ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்[Schindler's List][1993][அமெரிக்கா]

லகின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான 'ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்'  பற்றி எழுத வேண்டும் என எத்தனை முறை அமர்ந்தாலும் தோல்வியே கண்டிருக்கிறேன். அதை அந்த பரவசத்தை சாதாராணமாக அணுகி விடக்கூடாது என்ற தயக்கமே காரணம். ஆஸ்கார் ஷிண்ட்லரை "மனிதருள் மாணிக்கம் ", ''மறக்கடிக்கப்பட்ட மகாத்மா" என எத்தனை அழைத்தாலும் தகும். இப்படம் யூத இனப்படுகொலையை முழுமையாக அலசியதில்லை, இருந்தும், ஷிண்ட்லர் என்னும் வரலாற்றின் முக்கிய ஆளுமையை தெரிந்துகொள்ள உதவிய  வரலாற்று ஆவணம் இப்படம். உலக சினிமா காதலர்கள், பள்ளி, கல்லூரி, மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் என்று யாருமே தவறவிடக்கூடாத படம்.

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கும் லியாம் நீசனும்
1982ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாவலாசிரியர் தாமஸ் கென்னலி எழுதிய ஷிண்ட்லர்ஸ் ஆர்க்[ Schindler's Ark ] என்னும் புதினத்தை தழுவி, ஸ்டீவன் ஸைலியனின் [Steven Zaillian] திரைக்கதையில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்  இயக்கி  1993ஆம் ஆண்டு வெளிவந்த சுயசரிதை-நாடக வகைத் திரைப்படம் இது. இப்படத்துக்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் தரப்பட்டன. இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு உலக அரங்கில் எத்தனையோ பாராட்டுக்களை பெற்றுத்தந்த படம்,  யூத இனத்தவரான இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் தன் நெஞ்சில் தைத்திருந்த  இனப்படுகொலை என்னும் முள்ளை இப்படம் இயக்கியதின் மூலம் அகற்றியிருக்கிறார். உலகின் அதிகம் சம்பளம் பெறும் சினிமா இயக்குனரான இவர் இப்படத்துக்கு சம்பளமே பெற்றுக்கொள்ளவில்லை. ஷிண்ட்லராக வந்த லியாம் நீசன் உலகின் மிகச்சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ப்ரிட்டிஷ் நடிகர் ஆவார். இதன் மூலம் உலகின் எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின் நெஞ்சிலும் இவர் பெற்றிருக்கும் இடம் அளவிட முடியாதது.

படத்தின் கதை:-[முக்கிய சம்பவங்களை மட்டும் கொண்டது]
டம்  ஒரு யூதக்குடும்பத்தில்  வெள்ளி அல்லது சனிக்கிழமை  அந்தியில் செய்யும் சப்பாத் வாரவழிபாட்டின் போது துவங்குகிறது. அங்கே அறையில் ஒரு மெழுகுவர்த்தி உருகி, அணைந்த பின்னர் வரும் புகை அப்படியே  மேலே எழும்ப , அது  வெளியேறி ரயிலில் வெளிப்படும் புகையாக முடிகின்றது.  வண்ணத்தில் இருந்த காட்சிகள் கருப்பு, வெள்ளைக்கு மாறும் காட்சியும் கவிதையாக இங்கே செதுக்கப்பட்டுள்ளது. இனி படம் முழுக்க கருப்பு வெள்ளை கவிதை தான்.

1939 ஆண்டு,போலந்து நாட்டின் க்ரேட்டர் க்ரகோவ் ரயில் நிலையம் :- ஆப்பரேஷன் ரெய்ன்ஹார்ட் [Operation Reinhard in Kraków] என்னும் வரலாற்றுச்சம்பவத்தை நாம் ரத்தமும் சதையுமாக அங்கே கண்ணுறுகிறோம். ஐரோப்பா ஜெர்மானியர்களுக்கே!!! என்ற இனவெறி தெரிக்க , போலந்து நாட்டில் 600 வருடங்களுக்கு முன் குடியேறி நல்வாழ்க்கை வாழ்ந்து வந்த யூத மக்கள் அவர்கள் வாழ்ந்த வீடுகளில் இருந்து ஜெர்மானிய நாஜிப்படையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படுகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் பெயர்களைச் சொல்லி அந்த ரயில் நிலைய நடைமேடையில் தட்டச்சு எந்திரத்தின் முன் அமர்ந்திருந்த நாஜி கணக்காளர்களிடம்  பதிந்துகொண்டதும் , அவர்களின் உடைமை பெட்டிகளின் மீது பெயர் எழுதச் சொல்லப்படுகிறது, கையில் ஒரு பெட்டி மட்டுமே அனுமதி. அதில் வேண்டிய உடைமைகளை மட்டும் எடுத்துக்கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்கள் ரயிலில் சென்று இறங்கியதும் அவர்களுக்கு வசதியான குடியிருப்பு உள்ளதாகவும், அங்கே சென்றதும் இங்கே விட்டுச்சென்ற உடமைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர்.  அங்கு  சுற்று வட்டாரத்தில் உள்ள 27 யூத கிராமங்களும் அதுபோலவே காலிசெய்ய வைக்கப்பட்டு போட்கோர்ஸே [Podgórze district of Kraków.] என்னுமிடத்தில் புதிதாய் அமைக்கப்பட்ட கெட்டோவுக்குள்,  ஒரு யூத நபருக்கு 4 கன அடி என்னும் விகிதத்தில் அறை ஒதுக்கப்பட்டு. அங்கே அந்த அப்பாவி யூதர்கள் குடியேற்றப்படுகின்றனர்.

அவர்கள் தம் கெட்டோவுக்கு அருகே புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் முகாம் கட்டுமான வேலைகளுக்கும், ஜெர்மானியர்கள் நடத்திவந்த தொழிற்சாலைகளுக்கும் கூலி இல்லாமல் வேலைக்கு சென்று வந்து  அவர்களின் உயிரைக்காத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதை அவர்கள் தங்கள் தலைவிதியென்று ஏற்றும் கொண்டனர். இதை மீறுபவர்கள் எதிர்ப்பவர்கள் நாஜிக்களின் துப்பாக்கி குண்டுக்கு உடனே இரையாக்கப்பட்டனர். யூதர்களுக்கு சமாதிகள் வேறு ஒரு கேடா?!!! என்று அதில் இருந்த சலவைக்கற்கள் கூட யூதர்களைக் கொண்டே பெயர்க்கப்பட்டு புதிய முகாமுக்கு சாலையாக போடப்பட்டன.

கூலி இல்லாமல் வேலைக்கு வர யூதர்கள் ஒத்துக்கொண்டாலும்,அவர்கள் எல்லோருக்கும் புதிய கட்டாய வேலைபிடுங்கி முகாமில் வேலையும், உயிர் பிச்சையும் கிடைத்து விடவில்லை. குடும்பம் குடும்பமாக சென்றவர்கள் ரயிலில் இருந்து இறங்கியதும் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் , குழந்தைகள் என பிரிக்கப்பட்டு முழுநேரம் இயங்கிவரும் ஆச்விட்ஸ் போன்ற இனவதை முகாம்களுக்கு வேறொரு ரயிலில் திணிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கே போனால்  என்ன நடக்கும்?  என்றே தெரியாத ஓர் நிலை. எங்கு பார்த்தாலும்   சோகம், அழுகை, கூக்குரல். எஞ்சியவர்கள் இனி அயராது உழைத்து தான் உயிர் காத்துக்கொள்ள வேண்டும் என்னும் நிலை. யாருக்கும் நேரக்கூடாது அந்நிலை.

ட்டாய வேலை பிடுங்கும் முகாம்களில் யூதமக்கள், அவர்கள்  செய்த தொழில் வாரியாக வரையறுக்கப்பட்டு பிரிக்கப்பட்டனர். இசைக் கலைஞர்கள் , அயராது பியானோ, வயலின் செல்லோ, புல்லாங்குழல், மேளம் போன்றவற்றை வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். வாட்டும் குளிரில்.அந்த இசையை கேட்டபடியே சாகும் வரை ஏனைய தொழிலாளிகள் வேலை செய்யவேண்டும். யூத ஓவியர்கள் அரசாங்க ஆவணங்கள் தயாரிக்கவும், நாஜிக்களின் கொள்கை பரப்பு ஓவியங்கள் வரையவும், முடி திருத்துபவர்கள், ரயிலில் வந்து இறங்கும் யூதர்களுக்கு ஒழுங்கில்லாமல் முடியை நறுக்க்கிவெட்டி விடவும், தையல் கலைஞர்கள் சீருடைகள் தைக்கவும், ஈடுபடுத்தப்பட்டனர். 

யூதர்களிடமிருந்த தங்க நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள்,தங்கம் வெள்ளி,வைர நகைகள், பூஜை சாமான்கள். மூக்கு கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், தலைவாரும் சீப்புகள், சூட்கேஸுகள். கோட்டு சூட்டுகள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள்,காலணிகள்.  குடும்ப புகைப்படங்கள் என சகலமும் ரயில் நிலையத்திலேயே கையகப்படுத்தப்பட்டு அங்கே கிடங்குகளில் மலைமலையாக குவித்து வைக்கப்படுகின்றன. அவர்களிடமிருந்து வெட்டிப்பெறப்பட்ட தலைமயிர் கூட பெரிய பெரிய சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு எதிர்கால கண்காட்சியகத்துக்காக ஆவணகாப்பு செய்யப்பட்டன.

வ்வளவு ஏன்?!!! யூதர்கள் பலர் கட்டிக்கொண்ட தங்கப்பற்கள் கூட கொரடு கொண்டு வெட்டியோ உடைத்தோ பிடுங்கப்படுகின்றன. அவற்றை யூத பொற்கொல்லர்களே பல் வேறாய்  தங்கம் வேறாய் உருக்கிப் பிரிக்கும் அவலமும் நடந்தேறின. அங்கே கட்டாய வேலை பிடுங்கி முகாமில் வலிமையுள்ளதே எஞ்சும், எந்நேரமும் துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். யூதமக்கள் ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பிழைத்தனர் . உயிர் பயத்தை காட்டிக் காட்டியே அவர்களிடம் வேலை வாங்கினர் கொடிய நாஜிக்கள். தன் உயிரை தற்காத்துக்கொள்ள ஒரு யூதன் விளையாடிய ஆறு வருட தொடர் ஓட்டப்பந்தயம் தான் கட்டாய வேலை பிடுங்கி முகாம் [Forced Labour Camp], இதை ஒரு பதிவில் எழுதிவிட முடியாது!!!!,  எதையோ எழுதப்போய் எங்கேயோ சென்றுவிடும்.

ரு யூதனால் இனி பயனில்லை, வேலை செய்யமுடியாது என தெரிய வருகையில் அவர்களை கேஸ் சேம்பருக்கு அனுப்பி கொல்லப்பட்டனர், ரயிலில் வந்து இறங்கிய  அன்றே ஒரு சில முதியவர்களுக்கு, அவர்களின் தள்ளாமைக்கேற்ப, முதல் நாளே கேஸ் சேம்பருக்கு செல்லும் ரயிலில் மாற்றி அனுப்பி  மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனைய குழந்தைகள் குறிப்பாக இரட்டைக் குழந்தைகள்  சோதனைச்சாலை எலிகளுக்கு பதிலாய் அரக்க மனம் படைத்த மருத்துவர்களைக் கொண்டு இன ஆராய்ச்சிக்கு கூட உட்படுத்தப்பட்டனர். அவர்களை ஒன்றாய் தைப்பது, உயிருடன் இருக்கையிலேயே இருதயத்தை பிடுங்கி சோதனை செய்வது,செக்ஸ் ஆராய்ச்சி செய்வது என அநேகம் கொலைபாதகங்கள் நடந்தேறின.

ப்படிப்பட்ட ஒரு கொடிய இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில்  'ஆஸ்கார் ஷிண்ட்லெர்' [லியாம் நீசன்] என்ற ஜெர்மன் நாஜி கட்சியை சேர்ந்தவர்   செக்ஸ்லோவாக்கியாவின் ப்ரின்லிட்ஸ் [Brinnlitz] என்னும் ஊரிலிருந்து போலந்துக்கு வருகிறார் . போலந்து நாட்டில் இருக்கும் ஜெர்மன் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு நிறைய தொகை லஞ்சம் , பரிசுப்பொருட்கள் மதுபானங்கள், சிகார்கள் , உயர்தர சாக்லேட்டுகளை கள்ளச்சந்தையில் தருவித்துக் கொடுத்து அவரது நட்புகளை துரிதகதியில் வெல்கிறார் , போலந்து- க்ரகோவ்வில் யூதர்கள் நடத்தி வந்த சமையல் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை  ஒன்றை குறைந்த தொகைக்கு ஏலமும்  எடுக்கிறார்.

ப்போது நஸ்பாம் [Nussbaum] என்ற ஒரு யூதனை நாம் பார்க்கிறோம். தன் வீட்டு நிலைக்கதவின் பக்கவாட்டில் பதிக்கப்பட்டிருக்கும் மெஸுஸா [Mezuzah] என்னும்  Torah (Deuteronomy 6:4-9) ஸ்லோகம் பொரிக்கப்பட்ட எந்திரத்தை  கொரடைக் கொண்டு பிடுங்கியவன், அதை முத்தமிட்ட பின் தன் பைக்குள் பத்திரமாக வைத்துக்கொள்கிறான், அவனின் செல்வந்த மனைவி அழுது கூப்பாடு போட, நாஜி வீரர்கள் கழுத்தப் பிடித்து தள்ளி அவர்களை வெளியேற்றுவதைப் பார்க்கிறோம், நஸ்பாம் அழுபவளைத் தேற்றுகிறான்.  அந்த யூத செல்வந்தன் நஸ்பாம் காலிசெய்யப்பட்டதுமே அதே வீட்டில் ஆஸ்கார் ஷிண்ட்லர் விரைந்து குடியேறுகிறார்.

யூதர்களிடம்  நிறைய பணம் இருந்தாலும் அதை அவர்களால் சொந்தம் கொண்டாடவோ, செலவு செய்யவோ, வங்கியிலேயே வைத்திருக்கவோ முடியாது, அப்படிப்பட்ட செல்வந்த யூதன் எங்கே கிடைப்பான்? என ஆய்வு செய்கிறார். அப்படி கள ஆய்வு செய்கையில் இவருக்கு மிகவும் கைதேர்ந்த  யூதக்கணக்காளரான இஷ்தக் ஸ்டெர்ன் [பென் கிங்ஸ்லி] என்பவர் பழகக் கிடைக்க, அவருடன் நட்பாகிறார் ஷிண்ட்லெர். இஷ்தக் ஸ்டெர்ன் அவரிடம் கேட்கும் ஒரு கேள்வி மிகப்பிரசித்தி பெற்றது, அதற்கு ஷிண்ட்லெர் தரும் பதில் அதை விட அழகானது. இதோ அந்த வசனம் .

Itzhak Stern: Let me understand. They put up all the money. I do all the work. What, if you don't mind my asking, would you do?

Oskar Schindler: I'd make sure it's known the company's in business. I'd see that it had a certain panache. That's what I'm good at. Not the work, not the work... the presentation.

ருவழியாக பணம் முதலீடு செய்ய யூதரும் கிடைத்தாகிவிட்டது, அந்த யூதருக்கு மாதாமாதம் பண்ட பாத்திரங்களாக அவர் கள்ளச்சந்தையில் விற்றுக்கொள்ள ஷிண்ட்லர் தருவதாய் முடிவானது, தன் தொழிற்சாலைக்கு தலைமைக்கணக்காளனாக இஷ்தக் ஸ்டெர்னையே [பென் கிங்ஸ்லி] நாஜிக்களிடம் கேட்டுப் பெறுகிறார்.  எவ்வளவு முக்கியமான பாத்திரம் இவருடையது ?!!!, ஸ்திரி லோலன் ,  சுயநலமி, நாஜி அனுதாபியான ஷிண்ட்லரையே தன்னைத் தானே சோதித்து அறியச் செய்து  யூதர்களுக்காக மனம் இறங்க வைத்த ஓர் பாத்திரம் தான் இவருடையது. தொழிற்சாலை வேலைக்கு ஆளெடுக்கையில் இஷ்தக் ஸ்டெர்ன் போலீஷ் கெட்டோ முகாமில் இருக்கும் கத்தோலிக்க தொழிலாலர்கள் வேண்டுமென்றால் தலைக்கு ஐந்து ரேய்ச் மார்குகள் ஆண்களுக்கும், இரண்டு ரேய்ச் மார்குகள் பெண்களுக்கும் தரவேண்டும்.  இவர்கள் கூலி சற்று அதிகமே, ஆனால் யூதர்களுக்கு நாம் கூலியே தரத் தேவையில்லை, நாஜிப்படைக்கு கையூட்டு கொடுத்தால் போதும் !!!! என்கிறார். ஷிண்ட்லர் எனக்கு போலீஷ் ஆட்கள் தேவையேயில்லை, யூதர்களையே வரவழைத்துவிடலாம் என்று சொன்னது தான் தாமதம், தன்னால் முடிந்தவரை யூத தொழிலாளர்கள் சுமார் 400 பேரை முதற்கட்டமாக  நாஜி முகாம்களில் இருந்து வேலைக்கு அழைத்து வருகிறார் இஷ்தக் ஸ்டெர்ன்.


நாஜிக்கள் உடனே போ!!!! என்று யூததொழிலாளர்களை விட்டு விடுவார்களா என்ன?!!!. ஆகவே, அவர் அழைத்து வரும் யூத மக்களுக்கு இந்தத் தொழிலில் ஏற்கனவே அனுபவம் உள்ளது போன்று, பொய்யான  சான்றுகளைக் காண்பித்து, நிறைய லஞ்சப்பணமும், பரிசுப்பொருட்களும் கொடுத்து அழைத்து வருகிறார் இஷ்தக் ஸ்டென். அதில் முடிந்த மட்டும் கணவன் மனைவி, குழந்தைகளாகவே கூட்டி வருகிறார். அப்போது தானே கொடிய நாஜிக்களால் அல்லலுறும் யூதமக்கள் சிலரின் குடும்பங்களேனும் இனவதையிலிருந்து தப்பும் என்ற இஷ்டக் ஸ்டெர்னின் நல்லெண்ணமே அதற்கு காரணம்.  அதில் ஒற்றைக்கையை இழந்த முதிய யூதரும் அடக்கம்.  இது ஷிண்ட்லெருக்கு தெரியாது. தொழிற்சாலை விரைவில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு துரித கதியில் இயங்கி, ஷிண்ட்லெருக்கு பெரும் பொருளீட்டிக்கொடுக்கிறது.

ஷிண்ட்லெர் அப்படி வந்த பணத்தில் பெரும்பகுதியை குடித்தும், தினம் ஒரு விலை மாது என செலவிடுகிறார். அவருக்கு போலீஷ் கத்தோலிக்க இன பெண் காரிய தரிசிகளே சுமார் 10 பேர் உண்டு. ஷிண்ட்லரை இப்படியே விட்டால் அவர் பணம் முழுவதையும் ஊதாரித்தனமாக செலவழித்துவிடுவார் என எண்ணிய ஷிண்ட்லரின் மனைவி எமிலி, அவரின் வீட்டுக்கு அதிகாலை வந்து மணியடிக்க, ஒரு  நிர்வாணமான பெண்  உடலை மூடிக்கொண்டு வந்து கதவை திறந்துவிட்டு ஓடுகிறாள். ஷிண்ட்லர் மனைவியிடம் எதையுமே மறைப்பவரில்லை,  தன் நிறை குறைகளை மனைவியிடம் காட்டி  எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருக்கிறார். மனைவி ஒரு கட்டத்தில் பொறுமை எல்லை மீற அவரிடம் விடைபெற்றும் சென்றுவிடுகிறாள்.

அமான் கோத்தாக வந்த ரால்ப் ஃபியன்ஸ்
1941 ஆம் வருடம்:- இப்போது தான் க்ரகோவ் கெட்டோவுக்கு தலைமை ராணுவ அதிகாரியாக அமான் கோத் [ரால்ப் ஃபியன்ஸ்] என்னும் கொடுங்கோலன் வருகிறான். வந்தவுடனேயே தனக்கு தரப்பட்ட முக்கிய வேலையான நாளுக்கு 10,000 யூதர்கள் களையெடுப்பு என்னும்  இலக்கை நிர்ணயித்துக்கொண்டு தன் களப் பணியை துவக்குகிறான்.  புதிய ப்ளாஸ்ஸோவ் இனவதை முகாமின் [Płaszów concentration camp.] பேரக்ஸ் கட்டுமானத்தை பார்வையிட்டுக்கொண்டே வந்தவன் ஒரு பெண் யூத பொறியாளர் தனக்கு முன் சத்தமாக முகாமின் பாரக்ஸ் கட்டுமானத்தின் அடித்தளம் வலுவாகயில்லை எனும்  உண்மையை சத்தமாகச் சொல்லிவிட்டாள்  என்று அவளை மண்டியிட வைத்து சுடுகிறான், பின்னர் அவள் சொன்ன படியே மாற்றியும் கட்டச் சொல்கிறான். இந்தப் புள்ளியிலிருந்து இவன் பின்னால் கதை நகருகிறது. 



ருநாள் தொழிற்சாலைக்கு கிளம்பும் யூதர்கள் வழிமறிக்கப்பட்டு ,சாலையை  மூடிய பனியை வாரிக்கொட்டும் அவசர வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அங்கே ஒற்றைக்கை யூதர் பனியை  அள்ளிக்கொட்ட, அவரை அருகே அழைத்த அமான் கோத் அவரை சுட்டுக்கொன்றுவிடுகின்றான். தன் தொழிலாளி ஒருவன் சுடப்பட்ட விவகாரத்தை தன் ராணுவ மேலதிகாரிகள் வசம் கொண்டு சென்ற ஷிண்ட்லர். இதனால் விளையும் நஷ்டங்களுக்கு தன்னால் பொறுப்பேற்க முடியாது  என்கிறார்!!! அவரை ராணுவ உயரதிகாரி, அந்த ஒற்றைக்கை முதியவரால் உன்  தொழிற்சாலையில் என்ன செய்துவிடமுடியும் என வினா எழுப்ப? சடுதியில் ஷிண்ட்லர் அவரை ஒரு பாலீஷர் என்கிறார். அவரால் எளிதாக குழாய்க்குள்ளே கையை நுழைத்து பாலீஷ் போட முடியும் என்று சமாளிக்கிறார். பின்னர் இஷ்தக் ஸ்டென்னை கூப்பிட்டு பலமாக எச்சரிக்கிறார் ஷிண்ட்லர். இது சந்தை மடமல்ல, நான் ஒரு போர் சந்தர்ப்பவாத முதலாளி [war profiteer] இங்கே நான் வந்தது பணம் சம்பாதிக்கவே!!!. என்னை இனி தலை குனிய வைக்காதே!!! என்று எச்சரிக்கிறார். இருந்தும் இஷ்தக் ஸ்டென்னின் குறும்புத்தனங்கள் நிற்கவேயில்லை, தனக்கு தெரிய வந்த ஏனைய யூத மக்களையும் ஷிண்ட்லர் நல்ல மனநிலையில் இருக்கையில் அவரின் அனுமதி பெற்று நிறைய பரிசுப்பொருட்கள் லஞ்சமாக கொடுத்து தொழிற்சாலை வேலைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்.

ந்த  கட்டாய வேலை பிடுங்கி முகாமில் அமான் கோத் தலைமையில் எந்நேரமும் வேலை நடந்து கொண்டே இருக்கிறது, அமானுக்கு யூத உயிர் ஒரு கிள்ளுக்கீரை, எத்தனை சீக்கிரம் யூதர்களை கருவருக்கிறோமோ?!!! அத்தனை சீக்கிரம் நாஜிக்கள் ஐரோப்பாவை  தன் கட்டுக்குள் கொண்டுவரும் என நம்புகிறான். கண்முன் தூங்கியவர்களை நிரந்தரமாக தூங்கவைக்கிறான், உடல் நலம் குன்றியவர்களை தூரத்தில் தன் வீட்டின் பால்கனியில் இருந்து தொலைநோக்கியால் பார்த்து குழல் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறான். ஒரு நாள் முழுக்க ஒரு தொழிலாளி எத்தனை கதவுக்கு பொருத்தும் கீல்கள்  தயாரிக்க முடியும் என்று கேட்கிறான்.அவர் தன் கண் முன் ஒரு கீல் தயாரிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை கணக்கிட்டவன்.அத்தொழிலாளி ஏன் காலையில் இருந்து குறைந்த அளவு கீல்களே தயாரித்தான்?என சந்தேகம் கொண்டு அவனை சுட்டுக்கொல்ல பிரயத்தனப்படுகிறான். அத் தொழிலாளி அதிர்ஷ்டவசமாக அன்று உயிர் பிழைக்க,அவரையும் இஷ்தக் ஸ்டென் ஷிண்ட்லரின் தொழிற்சாலைக்குள் கூட்டி வருகிறார். எந்நேரமும் குடித்துவிட்டும்,காதலியை புணர்ந்து கொண்டும் கேளிக்கை கொண்டாட்டங்களை சக ராணுவத்தினருடன் அனுபவிக்கிறான் அமான் கோத்.

மான் கோத்  இப்போது ஷிண்ட்லரின் தொழிற்சாலைக்கு ஆட்கள் வேலைக்கு செல்வதை  அறவே நிறுத்திவிடுகிறான். புதியதாக கணக்கு வழக்குகள் துவங்கவேண்டும் என்று  ஷிண்ட்லரின் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு ஆணையிடுகிறான். ஷிண்ட்லெர் அமான் கோத்தை சந்தித்து அவன் கேட்டதற்கெல்லாம் சம்மதிக்கிறார். அவனுக்கு வரும் லாபத்தில் பெருந் தொகையை  கொடுப்பதாய் சொல்லி  திரும்பவும் தொழிலாளர்களை வேலைக்கு அழைக்கிறார்.

னால் இஷ்தக் ஸ்டெர்ன் மட்டும் அமான் கோத்திடமே சிறைபட்டிருக்கிறார். அமான் கோத்தால்  அவரிடம் கணக்கு புத்தகங்கள்   கொடுக்கப்பட்டு, அமான் கோத்துக்கு வரவேண்டிய வருமானம் சரியாக கணக்கிடப்பட்டு வாங்கப்படுகிறது. அப்படி கணக்கு வழக்கு முன் பின் இருந்தால் கொன்றுவிடுவேன் என மிரட்டப்படுகிறார் இஷ்தக் ஸ்டெர்ன். அமான் கோத்துக்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவைப்பட கட்டாய வேலை பிடுங்கி முகாமிலிருந்து அழகிய யூதப்பெண் ஹெலன் ஹிர்ச்சை [Helen Hirsch] கூட்டிவந்தவன். தனக்கான எல்லா பணிவிடைகளையும்  ஒரு மன்னனைப்போல கேட்டுப் பெறுகிறான், ஹெலனின் சேவைக்கு மெச்சி திடீரென பாசம் பொத்துக்கொண்டு அவளை தழுவுவான், முத்தமிடுவான்,தடாலென அவள் மீது கைக்கு அகப்பட்டதை எறிந்தும்,பெல்டால் விளாசியும் கொடுமைப்படுத்துவான். அவளுக்கு சதா மரணபயம் காட்டி சித்திரவதை செய்கிறான்.   இதை கண்ட ஷிண்ட்லர் அவளை  ஒயின் சேமித்துவைக்கும் நிலவரையில் தனிமையில் சந்தித்து ஆறுதல் அளிக்கிறார். ஒருநாள் உன்னை காப்பேன் என நம்பிக்கை அளிக்கிறார்.ஹெலன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


ஷிண்ட்லர் போலந்துக்கு வந்து ஒரு தெரியாத தொழிலை எதறகாக ஆரம்பிக்க வேண்டும் ? காரணம் சுயநலமே!!!, அனுதினமும் கட்டாய வேலை பிடுங்கி முகாமில்  செத்து மடிந்து கொண்டிருந்த யூத மக்களை, முன் அனுபவமில்லாதவர்களை ஏன் வேலையாட்களாக தேர்வு செய்ய வேண்டும் ? !!! காரணம் சுயநலமே,  ஒரு நாஜி அனுதாபியாக இருந்து கொண்டு யூத மக்களை ஏன் காப்பாற்ற வேண்டும்? காரணம் சுயநலமே!!!,

னால் அன்றைய தினம் யூதர்களின் குடியிருப்புகள்  ஒரு மாலைவேளையில் ராணுவ கொடுங்கோலன் அமான் கோத் படுகொலைகளால் காலி செய்யப்பட்டு புதிதாக கட்டப்பட்ட புதிய ப்ளாஸ்ஸோவ் இனவதை முகாமுக்குள் [Płaszów concentration camp.]  ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பிரிக்கப்பட்டு அடைக்கப்பட்டனர் , அன்றைய தினம் மட்டும் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஒரு தெருநாயை, சாக்கடைப் பன்றியை சுடுவது போல சுட்டுக் கொல்லப்பட்டனர்.பலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து இறந்தனர்.

அங்கே அந்த படுகொலை சம்பவத்தின் போது ,அமான் கோத் இப்படி கொலைவெறியுடன் முழங்குகிறான்!!!..
இன்றைய நாள் வரலாற்றில் பொரிக்கப்படும். இனிவரும் சந்ததிகள் இந்நாளைப்பற்றி ஆர்வமாய் படிப்பார்கள். இந்த வரலாற்று நிகழ்வில் வீரர்கள் நீங்களும் பங்கெடுக்கிறீர்கள், அதற்கு பெருமைப்படுங்கள். 600 வருடங்களுக்கு முன் உலகெங்கிலும் பரவிய பயங்கர தொற்றுநோய்ச் சாவுகளுக்கு யூதர்கள் பழி சுமத்தப்பட்டு எங்கே சென்றாலும் அடித்து துரத்தப்பட்டனர், அப்போது மன்னர் காசிமிர் பரிதாபப்பட்டு அவர்களுக்கு போலந்தில் அடைக்கலம் கொடுத்தார். அன்று க்ரகோவுக்கு வந்தேறிய யூதர்கள் மெல்ல நகர்ந்து அவர்களின் எல்லையை விரிவு படுத்தினர். அதன் பின் யூதர்கள் கரகோவிலேயே நிரந்தரமாய தங்கிவிட்டனர். அவர்கள் வணிகத்தில்,கலையில்,கல்வி கேள்விகள், விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கினர். அறுநூறு ஆண்டுகள் கரகோவ் யூதர்களின் கொட்டாரமாகவே இருந்தது. ஆனால்!!!, இன்று மாலையிலிருந்து அந்த அறுநூறு வருடங்கள் வெறும் வதந்தியாகிவிடும். அது நடக்கவேயில்லை என்றாகிவிடும். இன்றைய நாள் சரித்திரமாகும் என்கிறான்.

மான் கோத்தின் தடையை மீறி யூதர்கள் ஷிண்ட்லரின் தொழிற்சாலைக்கு ஒருவாரமாக வேலைக்கு வர இயலவில்லை, மிகவும் மனம் உடைகிறார் ஷிண்ட்லர், வழக்கம் போல இந்த தொழிலிலும் தான் தோற்றுவிடுவோமோ? என்று அஞ்சுகிறார். அவருக்கு ஆறுதலாக மனைவி எமிலியும் வந்து விடுகிறார். அன்று  ஓர் உந்துதலில் தன் ஷிண்ட்லர் தன் மனைவியுடன் ஏன் தன் யூத வேலைக்காரர்கள் ஒரு வாரமாக பணிக்கு வரவில்லை? என வருத்தம்  எழ, தன் இருவரின் குதிரைகளையும் எடுத்துக் கொண்டு யூதர்களின் குடியிருப்புக்கு அந்திவேலையில் சென்றனர்.

ங்கே நடந்த மேலே சொன்ன படுகொலைகளை மலை உச்சியிலிருந்து கண்ணாறக் கண்டனர்,கண்ணீர் வடித்தனர். அப்போது தான் நாஜிக்கள் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலையின் தீவிரத்தை உணர்ந்தார் ஷிண்ட்லர். இத்தனை நாள் அப்பாவி யூத மக்களின் அயராத உடல் உழைப்பில் பெருஞ்செல்வம் சேர்த்ததை எண்ணி வெட்கம் கொண்டார். இனியாவது தன் செல்வம் மொத்தத்தையும் கொட்டிக் கொடுத்தேனும் தன் யூத தொழிலாலர்களைக் காப்பேன் என மனமார சபதம் பூண்டார்.   ஒரே நாளில் அவருடைய கல்மனம் கரைந்தது.  நீருக்குள் பூத்த நெருப்பாக அவருக்குள் யூத அனுதாபம் குடிகொண்டது.

ரு நல்லகாரியம் செய்ய எத்தனை லஞ்சம் கொடுத்தாலும் தவறில்லை என்று அமான் கொத்துக்கும் அவனது உயரதிகாரிகளுக்கும் ஏராளமாக லஞ்சப்பணம் கொடுத்து தன் தொழிற்சாலையில் பணிபுரியும் யூதர்களை சுமார் இரண்டு வருடங்கள் சப் கேம்ப் என்னும் துணை முகாம் ஏற்படுத்தி பொத்திப் பொத்தி பாதுக்காக்கிறார். எத்தனை லஞ்சம் கொடுத்தாரோ?!!! அத்தனை சலுகைகளை அவர் யூதர்களுக்காக பெற்றார். அங்கே இப்போது போர்ப்படை தளவாடங்கள், தயாரிக்கப்படுகின்றன, அதில் ஒன்று எங்கேனும் போரில் வெடிக்கப்பட்டால் கூட தான் சொல்லொனாத் துயரம் அடைவேன் என்று இஷ்தக் ஸ்டெர்னிடம் சொல்கிறார் ஷிண்ட்லர்.

ரு நாள் ஷிண்ட்லர் அமான் கோத்தை சந்திக்க ரயிலடிக்கு செல்கிறார். அங்கே ஒரு அங்குலம் கூட இடைவெளியின்றி வயதில் முதிய யூதர்கள் ரயில் பெட்டியில் அடைத்து வைத்து  அவர்களை ஆஷ்விட்ஸ் என்னும் இனவதை முகாமுக்கு அழைத்துபோக ஆயத்தம் ஆவதை பார்த்தவர், அவர்கள் தாகம், தாகம் என மன்றாடுவதையும் கேட்கிறார். சுடும் வெயிலில் அவர்களின் தாகத்தை தணிக்க தன்வீட்டிலிருந்து தண்ணீர் குழாயை தருவித்து அதை அவர்கள் பெட்டியில் பாய்ச்சும் பொழுது அமான் கோத் உட்பட அனைவரும் கொல்லென்று சிரிக்கின்றனர். அவைகளுக்காக ஏன் இப்படி உருகுகிறாய்?, அவைகளுக்கு எதிர்காலம் கிடையாது!!! என்று ஷிண்ட்லர் லஞ்சமாக அளித்த ஓட்காவை பருகியபடியே எள்ளிநகையாடுகின்றனர் நாஜிக்கள்.  இந்த சம்பவத்தினால் மிகவும் மனமுடைந்த ஷிண்ட்லர், இன்னும் அதிக நாள் தன்னால் தொழிற்சாலையில் பணிபுரியும் யூதர்களை காப்பாற்ற முடியாது என உள்ளம் மருகுகிறார்.

ஷிண்ட்லர் விரைந்து அமான் கோத்தை அணுகியவர்.  தன் சொந்த ஊரிலேயே இந்த தொழிற்சாலையை மாற்ற விருப்பதாகவும் அங்கு ஒரு துணை முகாம் [சப் கேம்ப்] அமைக்க அனுமதியும் வேலைக்கு இப்போது உள்ள யூதஆட்களை  அப்படியே அங்கே மாற்றித் தர உதவியும்   கேட்கிறார். அதற்கு அமான் கோத் எள்ளி நகையாடுகிறான். நீ அவர்களை என்னிடமிருந்து காப்பாற்றமுடியாது, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களுக்கு நீ மகா பாவத்தை செய்யாதே!!! இன்னும் ஒரு வருடத்துக்குள் அவர்கள் மொத்த பேரையும் கொன்றுவிட எனக்கு கட்டளை வந்திருக்கிறது, இது  இயலாத காரியம் என கை விரிக்கிறான்  அமான் கோத் , எறும்பு ஊற கல்லும் தேய்வதைப்போல ஷிண்ட்லர் தருவதாகச் சொன்ன பெருஞ்செல்வம், மற்றும் பரிசுப்பொருட்களுக்காக மெல்ல மனம் இறங்குகிறான்,  சம்மதிக்கிறான்

ஷிண்ட்லரும்,இஷ்தக் ஸ்டெர்னும் பட்டியல் தயாரிக்கும் காட்சி
ப்போது தான் நாம் ஒன்றை கவனிக்கவேண்டும், தொடக்கத்தில் வெறும் 400 யூதர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஷிண்ட்லரின் நிறுவனத்தில் இப்போது மட்டும் 800 பேர்கள் உண்டு. ஷிண்ட்லருக்கு முடிந்த வரை யூதர்களை செம்படையினர்  வரும்வரையில் கொலையாகாமல் காப்பாற்றப்படவேண்டும் என்பதே எண்ணம், ஆகவே தன்னைப்போலவே  யூத தொழிலாளிகளை வைத்து நிறுவனம் நடத்தும் முதலாளிகளை சென்று பார்த்த ஷிண்ட்லர், யூதர்களை தன்னைப்போல துணை முகாம் ஏற்படுத்தி காப்பாற்றக் கோருகிறார். ஆனால் யாரும் இசையவில்லை. மனம் தளராத ஷிண்ட்லர் ஒரு நாள் இரவு நேரத்தில் இஷ்தக் ஸ்டெர்னை அழைத்து  தட்டச்சு  எந்திரத்தின் முன்னால் அமரச்செய்கிறார். அன்று  இரவு ஆரம்பிக்கப்பட்ட பட்டியலே ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் எனப்படும். அது மணிக்கணக்கில் நீளுகிறது, ஷிண்டலர் புகைபிடித்துக்கொண்டே பெயர்களை நினைவடுக்குகளில் இருந்து சொல்லிக்கொண்டே வர , அதை இஷ்தக் ஸ்டெர்ன் தட்டச்சுகிறார். திருத்துகிறார். கடைசி  பக்கத்திற்கு கீழே கொஞ்சம் காலி இடம் விட பணிக்கிறார் ஷிண்ட்லெர்.அங்கே வேடிக்கையாக இஷ்தக் சொல்லும் வசனமும் பிரசித்தி பெற்றது. 
Itzhak Stern: How many cigarettes have you smoked tonight?
Oskar Schindler: Too many.
Itzhak Stern: For every one you smoke, I smoke half. 


ந்த காலி இடத்தில் சில பெயர்களை பிற்ப்பாடு சேர்க்கப்போகிறேன் என்கிறார். தன்னிடம் உள்ள கையிருப்பு கரைவதைப்பற்றி அவர் கவலைப்படவேயில்லை. இப்போது சுமார் 1100 பேர் பட்டியலுக்குள் வந்து விட்டனர். அதைக்கொண்டு போய்  அமான் கோத் முன் அமர்ந்து பேரத்தை ஆரம்பிக்கிறார் ஷிண்ட்லர். அதில் ஒரு யூத தலைக்கு 7800 ரேய்ச் மார்குகள் என முடிவாகிறது. அவர் கடைசி பக்கத்தின் கீழே விட்ட காலியிடத்தில்  அமான் கோத்தின் வேலைக்கார யூதப்பெண்ணான ஹெலன் ஹிர்ச்சின் [Helen Hirsch ] பெயரை எழுதுகிறார் ஷிண்ட்லர். அமான் கோத்துக்கு ஹெலனைத் தரவே மனமில்லை. அவளை மிகவும் விரும்புகிறான். ஆனால் அதை அவள் அதைப் பயன்படுத்தி காரியம் சாதித்துவிடுவாளோ?!!! என அஞ்சுகிறான். அவளை எக்காரணம் கொண்டும் தரமாட்டேன் என்றவன்.

ஹெலனை மீட்க ஒரு 21 என்னும் blackjack பந்தய சிட்டாட்டம் ஆடுவோம் வா ,அதில் நீ தோற்றால் 7400 ரேய்ச் மார்குகள் , நான் தோற்றால் 14800 ரேய்ச் மார்குகள் என்று ஷிண்ட்லர் அழைக்க, விடாப்பிடியாக அவளை பந்தயமாக வைத்து சீட்டாட்டமா?!!! என மறுத்த அமான் கோத். ஷிண்ட்லரிடம் கவலைபடாதே!!!! அவளை நான்  ஆஷ்விட்ஸ் கேஸ் சேம்பருக்கு அனுப்பமாட்டேன், என்னுடன் வியன்னாவுக்கு கூட்டிப்போய்  வைத்து வாழ்வேன் என்கிறான். ஒருவேளை அது முடியாமல் போனால்,  அவளை நான் செம்படையிடம் பிடிபடும் முன்னே காட்டுக்குள் அழைத்துப் போய் பின்னந்தலையில் துப்பாக்கியை வைத்து வலியின்றி சுட்டுவிடுவேன்.பெரும் பிரயத்தனத்துக்கு பிறகு வேறு வழியின்றி அவளை 14000  ரேய்ச் மார்குகளுக்கு கொடுக்க சம்மதிக்கிறான்.

அக்டோபர் 1944:- அந்த பயண நாளும் வந்தேவிட்டது. தங்களுக்கு நாஜிகளிடமிருந்தே விடுதலை கிடைத்துவிட்டதாக  எண்ணுகின்றனர் யூதர்கள் ஆண்கள், ஒரு ரயிலில், பெண்கள்&குழந்தைகள் ஒரு ரயிலில் என்று ஏற்றப்படுகின்றனர். பெண்கள் மற்றும் குழ்ந்தைகள் ஏற்றப்பட்ட ரயில் மட்டும் ஆவணப்பிழை காரணமாக ஆஷ்விட்ஸ் இனவதை முகாம் நோக்கி திருப்பிவிடப்படுகிறது, பலநாட்கள் ரயில் பயணத்தில்  குடி தண்ணீருக்காக ரயில் பெட்டியில் மேலே உறைந்திருக்கும் பனியை பிடுங்கி உடைத்து ஒரு குடுவையில் போட்டுக் கரைத்து  அதை குடித்து அவர்கள் தாகம் தணிகையில் நாம் தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்? எனத் தோன்றும்.

ப்படி பயணம் செய்து ஆஷ்விட்ஸ் இனவதை முகாமுக்குள் அந்த பெண்களின் ரயில் நுழைகிறது. அங்கே ஓயாமல் புகைந்து கொண்டிருக்கும் புகைப்போக்கியிலிருந்து வெளிப்பட்ட பிணங்களின் சாம்பல் இரவில் பொழியும் பனியுடன் கலந்து ரயிலில் இருந்து இறங்கியவர்கள் மீது மழையாய் விழுகிறது.  இவர்கள் , நாஜிப் படையினரால் நேராகக் கொண்டு போய் ஆடைகளை களைய வைக்கப்பட்டு,  தலை மயிரை வலுக்கட்டாயமாக கத்தரிக்க வைக்கப் படுகின்றனர், பின்னர் ஒரு சுரங்கப்பாதைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட அத்தனை பெண்மணிகளும் குழந்தைகளும் விளக்குகள் அணைக்கப்பட, பயந்து நடுங்குகின்றனர், அங்கே மேலே உள்ள ஷவர் குழாய்களில் இருந்து நச்சுவாயு வெளிப்படுமா?!!! அல்லது தண்ணீர் வெளிப்படுமா? என்று அஞ்சி செத்து செத்து பிழைக்கின்றனர்,

திடீரென மேலே இருக்கும் ஷவர் குழாய்களில் குளிர்ந்த நீர் திறந்து விடப்பட்டு நிர்வானமாக இருக்கும் அனைவரும் நனைந்து குளிரில் நடுங்குகின்றனர், ஒரு பெண்மணிக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிட அதிர்ச்சியாக  தண்ணீரில் நனைந்தமையால் சித்தப்பிரமை பிடித்தது போல சிரிக்கிறாள். மிகவும் மனதை பிசையும் காட்சியது, மறுநாள் காலையில் அவர்களுக்கு ராணுவ அதிகாரிகள் வேலைக்கு பிரித்து அனுப்ப ஆயத்தமாகின்றனர்,

தில்  வயது முதிர்ந்தவர்களையும், குழந்தைகளையும் கேஸ் சேம்பருக்கு கொண்டு செல்ல கணக்கெடுக்கும் வேளையில், ஒரு ராணுவ உயர் அதிகாரிக்கு விலையுயர்ந்த வைரக்கற்களை லஞ்சமாக கொடுத்துவிட்டு, மீட்பு ஆவணங்களில் கையொப்பம் வாங்கிக்கொண்டு அங்கே துரித கதியில் வந்துவிடுகிறார் ஷிண்ட்லர். எல்லோரையும் மீட்டு இன்னொரு ரயிலில் ஏற்றுகிறார், அங்கே குழந்தைகளை மட்டும் அனுப்ப மாட்டோம் என ராணுவ வீரர்கள் முரண்டுபிடிக்க, அதில் ஒரு குழந்தையின் கையை அந்த வீரனின் முகத்துக்கு நேரே தூக்கி காட்டி ஒரு ஷெல்லுக்குள் நுழைந்து பாலீஷ் போட இக்குழ்ந்தையின் கையால் தான் முடியும், இக்குழந்தையை நீ அனுப்பாவிட்டால் நான் அந்த கைக்கு எங்கே போவேன்?மேலதிகாரிக்கு இதை சொல்வதைத்தவிர வேறு வழியில்லை என ஆவேசமாய் கேட்டவர், பின்னர் எதிர்ப்பின்றி குழந்தைகளையும் ரயிலில் ஏற்றுகிறார்.

ஷிண்ட்லரின் தொழிற்சாலையில் 1100 யூத தொழிலாலர்களும் மிக நல்லமுறையில் நடத்தப்பட்டனர். அங்கே கண்காணிப்புக்கு வந்த நாஜிப்படை வீரர்களுக்கு இது பிடிக்கவில்லை, அவர்கள் மூலம் யூதர்களுக்கு ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டதென்றால் ,தான் அந்த நஷ்டத்தை நாஜிப்படை உயர் அதிகாரிகளிடம் தான் கேட்டுப்பெறுவேன், உங்கள் வேலைகளை காத்துக் கொள்ளுங்கள், யூதர்கள் மீது கைவைக்காதீர்கள்!!!! என கோபமாக அறிவுறுத்துகிறார் ஷிண்ட்லர்.

1945 ஆம் வருடம், ஷிண்ட்லரின் தொழிற்சாலையில் பெயருக்கு தான் வேலை நடந்ததே தவிர எந்த போர் உபகரணமும் முழுமையாக தயாரிக்கப்படவோ, ஏற்றுமதியோ செய்யப்படவேயில்லை, போர் முடிவதற்காக காத்திருக்கிறார் ஷிண்ட்லர்.அவரின் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பணம் இன்றி கடனில் மூழ்கிவிடுகின்றது. இந்த நிலையில் தான் ஷிண்ட்லர் தன் மனைவியை ஒரு தேவாலயத்தின் ஆகமகூட்டத்தில் சென்று சந்திக்கிறார். இனி தன் வாழ்வில் எமிலியை தவிர வேறெந்த பெண்ணுக்கும் இடமில்லை என்று உறுதியளிக்கிறார். இருவரும் தொழிற்சாலைக்கு திரும்புகின்றனர்.

ன் தொழிற்சாலை நிர்வாகம் திவாலாகி, மூழ்கிவிட்டது குறித்து ஷிண்ட்லரோ எமிலியோ அதிகம் வருந்தவேயில்லை. அவர்கள் எதிர்பார்த்திருந்தபடியே அன்று ஒரு செய்தி வருகிறது. கிழக்கு முகமாக முன்னேறிய செம்படை ஒவ்வொரு இனவதை முகாமாக விடுதலை செய்து கொண்டே வரும் செய்தியை அச்சத்துடன் தெரிவிக்கிறது நாஜி வானொலி.நாஜி ராணுவ தலைமை,  ஷிண்ட்லரின் ஊரான ப்ரின்லிட்ஸில் [Brinnlitz] எஞ்சி இருக்கும் எல்லா யூதர்களையும் கொன்றுவிட்டு நாஜிப் படையையும்   அவரவர் ஊர்களுக்கு கலைந்து போகும்படி ஆணையிடுகிறது.

ஷிண்ட்லர் நாஜிப்படையினரை நோக்கி எல்லாமே  முடிவுக்கு வந்து விட்டது!!!, இனியாவது நீங்கள், அவரவர் வீடுகளுக்கு மனிதர்களாக திரும்பப் போகிறீர்களா?!!! அல்லது கொலைகாரர்களாக திரும்பப் போகிறீர்களா?!!!  என்று பொட்டில் அடித்தாற்போல் கேட்கிறார். அக்காட்சி மிகவும் அற்புதமான ஒன்று. பின்னர்   நாஜிப்படையினர் அமைதியாக தங்கள் ஊர்களுக்கு திரும்புகின்றனர்.  வானொலியில் நாஜிக்களின் ஆட்சி முடிவுக்கு வந்ததை  செம்படையினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றனர். அதே தினத்தில் ஷிண்ட்லர் தன் தொழிலாளிகள் முன்  பிரிவு உரை ஆற்றுகிறார். யூத தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைப்பது மட்டற்ற மகிழ்ச்சியளித்தாலும் ஷிண்ட்லரை பிரிவதில் மிகவும் வருத்தப்படுகின்றனர்.

தான் ஒரு போர் குற்றவாளி!!!, எந்நேரமும் முப்படையினரால் வேட்டையாடப்படலாம். இன்று  இரவு கிளம்புகிறேன் என்றவர் எல்லோருக்கும் குடிக்க ஒரு புட்டி ஓட்காவும், எல்லோருக்கும் போர்த்திக்கொள்ள புதிய கம்பளி ஜமுக்காளம் 2 மீட்டரும் இஷ்தக் ஸ்டெர்னிடம் சொல்லி கொடுக்கச் சொல்கிறார். இரவு, ஷிண்ட்லெர் ஜெர்மனிக்கு புறப்படும் பொழுது, அவர் காப்பாற்றி வைத்திருந்த யூத மக்கள், தங்கள் நினைவுப்பரிசாக ஒரு பெரியவரின் பற்களில் இருந்து தங்கப்பற்களை கொரடு கொண்டு பிடுங்கி , அதை உருக்கி  ஒரு  அச்சுக்குள்  ஊற்றி, ஒரு யூத பொற் கொல்லர் அதை எடுத்து  திறமையாக வடித்து  தட்டி ஷிண்ட்லெரின் விரல் அளவுள்ள ஒரு மோதிரம் செய்து அதை எல்லா யூதர்களும் சேர்ந்து ஆனந்தமாக ஷிண்ட்லருக்கு பரிசளிக்கிறனர்.

அதில்  ”ஓர் உயிரை ரட்சித்தவன் மொத்த உலகையே ரட்சித்தவனாகிறான்” "Whoever saves one life saves the world entire." என்னும்  டால்மட் [talmud] யூத-வேதப் புத்தகத்தின் வாசகம் பொரிக்கப்பட்டுள்ளது. அம்மோதிரத்தை வாங்கிய ஷிண்ட்லெர் கேவி கேவி அழுகிறார்.இதோ இந்தக் கார்!!!! இந்தக் காரை அமான் கோத்துக்கு அளித்திருந்தால் அவன் இன்னும் பத்து யூத மக்களை எனக்கு கொடுத்திருப்பான். ஏன் இந்த காரை நான் வைத்திருந்தேன்?!!!  இது பத்து உயிர்களுக்குச் சமம். இந்த நாஜி தங்க  பதக்கம், இதை வைத்து இரண்டு பேரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒரு உயிரையாவது நான் காப்பாற்றி இருப்பேனே?!!!. நான் இன்னும் நிறைய பேரை காப்பாற்றி இருக்க வேண்டும் , நான் செய்யவில்லை, சுயநலமாக இருந்துவிட்டேன்.  என அழுது உருகும் காட்சியில், அந்த மனிதருள் மாணிக்கத்தின் கருணை உள்ளம் நமக்கு புலப்படுகிறது.

ல்லா தொழிலாளிகளும் சேர்ந்து அவருக்கு தங்கள் உயிரைக்காத்த உத்தமர் என்று தங்கள் கைப்பட ஒரு சிபாரிசு கடிதத்தை எழுதித்தருகின்றனர். இதன் மூலம் ஷிண்ட்லரை போர் குற்றத்துக்காக செம்படையினரோ, நேச நாடுகளின் படையினரோ பிடித்தாலும், அவரால் தண்டனையின்றி தப்ப முடியும்.  யூத தொழிலாளர்களை பிரியப் பிடிக்காமல் அரை மனதுடன் ஊரைவிட்டு வெளியேறும் காட்சி நம் மனதை பாரமாக்கி, கண்களை குளமாக்கிவிடும், பின்னர் நிர்கதியாக விடப்பட்ட யூதர்களிடம் ரஷ்யநாட்டின் செம்படை வீரர்கள் குதிரை மீது வந்து அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தியை சொல்கிறார்கள்,

யூதர்கள் போக்கிடம் தெரியாமல் தவிக்கின்றனர். அவர்களை செம்படையினர் கிழக்கில் போகாதீர்கள்!!!! . அங்கே ஏற்கனவே வேலையில்லை தெற்கிலும் , மேற்கிலும் போகவே போகாதீர்கள் அவர்கள் நாட்டையே இனிதான் போரின் விளைவுகளிலிருந்து புணரமைக்க வேண்டும் , அங்கே உள்ள  மக்கள்  உங்களை நிச்சயம் வெறுப்பார்கள்!!!!. என்று அறிவுறுத்தும் காட்சியில், நமக்கு திரைப்படம் மட்டுமே இப்புள்ளியில் முடிந்திருக்கிறது,  யூதர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கிகொள்ளும் வரை அவர்களின் அல்லல் துயரங்கள் முடியாது என தோன்றவைக்கும். போலந்தில் அன்று இருந்த யூத மக்கள் தொகை 60லட்சமாம், இன்று வெறும் 500 முதல் 4000 பேர் என்றால்,கொடியவன் ஹிட்லர் பூண்டோடு யூத இனத்தை அழித்தது உங்களுக்கு புரிந்திருக்கும்.

இப்போது காட்சி மாறி:- அமான் கோத் காட்டப்படுகிறான். கடைசியில் இவனை தூக்கு கயிற்றில் ஏற்றிய பிறகு செம்படையினர் அந்த மர முக்காலியை உதைக்கிறார்கள். ஆனால் அது கீழே விழவில்லை, மண்ணில் புதைந்திருந்தது, செம்படையினர் அதை உடைத்து அவனை தூக்கில் போடுகின்றனர்.  கடவுளுக்கு கூட இவன் எளிதாக சாக கூடாது என்றே ஸ்பீல்பெர்க்  காட்சி யமைத்தது போலிருந்தது.'ஷிண்ட்லர்' காப்பாற்றிய மக்கள் 'Schindler's Jews' என அழைக்கப்பட்டார்கள்.

ஷிண்ட்லெர் காப்பாற்றிய மக்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரத்து நூறு. அவர்களின் இன்றைய சந்ததிகளுடன் சேர்த்து சுமார் 6000 பேர் இருக்கின்றனர். படத்தின் இறுதியில்,  சமகாலத்தில் 'Oskar Schindler' என எழுதப்பட்ட ஒரு கல்லறையை நாம் வண்ணத்திரையில் கண்ணுறுகிறோம்,வரிசையில் வந்து ஷிண்ட்லரின் கல்லறையின் மீது கற்களை வைத்து அஞ்சலி செய்யும்  அவர்கள் அனைவருமே தற்போது உயிருடன் உள்ள ஷிண்ட்லெர் காப்பாற்றிய யூதர்கள்[schindler jews].  கடைசியாக அங்கே ஷிண்ட்லெரின் விவாகரத்தான மனைவி  எமிலி - ஷிண்ட்லர் அவர்களும்  சக்கர நாற்காலியில் வருகிறார். இறுதியாக நடிகர் லியாம் நீசனின் கைகள் மட்டும் காட்டப்பட்டு சமாதியின் மீது ஒரு கல்லையும்,ரோஜா மலரையும் வைத்து அஞ்சலி செய்து திரைப்படத்தை முடித்து வைக்கிறது. பின்னாளில் யூதர்கள் தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்ட நாடான இஸ்ரேலின் உள்ளே சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டு, Righteous Gentile -சிறந்த யூதரல்லாதவர் என்னும் பட்டம் வழங்கினர். பின் யூதர்களுக்கான நினைவு-சதுக்கம் ஒன்றில் மரம் நட பணிக்கப்பட்டார். என்னும் வாசகமும் திரையில் காண்பிக்கப்படுகிறது.

ப்படத்தின் சிறப்பம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம்,லியாம் நீசன்,பென் கிங்ஸ்லி, ரால்ப் ஃபியன்ஸ் என ஒவ்வொருவருமே மிகச்சிறந்த நிருபனமான நடிகர்கள், அவர்கள் தத்தம் கதாபாத்திரங்களுக்குள் காணாமலே போய்விட்டனர். அதை எழுதுவதற்கு ஒரு பதிவு போதாது. ஸ்டீவன் ஸ்பீல் பெர்கின் அற்பணிக்கப்பட்ட இயக்கமும், ஸ்டீவன் ஸைலியனின் நேர்த்தியான திரைக்கதையும், ஜான் வில்லியம்ஸின்  ஒப்பற்ற இசையும், ஜனுஸ் கமினிஸ்கியின் அபாரமான ஒளிப்பதிவும், மைக்கேல் கானின் தொய்வில்லாத எடிட்டிங்கும். உங்களை காலாகாலத்துக்கும் வசப்படுத்தி கட்டிப் போட்டுவிடும். எத்தனையோ யூத இனப்படுகொலை, இனவதை முகாம் பற்றிய திரைப்படங்களைப் நாம் பார்த்தாலும் இப்படத்துக்கு எதனுடனும் ஒப்பிடமுடியாத ஒரு தனித்துவம் உண்டு !!!. 1974ஆம் வருடம், 9 அக்டோபர் அன்று ,  ஷிண்ட்லர் எந்த தொழிலும் கைகொடுக்காமல்  ஏழ்மையில் ,தன் 66ஆம் வயதில், நுரையீரல் பாதிக்கப்பட்டு,  உயிரை விட்டிருக்கிறார். அவரின் இறுதிச்சடங்கு இஸ்ரேலின் ஜெருசலேமின் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, துதிகள் பாடிய பின்னர் ,அங்கு ஸியோன் மலையில் உள்ள கத்தோலிக்க தேவாலய கல்லரையில் நல் அடக்கம் செய்யப்பட்டது. அன்னார் தம் வாழ்வில் ஓர் முதலாளியாக வெற்றி பெறாவிட்டாலும் மகாத்மாவாக வெற்றி பெற்றிருக்கிறார்  என்பது  மட்டும்  இதன்மூலம் புரிந்தது.
=====0000======
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-

Directed by Steven Spielberg
Produced by Steven Spielberg
Gerald R. Molen
Branko Lustig
Screenplay by Steven Zaillian
Based on Schindler's Ark by
Thomas Keneally
Starring Liam Neeson
Ben Kingsley
Ralph Fiennes
Caroline Goodall
Embeth Davidtz
Music by John Williams
Cinematography Janusz Kamiński
Editing by Michael Kahn
Studio Amblin Entertainment
Distributed by Universal Pictures
Release date(s) 30 November 1993 (1993-11-30) (DC)
1 December 1993 (1993-12-01)
Running time 195 minutes
Country United States
Language English
Hebrew
German
Polish
French
திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)