"தி ரீடர்" (The Reader) 2008 ஆம் ஆண்டு வெளியானது, இத்திரைப்படத்தை இயக்குனர் ஸ்டீபன் டால்ட்ரி இயக்கினார். இதில் ஹன்னா ஷிமிட்ஸ் என்ற முக்கிய வேடத்தில் நடிகை கேட் வின்ஸ்லெட் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு, மைய கதாபாத்திரமான ஹன்னாவின் மனசாட்சியற்ற தன்மையையும் ரகசியமான உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியதால் பெரும் பாராட்டைப் பெற்றது.
மைக்கேல் பெர்க் கதாபாத்திரத்தில் இளம் வயதில் டேவிட் கிராஸ்-ம், முதிய வயதில் ரால்ஃப் ஃபியன்னஸ்-ம் நடித்திருந்தனர்.
படத்தின் ஒளிப்பதிவை கிறிஸ் மெங்கஸ் மற்றும் ரோஜர் டீக்கின்ஸ் இருவரும் மேற்கொண்டனர். இவர்கள், போருக்குப் பிந்தைய ஜெர்மனியின் தனிமையையும், கதை மாந்தர்களின் நெருக்கமான உறவின் உணர்வுகளையும், பின்னர் சிறை வாழ்க்கையின் உணர்வற்ற தன்மையையும் பிரதிபலிக்கும் வகையில், குளிர்ந்த நிறங்களைக் கொண்ட மென்மையான ஒளியைப் பயன்படுத்தியிருந்தனர்.
டேவிட் ஹேர், த ரீடர். நாவலைத் தழுவி திரைக்கதையை அமைத்தார். இந்தத் திரைக்கதை, யூதப் படுகொலையின் கொடுமைகளுக்கும் ஹன்னாவின் எழுதப் படிக்கத் தெரியாமைக்கும் இடையில் உள்ள தார்மீகத் தொடர்புகளை வலியுறுத்துகிறது.
இப்படத்துக்கு Nico Muhly இசையமைத்தார். இந்த மென்மையான இசை, படத்தின் சோகத்தையும் மைக்கேலின் குற்ற உணர்வையும் பின்னணியில் தாங்கி நின்றது.
இந்தத் திரைப்படம் ஆஸ்கார் விருதுகள் உட்படப் பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதில் கேட் வின்ஸ்லெட் 'சிறந்த நடிகைக்கான' ஆஸ்கார் மற்றும் பாஃப்டா விருதுகளையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றார்.
உலக சினிமா பார்வையில், ஸ்டீபன் டால்ட்ரியின் இந்தத் திரைப்படம் ஒரு சாதாரண காதல் கதையாக இல்லாமல், ஒரு ஆழமான தார்மீகக் கேள்வியாகப் பரிணமிக்கிறது.
இது யூதப் படுகொலையின் சுமையையும், அதில் எஞ்சியிருக்கும் குற்ற உணர்வு, பச்சாத்தாபம் மற்றும் மன்னிப்பின் சிக்கலையும் ஆராயும் ஒரு நீதிக்கதையாக மிளிர்கிறது.
ஹன்னா, பாலியல் கவர்ச்சியையும், அதிகாரத்தையும், ஒரு போர்க் குற்றவாளியின் ரகசியத்தையும் ஒருங்கே கொண்டுள்ள ஒரு சிக்கலான கதாபாத்திரம், அதற்கு மிகப் பொருத்தமாக கேட் வின்ஸ்லெட்டை தேர்வு செய்திருந்தனர்.
இந்தத் திரைப்படம், இளம் மாணவன் மைக்கேல் மற்றும் முதிர் கன்னி ஹன்னாவின் உறவை, போருக்குப் பிந்தைய ஜெர்மனியில் உள்ள பழைய மற்றும் புதிய தலைமுறையினரின் மோதல் மற்றும் சமரசத்தின் ஒரு குறியீடாகவே பயன்படுத்துகிறது.
ஹன்னாவின் எழுதப் படிக்கத் தெரியாமை, நாஜிக்களின் தார்மீக விழிப்புணர்வின்மை மற்றும் வரலாற்று உண்மைகளைப் புறக்கணிக்கும் மனப்பான்மைக்கு இப்படைப்பு ஒரு வலிமையான குறியீடாகும்.
இயக்குநர் டால்ட்ரி, மைக்கேலின் பார்வையில் கதையை நகர்த்தி, ஹன்னா ஒரு குற்றவாளி என்று தெரிந்த பிறகும் பார்வையாளர்களை அவளுடன் உணர்ச்சி ரீதியாகப் பிணைத்து வைக்கிறார், இது பார்வையாளர்களுக்குத் தார்மீக முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.
சமூகப் பொறுப்பு, சட்டப்பூர்வமான தீர்ப்பு மற்றும் தனிப்பட்ட பச்சாதாபம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள சிக்கலான சமநிலையைத் தேடும் ஒரு சிறந்த உலக சினிமா படைப்பாக இது நிலைபெறுகிறது.
த ரீடர் நாவல் பற்றி:-
'தி ரீடர்' நாவல், போருக்குப் பிந்தைய ஜெர்மனியின் காலகட்டத்திற்கு, 1960களுக்கு, வாசகர்களைக் கொண்டு செல்கிறது. அங்கே ஒரு இளம் மாணவனுக்கும், வயதில் மூத்த முதிர் கன்னிக்கும் இடையே ஏற்படும் விடலைக் காதலை மையமாகக் கொண்டு கதை விரிகிறது.
ஜெர்மனியில் "அப்பா, நீங்கள் போரில் என்ன செய்தீர்கள்?" என்று அடுத்த தலைமுறை கேள்விகளை எழுப்பத் தொடங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் கதை விரிகிறது. இந்தக் காலகட்டத்தின் பல்வேறு நினைவுகளும் கண்ணோட்டங்களும் ஒருங்கிணைந்து வரலாறாகக் கொள்ளப்படுகின்றன.
வரலாறு மற்றும் நினைவுகளை ஒப்பிட்டுப் படிக்கும்போது, ஜெர்மானிய மொழியில் "Vergangenheitsbewältigung (VGB)" என்ற கருத்தாக்கம் எழுந்தது. இதன் பொருள் "கடந்த காலத்தைக் கடந்து வருதல்" என்பதாகும். கதை நாயகன் மைக்கேல் பெர்க், தான் நேசித்த பெண் ஹாலோகாஸ்டின் கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர் என்று அறியும்போது, தன் பிந்தைய-நினைவுகளுடன் போராட நேரிடுகிறது.
நன்னெறி சார்ந்த கேள்விகளை எழுப்பும் நாவலின் ஆசிரியர், மைக்கேலின் பார்வையில் வாசகர்களை நிறுத்தி, வரலாற்றை நினைவு கூர்வதில் நினைவுகளின் தாக்கம் என்ன என்பதை ஆராய்கிறார்.
அத்துடன், அடுத்த தலைமுறைக்குள்ள பொறுப்புகள் என்ன, மேலும் வரலாற்றை எப்படி நினைவில் கொள்வது, எப்படி நினைவுக் குறியீடாக்குவது என்ற அவர்களின் விளக்கம் என்ன என்பது பற்றியும் இந்த படைப்பு சிந்திக்க வைக்கிறது.
இந்த நாவல் ஜெர்மனியில் 500,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. இது பல இலக்கிய விருதுகளையும், சாதகமான விமர்சனங்களையும் பெற்றது. 2004 ஆம் ஆண்டில், ஜெர்மன் வாசகர்கள் மத்தியில் மிகவும் பிடித்த 100 புத்தகங்களில் இது 14வது இடத்தைப் பெற்றது. இது சமகால ஜெர்மானிய நாவல்களில் மிகவும் உயர்ந்த தரவரிசைகளில் ஒன்றாகும். இது "தனிப்பட்ட மற்றும் பொதுவானவற்றுக்கு இடையேயான கலைத்துவ வேறுபாட்டை அபத்தத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது" என்று வாசகர்கள் பாராட்டினார்கள் .
"ஒருவர் பெரிய கருப்பொருள்கள் பற்றி உண்மையிலேயே எழுத முடிந்தால், அவற்றைத் தவறவிடக் கூடாது" என்று புகழ்ந்தனர்.
1998 ஆம் ஆண்டில், இந்த நாவல் ஹான்ஸ் ஃபல்லாடா பரிசை வென்றது.
2002 ஆம் ஆண்டுக்குள், நாவல் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அமெரிக்காவில் "கவர்ச்சிகரமான, தத்துவ ரீதியாக நேர்த்தியான, மற்றும் தார்மீக ரீதியாக சிக்கலான" படைப்பு என்று விவரித்தனர். "19 ஆம் நூற்றாண்டின் பிந்தைய-காதல், பிந்தைய-பழங்கதை வடிவங்களை 20 ஆம் நூற்றாண்டின் பயங்கரமான வரலாற்றோடு துணிச்சலாக இணைத்த படைப்பு என புகழ்ந்தனர், இந்த நாவல் அமெரிக்காவில் இரண்டு மில்லியன் பிரதிகள் விற்பனையானது , இதில் பல, 1999 இல் புகழ்பெற்ற ஓப்ரா'ஸ் புக் கிளப்பில் இடம்பெற்ற பிறகு விற்றன, இங்கிலாந்தில் 200,000 பிரதிகள், பிரான்சில் 100,000 பிரதிகள் விற்றன, மேலும் தென்னாப்பிரிக்காவில் 1999 ஆம் ஆண்டின் பூக் பிரைஸ் விருதையும் இப்படைப்பு பெற்றது.
நாவல் அறிமுகம் மற்றும் முக்கியத்துவம்
"தி ரீடர்" (The Reader - ஜெர்மன்: Der Vorleser) என்பது ஜெர்மானிய சட்டப் பேராசிரியர் மற்றும் நீதிபதி பெர்ன்ஹார்ட் ஷிளிங்க் (Bernhard Schlink) எழுதிய ஒரு முக்கியமான நாவலாகும். இது 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
போருக்குப் பிந்தைய ஜெர்மன் தலைமுறையினர் யூதப் படுகொலைக்கு (ஹோலோகாஸ்ட்) எதிர்வினையாற்றுவதிலும், அதைப் புரிந்துகொள்வதிலும் உள்ள தார்மீகச் சிக்கல்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது.
படத்தின் கதை:-
இந்த படைப்பின் முக்கிய கதாபாத்திரங்களாக மைக்கேல் பெர்க் மற்றும் ஹன்னா ஷிமிட்ஸ் உள்ளனர். மைக்கேல் பெர்க் கதை ஆரம்பிக்கும் போது 15 வயதுச் சிறுவனாகச் சித்தரிக்கப்படுகிறார்,
மேலும் தன் பிற்காலத்தில் சட்ட வரலாற்றில் ஆராய்ச்சியாளராக, விவாகரத்து பெற்றவராக, ஜூலியா என்ற ஒரு மகளுக்குத் தந்தையாகவும் சித்தரிக்கப்படுகிறார்.
அவர் தனது தலைமுறையினரைப் போலவே, நாட்டின் சமீபத்திய வரலாற்றான ஹோலோகாஸ்ட்டை எதிர்கொள்ளப் போராடுகிறார்.
மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ஹன்னா ஷிமிட்ஸ், ஆஷ்விட்ஸில் முன்னாள் காவலராக இருந்தவர். மைக்கேலைச் சந்திக்கும்போது இவருக்கு 36 வயது, இவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் மற்றும் ட்ராம் நடத்துநராகப் பணிபுரிகிறார். இவர்களது உறவில் ஹன்னா ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளார்.
மைக்கேலின் தந்தை, கான்ட் மற்றும் ஹெகல் தத்துவங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தத்துவப் பேராசிரியர். நாஜி சகாப்தத்தில் ஸ்பினோசாவைப் பற்றி விரிவுரை வழங்கியதற்காக வேலையை இழந்தவர்.
அவர் உணர்ச்சி ரீதியாக இறுக்கமானவர் தனது குழந்தைகளிடம் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தாதவர். மைக்கேலின் மற்ற உறவுகளில் ஹன்னா உருவாக்கிய சிரமங்களை இது மேலும் அதிகரிக்கிறது.
மைக்கேல் தனது இளமைக்காலத்தில் தாய் அவரைக் கொஞ்சுவதைப் பற்றி நினைவுகூருகிறார், இது ஹன்னாவுடனான உறவில் மீண்டும் தட்டியெழுப்பப்படுகிறது.
கதை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதில் முதல் பாகம் மேற்கு ஜெர்மன் நகரத்தில் 1958 இல் தொடங்குகிறது. 15 வயதான மைக்கேல் வீடு திரும்பும் வழியில் உடல்நிலை சரியில்லாமல் போகிறார்.
அப்போது 36 வயதான ட்ராம் நடத்துநர் ஹன்னா ஷிமிட்ஸ் அவரைக் கவனித்து, பாதுகாப்பாக வீட்டிற்கு வழிநடத்தி கொண்டு சேர்க்கிறார். ஸ்கார்லெட் காய்ச்சலால் மூன்று மாதங்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த மைக்கேல், குணமடைந்த பிறகு நன்றி தெரிவிக்க ஹன்னாவைப் பார்க்கச் செல்கிறார்.
அங்கு அவருக்கு ஹன்னா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அவள் உடை அணிவதைப் பார்த்தபின் வெட்கத்தால் தெறித்து ஓடினாலும், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவளைக் காணத் திரும்புகிறார். பாய்லருக்கு குளிர் காய்வதற்கு வாளியைத் தந்து நிலக்கரி எடுக்கச் சொல்கிறாள், பின்னர் நிலக்கரித் தூசியுடன் நகைப்புக்கிடமான குழந்தை போல இருந்த மைக்கேலைக் குளிப்பாட்டி, ஹன்னா அவனை மயக்கி, அவர்களுக்கிடையில் ஒரு தீவிரம் மிக்க முறையற்ற காமத்தை தொடங்குகிறாள். அவர்கள் தொடர்ந்து சந்தித்து, குளியல் தொட்டியில் குளித்து, உடலுறவு கொள்வதற்கு முன், ஹன்னா அடிக்கடி மைக்கேலை உரத்த குரலில் துணை இலக்கிய பாட புதினங்களை வாசிக்கச் சொல்கிறாள். குறிப்பாக, 'தி ஒடிஸி' மற்றும் செக்காவ்வின் 'தி லேடி வித் தி டாக்' போன்ற பாரம்பரிய இலக்கியங்களை வாசிக்க வைத்து கேட்கிறாள்.
உடல் ரீதியான நெருக்கம் இருந்தபோதிலும், உணர்ச்சி ரீதியாக அவர்கள் விலகியே இருக்கிறார்கள், ஹன்னா சில சமயங்களில் மைக்கேலை உடல் ரீதியாகவும் வார்த்தைகளாலும் அதிர்வூட்டி துன்புறுத்துகிறார். இந்த உறவு சில மாதங்கள் நீடித்த நிலையில், மைக்கேல் தன் பள்ளி நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடத் தொடங்கியதால் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கம் மெல்ல குறையத் தொடங்கியது. இவனது பிறந்தநாளன்று குளியல் வாசிப்பு உடலுறவுக்குப் பின், ஹன்னா திடீரென்று எந்தத் தடயமும் இல்லாமல் அவன் வாழ்விலிருந்து மறைந்துவிடுகிறாள்.
தான் செய்த ஏதோவொரு செயலினால்தான் அவள் சென்றாள் என்று மைக்கேல் குற்ற உணர்வு கொள்கிறான், மேலும் ஹன்னாவைப் பற்றிய நினைவினால் அவரது பிற்காலப் பெண் உறவுகள் அனைத்துமே சொல்லி வைத்தார் போல பாதிக்கப்படுகின்றன.
ஆறு ஆண்டுகள் கழிகின்றன, மைக்கேல் இப்போது சட்டப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார். ஒருமுறை, அவர் மாணவர்கள் குழுவுடன் ஒரு போர்க் குற்றவியல் விசாரணையை (war crimes trial) பார்வையிடச் செல்கிறார். அங்கு நடு வயதுள்ள ஆறு பெண்கள், ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் உள்ள ஆஷ்விட்ஸின் துணை முகாமில் (satellite of Auschwitz) எஸ்.எஸ். காவலர்களாகப் (SS guards) பணியாற்றியதற்காக விசாரிக்கப்பட்டனர்.
இந்த ஆறு பெண்கள், தங்களின் பாதுகாப்பில் இருந்த சுமார் 300 யூதப் பெண்களை, முகாமில் இருந்து கொட்டும் பனியில் இறக்கும் வரை நடைபயணம் செய்யும் போது கோபுரத்தில் விமானம் குண்டு வீசப்பட்ட ஒரு தேவாலயத்தில் பூட்டி வைத்து, தீயில் இறக்க விட்டு வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
உயிர் பிழைத்தவர்களில் அப்போது சிறுமியாக இருந்த , மாத்தர் என்ற யூத இளம்பெண்ணால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் இந்தச் சம்பவம் தத்ரூபமாக விவரிக்கப்பட்டிருந்தது, அவர் அதன் பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர், அவரே விசாரணையில் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாகவும் இருக்கிறார்.
இந்த விசாரணையைக் காணும் மைக்கேல், குற்றவாளிகளில் ஒருவராக ஹன்னா ஷிமிட்ஸைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவர் தான் நேசித்த ஒரு குற்றவாளி மீது குற்ற உணர்வும், அதே நேரத்தில், ஹன்னாவுக்கு எதிரான சான்றுகள் இருந்தபோதிலும் மற்ற காவலர்களைக் கண்காணித்த முழுப் பொறுப்பையும் அவள் ஏன் ஏற்கிறாள் என்ற குழப்பமும் கொள்கிறார்.
அவள்தான் தேவாலயத் தீ விபத்து பற்றிய கணக்கை எழுதினாள் என்று அவள் மீது அபாண்டமான குற்றம் சாட்டப்படுகிறது. முதலில் அவள் மறுத்தாலும், அவளுடைய கையெழுத்தின் மாதிரியை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, பீதியடைந்த ஹன்னா, அதைச் சமர்ப்பிக்காமல் இருப்பதற்காக அந்த ஆவணத்தை எழுதியதை ஒப்புக்கொள்கிறாள்.
இந்தத் தருணத்தில், மைக்கேல் ஒரு பேரதிர்ச்சிக்குள்ளாகி, ஹன்னா எந்த விலை கொடுத்தும் வெளிப்படுத்த விரும்பாத ஒரு ரகசியத்தை அவள் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்கிறார், அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது . அவளுடைய பல செயல்பாடுகளுக்கு இதுவே காரணம் என்பதையும் மைக்கேல் அத்தருணத்தில் புரிந்து கொள்கிறார், அவள் சீமென்ஸ் ட்ராம் நிறுவனத்தில் அலுவலகத்தில் அமர்ந்து செய்ய கிடைத்த உயர் பதவியை மறுத்ததற்கும் இதுவே காரணம் என விளங்கிக் கொள்கிறார்; அந்தப் பதவி உயர்வு அவளை மேற்பார்வை செய்யும் பொறுப்பிலிருந்து நிச்சயம் நீக்கி இருக்கும். மேலும், அவளது ரகசியம் ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்ற பயம்தான் அவள் வாழ்நாள் முழுவதும் சுமந்த பயமாக இருந்தது என அறிகிறார்.
விசாரணையின்போது, ஹன்னா தனது மேற்பார்வையின் கீழ் இருந்த பலவீனமான, நோய்வாய்ப்பட்ட யூதப் பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை விஷவாயு அறைகளுக்கு அனுப்புவதற்கு முன்பு அவளுக்காக உரக்கப் படிக்கச் செய்ததாகத் தெரியவருகிறது. அவள் அவர்களின் கடைசி நாட்களைச் சகிக்கக்கூடியதாக மாற்ற விரும்பினாளா, அல்லது அவர்கள் தனது எழுதப் படிக்கத் தெரியாத ரகசியத்தை வெளிப்படுத்திவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை மரணத்திற்கு அனுப்பினாளா என்பதில் மைக்கேல் மிகவும் குழப்பமடைகிறார்.
இந்த இரகசியத்தை நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவதா வேண்டாமா என்ற தார்மீகச் சிக்கலில் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, மைக்கேல் தன் கல்லூரி பேராசிரியரிடம் ஆலோசனை கேட்கிறார், ஹன்னாவுடன் முதலில் பேசினால்தான் ரகசியத்தை வெளிப்படுத்துவது என்ற நிபந்தனை இருந்தும், மைக்கேல் அவளுடன் தன் மனத்தடையால் பேசவில்லை. இறுதியில், மைக்கேல் அவளது எழுதப் படிக்கத் தெரியாத ரகசியத்தை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.
இதன் விளைவாக, ஹன்னா மற்ற பெண்களுக்கு லேசான தண்டனைகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், அவள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறாள்.
பல ஆண்டுகள் கடந்துவிட்டன, மைக்கேல் விவாகரத்து பெற்றவராக, ஒரு மகளுக்குத் தந்தையாக இருக்கிறார். ஹன்னாவுடனான தனது சிக்கலான உணர்வுகளை எதிர்கொள்ள முயற்சிக்கும் விதமாக, அவர் சிறையில் இருந்த ஹன்னாவுக்குப் புத்தகங்களை மைக்கில் வாசித்து ஒலிப்பதிவு செய்தவர்,1980 ஆம் வருடம் டேப் ரெக்கார்டர் உடன் ஒடிஸி புதினத்தின் ஒலி சித்திர வர்ணனை பதிவு செய்து அனுப்புகிறார், எந்தக் கடிதப் போக்குவரத்தும் இல்லாமல் தொடர்ந்து கேசட்களை கொத்து கொத்தாக அனுப்புகிறார். இந்த ஒலிப்பதிவுகளைப் பயன்படுத்தி, சிறை நூலகத்திலிருந்து அதே புத்தகங்களைப் பெற்ற ஹன்னா, தானாகவே வாசிக்கவும் பின்னர் எழுதவும் கற்றுக்கொள்ளவும் தொடங்குகிறாள்.
அவள் மைக்கேலுக்கு கடிதங்கள் எழுதினாலும், மைக்கேலால் அவற்றுக்குப் பதில் அளிக்க முடியவில்லை, மனம் ஒத்துழைப்பதில்லை.
20 ஆண்டுகள் கழித்து, ஹன்னா விடுதலை செய்யப்படவிருந்தபோது, மைக்கேல் தயக்கத்திற்குப் பிறகு அவளுக்குத் தங்குவதற்கும் தையல் கடையில் வேலைக்கும் ஏற்பாடு செய்ய பொறுப்பேற்றவர், சிறையில் அவளைப் பார்க்கச் செல்கிறார்.
ஆனால், 1983 ஆம் ஆண்டு அவள் விடுதலை செய்யப்படவிருந்த அன்று, வெளியுலகத்தை பார்க்க தைரியமின்றி அவள் தற்கொலை செய்து கொள்கிறாள், மைக்கேல் மனமுடைந்து போகிறார். ஹன்னா இறப்பதற்கு முன், எலி வீசல், பிரிமோ லெவி, ததேயஸ் போரோவ்ஸ்கி போன்ற முக்கிய ஹோலோகாஸ்ட் உயிர் பிழைத்தவர்களின் புத்தகங்களையும், முகாம்களின் வரலாறுகளையும் படித்துக்கொண்டிருந்தாள் என்பதைச் சிறை வார்டனிடமிருந்து மைக்கேல் அறிந்து கொள்கிறார்.
மைக்கேல் ஒலி நாடாக்கள் மூலம் மட்டுமே அவளுடன் தொடர்பு கொண்டதால், ஹன்னா அடைந்த ஏமாற்றத்தை வார்டன் அதிருப்தியுடன் வெளிப்படுத்துகிறார்.
(திரைப்படத்தில் ஒரு முறை இருவரும் சிறைச்சாலை உணவு மேஜையில் வைத்து சந்திக்கின்றனர்.)
ஹன்னா மைக்கேலிடம் ஒரு பணியை விட்டுச் சென்றிருக்கிறாள்: அவளுடைய சேமிப்புப் பணம் அனைத்தையும் தேவாலயத் தீ விபத்தில் உயிர் பிழைத்த யூதப் பெண்ணிடம் கொடுக்க வேண்டும் என்பதே அது.
மைக்கேல் அமெரிக்காவிற்குச் சென்று, விசாரணையில் சாட்சியாக இருந்த , மரண அணிவகுப்பைப் பற்றி எழுதிய யூதப் பெண் மாத்தரை சந்திக்கிறார். அவரது கடுமையான உணர்ச்சிக் குழப்பத்தைப் பார்த்த அந்தப் பெண், அவரிடம் ஹன்னாவுடனான அவனது இளமைக்கால உறவைப் பற்றி மனம் திறந்து பேசும்போது, அவள் அதை கவனமாகக் கேட்கிறாள். ஹன்னா தன்னைச் சுற்றியுள்ள மக்கள் மீது ஏற்படுத்திய சொல்லப்படாத சேதம் அந்த அறையில் நிலைத்திருக்கிறது.
மைக்கேல் தனது குறுகிய, உணர்வற்ற திருமணம் மற்றும் மகளுடனான விலகிய உறவைப் பற்றி விவரிக்கிறார்.
மாத்தர் மைக்கேலின் நிலையைப் புரிந்துகொண்டாலும், ஹன்னா கொடுத்த பணத்தை ஏற்க மறுத்து, "அதனை ஹோலோகாஸ்ட் தொடர்பான எதற்காவது பயன்படுத்துவது எனக்கு மன்னிப்பும் விடுதலையையும் வழங்குவது போல இருக்கும், அதை நான் விரும்பவோ, கொடுக்கவோ விரும்பவில்லை" என்று கூறுகிறார். அவரையே பொருத்தமாக இருக்கும் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை அளிக்குமாறு கேட்கிறாள். மைக்கேல் ஹன்னாவின் பெயரில் எழுத்தறிவிக்க போராடும் ஒரு யூத தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்க முடிவு செய்கிறார் மைக்கேல். முகாமில் குழந்தையாக இருந்தபோது அவளிடமிருந்து திருடப்பட்ட ஒரு தேயிலை தகரப்பெட்டி போல இருந்ததால், ஹன்னா தனது பணத்தை வைத்திருந்த பழைய தேயிலை தகரப்பெட்டியை மாத்தர் எடுத்துக்கொள்கிறாள்.
1993 ஆம் ஆண்டு ஜெர்மனிக்குத் திரும்பிய மைக்கேல், நன்கொடை அளித்ததற்கான நன்றிக் கடிதத்துடன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஹன்னாவின் கல்லறையைப் பார்க்க தன் மகளுடன் செல்கிறார், அவளுக்கு தன் 15 வயது விடலைக் காதல் கதையை விவரிக்கையில் படம் நிறைகிறது.