உதிரிப்பூக்கள் [Udhiri pookal] [இந்தியா] [1979] தமிழில் ஓர் உலகசினிமா!!!

கேந்திரன் தமிழ் சினிமாவின் நீங்காப் புகழ் வாய்ந்த இயக்குனர். இவரின் உதிரிப் பூக்கள் படத்தை  தமிழில் வெளிவந்த உலகசினிமா என்று நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், மனதை விட்டு அகலாத கதா பாத்திரங்களுக்காகவும் அழகுணர்ச்சி மிகுந்த ரசனை மிகு காட்சியமைப்புகளுக்காகவும் போற்றப்படவேண்டிய, காலத்துக்கும்  கொண்டாடப்பட வேண்டிய படம் இது.
இயக்குனர் மகேந்திரன்

யக்குனர் மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற குறு நாவலை பாதி வரை படித்து மூடிவிட்டு அதனில் இருந்து உத்வேகமாகக் கொண்டு உதிரிப் பூக்கள்  திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கினார். ஆயினும் நேர்மையாக புதுமைப்பித்தனுக்கு டைட்டிலில் க்ரெடிட் கொடுக்கிறார். இந்தப்படம் வசூலில் இமாலய சாதனை புரிந்ததா? எனத் தெரியாது, ஆயினும் இது தமிழ் திரையுலக வரலாற்றின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்று!!!.

சைஞானியின் ”ஏய் இந்த பூங்காத்து தாலாட்ட” என்னும் மயக்கும் குரலில் மந்திர இசையில் படத்தின் பெயர் போடப்படுகிறது, படத்தின் உலகத்தரமான உள்ளடக்கத்துக்கு முன்னோட்டமாக இந்த பாடல் அமைந்திருக்கிறது, அதன் பின்னர் படத்தில் லட்சுமி பாடும்  ”அழகிய பெண்ணே,உறவுகள் நீயே” என்னும் பாடல் மறக்க முடியாத ஒன்று. இசைஞானிக்கு பேரலல் சினிமாக்களுக்கு இசையமைப்பது என்றாலே இன்பம் தான் போலிருக்கிறது, அவர் பாடுகையிலேயே ஆத்மார்த்தமான ஈடுபாட்டை நாம் உணரமுடிகிறது. பிண்ணனி இசை பிந்தைய 70களின் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு. கிராமிய மணம்  ததும்பும்  மனதை ஊடுருவும் அதிர்வலைகளை தோற்றுவிக்கும் இசையமைப்பு.

ந்தப்படத்தினை ஒருவர் ஆத்மார்த்தமாக அனுபவிக்க வேண்டும் என்பதால் படத்தின் கதையை நான் இங்கு சொல்லவில்லை. பிரதான பாத்திரம் சுந்தரவடிவேலு(விஜயன்): திரைக்கதையில் ஒரு உத்தி இருக்கிறது. யாருடைய பார்வையில் இருந்து கதை சொல்லப் படுகிறதோ?  அந்தக் கதாபாத்திரத்தின் மேல் நமக்கு நம்மை அறியாமலேயே அனுதாபம் வந்து விடும். மிகக் கொடியவன் கூட அவனது மனதின் வழியே பார்த்தால் அவன் நல்லவன் போல் தெரிவான். நாம் எல்லோருமே நமக்கு நமே நல்லவர்களாக இருக்கும் மனித மனத்தின் மாயம் இது. [நன்றி-ஷன்முகப்ப்ரியன்] இந்த உத்திக்கு முக்கிய உதாரணம் இப்படம் . சிரித்தே கழுத்தறுக்கும் வில்லன்களை  நாம் பார்த்திருப்போம். சிரிக்காமலேயே கழுத்தை அறுக்கும் வில்லனை இதில் பார்ப்போம்.அவ்வளவு ஏன்?இவர் வில்லனா?அல்லது கதாநாயகனா?என்றே நம்மை குழம்ப வைத்து விடும். விஜயன் என்னும் அற்புத நடிகரை நாம் இழந்து விட்டிருப்பது நன்றாகப் புரிகிறது.

வரை நிறம் மாறாத பூக்கள் துவங்கி, கடைசியாக 7 ஜி ரெயின் போ காலனி வரை ரசித்திருக்கிறேன். இரக்கமேயில்லாத வில்லன் , இவரை துரத்தி வரும் ஊர் மக்களால் தற்கொலை செய்துகொள்ளும்படி பலவந்தப்படுத்தப்படுகிறார். ஆற்றில் மார்பளவு நீரில் நிற்கிறார். வெளியே வந்தால் ஊரார் அடித்தே கொன்றுவிடுவர். கொலையுண்டு சாவதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என்பதை அவர்தான் அப்போது தீர்மானிக்க வேண்டும். அத்தனை பேரும் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் தற்கொலைக்குத் தயாராகிறான். திருந்துகிற சோலியெல்லாம் இல்லை. நீரில் மூழ்குமுன் கடைசியாக அவர்களைப் பார்த்து புன்னகைத்தவனாக அவன் சொல்கிறார். ''நான் எத்தனையோ தவறு செய்திருக்கேன். ஆனா, இப்போ உங்க எல்லாரையும் என்னை மாதிரி மாத்திட்டேன். அது தான் நான் செய்திருக்கும் பெரிய தவறு...'' என்று  சொல்லிவிட்டு,  தன் குழந்தைகளை அணைத்தவர், ''அப்பா குளிக்கப் போறேன்... நீங்க நல்லா படிங்க'' என்று கூறி விடைபெறுகிறார் பாருங்கள்!!!, அங்கே அந்தக் கொடியவனுக்காகவும் நாம் கண்ணீர் சிந்துகிறோம். இதே போலவே நான் இரக்கப்பட்டது ஹிட்லரின் கடைசி பனிரெண்டு நாட்களை கண்முன் நிறுத்திய டவுன்ஃபால் படத்தின் ப்ரூனோ கான்ஸ் ஏற்று நடித்த ஹிட்லர் பாத்திரத்துக்கு தான்.

சுந்தரவடிவேலுவின் மனைவி லட்சுமி (அஸ்வினி): இந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்காகவே இவர் பிறந்திருக்கிறாரா?!!! அல்லது இந்தப் பாத்திரம் இயக்குனர் மகேந்திரனால் இவருக்காகவே படைக்கப்பட்டதா? என்று பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்கு அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். ஒரு காட்சியில் ,மருத்துவ அதிகாரி சரத்பாபு ஒன்பது வருடத்துக்கு முன்னர்,  அவரை பெண் கேட்டு வந்த சம்பவத்தை நினைவூட்டுவார் பாருங்கள்.ஒரு விநாடி பூரிப்பை இதழோரத்தில் சிறு புன்னகையாய் மலரவிட்டு, அடுத்த கணமே,நமக்கு திருமணமாகிவிட்டதே!!!! அப்படி நினைப்பதே தவறு என்று முகம் மாறுவார் பாருங்கள் .நாம் மிக நல்ல நடிகையை இழந்து விட்டிருக்கிறோம். கொடுமைக்காரக் கணவன் சுந்தரவடிவேலு பூ வாங்கிக் கொடுத்து, சினிமாவுக்குப் போகத் தயாராக இருக்கச் சொல்லும்போது, மனைவி லட்சுமி மழை வருகிறதா?!!! என்று வானத்தை அண்ணாந்து பார்ப்பதும், அப்போது வான்னோக்கிய கேமராவில் மழை மேகம் திரண்டிருப்பதை காட்டுகிறார் மகேந்திரன் அது .உலகத்தரமான குறும்பு நகைச்சுவை.

லட்சுமியின் தந்தை (சாரு ஹாசன்): இவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட தகப்பன் பாத்திரங்கள் சோடை போனதேயில்லை, உதாரணம் வேதம் புதிது, தளபதி, அப்புறம் இதோ  இப்படம், நறுக்கு தெரித்தார் போலே தெளிவான வசன உச்சரிப்பு, 'நான் என் பெண்ணுக்கு தகப்பனாராகவே இருக்க விரும்பறேன்... புரோக்கரா இருக்க விரும்பலே...' என்று அவர்  யதார்த்தமாக இரண்டாம் பெண்ணை  சுந்தரவடிவேலுவுக்கு மணம்முடித்துத தர இயலாது என சொல்லும் இந்த இடம் மிக அருமை, இதைவிடக் நேர்த்தியாக ஒரு வசனம் உச்சரிக்கப்படமுடியுமா? என்று வியக்க வைக்கிறது,இது போல பல இடங்களில் மின்னுகிறார் சாரு ஹாசன்.

குழந்தை நட்சத்திரங்கள் ராஜா, பவானி (ராஜா, பேபி அஞ்சு): ராஜா, தந்தை சுந்தரவடிவேலுவைப்போலவே  சிரிக்காமல் அழுத்தமாகக் காட்சி அளிக்கிறான்.தங்கை பவானி பசிக்கும் போதும் சிரிக்கிறாள், தாய் லட்சுமி இறக்கும்போதும் சிரிக்கிறாள் அக்குழந்தை, அப்படி அது சிரிக்கச் சிரிக்க நாம் கலங்கியே விடுகிறோம். அப்பேர்ப்பட்ட குழந்தை நட்சத்திரம் அஞ்சுவை இப்போது பருத்த பெண்மணியாக சின்னத்திரையில் பார்க்கையில் நம்பவே முடியவில்லை, ராஜாவாக வந்த சிறுவன் பின்னாளில் அந்த ஏழு நாட்களில் பாக்யராஜுக்கு எடுபிடியாக வருவார், சம்சாரம் அது மின்சாரம் படத்திலும் தொடர்ந்து எஸ் எஸ் எல் சி எழுதும் பையனாக வருவார். இப்போது என்ன ஆனார்? என்றே தெரியவில்லை. ஆனால் வாழ்நாளுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இப்படம் இருவருக்கும்.

எடிட்டர் பி.லெனின், மிக அருமையான எடிட்டிங்,மெதுவாக செல்லும் படத்தில் நிறைய கட் ஷாட்டுகள் கொண்டிருக்கின்றன, விஜயனையும்,லட்சுமியையும் ஏனைய நட்சத்திரங்களையும் நம் மனதில் நீங்கா இடம் பெறச்செய்கிறது இவரின் தொய்வில்லாத எடிட்டிங்.இப்படம் எனக்கு டெர்ரன்ஸ் மாலிக்கின் டேஸ் ஆஃப் ஹெவன் என்னும் ஆகச்சிறந்த ஹாலிவுட் ஆர்ட் ஹவுஸ் திரைப்படத்தின் தரத்தை நேர்த்தியை நினைவுபடுத்தியது.நம்மூரிலும் டெர்ரன்ஸ் மாலிக்குகள் இருந்திருக்கின்றனர் என நினைப்பதே பெருமைதான்.

ஒளிப்பதிவாளர் அசோக்குமார், இவர் மகேந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருமாவார். 1979 களின் சினிமாவுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு கலைத்தன்மை பொதிந்த நீண்ட ஷாட்டுகள், டீடெய்ல்டான ஒளிப்பதிவு, 35 எம் எம் செலுலாய்டு கவிதையாய் அமைந்தது, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான  ஒளிப்பதிவு. இந்தப்படத்தில் இவருக்கு தேசிய விருது கிடைக்காமல் போனாலும் பின்னாளில் 1981ல் வெளியான மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளேதே படத்துக்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இவர் ஜீன்ஸ் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தது நினைவிருக்கலாம்.

ட்சுமியின் தங்கையாக வந்த மதுமாலினி மிகவும் அழகு, மருத்துவ அலுவலராக வந்த சரத் பாபு ஏனைய படங்களில் நாம் பார்க்கும் குணசித்திர கதாபாத்திரங்களைப் போல படம் முழுவதும் வராதது யதார்த்தமாகப்பட்டது, வாழ்வில் யாரோடும் நாம் ஒருகட்டத்துக்கு மேல் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. க்ளிஷேக்களை ஆனவரை பல இடங்களில் தவிர்த்திருக்கிறார் இயக்குனர்,அந்த சுந்தரவடிவேலு இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணை மணம் முடித்துக்கொண்டு வருகையில் பாடப்படும் பாடல்,மற்றும் லட்சுமியின் தங்கை ஆற்றங்கரையில் பாடும் பீப்பி பாடல் மட்டுமே வழமையான தமிழ் சினிமாவின் க்ளிஷேக்களை நினைவுபடுத்தியது, இந்த இரண்டு பாடல்களை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும், இன்னும் படத்தில் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. 
 நிறைய நட்சத்திரப் பட்டாளங்கள் சிவச்சந்திரன். குமரிமுத்து, சரத்பாபுவின் மனைவியாக வந்த பெண்மணியின் பெயர் தெரியவில்லை, அவரை இப்போது தொலைகாட்சி சீரியலில் மாமியாராக பார்த்தது. ஆசிரியராக வந்து  பல்பு வாங்குபவரை என்னால் நினைவு கூற முடியவில்லை,  மனோரமாவின் மகன் பூபதி இதில், சரத் பாபுவின் உதவியாளராக வந்துபோனார். படத்தில் பரீட்சார்த்தமாக நிறைய இரவுக் காட்சிகள்,மனதுக்குள்ளேயே  அசை போட வைக்கும்  கூர்மையான வசனங்கள் உண்டு. சுந்தர வடிவேலுவின் மன விகாரத்தின் உச்சமாக அவனிடம் குழந்தைகளை கேட்க வரும் மைத்துணியை துகில் உரிந்து நிர்வாணமாக்கி அழவைத்து விட்டு,நான் உன்னை துகிலுரிந்தது கற்பழிக்க அல்ல, உன்னை முழு நிர்வாணமாக முதலில் பார்த்தது நான் தான் என்னும் நினைப்பு உனக்கு ஆயுளுக்கும் இருக்க வேண்டும் அதற்காகத் தான் என்கிறார். மிகக்கொடிய பாத்திர சித்தரிப்பு சுந்தரவடிவேலு. நிறைய காட்சிகளில் நகைச்சுவை இழையோடி அப்பாத்திரத்தின் மீதே நமக்கு இரக்கமும் தோன்றி விடுகிறது. தனக்கு நீச்சல் தெரியாததால் தான் நிர்வகிக்கும் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியனும் நீச்சல் அடிக்கக்கூடாது என நினைப்பது ஒரு சோற்றுப்பதம். ஒரு ஆற்றங்கரைக்காட்சியில் வைத்து விஜயன் சரத்பாபுவை புரட்டிப்போட்டு அடிப்பார்.ஆனால் இயக்குனர் மகேந்திரன் அதை காட்சிப்படுத்தவில்லை,ஓடும் ஆற்றையும்,மணலில் ஒரு சிறுவன் தலையை தூக்கி பார்ப்பதையும்,நெற்கதிரையும் காட்டுகிறார்.மறு காட்சியில் சரத்பாபு வாயில் கசியும் ரத்தத்தை கழுவுகிறார். தன் கீழே விழுந்த மூக்கு கண்ணாடியை எடுத்து அணிகிறார். பின்னர்  லட்சுமி விதவையாகக்கூடாது என்று தான் நான் திருப்பி அடிக்கவில்லை என்று சுந்தரவடிவேலுவிடம் சொல்லிவிட்டு அகல்கிறார். இது போல இன்றைய இயக்குனர்கள் உபயோகிக்கும் மேலான உத்திகளை அன்றே இயக்குனர் உபயோகித்துவிட்டார்.

ட்சுமியின் மரணத்தில், தமிழ்த் திரையுலகில் இதுவரை நாம் கண்டிராத யதார்த்தத்தைக் காண் கிறோம்.கணவன் தன் தங்கை மேல் ஆசைப்பட்டு என்ன என்ன விதத்தில் எல்லாம் கையாண்டு அவளையும் இரண்டாம் தாரமாக அடைய வழி பார்க்க, இதற்கு உடன்படாத லட்சுமியை பலவாறாக பழி தீர்க்கிறார் சுந்தர வடிவேலு. அவளை வாழாவெட்டியாக்குகிறார்,தனக்கு தேவையில்லை என்றாலும், வீம்புக்கென்றே இரு குழந்தைகளை தன்னுடனே அடைத்து வைத்துக்கொள்கிறார். ஏற்கனவே சீக்காளியான லட்சுமிக்கு புத்திர சோகமும் ஏற்படுகிறது. லட்சுமி எப்போது இறந்து போனாள்?!!! என்பதுகூட அருகில் இருப்பவர்களுக்குத் தெரியா  வண்ணம் இயற்கையாக, வாழ்க்கையோடு ஒட்டியதாக அமைந்திருக்கும் அக் காட்சியில் ஒரு சோகக் ஓவியத்தையே தீட்டியிருக்கிறார் இயக்குனர். தாயையும், தந்தையையும் இழந்துவிட்ட பின்னர் தனியாகக் ஆற்றங்கரையோரம் நடந்து செல்லும் இரு குழந்தைகளைக் காட்டிப் படத்தை முடித்து விட்டது மனதைப் புரட்டிப்போட்டது. இந்தப்படத்துக்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது படம் வெளியான 1979ஆம் வருடம் தான் நானும் பூவுலகில் ரிலீஸ் ஆனேன். இந்தப்படத்தை பார்த்துவிட்டு எழுத வேண்டும் எழுத வேண்டும் என நினைத்து முடியாமல் போனது,ஒருவழியாக எழுதியும் விட்டேன்.யாராவது தமிழில் நல்ல சினிமா சொல்லு என சொன்னால் இதை தைரியமாக சொல்லுங்கள்.
உதிரிப் பூக்கள்=தமிழின் முதல் உலக சினிமா

குறிப்பு:- தமிழகத்தில் இப்படம் பார்க்க விழைவோர் அருகாமையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மோசர் பேயர் வெளியீடாக 28 ரூபாய்க்கு கிடைக்கிறது அதை வாங்கி புத்தக அலமாரியில் வைத்து கலெக்டர் டிவிடியாக பாதுகாக்கலாம்.

ப்படம் தரவிறக்க டாரண்ட் சுட்டியே கிடைக்கவில்லை. டிவிடியை வாங்க வழியில்லாதோர். இப்படம் யாரோ ஒரு நல்லெண்ணம் கொண்ட அன்பர் மூலம் தரவேற்றப்பட்டு 10 நிமிடங்கள் X 15 பாகங்களாக யூட்யூபில் காணக்கிடைக்கிறது. முழு அமர்வில் உட்கார்ந்து பார்க்க ஏற்றது. மெதுவாக சென்றாலும் தொய்வே இருக்காது.அதை அவசியம் பாருங்கள்.
இது படத்தின் முதல் பாகம்

நண்டு-திரைப்படம் பற்றி சிறு பார்வை:-
யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கேற்ப இயக்குனர் மகேந்திரனுக்கு அடி சறுக்கிய படம் நண்டு,படத்தில் எத்தனையோ பிழைகள் உண்டு என்றாலும்,ஒரு நல்ல இயக்குனர் கவனம் சிதறுண்ட ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.எப்படியோ எடிட்டிங்கில் கூட பார்க்காமல் விட்டுவிட்டார்,ஆனால் படத்தை ரிலீசான பிறகு எப்போது பார்த்தாலும் வருந்தியிருப்பார். இதில் இந்த 14 நிமிட யூட்யூப் காணொளியை பாருங்கள்,பொறுமை இழந்து விடுவீர்கள்,யாரும் கன்டின்யூட்டி பார்க்கவில்லையோ ,யாரும் வசனங்களை சரிபார்க்கவில்லையோ என எண்ண வைக்கும் காட்சி. 

லக்னோவைச் சேர்ந்த நாயகன்,[ஆனால் நாயகன் துவங்கி,வீட்டு வேலைக்காரன் வரை எல்லோருமே தமிழ் பேசுகிற குடும்பம்] தன் கொடிய அப்பாவின் மேல் கோபப்பட்டு சென்னை வந்தவன் வேலைக்கு சேர்ந்து,உடன் பணிபுரியும் பெண்ணை மணந்து கொள்கிறான், சில மாதம் கழித்து தங்கை திருமணத்துக்கு லக்னோ போகிறான்,அங்கே லக்னோவில் அவனுக்கு குதிரை வண்டி ஓட்டுபவரும் கூட தமிழ் பேசுகிறார். இறங்கி வீட்டுக்குள் நுழைகிறான்,அங்கே அம்மா தமிழில் வரவேற்கிறாள், பேரனையும் வாங்கி அழகுத் தமிழில் கொஞ்சுகிறாள். பின்னர் மருமகளை அங்கே உள்ளோரிடம் ஹிந்தியில் அறிமுகம் செய்கிறாள். 

 அடுத்த காட்சி வருகிறது உள்ளே ஹாலில் அமர்ந்திருக்கும் மருமகளிடம் வந்த நாயகனின் அம்மா,என்ன சாப்பிடுகிறாய்? என ஹிந்தியில் பேசுகிறார், திடீரென அந்தப் புள்ளியில் அவர் தமிழை மறந்து விடுகிறார்,நாயகியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழிலேயே விழிக்கிறார்,ஹிந்தி தெரியாத்தால் அசடு வழிகிறார்,நாயகன் குறுக்கிட்டு மொழி பெயர்த்து சொல்லும் அந்த இடத்தை நன்கு ,வேண்டாம் வேண்டாம் சாதாரணமாக கவனியுங்கள்,இப்படி பல்பு வாங்கலாமா மகேந்திரன் சார்?!!! இதே போலவே மெட்டி படத்திலும் நிறைய பல்புகள் உண்டு,அது பின்னொரு சமயம் பகிர்கிறேன்,முள்ளும் மலரும் & உதிரிப்பூக்களுக்கு திருஷ்டி இரு படங்களும்,ஆனால் ராஜா சாரின் இசை ஒன்றினால் மட்டுமே இரு படங்களுமே நீங்கா புகழை இன்னும் கொண்டிருக்கின்றன. 

19 comments:

எஸ்.கே சொன்னது…

இந்த படம் பல வருடங்களுக்கு முன் பார்த்தது. அந்த பாடல்கள் எப்போதாவது தொலைக்காட்சியில் வரும்போது கேட்பேன். உலக சினிமா ரசிகன் அவர்களின் பதிவில் இப்படத்தை பற்றி விமர்சித்தபோது ஞாபகம் வந்தது.

விஜயன் மிகச் சிறந்த நடிகர். ஆனால் அவரை முழுமையாக திரையுலகம் பயன்படுத்தவில்லையோ என தோன்றுகிறது. அஸ்வினி அவர்களின் நடிப்பை ஒரு கை ஓசை படத்திலும் பார்த்துள்ளேன்.

மேவி சொன்னது…

இந்த படம் moser baer super dvd ல வேறு இரண்டு படங்களுடன் சேர்ந்தது போல் கிடைக்கிறது .... நானின்னும் பார்க்கவில்லை . இந்தவாரயிறுதியில் நான் பார்க்கிறேன்

King Viswa சொன்னது…

என்னுடைய பால்ய காலம் தமிழகத்தில் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்ததால் இந்த படங்களை எல்லாம் நான் பார்க்கவில்லை (ஏறக்குறைய எம்ஜியார் படங்களை தவிர பழைய தமிழ் படங்கள் எதையுமே பார்த்து இருக்க மாட்டேன்). சமீபத்தில் தான் இந்த படத்தை பற்றிய மகேந்திரனின் புத்தகம் ஒன்று கைவரப்பெற்றேன். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அந்த புத்தகத்தை படித்து விட்டு அயர்ந்து விட்டேன்.

மிகவும் தெளிவான சிந்தனை உடைய ஒரு படைப்பாளி அவர் என்பதை அந்த புத்தகத்தை படித்தவுடன் புரிந்து கொண்டேன். அதன் பிறகு படத்தையும் பார்த்து விட்டேன். பல காட்சிகள் மனதை நெகிழ வைக்கும். நல்ல படம்.

கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

King Viswa சொன்னது…

நண்பரே,

//இந்த படம் moser baer super dvd ல வேறு இரண்டு படங்களுடன் சேர்ந்தது போல் கிடைக்கிறது .... நானின்னும் பார்க்கவில்லை . இந்தவாரயிறுதியில் நான் பார்க்கிறேன்// நீங்கள் சொல்வது போல 3-in-1 கலேக்ஷனிலும் கிடைக்கிறது. அதுவில்லாமல் தனியாகவும் இந்த படம் டிவிடியாக வந்துள்ளது. பார்த்து மகிழவும்.

கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

King Viswa சொன்னது…

//விஜயன் மிகச் சிறந்த நடிகர். ஆனால் அவரை முழுமையாக திரையுலகம் பயன்படுத்தவில்லையோ என தோன்றுகிறது.//

இவரை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தித்துள்ளேன். கம்பீரமான குரல் கொண்ட ஒரு மனிதர்.

கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

sakthistudycentre-கருன் சொன்னது…

Nice movie... thanks..

பெயரில்லா சொன்னது…

கலக்கல் படம் தல. லட்சுமியின் கதாபாத்திரம் என்னை ரொம்ப பாதித்ததுண்டு.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வரும அந்தபையன் பெயர் காஜா ஷெரீப் என நினைக்கிறேன்.

மகேந்திரன், பாலுமகேந்திரா வெளிநாட்டில் பிறந்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள். சிறந்த படைப்பாளிகளுக்கு இங்கு மரியாதையே இல்லை.

நாஞ்சில் பிரதாப்

கோபிநாத் சொன்னது…

சூப்பர்ண்ணே ;)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@எஸ்கே
நண்பா,அதிகாலையில் வந்த உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
ஏன் இவ்வளவு நேரம் விழிக்கிறீர்கள்.எப்போதாவது என்றால் தேவலை.
உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்,விஜயன் ஒர்ரு ஆகச்சிறந்த நடிகர்.
அஸ்வினியின் ஒரு கை ஓசை பல வருடம் முன்னர் பார்த்தது,நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி

@மேவி
ஆமாம் நண்பரே,மோசர் பேயர் இது போல சில நல்ல வேலைகளை செய்கிறது.சீக்கிரம் பார்த்துவிடுங்கள்.

@கிங் விஸ்வா
நண்பரே எப்போதும் முதல் வேலையாக ஊக்கம் தரும் உங்கள் உற்சாகமான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,படம் பார்த்துவிட்டீர்களா?மிக்க மகிழ்ச்சி.மகேந்திரன் எழுதிய புத்தகம் நான் ஷோரூமில் பார்த்தும் வாங்க தவறீவிட்டேன்.அதற்கு வருந்துகிறேன்.மகேந்திரனை நேரில் சந்தித்ததைப்பற்றி மேலும் சொன்னால் மகிழ்வேன்.நண்பரே இப்படம் பார்த்த போது எனக்கு டாய்ஸ் ஆஃப் ஹெவனின் அபாரமான நேர்த்தி நினைவுக்கு வந்தது,உங்களுக்கு அப்படி ஏறப்பட்டதா?மகேந்திரனை பின்பற்றி தான் அப்போது ஒரு பேரலல் சினிமா அலை எழுந்தது என்றால் மறுக்கவேமுடியாது.

@சக்திஸ்டடிசெண்டர் கருண்
நண்பரே நலமா?,மிகமிக நன்றி,உங்கள் தளம் வரவேண்டு என நினைத்து மறந்துவிடுவேன்.விரைவில் வருகிறேன் நண்பா

@நாஞ்சில்பிரதாப்
மக்கா நலமா?நன்றி, மிக அருமையான படம் அல்லவா?
நிச்ச்யம் இவர் வெளிநாட்டில் இருந்தால் மிகவும் கொண்டாடப்பட்டிருப்பார் தான்.இன்றைய நாட்களில் சினிமா வியாபாரி மணிரத்னம் செய்வது போல ஃபெஸ்டிவலுக்கு அனுப்ப அப்போது ஆர்ட் சினிமா ஃபெஸ்டிவல் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் இல்லை.மணி படத்தை மட்டுமெ கொடுத்தால் போதும்,ஒண்ணை பத்தாக்கி இவர்களே விளம்பரம் செய்து புகழ் வாங்கி கொடுத்து,ஓட்டும் போட ஆள் பிடித்து கொடுத்து விடுவார்கள்,அவர்களுக்கு ஒரு பெர்செண்டேஜ் கமிஷன்.
மகேந்திரனுக்கு இவையெல்லாம் பழ்க்கமே இருந்திருக்காது

@கோபிநாத்
அருமை தம்பி நன்றி

செ.சரவணக்குமார் சொன்னது…

//உதிரிப்பூக்கள் தமிழின் முதல் உலகசினிமா..//

உண்மை நண்பரே. மனித உணர்வுகளை அசலாக காட்சிப்படுத்துவதில் மகேந்திரன் வித்தகர். திரைமொழி தெரிந்த அற்புதமான படைப்பாளி.

மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா.

அரவிந்தன் சொன்னது…

அருமையான படம். அப்பாவுடன் சிறுவதில் ( 8 அ 9 வயதில்) பார்த்தது. இன்னும் பசுமையான நினைவுகளாக உள்ளது. காஜா ஷெரிப் சிறந்த குழந்தை நட்சத்திரம். கமல் ஸ்ரீதேவி தவிர மிகச்சிலரே கதாநாயகர்களாக முன்னேற முடிந்துள்ளது. இது போல் ஒவ்வொரு இயக்குனரின் மாஸ்டர் பீஸ் -யும் அலசவும்.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நண்பா... cafeயில் இருக்கிறேன்.. பதிவை, நிதானமாக மொபைலில் படித்துவிட்டு வருகிறேன்.. ரைட்டா

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நண்பரே..உதிரிபூக்கள் நமது இந்திய அரசின் பொக்கிசமாக போற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.இதற்க்காக இப்படத்தை தேர்வு செய்யும் குழுவினருக்கு படத்தை போட்டுக்காட்டக்கூட நல்ல தியேட்டர்பிரிண்ட் இல்லை மகேந்திரனிடம்.சென்னை புறநகர் பகுதி தியேட்டரில் புத்தம்புதிய காப்பி கிடைத்திருக்கிறது.படம் பார்த்த குழுவினர் அனைவரும் ஸ்டேண்டிங் ஓயேஸன்.அப்போது அந்த மகா கலைஞனின் கண்களில் ஆனந்த கண்ணீர்.இந்த சம்பவத்தை எனக்கு சொன்னவர் என் இனியநண்பர் ஆனந்தன்.

மீனாட்சி சுந்தரம் - Meenatchisundaram சொன்னது…

மிக்க நன்றி நண்பா! தமிழின் உன்னத படைப்பு.
படத்தில் நான் ரசித்தவை:
1. கடைசி காட்சியில் விஜயனை ஊரார் பின்தொடர்ந்து செல்லும் போது இசைஞானியின் பின்னணி இசை சவ ஊர்வலம் போகும்போது அடிக்கப்படும் தப்பட்டை வாத்தியமாக வரும். உயிர் உள்ள ஒருவன் தானே நடந்து மயானத்திற்கு செல்லுவது போல் அமைத்துள்ளது. அற்புதமான காட்சியமைப்பு.
2. விஜயன் குழந்தைகளிடம் விடை பெற்றவுடன். வெறும் அமைதியான தண்ணீர் தான் காட்டப்படும், மற்ற படங்களைப் போல் விஜயன் மெதுவாக நடந்து தண்ணீருக்குள் மூழ்குவது போல் காட்டியிருந்தால் மிக சாதரணமாக இருந்திருக்கும். ஆனால் பார்வையாளர்கள் புத்திசாலிகள் என இயக்குனர் இந்தக் காட்சி அமைப்பில் பார்வையாளனை உயர்துகிறார்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@செ.சரவணகுமார்
நண்பரே வருகைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

@அரவிந்தன்
நண்பரே வருகைக்கும் நல்ல தகவலுக்கும் மிக்க நன்றி
எனக்கும் இது நோஸ்டால்ஜிக்காக இருந்தது.நிச்சயமாக
நேரம் கிடைக்கையில் மாஸ்டர் பீஸ்களை அலசுகிறேன்.

@கருந்தேள்
நண்பா,நலமா?பிஸியா?எப்போது 27 ஆம் தேதியாகும்,நீங்கள்
பழையபடி இணையஉலா வருவீர்கோள்?என்ன கொடுமை நண்பா
இப்படி பிசியாகிவிட்டீர்களே?சீக்கிரம் வேலையை முடித்து விட்டு வாங்க இனிதே.

@உலகசினிமா ரசிகன்
தலைவரே,ஓ,அப்படியா நடந்தது?என்ன கொடுமை பாருங்கள்?மாஸ்டர் பீஸுகளுக்கு ஆவணகாப்பு இல்லை,காமெடிபீஸ்களுக்கு இங்கே சந்தனகாப்பாக
இருக்கிறது.உங்கள் நண்பர் ஆனந்தனுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி

@மீனாட்சி சுந்தரம்
நண்பரே
நலம் தானே?உங்கள் வரவை எதிர்நோக்கியிருந்தேன்.மிக மிக நன்றி.
சும்மா சொல்லக்கூடாது,நீங்கள் சொன்ன காட்சியை திரும்ப திரும்ப மீண்டும் பார்த்தேன்.மனம் கொள்ளை கொண்டது எத்தனையோ சங்கதிகளை சொன்னது.
மெய்யாகவே மகேந்திரன் பாரவையாலர்களை மிகவும் மதித்து புத்திசாலிகளாக எண்ணி காட்சி வைத்திருந்தார்.எனக்கு அந்த முதல் ரீலில் வரும் ஜீப்பில் வரும் யெஸ் சாரும் மிகவும் பிடித்தது,நல்ல எளிய அருமையான குறும்புடனான நகைச்சுவை அது.இசைஞானியின் அந்த தப்பட்டை மேளமும் கேட்டேன்.ஆகா!!!!

பெயரில்லா சொன்னது…

சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு...
அன்புடன் மகேந்திரன்
எனக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது. நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம்.

நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது திரைப்படங்கள் அப்படித்தான் உருவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு, அப்படிப்பட்ட கனவா?

சினிமா ஒன்றும் தேவலோகமும் அல்ல. சினிமா சார்ந்த நபர்கள் ஒன்றும் தேவ தூதர்களும் அல்ல. இதைப் புரிந்துகொண்டால், எளிய விஷயங் களைப் பார்த்து ஆச்சர்யப்படத் தேவை இருக்காது.

நமது நாட்டில் எவ்வளவோ பேர் பட்டினிகிடக்கிறார்கள். விவசாயம் பண்ணுகிறவன் பட்டினி கிடக்கிறான். அன்றாடங்காய்ச்சி பட்டினிகிடக்கிறான். மாதச் சம்பளம் வாங்குபவன்கூடச் சமயங்களில் மாதக் கடைசியின் போது பட்டினிகிடக்கிறான். ஆனால், சினிமாவில் ஜெயித்த ஒரு நடிகரோ, டைரக்டரோ, தான் ஃபீல்டுக்கு வந்து பட்டினி கிடந்ததையும் முன்னேறியதையும் சொல்லும்போது, அதற்கு ஒரு அதிகப்படியான முக்கியத்துவம்... அந்தப் பட்டினியின் மீது ஒரு கவர்ச்சியும் ஏற்பட்டுவிடுகிறது. என்றோ அடைந்துவிடுவோம் என்கிற வெற்றிபற்றிய கனவு. அடுத்த வேளை பட்டினியைப் பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்ளும்படி உன்னைத் தயார்படுத்திவிடுகிறது. இதுதான் சினிமாவின் அபாயகரமான கவர்ச்சி.

இளமையையும் ஆரோக்கியத்தையும் பணயம் வைக்கும் அளவுக்கு இந்தக் கவர்ச்சி உன்னிடத்தில் ஏற்படுத்துகிற பாதிப்பு என்னை வருத்தமடையச் செய்கிறது. ஆயிரக்கணக்கில் வந்து இங்கே நுழைந்தவர்களில் சிலர் ஜெயித்திருக்கின்றனர். அந்தச் சிலரில் ஓரிருவர் தவிர்க்க முடியாமல் பட்டினிகிடந்து இருக் கிறார்கள். அவர்கள் விதிவிலக்குகள். அவர்களது எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அவர்கள் அடைந்த வெற்றியின் காரணமும் அடிப்படையும்தான் முக்கியமே தவிர, அவர்கள் பட்ட கஷ்டங்கள் உனக்கான முன் மாதிரியாக இருக்க முடியாது.

பெயரில்லா சொன்னது…

என்னை அணுகி வாய்ப்புக் கேட்ட பல இளைஞர்களிடத்தில் நான் பார்த்துக் கவலைப்படும் மற்றோர் அம்சம் - அவர்களது தீர்மானம் இன்மை. தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கே இருக்கிற குழப்பம். அசிஸ்டென்ட் என்று துவங்கி, 'கதை சொல்றேன்... பாட்டு எழுதுறேன்... டயலாக் எழுதுறேன்’ என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில், 'ஆபீஸ் பாய்னாக்கூட சரி சார்... எப்படியாச்சும் உள்ளே நுழைஞ்சுட்டாப் போதும்’ என்பார்கள். எனக்கு மனசு கஷ்டப்படும். உங்கள் திறமை, உங்கள் தகுதிபற்றி உங்களுக்கே ஒரு தீர்மானமும் நம்பிக்கையும் வேண்டாமா? உங்களை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டுமா? அப்படி என்ன அவசியம் சினிமாவுக்கு?

சினிமாவுக்கு வருகிற உன் போன்றவர்களின் ஊக்கத்தைக் குறைப்பதோ, உறுதியைக் குலைப்பதோ எனது எண்ணம் இல்லை. நிறையப் பேர் வர வேண்டும். உங்களது வருகையும் இருப்பும் உங்களது முழுப் பரிமாணத்தை யும் காட்ட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், திட்டமோ, கவனமோ இல்லாமல் இங்கு வந்து, தயக்கமும் பயமுமாக நீங்கள் ஒவ்வொருவரையும் அணுகி வாய்ப்புக் கேட்பது எனக்குச் சங்கடம் தருகிறது.

ஒரு மனிதனுக்குக் காதல் என்பது அவசியம். தன் மீதான காதல். நீங்கள் முதலில் உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். அதற்கு மரியாதை செய்யுங்கள். ஆரோக்கியமான உடலும் கூர்மையான மனசும்தான் சிறந்த படைப்புகளைத் தர உதவும். ஒரு சின்ன வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அடிமனதில், சினிமா ஒரு பொறியாக உங்களுக்குள் கனன்றுகொண்டு இருக்கட்டும். அதை அணையவிடாது, அந்தக் கனலுடன் இருங்கள். அந்தக் கனலின் வீரியம்கூடிக் கொண்டுதான் இருக்கும்.

வயிற்றுப் பசி இல்லாமல் முகத்தில் தெளிவும் - மனம் முழுக்க உங்களது திறமை குறித்த தன்னம்பிக்கையும் - உள்ளே 'என்னால் சாதிக்க முடியும்’ என்கிற உறுதியும்கொண்டு, நீங்கள் ஒருவரிடம் வாய்ப்புக் கேட்பது மிகவும் ஆரோக்கியமான தாக இருக்கும். அப்போது உங்க ளிடம் தேவையற்ற தயக்கம்இருக் காது... கூச்சம் இருக்காது... உறுதி இருக்கும். நம்பிக்கை இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் வாய்ப்புக் கிடைக்காவிட்டால், நீங்கள் நிச்சயம் கூசிப்போக மாட்டீர்கள். உங்களுக்குப் பொருந்தி வரக்கூடிய மற்றொருவரைத் தேடி, அதே கம்பீரத்துடனும் தெளிவு டனும் நீங்கள் செல்வீர்கள்.

அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேரும்பட்சத்தில் அதிலேயே மூழ்கி நம்முடைய பிரதான லட்சியம் மங்கிப் போகுமோ என்கிற சந்தேகம் இயல்பாகவே வரலாம். ஆனால், அப்படி அவசியம் இல்லை. எல்லாக் கலைகளும் கதைகளும், சுற்றி உள்ள சமூகத்தில் இருந்து தான் உருவாகின்றன. உங்களுக்கான காலம் கனியும் வரை நீங்கள் உங்களைத் தயார் செய்துகொண்டு இருங்கள்.

பெயரில்லா சொன்னது…

நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம். அதைக் கைக்கொண்டுவிட்டால், அதன் பின் ஒவ்வொரு விநாடியும் நீங்கள் கூர் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் நடிகனாக விரும்பலாம், டைரக்டர் ஆக விரும்பலாம், கதை - வசனமோ, பாடலோ எழுத விரும்பலாம். எதுவாக ஆக விரும்பினாலும் உங்களுக்கான கச்சாப் பொருட்கள் உங்களைச் சுற்றி நிகழ்கிற சம்பவங்களிலும் உலவுகிற மனிதர்களிடத்திலும் இருக்கின்றன.

தவிர, நிறைய வேற்று மொழிப் படங்களைப் பார்ப்பது உங்களைச் செழுமைப்படுத்தும். நான் பார்த்த ஒரு வேற்று மொழிப் படம் நினைவுக்கு வருகிறது. 'Rape in the Virgin Forest’ எனும் படம். பழங்குடி மக்கள் வாழும் ஒரு காட்டில் 'நாகரிக’ மனிதர்கள் நுழைகிறார்கள். இவர்களது தேவைக்காக விறகு வெட்ட பழங்குடி மக்க ளையே உபயோகிக்கிறார்கள். அந்தப் பழங்குடி பெண்களில் ஒருத்தியை ஒருவன் நதியோரத்தில் கெடுப்பதற்காக விரட்டிச் செல்கிறான். அவள் ஓடுகிறாள். மற்றொரு புறத்தில் இவனுக்கா கப் பழங்குடி ஒருவன் பிரமாண்டமான ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்கிறான். நெடிதுயர்ந்த அந்த மரம் வீழ்கையில் அந்தப் பெண் ணின் கதறல் பின்னணியாக ஒலிக்கிறது. அப்படியே ஆடிப் போய்விட்டேன். இப்போது நினைத்தாலும் அந்தக் கதறல் மனதில் கேட்கிறது. மரம் விழுவதற்கு அந்தப் பெண்ணின் கதறல் எவ்வளவு பொருத்தமான பின்னணி இசை!

பெயரில்லா சொன்னது…

இதுபோன்ற படங்கள் நமக்குள்ளே இருக்கும் திரியைத் தூண்டிவிடுவதுபோல் ஒரு தூண்டலாக இருக்கின்றன.

அன்றாடத் தேவைகளின் முக்கியத்தை உணர்ந்து, அதை நிறைவேற்றியபடியே உனது அடுத்த இலக்குக்காக முயல்வதும்... உன்னை மேலும் மேலும் 'ணிஹீuவீஜீ’ செய்துகொண்டு, வாழ்வைக் கவனித்து கவனித்து உனது கலை மனசைக் கூர்மைப்படுத்திக் கொள்வதும்தான் அதிமுக்கிய மாகப்படுகிறது. ஆனால், இவற்றைவிடவும் பெரிதான ஒன்று உண்டு. இந்தப் பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது மாமா.

ஒருநாள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறிவிட்டது. அவர் புன்னகையோடு சொன்னார், ''இந்தப் பருக்கையோட நிலை யைப் பாத்தியா... பாவம்!''

நான் வியப்பாக ''ஏன்?'' என்றேன்.

''இந்தப் பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில... அப்படின்னு எத்தனை இடங்கள்! எங்கேயும் தவறாம அதோட பயனுக்காக எவ்வளது தூரம் கடந்து வந்துச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து, கடைசி நொடியில் தவறி விழுந்துடுச்சே... எவ்வளவு பாவம் அது!''

நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரி டம் இருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!

நம்முடைய பிறப்பும் அந்த அரிசிபோலத்தான். நாமும் எத்தனை இடங்களில் இருந்து தப்பித் தப்பி வாழ்வைக் கடந்துகொண்டு இருக்கிறோம். நாம் ஒருபோதும் இந்த அற்புதமான வாழ்வை வீணாக்கிவிடக் கூடாது. கடைசி நிமிடத்தில் தவறிய அந்தப் பருக்கைபோல் தவறிப்போனவர்கள்தான் எத்தனை எத்தனை பேர்!

இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. மிகப் பெரிய கனவும் உழைப்பும்கொண்டு நீ சினிமாவில் வெல்ல முயலலாம். வெற்றியடைய வாழ்த்துக்கள். ஆனால், அப்படி ஆக முடியாது போனால் அது ஒன்றும் குறைபாடு இல்லை.

சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது. பெருமை உடையது. பிரபலம் இல்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியம் இல்லை.

உன்னை, என்னை உருவாக்கி, இப்போது நாம் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருப்பது வரை, உன் பெற்றோர், என் பெற்றோர் உள்ளிட்ட பல பிரபலமற்றவர்களின் பங்கு இருக்கிறது.

இதுவரை கீழே தவறி விழாத சோற்றுப் பருக்கையாக நீயும் நானும் இப்போது நாம் இருக்கும் இடத்தில் நிற்கிறோம்.

இந்த உதாரணத்தை எனக்கு சொல்லிக் கொடுத்த என் மாமாவும்கூட... பிரபலமாகாத ஓர் எளிய விவசாயிதான்!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)