22 வருடங்கள் பூட்டியிருந்த முன் கேட் |
மதுரை தங்கம் திரையரங்கம் இடிப்பு பற்றிய இந்த ஹிந்து செய்தி படித்தவுடன் மிகவும் கலங்கினேன். 1950கள் முதல் 1990வரையான மதுரையின் மாந்தர்கள் அனைவருக்குமே மறக்க முடியாத திரையரங்கம், ஆசியாவிலேயே பெரிய திரையரங்கம் என்பார்கள் மதுரைவாசிகள்.
கடைசியாக 2011 ல் மதுரை போன போது கூட தங்கம் திரையரங்கம் பற்றி கேட்டு ஒரு எட்டு போய் பூட்டியிருக்கும் கேட்டை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு வந்தேன். பெரிய பாழடைந்த பேய் வீடு போல தோற்றமளித்தது. எத்தனை பேரை குதூகலப்படுத்திய தியேட்டர்,எத்தனை பேர் திரள் திரளாக வந்து போன இடம்?!!!எத்தனை பேரின் வாழ்வாதாரமாக இருந்திருக்கும்?எத்தனை 50 நாள்.100 நாள் கொண்டாட்டங்களைக் கண்டிருக்கும்? 2 பங்குதாரர்களின் வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை பிரச்சனை, வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, இப்போது இங்கே சதுரஅடி 10000 ரூபாய்க்கும் மேலே,52000 சதுர அடி எவ்வளவு போகும்?!!! என மாமா நிறைய சொன்னார்.
கேட்டதுமெ ஒரு விதமான மென்சோகம் மனதை அழுத்தியது. தங்கம் தியேட்டரின் பிரதான பங்குதாரர் குடும்பம் மதுரை கீழ அனுமந்தராயன் கோவில் தெருவில் தான் வசித்தனர். அவரின் மகன் எங்கள் காம்பவுண்டில் வசித்த அவரின் நண்பர்களைப் பார்க்க வரும்போது எப்படியோ பேசி அங்கே அந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையிட்டிருக்கும் படத்துக்கு பாஸ் வாங்கிவிடுவேன், பாஸ் என்பது வேறு ஒன்றுமில்லை,சிகரட் அட்டை போல ஒன்றில் இவரை அனுமதி என்று கையெழுத்து போட்டு தருவது தான்.காசு கொடுக்காமல் பாஸ் வைத்து படம் பார்த்து விட்டு வருவதில் எனக்கு அப்படி ஒரு பெருமை இருந்தது.
மதுரை நகரின் மையத்தில் ,கீழ் அனுமந்தராயன் கோவில் தெருவில் இருக்கும் பொன் லாட்ஜில் 4 மாடிகள் முழுக்க வினியோகஸ்தர்கள் ஆபீஸ் இருந்தது, தயாரிப்பாளர் ஜிவியே பயந்த ஒரு பொட்டுக்கார தயாரிப்பாளர், இங்கே தான் ஆஃபீஸ் வைத்திருந்தார். எம்ஜியார் ,சிவாஜி, ஜெய்சங்கர்,ரஜினி கமல் படங்களின் வினியோக உரிமையை வாங்கி அருகாமையில் உள்ள தியேட்டர்களுக்கு மறு வெளியீட்டுக்கு கொடுக்கும் ஒரு அறையில் இயங்கிய அலுவலகங்கள் அவை, ஒரே ஒரு சிப்பந்தி தான் இருப்பார், அங்கேயே தங்கிக் கொள்வார், அவரே பெருக்குவார், அவரே படப்பெட்டிகளை போஸ்டர்களை டெலிவரி செய்வார். இப்போது இருக்குமா? தெரியாது. அப்படி நான் பாஸ் வாங்கிப் பார்த்த படங்கள் எண்ணிலடங்காது. நான் தெருக்கார பையன் என்பதால் எப்படியோ பாஸ் கிடைத்துவிடும், மதுரையில் படம் பார்ப்பதே அலாதிதான், ஒரு படத்துக்கு டிக்கட் கிடைக்காவிட்டாலும் சைக்கிளை நாலு மிதி மிதித்தால் அருகே உள்ள தியேட்டரில் டிக்கட் கிடைத்துவிடும், எல்லா புதிய பழைய படங்களையும் பார்த்துவிட முடியும்.
அதில் தங்கம் திரையரங்கம் என் விருப்பத்துக்கு உரியது,அத்தனை பெரிய பிரம்மாண்ட திரையரங்கம் அது, திரையரங்கத்துக்குள் அமர்ந்து இருப்பது நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்குள் அமர்ந்து இருப்பது போல இருக்கும், அத்தனை காற்றோற்றமாகவும் கதவையும் திரையை திறந்த உடன் மிக வெளிச்சமாகவும் இருக்கும்.புழுங்காது, பால்கனி டிக்கெட் அப்போது 5-00 ரூபாய், கீழே முதல் வகுப்பு 3-75 ரூபாய், அத்தனை சொகுசாக இருக்கும் அதன் இருக்கைகள், ஆள் எழுந்தவுடன் மடிந்து கொள்ளும் சிகப்பு வண்ண குஷன் இருக்கைகள். மொசைக் தரையுடன் அதன் முகப்பு பால்கனி தூண்கள் ,சுவர்கள் செட்டிநாடு அரண்மனைப் போல பளபளவென இருக்கும், சுண்ணாம்புக்கலவையுடன் முட்டையின் வெள்ளைக்கருவும், கிளிஞ்சலும், கடுக்காயும் கலந்த கலவையில் மெருகேற்றியது என்பார்கள்.மதுரை நகரை எங்கும் நடந்தே கடக்கலாம் என்றாலும் சைக்கிள் டோக்கன் ஏற்கனவே வாங்கி விட்டிருந்தால் சினிமாவுக்கு டிக்கெட் கிடைப்பது உறுதி என்பதால் நான் வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன்.
பரபரப்பான நகருக்குள் பரந்து விரிந்த ஒரு கட்டிடம், பார்க்கிங்கிற்கு இடப்பற்றாக்குறையே இருக்காது, சுமார் 1000 சைக்கிள்கள் நிறுத்த தோதான ஷெட் இருக்கும், அந்த 30 அடி அகல மேல பெருமாள் மேஸ்திரி தெருவில் இப்படி ஒரு பெரிய திரையரங்கம் இருக்கும் என வெளியூர்காரர்கள் யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள்,பகல் வேளைகளில் அங்கே காக்கா தோப்பு தெருவில் இருக்கும் ஸ்ரீராம் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு படம் பார்க்கசெல்வது எனக்கு மிகவும் விருப்பமானது,இரவு வேளைகளில் அதே தெருவில் ஒரு பிராமணர் வீட்டில் சுடச்சுட இட்லியும்,மிளகாய்பொடி,ஊசி மருந்து பாட்டிலில் சுத்தமான நல்லெண்ணெய் நிரப்பி அடுக்கியிருப்பர்,அதனுடன் 3 வித சட்னியும் உண்டு, மிளகாய் பொடியில் தோய்த்த தோசையும் கிடைக்கும்,காபியும் பிரமாதமாக இருக்கும்,அதை ஒரு கட்டு கட்டி விட்டு திரையரங்கிற்குள் நுழைந்து விடுவேன்.
திரையரங்கிற்கு பின் வாசல் கேட் ஒன்று காக்கா தோப்பு தெருவில் இருக்கும். கடைசிக்காட்சி நடுநிசி 1-30 மணிக்கு முடிகையில் திருவிழா கூட்டத்தை அங்கே பார்க்கலாம். அதன் பின்னர் கூட சுடச்சுட இட்லியோ தேங்காய் பாலோ சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகலாம்,அதுதான் தூங்கா நகரம். திரையரங்கில் ஒரே பிரச்சனை மூட்டை பூச்சி தான்,படம் முடிந்து போகையில் ஒன்று இரண்டாவது கடித்து சிவந்து விட்டிருக்கும், இருந்தும் அடுத்த படம் அங்கே பார்க்கும் பரவசத்தில் அதெல்லாம் மறந்துவிடும்.

தங்கம் திரையரங்கில் முண்ணனி நடிகர்கள் படம் ஃபஸ்ட் ரிலீஸ்
திரையிடமாட்டார்கள், பராசக்தியும், நாடோடி மன்னனும் விதிவிலக்கு, பராசக்தி
கட்டிட வேலை முடிவில் இருக்கும் போதே ரிலீஸ் செய்தனர் எனப் படித்தேன். டிக்கட் கூட தங்க நிற ஜிகினா பேப்பரில் கொடுத்ததாக மாமா சொல்வார். அதன் பின்னர் 1958ல் நாடோடி மன்னன் இதில் ஒரு
படம் மதுரை சென்ட்ரல் அல்லது நியூசினிமாவில்
100நாள் ஓடுவதும் இதில் 50 நாள் ஓடுவதும் சமம், அதில் 800 பேர் அமர்ந்தால்
இதில் 2563 பேர் அமரலாம், ப்ரொஜெக்டர், திரையின் நீளம், ஒலியமைப்பு எல்லாம் அப்போதைக்கு மிகச்சிறப்பான தொலைநோக்காக இருக்கும். படத்தில் வெண்திரைக்கு முன்னே சிகப்பு பட்டுத்துணியில் திரை போடப்பட்டிருக்கும், அதில் குஞ்சங்களுக்கு பதிலாக பல்புகள் ஒளிந்தபடி இருக்கும், திரை மெல்ல இசையுடன் விலக்கும் போது கைதட்டல் பலமாக கேட்கும். ரசமான காட்சிகள் அவை. படத்தின் இடைவேளையில் சுவையான கோன் ஐஸ், ஆரஞ்சு, திராட்சை ரசம், டிவிஎஸ் முறுக்கு,முட்டை போண்டா எல்லாமே மிகப் புகழ்பெற்றவை. அப்போது நடிகர்களுக்குள் நாள் கணக்கு போட்டி
உச்சத்தில் இருந்தமையால் ஃபர்ஸ்ட் ரிலீஸ் படங்கள் , இங்கே திரையிடுவது
அபூர்வம், செகண்ட் ரிலீஸ் செமையாக கல்லா கட்டும்.
நான் அங்கே டவுன் ஹால்ரோடு ரோசரி சர்ச் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கையில் மாணவர்கள் ஆசிரியர்கள் குழுவாக வந்து காஷ்மீரி என்னும் விவேகமான கழுதையின் படம் ஒன்று 1984ஆம் ஆண்டு தங்கத்தில் முதன் முதலாகப் பார்த்தேன், அதன் பின்னர் நிறைய புராணப்படங்கள் தத்தாத்ரேயா, லவகுசா,சம்பூர்ண ராமாயணம், சரஸ்வதி சபதம்,அருள்தரும் ஐயப்பன், என ஆரம்பித்து ஒவ்வொரு ஆண்டு விடுமுறைக்கும் மதுரைக்கு போகையில் ரிட்டர்ன் ஆஃப் த ட்ராகன், ஜேம்ஸ் பாண்ட் படங்கள், பருவ ராகம், உதயம்,இணைந்த கைகள் என நிறையப் பார்த்திருக்கிறேன், கடைசியாக நான் அங்கே பார்த்த படம் அமரன்.
எந்த ஒரு 70 எம் எம், சினிமாஸ்கோப் படங்களும் தங்கத்தில் பார்க்க அட்டகாசமாக இருக்கும்,ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சொல்லவே வேண்டாம்,எங்கே மூலையில் அமரந்து பார்த்தாலும் எல் ஈ டி டிவியில் படம் பார்ப்பது போல இருக்கும். நானும் வாழ்வில் எத்தனையோ திரையரங்குகளில் எத்தனையோ படங்கள் பார்த்துவிட்டேன், எதுவுமே மனதுக்கு இத்தனை நெருக்கமாக நீங்கா அனுபவமாக இருந்ததில்லை, தங்கம் திரையரங்கம் இந்த தலைமுறைக்கு புழக்கத்தில் வராமலேயே வழக்கொழிந்து போனது அவர்க்கு பேரிழப்பே!!!. எனக்கு அஞ்சலி ,வாழ்த்து, கட்டுரைகளில் நம்பிக்கை இருந்ததில்லை, இருந்தாலும் இக்கட்டுரையை தங்கம் திரையரங்கத்தின் நினைவாக சமர்ப்பிக்கிறேன்.
மதுரை பற்றிய என் இன்னொரு பதிவு
மதுரை பற்றி ந.முருகேச பாண்டியன் எழுதிய முக்கிய கட்டுரை-1
மதுரை பற்றி ந.முருகேச பாண்டியன் எழுதிய முக்கிய கட்டுரை-2
மதுரை பற்றி ந.முருகேச பாண்டியன் எழுதிய முக்கிய கட்டுரை-3

படங்கள் ,சுட்டிகள் நன்றி:-இணையம்,கீற்று,தி ஹிந்து