இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் (21 செப்டம்பர் 1931 - 3 அக்டோபர் 2026)
இந்தியத் திரையுலகின் மிகவும் பன்முகத்தன்மையும் பரிசோதனை முயற்சியும் கொண்ட முதன்மை இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் எனப் பல தளங்களில் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை உருவாக்கித் தென்னிந்திய சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தியவர்.
இரண்டு தேசிய விருதுகள், ஐந்து நந்தி விருதுகள், மூன்று கர்நாடக மாநில விருதுகள் மற்றும் மூன்று ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ள இவர், 2011-ல் ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா வழங்கிய வாழ்நாள் சாதனை விருதையும் பெற்றவராவார்.
1931 செப்டம்பர் 21 அன்று அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியின் நெல்லூர் மாவட்டத்திலிருந்த கூடூரில் ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தந்தை ராமச்சந்திர ராவ் பள்ளித் தலைமை ஆசிரியராகவும், தாயார் சகுந்தலா பாய் வயலின் கலைஞராகவும் இருந்தனர்.
சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்ற இவர், கல்லூரிக் காலத்தில் நாடகக் கலைஞர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய வழிகாட்டலில் நாடகங்களில் ஈடுபட்டார்.
சிறுவயதில் அமெரிக்க மிஷனரி மூலம் மார்க் ட்வெயினின் படைப்புகள் அறிமுகமானதுடன், தெலுங்குக் கவிஞர் வேமனா மற்றும் பி. ஜி. வோட்ஹவுஸ் ஆகியோரைத் தனது இலக்கிய உந்துதல்களாகக் கொண்டிருந்தார்.
பட்டப்படிப்புக்குப் பின் சினிமாவில் நுழையும் முயற்சியில், புகழ்பெற்ற இயக்குநர் K. V. ரெட்டியின் சந்திப்பு உடனடியாக அமையாததால் சுள்ளூர்பேட்டாவில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அக்காலகட்டத்தில் 'பிரம்மா', 'அந்த்யகட்டம்' போன்ற பரிசோதனை நாடகங்களையும், தாகூரின் படைப்பைத் தழுவி 'சித்ரார்ஜுனா' என்ற இசை நாடகத்தையும் எழுதினார்.
இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்கத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.
'தெலுகு சுதந்திரா' இதழில் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். 1954-ல் K. V. ரெட்டியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்று, ' த மங்கீஸ் பா' கதையைத் தழுவி மூன்று மாதங்களில் திரைக்கதை எழுதிக் கொடுத்தார். இதனால் ஈர்க்கப்பட்ட K. V. ரெட்டி, அவரைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.
'தொங்க ராமுடு' (1955), 'மாயாபஜார்' (1957), 'ஜகதேக வீருனி கதா' (1961), 'ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம்' (1963) முதல் 'உமா சண்டி கௌரி சங்கருல கதா' (1968) வரையிலான கே.வி. ரெட்டியின் அனைத்து முக்கியப் படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றித் திரைப்படக் கலையைக் கற்றுக்கொண்டார்.
1972-ல் 'நீதி நிஜாயிதி' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வணிக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாகக் கவனத்தைப் பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து,
சமூகப் பிரச்சினையைப் பேசிய 'தாரம் மாறிந்தி' (1977) சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதைப் பெற்றது.
1974-ல் ராஜாஜியின் நாவலைத் தழுவி இவர் இயக்கிய 'திக்கற்ற பார்வதி' திரைப்படம், தமிழின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும், ஃபிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது.
1985-ல் விபத்தில் காலை இழந்த நடனக் கலைஞர் சுதா சந்திரனின் நிஜ வாழ்க்கைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அவரையே நடிக்க வைத்து இவர் இயக்கிய 'மயூரி' திரைப்படம் 14 நந்தி விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
பின்னாளில் இது இந்தியில் 'நாச்சே மயூரி' என மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.
1987-ல் வச வசனமே இல்லாத இந்தியத் திரையுலகின் முதல் முழுநீள மௌனப் படமான 'புஷ்பக விமானம்' திரைப்படத்தைத் தயாரித்து, எழுதி, இயக்கினார்.
கமல்ஹாசன் நடித்த இப்படம் அகில இந்திய அளவில் மிகப்பெரிய வணிக வெற்றியையும், சிறந்த பொழுதுபோக்குப் படத்திற்கான தேசிய விருதையும், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புக் குறிப்பையும் பெற்றது.
1991-ல் இவர் இயக்கிய 'ஆதித்யா 369' தெலுங்குத் திரையுலகின் முதல் கால எந்திரப் பயண அறிவியல் புனைகதைத் திரைப்படமாக அமைந்து மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.
1994-ல் நாட்டுப்புறக் கற்பனைக் கதையான 'பைரவ தீபம்' திரைப்படத்தை இயக்கிச் சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதைப் பெற்றார்.
'ஜமீந்தாரு காரி அம்மாயி', 'அமெரிக்க அம்மாயி', 'பந்துலம்மா', 'பிருந்தாவனம்', 'மேடம்', 'ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன விஜயம்' எனப் பல வகைமை கொண்ட ஜனரஞ்சகப் படங்களை தெலுங்கில் தந்தார்.
2003-ல் 1,100 காட்சிகள் மற்றும் 125 கதாபாத்திரங்கள் கொண்ட 'சன் ஆஃப் அலாதின்' மற்றும் 'கடோத்கஜ' போன்ற அனிமேஷன் திரைப்படங்களையும் உருவாக்கித் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றார்.
2013-ல் வணிக ரீதியான வாடகைத் தாய் முறையைப் பேசும் 'வெல்கம் ஒபாமா' படத்தை இயக்கியவர், 'கல்கி 2898 AD' திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டியாக இருந்தார்.
கமல்ஹாசனுடன் இவர் அமைத்த கூட்டணி தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் பல தரம்மிகுந்த மைல்கற்களை உருவாக்கியது.
கமல்ஹாசனின் 100-வது திரைப்படமான 'ராஜபார்வை' (1981) தெலுங்கில் அமாவாச சந்துருடு திரைப்படத்தை இயக்கிய பெருமை சிங்கீதத்தையே சேரும். பார்வை மாற்றுத்திறனாளியின் காதல் கதையை மிக நுட்பமாகச் சொன்ன இத்திரைப்படம் தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத காவியங்களில் ஒன்றாகும்.
தொடர்ந்து 'சொம்மொகடிதி சொகடிதி', 'புஷ்பக விமானம்', 'அபூர்வ சகோதரர்கள்' (1989), 'மைக்கேல் மதன காம ராஜன்' (1990), 'மகளிர் மட்டும்' (1994), 'சின்ன வாத்தியார்' (1995), 'காதலா காதலா' (1998), 'மும்பை எக்ஸ்பிரஸ்' (2005) என இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் தமிழ் சினிமாவின் உச்சகட்ட நகைச்சுவை மற்றும் தொழில்முறைப் பரிசோதனைகளாக அமைந்தன.
குறிப்பாக 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் குள்ளமான கதாபாத்திரத்தை உருவாக்கிய தொழில்நுட்ப நேர்த்தியும், 'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தில் நான்கு ஒரே மாதிரியான உருவம் கொண்ட மனிதர்களின் திரைக்கதை சிக்கலமைப்பும் உலகளவில் பாராட்டப்பட்டன.
கன்னடத் திரையுலகில் ராஜ்குமாருடன் இணைந்து 1982-ல் 'ஹாலு ஜேனு' மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய சிங்கீதம், 'சலிசுவ மோடகளு', 'எரடு நக்ஷத்ரகளு', 'ஸ்ராவண பந்து', 'ஜ்வாலாமுகி', 'பாக்யத லக்ஷ்மி பாரம்மா', மற்றும் ராஜ்குமாரின் 200-வது திரைப்படமான 'தேவதா மனித' (1988) என ஏழு தொடர் வெற்றிப் படங்களை இயக்கிப் பொற்காலம் படைத்தார்.
கன்னட ராஜ்குமாரின் மகன்களான சிவராஜ்குமார் ('ஆனந்த்'), ராகவேந்திர ராஜ்குமார் ('சிரஞ்சீவி சுதாகர்') ஆகியோரின் அறிமுகப் படங்களையும், புனித் ராஜ்குமாரை குழந்தை நட்சத்திரமாகவும் இயக்கிய ஒரே இயக்குநர் இவரே.
மேலும் கன்னட ராஜ்குமார் நிறுவன தயாரிப்பில் 'ஸ்ருதி சேரிதாகா', 'சம்யுக்தா' போன்ற படங்களுக்குத் திரைக்கதை எழுதியும், S. ராஜேஸ்வர ராவின் சீடரான இவர் 'பாக்யத லக்ஷ்மி பாரம்மா', 'சம்யுக்தா' ஆகிய படங்களுக்கு இசையமைத்தும் தனது இசைத் திறமையை வெளிப்படுத்தினார்.
2026-ல், சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, வைஜயந்தி மூவீஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 'சிங் கீதம்' என்ற மியூசிகல் ஃபண்டஸீ திரைப்படத்தை இயக்கித் தனது 95-வது வயதில் மீண்டுமொரு படைப்பைத் தந்தார்.
2026 அக்டோபர் 3 அன்று, தனது 95-வது வயதில், சென்னை காவேரி மருத்துவமனையில் வயது தொடர்பான உடல்நலக் குறைவுகளால் காலமானார்.
பல இளைய தலைமுறை இயக்குநர்களுக்குப் பெரும் உத்வேகமாகத் திகழ்ந்த சிங்கீதம் சீனிவாச ராவ், ஒரு குறிப்பிட்ட பாணிக்குள் சுருங்காமல், சினிமா கலை எவ்வளவு சுதந்திரமானது என்பதைத் தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் நிரூபித்துச் சென்றுள்ளார்.
அவருக்கு இதய அஞ்சலி