படத்தில் யானை மீது அமர்ந்திருப்பது துர்கா பிரசாத் சப்கொடே என்ற சவண்டி பிராமணர், இந்து மதத்தில் பிராமணர்களின் ஈமைச் சடங்கில் சவண்டிகர்ணம் என்பது ஒரு மிக முக்கியமான சடங்கு,
nepalese royal massacre என்று தேடிப் படியுங்கள்,எந்த thriller க்கும் குறைவில்லாத படபடப்பைக் கொண்டிருக்கும், இந்த நேபாள அரச வம்ச படுகொலைச் சம்பவம் 2001 ஜூன் 1 ஆம் தேதி இரவு 9-00 மணிக்கு தொடங்கியது,
இளவரசர் தீபேந்திரா தன் காதலி தேவ்யானி ராணா ( குவாலியர் ராஜ வம்சம் )உடனான திருமணத்திற்கு சம்மதிக்காத பெற்றோர்களான மன்னர் பீரேந்திரா,ராணி ஐஸ்வர்யா , மற்றும் விருந்தில் கலந்து கொண்ட உற்றாரை எந்திரத் துப்பாக்கியால் சுட்டபின் தன்னையும் தலையில் சுட்டுக் கொண்டார்.
கோமாவில் தீவிர சிகிச்சையில் மூன்று தினங்கள் இருந்த பின் தீபேந்திரா இறந்தார்,இவர் கோமாவில் இருந்த நிலையிலேயே இவர் மன்னராக அமைச்சர்களின் ஒட்டு மொத்த முடிவுடன் முடி சூட்டவும் பட்டார், கோமாவில் முடிசூட்டப்பட்ட முதலும் கடைசியுமான மன்னர் தீபேந்திரா தான்,அடுத்தடுத்து ஒரு வார இடைவெளியில் இரு மன்னர்கள் மரணமடைந்தது அரச வரலாற்றுக்கு தீராத களங்கம்.
அன்றைய இரவில் மட்டும் அரண்மனையில் மொத்த உயிர்பலி 10, காயமடைந்தோர் 5, ஒரு எந்திரத் துப்பாக்கி மற்றும் 3 விதமான கைத்துப்பாக்கி கொண்டு வெறிபிடித்தபடி உலவி சுமார் 15 நிமிடங்கள் எடுத்து ஒவ்வொருவரையும் துரத்தி ரசித்து நின்று சுட்டார் தீபேந்திரா,
நான் சமகாலத்தில் கண்ணுற்ற மோசமான துர்மரணங்களில் இதுவும் ஒன்று.
இந்த படுகொலை சம்பவத்துக்கு பல conspiracy theory சொல்லப்படுகிறது. அதையும் தேடி வாசியுங்கள்.https://www.news18.com/news/books/book-claims-indian-role-in-nepal-palace-massacre-356128.html
நேபாளத்தில் ஷா ராஜாங்கத்தில் மன்னர் அகால மரணமடைந்தால் பதினொன்றாம் நாள் ஈமைச் சடங்கு கர்ம காரியங்களின் நிறைவின் போது அபூர்வமான இந்த "katto khane" என்ற அசைவ சாப்பாடு போட்டு மன்னரை வழியனுப்பும் சடங்கு வழக்கத்தில் உள்ளது.
இந்த ஈமைச் சடங்கு காத்மண்டுவில் பாக்மதி ஆற்றங்கரையில் கல்மோச்சன் காட் படித்துறையில் நடந்தது
அகால மரணமடைந்த மன்னரின் பாவங்களை இந்த சடங்கின் மூலம் சவண்டி பிராமணர் ஏற்று மன்னரின் ஆத்மாவை இங்கு பூஉலகில் தறிகெட்டு அலைய விடாமல் நேராக சொர்க்கத்திற்கு அனுப்புவதே இந்த சடங்கின் நோக்கமாகும்.
வயதான மெலிந்த சைவ உணவுப் பழக்கம் மட்டுமே உள்ள சவுண்டி பிராமணரைத் தேடி அழைத்து வந்து, அவருக்கு,இறந்து போன மன்னர் பெயரைச் சூட்டி,அவரை தலைக்கு குளிக்க வைத்து, அவருக்கு மன்னர் உபயோகித்த உயர்தர ஆடைகளை, கண்ணாடி,வாட்சு,செருப்புகள்,அணிகலன்கள், வாசனா திரவியங்களை அணிவித்து , வேத மந்திரங்கள் ஓதி, தலை வாழை இலை விரித்து 84 வகையான மாமிச உணவு பதார்த்தங்களை சாப்பிடச் செய்கின்றனர் ,ஆமாம் அசைவ உணவு பதார்த்தங்களைத் தான்.
பின்னர் தாம்பூலம் தரிக்க வைத்து, மன்னர் குடும்பத்தின் தூரத்து உறவினர்கள் ஆசி வாங்குகின்றனர், பட்டத்துக்கு வரும் ராஜா ராணி மகன் மகள் மாப்பிள்ளை பேரன் இவர்கள் இந்த வழியனுப்புதலில் கலந்து கொள்ளமாட்டார்களாம்,
எக்காரணம் கொண்டும் புதிய ராஜாவுக்கு துர்லட்சணங்கள், துர்சகுன நிழல் எதுவும் விழக்கூடாது என்று அவர்களை இந்த "katto khane" சடங்கில் இருந்து விலக்குகின்றனராம்.
பின்னர் பொன்னாடையால் அலங்கரிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்ட சவண்டி பிராமணருக்கு பொன் பொருள், கால்நடைகள், ஊருக்கு வெகு தூரத்தில் வெளியே பரந்த நிலம், வீடு , தானியங்கள் கணக்கின்றி தருகின்றனர்,பின்னர் சவண்டி பிராமணரை கம்பீரமான பட்டத்து யானையில் ஏற்றி நேபாள பள்ளத்தாக்கின் கடைக்கோடி எல்லையில் சென்று இறக்கி விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுகின்றனர்.
இங்கே படத்தில் காணும் ஈமைச் சடங்கு நடந்து 20 வருடங்கள் ஆகிறது, அப்போதே அந்த சவண்டி பிராமணருக்கு வயது 75, இன்று 95 வயதில் அந்த பிராமணர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை,
நேபாளம் அப்போது உலகின் ஒரே இந்து அரசாங்கம் (2008 வரை only Hindu kingdom 2008 மே 28 ல் இருந்து இன்று வரை Federal Democratic Republic of Nepal ) இப்படி வெளிப்படையாக இந்த சடங்குகளைச் செய்தனர்,
ஆனால் இது போன்ற சடங்குகளை அகால மரணமடைந்த நம் முன்னாள் பிரதமர் , முன்னாள் முதல்வருக்கு வெளிப்படையாக இங்கே செய்ய முடியாது, இது ஜனநாயக நாடு,நம் இறையான்மை இந்திய அரசியல் சட்டம் இது போல சடங்குகளை ஏற்காது, மக்கள் மன்றத்தின் அவைக் குறிப்பில் எழுதாது,நம் நீதி மன்றத்தில் பேய் பிசாசு ஆத்மா பித்ரு கர்மம் என்று வாதிட முடியாது.
நாம் வாழும் உலகில் எத்தனை எத்தனை வினோதங்கள்,எத்தனை எத்தனையோ சம்பிரதாயங்கள், நீர்குமிழி படத்தில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று மிகச் சரியாக எழுதியிருப்பார் கவிஞர் சுரதா,அந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .
PS: மேலே படத்தில் இருக்கும் யானை மோதி பிரசாத் ஒரு கொலைகார யானையாம், ராயல் சித்வான் மிருகக் காட்சி சாலையில் தன் வயிற்றின் கீழாக மகன் பிறக்க வேண்டுதலுக்காக சுற்றி வந்த Kali Bista என்ற பெண்மணியைச் சுழற்றி தூக்கிப் போட்டு மிதித்துக் கொன்று விட்டதாம், அந்த பெண்மணியின் மூன்று மகள்கள் அனாதையாகினராம்.
தரவுகள்:
https://www.outlookindia.com/website/amp/final-rites-per-traditional-ritual/211974
http://edition.cnn.com/2001/WORLD/asiapcf/south/06/11/nepal.hindu.ceremonies/index.html
https://www.indiadivine.org/content/topic/1083597-katto-ceremony-in-nepal/
https://en.wikipedia.org/wiki/Nepalese_royal_massacre
https://en.wikipedia.org/wiki/Katto
#தீபேந்திரா,#பீரேந்திரா,#ஷா_வம்சாவளி,#நேபாளம்,#காத்மண்டு,#படுகொலை,#katto_khane