பன்றிக்கு மலமே தீனி
பருந்துக்கு பிணமே தீனி
கன்றுக்குப் புல்லே தீனி
கழுதைக்கு ஏடே தீனி
குன்றத்துப் பாம்புக்கெல்லாம்
குழி எலி தவளை தீனி
என்றைக்கும் தீனிக்கென்றே
இவை தந்தான் தேவ ஞானி..
பன்றியை வளர்த்துப் பார்த்து
பருந்துக்கு உணவும் போட்டு
கன்றையும் அருகில் வைத்து
கழுதைக்கும் காவல் நின்று
குன்றத்துப் பாம்பை எல்லாம்
கூடவே வைத்துக் காத்து
நன்றியைக் காணாததாலே
நாயொன்றை வாங்கி வந்தேன்...
‘சீசர்’ என்றந்த நாய்க்கு
செல்லப் பெயரிட்டேன்.. நெஞ்சில்
ஆசையாய்ச் சுமந்தேன் .- கையில்
அணைத்து யான் மகிழ்ந்தேன்.. சீசர்
பாசத்தைப் பெற்ற தாயின்
பாலிலும் கண்டே னில்லை..
தேசத்தை நேசிப்போர்க்கு
தேவையோர் நாயின் நெஞ்சம்..
வாலிலே நன்றி சொல்லும்
வாயிலே பிள்ளையாகும்
காலிலே அன்பு காட்டும்
கண்ணிலே உறவு காட்டும்
தோலிலே முளைத்தெழுந்த
ரோமமும் தோழனாகும்
வேலினால் தாக்கினாலும்
வீட்டில்தான் விழுந்து சாகும்...
இறையனாம் கொடியன் நாயின்
இதயத்தில் உலகை வைத்து
முறை சொல்லிப் பழகவொண்ணா
மூங்கையாய்ப் படைத்து விட்டான்
குறை சொல்லிப் பழகிப் போன
கொடிய மானிடரைக் கண்டு
நிறை மட்டும் காண்பதற்கோ
வாயில்லா நிலையை வைத்தான்...
வளர்த்தவன் சிரிக்கின்றானா?
வாய் விட்டே அழுகின்றானா?
தளர்ச்சியில் வீழ்கின்றானா?
தன்வரை குமைகின்றானா?
கிளர்ச்சியில் எழுகின்றானா?
கேலியில் சமைகின்றானா?
உள்ளத்தினில் வளர்வதெல்லாம்
உணர்வது நாயின் நெஞ்சே...
என் குரல் தூரங்கேட்டால்
எகிறிக் கால் பிளந்து வந்து
என்னுடல் மீதில் ஏறி
என்னவோ சொல்ல எண்ணி
முன் வாயில் முகத்தை வைத்து
முழு உடல் நடுங்க ஆடும்
என்னுயிர் சீசருக்கு நான்
எஜமான் அல்ல தோழன்..
குடத்திலே சோற்றை அள்ளி
கொடுத்த கை மீளும் முன்பே
வெடுக்கென கடிக்கும் மாந்தர்...
விழுங்கிய பருக்கை உள்ளே
படுக்குமுன் கேலி பேசும்
மானிடப் பதர்கள் போல
நடக்கும் குணமில்லாத
நாய் எந்தன் சீசர்க்குட்டி...
கடவுளைப் பாடுகின்றேன்
கடவுளைப் பொருளில் காட்டும்
அடிகளைப் பாடுகின்றேன்
அறிவிலார் ஒன்று சேர்ந்த
குடிகளைப் பாடுகின்றேன்
குறை உண்டாம் அவற்றில் - ஆனால்
குடிபுகும் நாயைப் பாடும்
கவிதையில் குறையே இல்லை...
அன்னையே உன்னைக் கேட்டேன்
அடுத்ததொரு பிறவி உண்டேல்
என்னை நீ நாயாய்ப் பெற்று
இத்தலைக் கடனைத் தீர்ப்பாய்
தன்னையும் உணர்ந்து தன்னைத்
தழுவிய கையும் காக்கும்
மன்னவன் பிறப்பு நாய் தான்
மனிதனாய்ப் பிறப்பதல்ல..
#ஞமலி,#செவலை,#கவிஞர்கண்ணதாசன்,#தஞ்சைபெரியகோவில், #கோவில்நாய்