இரு வாரங்களுக்கு முன் பூந்தமல்லிக்கு ஆட்டோவில் செல்கையில் ஓலா ஆட்டோ ஓட்டுனர் (50+ சர்க்கரை நோயாளி ) கடும் எரிச்சலுடன் வாகனம் ஒட்டுவதை அமர்ந்து பயணிக்கையில் பார்த்தேன், சாலையில் எதிரே போவோர் வருவோரை ஏசிக்கொண்டே சென்றார், கேஷ் ஆக இருந்தால் மட்டும் வருவேன் என்று சடாய்த்துக் கொண்டபடி தான் வந்தார்.
என்ன விஷயம் என்றேன், கடும் விலைவாசியால் எதுவும் சமாளிக்க முடியவில்லை என புலம்ப ஆரம்பித்தவர், என் ரத்த சர்க்கரை மருந்து வாங்கவே 1200₹க்கு மேல் ஆகிறது என்றார், குன்றத்தூரில் வாகன எரிவாயு என்னிடம் 200₹ பணம் கேட்டு வாங்கி நிரப்பினார்,
அவரிடம் டாக்டர் என்ன மருந்து பரிந்துரைத்துள்ளார்? எனக் கேட்டேன், glove box ல் இருந்து இரு காலி அட்டைகளை எடுத்துக் காட்டினார்,
மொபைல் google ல் மக்கள் மருந்தகம் near me என அடித்தேன் அதில் 600 மீட்டரில் ஒரு கடை காட்ட, அது நெருங்கும் முன் அவரிடம் ஓரம் கட்டி நிறுத்தச் சொன்னேன், கடையில் இருந்த பெண் ஊழியரிடம் இந்த காலி அட்டைகளை தந்து இதே சமா சமம் கொண்ட மருந்துகள் ஒரு மாதத்துக்கு கேட்டேன், glimipride m2, pantaprazole என 60 ,60 மாத்திரைகள் வாங்க மொத்தமே 165₹ தான் ஆனது, இதை ஆட்டோ ஓட்டுனரிடம் தந்து இது உங்கள் கம்பெனி மருந்தை விட சக்தி மிகுந்தது, இதை முன்பே நான் உறுதியாக கண்டறிந்ததையும் சொன்னேன், முன்பு எங்கள் அடுக்ககத்தில் துப்புறவுத் தொழிலாளியாக பணிபுரிந்த பெண்மணிக்கு டாக்டர் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் இவற்றுக்கு பரிந்துரைத்த விலையுயர்ந்த மாத்திரைகளை வாங்க வழியின்றி இதே போல புலம்பியவரை அணுகி அந்த மருந்து சீட்டை குரோம்பேட்டை ராதாநகரில் உள்ள மக்கள் மருந்தகத்தில் வாங்கித் தர 2500₹ மருந்துகள் வெறும் 320₹ மட்டுமே ஆனது,
அந்த பெண்மணிக்கு அந்த மருந்துகள் நல்ல பலனளித்தது, அவர் தொடர்ந்து அங்கே தான் மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.
இந்த நம்பிக்கையில் தான் ஆட்டோ ஓட்டுனருக்கும் மருந்துகள் வாங்கித் தந்தேன், இவை இதே நல்ல மருந்துகள் தான் ,இது அதே ப்ராண்ட் இல்லை ஆனால் அதே மருந்துகளின் கூட்டுக்கலவை,மிக நன்றாக கேட்கும் , எனக்குத் தெரிந்தவர்கள் இதை ஆறு மாதமாக சாப்பிடுகின்றனர், நல்ல குணம் தெரிகிறது , என சொல்லி நம்பிக்கையூட்டினேன்.
பூந்தமல்லியில் இறங்குமிடம் வந்தவுடன் எரிவாயுவுக்கு பணம் கழித்துக்கொண்டு மீதி பணம் தந்தேன், மருந்துக்கு என தயங்கினார், அது என் வகை என சொல்லி அவரை அனுப்பினேன்.
இது பலருக்கும் பயனளிக்கும் என்ற நோக்கிலே இங்கே எழுதுகிறேன்.
பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (பிஎம்பிஜேபி) என்பது இந்திய அரசின் மருந்துத் துறையால் தொடங்கப்பட்ட பொதுநல திட்டமாகும்,
இது பிரதான் மந்திரி பாரதிய ஜனுஷதி பரியோஜனா கேந்திரா எனப்படும் சிறப்பு மையங்கள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் நாடெங்கிலும் லட்சக்கணக்கான மருந்துக் கடைகளை திறக்க அனுமதி தந்து அதற்கு மருந்துகளை தொடர்ந்து வழங்கி வருகிறது,
இங்கு மருந்துகள் 80% குறைந்த விலையில் கிடைக்கின்றன,இவை விலையுயர்ந்த பிராண்டட் மருந்துகளுக்கு சமமான தரம் மற்றும் செயல்திறனுடன் உள்ளன.
BPPI (Bureau of Pharma Public Sector Undertakings of India) என்பது அரசாங்கத்தின் மருந்துகள் துறையின் கீழ் நிறுவப்பட்டது.
இந்தியாவின், அனைத்து CPSU களின் ஆதரவுடன், பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா கேந்திரா மூலம் பொதுவான மருந்துகளின் கொள்முதல், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை இத்துறை ஒருங்கிணைக்கிறது.
இந்த மகத்தான திட்டம் 2008 ஆம் ஆண்டு UPA அரசில் முன்னாள் தொலைநோக்கு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் துவங்கப்பட்டது, செப்டம்பர் 2015 ஆண்டு முதல் பிரதமர் மோதி அவர்களால் , 'ஜன் ஔஷதி திட்டம்' 'பிரதான் மந்திரி ஜன் ஔஷதி யோஜனா' (PMJAY) என மறுசீரமைக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் "ஜன் ஔஷதி மெடிக்கல் ஸ்டோர்" என்ற பிரத்யேக விற்பனை நிலையங்கள் மூலம் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நவம்பர் 2016 இல், இந்தத் திட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்க, அது மீண்டும் "பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா" (PMBJP) எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
PS: தனியார் க்ளீனிக் மருத்துவர்கள் தலை காய்ந்த ஏழைகளிடம் இந்த ஜெனரிக் மருந்தகம் பற்றி சொன்னால் அந்த ஏழை நோயாளிகள் வாழும் நாள் நிச்சயம் அதிகரிக்கும் .