நேற்று மஞ்சாடிகுரு படம் பார்த்தேன்,மனமே லேசாகிவிட்டது,ஒரு பக்கம் பாரமுமாகிவிட்டது,ஆனந்த கண்ணீரும்,கனக்கும் தொண்டையுமாக நம்மை அசைத்துப்பார்க்கும் படம்,இன்று மறு முறைப்பார்த்தேன் ஒவ்வொரு முறை பார்க்கையிலும் விடுபட்ட பல சங்கதிகளை சொன்னது படம்,நிஜமான கலையை ஒருவர் தரிசிக்கவேண்டுமென்றால் காணவேண்டிய படம். எப்படித்தான் கைவந்ததோ? யாரிடம் கற்றாரோ? அஞ்சலி மேனன்,முதல் படத்திலேயே இத்தனை வீர்யமான படைப்பு, தன் ஒட்டு மொத்த கலை ஆசான்களுக்கெல்லாம் இந்த படைப்பின் மூலம் மரியாதை செய்துள்ளார் அஞ்சலி.
மஞ்சாடிகுரு என்பது நம்ம ஊரில் பிள்ளையார் கண் என்பார்களே அந்த மணிதான்,குருவாயூர் முதலான கேரள கோவில்களில்,நம் ஊரில் நாம் எப்படி உப்பு கொட்டி வழிபடுவோமோ!!!,அங்கே அவற்றைக் கொட்டி கைகளால் களைந்து வழிபடுவர்,அளவில் சிறிய மணிகளைக்கொண்டு இத்தனை வீர்யமான ஒரு படைப்பை தந்துள்ளார் அஞ்சலி, சிறு வயதில் பிள்ளையார் கண் கொண்டு விளையாடாத பிள்ளைகள் நம்மில் மிகவும் சொற்பமாகத் தான் இருப்பர், என்ன பொருத்தமாய்? குழந்தைகளால் முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த அபாரமான படைப்புக்கு மஞ்சாடிக்குரு என்று பெயரிட்டிருக்கிறார்!!! என வியக்கிறேன்.
இப்படம் போன வருடம் இதே ஜூனில் வெளியாகியிருக்கிறது,திரைப்பட விழாக்களில் மட்டுமே வரவேற்பு கிடைத்தால் போதும்!!!, வெகுஜன சிலாகிப்பு அறவே வேண்டாம் என்றோ?!! நினைத்து எந்த வணிக ரீதியான சமரசமும் செய்து கொள்ளவில்லை அஞ்சலி,படத்தின் மக்கள் தொடர்புக்கும் ப்ரொமோஷனுக்கும் கூட பணம் செலவழிக்கவில்லை போலும்,படம் எல்லா திரைப்பட விழாக்களிலும் வெகுவாக சிலாகிக்கப்பட்டாலும் விருதுகளை வென்றாலும்,நிறைய ரசிகர்களின் பார்வைக்கு சென்று சேராமல் போய்விட்டது,சொல்லி வைத்தார் போல விமர்சகர்கள் அதிகம் பேர் இதைப்பற்றி பேசாமல் மவுனம் சாதித்து விட்டனரோ? என்று கூடத் தோன்றியது.
மினிமலிசத்தை சினிமாவில் எப்படி புகுத்தியிருக்கிறார் பாருங்கள் அஞ்சலி?, முத்தச்சனாக தோன்றும் திலகன் படத்தின் துவக்கத்திலேயே இறந்து விடுகிறார், படத்தில் அவருக்கு வசனமே கிடையாது, தேவைப்படுகிற இடத்தில் அவரின் ட்ரேட்மார்க் சிரிப்பு ஷாட்டுகள் தான் வைத்திருக்கிறார், கதா பாத்திரங்கள் உரையாடுகையில் அமானுஷ்யமாக அருகே அமர்ந்து அதை ஆதூரமாக உற்று நோக்குகிறார் முத்தச்சன், என்ன ஒரு செய்நேர்த்தி?!!!,
படத்தை முன்னெடுத்துச் செல்லும் குழந்தைகளான வேலைக்கார சிறுமி ரோஜா, அப்படி ஒரு சக்திவாய்ந்த மையப்படைப்பு, துபாயில் வசிக்கும் முத்தச்சனின் இரண்டாம் மகளின் மகன் விக்கி, முத்தச்சனிடம் வழக்கு தொடுத்து கௌஸ்துபம் என்னும் பாரம்பரிய நாயர் வீட்டின் பாத்யதை நிலத்திலேயே ஒண்டுக்குடித்தனத்தில் இருக்கும் அந்த இளைய மகன் ரகுவின் குழந்தைகளான கண்ணன் மற்றும் அவன் குட்டித் தங்கை என மிக அற்புதமான காஸ்டிங். 1980ஆம் வருடம் நடக்கும் கதையின் ஒரிஜினாலிட்டி, நேட்டிவிட்டி அனைத்தும் கவனமாக உயிரோட்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் இசை அப்படி ஒரு அற்புதமான மேஜிக்கையும் காட்சிகளுடன் இறுகிப்பிணைந்து பார்வையாளனை கட்டிப்போடும் ஜாலத்தையும் செய்கிறது, அஞ்சலி மேனன் புனே ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர் , மேற்படிப்பை லண்டன் ஃப்லிம் இன்ஸ்டிட்யூட்டிலும் தொடர்ந்திருக்கிறார், அதன் பிண்ணணியில் ஒரு உலக சினிமா இயக்கம் எப்படி இருக்க வேண்டும்? என்ற கலை இவருக்குத் தானே கைவந்திருக்கிறது, கேரளா கஃபே படத்தில் நித்யா மேனன் தோன்றும் ய ஜர்னி என்னும் எபிசோடை அருமையாக இயக்கி இருந்தார், உஸ்தாத் ஹோட்டல் படத்தில் திரைக்கதை எழுதி தேசிய விருதும் வென்றார், இப்படத்தில் பிண்ணணி இசை சேர்ப்புக்கு மட்டும் Francois Gamaury என்னும் ஜெர்மானிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளார், ரிசல்டை படத்தில் பாருங்கள்,
படத்தின் மையப் பாத்திரமான சிவகாசியில் இருந்து வந்து கௌஸ்துபம் என்னும் தரவாடு வீட்டில் உழைத்துக்கொட்டும் வேலைகாரச் சிறுமி ரோஜா, அந்த வைஜயந்தி என்னும் சிறுமி என்ன ஒரு தத்ரூபமான கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கிறாள், சத்யஜித் ரேயின் துர்காவின் சிரிப்பை தன்னுள்ளே கொண்ட பெண் அவள், அற்புதச் சிறுமி. குழந்தைகளின் பார்வையில் வெளியுலகத்தின் கல்மிஷத்தை சொன்ன படத்தில் தோன்றிய குழந்தைகள் தேவதைகள்,
அப்படி ஒரு சிறுவர் உலகம்,நாம் தொலைத்த நம் சிறுவயது வாழ்க்கையை அசைபோட்டுப்பார்க்க வைக்கும்,எந்த ஒரு குடும்பத்திலும் நிகழும் சுக துக்க நிகழ்வுகளின் போதும் சட்டென ஒட்டிக்கொண்டு சுற்றித்திரியும் அந்த மழலைகளை யாரேனும் உற்று நோக்கியதுண்டா?!!! அதை உள்ளூர உள்வாங்கியதன் வெளிப்பாடே இப்படம், இதைப் பார்த்தால் ஒருவருக்கு தன் கடந்த கால நினைவுகள் மேலெழும்பி நெஞ்சைத் தாலாட்டும்.
படத்தின் ஒளிப்பதிவு ஸ்விட்ஸர்லாந்தை சேர்ந்த Pietro Zuercher, படத்தில் முத்தச்சனுக்கு நடக்கும் ஈமைச்சடங்குகள் மொத்தம் 16 நாட்கள் நோஸ்டால்ஜியாவாகக் காட்டப்படும், ஒரு நாள் மட்டும் நிகழ்காலத்தில் காட்டப்படும், ஒளி ஓவியம் என்னும் சொல்லுக்கேற்ப செதுக்கப்பட்ட ஷாட்டுகள், பகல்,இரவு,மின்சாரம் இருக்கும் போது,மின்சாரம் போன நிலையில் காடா விளக்கு ஒளியில்,நிலவு ஒளியில் என அப்படி ஒரு செய்நேர்த்தி கொண்ட ஒளிப்பதிவு.தரவாடு வீட்டின் உள்புறங்களை நன்கு பயன்படுத்தி கலாச்சார பிரதிபலிப்பை ஓவியமாக்கியுள்ளார்.
முத்தச்சனின் மனைவியாக கவியூர் பொன்னம்மா,கூடவே வசிக்கும் கடன் பட்ட சித்தப்பா ,அவரின் இளம் வயது மகன்,முத்தச்சனின் டெல்லியில் ஐஏஎஸ் ஆஃபீசருக்கு வாக்கப்பட்ட மூத்த மகள்,அவளின் மாப்பிள்ளை முறுக்கு கணவர் ஜகதி ஸ்ரீகுமார்,இழவு வீட்டில் ஆம்லெட் கேட்கும் அவர்களின் செல்ல மகள், 10 வருடம் முன்பு நக்ஸ்லைட்டாக மாறி ஓடிப்போய் சன்யாசியாய் வாழும் முரளி,
துபாயில் மெக்கானிக்குக்கு வாக்கப்பட்ட இரண்டாம் மகள் ஜம்பப் பேய்#1 ஊர்வசி, அவளின் முந்தானையை சுற்றித்திரியும் அலப்பறைக் கணவன், வறுமையில் உழலும் இரண்டாம் மகன் ரகுமான்கான், அவரின் மனைவி, இரு குழந்தைகள், அமெரிக்கா காரனுக்கு [மாதவன்] வாக்கப்பட்டு அமெரிக்காவாசியாக மாறி, ஓவர் சவுண்டு விட்டு தாய்நாட்டை வெறுத்து தூற்றும் கடைசி மகள் சிந்து மேனன்இவள் ஜம்பப் பேய்#2, வேலைக்காரி ரோஜாவின் பேராசை கொண்ட மாமன், என்று செலுலாய்டில் நிஜமாய் நம்முடன் வாழும் பாத்திரங்கள். படத்தை அவசியம் பாருங்கள் நண்பர்களே!!!.
மினிமலிசத்துக்கு இன்னொரு உதாரணமாக பாலகன் விக்கி வளர்ந்த இளைஞனாகத் தோன்றும் ஒரே ஒரு காட்சி, வளர்ந்த பெரிய பெண் ரோஜாவாக பத்மப்ப்ரியாவின் சிறப்பு தோற்றத்தையும் சொல்லலாம், திரைப்படக்கல்லூரி மாணவர்கள் காஸ்டிங்கை எப்படி வெட்டி நறுக்கவேண்டும் என கற்றுக்கொள்ள நல்ல உத்தி இது. ப்ரிதிவிராஜின் குரலில் இருக்கும் வசீகரமும் கம்பீரமும் எனக்கு மிகவும் பிடிக்கும்,தலப்பாவு படத்தைப் போன்றே அவரின் நேரேஷன் இப்படத்தையும் தாங்கிப்பிடித்து பயணிக்கிறது, அவரை கடைசி காட்சி வரை காட்டாமலேயே ஜீவனான குரலை மட்டும் வைத்துகொண்டு அசரடித்த பாங்கு எத்தனை பாராட்டினாலும் தகும்.
சமீபத்தில் நான் பார்த்த மூன்று பெண் இயக்குனரின் படங்களான மிட்நைட்ஸ் சில்ட்ரன்[தீபா மேத்தா],கொய்னார் பக்ஷோ[Goynar Baksho][அபர்ணா சென்], பின்னே மஞ்சாடிகுரு மூன்றும் ஆகச்சிறந்த படைப்புகள்,வெவ்வேறு காலகட்டத்தை,வாழ்வியலை,கலாச்சாரத்தை பேசும் படங்கள், மூன்றும் கலையை போற்றுபவை என்பது தான் ஒரே ஒற்றுமை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது படத்தின் டிவிடி சப்டைட்டிலுடன் வெளியாகி உள்ளது விலை ரூ 125., முன்பதிவு செய்ய விபரம் இங்கே:-