவாகத் தீர்மானிக்கப்படாமல், அவன் வழிபாட்டைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்,இத்தருணத்தில் படம் நிறைகிறது.

#கீதப்ப்ரியன்உலகசினிமா
#கீதப்ப்ரியன்க்ளாஸிக்

பர்ன் ஆஃப்டர் ரீடிங் Burn After Reading 2008

ஒரு சாதாரண மனிதனின் முட்டாள்தனமான முடிவு எவ்வளவு பெரிய குழப்பத்தை உருவாக்க முடியும்? 

அதைவிட சுவாரஸ்யமான கேள்வி—அந்தக் குழப்பத்தைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் தங்களை மட்டும் புத்திசாலிகள் என்று நம்பினால் என்ன ஆகும்?

 இதுதான் Burn After Reading திரைப்படத்தை வித்தியாசமாக அணுக வேண்டிய இடம். 

ஜோயல் கோயன், ஈதன் கோயன் இயக்கிய இந்த 2008ஆம் ஆண்டு கருப்பு நகைச்சுவைத் திரைப்படம், உளவு உலகத்தின் பரபரப்பை எடுத்துக்கொண்டு அதற்குள் இருக்கும் மனிதர்களை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ள மறுக்கும் ஒரு விசித்திரமான நகைச்சுவை உலகத்தை உருவாக்குகிறது.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதையைவிட, கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம். 

ஆஸ்போர்ன் காக்ஸ் (ஜான் மால்கோவிச்), லிண்டா லிட்ஸ்கி (ஃபிரான்சிஸ் மெக்டார்மண்ட்), சாட் ஃபெல்ட்ஹைமர் (பிராட் பிட்), ஹாரி ப்ஃபாரர் (ஜார்ஜ் குளூனி), கேட்டி காக்ஸ் (டில்டா ஸ்வின்டன்), டெட் (ரிச்சர்ட் ஜென்கின்ஸ்)—இவர்கள் யாருமே வழக்கமான திரைப்படக் கதாபாத்திரங்களாக உருவாக்கப்படவில்லை.

 ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிய ஒரு மிகப்பெரிய கற்பனை இருக்கிறது. அந்தத் தன்னம்பிக்கைக்கும் அவர்களின் உண்மையான திறமைக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் நகைச்சுவையின் முக்கிய ஆதாரமாகிறது.

கோயன் சகோதரர்களின் திரைக்கதை இங்கு மிகவும் துல்லியமாக வேலை செய்கிறது.

 உளவு திரைப்படங்களில் பொதுவாக ரகசியம், அறிவுத்திறன், திட்டமிடல், ஆபத்து ஆகியவை மையமாக இருக்கும். 

ஆனால் இந்தப் படம் அந்த மரபையே தலைகீழாகப் பார்க்கிறது. உளவு உலகத்தின் தீவிரமான மொழியும், சாதாரண மனிதர்களின் அற்பமான ஆசைகளும் ஒரே உலகில் மோதும்போது உருவாகும் அபத்தத்தை திரைக்கதை ரசிக்கிறது. 

அதனால் இது வழக்கமான உளவுத் திரைப்படமாக இல்லாமல், உளவுத் திரைப்படத்தின் வடிவத்தைப் பயன்படுத்தும் மனிதர்களைப் பற்றிய கருப்பு நகைச்சுவையாக மாறுகிறது.

கதாபாத்திரங்களின் முட்டாள்தனத்தை வெறுமனே கேலி செய்வது மட்டுமல்ல இந்தப் படத்தின் சிறப்பு.

 அவர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி உருவாக்கிக் கொண்டிருக்கும் கற்பனைகளையும் படம் கவனிக்கிறது. 

ஒருவர் தன்னை முக்கியமான அதிகாரியாகக் கருதலாம்; இன்னொருவர் தனது உடல் தோற்றமே வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சினை என்று நினைக்கலாம்; 

வேறொருவர் தனது காதல் திறமையையும் அறிவையும் மிகைப்படுத்திக் கொள்ளலாம்.

 இந்த மனிதர்களின் சுயமதிப்பீடும் உண்மையும் ஒன்றாகச் சேரும்போது உருவாகும் முரண்பாடு மிகவும் இயல்பான நகைச்சுவையாக மாறுகிறது.

நடிப்பில் குறிப்பாக பிராட் பிட் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். 

சாட் என்ற கதாபாத்திரத்தை அவர் எந்தவிதமான நட்சத்திர கம்பீரமும் இல்லாமல், அளவுக்கு மீறிய உற்சாகத்துடனும் குழந்தைத்தனமான தன்னம்பிக்கையுடனும் அணுகுகிறார். 

அவரது உடல் மொழி, முகபாவனை, பேசும் முறை ஆகிய அனைத்தும் கதாபாத்திரத்தின் அறிவுக்கும் தன்னம்பிக்கைக்கும் இடையிலான வித்தியாசத்தை வெளிப்படுத்துகின்றன. 

அது வெறும் நகைச்சுவை நடிப்பாக இல்லாமல், கதாபாத்திரத்தின் மனநிலையை உடலால் காட்டும் நடிப்பாக இருக்கிறது.

ஜான் மால்கோவிச் ஆஸ்போர்னாக காட்டும் கோபம் இதற்கு முற்றிலும் மாறான சுவையை வழங்குகிறது. 

அவரது வசனங்களின் கடுமை, முகத்தில் தெரியும் எரிச்சல், தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றிய அவநம்பிக்கை ஆகியவை கதாபாத்திரத்தை ஒரே நேரத்தில் பயமுறுத்துவதாகவும் வேடிக்கையாகவும் மாற்றுகின்றன. 

ஃபிரான்சிஸ் மெக்டார்மண்ட் தனது கதாபாத்திரத்தின் ஆசைகளையும் அவசரத்தையும் மிக நேரடியாக வெளிப்படுத்துகிறார். 

ஜார்ஜ் குளூனி வழக்கமான நாயகத்தன்மையை ஒதுக்கிவிட்டு, தன்னையே தீவிரமாக எடுத்துக்கொள்ளும் ஒரு விசித்திரமான மனிதனாக நடிப்பது படத்தின் நகைச்சுவைத் தன்மையை மேலும் உயர்த்துகிறது. 

டில்டா ஸ்வின்டனும் ரிச்சர்ட் ஜென்கின்ஸும் இந்த விசித்திரமான மனிதர்களின் உலகத்திற்கு தனித்துவமான சமநிலையை வழங்குகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் இமானுவல் லுபெஸ்கியின் பணி, இந்தப் படத்தின் அபத்தமான உலகத்தை மிகைப்படுத்தாமல் இயல்பானதாகக் காட்டுகிறது.

 காட்சிகள் ஒரு மிகப்பெரிய உளவு சாகசம் நடைபெறுவது போன்ற பிரம்மாண்டமான தோற்றத்தைத் தொடர்ந்து வற்புறுத்துவதில்லை.

 அதற்கு பதிலாக, கதாபாத்திரங்களின் அன்றாடச் சூழல்களுக்குள் பதற்றத்தையும் நகைச்சுவையையும் வைத்திருக்கிறது. 

இதனால் அசாதாரணமான மனித நடத்தை கூட ஒரு சாதாரண நகர வாழ்க்கையின் பகுதியாகவே தோன்றுகிறது.

படத்தொகுப்பும் திரைக்கதையின் வேகத்தைத் துல்லியமாகக் கட்டுப்படுத்துகிறது. 

பல்வேறு மனிதர்களின் வாழ்க்கைகள் ஒன்றுக்கொன்று அருகில் நகரும்போது, பார்வையாளருக்கு முழு நிலைமையையும் ஒரே நேரத்தில் புரியவைக்காமல், தேவையான அளவு தகவல்களை மட்டும் வழங்குகிறது. 

இந்த அணுகுமுறை படத்தின் நகைச்சுவையை வலுப்படுத்துகிறது. ஒரு கதாபாத்திரம் எதை நம்புகிறது என்பதைப் பார்வையாளர் அறிந்திருப்பதும், அந்த நம்பிக்கை எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்வதும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது.

இசையமைப்பாளர் கார்டர் பர்வெல் உருவாக்கிய இசை இந்தப் படத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று. 

இசை பெரிய உளவு சாகசம் நடைபெறுவது போன்ற முக்கியத்துவத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது; 

ஆனால் திரையில் இருக்கும் மனிதர்களின் செயல்கள் அதற்கேற்ற உயரத்தில் இருப்பதில்லை. 

இந்த முரண்பாடே நகைச்சுவையை உருவாக்குகிறது. ஜப்பானிய தைக்கோ மேளங்களின் பயன்பாடு இசைக்கு ஒரு கனமான, பிரம்மாண்டமான உணர்வைத் தருகிறது. 

அதே நேரத்தில் அந்தப் பிரம்மாண்டம் கதாபாத்திரங்களின் சிறுமையான மனநிலைகளுடன் மோதுவதால் ஒரு விசித்திரமான நகைச்சுவை உருவாகிறது.

காட்சியமைப்பு, உடைகள், அலுவலகங்கள், உடற்பயிற்சி மையம், வீடுகள் போன்ற இடங்களின் வடிவமைப்பு ஆகியவை அனைத்தும் கதாபாத்திரங்களின் தன்மையைச் சொல்லும் கருவிகளாகச் செயல்படுகின்றன. 

குறிப்பாக உடற்பயிற்சி உலகம், உடல் தோற்றம், சமூக அந்தஸ்து, தனிப்பட்ட ஆசைகள் ஆகியவற்றை இணைக்கும் ஒரு சிறிய உலகமாகத் தெரிகிறது.

 அதேபோல் அதிகார அமைப்புகளின் இடங்கள் வேறு வகையான கட்டுப்பாடு மற்றும் தீவிரத்தைக் குறிக்கின்றன.

 இந்த இரண்டு உலகங்களும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானதாகத் தோன்றினாலும், மனிதர்களின் முடிவெடுக்கும் விதத்தில் அவற்றுக்கிடையே எதிர்பாராத ஒற்றுமை இருப்பதை திரைப்பட மொழி உணர்த்துகிறது.

2008ஆம் ஆண்டின் அமெரிக்க சமூகப் பின்னணியில் உருவானாலும், திரைப்படம் ஒரு குறிப்பிட்ட அரசியல் சம்பவத்தை நேரடியாகக் குறிவைத்து உருவாக்கப்படவில்லை என்று கோயன் சகோதரர்கள் கூறியுள்ளனர். 

அவர்களின் கவனம் அரசியல் அமைப்பை விட, தங்களை முக்கியமானவர்களாக நினைத்துக்கொள்ளும் மனிதர்களின் இயல்பின் மீது அதிகமாக இருக்கிறது. 

அதனால் திரைப்படத்தின் நகைச்சுவை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல், மனிதர்களின் பேராசை, பாதுகாப்பின்மை, தன்னம்பிக்கை, அங்கீகாரத் தேவை போன்ற பொதுவான அனுபவங்களுடன் தொடர்பு கொள்கிறது.

இந்தப் படத்தின் மனிதநேயப் பார்வை இனிமையானதல்ல. இங்குள்ள மனிதர்களை படம் அன்புடன் அணுகுகிறதா அல்லது இரக்கமின்றி கேலி செய்கிறதா என்ற கேள்வியே சுவாரஸ்யமானது.

 கதாபாத்திரங்களின் குறைகளை மறைக்காமல் காட்டுகிறது; ஆனால் அதே நேரத்தில் அவர்களுடைய ஆசைகள் முற்றிலும் அந்நியமானவை அல்ல என்பதையும் உணர்த்துகிறது.

 அழகாகத் தோன்ற வேண்டும் என்ற ஆசை, காதலில் வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம், தன்னை மதிக்க வேண்டும் என்ற ஏக்கம், வாழ்க்கையில் முக்கியமானவன் அல்லது முக்கியமானவள் என்ற உணர்வு—இவை எல்லாமே மனிதர்களுக்குப் பொதுவானவை. 

பிரச்சினை அவற்றை அடைவதற்காக மனிதர்கள் எவ்வளவு தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதில்தான்.

கோயன் சகோதரர்களின் இயக்கத்தில் மிக முக்கியமான தனித்துவம், எந்தச் சூழலையும் தேவையற்ற உணர்ச்சிப் பெருக்கால் விளக்க மறுப்பது.

 பார்வையாளரை ஒரு கதாபாத்திரத்தின் பக்கம் நிற்கச் சொல்லுவதில்லை. அதற்குப் பதிலாக, கதாபாத்திரங்களை அவற்றின் இயல்பிலேயே கவனிக்கச் செய்கிறார்கள்.

 இதனால் நகைச்சுவை சில நேரங்களில் மிகவும் உலர்ந்ததாகவும், சில நேரங்களில் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. 

இதுவே Burn After Reading திரைப்படத்தை வழக்கமான நகைச்சுவையிலிருந்து வேறுபடுத்துகிறது.

திரைப்படத்தின் விமர்சன வரவேற்பும் பெரும்பாலும் சாதகமாக இருந்தது. 
ராட்டன் டொமேட்டோஸ் தளத்தில் 248 விமர்சனங்களின் அடிப்படையில் 78 சதவீத ஆதரவு மதிப்பெண்ணையும், மெட்டாகிரிட்டிக்கில் 37 விமர்சகர்களின் அடிப்படையில் 63 மதிப்பெண்ணையும் பெற்றது.

 சில விமர்சகர்கள் இதன் புத்திசாலித்தனமான நகைச்சுவை, நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் மற்றும் இறுக்கமான திரைக்கதை அமைப்பைப் பாராட்டினர்; 

அதே நேரத்தில் சிலர் கதாபாத்திரங்களின் தொடர்ச்சியான முட்டாள்தனம் மற்றும் கசப்பான நகைச்சுவை எல்லா பார்வையாளர்களுக்கும் பிடிக்காது என்றும் குறிப்பிட்டனர். 

அதாவது, இது அனைவரையும் சமமாக மகிழ்விக்கும் வெகுஜன நகைச்சுவை அல்ல; அதன் குறிப்பிட்ட குரலையும் கருப்பு நகைச்சுவையையும் ஏற்றுக்கொள்ளும் பார்வையாளர்களுக்கான படம்.

தேசிய விமர்சகர்கள் வாரியம் 2008ஆம் ஆண்டின் சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலில் இதைச் சேர்த்தது. 

மேலும் பல முக்கிய விருது அமைப்புகளில் சிறந்த திரைக்கதை, நடிப்பு, நகைச்சுவைத் திரைப்படம் போன்ற பிரிவுகளில் பரிந்துரைகள் கிடைத்தன.

 கார்டர் பர்வெலின் இசை சர்வதேச திரைப்பட இசை விமர்சகர்கள் சங்கத்தின் நகைச்சுவைத் திரைப்படத்திற்கான சிறந்த அசல் இசை விருதை வென்றது.

 செயின்ட் லூயிஸ் திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் சிறந்த நகைச்சுவை விருதையும் படம் பெற்றது. 

2008ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பல விமர்சகர் பட்டியல்களிலும் இடம்பெற்றது.

Burn After Reading பார்க்க வேண்டிய காரணம் அதன் கதை என்ன என்பதில் இல்லை; ஒரு தீவிரமான உளவு திரைப்படத்தின் முகமூடியை அணிவித்து, மனிதர்களின் முட்டாள்தனம், தன்னம்பிக்கை, ஆசை, பாதுகாப்பின்மை ஆகியவற்றை எவ்வளவு கூர்மையாக நகைச்சுவையாக மாற்ற முடியும் என்பதில்தான் இருக்கிறது. 

பிரமாண்டமான உளவு இசைக்கும் அற்பமான மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடு, திறமையான நடிகர்களின் துணிச்சலான நடிப்பு, கோயன் சகோதரர்களின் கசப்பான நகைச்சுவை உணர்வு ஆகியவை சேர்ந்து ஒரு வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை உருவாக்குகின்றன.

 படத்தை பார்க்கும்போதுதான் அதன் பல அபத்தங்களும் அதிர்ச்சிகளும் முழுமையாக வேலை செய்யும். 

பார்த்து முடித்த பிறகும், “இவர்கள் உண்மையில் என்ன நினைத்துக்கொண்டிருந்தார்கள்?” என்ற கேள்வி மட்டும் அல்லாமல், “நம்மைப் பற்றிய நம்முடைய மதிப்பீடு எவ்வளவு உண்மையானது?” என்ற கேள்வியும் மனதில் தங்கவைக்கக்கூடிய திரைப்படம் இது.

Burn After Reading என்ற பெயரின் பொருள் “படித்தவுடன் எரித்துவிடு” என்பதே. இது CIA ரகசிய ஆவணங்களில் எழுதப்படும் எச்சரிக்கை வாசகம். படத்தின் உளவு-ரகசியச் சூழலையும், அந்த ரகசியங்களைச் சுற்றி உருவாகும் அபத்தமான குழப்பத்தையும் குறிக்கும் நகைச்சுவையான பொருத்தமான தலைப்பைக் கொண்டிருக்கிறது.

===============================
படத்தின் கதை:-

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் ஆய்வாளரான ஆஸ்போர்ன் காக்ஸ் (ஜான் மால்கோவிச்) குடிப்பழக்கத்தால் பணியில் பதவி இறக்கப்படுவதற்கான நிலைக்கு தள்ளப்படுகிறான் . 

இந்த அவமானத்தை ஏற்க மறுத்து கோபத்தில் தனது வேலையை ராஜினாமா செய்கிறான். 

வேலை இல்லாமல் போன பிறகு, தனது அனுபவங்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகளை எழுதத் தொடங்குகிறான். 

ஆனால் இதற்கிடையில் அவனது மனைவி கேட்டி காக்ஸ் (டில்டா ஸ்வின்டன்), கணவன் பதவி இழந்ததும் அவனிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்கிறாள்.

 அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே திருமணமான அமெரிக்க அரசாங்க அதிகாரியான ஹாரி ப்ஃபாரருடன் (ஜார்ஜ் குளூனி) அவள் ரகசியமாகத் தொடர்பில் இருக்கிறாள். 

ஹாரி பெண்களிடம் தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்ளும் பழக்கமுடையவன்; அதே நேரத்தில் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்ற சந்தேகத்தால் எப்போதும் பதற்றமாகவும் இருக்கிறான்.

விவாகரத்துக்கான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கிய கேட்டி, தனது வழக்கறிஞரின் அறிவுரைப்படி ஆஸ்போர்னின் நிதி விவரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட கணினிக் கோப்புகளின் மின்னணு நகலை வழக்கறிஞரிடம் ஒப்படைக்கிறாள். 

அந்தக் கோப்புகளை குறுந்தகட்டில் நகலெடுக்கும் வழக்கறிஞரின் உதவியாளர், அதில் ஆஸ்போர்ன் எழுதி வந்த நினைவுக் குறிப்பின் ஆரம்ப வடிவமும் இருப்பதை கவனிக்காமல் விடுகிறாள்.

 அந்தக் குறுந்தகட்டைத் தவறுதலாக ஒரு உடற்பயிற்சி மையத்தின் உடை மாற்றும் அறையில் கீழே விட்டுச் செல்கிறாள்.

அந்தக் குறுந்தகடு உடற்பயிற்சி மையத்தில் பணிபுரியும் உடற்பயிற்சி பயிற்சியாளரான சாட் ஃபெல்ட்ஹைமர் (பிராட் பிட்) மற்றும் அவனுடன் பணிபுரியும் லிண்டா லிட்ஸ்கி (ஃபிரான்சிஸ் மெக்டார்மண்ட்) ஆகியோரின் கைகளில் கிடைக்கிறது.

 அவர்கள் அந்தக் குறுந்தகட்டில் இருப்பது ஆஸ்போர்னின் தனிப்பட்ட நினைவுக் குறிப்புகள் என்பதை அறியவில்லை.

 மாறாக, அதில் ஏதோ ரகசியமான அரசு ஆவணங்கள் இருப்பதாக இருவரும் தவறாக நினைக்கிறார்கள். 

குறிப்பாக லிண்டா தனது கிழடு தட்டிய தோற்றத்தை மாற்றிக்கொள்ள சில ப்ளாஸ்டிக் சர்ஜரி அழகு அறுவைச் சிகிச்சைகள் செய்து கொள்ள விரும்புகிறாள்.

 அதற்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்கான வழியாக இந்தக் குறுந்தகட்டை பயன்படுத்தலாம் என்று அவள் கருதுகிறாள். சாடும் கூட அதற்கு உடன்படுகிறான்.

இருவரும் முதலில் குறுந்தகட்டை ஆஸ்போர்னிடம் திருப்பிக் கொடுத்து அதற்குப் பதிலாக பணம் கேட்க முடிவு செய்கிறார்கள். 

தங்களிடம் இருக்கும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்றும், அவற்றை வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டிய நிலை ஆஸ்போர்னுக்கு ஏற்படும் என்றும் நினைத்து, அவனை மிரட்ட முயற்சிக்கிறார்கள்.

 ஆனால் ஆஸ்போர்ன் அவர்களின் மிரட்டலால் பயப்படுவதற்குப் பதிலாக கடும் கோபமடைகிறான். 

அவர்களிடம் பணம் கொடுக்க மறுப்பதோடு, அவர்களின் செயல் அவனை மேலும் ஆத்திரப்படுத்துகிறது. 

இதனால் சாட் மற்றும் லிண்டாவின் முதல் முயற்சி தோல்வியடைகிறது.

ஆஸ்போர்னிடமிருந்து பணம் பெற முடியாததால், குறுந்தகட்டில் உண்மையிலேயே அரசாங்க ரகசியங்கள் இருப்பதாக நம்பும் அவர்கள் அதை ரஷ்ய தூதரகத்திடம் விற்றுப் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள். 

அவர்கள் ரஷ்ய அரசாங்க அதிகாரியான கிரபோட்கினைச் சந்தித்து அந்தத் தகவல்களை வழங்குகிறார்கள்.

 அவர்களுக்குத் தெரியாமல், ரஷ்ய தூதரகத்துக்குள் செயல்படும் ஒரு தகவல் வழங்குபவர் அந்தச் சந்திப்பு பற்றிய தகவலை அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் கொண்டு சேர்க்கிறார். 

இதனால் ஆஸ்போர்னின் தனிப்பட்ட நினைவுக் குறிப்புகள் மற்றும் கோப்புகள், உண்மையில் எந்த முக்கியத்துவமும் இல்லாதவை என்றாலும், அமெரிக்க புலனாய்வு அமைப்பின் கவனத்துக்குள் வருகின்றன.

இதற்கிடையில் ஆஸ்போர்னின் நடத்தை மேலும் கட்டுப்பாடற்றதாக மாறுகிறது.

 இதனால் கேட்டி வீட்டின் பூட்டுகளை மாற்றி, ஆஸ்போர்னை வீட்டுக்குள் வரவிடாமல் செய்கிறாள்.

 பின்னர் ஹாரியை தன்னுடன் வந்து வசிக்க அழைக்கிறாள். ஹாரி கேட்டி உடன் நெருக்கமாக இருந்தபோதும், அவனுடைய வாழ்க்கை ஒழுங்காக இல்லை.

 அவன் ஏற்கனவே திருமணமானவன்; இருந்தாலும் பெண்களுடன் புதிய உறவுகளைத் தேடிக்கொண்டே இருக்கிறான். 

இணையத்தில் அறிமுகமாகும் லிண்டாவுடனும் அவனுக்கு காதல் தொடர்பு உருவாகிறது.

 இவ்வாறு ஒருபுறம் ஹாரி கேட்டியுடன் தொடர்பில் இருக்க, மறுபுறம் லிண்டாவுடனும் தொடர்பு வைத்துக்கொள்கிறான்.

ரஷ்யர்களிடம் ஏற்கனவே குறுந்தகட்டில் உள்ள தகவல்களை விட இன்னும் அதிகமான தகவல்கள் தங்களிடம் இருப்பதாக சாட் மற்றும் லிண்டா பொய்யாகச் சொல்லிவிட்டதால், அதை நிரூபிக்க புதிய கோப்புகளைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

இதனால் லிண்டா, ஆஸ்போர்னின் வீட்டுக்குள் சென்று அவனுடைய கணினியில் இருந்து மேலும் கோப்புகளைத் திருடும்படி சாட்டை சம்மதிக்க வைக்கிறாள்.

 சாட் இரவு நேரத்தில் ஆஸ்போர்னின் வீட்டுக்குள் நுழைந்து கணினியில் இருந்து தகவல்களைப் பெற முயற்சிக்கிறான்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஹாரி அங்கு இருக்கிறான். வீட்டுக்குள் யாரோ அத்துமீறி நுழைந்திருப்பதைப் பார்த்த அதிஜாக்கிரதை முட்டாளான ஹாரி, உடனடியாக தனது துப்பாக்கியை இயக்கி வார்ட்ரோபில் இருந்து வெளிப்பட்டு கேணை போல சிரிக்கும் சாட்டை சடுதியில் சுட்டுக் கொல்கிறான்.

 சாட் யார் என்பதையும் அவன் ஏன் அங்கு வந்தான் என்பதையும் ஹாரி அறிந்திருக்கவில்லை. 

சுட்டுக் கொன்ற பிறகு, சாட்டின் உடலில் அவனை அடையாளம் காணக்கூடிய ஏதாவது தகவல் இருக்கிறதா என்று தேடுகிறான்.

 ஆனால் சாட்டின் பணப்பை காலியாக இருக்கிறது; அவனுடைய ஆடைகளில் இருந்த அடையாளக் குறிப்புகளும் இல்லை. 

ஏனெனில் லிண்டாவின் ஆலோசனைப்படி, பிடிபட்டால் தங்களை அடையாளம் காண முடியாதபடி சாட் அவற்றை முன்கூட்டியே அகற்றியிருக்கிறான். 

இதனால் ஹாரி, சாட் ஒரு சாதாரண உடற்பயிற்சி மைய ஊழியர் என்பதை அறியாமல், அவன் ஏதோ ரகசிய அரசாங்கப் பணியில் இருந்த உளவாளி என்று தவறாக முடிவு செய்கிறான்.

அதே நேரத்தில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் தலைமையகத்தில், ஆஸ்போர்னின் முன்னாள் மேலதிகாரியான பால்மர் டிபேக்கி ஸ்மித் மற்றும் அவருடைய மேலதிகாரி, ஆஸ்போர்னிடமிருந்து கிடைத்த தகவல்கள் ரஷ்ய தூதரகத்திடம் சென்றிருப்பதை அறிகிறார்கள்.

 ஆனால் அவர்களுக்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்படுகிறது. ஆஸ்போர்னின் தகவல்களில் அரசாங்கத்திற்கு எதிரான முக்கியமான ரகசியம் எதுவும் இல்லை. 

அந்தத் தகவல்களை யாராவது ஏன் திருட வேண்டும் என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை.

 சாட்டின் மரணம் பற்றியும் அவர்கள் அறிகிறார்கள். இந்த விஷயத்தில் கூட்டாட்சி புலனாய்வு அமைப்பைச் சேர்த்தால் தங்களுக்கிடையேயான அதிகாரப் போட்டி பிரச்சினையாகிவிடும் என்று கருதுவதால், சாட்டின் மரணத்தை மறைத்து விடுமாறு மேலதிகாரி உத்தரவிடுகிறார்.

இதற்கிடையில் ஹாரிக்கு தன்னை யாரோ பின்தொடர்கிறார்கள் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

 இறுதியில் அவன் அந்த நபரைப் பிடித்து எதிர்கொள்கிறான். அவன் உண்மையில் ஹாரியைப் பின்தொடரும் அரசாங்க உளவாளி அல்ல; ஹாரியின் மனைவி விவாகரத்துக்காக நியமித்த வழக்கறிஞரிடம் பணிபுரியும் ஒருவன் என்பது தெரியவருகிறது. 

இதனால் ஹாரி மேலும் மனமுடைந்து போகிறான். அந்த நேரத்தில் சாட் காணாமல் போனதால் கவலையில் இருக்கும் லிண்டாவை அவன் சந்திக்கிறான். 

சாட் எங்கே போனான் என்பதைத் தேடித் தர உதவுவதாக ஹாரி ஒப்புக்கொள்கிறான். ஆனால் சாட்டை ஏற்கனவே தான்தான் சுட்டுக் கொன்றுவிட்டதை அவன் அறியவில்லை.

சாட் ரஷ்யர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தவறாக நினைக்கும் லிண்டா, மீண்டும் ரஷ்ய தூதரகத்துக்குச் செல்கிறாள். 

அங்கு சாட் பற்றிக் கேட்கிறாள். ஆனால் ரஷ்ய அதிகாரிகள் சாட்டைத் தாங்கள் கடத்தவில்லை என்று தெரிவிக்கிறார்கள். 

மேலும் லிண்டா அவர்களிடம் கொடுத்திருந்த குறுந்தகட்டில் உள்ள தகவல்கள் எந்தப் பயனும் இல்லாதவை என்பதையும் அவளிடம் சொல்கிறார்கள்.

 ரஷ்யர்களுக்கு பயனுள்ள புதிய தகவல்கள் தேவைப்படுவதால், லிண்டா மீண்டும் முயற்சி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

அதற்காக அவள் தாங்கள் வேலை செய்யும் உடற்பயிற்சி மையத்தின் மேலாளரான டெட் (ரிச்சர்ட் ஜென்கின்ஸ்) என்பவரிடம் உதவி கேட்கிறாள்.

 டெட்டுக்கு லிண்டாவிடம் ஒருதலைப்பட்சமான காதல் இருக்கிறது. அவளுக்காக ஏதாவது செய்யும் வாய்ப்பு கிடைத்ததால், ஆஸ்போர்னின் வீட்டுக்குள் ரகசியமாகச் சென்று மேலும் கோப்புகளைச் சேகரிக்க அவன் சம்மதிக்கிறான்.

 லிண்டாவுக்காக அவன் அந்த ஆபத்தான வேலையைச் செய்யத் தொடங்குகிறான்.

இதற்கிடையில் ஹாரியும் லிண்டாவும் ஒரு பூங்காவில் சந்திக்கிறார்கள். சாட் காணாமல் போனதற்குப் பின்னால் என்ன நடந்தது என்பதை அறிய முயலும் ஹாரியிடம், சாட் காணாமல் போவதற்கு முன்பு சென்றிருந்த முகவரியை லிண்டா கூறுகிறாள். 

அந்த முகவரியை அறிந்தவுடன் ஹாரிக்கு திடீரென்று உண்மை புரிகிறது. அவன் கொன்றவன் சாட்தான் என்பதை உணர்கிறான். 

ஆனால் லிண்டா இதை அறிந்திருக்கிறாளா என்பது அவனுக்குத் தெரியவில்லை. மேலும் லிண்டாவும் ஏதோ ரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறாள் என்று அவன் தவறாக நினைக்கிறான். இதனால் அவளிடமிருந்து தப்பித்து ஓடுகிறான்.

அதே சமயம் ஆஸ்போர்ன் தனது தனிப்பட்ட பொருட்களையும், கேட்டி வீட்டில் வைத்திருக்கும் தனது மதிப்புள்ள பொருட்களையும் திரும்பப் பெறுவதற்காக அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைகிறான். 

அவன் கையில் ஒரு கோடரி இருக்கிறது. வீட்டைத் தேடி கீழ்தளத்துக்குச் செல்லும்போது அங்கு டெட் இருப்பதைப் பார்க்கிறான். 

டெட் ஏன் அங்கு இருக்கிறான் என்பதை அறியாத ஆஸ்போர்ன் அவனைச் சுடுகிறான். டெட் உயிருடன் தப்பி வீட்டை விட்டு வெளியே ஓட முயற்சிக்கிறான்.

 ஆஸ்போர்ன் அவனைத் தொடர்ந்து தெருவுக்கு வருகிறான். இறுதியில் கோடரியால் டெட்டைத் தாக்கிக் கொல்கிறான்.

இந்தச் சம்பவத்தையும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு கண்காணித்துக்கொண்டிருக்கிறது. 

மிகவும் வெளிப்படையாக நடந்த இந்தத் தாக்குதலைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு புலனாய்வு அதிகாரி உடனடியாக தலையிடுகிறான்.

 ஆஸ்போர்னைச் சுட்டு வீழ்த்துகிறான். ஆஸ்போர்ன் உயிருடன் இருந்தாலும், ஆழ்ந்த மயக்கநிலைக்குச் செல்கிறான்;

 அவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையில் சாட்டின் மரணம், ரஷ்யர்களுடனான தொடர்பு, ஆஸ்போர்னின் நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஹாரியை அதிகாரிகள் கைது செய்கிறார்கள். 

அப்போது அவன் வெனிசுவேலாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏற முயற்சிக்கிறான்.

 அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்கும் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் இல்லாததால், ஹாரியை அமெரிக்காவில் வைத்திருந்தால் இந்த முழு குழப்பத்திற்கும் அவனைச் சட்டரீதியாகப் பொறுப்பாக்க வேண்டிய நிலை ஏற்படும்.

 அதனால் அதிகாரிகள் அவனைத் தொடர்ந்து விசாரிப்பதைவிட, அவனை விடுவித்து வெனிசுவேலாவுக்குச் செல்ல அனுமதிப்பதே நல்லது என்று முடிவு செய்கிறார்கள்.

இறுதியில் லிண்டாவும் அதிகாரிகளின் கைகளில் சிக்குகிறாள். ஆனால் தன்னைப் பற்றிய தகவல்களை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருப்பதற்கு பதிலாக, தனக்கு தேவையான அழகு அறுவைச் சிகிச்சைகளுக்கான பணத்தை அதிகாரிகள் கொடுத்தால் இந்த விஷயத்தைப் பற்றி இனி எதுவும் பேசமாட்டேன் என்று ஒப்பந்தம் செய்கிறாள்.

 அதிகாரிகளின் மேலதிகாரி ஏற்கனவே நடந்த சம்பவங்களால் முற்றிலும் குழப்பமடைந்திருக்கிறார். 

எந்த முக்கியமான அரசு ரகசியமும் இல்லாத ஒரு தனிப்பட்ட நினைவுக் குறிப்பைச் சுற்றி இத்தனை சம்பவங்கள் நடந்திருக்கின்றன; 

ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளர் கொல்லப்பட்டிருக்கிறான், ஒரு அப்பாவியான உடற்பயிற்சி மைய மேலாளர் கொல்லப்பட்டிருக்கிறார்,

 ஆஸ்போர்ன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறான், 

ஹாரி நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறான்,

 லிண்டா பணம் கேட்டு ஒப்பந்தம் செய்கிறாள். 

இந்த முழு குழப்பத்திற்கும் எந்தத் தெளிவான அர்த்தமும் இல்லாத நிலையில், லிண்டாவுக்குத் தேவையான அறுவைச் சிகிச்சைக்கான பணத்தை வழங்குவதற்கு அவர் ஒப்புக்கொள்கிறார்.

அதன்பிறகு இந்த விவகாரத்தை மேலும் தொடர வேண்டாம் என்று முடிவு செய்து கோப்பை மூட உத்தரவிடுகிறார். 

இவ்வாறு, ஆஸ்போர்னின் சாதாரணமான நினைவுக் குறிப்புகள் தவறுதலாக ஒரு ரகசிய அரசு ஆவணம் என்று கருதப்பட்டதிலிருந்து தொடங்கிய சம்பவங்கள், சாட்டின் மரணம், டெட்டின் கொலை, ஆஸ்போர்னின் படுகாயம், ஹாரியின் தப்பிப்பு, லிண்டாவின் பணப் பேரம் ஆகியவற்றுடன் முடிவுக்கு வருகின்றன; 

இறுதியில் இந்த முழு குழப்பத்திற்குப் பின்னால் உண்மையான உளவு ரகசியம் எதுவும் இல்லை என்பதோடு அதிகாரிகள் வழக்கையே மூடி விடும் அவலநகைச்சுவை தருணத்தில் படம் நிறைகிறது.

#கீதப்ப்ரியன்உலகசினிமா
#கீதப்ப்ரியன்ஹாலிவுட்சினிமா

பியூடிஃபுல் Biutiful 2010

ஒரு மனிதனுக்கு தனது வாழ்க்கை மிகக் குறுகியதாக இருக்கலாம் என்று தெரிந்துவிட்டால், அவன் உலகத்தைப் பார்ப்பது மாறுமா?

 வாழ்க்கையின் அழகை உணர, அதன் முடிவை நினைவுபடுத்த வேண்டுமா? இந்தக் கேள்விகளைப் பெரிதாகப் பேசாமல், பார்வையாளரின் மனதுக்குள் மெதுவாக விதைக்கும் திரைப்படம்தான் அலெஹான்ட்ரோ கோன்சாலெஸ் இன்யாரிட்டு இயக்கிய பியூட்டிஃபுல் Biutiful.

பார்சிலோனாவின் வழக்கமான சுற்றுலா அழகைத் தவிர்த்து, அதன் விளிம்புகளில் வாழும் மனிதர்களின் உலகத்தை இப்படம் பார்க்கிறது. 

நகரம் இங்கே ஒரு அழகிய பின்னணியாக மட்டும் இல்லை; வறுமை, குடியேற்றம், தனிமை, குடும்பப் பொறுப்பு, சட்டத்திற்குப் புறம்பான வாழ்வாதாரம், மரணம் போன்ற கடினமான மனித அனுபவங்கள் ஒன்றோடொன்று கலக்கும் இடமாக இருக்கிறது.

 அதனால் தலைப்பில் இருக்கும் “Beautiful” என்ற சொல்லின் தவறான ஒலிப்பெயர்ப்பு கூட படத்தின் உலகைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய திறவுகோலாகத் தோன்றுகிறது—அழகு என்பது எப்போதும் அழகான காட்சிகளில் மட்டுமே இருப்பதில்லை.

இயக்குநரின் அணுகுமுறையின் மிகப் பெரிய பலம், மனிதர்களை நல்லவர்–கெட்டவர் என்று எளிதாகப் பிரிக்க மறுப்பதுதான். வாழ்க்கை அவர்களைச் சிக்கலான முடிவுகளுக்குள் தள்ளுகிறது; 

அந்தச் சிக்கலை தீர்ப்பதற்குப் பதிலாக படம் அதை நமக்கு உணரச் செய்கிறது. இதனால் இது ஒரு தனிமனிதனின் துயரத்தைப் பற்றிய படம் என்ற எல்லையைத் தாண்டி, மனிதன் தனது பொறுப்புகளையும் குற்ற உணர்வுகளையும் அன்பையும் எவ்வாறு சுமக்கிறான் என்ற ஆழமான கேள்வியாக மாறுகிறது.

மையக் கதாபாத்திரமான உக்ஸ்பால் (ஹாவியர் பார்டெம்) திரைப்படத்தின் உணர்ச்சி மையம். 

இந்தக் கதாபாத்திரத்தை வெறும் பரிதாபத்திற்குரிய மனிதராக உருவாக்காமல், பல முரண்பாடுகளைக் கொண்ட ஒருவராக நடிப்பு உயிர்ப்பிக்கிறது. 

பார்டெமின் நடிப்பில் அதிகப்படியான நாடகத்தன்மை இல்லை; முகபாவனைகள், உடல் மொழி, மௌனம், பார்வை ஆகியவையே பல நேரங்களில் உரையாடலைவிட அதிகமாகப் பேசுகின்றன. 

அதனால்தான் அவருடைய நடிப்பு பார்வையாளரை கதாபாத்திரத்துக்கு வெளியே நிற்கவிடாமல், அவனுடைய மனநிலைக்கு மிக அருகில் அழைத்துச் செல்கிறது. 

இந்த நடிப்புக்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதும், ஆஸ்கர் மற்றும் பாஃப்டா உள்ளிட்ட முக்கிய விருதுகளிலும் பரிந்துரையும் கிடைத்தது.

திரைக்கதையின் தனித்துவம் அதன் வெளிப்படையான விளக்கங்களில் இல்லை; வாழ்க்கையின் பல அடுக்குகளை ஒரே மனிதனின் அனுபவத்துக்குள் இணைப்பதில்தான் இருக்கிறது.

 குடும்பம், பணம், குடியேற்றம், குற்றம், சமூக அநீதி, ஆன்மிக உணர்வு, மரணம் ஆகியவை தனித்தனி தலைப்புகளாகத் தெரியாமல் ஒரே மனித வாழ்க்கையின் இயல்பான பகுதிகளாகச் சந்திக்கின்றன.

 இதனால் படம் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பிரசங்கம் செய்வதில்லை; அந்தப் பிரச்சினைகளுக்குள் வாழும் மனிதர்களை நமக்கு அருகில் நிறுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ பிரீட்டோவின் கேமரா இந்த உலகத்தின் இருண்ட தன்மையை அலங்கரிக்க முயலவில்லை. 

சிதைந்த நகரப்பகுதிகள், குறுகிய உட்புறங்கள், குளிர்ச்சியான சூழல்கள், இயல்பான மனித முகங்கள் ஆகியவை கதாபாத்திரங்களின் மனநிலையுடன் இணைகின்றன.

 பார்சிலோனாவை ஒரு அஞ்சல் அட்டை ஓவியபடமாகக் காட்டாமல், அதன் மறைக்கப்பட்ட முகத்தைக் காண்பிப்பது படத்தின் காட்சிமொழிக்கு தனித்தன்மை அளிக்கிறது.

படத்தொகுப்பு கதையை வேகமாகத் தள்ளிச் செல்லும் கருவியாக இருப்பதற்குப் பதிலாக, கதாபாத்திரங்களின் மனநிலையை உணரச் செய்யும் இடைவெளிகளை உருவாக்குகிறது. 

நீண்ட காட்சிகளும் அமைதியான தருணங்களும் பார்வையாளரை அவசரப்படுத்துவதில்லை. அதனால் 147 நிமிடங்களைக் கொண்ட இந்தப் படம் சாதாரண வணிகத் திரைப்படத்தின் வேகத்தில் நகராது; அதன் உணர்ச்சிகளுக்குள் பார்வையாளரை மெதுவாக இழுத்துச் செல்கிறது.

குஸ்டாவோ சாண்டஅலல்லாவின் இசையும் இந்த அனுபவத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

 இசை காட்சிகளின் உணர்ச்சியை வலுக்கட்டாயமாகச் சொல்லாமல், அவற்றின் பின்னணியில் ஓடும் ஒரு மெல்லிய மனஒலியாக செயல்படுகிறது. 

குறிப்பாக ராவலின் பியானோ கான்செர்டோவின் மெதுவான நடுப்பகுதி திரைப்படத்தின் இசை உலகில் குறிப்பிடத்தக்க இடம் பெறுகிறது. இசையும் அமைதியும் ஒன்றுக்கொன்று போட்டியிடாமல் இணைவது படத்தின் உணர்ச்சி ஆழத்தை அதிகரிக்கிறது.

கலை இயக்கம், ஆடை, இடத் தேர்வு ஆகியவை தனித்தனியாக கவனத்தை ஈர்க்க முயலவில்லை. அவை கதாபாத்திரங்கள் வாழும் சமூகச் சூழலை நம்பகமாக உருவாக்குகின்றன. 

வறுமை அல்லது சிதைவு அழகுபடுத்தப்படுவதில்லை; அதே நேரத்தில் அவை வெறும் அதிர்ச்சிக்கான காட்சிகளாகவும் பயன்படுத்தப்படுவதில்லை. இதுவே படத்தின் மனிதநேயப் பார்வையை வலுப்படுத்துகிறது.

Biutiful குறிப்பாக குடியேற்ற வாழ்க்கை மற்றும் சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர்களைப் பார்க்கும் விதத்தில் முக்கியமானது. 

ஒரு நாட்டின் சட்டங்கள், பொருளாதார அமைப்பு, வேலைவாய்ப்பு, வறுமை ஆகியவை தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாகப் பதிகின்றன என்பதை படம் சிந்திக்க வைக்கிறது. 

ஆனால் எந்த ஒரு அரசியல் கருத்தையும் நேரடியாகத் திணிக்காமல், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் வழியே அந்தக் கேள்விகளை முன்வைக்கிறது.

இதே காரணத்தால் இந்தப் படம் அனைவருக்கும் எளிதான பார்வை அனுபவமாக இருக்காது. 

அதன் உலகம் கனமானது; உணர்ச்சிகள் தீவிரமானவை; வாழ்க்கையின் கடினமான முகத்தை அது மறைக்கவில்லை. சில விமர்சகர்கள் படத்தின் இருண்ட தன்மை அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் கருதியதற்கும் இதுவே காரணம்.

 அதே நேரத்தில், மற்ற விமர்சகர்கள் இதன் மனிதநேய ஆழத்தையும் பார்டெமின் நடிப்பையும் பெரிதும் பாராட்டினர். 

இந்த இரு விதமான எதிர்வினைகளும் படம் எவ்வளவு தீவிரமான அனுபவத்தை உருவாக்குகிறது என்பதையே காட்டுகின்றன.

2010 கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்ட Biutiful, ஹாவியர் பார்டெமுக்கு சிறந்த நடிகர் விருதைப் பெற்றுத் தந்தது. 

2011 ஆஸ்கரில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. 

குறிப்பாக முழுக்க ஸ்பானிஷ் மொழியில் அமைந்த நடிப்புக்காக சிறந்த நடிகர் பிரிவில் கிடைத்த பார்டெமின் பரிந்துரை குறிப்பிடத்தக்க சாதனையாகும். 

திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அதன் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் மனிதநேய அணுகுமுறை குறித்து பல முக்கிய விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

இன்யாரிட்டுவின் Biutiful பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதற்குக் காரணம் அது ஒரு கதையை மட்டும் சொல்ல முயல்வதல்ல. 

மனித வாழ்க்கையின் மதிப்பு, அன்பு, பொறுப்பு, குற்ற உணர்வு, வறுமை, மரணம் ஆகியவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்ற கேள்விகளை அது நம்மிடம் விட்டுச் செல்கிறது. 

பதில்களைத் தயாராக வழங்காமல், சில உணர்வுகளை நம்முள் நீண்ட நேரம் உயிரோடு வைத்திருப்பதே இதன் உண்மையான வலிமை. 

சில திரைப்படங்கள் முடிந்தவுடன் முடிந்துவிடுகின்றன; Biutiful அப்படியல்ல—முடிந்த பிறகும் மனித வாழ்க்கையைப் பற்றிய ஒரு கனமான சிந்தனையை நம்முடன் விட்டுச் செல்கிறது.

===============================
படத்தின் கதை:-

பார்சிலோனாவில் உக்ஸ்பால் (ஹாவியர் பார்டெம்) தனது இரண்டு சிறு குழந்தைகளான அனா (ஹானா பௌச்சைப்) மற்றும் மேடியோ (கில்லெர்மோ எஸ்ட்ரெயா) ஆகியோருடன் ஒரு மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்பில் வாழ்கிறான்.

 குழந்தைகளின் தாயான மரம்ப்ரா (மரிசெல் ஆல்வரெஸ்) அவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறாள். 

அவளுக்கு மதுப்பழக்கமும் பைபோலார் டிஸார்டர் மனநல குறைபாடும் இருப்பதால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உக்ஸ்பாலிடமே பெரும்பாலும் இருக்கிறது. 

மரம்ப்ரா மசாஜ் தொழில் செய்கிறாள். உக்ஸ்பாலுக்கு பெற்றோர் யாரும் இல்லை; அவன் சிறுவயதிலேயே அனாதையாக வளர்ந்தவன்.

 அவனுக்கு நெருக்கமான குடும்ப உறவாக இருப்பவன் அவனுடைய சகோதரன் டிட்டோ (எட்வார்ட் பெர்னாண்டஸ்) மட்டுமே. 

டிட்டோ கட்டுமானத் தொழிலில் வேலை செய்கிறான்; சில சமயங்களில் மரம்ப்ராவின் மசாஜ் சேவையையும் நாடுகிறான்.

உக்ஸ்பால் தனது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதோடு, சட்டத்துக்குப் புறம்பான பல வேலைகளிலும் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகிறான்.

 சீனாவிலிருந்து பார்சிலோனாவுக்கு வந்துள்ள சட்டவிரோதக் குடியேறிகளுக்கு வேலை ஏற்பாடு செய்து தருகிறான். 

அவர்கள் போலியான புகழ்பெற்ற நிறுவனப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். 

அந்தப் பொருட்களை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தெருவோர விற்பனையாளர்கள் நகரத்தில் விற்பனை செய்கிறார்கள். 

இந்த வேலைகள் மூலம் உக்ஸ்பால் பணம் சம்பாதிக்கிறான். இதற்குப் பிறகும் அவனுக்கு இன்னொரு தனித்துவமான தொழில் இருக்கிறது. 

இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் ஆவி மீடியமாக  அவன் செயல்படுகிறான். இறந்தவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் இருக்கும் இறுதிச்சடங்கு மற்றும் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சிகளில், இறந்தவர்களிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் செய்திகளை அவர்களிடம் தெரிவிக்கிறான்.

இந்த வாழ்க்கைக்கிடையே உக்ஸ்பாலின் உடல்நிலை குறித்து அவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது.

 அவனுக்கு விதைப்பையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. அது குணப்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அவன் இன்னும் சில மாதங்களே உயிருடன் இருக்கக்கூடும் என்று தெரியவருகிறது. 

இந்தச் செய்தி அவனுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றுகிறது. தனது மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், தான் இல்லாதபோது தனது இரண்டு குழந்தைகளின் நிலை என்னவாகும் என்ற கவலை அவனுக்குள் பெரிதாகிறது.

மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையாக உக்ஸ்பால் முதலில் கீமோதெரபி மேற்கொள்கிறான்.

 ஆனால் அவன் நண்பரான பீயா மாற்று மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவள். அவளுடைய ஆலோசனையின் பேரில் உக்ஸ்பால் கீமோதெரபியை நிறுத்துகிறான்.

 பீயா அவனிடம் இரண்டு கருப்பு கற்களைக் கொடுத்து, அவற்றை அவன் இறப்பதற்கு முன்பு தனது குழந்தைகளிடம் கொடுக்குமாறு கூறுகிறாள். 

இதற்கிடையில், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதையும், தனது வாழ்க்கைக்கு அதிக காலம் இல்லை என்பதையும் உணரும் உக்ஸ்பால், தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படத் தொடங்குகிறான்.

உக்ஸ்பால் வேலை ஏற்பாடு செய்துகொடுத்துக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்கத் தெருவோர விற்பனையாளர்களுடன் காவல்துறைக்கு தொடர்ந்து பிரச்சினை இருக்கிறது.

 உக்ஸ்பால் காவல்துறையினருக்கு வழக்கமாக லஞ்சம் கொடுத்து அவர்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறான். 

ஆனால் அந்தக் குழுவினர் போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டிருப்பதால், காவல்துறையினர் அவர்களை கைது செய்கிறார்கள். 

இதனால் உக்ஸ்பால் அவர்களைப் பாதுகாக்க முடியாமல் போகிறது. அவர்களில் ஒருவன் செனகலுக்கு நாடு கடத்தப்படுகிறான். 

அவனுடைய மனைவி இகே (டியாரியாத்து டாஃப்) மற்றும் அவர்களுடைய சிறு குழந்தை மகன் மட்டும் பார்சிலோனாவில் இருக்கிறார்கள். 

அவர்களின் நிலையைப் பார்த்த உக்ஸ்பால், இகேவும் அவளுடைய குழந்தையும் தன்னுடைய குடியிருப்பில் தங்குவதற்கு இடம் கொடுக்கிறான்.

இதற்கிடையில், உக்ஸ்பால் தனது முன்னாள் மனைவி மரம்ப்ராவுடன் மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்கிறான்.

 குழந்தைகளுக்கு அவர்களுடைய தாய் தேவை என்பதால் இந்த சமரச முயற்சியை அவன் விரும்புகிறான். 

ஆனால் மரம்ப்ராவை நம்பி குழந்தைகளின் பொறுப்பை ஒப்படைக்க முடியாது என்பதை உக்ஸ்பால் உணர்கிறான்.

 அவளுடைய மதுப்பழக்கமும் நிலையற்ற மனநிலையும் காரணமாக குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அவனுக்கு அச்சம் ஏற்படுகிறது.

 இதனால் அவர்களுக்கிடையேயான மீண்டும் இணையும் முயற்சி வெற்றி பெறவில்லை.

மறுபுறம், உக்ஸ்பால் வேலை ஏற்பாடு செய்திருந்த சீனக் குடியேறிகளுக்கு வேலை இல்லாமல் போகிறது.

 அவர்களுக்கான புதிய வேலை தேவைப்படுகிறது. உக்ஸ்பாலின் சகோதரன் டிட்டோ அவர்களுக்கு ஒரு கட்டுமானத் தளத்தில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறான். 

இதனால் சீனர்கள் அந்தக் கட்டுமானப் பணியில் சேர்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைத்தாலும், அவர்கள் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ற பாதுகாப்பான சூழல் இல்லை.

 உக்ஸ்பால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறான்.

அவர்களுக்காக உக்ஸ்பால் மலிவான குளிர்காய உதவும் எரிவாயு அடுப்புகளை வாங்கிக் கொடுக்கிறான். 

பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் வாங்கிய அந்த மலிவான கருவிகள் பாதுகாப்பானவை அல்ல. 

இரவு நேரத்தில் சீனத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடத்தில் அந்த எரிவாயு சாதனங்களிலிருந்து கார்பன் மோனாக்சைடு வெளியேறுகிறது. 

அந்த நச்சு வாயுவை சுவாசித்ததால் கிட்டத்தட்ட அனைவரும் கொத்தாக இரவில் உயிரிழக்கிறார்கள். 

அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று எண்ணி உதவ முயன்ற உக்ஸ்பாலின் செயல் எதிர்பாராத விதமாக அவர்களின் மரணத்துடன் தொடர்புபடுகிறது.

இந்தப் பெரும் பிரச்சினையை மறைக்க முயலும் மனிதக் கடத்தல்காரன், இறந்தவர்களின் உடல்களை கடலில் வீசி மறைத்துவிட முயற்சி செய்கிறான். 

ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைகிறது. கடலில் வீசப்பட்ட உடல்கள் சிறிது நேரத்திலேயே மீண்டும் கரையில் ஒதுங்குகின்றன.

 இதனால் சம்பவம் பொதுமக்களின் கவனத்துக்கும் ஊடகங்களின் கவனத்துக்கும் வருகிறது. உக்ஸ்பால் அந்த மரணங்களால் ஆழமாகப் பாதிக்கப்படுகிறான்.

 ஏற்கெனவே ஆப்பிரிக்கர்களின் கைது மற்றும் நாடு கடத்தலுடன் தொடர்புடைய பொறுப்பு அவனைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.

 இப்போது சீனத் தொழிலாளர்களின் மரணத்திற்கும் தான் காரணமாகிவிட்டதாக அவன் குற்ற உணர்வில் சிக்கிக்கொள்கிறான்.

இதற்கிடையில் உக்ஸ்பாலின் புற்றுநோய் மேலும் மோசமடைகிறது. 

உடல் வலி மற்றும் நோயின் தாக்கத்தால் அவனுடைய உடல்நிலை தொடர்ந்து சீர்குலைகிறது. 

தன்னுடைய மரணம் நெருங்கிவிட்டதை அவன் தெளிவாக உணர்கிறான். ஆனால் அவனுடைய மிகப்பெரிய கவலை தனது மரணம் அல்ல; தான் இல்லாதபோது அனாவையும் மேடியோவையும் யார் பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான். 

அவர்களுடைய தாய் மரம்ப்ராவை முழுமையாக நம்ப முடியாது என்பதையும் அவன் ஏற்கெனவே புரிந்துகொண்டிருக்கிறான்.

உக்ஸ்பாலின் தந்தை மெக்சிகோவில் இறந்தபின், அவரது உடல் பாதுகாக்கப்பட்ட நிலையில் ஸ்பெயினுக்கு கொண்டு வரப்பட்டு கல்லறையில் வைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கல்லறை இருக்கும் இடத்தில் ஒரு பெரிய வணிக வளாகம் கட்டப்படவிருப்பதால், அங்குள்ள கல்லறைகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக உக்ஸ்பாலும் அவனுடைய சகோதரன் டிட்டோவும் தந்தையின் உடலை கல்லறையிலிருந்து எடுத்துப் பெற்று, பின்னர் தகனம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். இதற்குப் பதிலாக கல்லறைக்காக அவர்களுக்கு வழங்கப்படும் பணத்தையும் பெற முடிகிறது. 

உடலை அடையாளம் காணும் நேரத்தில், நீண்ட காலத்துக்கு முன்பு இறந்த தந்தையின் பதப்படுத்தப்பட்ட உடல் அவர்களுக்கு முன்பாகக் கொண்டுவரப்படுகிறது. அந்த உடலைப் பார்த்த டிட்டோ அதிர்ச்சியடைந்து பின்னால் விலகுகிறான்; ஆனால் உக்ஸ்பால் அவ்வாறு விலகாமல் உடலுக்கு அருகில் செல்கிறான். அவன் தந்தையின் அழுகிய முகத்தையும் உடலையும் நெருக்கமாகப் பார்க்கிறான்; தன் வாழ்நாளில் ஒருபோதும் நேரில் அறிந்திராத தந்தையை முதன்முறையாக உடலாகப் பார்க்கும் அந்தக் கணம் அவனை ஆழமாகத் தொட்டுச் செல்கிறது. அவன் தந்தையின் உடலைத் தொடுவதற்கும் அருகில் செல்வதற்கும் தயங்கவில்லை. 

இதற்குப் பின்னணியில், உக்ஸ்பாலின் தந்தை அவன் பிறப்பதற்கு முன்பே ஸ்பெயினிலிருந்து மெக்சிகோவுக்குத் தப்பிச் சென்றவர் என்பதும், அங்கேயே இறந்தவர் என்பதும் உள்ளது. எனவே, தந்தையைப் பற்றிய நேரடி நினைவுகள் உக்ஸ்பாலிடம் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையின் உடலை இப்படிப் பார்ப்பது, அவனுடைய சொந்த வாழ்க்கையிலும் மரணத்தை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும் அவனுடைய மனநிலையிலும் ஒரு முக்கியமான தருணமாக அமைகிறது. 

குழந்தைகளுக்கு நல்ல பாதுகாவலாளராக இருப்பாள் என இகே மீது மிகுந்த நம்பிக்கை வைக்கிறான். தனது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் மீதமிருக்கும் முழுப் பணத்தை இகேவிடம் ஒப்படைக்கிறான்.

 தான் இறந்த பிறகு அனாவையும் மேடியோவையும் கவனித்துக்கொண்டு அவர்களுடன் தங்க வேண்டும் என்று அவளிடம் கேட்டுக்கொள்கிறான். 

இகே அவனுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறாள். குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒருவர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கை உக்ஸ்பாலுக்கு ஏற்படுகிறது.

ஆனால் இகேவின் சொந்த வாழ்க்கையும் நிலையானதல்ல. அவள் பின்னர் உக்ஸ்பால் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆப்பிரிக்காவுக்குத் திரும்ப முடிவு செய்கிறாள். 

இதனால் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய உக்ஸ்பாலின் கவலை மீண்டும் தீராத நிலையில் நிற்கிறது.

 அவன் இல்லாதபோது அவர்களை யார் கவனிப்பார்கள் என்ற கேள்விக்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை.

உக்ஸ்பாலின் உடல்நிலை மிகவும் மோசமாகும் நிலையில், அவன் தனது குடியிருப்பில் இருக்கிறான். 

அப்போது குளியலறைக் கதவுக்குப் பின்னால் இகேவின் நிழல் இருப்பதைப் பார்க்கிறான். அவள் திரும்பி வந்துவிட்டதாகக் கூறும் அவளுடைய குரலும் அவனுக்குக் கேட்கிறது. 

அந்தத் தருணத்தில் இகே உண்மையாகவே திரும்பி வந்திருக்கிறாளா, அல்லது உக்ஸ்பாலின் மனநிலையில் தோன்றும் ஒரு காட்சியா என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை.

அதன் பிறகு உக்ஸ்பால் தனது மகள் அனாவுக்கு அருகில் சென்று படுத்துக்கொள்கிறான்.

 அவனுடைய தந்தை ஒருகாலத்தில் தனது தாய்க்குக் கொடுத்திருந்த வைர மோதிரம் அவனிடம் இருக்கிறது. 

அதை அவன் அனாவிடம் கொடுக்கிறான். தனது குழந்தையுடன் அருகில் படுத்திருக்கும் அந்த நிலையிலேயே உக்ஸ்பால் மெல்ல இறக்கிறான்.

திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கதை வேறொரு அமைதியான உலகுக்குச் செல்கிறது. 

பனியால் மூடப்பட்ட குளிரான நிலப்பரப்பில் உக்ஸ்பால் தனது தந்தையைச் சந்திக்கிறான்.

 உக்ஸ்பாலின் தந்தை அவன் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டவர். 

ஸ்பெயினில் ஃபிராங்கோவின் ஆட்சி நிலவிய காலத்தில் அவர் மெக்சிகோவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்; 

அதன் பின்னரே உக்ஸ்பால் பிறந்திருந்தான். ஆகவே தன் வாழ்நாளில் தந்தையை கிஞ்சித்தும் அறிந்துகொள்ள முடியாத உக்ஸ்பால், அந்தப் பனிப்பரப்பில் இறந்த தனது தந்தையுடன் மீண்டும் இணைகிறான். 

இதுவே உக்ஸ்பாலின் வாழ்க்கைக் கதையின் இறுதிக் காட்சியாக படம் நிறைகிறது.

#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு

பார்டோ , ஃபால்ஸ் க்ரோனிகள் ஆஃப் ய ஹேண்ட்ஃபுல் ஆஃப் ட்ரூத்ஸ் Bardo, False Chronicle of a Handful of Truths 2022

பார்டோ (Bardo, False Chronicle of a Handful of Truths) 2022 – நினைவுக்கும் நிஜத்துக்கும் நடுவே ஒரு கனவுப் பயணம்

நம் வாழ்க்கையில் எது உண்மை—நாம் வாழ்ந்த சம்பவங்களா, அவற்றைப் பற்றி நாம் உருவாக்கிக்கொண்ட நினைவுகளா, அல்லது அந்த நினைவுகளுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளா?

 இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சொல்லாமல், பார்வையாளரையே அந்தக் குழப்பத்திற்குள் அழைத்துச் செல்லும் திரைப்படம் அலெஹாண்ட்ரோ கோன்சாலெஸ் இன்யாரிட்டுவின் பார்டோ.

 மெக்சிகோவின் வரலாறு, தனிமனித நினைவு, குடும்பம், தாய்நாடு, குடியேற்றம், இழப்பு, குற்றவுணர்வு, புகழ் என பல அடுக்குகளை ஒரே கனவுலகத் திரைப்பட மொழியில் இணைக்கும் படைப்பு இது.

இன்யாரிட்டு இங்கே வழக்கமான கதை சொல்லும் முறையைத் தேர்ந்தெடுக்கவில்லை. 

நிஜம், நினைவு, கனவு, கற்பனை ஆகியவற்றுக்கிடையேயான எல்லையை திட்டமிட்டு மங்கச் செய்கிறார். 

இதனால் திரையில் தெரியும் ஒவ்வொரு காட்சியையும் “இது உண்மையா?” என்று ஆராய்வதைவிட, “இந்தக் காட்சி ஒரு மனிதனின் மனநிலையை எப்படி வெளிப்படுத்துகிறது?” என்று சிந்திக்கத் தொடங்குகிறோம்.

 திரைப்படத்தின் தலைப்பே இதற்கான முக்கியமான திறவுகோலை வழங்குகிறது. ‘பார்டோ’ என்பது மரணத்துக்கும் மறுபிறப்புக்கும் இடையிலான இடைநிலையைக் குறிக்கும் பௌத்தக் கருத்து. 

அந்த இடைநிலை என்ற எண்ணத்தை வாழ்க்கையின் பல்வேறு மனநிலைகளுக்கும் திரைப்படம் விரிவுபடுத்துகிறது.

சில்வெரியோ காமா (டேனியல் கிமெனெஸ் காச்சோ) என்ற பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் இந்த உலகத்தின் மையத்தில் இருக்கிறார். 

அவரை ஒரு சாதாரண திரைப்படக் கதாபாத்திரமாக மட்டும் உருவாக்காமல், நினைவுகளாலும் அனுபவங்களாலும் தொடர்ந்து தன்னைத் தானே ஆராய்ந்து கொண்டிருக்கும் மனிதராக இன்யாரிட்டு வடிவமைக்கிறார்.

 அதனால் கதாபாத்திரத்தின் வெளிப்புறச் செயல்களைவிட, அவனுடைய உள்மன உலகமே முக்கியத்துவம் பெறுகிறது.

 லூசியா (கிரிசெல்டா சிசிலியானி) உள்ளிட்ட குடும்ப உறவுகளும் தனித்தனி கதாபாத்திரங்களாக மட்டுமல்லாமல், சில்வெரியோவின் நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய மனிதப் பரிமாணங்களாகத் தோன்றுகின்றன.

திரைக்கதையின் மிகப்பெரிய தனித்துவம் அதன் நேர்கோட்டுத் தன்மையின்மையே. பார்வையாளருக்கு எல்லாவற்றையும் விளக்கிவிட்டு அடுத்த காட்சிக்கு அழைத்துச் செல்லும் பாதுகாப்பான கதை சொல்லல் இங்கே இல்லை. 

ஒரு காட்சி நிஜத்தைப் போலத் தோன்றலாம்; இன்னொரு காட்சி கனவைப் போல இருக்கலாம்; இரண்டிற்கும் இடையிலான எல்லையைத் தீர்மானிப்பது பார்வையாளரின் அனுபவமாகிறது. 

இதனால் படம் பார்க்கும் செயல் ஒரு கதையைப் பின்தொடர்வதாக மட்டும் இல்லாமல், ஒருவரின் நினைவுக்குள் பயணம் செய்வது போன்ற அனுபவமாக மாறுகிறது.

இன்யாரிட்டுவின் இயக்கத்தில் பிரம்மாண்டமும் தனிப்பட்ட உணர்வும் ஒன்றாகச் செல்கின்றன. 

ஒரு தனிமனிதனின் உள்மனப் போராட்டத்தைப் பேசும்போது கூட, மெக்சிகோவின் வரலாறும் சமூக நினைவும் அதனுடன் இணைக்கப்படுகின்றன. நாட்டின் கடந்தகாலம், இன்றைய சமூகப் பிரச்சினைகள், குடியேற்றம், தேசிய அடையாளம், அமெரிக்காவுடனான உறவு போன்றவை வெறும் அரசியல் தகவல்களாக வருவதில்லை.

 அவை ஒரு மனிதன் தன்னைப் பற்றியும் தனது நாட்டைப் பற்றியும் சிந்திக்கும் விதத்தோடு இணைகின்றன. இதுவே படத்திற்கு தனிப்பட்ட தன்மையையும் சமூகப் பரப்பையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது.

சில்வெரியோவாக டேனியல் கிமெனெஸ் காச்சோவின் நடிப்பு இந்தச் சிக்கலான திரைப்பட மொழியைத் தாங்கும் முக்கியமான தூணாக இருக்கிறது. 

அவருடைய கதாபாத்திரம் வெளிப்படையாகப் பேசுவதைக் காட்டிலும், முகபாவனை, உடல் மொழி, தயக்கம், குழப்பம் போன்ற நுண்ணிய வெளிப்பாடுகள் மூலம் அதிகம் பேசுகிறது. 

லூசியாவாக கிரிசெல்டா சிசிலியானியும் அதேபோல் கதாபாத்திரத்தின் உணர்ச்சி ஆழத்தை வலுப்படுத்துகிறார்.

 இருவரின் நடிப்பிலும் மிகைப்படுத்தல் இல்லாமல் உள்ளுக்குள் அழுத்தப்பட்டிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை காணப்படுகிறது.

ஒளிப்பதிவு இந்தப் படத்தின் மிகப்பெரிய கவர்ச்சிகளில் ஒன்று. டேரியஸ் கோண்ட்ஜியின் காட்சிப்பதிவு சாதாரண உலகத்தையே சில நேரங்களில் கனவு போன்ற பிரம்மாண்டமான இடமாக மாற்றுகிறது. 

பரந்த காட்சிகள், மனிதர்களைச் சுற்றியுள்ள மிகப்பெரிய வெளிகள், நெருக்கமான காட்சிகள் என கேமரா ஒரு கதாபாத்திரத்தின் மனநிலைக்கு ஏற்ப பார்வையாளரின் பார்வையையும் மாற்றுகிறது.

 இந்தக் காட்சியமைப்பு வெறும் அழகுக்காக அல்ல; படத்தின் மனநிலையை பார்வையாளருக்கு உணரச் செய்யும் திரைப்பட மொழியாகப் பயன்படுகிறது.

பெரிய வடிவக் கேமராவும் பனாவிஷன் ஸ்பீரோ லென்ஸ்களும் பயன்படுத்தப்பட்டிருப்பது படத்தின் காட்சிகளுக்கு தனித்துவமான பரப்பையும் ஆழத்தையும் அளிக்கிறது.

 குறிப்பாக அகலமான காட்சிகளில் மனிதர்களும் அவர்களைச் சுற்றியுள்ள உலகமும் ஒரே சட்டகத்துக்குள் மிகப் பெரிய அளவில் இணைக்கப்படுகின்றன.

 இதனால் தனிமனிதனின் சிறிய வாழ்க்கைக்கும் வரலாற்றின் பிரம்மாண்டமான பின்னணிக்கும் இடையேயான தொடர்பை காட்சியே உணர்த்துகிறது.

படத்தொகுப்பும் வழக்கமான தொடர்ச்சியான கதை சொல்லலைவிட மன ஓட்டத்தை முன்னிலைப்படுத்துகிறது. 

ஒரு காட்சியிலிருந்து மற்றொரு காட்சிக்குச் செல்லும்போது “இது எப்படி நடந்தது?” என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஆனால் அந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் தராமல், பார்வையாளரை அந்த அனுபவத்திலேயே இருக்கச் செய்கிறது. 

இதனால் படம் வேகமாக முன்னேறும் கதையாக இல்லாமல், நீண்ட நேரம் மனதில் தங்கி இருக்கும் கனவு போன்ற அனுபவமாக மாறுகிறது.

இசையில் பிரைஸ் டெஸ்னரும் இன்யாரிட்டுவும் இணைந்திருக்கிறார்கள். 
இசை காட்சிகளுக்கு வெறும் பின்னணி ஆதரவாக இல்லாமல், படத்தின் உளவியல் சூழலை உருவாக்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது. 

அதனுடன் ஒலியமைப்பும் சேரும்போது, நிஜத்துக்கும் கனவுக்கும் இடையேயான மெல்லிய எல்லை மேலும் சிக்கலாகிறது. 

ஒலி, இசை, காட்சி ஆகிய மூன்றும் தனித்தனியாகச் செயல்படாமல் ஒரே உணர்வை உருவாக்குகின்றன.

கலை இயக்கமும் காட்சியமைப்பும் படத்தின் பிரம்மாண்டமான கற்பனை உலகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 மெக்சிகோவின் வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்கள் வெறும் பின்னணியாக வைக்கப்படவில்லை. 

அவை கதாநாயகனின் மன உலகத்துடன் இணையும் காட்சிச் சின்னங்களாக மாறுகின்றன. ஆடை வடிவமைப்பும் இந்தக் காட்சியுலகத்தின் இயல்பை வலுப்படுத்துகிறது. 

இதனால் திரைப்படம் நிஜ உலகின் மறுபதிப்பாக இல்லாமல், நினைவுகளால் மறுவடிவமைக்கப்பட்ட உலகமாகத் தோன்றுகிறது.

திரைப்படத்தின் காலப்பின்னணியும் முக்கியமானது. அமெரிக்கா–மெக்சிகோ உறவு, குடியேற்றம், தேசிய அடையாளம், மெக்சிகோவின் வரலாற்று வன்முறைகள் போன்ற சமகால மற்றும் வரலாற்று அடுக்குகள் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப்படுகின்றன.

 ஆனால் படம் இவற்றை ஒரு அரசியல் உரையாக மாற்றிவிடுவதில்லை. தனிமனிதனின் பார்வையில் ஒரு நாட்டை நினைவுகூர்வது எப்படி இருக்கும் என்பதே அதன் அணுகுமுறை.

இதன் மனிதநேயப் பார்வை குறிப்பாக குறிப்பிடத்தக்கது. தாய்நாட்டை விட்டு வெளியேறிய ஒருவருக்குள் ஏற்படும் பெருமையும் குற்றவுணர்வும், குடும்பத்துடனான பாசமும் இழப்புகளும், வெற்றியின் பின்னால் இருக்கும் வெறுமையும், கடந்தகாலத்திலிருந்து விடுபட முடியாத மனநிலையும் படம் ஆராய்கிறது. 

இவை மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு கதாபாத்திரத்தின் அனுபவங்களாக இருந்தாலும், அதன் அடிப்படை உணர்வுகள் உலகின் எந்தப் பார்வையாளருக்கும் புரியக்கூடியவை.

அதே நேரத்தில், பார்டோ எளிதான திரைப்படம் அல்ல. 174 நிமிட வெனிஸ் பதிப்பிலிருந்து பின்னர் குறைக்கப்பட்ட இறுதிப் பதிப்பும் சுமார் 160 நிமிடங்கள் நீளமானது. 

விமர்சகர்களிடையே படத்திற்கான வரவேற்பும் இருவேறு முகம் கொண்டதாக இருந்தது. 

நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவை பாராட்டப்பட்டாலும், திரைக்கதை மற்றும் நீண்ட நேரம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. 

சிலர் படத்தை மிகுந்த தன்முனைப்புடையதாகவும் செயற்கையாகப் பெருமைப்படுத்தப்பட்டதாகவும் கருதினர். 

அதேவேளை, பிற திரைப்படக் கலைஞர்கள் இதன் கனவு போன்ற காட்சிப்படைப்பையும் தனிப்பட்ட கலை வெளிப்பாட்டையும் பாராட்டினர்.

 ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் 60 சதவீத மதிப்புரைகள் சாதகமாக இருந்தன; மெட்டாகிரிட்டிக்கில் 55/100 என்ற கலவையான மதிப்பெண் கிடைத்தது.

விருதுகளிலும் குறிப்பாக ஒளிப்பதிவு கவனம் பெற்றது. திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கத்திற்குப் போட்டியிட்டது; 

கேமரிமேஜ் விழாவில் டேரியஸ் கோண்ட்ஜி வெள்ளித் தவளையை வென்றார். 

மேலும், திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

 மெக்சிகோவின் ஏரியல் விருதுகளில் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி, சிறந்த படத்தொகுப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, காட்சி விளைவுகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் வெற்றிகளைப் பெற்றது. 

இவை படத்தின் காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்பத் திறனுக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரங்களாகும்.

ஆனால் பார்டோவின் உண்மையான தனித்துவம் விருதுகளிலோ பிரம்மாண்டமான காட்சிகளிலோ மட்டும் இல்லை. 

ஒரு மனிதன் தனது வாழ்க்கையை நினைவுகூரும்போது, அந்த நினைவுகள் எவ்வளவு நம்பகமானவை என்ற கேள்வியை எழுப்புவதில்தான் அதன் வலிமை இருக்கிறது.

 வரலாறு என்பது புத்தகங்களில் இருக்கும் கடந்தகாலமா, அல்லது ஒவ்வொரு மனிதனும் தனது நினைவுகளில் சுமந்து செல்லும் தனிப்பட்ட அனுபவமா என்ற சிந்தனையையும் படம் தூண்டுகிறது. 

இதற்கான பதிலை நேரடியாகக் கொடுக்காமல், பார்வையாளரின் மனதிலேயே அந்தக் கேள்வியைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்கிறது.

அதனால் பார்டோவை வழக்கமான கதையுள்ள திரைப்படமாக மட்டும் அணுகுவது அதன் தனித்துவத்தைச் சுருக்கிவிடும். இது பார்க்கப்பட வேண்டியதோடு, உணரப்படவும் சிந்திக்கப்படவும் வேண்டிய திரைப்படம். 

ஒவ்வொரு பார்வையாளரும் தங்களுடைய நினைவுகள், இழப்புகள், சொந்த ஊர், குடும்பம், கடந்தகாலம் ஆகியவற்றைப் பற்றி வேறுவிதமாகச் சிந்திக்கச் செய்யக்கூடிய திறன் இதற்கு இருக்கிறது. 

திரை முடிந்த பிறகும் சில காட்சிகளும் கேள்விகளும் மனதில் தங்கியிருந்து, “நாம் நினைவுகூரும் வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கையா?” என்று நம்மையே கேட்கச் செய்தால், அதுவே பார்டோவின் மிகப்பெரிய வெற்றி.

===============================
படத்தின் கதை:-

மெக்சிகோவைச் சேர்ந்த சில்வெரியோ காமா (டேனியல் கிமெனெஸ் காச்சோ) லாஸ் ஏஞ்சல்ஸில் தனது மனைவி லூசியா காமா (கிரிசெல்டா சிசிலியானி), மகன் லோரென்சோ ஆகியோருடன் வசிக்கிறார். 

மெக்சிகோவில் பத்திரிகையாளராக இருந்த சில்வெரியோ பின்னர் ஆவணப்பட இயக்குநராக மாறுகிறார். 

வயது அதிகரிக்க அதிகரிக்க, அவர் உருவாக்கும் படைப்புகள் வெளிப்புற உலகைப் பற்றிய நேரடியான பதிவுகளாக இல்லாமல், அவருடைய சொந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள், கற்பனைகள் ஆகியவற்றுடன் கலந்த தனிப்பட்ட பார்வையாக மாறுகின்றன. 

அவர் உருவாக்கிய சமீபத்திய படைப்பு, அவரது வாழ்க்கையையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனை–ஆவணப்படமாக இருக்கிறது.

சில்வெரியோவும் லூசியாவும் ஒருவருக்கொருவர் அன்பாகவே வாழ்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒரு துயரம் இருக்கிறது.

 அவர்களுடைய முதல் குழந்தையான மேடியோ பிறந்த மறுநாளே இறந்துவிடுகிறான்.

 அந்த இழப்பிலிருந்து இருவராலும் முழுமையாக மீள முடியவில்லை. மேடியோவின் சாம்பலை அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

 குழந்தையை இழந்த துயரமும், அந்த நினைவிலிருந்து விடுபட முடியாத மனநிலையும் அவர்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து இருக்கிறது.

சில்வெரியோவின் அன்றாட வாழ்க்கை சாதாரணமாகத் தோன்றினாலும், அவன் அனுபவிக்கும் உலகம் எப்போதும் அப்படியில்லை. 

நிஜ வாழ்க்கை, பழைய நினைவுகள், கனவுகள், கற்பனைகள் ஆகியவை அவனுடைய மனதில் ஒன்றோடொன்று கலந்துகொண்டே இருக்கின்றன.

 உதாரணமாக, மெக்சிகோவில் உள்ள சாபுல்டெபெக் கோட்டையில் அமெரிக்கத் தூதரைச் சந்திக்கும்போது, அந்த இடத்தின் வரலாறு அவனுடைய மனக்காட்சியாக உயிர்பெறுகிறது. 

1847-ஆம் ஆண்டு நடைபெற்ற சாபுல்டெபெக் போரின் காட்சிகளும், அப்போது உயிரை மாய்த்துக்கொண்ட சிறுவீரர்களான ‘நின்யோஸ் ஹீரோயஸ்’ பற்றிய காட்சிகளும் அவனைச் சுற்றி நிகழ்வது போல அவன் காண்கிறான்.

இதற்கிடையில், சில்வெரியோ ஒரு முக்கியமான அமெரிக்கப் பத்திரிகை விருதைப் பெறவிருப்பதை அறிகிறான்.

 அந்த விருதைப் பெறும் முதல் லத்தீன் அமெரிக்கர் அவனாக இருக்கப் போகிறான். ஆனால் இந்தப் பெருமையை அவன் முழுமையாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே பதற்றம் நிலவும் சூழலில், அந்த விருது இரு நாடுகளுக்கிடையேயான உறவைச் சீர்படுத்துவதற்காக வழங்கப்படுகிறதோ என்று அவன் சந்தேகிக்கிறான்.

 குறிப்பாக அமெரிக்காவுக்குச் செல்லும் மெக்சிகோ குடியேற்றவாசிகளைப் பற்றிய எதிர்மறையான பார்வைகளும், அமேசான் நிறுவனம் மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா மாநிலத்தை வாங்க முயற்சிப்பதும் இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் பதற்றத்தை அதிகரித்திருக்கின்றன.

இந்தச் சூழலில் சில்வெரியோ மெக்சிகோவுக்குத் திரும்புகிறான். அவனுடைய வருகை அந்நாட்டின் ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறுகிறது. 

அவன் தனது சொந்த நாட்டைப் பற்றியும், மெக்சிகோ அரசைப் பற்றியும் பேச வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

மெக்சிகோ அரசின் பிரச்சினைகளை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணமும், மெக்சிகோ மக்களைப் பற்றிய பொதுவான எதிர்மறையான கருத்துகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்குள் ஒரே நேரத்தில் இருக்கின்றன.

 இதனுடன் இன்னொரு குற்றவுணர்வும் அவனைத் துரத்துகிறது. தன்னால் அமெரிக்காவுக்குக் குடிபெயர முடிந்திருக்கிறது; 

ஆனால் எண்ணற்ற மெக்சிகோ மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், தான் அவர்களைவிட்டு விலகிச் சென்றுவிட்டதாக அவன் உள்ளுக்குள் உணர்கிறான்.

அவனைப் பற்றிய ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான நேர்காணலும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

 ஆனால் கடைசி நேரத்தில் சில்வெரியோ அந்த நேர்காணலை ரத்து செய்கிறான். பின்னர் அவன் தனது கணவன் மற்றும் தந்தை என்ற வாழ்க்கையைப் பற்றிய பழைய நினைவுகளில் மூழ்குகிறான்.

 அவனுடைய சொந்த நாட்டுடனான உறவும், குடும்பத்துடனான உறவும், அவன் தேர்ந்தெடுத்த வாழ்க்கையும் அவனுக்குள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புகின்றன.

அவனுடைய கௌரவத்திற்காக ஒரு குடும்ப விருந்து நடத்தப்படுகிறது. அங்கே சில்வெரியோ தனது சகோதரர்கள் மற்றும் விரிந்த குடும்பத்தினரைச் சந்திக்கிறான். 

அவர்களிடம் அவனுக்கு பெரிதாக உணர்ச்சிப் பிணைப்பு இருப்பதில்லை. ஆனால் அவனுடைய மகள் கமிலா காமாவிடம் (ஷிமேனா லமட்ரிட்) அவன் மிகுந்த பாசத்தைக் காட்டுகிறான். 

இதற்கிடையில், அவனுடைய படைப்புகளைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அவனை நேரடியாகத் தாக்குகிறார்.

 அதற்கு சில்வெரியோவும் அமைதியாக இருக்காமல், தொகுப்பாளரின் தனிப்பட்ட விஷயங்களை இழிவுபடுத்திப் பதிலளிக்கிறான். 

சூழ்நிலை மோசமடைய, சில்வெரியோ அங்கிருந்து விலகி கழிவறைக்குச் செல்கிறான்.

அங்கே அவனுடைய மனநிலை மீண்டும் நிஜத்திலிருந்து விலகுகிறது. இறந்துபோன தனது தந்தையுடனும் தாயுடனும் அவன் சமரசம் செய்து கொள்வது போன்ற காட்சிகளை அவன் கற்பனையில் காண்கிறான். 

பெற்றோருடனான பழைய உறவுகளும், தீராத உணர்வுகளும் அவனுடைய மனத்தில் உயிர்பெறுகின்றன.

 பின்னர் அவன் தனது தாயின் வீட்டிலிருந்து வெளியே வரும்போது, மெக்சிகோவின் வரலாற்றிலும் சமூகத்திலும் பதிந்திருக்கும் கொடூரங்கள் அவனுடைய கண்முன் குறியீட்டு காட்சிகளாக தோன்றுகின்றன.

ஒரு வணிகப் பகுதியில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் திடீரென கீழே விழுந்து கிடப்பதை அவன் பார்க்கிறான்.

 அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் கடத்தப்பட்ட அல்லது கொல்லப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். 

பின்னர் மெக்சிகோ நகரத்தின் சோகாலோ பகுதியில் எண்ணற்ற சடலங்களின் மேல் ஹெர்னான் கோர்டெஸ் (இவான் மாசாகே) அமர்ந்திருப்பதை சில்வெரியோ காண்கிறான்.

 கோர்டெஸ் அவனிடம் பழங்குடியின மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து பேசுகிறான். 

இவை அனைத்தும் சில்வெரியோவின் மனதில் வரலாறும் நிகழ்காலமும் ஒன்றாகக் கலந்துவிடும் விதத்தில் தோன்றுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸுக்குத் திரும்புவதற்கு முன்பு சில்வெரியோ தனது குடும்பத்துடன் பாஜா கலிபோர்னியாவுக்குச் செல்கிறான். 

அதே நேரத்தில், அமேசான் நிறுவனம் அந்த மாநிலத்தை வாங்குகிறது. இந்தப் பயணத்தின் போது கமிலா ஒரு முக்கியமான முடிவைச் சொல்கிறாள். 

பாஸ்டனில் இருக்கும் தனது வேலையை விட்டுவிட்டு மெக்சிகோவுக்குத் திரும்பப் போவதாக அவள் தந்தையிடம் கூறுகிறாள். 

சில்வெரியோ அந்த முடிவை முழுமையாக உற்சாகமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறான்.

மெக்சிகோவை விட்டு மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் முன், குடும்பத்தினர் மேடியோவின் சாம்பலைக் கடலில் கரைக்க முடிவு செய்கிறார்கள்.

 பல ஆண்டுகளாக தங்களுடன் வைத்திருந்த அந்தச் சாம்பலை இப்போது கடலிடம் ஒப்படைக்கிறார்கள். 

பின்னர் குடும்பம் அமெரிக்காவுக்குத் திரும்புகிறது. 

ஆனால் அமெரிக்க எல்லைச் சோதனையில், அவர்களைச் சந்திக்கும் ஒரு ஹிஸ்பானிக்-அமெரிக்க சுங்க அதிகாரி அவர்களிடம் அவமதிப்புடன் நடந்துகொள்கிறான்.

இதற்கிடையில் லோரென்சோவுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் சில்வெரியோவுக்கு நினைவுக்கு வருகிறது.

 லோரென்சோவின் செல்லப் பிராணிகளாக இருந்த ஆக்சலாட்டல்கள் இறந்துவிட்டிருந்தன. 

அந்த நினைவைத் தொடர்ந்து, லோரென்சோவுக்கு ஆச்சரியமாக சில புதிய ஆக்சலாட்டல்களை வாங்க சில்வெரியோ முடிவு செய்கிறான். 

அவற்றை வாங்கிவிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறான். இதே ரயில் பயணம் திரைப்படத்தின் முன்னர் வந்த ஒரு காட்சியைப் போன்றே மீண்டும் நிகழ்கிறது.

ஆனால் இந்த முறை சில்வெரியோவின் உடலில் கடுமையான பக்கவாதம் ஏற்படுகிறது. 

ரயிலில் இருந்த அவன் யாருடைய கவனத்திற்கும் வராமல் பல மணி நேரம் அங்கேயே கிடக்கிறான். 

அவன் பின்னர் கோமா நிலைக்குச் செல்கிறான். இங்குதான் இதுவரை நடந்த சம்பவங்களின் உண்மை நிலை வெளிப்படுகிறது. 

சில்வெரியோ அனுபவித்ததாகக் காட்டப்பட்ட பல நிகழ்வுகளும், அவனுடைய கோமாவில் இருந்த மூளை தனது வாழ்க்கையையும் நினைவுகளையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருந்த மனக்காட்சிகளாக இருக்கின்றன.

சில்வெரியோ விருதைப் பெறச் செல்ல முடியாத நிலையில், அவனுடைய மகள் கமிலா அவனுக்குப் பதிலாக அந்த விருதைப் பெற்றுக்கொள்கிறாள். 

அதே நேரத்தில் அவனுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அவனுடைய படுக்கையைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள்.

 அவர்கள் அவனுடன் பேசுகிறார்கள். சிலர் பாடல்களைப் பாடுகிறார்கள். அவன் வாழ்க்கையில் ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்களும் தொலைக்காட்சி ஒலிபரப்புகளும் அவனுடைய அருகில் ஒலிக்கின்றன.

 இவ்வாறு வெளியில் நிஜமாக நடக்கும் சம்பவங்களும், அவனுடைய கோமா நிலையில் உள்ள மனதில் உருவாகும் கனவுகளும் ஒன்றோடொன்று தொடர்புபடுகின்றன.

பின்னர் சில்வெரியோவின் மனதுக்குள், எந்தத் தனிச்சிறப்பும் இல்லாத வெறிச்சோடிய பாலைவனப் பகுதி தோன்றுகிறது. 

அங்கே அவன் இறந்துபோன தனது குடும்ப உறுப்பினர்களை மீண்டும் சந்திக்கிறான். அதே நேரத்தில் உயிருடன் இருக்கும் தனது குடும்பத்தினரின் மனக்காட்சிகளை அவன் புறக்கணிக்கிறான். 

அங்கே அவனைப் போன்ற இன்னொரு சில்வெரியோ தோன்றுகிறான். இருவரும் சிறிது நேரம் ஒரே மாதிரியாக அசைவுகளைப் பிரதிபலிக்கிறார்கள். 

பின்னர் அந்த மற்றொரு சில்வெரியோ தனியாக விலகிச் செல்கிறான்.

திரைப்படம் தொடங்கியதைப் போலவே மீண்டும் சில்வெரியோ பாலைவனத்தின் மீது பறப்பது போன்ற ஒரு காட்சியுடன் முடிகிறது. 

ஆனால் அவன் உண்மையில் இறந்துவிட்டானா, கோமாவிலிருந்து மீண்டும் விழித்தெழுகிறானா, அல்லது தனது கடந்தகால நினைவுகள், இழப்புகள், குற்றவுணர்வுகள் மற்றும் மனச்சுமைகளுடன் வாழ்வதற்கான ஒரு நிலையை அடைகிறானா என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படாத சூழலில் படம் நிறைகிறது.

#கீதப்ப்ரியன்உலகசினிமா

Why Bodhi dharma has left to the east ? ஒய் போதி தர்மா ஹேஸ் லெஃப்ட் டு த ஈஸ்ட்

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் தேடும் அமைதி உண்மையில் எங்கே இருக்கிறது? உலகத்தை விட்டு விலகுவதிலா,

 மனிதர்களுக்குள் வாழ்வதிலா, அறிவைச் சேர்ப்பதிலா, அல்லது ‘நான்’ என்ற உணர்வையே கேள்விக்குள்ளாக்குவதிலா?

 1989-ல் வெளிவந்த பே யோங்-கியூனின் Why Bodhi dharma has left to the east ? “போதி தர்மா ஏன் கிழக்கே சென்றார்?” என்ற தென் கொரியத் திரைப்படம் இந்தக் கேள்விகளுக்கு நேரடியான பதில்களைத் தர முயல்வதில்லை. 

இந்தத் திரைப்படத்தில் போதிதர்மர் நேரடியாக வரும் கதாபாத்திரம் அல்ல.

போதிதர்மர் என்பது கி.பி. 5–6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய புத்தத் துறவி. அவர் இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்று, அங்கு தியானப் புத்தமத மரபான சான்  வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்ததாக மரபு கூறுகிறது. பின்னாளில் இந்த மரபே ஜப்பானில் ஜென்  என அறியப்பட்டது.

திரைப்படத்தின் தலைப்பு “போதிதர்மா ஏன் கிழக்கே சென்றார்?” என்பது அவருடைய அந்தப் பயணத்தைச் சுட்டுகிறது. ஆனால் திரைப்படத்தின் கதை போதிதர்மரின் வாழ்க்கைக் கதை அல்ல; மூன்று புத்தத் துறவிகளின் வழியாக வாழ்க்கை, மரணம், ‘நான்’ என்ற உணர்வு, பற்றின்மை, ஞானம் ஆகியவற்றை ஆராய்கிறது.

மாறாக, அந்தக் கேள்விகளுக்குள் பார்வையாளரையே மெதுவாக அழைத்துச் செல்கிறது.

 அதனால்தான் இது வழக்கமான கதையைப் பார்க்கும் அனுபவமாக இல்லாமல், ஒரு நீண்ட தியானத்தில் அமர்ந்திருப்பது போன்ற அனுபவமாக மாறுகிறது.

இந்தப் படத்தின் மிகப் பெரிய தனித்துவம் அதன் அணுகுமுறையில்தான் இருக்கிறது. 

இயக்குநர் பே யோங்-கியூன் ஒரு ஓவியராக அறியப்பட்டவர்; திரைப்படத்தை உருவாக்குவதற்காக ஏழு ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார். 

ஒரே ஒரு கேமராவைக் கொண்டு படமாக்கி, படத்தொகுப்பையும் தன் கையால் செய்திருக்கிறார்.

 இந்தப் பின்னணி வெறும் தயாரிப்பு வரலாறு அல்ல; திரைப்படத்தின் காட்சிமொழியைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான திறவுகோல்.

 ஒவ்வொரு காட்சியையும் அவசரமாக நகர்த்துவதற்குப் பதிலாக, ஒரு ஓவியத்தைப் பார்ப்பது போல காட்சிகளுக்குள் பார்வையாளரைத் தங்கவிடுகிறார்.

படத்தின் மையத்தில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த புத்தத் துறவிகளின் ஆன்மிக உலகம் இருக்கிறது. 

ஒரு சிறுவன், ஒரு இளம் துறவி, ஒரு வயதான ஞானி என்ற இந்த அமைப்பு மனித வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இவர்களைப் பற்றிய தகவல்களை வெறும் கதாபாத்திர அறிமுகமாக மட்டும் இயக்குநர் பயன்படுத்துவதில்லை.

 வாழ்க்கை, அறிவு, கடமை, தனிமை, ஆசை, மரணம், நிலையற்ற தன்மை ஆகியவற்றைப் பற்றி பார்வையாளர் சிந்திக்கச் செய்யும் மனிதர்களாக அவர்களை உருவாக்குகிறார்.

 குறிப்பாக வயதான ஞானியின் இருப்பு, “அறிந்துகொள்வது” என்பதற்கும் “உணர்ந்துகொள்வது” என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை ஆழமாக உணரச் செய்கிறது.

திரைக்கதை வழக்கமான காரணம்–விளைவு கொண்ட பரபரப்பான சம்பவங்களின் தொடராக அமைக்கப்படவில்லை. 

இது ‘ஹ்வாடு’ எனப்படும் ஜென் புத்தமதப் புதிர்களைச் சுற்றி சிந்தனையை உருவாக்குகிறது.

 “என் பெற்றோர் உருவாகுவதற்கு முன்பு என்னுடைய உண்மையான முகம் என்ன?” போன்ற கேள்விகள் பார்வையாளரிடம் ஒரு புதிராக மட்டுமல்லாமல், தனிமனித அடையாளத்தைப் பற்றிய கேள்வியாகவும் வந்து நிற்கின்றன. 

மற்றொரு கேள்வி மரணத்துடன் ‘நான்’ என்ற உணர்வுக்கு என்ன ஆகிறது என்பதைச் சிந்திக்க வைக்கிறது. 

இவற்றுக்கு திரைப்படம் எளிய விளக்கங்களை வழங்காமல் இருப்பதே அதன் வலிமை. பதில் கிடைக்காத கேள்வியுடன் அமர்ந்திருப்பதற்கே படம் நம்மைத் தயார்படுத்துகிறது.

இதனால் திரைப்படத்தின் வேகம் இன்றைய வழக்கமான திரைப்படங்களைப் போல இருக்காது. 

அவசரமான திருப்பங்களையோ தொடர்ச்சியான உரையாடல்களையோ எதிர்பார்த்து அமர்ந்தால், இந்தப் படம் மெதுவாக நகர்வதாகத் தோன்றலாம். 

ஆனால் அந்த மெதுவான நகர்வே இத்திரைப்படத்தின் திரைப்பட மொழியாகிறது.

 அமைதி, இடைவெளி, இயற்கையின் இயக்கம், மனித முகங்கள், நீண்ட நேரம் நிலைக்கும் காட்சிகள் ஆகியவை சேர்ந்து ஒரு தியான மனநிலையை உருவாக்குகின்றன. 

இங்கு “எதுவும் நடக்கவில்லை” என்று தோன்றும் தருணங்கள்கூட பார்வையாளரின் உள்ளே ஏதோ நடக்கச் செய்கின்றன.

ஒளிப்பதிவு இந்த அனுபவத்தின் முக்கியமான தூணாக இருக்கிறது. பே யோங்-கியூன் தானே ஒளிப்பதிவையும் மேற்கொண்டிருப்பதால், இயற்கை வெறும் பின்னணியாகத் தெரியவில்லை. 

மலை, காடு, நீர், வானம், வெளிச்சம், நிழல் ஆகியவை மனிதர்களுக்கு இணையான முக்கியத்துவத்துடன் காட்சிகளுக்குள் இருக்கின்றன.

 குறிப்பாக இயற்கையையும் மனிதர்களையும் தனித்தனியாகப் பார்க்காமல், ஒரே வாழ்க்கைச் சூழலின் பகுதிகளாகப் பார்க்கும் விதம் படத்திற்கு தனித்துவமான அழகைத் தருகிறது. 

ஓவியரின் கண் கேமராவின் வழியாக வேலை செய்வதை உணர முடிகிறது.

காட்சியமைப்பிலும் இதே அணுகுமுறை தொடர்கிறது. தொலைதூர மலை மடத்தின் அமைதி, இயற்கையுடன் கலந்த மனித வாழ்க்கை, ஒளிக்கும் இருளுக்கும் இடையிலான மாறுபாடு ஆகியவை கதையை அலங்கரிப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. 

அவை திரைப்படத்தின் சிந்தனையை உருவாக்கும் காட்சிப் பொருட்களாக மாறுகின்றன. 

ஒரு மனிதன் உலகில் எவ்வளவு சிறியவன் என்பதையும், அதே நேரத்தில் அவனுடைய உள்ளார்ந்த கேள்விகள் எவ்வளவு பெரியவை என்பதையும் காட்சிகள் உணர்த்துகின்றன.

படத்தொகுப்பும் இதே பொறுமையைப் பின்பற்றுகிறது. காட்சிகளை வேகமாக வெட்டி பார்வையாளரின் கவனத்தைப் பிடிக்க முயல்வதற்குப் பதிலாக, ஒரு காட்சியின் அமைதியையும் அதன் உணர்வையும் அனுபவிக்க நேரம் கொடுக்கிறது. 

இந்த மெதுவான படத்தொகுப்பு திரைப்படத்தின் ஆன்மிகத் தன்மையை வலுப்படுத்துகிறது. இங்கு இடைவெளி என்பது வெற்றிடம் அல்ல; சிந்திப்பதற்கான இடம்.

இசை மற்றும் ஒலியமைப்பிலும் அளவுக்கு மீறிய பயன்பாடு இல்லை. இயற்கையின் ஒலிகள், அமைதி, சூழலின் மெல்லிய சத்தங்கள் ஆகியவை பார்வையாளரை அந்த மலை உலகத்துக்குள் இழுத்துச் செல்கின்றன. 

பல திரைப்படங்களில் இசை உணர்ச்சியை நமக்குச் சொல்லிவிடும். இங்கு அமைதியே பல நேரங்களில் உணர்ச்சியின் மொழியாகிறது.

 அதனால் காட்சிகளைப் பார்ப்பதற்கும் அவற்றைக் கேட்பதற்கும் இடையே ஒரு தனித்துவமான அனுபவம் உருவாகிறது.

நடிப்பும் அதே கட்டுப்பாட்டைக் கொண்டது. ஹே-ஜின் (இ-பான்-யோங்), கி-போங் (சின்-வோன்-சொப்), ஹ்யே-கோக் ஆகிய மூன்று மையப் பாத்திரங்களின் வெளிப்பாடு மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளால் கட்டமைக்கப்படவில்லை.

 குறிப்பாக துறவிகளின் உலகில் உள்ள அமைதியும் உள்ளார்ந்த போராட்டமும் முகபாவனைகள், உடல்மொழி, பார்வை, மௌனம் ஆகியவற்றின் வழியே வெளிப்படுகின்றன. 

இதனால் நடிப்பு “நடிப்பது” போலத் தெரியாமல், அந்த மனிதர்கள் உண்மையில் வாழ்கிறார்கள் என்ற உணர்வைத் தருகிறது.

கலை இயக்கமும் ஆடை வடிவமைப்பும் திரைப்படத்தின் காலத்தையும் சூழலையும் இயல்பாக உருவாக்குகின்றன.

 எந்தவொரு அம்சமும் பார்வையாளரின் கவனத்தைத் தன்னிடம் இழுக்கும் வகையில் அலங்கரிக்கப்படவில்லை. 

மடம், இயற்கைச் சூழல், துறவிகளின் எளிய வாழ்க்கை ஆகியவை ஒன்றோடொன்று இயற்கையாகப் பொருந்துகின்றன. 

இதனால் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் கதை என்பதைத் தாண்டி, காலத்திலிருந்து சற்றே விலகி நிற்கும் உலகமாகத் தோன்றுகிறது.

இத்திரைப்படத்தின் மனிதநேயப் பார்வையும் குறிப்பிடத்தக்கது. இது புத்தமதத்தைப் பற்றிய போதனைத் திரைப்படமாக மட்டும் செயல்படுவதில்லை.

 ஒருவர் தனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், கடமைக்கும் தனிப்பட்ட அமைதிக்கும் இடையே என்ன உறவு, மனிதன் எதற்கு ஆசைப்படுகிறான், அவன் எதைத் தன்னுடையது என்று நினைக்கிறான், மரணத்தை எப்படி எதிர்கொள்கிறான் போன்ற உலகளாவிய கேள்விகளை முன்வைக்கிறது. அதனால் புத்தமதப் பின்னணி தெரியாத பார்வையாளருக்கும் இதன் கேள்விகள் அந்நியமாகத் தோன்றுவதில்லை.

திரைப்படத்தின் தலைப்பே ஒரு புதிராக அமைந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்று ஜென் மரபுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் போதிதர்மரைச் சுட்டிக்காட்டும் இந்தத் தலைப்பு, புவியியல் பயணத்தைப் பற்றிய கேள்வியாக மட்டும் இல்லை.

 ஒரு மனிதன் ஏன் ஒரு திசையில் செல்கிறான், அவன் உண்மையில் எதைத் தேடிச் செல்கிறான் என்ற பெரிய கேள்விக்கான கதவாக அது செயல்படுகிறது. 

ஆனால் திரைப்படம் அந்தத் தலைப்புக்கு ஒரு எளிய விளக்கத்தை வழங்காமல் இருப்பதே அதன் அழகு.

தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தப் படம் தனித்துவமானது. ஏழு ஆண்டுகள் தனிப்பட்ட உழைப்புடன் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பதும், இயக்கம், திரைக்கதை, தயாரிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பல பொறுப்புகளை ஒரே கலைஞர் ஏற்றுக்கொண்டிருப்பதும் அதன் உருவாக்கத்தில் காணப்படும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. 

இது மிகப்பெரிய தயாரிப்பு வளங்களின் வலிமையால் உருவான திரைப்படம் அல்ல; ஒரு தனிப்பட்ட கலைப் பார்வையை முழுமையாகத் திரைப்படமாக மாற்றிய முயற்சி.

இதன் உலகளாவிய வரவேற்பும் குறிப்பிடத்தக்கது. 1989-ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவின் “ஒரு குறிப்பிட்ட பார்வை” பிரிவில் படம் திரையிடப்பட்டது. 

அதே ஆண்டில் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதையும், சமயநல்லிணக்க நடுவர் குழுவின் விருதையும் பெற்றது.

 மேலும், அமெரிக்காவில் திரையரங்குகளில் வெளியான முதல் தென் கொரியத் திரைப்படம் என்ற முக்கியமான சாதனையையும் பெற்றது.

 1993-ல் நியூயார்க்கில் அதன் அமெரிக்கத் திரையரங்கு வெளியீடு தொடங்கி, பின்னர் முப்பதுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைந்தது.

“போதி தர்மா ஏன் கிழக்கே சென்றார்?” என்பது அனைவரையும் ஒரே விதமாகக் கவரும் திரைப்படம் அல்ல. வேகமான கதை, அதிக உரையாடல், தொடர்ச்சியான திருப்பங்கள் ஆகியவற்றை விரும்புபவர்களுக்கு இதன் மெதுவான லயம் சவாலாக இருக்கலாம். 

ஆனால் திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், ஒரு கலை அனுபவமாகவும் உள்நோக்கிய பயணமாகவும் பார்க்கத் தயாராக இருப்பவர்களுக்கு இது மிகவும் அரிதான அனுபவம். 

 இது பதில்களைச் சொல்லிவிடும் திரைப்படம் அல்ல; உங்கள் மனதில் ஒரு கேள்வியை விதைத்து, திரை அணைந்த பிறகும் அந்தக் கேள்வியுடன் உங்களைத் தனியாக விட்டுச் செல்லும் திரைப்படம். 

அதனால்தான் பல தசாப்தங்களுக்குப் பிறகும் இதைப் பார்ப்பதற்கான காரணம் அதன் கதை மட்டுமல்ல—அது நம்மை நாமே பார்க்கச் செய்யும் விதம்தான்.

===============================
படத்தின் கதை:-

ஒரு அனாதைச் சிறுவனான ஹே-ஜின், இளம் துறவியான கி-போங், வயதான ஜென் ஞானியான ஹ்யே-கோக் ஆகிய மூவரைச் சுற்றியே கதை நகர்கிறது. 

ஹே-ஜின் ஒரு புத்த மடத்தில் வளர்ந்து வரும் சிறுவன். கி-போங் இளம் வயதிலேயே உலக வாழ்க்கையைத் துறந்து, அமைதியையும் முழுமையான ஆன்மிக நிறைவையும் தேடி புத்தத் துறவியாகியிருக்கிறான்.

 ஹ்யே-கோக் உயரமான மலையில், மற்றவர்களிடமிருந்து விலகி அமைந்துள்ள தொலைதூர மடத்தில் தனிமையாக வாழும் வயதான ஞானி. 

வாழ்க்கை, மரணம், அறிவு, ஆசை, பற்றுதல் ஆகியவற்றின் உண்மையைத் தேடிக்கொண்டிருக்கும் அவரிடம் கி-போங் அனுப்பப்படுகிறான்.

கதை தொடங்கும் போது ஹே-ஜின் ஒரு பறவையைக் காயப்படுத்துகிறான். குளித்துக்கொண்டிருக்கும்போது அவனால் அந்தப் பறவைக்கு காயம் ஏற்படுகிறது.

 காயமடைந்த பறவையின் துணைப் பறவை அங்கிருந்து பறந்து செல்லாமல், தன் துணைக்கு என்ன ஆகிறது என்பதைப் பார்ப்பதுபோல் அருகிலேயே தங்கியிருக்கிறது.

 காயமடைந்த பறவையை ஹே-ஜின் எடுத்துச் சென்று குணப்படுத்த முயல்கிறான். ஆனால் பின்னர் அந்தப் பறவை இறந்துவிடுகிறது. 

இதற்குப் பிறகு, ஒரு மாடு தன்னை அடைத்து வைத்திருக்கும் வேலியை உடைத்துக்கொண்டு வெளியேறி காட்டுக்குள் ஓடிச் செல்லும் காட்சி வருகிறது.

இதற்கிடையில், மடத்தின் தலைமைத் துறவி கி-போங்கை அழைத்து, மலைப்பகுதியில் தனியாக வாழும் ஹ்யே-கோக்கிடம் சென்று அவருக்கு உதவும்படி அறிவுறுத்துகிறார். 

கி-போங் உலக வாழ்க்கையைத் துறந்ததன் நோக்கம் அமைதியையும் பரிபூரணத்தையும் அடைவதே. அதனால் அவர் வயதான ஞானியிடம் சென்று அவருடன் தங்குகிறார். 

ஆனால் ஹ்யே-கோக் சாதாரண ஆசிரியரைப் போல புத்தக அறிவையோ விளக்கங்களையோ கற்றுக்கொடுப்பதில்லை.

 அறிவின் நிலையற்ற தன்மையை அவர் ஏற்கனவே உணர்ந்திருக்கிறார். எனவே, கி-போங்கின் கேள்விகளுக்கு நேரடியான பதில்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, பதில் ஒன்றுக்குள் அடங்காத ஆன்மிகப் புதிர்களைக் கொடுத்து அவற்றைத் தானாகவே உணரச் செய்கிறார்.

அவர் கி-போங்கிடம் இரண்டு முக்கியமான கேள்விகளை முன்வைக்கிறார். 

முதலாவது, “என் தந்தையும் தாயும் உருவாகுவதற்கு முன்பு என்னுடைய உண்மையான முகம் எது?” என்பதாகும். 

இரண்டாவது, “நிலவு உன் இதயத்தை ஆக்கிரமிக்கும் நேரத்தில், அதாவது ஞானம் அல்லது மரணம் வரும் நிலையில், உன்னுள் இருக்கும் ‘நான்’ என்ற எஜமானன் எங்கே செல்கிறான்?” என்பதாகும்.

 இவை சாதாரண விடை சொல்லக்கூடிய கேள்விகள் அல்ல. அவற்றை மனதில் தொடர்ந்து வைத்துக்கொண்டு உணர்வதன் மூலமே உண்மையை அடைய முடியும் என்று ஹ்யே-கோக் கருதுகிறார்.

 அதனால் அவற்றை “பற்களுக்கு இடையில் கடித்து வைத்திருப்பதைப் போல” விடாமல் பிடித்துக்கொண்டு விடையைத் தேடும்படி கி-போங்கிடம் கூறுகிறார்.

 அவற்றை உணர்ந்து தீர்க்க முடிந்தால் அசைக்க முடியாத அமைதியை அடைய முடியும் என்று அவர் சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் ஹ்யே-கோக்குக்குத் தேவையான மருந்தை வாங்குவதற்காக கி-போங் மலைப்பகுதியிலிருந்து ஊருக்குச் செல்கிறான்.

 அதற்கான பணத்தை அவன் பிச்சை எடுத்து பெற்றிருக்கிறான். மருந்து வாங்கச் சென்றபோது, அங்கே அவன் தன் கண்பார்வையற்ற தாயையும் சந்திக்கிறான்.

 வயதாகியிருக்கும் அவளால் தன்னையே சரியாகப் பார்த்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுகிறாள். தன் தாயின் நிலையை நேரில் பார்த்த பிறகு கி-போங்கின் மனம் கலங்குகிறது. 

உலக வாழ்க்கையைத் துறந்து மலைக்குச் சென்று ஆன்மிக அமைதியைத் தேடிக்கொண்டிருக்கும் அவன், உண்மையில் தன்னுடைய தாய் மற்றும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமையை விட்டுவிட்டு வந்திருக்கிறான் என்பதை உணர்கிறான். 

இதனால் அவன் தன் துறவற வாழ்க்கையே சுயநலமானது போலத் தோன்றுகிறது.

அந்த மனநிலையுடன் கி-போங் மீண்டும் மலை மடத்திற்குத் திரும்புகிறான்.

 ஹ்யே-கோக்கிடம், தான் மீண்டும் மனிதர்களிடையே சென்று வாழ விரும்புவதாகவும், மனித வாழ்க்கையின் அழுக்குகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு சமூகத்திற்குள் திரும்ப விரும்புவதாகவும் கூறுகிறான். 

ஆனால் அவனுடைய இந்த முடிவை ஹ்யே-கோக் கடுமையாகக் கண்டிக்கிறார். இருந்தாலும் அவனை வலுக்கட்டாயமாகத் தடுக்கவில்லை. 

எனவே கி-போங் மடத்தை விட்டு தனது பழைய மனித வாழ்க்கைக்குத் திரும்புவதற்காகப் புறப்படுகிறான்.

ஆனால் மலையிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. 

அந்த வெள்ளத்தில் கி-போங் சிக்கி கிட்டத்தட்ட மூழ்கிவிடுகிறான். அவனை ஹே-ஜின் கண்டுபிடிக்கிறான். பின்னர் ஹ்யே-கோக் அவனை மீட்டு காப்பாற்றுகிறார். 

கி-போங் மயக்க நிலையில் இருக்கிறான். அவன் மீண்டும் சுயநினைவு பெறும்போது, ஹே-ஜின் அவனிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறான்: 

ஹ்யே-கோக் நீண்ட நேரமாகத் தியானத்தில் இருக்கிறார்; ஆனால் இப்போது அவர் மிகவும் உடல்நலக்குறைவாக இருக்கிறார்.

இதைக் கேட்ட கி-போங் அதிர்ச்சியடைகிறான். தன்னை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக ஹ்யே-கோக் தனது உயிர்சக்தியையே தியாகம் செய்திருக்கிறார் என்பதை அவன் உணர்கிறான். 

உலக வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்த கி-போங்கின் மனம் இப்போது முற்றிலும் மாறுகிறது.

 தன்னைப் பற்றிய அக்கறையைவிட, தன்னை காப்பாற்றிய குருவின் வாழ்க்கை அவனுக்கு முக்கியமாகிறது. அவன் ஹ்யே-கோக்கைச் சந்திக்கச் செல்கிறான்.

ஹ்யே-கோக் கி-போங்கிடம் தன்னுடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும்படி கேட்கிறார். 

தன் உடலை மலைமேட்டின் மீது வைத்து எரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். அப்படிச் செய்தால்தான் தான் தனது “மூல இடத்திற்குத்” திரும்ப முடியும் என்று அவர் கூறுகிறார். 

கி-போங் அந்த வாக்குறுதியை ஏற்றுக்கொள்கிறான்.

அப்போது, அருகில் நடைபெறவிருக்கும் முழுநிலவு நாளைய திருவிழா பற்றிய செய்தி அவர்களிடம் வருகிறது. அந்த விழாவுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கி-போங் விரும்புகிறான்.

 ஹே-ஜினையும் தன்னுடன் அழைத்துச் செல்ல நினைக்கிறான். அந்த நேரத்தில் ஹ்யே-கோக்கின் உடல்நிலை சற்றுச் சீரானது போலத் தெரிகிறது. 

அதனால் அவர் இருவரையும் விழாவுக்குச் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் திரும்பி வரும்போது தனக்குத் தேவையான அளவு மண்ணெண்ணெயைக் கொண்டு வரும்படி கி-போங்கிடம் கூறுகிறார்.

கி-போங்கும் ஹே-ஜினும் திருவிழாவுக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் ஒரு மயக்கும் நடனத்தைப் பார்க்கிறார்கள்.

 அந்த நடனத்தை ஆடுபவர் வேறு யாருமல்ல; வயதான ஹ்யே-கோக்கே வேறொரு வடிவத்தில் தோன்றுவதாக வெளிப்படுகிறது. 

விழா முடிந்து பிரகாசமான முழுநிலவு இரவில் இருவரும் மலை மடத்திற்குத் திரும்புகிறார்கள்.

ஆனால் அவர்கள் திரும்பி வந்தபோது ஹ்யே-கோக் இறந்துவிட்டிருப்பதை அறிகிறார்கள். 

கி-போங் ஏற்கனவே அவரிடம் அளித்திருந்த வாக்குறுதியை நினைவுகூர்கிறான். குருவின் உடலை அவர் விரும்பியபடி மலைமேட்டில் எடுத்துச் சென்று எரிக்க வேண்டும். 

மரணம், உடைமை, ஆசை, பற்றுதல், அறிவின் வீண்மை ஆகியவற்றின் உண்மையான பொருளும் பொருளற்ற தன்மையும் ஒவ்வொரு கணத்திலும் அவனுக்குள் ஆழமாகத் தோன்றத் தொடங்குகிறது.

கி-போங் ஹ்யே-கோக்கின் உடலை ஒரு மரப்பெட்டிக்குள் வைக்கிறான். 

அந்தப் பெட்டியை விறகுக் கட்டுகளைச் சுமக்கும் முதுகுச் சுமையின் மீது வைத்து, மலைப்பாதையில் மெதுவாக மேலே ஏறத் தொடங்குகிறான். இது அவன் முன்பு விறகுகளைச் சுமந்து சென்றபோது பயன்படுத்திய அதே சுமையைப் போன்றது. 

உடலின் பாரம் மட்டுமல்லாமல், குருவின் மரணத்தையும் அதன் பொருளையும் தன்னுள் சுமந்தபடி அவன் கடினமான மலைப்பாதையை ஏறுகிறான்.

இரவு நேரத்தில் அவன் இறுதியாக உடலை எரிக்கும் இடத்தை அடைகிறான். அங்கு மரப்பெட்டியை வைத்து தீ மூட்ட முயற்சி செய்கிறான். 

ஆனால் லேசான மழைத்தூறல் பெய்வதால் தீ பற்றவில்லை. அப்போது ஹ்யே-கோக் முன்பு தன்னிடம் மண்ணெண்ணெய் கொண்டு வரச் சொன்னதை கி-போங் நினைவுகூர்கிறான்.

 உடனே மீண்டும் மடத்திற்குச் சென்று மண்ணெண்ணெயை எடுத்துக்கொண்டு வருகிறான். அதை கொண்டு வந்து மரப்பெட்டியின் மீது ஊற்றி தீ மூட்டுகிறான்.

இரவு முழுவதும் கி-போங் எரியும் உடலின் அருகிலேயே அமர்ந்திருக்கிறான். குருவை இழந்த துயரம், மரணத்தின் தவிர்க்க முடியாத உண்மை, தன்னுடைய வாழ்க்கை, ஆசைகள், பற்றுதல்கள் ஆகிய அனைத்தும் அவனுடைய மனதை ஆழமாகப் பாதிக்கின்றன. 

எரியும் உடலைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதுவரை புத்தக அறிவாலும் போதனைகளாலும் புரிந்துகொள்ள முயன்ற மரணத்தின் உண்மையை அவன் நேரடியாக எதிர்கொள்கிறான்.

அந்த எரியும் உடலைச் சுற்றி மாடும் ஹே-ஜினும் தோன்றுகிறார்கள். இருவரும் அந்தத் தீயை ஆழமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

 இளம் வயதின் அறியாமையும் கட்டுப்பாடற்ற ஆசைகளும் கூட மரணத்தின் முன்னால் அமைதியாகிப் போவதைப் போன்ற காட்சி அங்கே உருவாகிறது.

காலை வரும்போது இறுதிச் சடங்கின் நெருப்பு முழுவதும் அணைந்துவிடுகிறது. கி-போங் சாம்பலின் நடுவே முழங்காலிட்டு அமர்கிறான்.

 தனது விரல்களால் அந்தச் சாம்பலைத் தேடுகிறான். ஹ்யே-கோக்கின் உடல் முழுவதும் எரிந்து அழிந்துவிட்டாலும், சில எலும்புத் துண்டுகள் மட்டும் எஞ்சியிருப்பதை அவன் கண்டுபிடிக்கிறான். 

அவற்றைச் சேகரிக்கிறான். பின்னர் ஒரு கல்லைப் பயன்படுத்தி அந்த எலும்புகளைப் பொடியாக்குகிறான்.

அதன்பின் அந்த எலும்புத் தூளை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் செல்கிறான். அதைத் தண்ணீரிலும், மண்ணிலும், மரங்களிலும், செடிகளிலும் தூவுகிறான்.

 ஹ்யே-கோக் இறப்பதற்கு முன்பு, தன் உடலை எரித்து தனது “மூல இடத்திற்குத்” திரும்ப வேண்டும் என்று கூறியிருந்தார். 

இப்போது கி-போங் அந்த உடலின் எஞ்சியதையும் உலகின் பல்வேறு இயற்கைத் தன்மைகளுக்குள் கலந்து விடுவதன் மூலம் குருவை அவர் கூறிய அந்த மூல இடத்திற்கே திருப்பி அனுப்புகிறான்.

இந்தச் செயலைச் செய்யும் போது, ஹ்யே-கோக் தன்னிடம் முன்பு கூறிய புதிர்களின் உண்மையை கி-போங் இறுதியாக உணர்கிறான்.

 மரணம் எதையாவது முழுமையாக அழித்துவிடுகிறதா, ஒருவருடைய “நான்” என்ற உணர்வு எங்கே செல்கிறது, மனிதன் எதைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறான் என்பவை போன்ற கேள்விகளுக்கு வெளியில் இருந்து ஒரு பதிலைப் பெறுவதற்குப் பதிலாக, அவற்றின் உண்மையை அவன் நேரடியாக அனுபவிக்கிறான்.

 இதன் மூலம் ஹ்யே-கோக் கூறிய அசைக்க முடியாத அமைதியை அவன் அடைகிறான்.

அதன்பின் கி-போங் மீண்டும் மடத்திற்குத் திரும்புகிறான். அங்கு ஹே-ஜினிடம் ஹ்யே-கோக்கிடம் மீதமுள்ள சில பொருட்களை கவனித்துக்கொள்ளும்படி கூறுகிறான்.

 பின்னர் அவன் மடத்தை விட்டு வெளியேறுகிறான்.

இதற்குப் பிறகு ஹே-ஜினின் வாழ்க்கையில் ஒரு புதிய நிலை தொடங்குகிறது. 

அவன் சிறுவனாக இருந்த நிலையிலிருந்து மெதுவாக வளர்ந்து, ஹ்யே-கோக்கிடம் கற்றவற்றைத் தன்னுள் ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறான். 

ஒரு விளையாட்டுக் காட்சியில், முந்தைய இரவில் நடந்த இறுதிச் சடங்கைத் தானே சிறிய அளவில் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறான். 

வயதான குருவிடம் எஞ்சியிருந்த பொருட்களைச் சேகரித்து, அவற்றை எரிக்கிறான். 

கி-போங் முந்தைய இரவில் குருவின் உடலை எரித்ததைப் போலவே, ஹே-ஜினும் இப்போது சிறிய அளவில் அதே செயலைச் செய்கிறான்.

இந்தச் செயலின் வழியாக, ஹே-ஜின் ஹ்யே-கோக் கற்றுக்கொடுத்த நிலையற்ற தன்மையை நினைவுகூர்கிறான்.

 மறுநாள் காலையில் அவன் எழுந்து வழக்கம்போல் ஓடைக்குச் சென்று தண்ணீர் எடுக்கிறான். அந்த நேரத்தில் முன்பு காயமடைந்து இறந்த பறவையின் துணைப் பறவை வழக்கம்போல சத்தமிட்டு அவனுடைய கவனத்தைத் திருப்ப முயல்கிறது. 

ஆனால் இந்த முறை ஹே-ஜின் அந்தப் பறவையின் சத்தத்தைக் கவனிப்பதில்லை.

ஹே-ஜினின் கற்றல் இப்போது நிறைவடைந்திருக்கிறது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமானது அல்ல என்பதையும், உருவான அனைத்தும் மாறி மறையும் என்பதையும் அவன் உணர்ந்துவிட்டான். 

அவன் மடத்திற்குள் சென்று ஹ்யே-கோக் வாழ்ந்த அறைக்குள் நுழைகிறான்.

 பின்னர் அந்த அறையின் கதவை மூடுகிறான். வயதான குரு இறந்துவிட்ட நிலையில், அந்த இடத்தை இப்போது ஹே-ஜின் ஏற்றுக்கொண்டிருக்கிறான்.

இறுதியில், முன்பு நிழலில் மட்டுமே காட்டப்பட்டுக்கொண்டிருந்த மாடு மீண்டும் தோன்றுகிறது.

 இம்முறை அது தனியாக இல்லை; அதன் அருகில் ஒருவர் நடந்து செல்கிறார். அவர்கள் இருவரும் வெளிச்சத்தில் நகர்கிறார்கள். 

அதே நேரத்தில் பறவை பறந்து செல்கிறது. ஹ்யே-கோக்கின் மரணம், கி-போங்கின் உணர்வு, ஹே-ஜினின் வளர்ச்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக, பழைய நிலை முடிந்து புதிய நிலை உருவாகிறது.

#கீதப்ப்ரியன்உலகசினிமா 
#கீதப்ப்ரியன்க்ளாஸிக்
#கீதப்ப்ரியன்ஏசியன்க்ளாஸிக்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (233) ஆஸ்கர் (152) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)