குணா திரைப்படத்தில் அப்பன் என்றும் அம்மை என்றும் பாடலில் சுவரில் கைவிலங்குகள் மாட்டப்பட்டிருக்கும் ஸ்டாண்ட் இரு நொடிகள் வந்து கடக்கும், அது அத்தனை surreal ஆன உணர்வைத் தருகிறது.
குணசேகரனை பத்து வயதில் அவன் தாய் குணசீலம் பெருமாள் கோயில் மண்டபத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருக்க, அவன் எப்படியோ தப்பி ஹைதராபாத் வந்து மனநல காப்பகத்தில் டாக்டர் க்ரீஷ் கர்னாட் இடம் தஞ்சம் அடைந்து தன்னை குணப்படுத்தும் படி கேட்டு தன்னை அவரிடம் பல ஆண்டு காலம் ஒப்புத் தருகிறான், இப்போது நன்கு குணமடைந்தும் விட்டான் குணா,
குணாவுக்கு கற்பூர புத்தி ஆதலால் அங்கே சக மனநோயாளி
அபிராமி சித்தரான அனந்து பயிற்றுவித்த அபிராமி அந்தாதி பாடல்களை ஸ்பஷ்டமாக மனனம் செய்து ஒப்பிக்கிறான்,
தான் பாதி சாமி என சித்தப்பன் முறுக்கேற்றியதை அப்படியே நம்புகிறான், தான் சிவன் என உறுதியாக நம்புகிறான், குணா வீட்டில் அவனது அறையில் அர்த்தநாரீசுவரர் படம் உள்ளது,பாடல் வரியான கண்மணி என்பது அம்பிகையின் கண்கள் தாம், சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா? என்பது கடந்த ஜென்மத்தை சிவன் பார்வதிக்கு நினைவூட்டும் முயற்சி தான்,
அம்மன் கோயிலில் அபிராமியைக் கண்டவுடன் silhouette ல் தன் மனதுக்குள் சிவதாண்டமும் ஆடி அம்பிகையை ஆரத் தழுவுகிறான் குணா.
அபிராமி அம்பிகை தன்னுடன் பிரத்யஷமாகமாக உடன் வாழ நேரில் வந்து விட்டதை உறுதியாக நம்புகிறான் குணா, அதுவே விதி என்கிறான், முன் ஜென்ம பந்தத்தை மறந்த பார்வதிக்கு நினைவூட்டுவது போலவே அபிராமி தன்னிடம் இருந்து தப்புகையிலும் கொலைத் தாக்குதல் நடத்துகையிலும், அக்னிப் பிழம்பாக திட்டுகையிலும் பொறுமையை கடைபிடிக்கிறான் குணா.
கொடைக்கானல் மலை உச்சியில் பாழடைந்த தேவாலய சுவற்றில் கூடு கட்டியிருந்த சிட்டுக்குருவி எப்படி தன்னை புரிந்து கொள்ளாமல் பயப்படுகிறதோ? அப்படியானது அபிராமியின் பயம் என்று அறிந்தவன், அந்த பயத்தை கவனமாக களைய முயல்கிறான்.
பசிக்கு உணவு வாங்க கடைக்கு போகையில் அவள் வழக்கம் போல தப்பிவிடுவாளோ? என அஞ்சி தன் சித்தப்பன் பால்யத்தில் குற்றம் செய்து விட்டு தலைமறைவாகையில் தன்னையும் இங்கே அழைத்து வந்தவன் குணா கற்பூர புத்திகொண்டவன் ஆதலால் பல வகை பூட்டுகளை திறக்க படிப்பித்திருக்கிறான்,அதனால் அவனுக்கு திருட்டு உதவிக்கு குணா தேவை ,சித்தப்பனுக்கு சினிமா பார்க்கவும் கூத்தடிக்கவும் தோன்றுகையில் பதின்ம வயது குணாவை இதே இடுப்பு சங்கிலியால் பிணைத்து அலங்கார வளைவுத் தூணில் கட்டி பூட்டியவன் ஐந்து நாட்களுக்கு மேல் வெளியே சென்றும் விட்டான், குணாவுக்கு கோபம் மிகுதியாகிவிட தாகத்தாலும் பசியாலும் சாதுவான குணா மதயானை சங்கிலியை அறுப்பது போல அங்கிருந்த சிறிய ரம்பத்தால் சங்கிலியை அறுத்து எறிந்து, தண்ணீர் நிறைய அருந்தியவன் அங்கே விட்டு விடுதலையாகாமல் தேவாலய வாசப்படிகளில் சென்று அமர்ந்து சித்தப்பனுக்கு காத்திருந்த கதையை அபிராமியிடம் சொல்லும் காட்சி மிகுந்த ரசமானது.
பாகன் யானையை அடிமைப்படுத்தினாலும் அந்த கால்சங்கிலி யானைக்கு துச்சம் என்றாலும் கூட யானை அங்குசத்துக்கு கட்டுப்பட்டு பாகன் கட்டிய இடத்தில் ஒரு அங்குலம் நகராதே, அது போன்ற சரணாகதியை தந்துள்ளான் குணா, அதே போலவே ஒரு ஒரு மனிதரையும் நம்பி தன்னை ஒப்புத் தருகிறான் உள்ளம் தூயவனான குணா.
அபிராமி உறங்குகையில் இடுப்பில் சங்கிலி பிணைத்ததற்கு வீறிட்டு கொதித்து போகிறாள், யாராவது யாரையாவது இப்படி சங்கிலியால் பிணைப்பார்களா? என ஆற்றாமையால் கேட்கையில் , நானும் என் சித்தப்பனை இதையே கேட்டேன், இனி என்னை கட்டி வச்சா தெரியும் சேதி, உனக்கு வேணும்னா சத்தியம் செஞ்சு தர்ரேன், அந்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு எங்கயும் போகமாட்டேன்னேன் பாரு, நீயும் அது போல எனக்கு சத்தியம் செஞ்சுக்குடு உன்னை இனி கட்டிப்போட மாட்டேன் என அத்தனை வெகுளியாக கைநீட்டி சத்தியம் கேட்கிறான் குணா.
இந்த அபிராமி உறங்கும் காட்சியைப் பாருங்கள், எத்தனை தேர்ந்த ரசனையுடன் புகழ்பெற்ற sleeping beauty ஓவியங்களைப் போலவே சட்டகம் வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வேணு,
ஒரு தேவதை துயில்வது போல, ஒரு இளவரசி துயில்வது போல, pieta என்ற கன்னி மேரி மடியில் துயில் கொள்ளும் இயேசு பிரான் முகத்தின் அமைதியை அபிராமிக்கு கொண்டு வந்துள்ளார், ஏன் நடிகர் கமல்ஹாசன் டெய்சி இரானி நடத்திய நடிப்புப் பயிற்சி பள்ளியில் இருந்து இந்த அபிராமி கதாபாத்திரம் செய்ய வெண்தாமரை முகமும் வெண்தாமரை போன்ற பாத கமலமும் கொண்ட அழகியை அழைத்து வந்தார் என நன்கு விளங்குகிறது,
அபிராமி என்றால் ரோஷிணி , ரோஷிணி என்றால் அபிராமி என்னும் படி வாழ்நாள் சாதனையாக இந்த கதாபாத்திரத்தை செய்து விட்டு, வாழ்நாள் முழுக்க ரசிக இதயங்களில் குடி கொண்டுவிட்டார் நடிகை ரோஷிணி,
சரிகா கமல்ஹாசன் அற்புதமான உடையலங்கார நிபுணர், பெண்ணுக்கு பெண்ணே பொறாமை கொள்ளும் அழகு கொண்ட அபிராமிக்கு ஒரு தேவதை போலவே உடைகளை வடிவமைத்திருந்தார்.
இசைஞானியின் பின்னணி இசை, இனிமையான பாடல்கள் ஒரு படைப்புக்கு அமரத்துவ தன்மையைத் தந்து அந்த படைப்பை மிகுந்த உசத்தியாக மாற்றுகிறது என்றால் மிகையில்லை,
குணா இப்போது வரவேண்டிய படம், முப்பதாண்டுகள் முன்னால் வந்த படம்,அதாவது ahead of time வகை படைப்பு, இது போல உயரிய படைப்பை ஒருவர் ஆத்மார்த்மாக தந்துவிட்டால் அதன் பின் உள்ளம் தூய்மையாகிவிடும், வழமையான படைப்பை தர மனம் ஒப்பவே ஒப்பாது.
PS: சிவன் பார்வதி கலியுகத்தில் எடுத்த மறுஜென்மத்தை மலையாளத்தில் R.சுகுமாரன் அவர்கள் ராஜஷில்பி என்ற படைப்பாக எழுதி அற்புதமாக இயக்கி அந்த திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது,அதுவும் குணா திரைப்படம் போலவே ரசிகர்களால் சரிவர புரிந்து கொள்ள முடியாத படைப்பு,