குணா படத்தில் சண்டி ஹோமம் நடக்கும் அம்மன் கோயிலில் கொள்ளை அடிக்க பகீரதப் பிரயத்தனப்பட்டு மனநிலை பிறழ்ந்த குணாவை மனநல மருத்துவமனையில் இருந்து திட்டம் தீட்டி அழைத்துப் வருகின்றனர் மூவர்,
அதில் சித்தப்பா ஜனகராஜ், பீடாகடைக்காரன், அனுமந்து (கிருஷ்ண சைதன்யா) கோயில் அடிவாரத்தில் வழிபடுகின்றனர், அம்மா தாயே எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடனும், முடிஞ்சிட்டா உனக்கு பத்து பர்சன்ட் தந்துடறேன் என்கிறான் சித்தப்பா.
உடனே அனுமந்து பத்து பர்சன்டா? என ஆட்சேபிப்பது போல வியக்க, சித்தப்பா ஜனகராஜ் கண்ணை மூடி நாக்கை பக்கவாட்டில் நீட்டி ஹஹஹ என தலையை ஆட்டியவன், ஆத்தாவை நோக்கி குட்த்துர்ரேன் தாயே என்று வேண்டுதலை வைத்து இவர்களை முன்னால் மலை ஏற்றி அனுப்புகிறான்,
எத்தனை அவலமான, நிதர்சனமான நகைச்சுவையை உலகத்தரமாக இந்த படைப்பில் காட்சிக்கு காட்சி பொதித்து வைத்திருக்கின்றனர், சாமியை கொள்ளையடிக்க சாமியிடமே பேரம் பேசும் வேடிக்கை மனிதர்களை சித்தப்பா ஜனகராஜ் கதாபாத்திரம் எழுதி அற்புதமாக நிறுவியுள்ளனர்.
குணாவுக்கு கோயில் கருவூல பூட்டை இன்று தான் திறக்கப் போவது தெரியும் , அம்மனே தன் கனவில் வந்து அம்மாவின் கஷ்டம் நீங்க இதைச் செய்யக் கேட்டதாக அவன் முந்தைய பராக்கிரமங்களை உரைத்து முறுக்கேற்றியே அழைத்து போகிறான் குறுக்கன் மூளை கொண்ட சித்தப்பா,
குணா முதல் நாள் அடித்து போட்டது போல தூங்குவதற்கு வீர்யமிகுந்த ஃப்ரெஷ் பாங் உருண்டைகளை பீடாக்காரன் காசிமும் அனுமந்துவும் புகட்டி உள்ளனர், இங்கே பலியாடு போன்று நிற்கும் குணாவுக்கு கூட ஃபோகஸ் இல்லை, சித்தப்பாவுக்கும் அனுமந்துவுக்கும் தான் ஃபோகஸ்.