"Evil is perhaps a child. It will play any game. Like the fictitious Characters in this film, the treacherous waters of felony and crime would need a solvent compassion. This film serves as a Psychological Revelation and a warning to the Society in which urban ambitions and estrangement are ever on the rise." |Anurag Kashyap|
கடந்த 6 வருடங்களுக்கு முன் "பாஞ்ச்" திரைப்படத்தை பார்த்தும் எழுதவில்லை,காரணம் அது கொண்டிருந்த கடினமான சரளமான மொழி, இப்போது தான் நல்ல பொருத்தமான சப்டைட்டில் உடன் படத்தை என்னால் ஊன்றி உள்வாங்கிப் பார்க்க முடிந்தது.
பொதுவாக, மிகைப்படுத்தப்பட்ட திரைப்படங்கள்,தடை செய்யப்பட்ட திரைப்படங்களை தேடிப் பார்க்கையில் நாம் ஏமாற்றமடைந்ததாக உணர்வோம். ஆனால் இது மாற்று குறையாத தங்கம், இந்தித் திரையுலகம் தயாரித்த மிகச் சிறந்த க்ரைம் Noir த்ரில்லர்களில் ஒன்று பாஞ்ச் திரைப்படம்.
சென்சார் இதை ஏன் தடை செய்தனர்? என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை,ஒருவேளை இந்த திரைப்படம் கல்ட் அந்தஸ்தை அடைந்து, இன்றைய இளைஞர்களை புகைபிடிக்கவும், குடித்து நேரத்தை வீணாக்குவதையும் தடுக்கும், என எண்ணி தடை செய்தார்கள் போலும், படத்தில் இளைஞர்களுக்கு செய்தி அத்தனை உறுதியாக சொல்லப்பட்டிருந்தது,
நமக்கு அப்படி நிஜ பதைபதைப்பைத் தருகிறது என்றால் மிகையில்லை,
புனேவில் 1976-77 ஆம் ஆண்டுகளில் ஜோஷி-அபியங்கர் தொடர் கொலைகளை அடிப்படையாக கொண்டு உருவான தரமான கலை திரைப்படம் பாஞ்ச், புனே எரவாடா சிறையில் 27 நவம்பர் 1983 ஆம் ஆண்டு ஒரே நாளில் நால்வர் தூக்கிலடப்பட்ட சம்பவம் அன்று நாட்டையை திரும்பிப் பார்க்க வைத்தது,
நிஜக்கொலைகாரர்களான ராஜேந்திர ஜக்கல், திலீப் சுதர், சாந்தாராம் கன்ஹோஜி ஜக்தாப் மற்றும் முனாவர் ஹருன் ஷா என்ற நால்வருடன் சுவாரஸ்யம் கூட்ட வேண்டி ஷுய்லி என்ற ஒரு பெண் கதாபாத்திரத்தையும் சேர்த்து திரைக்கதை புனைந்துள்ளார் இயக்குனர்.
இப்படத்தில் கேகே மேனன், தேஜஸ்வினி கோலாபுரி, ஆதித்ய ஸ்ரீவத்சவா,ஜாய் ஃபெர்ணான்டஸ், விஜய் மௌர்யா , சரத் சக்ஸேனா என அத்தனை பேரின் நடிப்பும் இயல்பாக அமைந்திருந்தது, பாலிவுட் வரலாற்றில் இதுவரை உருவாக்கப்பட்ட சிறந்த இசை கோப்பு கொண்ட படம் இது , இசை விஷால் பரத்வாஜ், நம் சதுரங்கவேட்டை நடிகர் மற்றும் ஒளுப்பதிவாளர் நட்டியின் மிகச்சிறந்த ஒளிப்பதிவில் மிளிர்கிறது இப்படம்,
பாஞ்ச் திரைப்படத்தின் கரு, Requiem for a Dream, Trainspotting ஆகியவற்றை நமக்கு நினைவூட்டுகிறது,ஆனால் தனித்துவமான அடையாளத்துடன் மிளிர்கிறது .
பாஞ்ச் கதை மிகவும் எளிமையானது. புனே கல்லூரி ஒன்றில் க்ரியேடிவ் ரைட்டிங் இளங்கலை படித்து முடித்து, வேலை இல்லாத பட்டதாரிகள் ஐவர், இவர்களுக்கு ஒரு இசைக்குழு உண்டு அதன் பெயர் பேரசைட், அதாவது ஒட்டுண்ணி, இந்த பெயருக்கேற்ப ஐவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒட்டுண்ணியாகவே சகித்து வாழ்கின்றனர். இவர்கள் சொற்ப சம்பளத்துக்காக இரவு மதுபான விடுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் Rock கச்சேரி நடத்துகின்றனர்,
பெரும்பாலான நேரம் கஞ்ஜா சுருட்டி புகைக்கின்றனர், கஞ்ஜா மற்றும் மதுவுக்காக இவர்களின் சொற்ப சம்பளப் பணம் முழுதும் செலவிடப்படுகின்றன, சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. கல்லூரியில் இருந்து வெளியேறியவர்கள் வேலை தேடுவதில் ஆர்வம் காட்டாமல் கஞ்சா ,மது குடிப்பதில் மட்டும் நேரம் செலவிடுகின்றனர்,
இந்த ஐவர் குழுவில் ஒரு பெண்ணும் அடக்கம் ,அவள் பெயர் ஷிய்லி, அவள் நித்யகல்யாணி, பணமிருக்கும் யாருடனும் நொடியில் ஐக்கியமாகி படுக்கையில் விருந்தாகிறாள், இவர்கள் தங்கியுள்ள மாடி அழுக்கு கோடவுனுக்கு தினமும் ஒரு பணக்கார இளைஞனை அழைத்து வந்து சுகிக்கிறாள், ஐவர் குழுவில் ஒருவனான பாண்டி அவளை ஒருதலையாக விரும்புகிறான், ஆனால் ஷிய்லி அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, அவள் கயமை, துரோகம், சரசலீலைகள் அத்தனையும் தெரிந்தும் பாண்டி அவளை நிபந்தனைகளின்றி விரும்புகிறான்.
இந்த ஐவருக்கும் தம் பெற்றோர் உறவினர்களுடன் எந்த தொடர்பும் இல்லை, இந்த மொட்டை மாடி கோடவுன் இவர்களின் பொதுவான நண்பனான நிர்மல் என்பவனுக்குச் சொந்தமானது, நிர்மலின் அப்பா உணவகம் நடத்துகிறார், மிகவும் கருமி ஆதலால் மகனுக்கு செலவுக்கு சல்லிப் பைசா தருவதில்லை, அவனும் இந்த இசைக்குழுவுக்கு தன்னார்வ தொண்டு செய்கிறான், வாடகை எதுவும் வாங்குவதில்லை.
இவர்கள் ஐவரும் தம் ராக் இசைக்குழுவுக்கு ஒலி நாடா வெளியிடுவதற்கு ஆசைப்படுகின்றனர், லூக் (கேகே மேனன்) என்பவன் பரம மூர்க்கன்,அறைத்தலைவன்,அவன் அறைக்குள் யாருக்கும் அனுமதியில்லை , நிலையில்லாத எண்ண ஓட்டம் கொண்டவன்,கஞ்ஜா வாங்க பணம் இல்லை என்றால் கஞ்ஜா வியாபாரியையே தாக்கி கஞ்ஜா பொதியை திருடும் துணிவு கொண்டவன், பேருந்தில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கையில்
நடத்துனருடன் கைகலப்பு ஆகிவிட ,அவரின் கட்டணப்பையில் இருந்து திருடித் தப்புகிற துணிச்சல் காரன் லூக், நல்ல தரமான இசை ஒலிநாடா வெளியிடுவதற்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் என அறிகையில் அதிர்கிறான்.
அவ்வளவு பணத்துக்கு என்ன செய்வது எங்கே திருடுவது என யோசிக்க,நண்பன் நிர்மலே வலிய வந்து தன்னை கடத்தி அடைத்து வைத்து தன் பணக்கார அப்பாவிடம் கொழுத்த பணயத் தொகை 8 லட்சம் ரூபாயை கேட்கும் படி யோசனை தருகிறான், இத்தருணம் வரை திரைப்படம் நிதானமான வேகத்தில் செல்கிறது.
ஆனால் நிர்மலின் அப்பா தன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்துனர் தேஷ்பாண்டே உதவியை நாடுகையில் சிக்கலாகிறது, இதனால் கோபமான லூக் நிர்மலின் அப்பாவை மிகவும் அசிங்கமாக திட்ட நிர்மலுக்கு கோபம் மிகுந்து ஐவரை அறையை காலி செய்து வெளியே போக சொல்லுகிறான், அவன் மூர்க்கன் லூக்கை அசிங்கமாக திட்டி இரும்புக்கழியால் முதலில் தாக்கியது தான் தாமதம்,லூக் ஆத்திரம் முற்றி தன் நண்பன் நிர்மலை கண்மண் தெரியாமல் அந்த இரும்புக் கழியால் தாக்க, நிர்மல் முகம் சிதைந்து இறந்து விடுகிறான், அது முதல் நடக்கும் அனைத்தும் படபடப்பை கூட்டுகின்றன, இடியாப்ப சிக்கலாகின்றன, ஆப்பசைத்த குரங்கு போலாகின்றன.
சடுதியில் நிகழ்ந்த கொலை மற்றொரு கொலையைக் கேட்கிறது, கொலையை மற்றொரு கொலையால் சமண் செய்ய முடியாது என ஐவர் கடைசி வரை உணருவதில்லை, ஒரு கொலையை மறைக்க அவர்கள் இன்னொரு கொலை செய்ய ,திமு திமுவென பத்து கொலைகள் அரங்கேறிவிடுகின்றன, கொலையை மூடி மறைக்க இறங்கும்போது நிலைமை மேலும் மோசமாகின்றன.
இறுதியில்,இவர்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் நிர்மலின் தந்தையைக் கொன்று கொள்ளையடித்த பெரும்பணம் 9 லட்சம் ரூபாயை தானே முழுதாக அனுபவிக்க நினைத்து நம்பிக்கை துரோகம் செய்து கொலை செய்கின்றனர்,
கடைசியில் ஐவரில் எஞ்சியிருந்த முர்கி போலீஸால் சுட்டுக்கொல்லப்படுகிறான், ஷிய்லி பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடியவள் 8 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் போலீஸில் பிடிபடுவதுடன் பாஞ்ச் நிறைகிறது.
பாஞ்ச் திரைப்படம் யூட்யூப் மற்றும் சில் OTTல் உள்ளது,கே கே மேனனின் அபாரமான ஆற்றல்மிக்க நடிப்பிற்காகவும் தேஜஸ்வினி கோலாபுரியின் அசாதாரணமான நடிப்பிற்காகவும் பாஞ்ச் என்றும் நினைவுகூறப்படும்.
ஃபைட் கிளப் திரைப்படத்தில் புகழ்பெற்ற டைலர் டைர்டனாக பிராட் பிட்டை நினைவுபடுத்தும் வகையில் கேகே மேனனின் நடிப்பு அமைந்துள்ளது.
விஷால் பரத்வாஜின் இசை இப்படத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்,
பாஞ்ச் பாலிவுட்டின் சீரிய முயற்சியாகும், நேர்த்தியான இயக்கத்தில் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருந்தார் அனுராக் காஷ்யப், பொருத்தமான ராக் இசையை திரைப்படத்திற்கு புனைந்து பயன்படுத்தி நம்பகத்தன்மை கூட்டியிருந்தார்.
திரைப்படத்தில் தரமான மூன்று பாடல்கள் உள்ளன, ஒன்று "க்யா தின் க்யா ராத்" என்ற Bluesy பாணி இசைக்கோர்வை,1940களின் கிளாசிக் ஜாஸை நமக்கு நினைவூட்டும்,
Psychedelic கருப்பொருளான "து ஜா மாத்" நமக்கு Cobain மற்றும் ராக் பாணி இசைக்கோர்வையை நினைவுபடுத்தும் .
"குதா கே லியே" இது Rock on பாணி இசைக்கோர்வை.
கே கே மேனன் "லூக்" ஆக அத்தனை குருரதையுடன் கூடிய மிடுக்கனாக தோன்றியுள்ளார், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா "முர்கி" கதாபாத்திரத்தில் மிகவும் ஈர்க்கிறார் , "ஜாய்" ஆக ஜாய் பெர்னாண்டஸ் , "பாண்டி"யாக விஜய் மவுரியா மற்றும் conniving நித்யகல்யாணி கதாபாத்திரத்தில் தேஜஸ்வினி கோலாபுரி என அபாரமான casting கொண்டுள்ளது பாஞ்ச். சரத் சக்சேனா போலீஸ் இன்ஸ்பெக்டராக தனது சிறிய பாத்திரத்திலும் வசீகரிக்கிறார்.
இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு, கன்னி முயற்சி பாஞ்ச்.முழுக்க அவருடைய புது முயற்சி. அவரே தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பரிமளித்திருக்கிறார், Black Friday (2004), Dev.D (2009),Gulaal (2009),That Girl in Yellow Boots (2011),Gangs of Wasseypur (2012),Ugly (2014),Raman Raghav 2.0 (2016)
போன்ற தரவரிசையில் முன்னோடியான சினிமா "பாஞ்ச் " என்றால் மிகையில்லை.