அவள் ஒரு தொடர்கதை மற்றும் மேகே தாக தாரா திரைப்படங்களின் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

 
சுபர்ணரேகா ட்ரலஜியின் முதல் தவணை  1960ல் வெளியான மேகேதாக தாரா [Meghe Dhaka Tara] அமரர். ரித்விக் கட்டக் அவர்கள் இந்திய சினிமாவின் அகராதியாக செதுக்கிய அற்புதமான திரைப்படம்,

இந்திய சினிமாவில் காட்சி, இசை, கதை , திரைக்கதை, நடிப்பு என எல்லா துறையிலும் பரிமளித்த திரைப்பட அகராதி இப்படம். மேகே தாக தாரா படத்துக்கும் அவள் ஒரு தொடர்கதை படத்துக்கும் நிறைய ஆச்சர்யமூட்டும் ஒற்றுமைகள் உண்டு, அதே போல வேற்றுமைகளும் நிரம்ப உண்டு.
மேக தாக தாராவின் குடும்பம் அவள் ஒரு தொடர்கதை குடும்பத்தைப் போல 9 பேர் கொண்ட பெரிய குடும்பமல்ல, தாய், தந்தை, அண்ணன், தலைமகள், இளையவள், இளையவன் என 6 பேர்களே கொண்ட வாழ்ந்து கெட்ட குடும்பம், இவர்கள் கிழக்கு வங்காளத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்த பண்டித குடும்பம், தேசப் பிரிவினையால் கொல்கத்தா புறநகர் சேரிக்குள் அகதிகளாக வந்து கொல்கத்தா நகரில் காலூன்ற முயன்றுவரும் ஒரு குடும்பம்.

மேக தாக தாராவின் தந்தை கதாபாத்திரம் M.A ஆங்கிலம் படித்துவிட்டு விரிவுரையாளராக பணியாற்றுபவர்,இருவேளை மட்டுமே தம் வீட்டார் வயிறார உண்டாலும் ,மளிகை பாக்கி,காய்கறி பாக்கி,பால் பாக்கி வைத்திருந்தாலும் மூத்த மகள் குக்கியை   M.A.பொருளாதாரம் படிக்க வைக்கிறார்.

 மூத்தமகனை இளங்கலை படிக்க வைத்தார். இளையமகனை இளங்கலை படிக்க வைக்கிறார். இளைய மகளையும் இளங்கலை படிக்க வைக்கிறார். 4 பேரில் மூத்தவள் குக்கியை மிகவும் நேசிப்பவர்,அவளுக்கு 25 வயதாகியும் இன்னும் கரையேற்ற முடியாததற்கு குற்ற உணர்வு கொண்டிருப்பவர்.அவரால் கடைசி வரை அவளுக்கு திருமணம் செய்து வைக்கவே முடியாது,மேலும் குக்கி காசநோயால் தீவிரமாக பீடிக்கப்பட்டு தனியறைக்குள் தன்னை சிறைவத்துக்கொண்டவளிடம் , தன் குற்ற உணர்வாலும்,வீட்டாரின் சுயநலத்தாலும் வெறுத்துப் போன மனிதர் சொல்லுவார்,அம்மா மகளே இனி உன் தயவு இவ்வீட்டாருக்கு தேவையில்லை,இந்த குடிசை அறை வீட்டில் பிறக்கப்போகும் உன் தங்கை மகளுக்கு தேவையிருக்கிறது,நீ விடும் மூச்சில் விஷம் இருப்பதாக இவீட்டார் நம்புகின்றனர்,ஆகவே அவர்களாக உன்னை துரத்தும் முன்னர் நீயாக எங்காவது சென்று உயிரை மாய்த்துக்கொள் ஆசை மகளே என கதறும் தந்தை அவர்.

அவள் ஒரு தொடர்கதை தந்தை கதாபாத்திரம் பெரிய குடும்பத்தை பெருக்கிவிட்டு, அக்குடும்பத்தை நிர்கதியாக தவிக்க விட்டு காஷாயம் தரித்து காசிக்கு ஓடிப்போன ருத்ராட்சப்பூனை போன்றவர். அப்படத்தில் அவர் சகல செல்வங்களுடன் உங்களைப் பார்க்கத் திரும்ப வீட்டுக்கு வருகிறேன் என கடிதம் எழுதிவிட்டு வருவார்.

வருகையில் சுருக்குப் பையில் விபூதி கொண்டு வந்து எல்லோருக்கும் பூசுவார். அவரின் கடிதம் வந்த காட்சியில் எல்லோரும் பேனா மசியை நீரில் கலந்து மகிழ்ச்சியாக ஹோலி கொண்டாடுவர்,அவர் வந்த பின்னர் அந்த கருப்பு மசி அனைவர் முகத்திலும் அப்பா பூசிய கரியாக அங்கே மாறியிருக்கும்.

மேக தாக தாராவின் தாய் கதாபாத்திரம்,கணவருக்கு பயந்தவள் ஆனால் மூத்த மகளை வண்டி மாட்டையும் விட கேவலமாக நடத்தும் சுயநலமி, இழுக்க இழுக்க பாரம் அதிகம் ஏற்றப்படுவதைப் போல மூத்தவள் குக்கி தியாகங்கள் செய்யச் செய்ய அவளுக்கு பெற்ற தாயாலும் வீட்டாராலும் அநீதி இழைக்கப்படுகிறது,

அதற்கு தலையாய உடந்தை இத்தாய் .ஒரு கட்டத்தில் குணவதியான குக்கி திருமணமாகிப் போனால் வருமானமின்றி முடமாகிப் போன கணவன் வைத்தியச் செலவு மற்றும் குடும்பத்தின் செலவை சமாளிப்பது யார்? என்று பயந்து இளைய மகள் கீதாவை விட்டு மூத்த மகள் குக்கியின் காதலனை கபளீகரம் செய்யத் துணை நிற்கும் கதாபாத்திரம்.

அவள் ஒரு தொடர்கதை தாய் கதாபாத்திரம் ஏறக்குறைய இதே போல சுயநலமி தாய் தான் என்றாலும் இத்தனை குரூரி அல்லள். கணவனுக்காகவும் இளையமகள்களையும் எண்ணி வாடும் உண்மையான தாய். அவளுக்கு குடும்பச் செலவுக்கு கொடுப்பவள் கொடுக்காதவர்கள் என யாவருமே சமம் தான்.

மேக தாக தாராவின் குக்கி கதாபாத்திரம்,இவளின் இயற்பெயர்  நீட்டா. ஆனால் படத்தில் அனைவரும் குக்கி என்றே அழைப்பார்கள். வீட்டாரிடமோ அண்ணனிடமோ எதையும் எதிர்பாராத பாசமுள்ளப் பெண்,அதிர்ந்து பேசவோ நடக்கவோ கூட மாட்டாள். அவளின் ஒரே சொத்து, நைனிடால் மலைப்பிரதேசத்தில் இளம் வயதில் அண்ணன் சங்கரும் குக்கியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மட்டும் தான், அண்ணன் நிச்சயமாக ஒரு பெரிய பாடகன் ஆவான் என நம்பும் ஜீவன், அண்ணனுக்கு அவ்வபோது இசைக்கருவிகளும், உடையும் செருப்பும் வாங்க தான் இளங்கலை மாணவர்களுக்கு மணிக்கணக்காக ட்யூஷன் எடுத்து சம்பாதித்ததில் எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தரும் ஒரு அற்புதமான ஜீவன்.

ஒரு கட்டத்தில் தங்கையின் சதியாலும் காதலன் சனத்தின் அவசரத்தாலும் காதலனை தங்கையிடம் இழந்தவள், அவன் மேகத்தால் மூடிய நட்சத்திரம் நீ என்று எழுதிய காதல் கடிதத்தை மட்டும் இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறாள். அயராத உழைப்பினால் இவளுக்கு காசநோய் பீடித்திருக்கிறது,

 இருந்தாலும் சுயநலமிகளிடம் ஆறுதல் தேட வேண்டாம் என்று தன் மூங்கில் குடிசை அறைக்குள்ளே ஒண்டிக் கொள்கிறாள். அங்கேயே அன்ன ஆகாரம் உட்கொள்கிறாள், காசநோயும் முற்ற தன் இசையில் வென்ற அண்ணன் சங்கர் தயவில் இவள் போக விரும்பிய ஷில்லாங் மலைபிரதேசத்தில் புகழ்பெற்ற சானட்டோரியத்தில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறாள், சிகிச்சை முடிக்கும் முன்னரே வீட்டாரை காண ஆசை கொண்டு ,தன்னைக் காண வந்த அண்ணன் தோள்களிலேயே நான் வாழ விரும்புகிறேன் என்று கதறியபடி உயிர் விடுகிறாள்.

இதில் இவள் முதலில் தங்கையிடம் ஏமாறுவாள்,பின்னர் தன் காதலனிடம் ஏமாறுவாள்,அப்போது பின்னணியில் சாட்டையால் தன்னைத் தானே அடித்துக்கொள்வதைப் போல உணர்வாள் குக்கி,அதை நமக்கு உணர்த்த சாட்டை சுழலும் சத்தத்தை பின்னணி இசையில் சேர்த்திருப்பார் இயக்குனர் ரித்விக் கட்டக்,இப்படம் வெளியான ஆண்டு 1960,எத்தனை பரீட்சார்த்தமான முயற்சி பாருங்கள்,மேலும் குக்கியின் தயாள குணத்துக்கு ஒரு சான்றாக படத்தில் முதல் காட்சியில் அவள் ட்யூஷன் எடுத்து விட்டு வீடு வருகையில் அவளது செருப்பு அறுந்து விடுகிறது,

அதை தைக்க காசில்லாமல்,அப்படியே பையில் வைத்து எடுத்து வந்து வீட்டு படலினருகே எறிவாள் குக்கி,அதை அண்ணன் பார்த்து தன் இயலாமையை நொந்துகொள்வான்,அண்ணன் சங்கருக்கே செருப்பிருக்காது.அதனால் அவனால் அங்கே வருத்தப்படத்தான் முடிந்தது. அதே மாதம் முடிவில் குக்கிக்கு ட்யூஷன் எடுத்ததில் பணம் வருகிறது,அதில் தம்பி கேட்டதற்கிணங்க அவனுக்கு கால்பந்தாடுவதற்குத் தோதாக ஸ்பைக்ஸ் வைத்த ஷூக்களும்,தங்கை கீதாவுக்கு புதிய டிசைனில் புடவையும்,அண்ணன் சங்கருக்கு வேஷ்டியும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவாள் குக்கி,தனக்கென எதுவுமே வாங்கிக் கொள்ள மாட்டாள் அந்த தேவதை.

அவள் ஒரு தொடர்கதை கவிதா கதா பாத்திரம் தேளின் கொடுக்கை போன்ற நாக்கைக் கொண்டவள், ஆண்களை அடியோடு வெறுப்பவள், தன்னைச் சுற்றி நெருப்பு வேலி அமைத்து சமூகத்தில் நடப்பவள். குக்கியைப் போல நன்கு படித்திருப்பவள் இவள் அலுவலக மேலாளருக்கு காரியதரிசி,மேகே தாக தாரா  குக்கியோ முதலில் அப்பாவுக்கு தோள் கொடுக்க ட்யூஷன் எடுத்து சம்பாதித்தவள்,அப்பா இடுப்பெலும்பு உடைத்துக்கொண்டதும் குடும்ப பாரம் ஏற்றப்பட தன் M A வணிகவியல் முதுகலைப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கொல்கத்தா பெருநகர அலுவலகம் ஒன்றில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேருவாள்.

மேக தாக தாராவின் மூத்த மகன் ஷங்கர் மிகுந்த சுயநலமி,  இளங்கலை படித்திருந்தாலும், குடும்ப பாரம் சுமக்க அஞ்சுபவன், ஹிந்துஸ்தானி சாஸ்த்ரிய சங்கீதத்தில் பாடகன் ஆக தீவிர முயற்சி செய்கிறான்.

சவர பிளேடுக்குக் கூட அன்புத் தங்கை குக்கி தான் பணம் தருவாள், அவன் மிகுந்த தீவிரமாக அனுதினம் அதிகாலை ,அந்திவேளை என சாதகம் செய்து பயிற்சி செய்பவன்,ஒரு கட்டத்தில் வங்காளத்தில் தனக்கு எதிர்காலமில்லை என உணர்ந்து பம்பாய் சென்று அங்கே ரேடியோவில் பாடி புகழ்பெற்று தனி கச்சேரிகள் செய்யும் அளவுக்கு உயர்கிறான்,
நாலனா சவர பிளேடுக்கு மளிகைக் கடைக்காரரிடம் கடன் தரக் கேட்டு கெஞ்சியவன்,இப்போது ஒரு கச்சேரிக்கு 1200 ரூபாய் வாங்கும் அளவுக்கு உயர்கிறான். குக்கியின் தியாகத்தை அம்மா,இளைய தங்கை கீதா ,குக்கியின் காதலன் சனத் மறந்து விட்டாலும் இவன் மறக்கவில்லை.அவன் நீண்ட நாள் கழித்து தன் சேரிக்குள் வருகையில் உச்சஸ்தாயியில் பாடியபடி வரும் பாடல் இது.இப்படத்தின் மிக அருமையான இசை Ustad Aamir Khan saheb அவர்கள்,பாடியவர்.Pandit A Kanan https://www.youtube.com/watch?v=2lU74RzeARg&sns=fb

படத்தின் முதல் காட்சி தங்கை குக்கியியின் கால் செருப்பு அறுந்து போவதைக் கண்ட மூத்தவன் சங்கரின் பார்வையிலேயே துவங்கும், கடைசிக் காட்சியிலும்  தன் தங்கையை ஷில்லாங்கின் சானிட்டோரியத்திலேயே அடக்கம் செய்து விட்டுத் திரும்பிய அண்ணன் சங்கர் தங்கள் தெருவில் தன் தங்கை குக்கியின் தோழி அவளும் வீட்டுக்கு மூத்தவள் வேலைக்குச் செல்கையில் அவள் செருப்பு அறுந்து போவதைப் பார்ப்பான், அங்கே அவள் இவன் செருப்பு அறுந்து போனதைப் பார்த்துவிட்டானே என குறுகுறுப்புடன் பார்த்து சிரித்து விட்டு நகர்வாள்,அங்கே சங்கர் முகம் பொத்தி அழுவதுடன் படத்தை முடித்து வைப்பார் இயக்குனர் ரித்விக் கட்டக்.

இளைய மகள் கீதா மிகவும் சுயநலமி ,இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி, தன் அழகின் மீது அதீத கர்வம் கொண்டிருப்பவள்,தனக்கு வேண்டிய உடைகள்,காலணி,அலங்காரப் பொருளுக்காக அக்காவை அன்பாய் பேசி சரிகட்டி வாங்கிக் கொள்பவள், செய் நன்றியே இன்றி அக்கா குக்கியின் காதலன் இயற்பியல் முதுகலை முடித்து ஆராய்ச்சிக்கு ஸ்காலர்ஷிப் தேடிக்கொண்டிருக்கும் சனத்தை அக்கா நீண்ட காலமாக விரும்புகிறாள் எனத் தெரிந்தும் அவனின் காம இச்சையைத் தூண்டிவிட்டுத் பின்னர் தணித்து , பின்னர் அவசரமூட்டி திருமணம் செய்து, அவனின் மோகம் தணியும் முன்னர் அவனை தந்தையுமாக்கி தன் முந்தானையில் முடிந்த கைகாரி.

அவள் ஒரு தொடர்கதையில் கவிதாவின் கடைசித் தங்கை கதாபாத்திரம் பள்ளி இறுதிகூட தாண்டாதவள்,படிப்பில் கோட்டை விட்டு விட்டு,இல்லற சுகத்துக்குக் கனவு காணுபவள்.சின்ன அக்காவான கைம்பெண் பாரதிக்கு மூத்த அக்கா கவிதாவின் காதலன் திலக் எழுதும் காதல் கடிதத்தை, திருடிப் படித்து தாபம் கொள்கிறவள்.

 மூத்தவள் கவிதாவின் வங்காள அலுவலக இயக்குனர் கோகுல்நாத் கவிதாவின் வீட்டுக்கு வந்து கவிதாவை பெண்கேட்டு திருமணம் பேசி முடிப்பார், திருமண நாளில் மூர்த்தியின் திடீர் சாவால், அந்த சூழலை எதிர்கொள்ள வேண்டிய கவிதா மணமேடை வரை வந்தவர் சடாரென தங்கைக்கு தன் மணமாலையைச் சூட்டுவார், இவரும் எந்த ஆச்சர்யமோ, எதிர்ப்போ காட்டாமல் மணமகன் அருகே சடாரென அமர்ந்து தாலிக்கு கழுத்தை நீட்டி விடுவார்.

மேக தாக தாராவின் தம்பி கதாபாத்திரம்.கல்லூரியில் இரண்டாமாண்டு படிப்பவன், தேகப்பயிற்சியிலும் கால்பந்தாட்டத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன், ஆங்கில விரிவுரையாளர் அப்பா இடுப்பெலும்பு முறிந்து படுத்த படுக்கையாகிவிட, கல்லூரி படிப்புக்கு முழுக்குப் போட்டவன் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலைக்குச் சேருகிறான், வீட்டில் அக்கா மற்றும் அப்பாவின் மன அமைதிக்காக விளையாட்டு பயிற்சியாளன் என்று பொய் சொல்கிறான்.முதல் மாத சம்பளத்தை முழுதாக அக்காவிடம் தருகிறான்.

நாளடைவில் தொலைவில் உள்ள தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு வந்து போக அசௌகரியமாக இருக்க அவன் தொழிற்சாலைக்கருகே ஹாஸ்டலில் தங்கி மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொள்கிறான். அக்காவின் மீது மிகவும் இரக்கம் கொண்டவன்   அக்காவை புல்லுருவியாக பயன்படுத்துவதால் அண்ணன் சங்கர் மீது மிகுந்த கோபமுற்றவன்,அண்ணன் ஒருநாள் இவனுடைய செருப்பை அணிந்துகொள்ள,அதை அடிக்காத குறையாகப் பிடுங்குகிறான்,தன் உழைப்பில் சொகுசாக அண்ணன் வாழ்வதை சிறிதும் விரும்பவில்லை,அண்ணன் முடி வெட்டும் செலவுக்கு தம்பியிடம் பணம் கேட்க, மிகவும் கோபாவேசமாக பேசுகிறான்.

ஆனால் வீட்டுக்குள் வரும் தங்கை குக்கி இதைக் கண்டு வருந்தியவள், அண்ணனுக்கு பணம் தருகிறாள்,அண்ணனிடம் ஆறுதல் சொல்கிறாள், அண்ணனோ நீங்கள் எல்லாம் என் தோள் மீது வளர்ந்தவர்கள்,இதற்குப் போயெல்லாம் வருந்தமாட்டேன், ஒருநாள் கண்டிப்பாக என் லட்சியத்தை அடைவேன் என்கிறான்.

இத்தம்பிக்கு ஒருநாள் தொழிற்சாலையில் விபத்து நடந்து கை எலும்பு முறிவும் பலத்த காயமும் ஏற்படும்,அதற்கு தம்பியை மருத்துவமனை சென்று அனுமதித்து சிகிச்சைக்கு பணம் வேண்டி எங்கும் கிடைக்காமல் அலைவாள் குக்கி, கடைசியில் தன் காதலன் சனத்திடம் தயங்கியபடி கேட்டு 150 ரூபாய் கடன் வாங்குவாள்,அங்கே இவளது தங்கை வேண்டா வெறுப்பாக பேசுவாள்,வழியனுப்புவாள்,சொந்த தம்பிக்கு 150 ரூபாய் தருவதற்கு சுனங்குவாள்.அங்கே குக்கிக்கு மயக்கம் வந்து விழப்போக அவளை பரிசோதித்த தாதி,அவளை ஒரு எக்ஸ்ரே எடுத்துக்கொள்ள அறிவுருத்துவாள்,ஆனால் குக்கியோ அதற்கு ஆகும் செலவை நினைத்து அதை கடைசிவரைப் பொருட்படுத்தவே மாட்டாள்.

அவள் ஒரு தொடர்கதையில் கண் பார்வையற்ற கடைசித் தம்பி 10வயதுச் சிறுவன் கதாபாத்திரம் உண்டு. வட்டக்கண்ணாடி அணிந்திருப்பான்,எங்கே அக்கா தன்னை கைவிட்டுவிடுவாளோ? என அஞ்சியவன்,கடற்கரையில் பாட்டுப் பாடி பிச்சையெடுத்து ஒரு தகர பெட்டியில் பணம் சேர்த்து வைப்பான்.தன் வயது ஈடான அண்ணன் மகனுடன் சினிமாவுக்குப் போய் வசனமும் கேட்பான்.

 தவிர சிகரட் பெட்டிகளை பொருக்கி வந்து அதை மிக அழகாக வரிசையாக அடுக்கி ஊதி விட ,அது அழகாக சரிவதை கேட்பான்.மிக அழகான காட்சி அது.அவள் ஒரு தொடர்கதை படத்தில் குடும்ப உறுப்பினர் கதாபாத்திரங்களாக மூர்த்தியின் படிக்காத மனைவியும் அவளது 10 வயது மகனும் 7 வயது மகளும், 1 வயது கைக்குழந்தையும் உண்டு.

மூர்த்தியின் அம்மா மூர்த்தியின் வயிற்றுப்பசியை தீர்ப்பாள்,மூர்த்தியின் மனைவி மூர்த்தியின் உடற்பசியை தீர்ப்பாள்,அதில் அவள் புருஷன் ஏகபத்தினி விரதன் என்னும் அற்ப சந்தோஷமும் கொண்டிருப்பாள்.மூர்த்தியின் தங்கை அவனின் பணப்பசியைத் தீர்ப்பாள்.புல்லுருவி மூர்த்தி அதில் சுகம் கண்டு விடுவான்.சதா குடி ரேஸ் என்றிருப்பான்,வாய் நிறைய பொய்களுடன் வலம் வருவான்.

மேகதாகதாராவின் காதலன் சனத் கதாபாத்திரம்,குக்கியின் நீண்ட நாள் காதலன்,பெண்ணின் ஸ்பரிசத்துக்காக ஏங்குபவன் ,ஆயினும் குக்கி எப்போதும் என் அண்ணன், தம்பி தலையெடுக்கும் வரை சற்று காத்திரு, என்பதால் குக்கி மீதில் வருத்தமாகவும் அவள் அண்ணன் சங்கர் மீது மிகவும் கோபமாகவும் இருக்கிறான்.இச்சூழலை அழகாக பயன்படுத்திக்கொள்வாள் குக்கியின் தங்கை கீதா,

காதலன் சனத் அறிவியல் முதுகலை முடித்தும் வேலை தேடிக்கொள்ளாமல் குக்கியின் தயவில் செலவுக்குப் பணம் பெற்று ஒரு கூட்டம் அதிகமான பேச்சிலர் அறையில் வசிக்கிறான்,அங்கும் யாவருக்கும் சுமையாகவே இருக்கிறான். மூன்று நல்ல வேலைகள் இவனுக்குக் காத்திருந்தும்,எதிலும் சேருவதாக இல்லை, டாக்டரேட்டுக்கு அரசாங்க ஸ்காலர்ஷிப்புக்கு முயற்சி செய்கிறான்,

குக்கி நம் திருமணம் இப்போது இல்லவே இல்லை என்றதும்,அவள் தங்கை இவனை  சந்திக்கத் துவங்க, சனத்துக்கு இல்லறத்தை உடனே ஆரம்பிக்க ஆசை பிறக்கிறது,300 ரூபாய் சம்பளத்தில் நல்ல வேலையாக பார்த்து சேர்ந்தவன், சொகுசாக ஒரு ஃப்ளாட்டில் குடியேறுகிறான், அங்கே குக்கியின் தங்கை கீதா கல்லூரிக்கு மட்டம் போட்டு  சென்று சனத்துக்கு படுக்கையில் விருந்தாக, கீதாவை நிரந்தரமான துணையாக்கிக் கொள்ள அவள் வீட்டில் வந்து பெண் கேட்டு  எந்தக் குற்ற உணர்வுமின்றி கைபிடிக்கிறான் சனத்.

 அவள் ஒரு தொடர்கதையில் இது எதிர்மாறாக இருக்கும். கைம்பெண் பாரதியின் [ஸ்ரீப்ரியா] அழகில் ஆசைகொண்ட கவிதாவின் நீண்ட நாள் காதலன் திலக் [விஜயகுமார்] ,எப்போதோ கிடைக்கப்போகிற கவிதாவின் ஸ்பரிசத்துக்கு காத்திருப்பதைப் விட,அவள் தங்கை பாரதியை உடனே கரம் பிடித்தால் தனக்கும் ஆசை பூர்த்தியகும்,

கைம்பெண் பாரதிக்கும் புதுவாழ்க்கை கிடைக்கும்,கவிதாவுக்கும் ஒரு நிம்மதி பிறக்கும் என மனகணக்கு போட்டவர்,பாரதிக்கு கடிதம் எழுதி அதனுடன் மல்லிகைச்சரம் வைத்து சிறுவனிடம் தந்து விடுவார்.கவிதா தன் தங்கைக்காக தன் காதலனை விட்டுத்தருவார். கைம்பெண் பாரதிக்கு தன் கணவர் திலக்கும் அக்காவும் காதலர்கள் என்று கடைசி வரை தெரியாது.
அவள் ஒரு தொடர்கதையில் மனம் திருந்தி தங்கையின் அலுவலகத்திலேயே வேலைக்குச் சேர்ந்த அண்ணன் மூர்த்தி பெண் பித்தரான கவிதாவின் முன்னாள் அலுவலக மேலாளர் எம்.ஜி.சோமனால் குத்து விளக்கால் குத்திக் கொல்லப்படுவார்.இந்த முடிவு மேகதாகதாராவில் கிடையாது.

இதில் வரும் நாகரீகத் தோழி கதாபாத்திரமான  ஃபடாஃபட் ஜெயலட்சுமி, மற்றும் சதா எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகளில் மூழ்கிக்கிடக்கும் அவர் விதவைத் தாயாரின் கதாபாத்திரங்கள் , கவிதா வீட்டு மாடியில் வசிக்கும் விகடகவி கமல்ஹாசன், கவிதா தினம் வேலைக்குச் செல்லும் பேருந்தின் நடத்துனர் திடீர் கண்ணையா, கவிதாவின் பெண் பித்து மேலாளர் எம்,ஜி.சோமன், கவிதாவின் நல்லுள்ளம் கொண்ட அலுவலக இயக்குனரான கோகுல்நாத் ஆகிய கதாபாத்திரங்கள் மேகதாகதாராவில் கிடையாது.

மேலும் அவள் ஒரு தொடர்கதை போன்ற குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை தன் அரங்கேற்றம் 1973 படத்திலிருந்தே இயக்குனர் பாலசந்தர் சொல்லத் துவங்கி விட்டார், அவள் ஒரு தொடர்கதையிலும் அதே 9 பேர் கொண்ட குடும்பம், பின்னாளில் 1987ல் வெளியான மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்திலும் அதே 9 பேர் கொண்ட குடும்பம், மேகேதாகதாரா அரங்கேற்றம் படத்துக்கும் முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது, மேலும் கன்னட சினிமாவின் புட்டண்ண கனகல் தன் பல படைப்புகளில் சமூகத்துக்கு புரட்சிக் கருத்து சொல்லும் சுமார் 30 பெண்ணியம் சார்ந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கே. பாலசந்தர் ஸ்ரீதர்,புட்டன்னா கனகல்,சத்யஜித் ரே,கட்டக் ஆகியோரை தன் ஆதர்சமாகக் கொண்டவர்.அவர்கள் படைப்புகளில் இருந்து நிறைய கற்றும் பெற்றும் கொண்டார், அதை வெளிப்படையாக முழுமனதுடன் பொது வெளியில் பாராட்டியுமிருக்கிறார், அதை தன் படைப்புகளில் பிரதிபலித்து மரியாதை செய்தார் என்றார் மிகையில்லை.

கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் அடுத்தடுத்த நான்கு தவணைகளுமே பெருநகரச் சூழலில் நடுத்தர வர்க்கத்தின் குடும்பப் பின்னணியில் குடும்பத்தலைவன் இல்லா குடும்பத்தின் அல்லல்களைச் சொன்ன படைப்புகளாக உருவாக்கியிருந்தார்.

அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் கதாசிரியர்  எம்.எஸ்.பெருமாள். அமரர் சுகி.சுப்பிரமணியன் அவர்களின் மகனும். சுகி.சிவம் அவர்களின் மூத்த சகோதரரும் ஆவார். சென்னை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், வெவ்வேறு மாநில தொலைக்காட்சி நிலைய இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.அவரிடம் மூலக்கதை தான் எதிர்பார்த்தபடி படமாக்கக் கிடைக்க அதை முறையாக உரிமை வாங்கி படத்தில் க்ரெடிட் தந்து எடுத்தார் கே.பாலசந்தர்.
.

பாலசந்தர் தன் நிழல் நிஜமாகிறது படத்தின் மூலப்படைப்பான அடிமகள் 1969 படத்துக்கு இயக்குனர் கே.எஸ். சேதுமாதவன்[லட்சுமி நடித்த ஜூலி மற்றும் சட்டகாரி படத்தின் இயக்குனர்] அவர்களுக்கு கொடுத்த கிரெடிட்டை இங்கே பார்க்கலாம்.

அவர் அவள் ஒரு தொடர்கதையின் கதை உரிமைக்காக எழுத்தாளர் எம்.எஸ்.பெருமாள் போட்ட நிபந்தனைகளுக்கெல்லாம் மறுக்காமல் ஒத்துக்கொண்டார், தெய்வம் தந்த வீடு என்னும் சிச்சுவேஷன் பாடலை படத்தில் வைக்க எம்.எஸ்.பெருமாள் ஒத்துக்கொள்ள மிகவும் மறுக்கவே,

இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதுகிறார் அதனால் இக்கதைக்கு மிகவும் பலமாக இருக்கும் என சமாதானம் செய்து உடன் அழைத்துப்போய் அப்பாடலை உருவாக்கினாராம். இப்படியெல்லாம் சிரமப்பட்டதற்கு அவர் நினைத்திருந்தால் மேக தாக தாராவுக்கே நேரடியாக க்ரெடிட் தந்தும் இருக்கலாம் அல்லவா?!!! ஏன் கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து கொக்கை பிடிக்க வேண்டும்?!!!அவள் ஒரு தொடர்கதையின் வங்காள வடிவமான கபிதா 1977 திரைப்படத்தி்ன் இயக்குனரான பரத் சம்ஷேர் சத்யஜித்ரேயின் சீமா பத்தா 1971 என்னும் க்ளாஸிக் திரைப்படத்தின் ஒரு தயாரிப்பாளரும் கூட, மேலும் மேகே தாக தாராவில் அண்ணன் சங்கர் கதாபாத்திரமான நடிகர் அனில் சேட்டர்ஜி  தான் கபிதாவில் அண்ணன் மூர்த்தி கதாபாத்திரமும் செய்தார். அவர்கள் இப்படத்தை  ட்ரியூட் அல்லது அகத்தூண்டுதல் என நினைத்தமையால் தான் அம்முயற்சி சாத்தியமாயிற்று
 
ஒரு கதைக்கு அவர் எத்தனை பேருக்கு க்ரெடிட் தரவேண்டும்? என்று எதிர்பார்க்கின்றனர் குற்றம் சாட்டுபவர்கள்?!!!
    
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)