பனிக்காலம் துவங்கி விட்டது,பனியில் காலை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இரவு அறையில் அதிக நேரம் கண் விழித்து படிக்கும் குழந்தைகளுக்கும் பனி தாக்கி காதுகளில் பூஞ்சை படர்கிறது, அடைத்த காதுகளை குழந்தைகள், பெரியவர்கள் விரல்களால் அல்லது ear bud ஆல் குடைய சில வேலை காயம் பட்டு கட்டி வந்து விடுகிறது,நீர் அருந்த வலிப்பதால் நீரும் சரியாக அருந்துவதில்லை, குளிர் காலத்தில் தாகமும் எடுக்காது,எனவே கட்டிகள் காதில் வருவது கண்கூடு.
காது வலி மிகவும் அவஸ்தை தருவது, என் மகள் நான்கு நாட்களாக இருகாதுகளிலும் குடைச்சல் வலியால் அவதிப்படுகிறாள்.
போன வாரம் முதல்நாள் பள்ளியில் இருந்த அபல்லோ க்ளீனிக்கில் சென்று காதுவலி என சொல்ல ,அவர்கள் காதில் wax உள்ளது ,வீட்டில் சொல்லி ENT இடம் காட்டி உடனே wax எடுக்க அறிவுருத்தி எழுதித் தர, என் மகள் வேதவாக்காக சற்றும் பொறுமையின்றி உடனே ENT கூட்டிப்போங்க என அனத்த, அன்று மாலையே எங்கள் பம்மலில் உள்ள pentagon clinic அழைத்துப் போனேன்,
Wax எடுத்த பின், வீங்கிய காதின் உள்ளே மருந்து தோய்த்த பஞ்சைத் திணித்து மூன்று நாள் கழித்து review வர சொன்னார் ENT, wax எடுக்க 900₹ , டாக்டர் ஆலோசனை 500₹, மருந்து வகையில் 680₹ என ஆனது,ஆனால் அவர் எழுதித் தந்த 5 pain killers antibiotics என எதுவும் கேட்கவில்லை, போனவருடம் அக்டோபரில் இதே ENT இதே போன்ற மருந்து தோய்த்த பஞ்சு, இதே 5 pain killers antibiotics காது வலிக்கு கேட்டதால், இம்முறையும் பலனளிக்கும் என நினைத்தோம் ஆனால் வலி அத்தனை கொடியதாக இருந்தது, ஆழ்ந்து தூங்கவே சிரமப்பட்டு மிகுந்த அவஸ்தை, கடும் தலைவலி,உணவை மெல்ல முடியாத வலி என அவஸ்தை பட்டாள் மகள்.
இன்று காலை மகள் உடல்நலமின்றி பள்ளிக்கு விடுப்பு எடுத்ததால் மகனை மட்டும் கொண்டு விட்டு வந்தேன், வருகையில் நாகல்கேணி அண்ணாசாலை முனையில் வேலைக்குச் செல்கையில் என்னைப் பார்த்தால் லிஃப்ட் கேட்கும் முதிய பெண்மணி தம்பி என்று கூப்பிட, அவரை நான் எப்போது பார்த்தாலும் முன்பாகவே நின்று ஏற்றிக் கொள்வேன், இன்று பாராமல் கடந்து போய் நின்றுள்ளேன் என உரைத்தது, மன்னிப்பு கேட்டுக் கொண்டேன், என்னப்பா மகள் வரலையா? நீ போறப்ப மகன் மட்டும் கூட்டிப் போனையே அதான் கேட்டேன் என்றார், மகளுக்கு காது வலி,அது தான் லிவும்மா என்றேன், இது போல காதுல மாட்டிக்க கண்ணு, நான் பாரு காதுல இது இருக்கறதால பனிக்கு ஒண்ணும் செய்யாது, காதுவலி இருமல் சளின்னு ஒண்ணும் பண்ணாதுய்யா என்றார், ஏதோ அசரிரி கேட்டது போலவே இருந்தது, இன்று இரவு , முதல் வேளையாக பக்கத்து ஃபேன்ஸி ஸ்டோரில் போய் காதுல பனிக்கு மாட்டறது என சைகை செய்து கேட்க, வெவ்வேறு வண்ணங்களில் காட்டினர்,அதில் நான்கு வாங்கி வந்தேன், 30₹ ஒன்று,
+2 தேர்வுக்கு படித்தபடி இருந்த மகளுக்கு காதில் மாட்டி விட்டேன், இப்போது ஃபேன் ஓடினால் உடம்பு குளிர்வதில்லை என்றாள்,
இதை சொல்ல மறந்து விட்டேனே, இன்று மாலை 4-00 மணிக்கு ENT review அழைத்துப் போய் பஞ்சை எடுத்தேன், வீக்கம் ஆறவில்லை பஞ்சை மீண்டும் மருந்து தோய்த்து வைக்கிறேன் என்ற மருத்துவரிடம், இது போதும் , எதுவும் இனி செய்ய வேண்டாம் என்று உறுதியாகச் சொன்னேன்,அவர் சொன்ன எதுவும் காதில் ஏறவில்லை ,கூடுதலாக ஒரு மருந்து எழுதுகிறேன் அதை எடுக்கட்டும் என்றார்,உடனே ப்ரிண்டரில் ப்ரிண்ட் ஆகிவந்த bond sheet ஐ மருத்துவர் என்னிடம் தர, பார்மஸி ஊழியர் அதை பறிக்க வந்தார், நான் மருந்து எதுவும் வேண்டாம் என மகளை வெளியை அழைத்து வந்து,ரிசப்ஷனில் பணம் எவ்வளவு என்று அவர்கள் கேட்ட 200₹ தந்து விட்டு வந்தேன்.
எனவே அனைவரும் பனிக்காலத்தில் காதுகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், நான் என் 43 ஆண்டுகளில் இது வரை காதில் wax எடுத்ததேயில்லை, ஆனால் என் குழந்தைகளுக்கு அதை எப்படியோ மனதில் பதிய வைத்து, வருடா வருடம் காதில் wax அகற்ற வைக்கின்றனர்,இந்த அவஸ்தை பட்டபின் என் மகள் wax அகற்ற கேட்கவே மாட்டாள்,அத்தனை வலியை அனுபவித்து விட்டாள்.