இயக்குனர் தயாரிப்பாளர் , நடிகர் மனோபாலா இன்று மறைந்து விட்டார், அவருக்கு இதய அஞ்சலி ,வீட்டாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமகால தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த குணசித்திர நடிகர், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நீதிபதியாக வந்து கருவேல மரங்களை வெட்டி அகற்று என ஒரு சாதி தலைவனுக்கு பெயில் தந்து தீர்ப்பு சொல்வார், அந்நியன் திரைப்படம் டிடிஆர் கதாபாத்திரத்தை எல்லாம் இவரை அன்றி யார் சுவாரஸ்யமாக செய்ய முடியும்? பிதாமகனில் லங்கர் கட்டை உருட்டும் குழுவில் ஈர நெஞ்சம் கொண்ட கதாபாத்திரம், பொல்லாதவன் திரைப்படத்தில் பஜாஜ் ஷோரூம் மேனேஜராக தினம் தினம் என் நினைவில் வந்து போவார்,எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் காமெடி , சதுரங்கவேட்டை படத்தை தயாரித்தது என மக்கள் விரும்பியவற்றிற்கு அப்படி உழைத்தவர்,சுவாரஸ்யம் கூட்டியவர், குரலில் ஒரு தனித்துவம் கொண்டவர், இவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் வசனங்களுக்கு டப்பிங்கில் ஏற்ற இறக்கம் குழைவு அழுத்தம் தந்து மேலும் சிறப்பு சேர்த்திருப்பார்.
வேஸ்ட் பேப்பர் சேனலில் சினிமா ஆளுமைகளை அத்தனை அழகாக பேட்டி காண்பார், விளம்பர வருவாய் ஈட்ட வேண்டும் என்று துண்டு துண்டாக காணொளிகளை வெளியிடாமல் அந்த சினிமா ஆளுமை பற்றி அரிய தகவல்களை மக்கள் அறிய வேண்டும் என தலைப்படுவார் ஒரு மணிநேரம் எல்லாம் கூட காணொளி வெளியிடுவார்.
போய் வாருங்கள் மனோபாலா சார்.