அனுராக் காஷ்யப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுராக் காஷ்யப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Paanch | பாஞ்ச் | அனுராக் காஷ்யப்


"Evil is perhaps a child. It will play any game. Like the fictitious Characters in this film, the treacherous waters of felony and crime would need a solvent compassion. This film serves as a Psychological Revelation and a warning to the Society in which urban ambitions and estrangement are ever on the rise." |Anurag Kashyap|

கடந்த 6 வருடங்களுக்கு முன் "பாஞ்ச்" திரைப்படத்தை  பார்த்தும்  எழுதவில்லை,காரணம் அது கொண்டிருந்த கடினமான சரளமான மொழி, இப்போது தான் நல்ல பொருத்தமான சப்டைட்டில் உடன்  படத்தை  என்னால் ஊன்றி உள்வாங்கிப் பார்க்க முடிந்தது.

பொதுவாக, மிகைப்படுத்தப்பட்ட திரைப்படங்கள்,தடை செய்யப்பட்ட திரைப்படங்களை தேடிப் பார்க்கையில்  நாம்  ஏமாற்றமடைந்ததாக உணர்வோம். ஆனால் இது மாற்று குறையாத தங்கம், இந்தித் திரையுலகம் தயாரித்த மிகச் சிறந்த க்ரைம் Noir த்ரில்லர்களில் ஒன்று பாஞ்ச் திரைப்படம்.

சென்சார் இதை ஏன் தடை செய்தனர்? என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை,ஒருவேளை இந்த திரைப்படம் கல்ட் அந்தஸ்தை அடைந்து, இன்றைய இளைஞர்களை புகைபிடிக்கவும், குடித்து நேரத்தை வீணாக்குவதையும் தடுக்கும், என எண்ணி தடை செய்தார்கள் போலும், படத்தில் இளைஞர்களுக்கு செய்தி அத்தனை உறுதியாக சொல்லப்பட்டிருந்தது, 
நமக்கு அப்படி நிஜ பதைபதைப்பைத் தருகிறது என்றால் மிகையில்லை,

 புனேவில் 1976-77 ஆம் ஆண்டுகளில் ஜோஷி-அபியங்கர்  தொடர் கொலைகளை அடிப்படையாக கொண்டு உருவான  தரமான கலை திரைப்படம் பாஞ்ச், புனே எரவாடா சிறையில் 27 நவம்பர் 1983 ஆம் ஆண்டு ஒரே நாளில் நால்வர் தூக்கிலடப்பட்ட சம்பவம் அன்று நாட்டையை திரும்பிப் பார்க்க வைத்தது, 

நிஜக்கொலைகாரர்களான ராஜேந்திர ஜக்கல், திலீப் சுதர், சாந்தாராம் கன்ஹோஜி ஜக்தாப் மற்றும் முனாவர் ஹருன் ஷா என்ற நால்வருடன் சுவாரஸ்யம் கூட்ட வேண்டி ஷுய்லி என்ற ஒரு பெண் கதாபாத்திரத்தையும் சேர்த்து திரைக்கதை புனைந்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தில்  கேகே மேனன், தேஜஸ்வினி கோலாபுரி, ஆதித்ய ஸ்ரீவத்சவா,ஜாய் ஃபெர்ணான்டஸ், விஜய் மௌர்யா , சரத் சக்ஸேனா என அத்தனை பேரின் நடிப்பும் இயல்பாக அமைந்திருந்தது,   பாலிவுட் வரலாற்றில் இதுவரை உருவாக்கப்பட்ட சிறந்த இசை கோப்பு கொண்ட படம் இது , இசை விஷால் பரத்வாஜ், நம் சதுரங்கவேட்டை நடிகர் மற்றும் ஒளுப்பதிவாளர் நட்டியின்  மிகச்சிறந்த ஒளிப்பதிவில்  மிளிர்கிறது இப்படம், 

 பாஞ்ச் திரைப்படத்தின் கரு, Requiem for a Dream, Trainspotting ஆகியவற்றை நமக்கு  நினைவூட்டுகிறது,ஆனால் தனித்துவமான அடையாளத்துடன் மிளிர்கிறது .

பாஞ்ச் கதை மிகவும் எளிமையானது.  புனே கல்லூரி ஒன்றில் க்ரியேடிவ் ரைட்டிங் இளங்கலை படித்து முடித்து,  வேலை இல்லாத பட்டதாரிகள் ஐவர், இவர்களுக்கு ஒரு இசைக்குழு உண்டு அதன் பெயர் பேரசைட், அதாவது ஒட்டுண்ணி, இந்த பெயருக்கேற்ப ஐவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒட்டுண்ணியாகவே சகித்து வாழ்கின்றனர். இவர்கள் சொற்ப  சம்பளத்துக்காக இரவு மதுபான விடுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் Rock கச்சேரி நடத்துகின்றனர், 

பெரும்பாலான நேரம்  கஞ்ஜா சுருட்டி புகைக்கின்றனர், கஞ்ஜா மற்றும் மதுவுக்காக இவர்களின் சொற்ப சம்பளப் பணம்  முழுதும் செலவிடப்படுகின்றன, சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.  கல்லூரியில் இருந்து  வெளியேறியவர்கள் வேலை தேடுவதில் ஆர்வம் காட்டாமல் கஞ்சா ,மது குடிப்பதில் மட்டும் நேரம் செலவிடுகின்றனர், 

இந்த ஐவர் குழுவில் ஒரு பெண்ணும் அடக்கம் ,அவள் பெயர் ஷிய்லி, அவள் நித்யகல்யாணி, பணமிருக்கும் யாருடனும் நொடியில் ஐக்கியமாகி படுக்கையில் விருந்தாகிறாள், இவர்கள் தங்கியுள்ள மாடி அழுக்கு கோடவுனுக்கு தினமும் ஒரு பணக்கார இளைஞனை அழைத்து வந்து சுகிக்கிறாள், ஐவர் குழுவில் ஒருவனான பாண்டி அவளை ஒருதலையாக விரும்புகிறான், ஆனால் ஷிய்லி அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, அவள் கயமை, துரோகம், சரசலீலைகள் அத்தனையும் தெரிந்தும் பாண்டி அவளை நிபந்தனைகளின்றி விரும்புகிறான்.

இந்த ஐவருக்கும் தம்  பெற்றோர் உறவினர்களுடன்  எந்த தொடர்பும் இல்லை, இந்த மொட்டை மாடி கோடவுன் இவர்களின் பொதுவான நண்பனான நிர்மல் என்பவனுக்குச் சொந்தமானது, நிர்மலின் அப்பா உணவகம் நடத்துகிறார், மிகவும் கருமி ஆதலால் மகனுக்கு செலவுக்கு சல்லிப் பைசா தருவதில்லை, அவனும் இந்த இசைக்குழுவுக்கு தன்னார்வ தொண்டு செய்கிறான், வாடகை எதுவும் வாங்குவதில்லை. 

இவர்கள் ஐவரும் தம் ராக் இசைக்குழுவுக்கு ஒலி நாடா வெளியிடுவதற்கு ஆசைப்படுகின்றனர், லூக் (கேகே மேனன்) என்பவன் பரம மூர்க்கன்,அறைத்தலைவன்,அவன் அறைக்குள் யாருக்கும் அனுமதியில்லை , நிலையில்லாத எண்ண ஓட்டம் கொண்டவன்,கஞ்ஜா வாங்க பணம் இல்லை என்றால் கஞ்ஜா வியாபாரியையே தாக்கி கஞ்ஜா பொதியை திருடும் துணிவு கொண்டவன், பேருந்தில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கையில்
நடத்துனருடன் கைகலப்பு ஆகிவிட ,அவரின் கட்டணப்பையில் இருந்து திருடித் தப்புகிற துணிச்சல் காரன் லூக், நல்ல தரமான  இசை ஒலிநாடா வெளியிடுவதற்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் என அறிகையில் அதிர்கிறான்.

அவ்வளவு பணத்துக்கு என்ன செய்வது எங்கே திருடுவது என யோசிக்க,நண்பன் நிர்மலே வலிய வந்து தன்னை  கடத்தி அடைத்து  வைத்து  தன் பணக்கார அப்பாவிடம் கொழுத்த பணயத் தொகை  8 லட்சம் ரூபாயை கேட்கும் படி யோசனை தருகிறான், இத்தருணம்  வரை திரைப்படம் நிதானமான வேகத்தில் செல்கிறது.  

ஆனால் நிர்மலின் அப்பா தன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்துனர் தேஷ்பாண்டே உதவியை நாடுகையில்  சிக்கலாகிறது, இதனால் கோபமான லூக் நிர்மலின் அப்பாவை மிகவும் அசிங்கமாக திட்ட நிர்மலுக்கு  கோபம் மிகுந்து ஐவரை அறையை காலி செய்து வெளியே போக சொல்லுகிறான், அவன் மூர்க்கன் லூக்கை அசிங்கமாக திட்டி இரும்புக்கழியால் முதலில் தாக்கியது தான் தாமதம்,லூக் ஆத்திரம் முற்றி தன் நண்பன் நிர்மலை கண்மண் தெரியாமல் அந்த இரும்புக் கழியால் தாக்க, நிர்மல் முகம் சிதைந்து இறந்து விடுகிறான், அது முதல் நடக்கும் அனைத்தும் படபடப்பை கூட்டுகின்றன, இடியாப்ப சிக்கலாகின்றன, ஆப்பசைத்த குரங்கு போலாகின்றன.  

சடுதியில் நிகழ்ந்த கொலை மற்றொரு கொலையைக் கேட்கிறது, கொலையை மற்றொரு கொலையால் சமண் செய்ய முடியாது என ஐவர் கடைசி வரை உணருவதில்லை, ஒரு கொலையை மறைக்க அவர்கள் இன்னொரு கொலை செய்ய ,திமு திமுவென பத்து கொலைகள் அரங்கேறிவிடுகின்றன,  கொலையை மூடி மறைக்க இறங்கும்போது நிலைமை மேலும் மோசமாகின்றன.  

இறுதியில்,இவர்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் நிர்மலின் தந்தையைக் கொன்று கொள்ளையடித்த பெரும்பணம் 9 லட்சம் ரூபாயை தானே முழுதாக  அனுபவிக்க நினைத்து நம்பிக்கை துரோகம் செய்து கொலை செய்கின்றனர், 

கடைசியில் ஐவரில் எஞ்சியிருந்த முர்கி போலீஸால் சுட்டுக்கொல்லப்படுகிறான், ஷிய்லி பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடியவள் 8 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் போலீஸில் பிடிபடுவதுடன் பாஞ்ச் நிறைகிறது. 

 பாஞ்ச் திரைப்படம் யூட்யூப் மற்றும் சில் OTTல் உள்ளது,கே கே மேனனின் அபாரமான ஆற்றல்மிக்க நடிப்பிற்காகவும் தேஜஸ்வினி கோலாபுரியின் அசாதாரணமான நடிப்பிற்காகவும் பாஞ்ச் என்றும் நினைவுகூறப்படும்.  
ஃபைட் கிளப் திரைப்படத்தில் புகழ்பெற்ற டைலர் டைர்டனாக பிராட் பிட்டை நினைவுபடுத்தும் வகையில் கேகே மேனனின் நடிப்பு அமைந்துள்ளது.  

விஷால் பரத்வாஜின் இசை இப்படத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும், 
பாஞ்ச்  பாலிவுட்டின் சீரிய முயற்சியாகும், நேர்த்தியான இயக்கத்தில் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருந்தார் அனுராக் காஷ்யப்,  பொருத்தமான ராக் இசையை திரைப்படத்திற்கு புனைந்து பயன்படுத்தி நம்பகத்தன்மை கூட்டியிருந்தார்.

திரைப்படத்தில் தரமான மூன்று பாடல்கள்  உள்ளன, ஒன்று "க்யா தின் க்யா ராத்" என்ற Bluesy பாணி இசைக்கோர்வை,1940களின் கிளாசிக் ஜாஸை நமக்கு நினைவூட்டும், 
 
Psychedelic கருப்பொருளான "து ஜா மாத்" நமக்கு Cobain மற்றும் ராக் பாணி இசைக்கோர்வையை நினைவுபடுத்தும் .

"குதா கே லியே" இது Rock on பாணி இசைக்கோர்வை.

 கே கே மேனன் "லூக்" ஆக அத்தனை குருரதையுடன் கூடிய மிடுக்கனாக  தோன்றியுள்ளார், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா  "முர்கி" கதாபாத்திரத்தில் மிகவும் ஈர்க்கிறார் , "ஜாய்" ஆக ஜாய் பெர்னாண்டஸ் ,  "பாண்டி"யாக விஜய் மவுரியா மற்றும் conniving நித்யகல்யாணி கதாபாத்திரத்தில்  தேஜஸ்வினி கோலாபுரி என அபாரமான casting கொண்டுள்ளது பாஞ்ச்.  சரத் சக்சேனா போலீஸ் இன்ஸ்பெக்டராக தனது சிறிய பாத்திரத்திலும் வசீகரிக்கிறார்.

இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு,  கன்னி முயற்சி பாஞ்ச்.முழுக்க  அவருடைய புது முயற்சி. அவரே தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பரிமளித்திருக்கிறார், Black Friday (2004), Dev.D (2009),Gulaal (2009),That Girl in Yellow Boots (2011),Gangs of Wasseypur (2012),Ugly (2014),Raman Raghav 2.0 (2016)
போன்ற தரவரிசையில் முன்னோடியான சினிமா "பாஞ்ச் " என்றால் மிகையில்லை.

ஷார்ட்ஸ் [ Shorts][2013][ஹிந்தி] அனுராக் காஷ்யப்



ஷார்ட்ஸ் திரைப்படம்   அனுராக் காஷ்யபின் தயாரிப்பில் ஐந்து புதுமுக இயக்குனர்கள் இயக்கிய ஐந்து குறும்படங்களின் தொகுப்பாகும். ஐந்து கதைகளுமே  மும்பை நகர வாழ்கையை சொல்லும் படைப்புகள். ஐந்துமே சமுதாயத்தில் பெண் எதிர்கொள்ளும் அவலத்தை சொல்லும் படைப்புகள் என்பது இவை கொண்ட ஒற்றுமையாகும்.

1.முதல் குறும்படம் இயக்குனர் ஷ்லோக் ஷர்மாவின்  சுஜாதா, இன்செஸ்ட் சகோதரன் [பெரியம்மா மகன்] காமப் பிடியில் மாட்டிக்கொண்டு சிறுவயது முதல் அவன் மிரட்டலுக்கும்,  அடிக்கும் பயந்து ஒவ்வொரு நொடியும் நடுங்கிக்கொண்டிருக்கும் இளம் பெண் சுஜாதாவின் கதை, சுஜாதாவின் தூரத்து சகோதரி புனேவுக்கு போகிறாயா? அங்கே நல்ல  வேலை வாங்கித் தருகிறேன் எனக் கேட்டும் போக மறுத்து, வாழ்க்கையை அதன் போக்கிலேயெ எதிர்கொள்ள நினைக்கிறாள்,


இப்போது 2 வருடங்களாக சகோதரனின் பார்வையிலேயே படாமல் மும்பையின் நெரிசலான ஸியோன் பகுதியில் வீடு எடுத்து தனியே இருக்கிறாள். வீட்டிலேயே பின்னால் இருக்கும் திறந்த வெளி மொட்டை மாடிப்பகுதியில் சமையல் தொழில் செய்து கேரியர் கட்டிக்கொடுத்து பஞ்சம் பிழைக்கிறாள், சமூகத்தில் பெண்ணை வேட்டையாட தயாராக இருக்கும் வல்லூறுகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறாள். இங்கும் அந்த தருதலை ஒரு மழைநாளில் மோப்பம் பிடித்து வந்தவன், இவளை மீண்டும் சித்திரவதை செய்யத் துவங்குகிறான், சம்பாத்தித்த பணத்தை திருடிக்கொள்கிறான்,

மூன்று வேளையும் ஆக்கி வைத்ததை வக்கனையாக தின்று விடுகிறான், இவளை சமையல் செய்ய விடாமல், உடலெங்கும் அவன் கைகள் ஊறுகின்றன, இவள் தூரத்து சகோதரி வெர்சோவா என்னும் பகுதியில் இருக்கும் தெரிந்த போலீஸ்காரனிடம் நீ போய் உதவி கேள் நானும் அவனிடம் சொல்கிறேன் என்கிறாள், ஆனால் அவன் இவளுக்கு உதவுவதில்லை, ஸியோன் என் சரகமல்ல, இது பெட்டி கேஸ்,தவிர உறவு முறை,அவன் அம்மாவிடம் சொல்லி கண்டிக்கச்சொல் என விட்டேத்தியாக சொல்லி அனுப்புகிறான்.

அன்றும் அதே போல வாடிக்கையாளருக்கு ஆக்கி பூட்டி வைத்த டிஃபன் கேரியரை திறந்து உண்ணத் துவங்கியவனை,பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த சுஜாதா என்ன செய்தாள்? என்பது தான் மீதிக் கதை,பெண்கள் என்று துணிகிறார்களோ? அன்று தான் அவர்களின் மீதான வன்முறை ஓயும், என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உளமாற சொல்லி வருகிறார் அனுராக் காஷ்யப் , ஹ்யூமா குரேஷி தான் இதில் சுஜாதா, ஐந்தில் எனக்கு மிகவும் பிடித்த கதை.

ஹ்யூமா மிகத்தேர்ந்த நடிகை, உழைத்து கண்ணியமாக வாழ எண்ணும் கதாபாத்திரம், மனுஷி அசத்தியிருக்கிறார். ஒரு காட்சியில் அவரின் சகோதரிக்கு குதிகால் மஸாஜ் செய்யும் காட்சி, எந்த ஒரு நடிகையும் செய்ய யோசிக்கும் ஒரு காட்சி அது, ஹ்யூமா குரேஷி தன் பற்கலால் அவரின் சகோதரியின் குதிகாலை அழுந்தக் கவ்வி ஒத்தடம் கொடுக்கிறார்,எந்த லஜ்ஜையுமில்லாமல் மிக அருமையாக செய்திருக்கிறார்,

இவர் சமையல் செய்யும் காட்சிகள் ,நன்கு தீஸீஸ் செய்து தொழில் முறை சமையல்காரி போலவே தோன்றியது சிறப்பு, ஹ்யூமா  தொளதொளவென ஒரு நைட்டி போட்டுக்கொண்டு, அதனுள்ளே சல்வார் பேண்டும் அணிந்து மேலுக்கு ஒரு துப்பட்டாவும் அணிந்தே காணப்படுகிறார்.  ஆண் வக்கிரத்தால் இளமையைக் கொன்று நடைபிணமான ஒரு கதாபாத்திரத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்  . படத்தின் வசனங்கள் ஒரே ஒரு A4 பேப்பர் தான் இருக்க வேண்டும். டே லைட்டில் எடுக்கப்பட்ட நீண்ட காட்சிகளைக் கொண்ட படம்.தேவையான இடங்களில் மட்டுமே கச்சிதமாக ஒலிக்கும் பிண்ணனி இசை, லைவ் ரிகார்டிங், மற்றும் கெரில்லா  படப்பிடிப்பு யுத்திகளை தன்னுள் கொண்ட குறும்படங்கள் இவை,


2.இரண்டாம் படமான சித்தார்த் குப்த் இயக்கிய  எபிலாக் [முடிவுரை] இது படத்துக்கு மிகவும் பொருத்தமான பெயர், மும்பையின் ஒரு மேல்தட்டு வர்க்கம் வசிக்கும் டூப்ளே ஃப்ளாட் ஒன்றில் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் தம்பதிகள், உறவு கசந்துவிட்ட பின்னரும் பிரியாமல் வாழ்கின்றனர், காதலனுக்கு  ஈகோ பிரிவை அவள் முதலில் சொல்லட்டும் என்றிருக்கிறான், அவளிடம் முகம் கொடுத்தே பேசுவதில்லை, அவள் பேசினாலும் பதில் பேசுவதில்லை, காதலிக்கு அவன் மீது கண்மூடித்தனமான பொசஸிவ்னெஸ் , அவன் விலக விலக  சீண்டிக்கொண்டே இருக்கிறாள்,

அடி வாங்கினாலும் மீண்டும் சீண்டுகிறாள்,அவனின் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து கிறுக்குத்தனங்கள் செய்கிறாள்,உதாரணத்துக்கு அவன் சட்டை மாட்ட வார்ட்ரோபை திறந்தால் இவள் அத்தனை துணிகளையும் அள்ளி பக்கெட் தண்ணீரில் அழுத்தி ஊறவைக்கிறாள்,அவன் சிகரட் பற்ற வைக்க எண்ணிணால் அவள் ஊதி அணைக்கிறாள், இப்படி தீப்பெட்டியே காலியாகிவிட, அவள் இப்போது லைட்டரால் பற்ற வைக்க வர அவன் விலகிப் போகிறான், அவன் சிறுநீர் கழிக்கையில் அவன் முதுகில் குதிரை ஏறுகிறாள்.அவன் சொக்கட்டான் ஆடுகையில் காய்களை கலைக்கிறாள். அவள் அவனின் ஸ்காட்ச் பாட்டில்களை உடைக்கிறாள், படங்களை நொறுக்குகிறாள்,கிடாரை அடித்து உடைக்கிறாள். படம் 20 நிமிடங்கள் நீளம் அதில் ஒரு வசனமும் கிடையாது.

காதலன் காதலியிடம் மட்டுமல்ல கட்டிடத்தில் தன் முன் எதிர்ப்படும் ஒரு வாட்ச்மேனிடம் கூட  பேசுவதில்லை, பேசாநோய் கொண்டிருப்பான் போல, கடைசியில் தனிமை வாட்டிய காதலி என்னவாகிறாள்? என்று பாருங்கள்.இது குறும்படத்தில் வித்தியாசமான முயற்சி, இது கொண்டிருக்கும் கேமரா கோணங்கள், காதலியாக ரிச்சா சட்டா, அவருக்காக ஒரு பெண்ணின் மன கோபம்,பிடிவாதம்,மன அழுத்தம்,விரக்தி போன்றவற்றை இதைவிட அருமையாக யாரும் சொல்லிவிட முடியாது,ஒரு காட்சியில் காதலனிடம் மல்லுக்கட்டும் ரிச்சாவின் பேண்டி கழண்டு விழுகிறது, பாலிவுட் படத்தில் இப்படியெல்லாம் காட்சி வைக்க ஆரம்பித்துவிட்டனர் என எண்ணி எண்ணி வியக்கிறேன். ஒரு காட்சியில் பெரிய க்ளாக் ஒர்க் ஆரஞ்ச் படப் போஸ்டர் கூட இதில் கனென்ஷனாக வருகிறது.

3.மூன்றாவதாக மெஹ்ஃபுஸ்[உருதுவில் பாதுகாப்பு] ,நம் அபிமான நவாசுதீன் சித்திக்கி இதில் சுடுகாட்டின் வெட்டியான்,பலனே எதிர்பாராமல் கடமையைச் செய்கிறார்,சவக்கிடங்கில் இருந்து ஓய்வே இல்லாமல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிணங்கள் சிப்பந்திகளால் இவரிடம் எரியூட்ட தரப்படுகின்றன, 2013ன் முசாஃபராபாத் ,1984ன் கிழக்கு தில்லி,1984ஆம் ஆண்டின் போபால், 1993ஆம் ஆண்டின் கலவரமும்பை போன்றவை என் நினைவுக்கு வந்து போனது, அரசே கலவரக்காரர்களை அடக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒரு அவலத்தை என்னவென்று சொல்ல?,


ஒரு நாள் தெருவில் வைத்து அழகிய பெண்ணைப் பார்க்கிறார்,உடன் அவளின் காதலனும் இருக்கிறான், இருவரும் வீட்டை விட்டு ஓடிச் செல்ல திட்டமிடுகின்றனர் எனப் புரிகிறது, அவளை விழுங்குது போல சித்தன் பார்வை பார்க்கிறார் இவர், அவள் இவரின் தோற்றத்தால் அருவருப்படைந்து தலையை திருப்பிக்கொள்கிறாள்,நண்பன் சகிதமாக காரில் புறப்படுகின்றனர், மறுநாள் முதல் வேலையாக பக்கத்தில் துவைக்கும் பெண்ணிடம் துணி சோப்பு வாங்கி தன் முகத்தை நன்கு துணிசோப்பு போட்டு தேய்த்துக் கழுவுகிறார் சித்தன். அறைக்கு வந்தவர் கண்ணாடி விழுந்த கண்ணாடி ஃப்ரேமை அணிந்து கொண்டு,முகம் பார்க்கும் கண்ணாடியை தேடி எடுத்து முகம் பார்க்கிறார், முகம் தெளிவாயுள்ளது, ஆனால் பற்கள் கறை படிந்துள்ளதை பார்க்கிறார், தன் முகம் தனக்கே சகிக்கவில்லை என்றிருக்கிறார்.

அன்றும் மினி வேனில் எரியூட்ட இரண்டு பிணப் பொதிகள் தரப்பட, மண்ணெண்ணெய் தீர்ந்து போய் விட்டதாகவும்,வாங்கித் தரும்படியும் கேட்கிறார், அவர்கள் நன்றாக சிரித்து விட்டு மண்ணெண்ணெயெல்லாம் எதற்கு? நீயே துண்டு போட்டு சாப்பிடலாமே? என லந்து செய்கின்றனர். இருந்தும் கடமை தவறாதவர், மண் வெட்டியால் கடினமான மண்ணில் குழி பறிக்கிறார். தன்னிடம் வரும் பிணங்களை அதுவரை பிரித்துப் பார்க்காதவர்,முதல் முறையாக ஒரு பொதியைப் பிரித்துப்பார்க்க அது ஒரு இளைஞன் பிணம், அவனை நேற்று இரவு பார்த்தது நினைவுக்கு வர ,அவனின் ஷூக்களையும் பார்த்து உறுதி செய்கிறார், அவனே தான், மற்றொரு பிணத்தை வேகமாகப் பிரிக்க, நேற்று பார்த்த அந்த அழகிய இளம்பெண், அவளின் அழகிய ஹேர் க்ளிப் பார்த்து உறுதி செய்கிறார்,

 ஊரே பற்றி எரியும் போதும் கூட கௌரவக் கொலைகள் முன்னெப்போழுதும் போலவே நடப்பதை நாம் இதன்மூலம் அறிகிறோம், இப்படி அனாதையாக வீதியில் சாக விட்டாலும் விடுவோம், விரும்பியவனோடு பெண்ணை வாழவிடமாட்டோம் என்றிருக்கும் சமுதாயத்தை மௌனமாக  நக்கல் செய்கிறது படம்.  சவக்குழிக்கு அருகே அவளைக் கிடத்தி அவள் அருகே இவரும் படுத்துக்கொள்கிறார், ஆதூரமாக அவளை அணைத்தும் கொள்கிறார், இப்போது அவள் இவரை தள்ளவில்லை. இந்தப் படமும் 20 நிமிடங்கள் நீளம், இரவுக்காட்சிகளில் கேமரா புகுந்து விளையாடுகிறது, கேங்ஸ் ஆஃப் வாஸிபூரீல் நடித்த ஏனைய நடிகர்கள் இந்த ஐந்து குறும்படங்களிலுமே தோன்றியுள்ளனர் என்பதும் கூடுதல் சிறப்பு.

 4,AUDACITY [ஆடாசிட்டி] [தில்]  அனிர்பின் ராய் இயக்கிய குறும்படம், மும்பையில் கொல்கத்தா குடும்பங்கள் வசிக்கும்  அடுக்குமாடிக் குடியிருப்பில்  நடக்கும் கதை, கணவன் குடிகாரன்,மனைவி இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்டவள், தூங்க அரும்பாடு படுகிறவள் தூக்க மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள், இவர்களுக்கு ஒரு பதின்ம வயது மகள் எந்நேரமும் அமெரிக்க இசை கேட்பதை விரும்புகிறாள்,பள்ளிப் பாடம் அவளுக்கு கசக்கிறது, குடும்பத்தலைவர் தினமும் வேலையை விட்டு வந்ததும் குடிக்க அமர்ந்து விடுகிறார்,

கஜல் இசை கசிந்து கொண்டே இருகிறது, மனைவியின் நிழல் கூட இவர் மீது படுவதை  விரும்பவில்லை, அவளுடன் பேசுவதையே கௌரவக் குறைச்சலாக எண்ணுகிறார், ஒவ்வொரு மாலையும் அவரின்  அண்டை அயலார் நண்பர்கள், ஒவ்வொருவராக பெல் அடித்து உள்ளே வந்து அவருடன் தனியறையில் குடித்துக்கொண்டே நடுநிசி வரை ரம்மி ஆடுகின்றனர், மனைவி தடையின்றி குடிப்பதற்கு தன்னால் முடிந்த வரை சைட் டிஷ் சமைத்து தீரத்தீர வைத்துக்கொண்டே இருக்கிறாள்,கணவர் மனைவியை மதிக்காத நன்றி கெட்ட ஒரு பிறவி எனப் புரிகிறது, மகள் இப்படிப்பட்ட மூர்க்கமான சுயநலமி அப்பாவை திருத்துவதற்கு தன் அமெரிக்க இசையையே லாவகமாக பயன்படுத்தும் அருமையான கதை இது. கொல்கத்தா வாசிகளின் சமூகம்,பழக்க வழக்கங்கள் இக்குறும்படத்தில் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

5,ஷோர் [Shor]-நீரஜ் கைவான் இயக்கிய குறும்படம், காசியில் இருந்து மும்பையின் தாராவி போன்ற பெரிய சேரிக்குள் பஞ்சம் பிழைக்க வந்த கணவன் மனைவிக்குள் நடக்கும் மிக யதார்த்தமான கதை,கணவன் வேலை செய்த மில்லை மூடிவிட வேலையில்லா கணவனை எதுவுமே சொல்லாத உத்தம மனைவி, அவனை எதிர்த்து பேசுவதோ? அவன்  இயலாமையை குத்திக்காட்டும் குணமோ அற்றவள், வேலைக்கு போவதையே விரும்பாதவள், கணவன், மாமியார்,4 வயது மகன் சாப்பாடு,வீட்டு வாடகை போன்றவற்றை சமாளிக்க வேலைக்கு சேர்ந்து ஓவர்டைம் பார்த்து கடுமையாக உழைக்கிறாள்,

கணவனுக்கு மொபைலுக்கு டாப் அப் கூட அவள் தான் செய்கிறாள், மாமியார் இவள் தங்கள் உயர்ந்த சாதியின் ஆச்சாரத்தை மீறுகிறாள் என அனுதினமும் மகனிடம் புகார் வாசிக்கிறாள்,அம்மாவின் பேச்சை மீறாத மகன் மனைவியை விஷ சொற்களால் துளைக்கிறான்,அம்மா வீட்டில் ஒரு பாத்திரத்தைக் கூட நகர்த்தாதவள், வீட்டிலேயே பணம் திருடி புகையிலை, லாகிரி வஸ்துக்கள் வாங்குபவள் என மனைவி சொல்லும் எதையும் நம்ப தயாரில்லை,ஆண் என்னும் தடித்திமிரில் மனைவி ஆக்கியதை உண்டு விட்டு அவளையே வார்த்தையால் அடிக்கிறான்,

அன்றும் அப்படி அம்மா மூட்டி விட,அவள் வேலைக்கு சீக்கிரமே கிளம்பி ரயிலில் செல்கையில் செல் போனில் அழைத்து அவளின் கற்பு நெறியை சந்தேகித்தும்,மிக அசிங்கமான சொற்கள் சொல்லியும் அவளை வீழ்த்துகிறான்,இறுதியாக ஆண் என்னும் திமிரில் அவளை விவாகரத்து செய்யப் போகிறேன்,உன் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு காசிக்கே போ என மிரட்டுகிறான்,ரயிலில் மிகவும் அழது அனத்தியவள் ,அவன் மீண்டும் செல் போனில் அழைக்க பொறுத்தது போதும் என வெடிக்கிறாள்,தான் வீட்டுக்குச் சென்று மகனையும் கூட்டிக்கொண்டு வெளியேறப்போகிறேன்,

உன் தயவு எனக்கு போதும்,நான் சமூகத்தில் தனியே வாழ்ந்துகொள்கிறேன்,நீ ஆட்டோ வாங்க கடனுக்கு முன்பணத்துக்காக அலைகிறாய் எனத் தெரியும்,அதற்கு 12000 ரூபாய் சேர்த்து வைத்துள்ளேன்,அதை பக்கத்து வீட்டில் சென்று வாங்கிக்கொள், நான் இனி உன்னை பார்க்கப் போவதில்லை என்கிறாள். இவன் வெலவெலத்தவன்,கண் இருண்டுவிட்டது,உயிரே போய்விடுவது போன்ற நிலை, இனி என்ன ஆகும் எனப்பாருங்கள்?,கணவன் மனைவிக்குள்ளான ஊடல் நீண்ட காலம் நீடிப்பது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்னும் உண்மையை மிக அருமையாக விளக்குகிறது படம், இதில் மனைவியாக வந்த ரத்னபாலி பட்டாசார்ஜி எக்ஸலண்ட் பெர்ஃபார்மர், அனாசயமாக நடிக்கிறார், இது இவருக்கு முதல் திரைப்படம்,இவர் ஏற்கனவே மும்பை காலிங் என்னும் டீவி சீரீஸ்களில் தோன்றியுள்ளார்.

படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருமே நாம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கக் கூடிய மாந்தர்களே,தலைசிறந்த நடிகர்களின் பங்களிப்பு,மிக அருமையான படைப்பாக மிளிர்கிறது. தோபிகாட் , மும்பை மெரி ஜான் போன்றே ரத்தமும் சதையுமான ஒரு படைப்பு. படம் டாரண்டில் கிடைக்கிறது,  சப்டைட்டிலுடன்  யூட்யூபில் கிடைக்கிறது,காபி ரைட் பிரச்சனைகளுக்கு பயந்து அதை யாரேனும் அழிக்கும் முன்னர்  பார்த்து விடுங்கள்.குறும்படங்கள் எடுப்பவர்கள் பேணவேண்டிய தரத்துக்காக அவசியம் பார்க்க வேண்டிய ஸ்டடி மெட்டீரியல் இப்படம்.

ப்ளாக் ஃப்ரைடே ब्लैक फ्राईडे [ஹிந்தி][Black Friday] [2004]


ப்ளாக் ஃப்ரைடே படம் இன்று தான் சப்டைட்டிலோடு மறுமுறை பார்த்தேன், அட்டகாசமான ஒரு டாகுமெண்டரி+இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், எழுத்தாளர் எஸ்.ஹூசைன் சைதி எழுதிய ப்ளாக் ஃப்ரைடே என்ற புத்தகத்தை தழுவி மிட் டே பத்திரிகை தயாரித்து வெளியிட்டுள்ளனர். தேவ்.டி கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் புகழ்- அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கிறார். எந்தவிதமான காம்ப்ரமைசோ, அரசியல் கட்சிகளுக்கு சொம்போ இல்லாமல் எடுக்கப்பட்ட படம். மிகுந்த நெஞ்சுரத்துடன் கருப்பு வெள்ளி நிகழ மூல காரணிகளான அரசியல்வாதிகள் அத்வானி,பால்தாக்கரே போன்றோர் பெயர்களை படத்தின் அநேக காட்சிகளில் ம்யூட் செய்யாமல் சொன்ன ஒரே படம், புகழ் பெற்ற உலக சினிமாவான ’The Battle of Algiers" க்கு நிகரான ஓர் இந்திய சினிமா ஆனால் இப்படம் வெளியான போது எத்தனை பேர் பார்த்திருப்பார்?என்னும் கேள்வி தொக்கி நிற்கிறது.

இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கி அதிகாரபூர்வமாக வெளியான முதல் படம்,அவரின் முந்தைய வெளிவராத படமான பாஞ்ச் தந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்காமல் மீண்டும் இத்தனை வீர்யமான கதைக்களனில் இறங்கியதற்கே நன்றி சொல்ல வேண்டும். படம் இயக்குகையில் வந்த எத்தகைய மிரட்டலுக்கும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை. படத்தை குவெண்டின் படங்களில் வருவது போல அழகாக அத்யாயமாக ஒவ்வொரு கட்டத்தையும் பிரித்து வழங்கியிருக்கிறார், நாம் இர்ரிவர்சிபிள் படம் பார்த்திருப்போம்,

 அதே போலவே சம்பவம் நடக்கும் காலம் துவங்கி அதன் பின் விளைவுகள், விசாரணைகள், பின்னர் அதன் ஊற்றுக்கண் என்று மிக அற்புதமாக நான் லினியரில் சொன்னப்படம்.படத்தின் ஒளிப்பதிவு நம் ஊர் நட்ராஜ் சுப்ரமணியம்,மிக அற்புதமான ஒளிப்பதிவு.இதை திரையரங்கில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை என நினைக்க வைத்தது,அந்த சேஸிங் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் மேட்ச் செய்து இழைத்த இடங்கள்,மிகவும் தரமாக இருந்தது,பல காட்சிகள் வெறும் கண்களுக்கும்,முகத்துக்கும்,கால்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தன.

மும்பாய்,பம்பாய் என்று அழைக்கப்பட்டபோது நடந்த மனித குலத்தின் மிக அசிங்கமான செயல் கருப்பு வெள்ளி-12 மார்ச் 1993. அதற்கு 4 நாட்களுக்கு முன்பே டைகர் மேமன் என்னும் அயோக்கியனால் உருவாக்கப்பட்ட போராளிகளில்  ஒருவன் போலீசிடம் மாட்டிக் கொள்வதில் இருந்து படம் துவங்குகிறது, இன்னும் 3 நாட்களில் மும்பையின் பல முக்கிய இடங்களில் ஆர்டிஎக்ஸ் வகை டைம் பாம்கள் வெடிக்கப் போகின்றன என்ற தகவலை போலீசார் கேட்காமலேயே கக்குகிறான். அவனை மும்பை போலீசார் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேயில்லை,எள்ளி நகையாடி மேலும் அடித்து துவைக்கின்றனர்.

கருப்பு வெள்ளி-12 மார்ச் 1993,அன்றைய தினம் மதியம் 1:30முதல் 3:40 மணியிடையே ஸாவேரி பஸார், ப்ளாசா சினிமா,சென்சுரி பஸார்,கதா பஸார், ஸீராக் ஹோட்டல்,சாஹர் ஏர்போர்ட்,ஏர் இந்தியா பில்டிங்,ஜூஹு செண்டார் ஹோட்டல்,ஒர்லி,பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்,பாஸ்போர்ட் அலுவலகம் , என 11 இடங்களில், ரிசர்ச் டெவலப்டு எக்ஸ்ப்ளோசிவ் என அழைக்கப்படும் RDX டைம் பாம்கள் மேற்சொன்ன 11 இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஸ்கூட்டர்களில் இருந்து பயங்கர சத்தம் மற்றும் தீஜுவாலையுடன்  வெடித்தன, மாஹிம் மீனவர் காலனி குடியிருப்பு பகுதியில் மட்டும் ஸ்பெஷலாக 10க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த கையெறி குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டன, ஆக மொத்தம் உயிரிழப்பு அரசின் கணக்குப்படி 257, படுகாயமடைந்து கைகால்கள் இழந்தோர் எண்ணிக்கை சுமார் 713.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 காங்கிரஸ் -நர்சிம்மராவ் ஆட்சிக்காலத்தில், அயோத்தியில் 400 வருடங்களுக்கும் மேலாய் இருந்த பாபர் மசூதி சுமார் 6முதல் 8மாத கரசேவகர்களின் தீவிர திட்டத்தினாலும், அத்வானி போன்ற அரசியல்வாதிகளின் தூண்டுதலாலும் தரைமட்டமானது,நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்த மாபெரும் தலைகுனிவு அது, அதன் பின்னர்  இந்து முஸ்லிம் மதக்கலவரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறியது, அதில் மும்பையில் 1992 டிசம்பரில் நடந்த முஸ்லீம்களின் வன்முறையில் சுமார் 275 பேர் பலியாயினர்,

அதற்கு பதில் அளிக்கும் வண்ணம் பால்தாக்கரேவின் சிவசேனா கட்டவிழ்த்த கலவரமும் மனித குலத்திற்கே வெட்கக்கேடான செயல்,அதில் சிவசேனா நடத்திய கோர தாக்குதலில் மாஹிம் பகுதியைசேர்ந்த சுமார் 575பேர் பலியாயினர்,நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தெருக்களுக்கு இழுத்து வந்து வன்புணர்வு செய்யப்பட்டனர். போலீசாரும் சிவசேனாவுடன் கைகோர்த்து கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்களை சுட்டுக்கொன்றனர். சரத் பவார் தலைமையிலான மஹாராஷ்டிர அரசு இப்படுகொலைகளை கண்டுகொள்ளவில்லை,

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் ஐ எஸ் ஐ ரத்தத்துக்கு ரத்தம் என்னும் பழிவாங்கலுக்கு திட்டமிடுகிறது,மாஹிமில் நடந்த கலவரத்தில் அங்கே கள்ளக்கடத்தல், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வந்த டைகர் மேமனின்[பவன் மல்ஹோத்ரா] அலுவலகம் தீக்கிறையாக்கப்படுகிறது, அடிப்படையிலேயே டைகர் மேமன் மிகவும் மூர்க்கன்.தன் கார் கண்ணாடியை கிரிக்கட் ஆடி உடைத்தான் என்ற காரணத்துக்காக சிறுவனையே கதிகலங்க அடிக்கும் ஒரு மேனியாக்,

ஒரே இரவில் அவனின் அலுவலகம் தீக்கிரையான கோபத்தில் ஐஎஸ் ஐ மற்றும் மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பு குழுவுடன் ஐக்கியமாகிறான்,பழிக்கு பழி வாங்க மிகுந்த பொருட்செலவு ஆகும் என்று அங்கே வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது,அதற்கு யார் யார் ஸ்பான்சர் என்று தெரிவு செய்கிறான்,டைகர் மேமனுக்கு துபாயில் நிறைய கள்ளக்கடத்தல், மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரங்களும்,அலுவலகங்களும்,நிறைய குடியிருப்பு வீடுகளும் உள்ளன,அங்கே ஒரு பெரும்புள்ளி,

மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பில் முதலில் அத்வானியையும்,பால்தாக்கரேவையும் டைம்பாம் வைத்து சிதறடித்துக்கொல்லவே திட்டம் தீட்டப்படுகிறது,ஆனால் டைகர் மேமன் அதை மட்டும் விரும்பவில்லை, இந்த அரசியல்வாதிகள் கொல்லப்படுதல் மிகவும் ஆபத்தானது, அது அவர்களுக்கு தேசத்தியாகிகள் என்னும் பட்டத்தை பெற்றுத் தந்துவிடும், அது கூடாது, இசுலாமியர்களின் உயிர்களுக்காகவும், பறிபோன சகோதரிகளின் கற்புக்காகவும் ஒவ்வொரு இந்துவும் தண்டிக்கப்படவேண்டும், மும்பை பற்றி எரிய வேண்டும் என்கிறான், அதற்கு மும்பையின் மிகப்பெரிய கடத்தல்காரனான தாவூத் இப்ராஹிமுடன் மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது,

இதற்கு நான் ஏன் உதவ வேண்டும் என இருமாந்திருந்தவருக்கு உடனடி அதிர்ச்சியாக ஐஎஸ் ஐ அமைப்பால் இந்திய பாகிஸ்தான் கடல் எல்லையில் வைத்து தாவூத் இப்ராஹீமின் கடத்தல் வெள்ளிக்கட்டிகள் திருடப்படுகிறது , அவன் ஆட்களும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர், இத் தகவலை அவனுக்கு தொலைபேசியிலும் தெரிவிக்கின்றனர்,அதே நேரத்தில் அவனுக்கு ஒரு குரியரும் வருகின்றது, அதை பிரித்துப் பார்க்கிறான் தாவூத், அதில் மாஹிம் பகுதியில் மதக்கலவரத்தில் வன்புணர்ந்து கொல்லப்பட்ட இசுலாமிய சகோதரிகளின் உடைந்த வளையல் துண்டுகள்,ஒரு வெற்றிலை பெட்டி போன்ற ஒன்றில் அடைக்கப்பட்டு இருக்கின்றன, கூடவே ஒரு கடிதத்தில் இதற்கு பழிவாங்க நீ என்ன துரும்பை கிள்ளிப்போடப்போகிறாய்?!!! என்று எழுதியிருக்கிறது.

இப்போது தாவூத் இப்ரஹீமின் நேரடி தலையீட்டால் டைகர் மேமனுக்கு மும்பையின் திறக்காத கதவுகள் கூட மரியாதையோடு திறக்கின்றன, இப்போது கருப்பு சோப்பு என்ற பேரில் ஆர்டிஎக்ஸ் கட்டிகள் டன் கணக்காக மும்பையின் ஜனசந்தடி மிக்க ஒரு கட்டிட நிறுவனத்துக்கு சொந்தமான கோடவுனிலும், மற்றொரு குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிலும் கருவாட்டுக்கூடைகளுக்கிடையே அடுக்கப்படுகின்றன, இந்த கடத்தல் இறக்குமதியில் போலீசாருக்கும், சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் பெரும்பணம் கைமாறுகிறது, தாவூத் இப்ராஷீமை அன்னதாதாவாக கருதி சலாம் போடும் அதிகாரிகள் மும்பையில் மிக அதிகம்.

இப்போது டைகர் மேமன் துபாயில் வேலை வாங்கித்தருவதாக நெருக்கமான கூட்டாளிகளிடம் சொல்லி நம்பகமான மாஹிம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி முஸ்லிம் இளைஞர்களை தான் நடத்தும் இரவுப் பார்ட்டி ஒன்றிற்கு அழைக்கிறான்.அங்கே கூடும் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களிடம் தனித்தனியாக நேர்முக மூளைச்சலவை செய்கிறான் டைகர் மேமன்,கூடவே மதரீதியான வாசகங்களை மூளைச்சலவைக்கு தூவி மெருகேற்றுகிறான், இப்போது அனைவரையும் அறைக்குள் கூட்டி முழக்கமிடுகிறான், மும்பைக்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்கிறான்,

இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படும் நம்மை எந்த இந்துவும் இனி கண்ணைப்பார்த்து பேச பயப்படவேண்டும், நம் பெயரைக்கேட்டாலே வேட்டியில் மூத்திரம் இருக்க வேண்டும் என்கிறான், இந்த ஜிஹாத்தைப் பற்றி வீட்டார் உட்பட, யாரிடமும் மூச்சு விடக்கூடாது ,அப்படி வாயை விட்டால் முதலில் அவன் குடும்பத்தார் கொல்லப்படுவர்,பின்னர் துரோகிகள் கொல்லப்படுவர் என்கிறான், அனைவரிடமும் சத்தியமும் வாங்குகிறான், அடுத்த ஓரிரு  வாரங்களிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிகாதிகள் அனைவரின் பாஸ்போர்டையும் பெற்றுக் கொண்டு துபாய்க்குள் அழைக்கிறான் டைகர் மேமன்.
அங்கேயிருந்து பாகிஸ்தானுக்குள் எந்தவிதமான விசா கெடுபிடிகள் இல்லாமலே நுழையும் ஜிகாதிகளுக்கு மேலும் மூளைச்சலவை செய்யப்படுகிறது, ஓட்டம்,துப்பாக்கி சுடுதல்,ஆர்டிஎக்ஸ் கட்டியுடன் டெட்டனேட்டரை இணைத்தல்,டைமரை உயிரூட்டுதல் போன்ற இன்றியமையாத பயிற்சிகள் அளிக்கப்பட்டு மீண்டும் துபாய் அழைக்கப்பட்டு பின்னர் மும்பைக்குள் கூட்டி வரப்படுகின்றனர்,ஜிகாதிகளின் பாஸ்போர்டை யாருக்கும் திரும்பத் தரவில்லை டைகர் மேமன்,யாரும் அறியா வண்ணம் அவற்றை தீக்கிறையாக்குகிறான்,

இப்போது துரித கதியில் மாஹிம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெகு அருகாமையில் இருக்கும்  ஒரு கட்டிடத்தின் பாதுகாப்பான பேஸ்மெண்டில் வைத்து ஜிகாத்திகளின் தீவிரமான உழைப்பில் 13க்கும் மேற்பட்ட ஆர்டிஎக்ஸ் டைம் பாம்கள் இரவு பகலாக செய்யப்படுகின்றன,அவற்றை திருடிக்கொண்டு வரப்பட்ட மாருதி கார்,வேன்கள்,ஸ்கூட்டர்களில் நிறுவுகின்றனர்,

அவற்றை தலா நான்கு பேர்களாக பிரித்து மும்பையின் மிகுந்த ஜனநெரிசல் பகுதிகளான ,ஸாவேரி பஸார்,ப்ளாசா சினிமா,சென்சுரி பஸார்,கதா பஸார்,ஸீராக் ஹோட்டல்,சாஹர் ஏர்போர்ட்,ஏர் இந்தியா பில்டிங்,ஜூஹு செண்டார் ஹோட்டல்,ஒர்லி,பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்,பாஸ்போர்ட் அலுவலகம் என சந்தேகத்துக்கு இடமின்றி நிறுத்திவிடுகின்றனர்.அது ஒன்றன் பின் ஒன்றாக மதியம் 1-30 மணி முதல் 3-40 மணி வரை வெடிக்க ஆரம்பிக்கின்றன,அதில் 12ஆவதாக மந்த்ராலயம் கட்டிடத்தை தகர்க்க கொண்டு போன சிகப்பு மாருதி கார் டைகர் மேமனின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது,இந்த காரை டைகர் மேமன் பயன் படுத்தாமல் விட்டிருந்தால் மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமான டைகர் மேமனையும்,அவன் ஜிகாதிக்களையும்,தாவூத்தையும் போலீசாரால் நெருங்கியே இருக்க முடியாது என்பது இவ்வழக்கை விசாரித்த போலீசாரின் பலமான கணிப்பு,

அந்த மாருதி வேனில் நிறுவப்பட்ட 50கிலோ ஆர்டிஎக்ஸ் அன்று வெடித்திருந்தால் குறைந்தது 200 பேர் பலியாகியிருக்கக்கூடும்,ஜிகாதிகள் நால்வரில் ஒருவன் ,காரை வெடிக்கவேண்டி பார்க் செய்ய மந்த்ராலயம் செல்லும் வழியிலேயே டெட்டனேட்டரை சோதிக்க அந்த பாரமானி,வெள்ளை சிகப்பு என ஏறுமுகமாயிருக்கிறது, இவர்களில் டெட்டனேட்டரில் திறம்பட தேர்ந்த ஒரு எலக்ட்ரீஷியன் மிகவும் பயந்தவன், காரை நிறுத்து ,டெட்டனேட்டரில் பழுது, நமக்கு ஆபத்து என்று கத்துகிறான், அந்நேரம் பார்த்து இவர்களின் மற்றொரு குழு பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிறுத்திவிட்டு வந்த காரில் இருந்த டைம் பாம் வெடித்து சிதற,ஒரு குண்டு வெடிப்பு எப்படி இருக்கும்,என்பதை நிஜமாக கண்ணுறுகின்றனர்,
அருகே ஒரு வழிப்போக்கனின் பாதம் மட்டும் பெயர்ந்து வந்து விழுகிறது, சில்லிடுகிறது,உலகே ஒரு கனம் நின்றிருக்க,அந்த நால்வரில் ஒருவன் மட்டும் கத்துகிறான், போதும்,ஆணியே புடுங்க வேண்டாம் போதும், வண்டியை ஓரம் கட்டு டாக்ஸி பிடி,நாம் வெளியேறுவோம் என்று வெளியேறுகின்றனர். அதே நேரத்தில் மற்றொரு காரில் செல்லும் நால்வர் மாஹிம் மீனவர்காலனி குடியிருப்பு பகுதியில் இறங்குகின்றனர், அங்கே 10க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த கையெறி குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீக்கிறையாக்குகின்றனர், இது டைகர் மேமனின் அலுவலகம் எரிக்கப்பட காரணமாக இருந்த மாஹிம்வாசிகளுக்கு டைகர் மேமனின் அன்புப்பரிசு என்று நாம் அறிய வருகிறோம்.

மறுநாள் அந்த சிகப்பு மாருதி வேன் அனாதையாக நிற்பதை உணர்ந்த ஒரு முதியவர் போலீசாருக்கு சொல்ல,பாம் ஸ்குவாடுகள் ஆர்டிஎக்ஸை கைப்பற்றுகின்றனர். அங்கே தான் அல்லா நல்லவர் வசம் தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை போலீசாருக்கு துளிர்விடுகிறது, எப்பேற்பட்ட ஒரு க்ளூ அது? இதை போலீஸ் அதிகாரி ராகேஷ் மரியா [கேகே மேனன்] பாதுஷா கான் என்னும் விசாரணை கைதி இவரிடம் தங்கள் ஜிகாத் வெற்றி பெற்றது குறித்து பெருமையுடன் பேசுகையில் பதிலடியாகக் கொடுப்பார், அல்லா ஜிகாத்தை எப்போதும் விரும்பியதில்லை, தனி நபர் விரோதத்துக்காக ஒட்டு மொத்த மதத்தையே அழிக்க நினைப்பவருக்கு அல்லா துணையிருப்பதில்லை, அதனால் தான் அவர் அந்த சிகப்பு மாருதி வேனை வெடிக்காமல் செய்துவிட்டார், என்று உரைக்கும் இடம் மிக அருமையான ஒன்று.

குண்டு வெடிப்புகளுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே டைகர் மேமன் குடும்பத்தாருடன் துபாய்க்கு சென்றுவிடுகிறான், அங்கிருந்த படியே ஜிகாதிகள் ஒவ்வொருவரையும் அடுத்தடுத்து இயக்குகிறான், ஒவ்வொரு ஜிகாதியையும் முதலில் ராம்பூர், ராஜஸ்தானின் டோங், அங்கிருந்து ஜெய்பூர், அங்கிருந்து கொல்கத்தா என்று போனிலேயே கட்டளையிட்டு இடம் மாற்றுகிறான், ஒவ்வொருவரும் சேர்ந்து தங்காமல் பிரிந்து தங்க கட்டளையிடுகிறான், அதில் போலீசார் எப்படி ஒவ்வொருவரையும் சுற்றி வளைத்தனர் என்று நமக்கு காட்ட உதாரணமாக பாதுஷா கான் [ஆதித்ய ஸ்ரீவத்சவா] என்பவனின் பின்னால் மட்டும் நாம் பயணிக்கிறோம்,

அவனுடனே அவன் கிராமமான ராம்பூர்,ராஜஸ்தானின் டோங், ஜெய்பூர், கொல்கத்தா என்று நாமும் உடன் அலைகிறோம்,ஜெய்பூரில் வைத்து சகாக்களை சந்திக்கும் அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்சியாக கிடைக்கிறது, ஜிகாதிகளுக்கு துபாயில் வேலை என்பது கனவு ,ஏமாற்று வேலை என்பது தெரிகிறது,அடுத்ததாக பங்கெடுத்த ஜிகாதிகள் ஒவ்வொருவருக்கும் வெறும் 10ஆயிரம் கூலியாக தரச்சொல்லி டைகர் மேமன் சொன்னதும் தெரிகிறது, அனாதை போல அலைகிறான், ஒவ்வொரு ஊருக்கும் போகும் போதும் இவனும் அவன் கூட்டாளியும் டைகர் மேமனுக்கு அழைக்கின்றனர், இரவோடு இரவாக இவனது கூட்டாளி இவனிடமிருக்கும் பணத்தில் பாதியை எடுத்துக்கொண்டு வேறிடம் சென்று விடுகிறான், பின்னர் கொல்கத்தாவில் சென்று முதலில் ஒரு லாட்ஜில் தங்கியவன்,பணம் கரைந்த நிலையில் வேறொரு மலிந்த லாட்ஜில் முன் பின் தெரியாத ஐவருடன் தங்குகிறான்,அப்படி ஒருநாள் போலீசாரிடம் வசமாக மாட்டுகிறான்.

போலீசார் விசாரணையின்போது  போலீசார் மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர், மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புகள் டிசிபி ராகேஷ் மரியாவை எள்ளளவும் அசைத்துவிடவில்லை, போலீசார் இப்படி 24 மணிநேரமும் எந்திரமாக உழைக்க வித்திட்ட அந்த விசாரணை கைதிகளை அடியோடு வெறுக்கிறார், அதில் நல்லவன் கெட்டவன், முஸ்லீம் இந்து என எதுவுமே பார்ப்பதில்லை, விசாரணைக் கைதிகளை விசாரிக்கையில் பலசமயம் அவர்களின் வீட்டாருமே பார்வையாளர்களாக இடம் பெற்றிருக்கின்றனர், அதில் வீட்டு பெண்டிர் பலரும் போலீசாரின் பாலியல் ரீதியான துன்புருத்துதல்களுக்கு ஆளாகின்றனர்,அங்கே பெண்களின் மார்புகளை தடவுதல்,ஆடை உரித்தல், குடும்பத்தையே கேவலப்படுத்தும் மிக அசிங்கமான வசவுகள் என ஏகப்பட்ட வக்கிரங்களுக்கு விசாரணைக் கைதிகளின் குடும்பத்தார் உள்ளாகின்றனர்,

அதில் ஒரு விசாரனை கைதியாக ராஜ்குமார் குரானா என்பவர் போலீசாரால் லாக் அப்பில் வைத்து மிகக் கொடூரமாக விசாரிக்கப்படுகிறார், அவர்  ஸ்டமக் என்னும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர், அவருடனான விசாரணையின் போது அவரின் மனைவி மகள்களிடம் போலீசார், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்கின்றனர், பெயிலில் வீட்டுக்கு திரும்பிய அவர் வீட்டாரையும் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். போலிசாரின் நான்காம் தரமான விசாரணை எத்தனை கொடூரமாயிருந்தது என்று இங்கே ஒருவர் மன தைரியம் இருப்பின் பொறுமையாகப் படிக்கலாம்.

இச்சம்பவம் மும்பை போலீசாருக்கு மிகுந்த அவப்பெயரை உண்டாக்குகிறது, பின்னர் இந்த வழக்கு விசாரணையை சடுதியில் சிபிஐ  ஏற்று விசாரிக்கின்றது, அதில் மொத்தம் 122 பேர்களைத் தவிர ஆயுதங்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஊழல் அரசு அதிகாரிகள் சுமார் 60 பேர்களின் பெயர்களும் சேர்க்கப்படுகிறது, 13 ஆண்டுகள் வழக்கு விசாரனை நடந்து 122 விசாரணைக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோர் தண்டிக்கப்படுகின்றனர், 29க்கும் மேற்பட்டோர் இன்னமும் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர், என்று எண்ட் க்ரெடிட் கார்ட் போடுகையில் சொல்கின்றனர். கடைசியாக டைகர் மேமனின் தம்பி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து சரணடைகின்றான். அங்கே அவர்கள் குடும்பம் பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாக வசிப்பதாகச் சொல்கிறான். அவனது பேட்டியும், பாகிஸ்தான் தூதுவரின் பேட்டியும் அப்படியே காட்டப் படுகின்றன.படத்தில் 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உண்டு,அதில் டைகர் மேமனாக தோன்றிய பவன் மல்ஹோத்ராவின் நடிப்பை ஒருவர் மறக்கவே முடியாது,பாலிவுட்டின் அண்டர்ரேட்டட் நடிகர், இவரின்Salim Langde Pe Mat Ro படம் தமிழில் கமல்ஹாசன் நடித்து வெளியான சத்யா கதாபாத்திரத்தை ,ஹிந்தியில் மிக அழகாக செய்திருப்பார்,பாலிவுட்டின் சோதனை முயற்சி சினிமாக்களில் இவரை நாம் பார்க்க முடியும்,

கண்ணுக்கு கண் என்னும் சித்தாந்தம் உலகையே குருடாக்கிவிடும் ["An eye for an eye will make the whole world blind." ] என்னும் காந்தியின் வாசகத்துடன் படம் முடிகிறது.அதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் இனி இது போல் அவலங்கள் நிகழாமல் தடுக்கமுடியும்

இதே போல நாம் வாழும் காலத்திலேயே நிகழ்ந்த  துக்கவரலாற்று சம்பவமான  26 நவம்பர் 2008 மும்பை தீவிரவாதத் தாக்குதலை வெளிச்சம் போட்டு காட்டிய ராம் கோபால் வர்மாவின் The Attacks of 26-11 என்னும் படமும் ஒருவர்  நிச்சயம் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்த வரை தேவ்-டி, கேங்ஸ் ஆஃப் வாசேபூரில் கிடைத்த புகழும் பெருமையும் அனுராக்கிற்கு 2007 வருடமே இப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பேன், அத்தனை நெஞ்சுரமான படம். படத்தை சப்டைட்டில் இல்லாமல் பார்ப்பது தூக்கம் வரவழைக்கும், ஒரு இழவும் புரியாது, இவன் யார்? அவன் யார்? என்று குழப்பும்,சப் டைட்டிலுடன் பார்த்தால் முக்கியமான படத்தை பார்க்கிறோம்  என்ற எண்ணம் ஆட்கொள்வதை ஒருவர் உணரலாம்.
"An eye for an eye will make the whole world blind."

- See more at: http://www.merinews.com/article/iblack-fridayi-avant-garde-rarity/124251.shtml#sthash.TIqwzmdR.dpuf

.
படத்தின் முக்கிய காட்சியின் காணொளி யூட்யூபில் இருந்து:-

சண்டே இண்டியனில் வெளிவந்த இயக்குனர் அனுராக் காஷ்யபின் பேட்டி

அருமை நண்பர்களே!!!,சண்டே இண்டியனில் வெளிவந்த இயக்குனர் அனுராக் காஷ்யபின் முக்கியமான பேட்டி, அவரின் படங்கள் உருவாகும் சூழலை, இவின் மாற்று சினிமாக்கள் உருவாக்கும் போக்கை புரிந்து  கொள்ள உதவும். 

‘‘மக்கள் ரசிக்கும்வரை முயற்சிப்பேன்" ஸ்பிரிஹா ஸ்ரீவஸ்தவா | Issue Dated: ஜூன் 10, 2012 |நன்றி சண்டே இண்டியன்

இந்திப் பட இளம் இயக்குநர் அனுராக் காஷ்யப், தன் படங்களின் நவீன அணுகுமுறைகள், கதைகள் மூலம் தூசு படிந்த இந்திய மனச்சாட்சிகளை உலுக்குபவர். அவரது புதிய படம் ‘கேங்க்ஸ் ஆப் வாசிபூர்’ வெளிவர இருக்கிறது. இந்தப் பேட்டியில் அனுராக் தன் இயக்கம், குடியிலிருந்து மீண்டது உள்ளிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

உங்களது ப்ளாக் ஃப்ரைடே, குலால், தேவ் டி அல்லது நோ ஸ்மோக்கிங் என அனைத்துப் படங்களுமே பிரச்னைகளை சமாளிப்பது குறித்த படங்கள்.விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக நீங்கள் படம் எடுக்கிறீர்களா?
இல்லை. அவை எனக்கு ஆர்வமூட்டுகின்றன. பேசத் தகுதியான பிரச்னைகளைப் பற்றி நான் படங்கள் எடுக்கிறேன். பிரம்மாண்டமான முறையில் உண்மையான வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத  ஜாலங்கள் காட்டும் சினிமாக்களை என்னால் ரசிக்க முடியும். ஆனால் என்னால் அந்த சினிமாவை எடுக்கமுடியாது. ஏனெனில் அதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் திறன் என்னிடம் இல்லை.

டிஎன்ஏ பத்திரிகை வெளியிட்ட 50 முக்கியமான இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளீர்கள். இந்த இடத்தை அடைவதற்கு உதவிய, தாக்கம் செலுத்திய நபர்களைப் பற்றி கூறுங்கள்?
ராம்கோபால் வர்மாவைக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அவர் என்னை நிறைய பாதித்திருக்கிறார். இன்னொருவர் அதிகம் வெளியில் தெரியவராத ராபர்ட் ரோட்ரிக்ஸ். அவர் தனது முதல் படத்தில் எடுத்த கதை  மிகவும் வித்தியாசமானது. அதற்கு அவர் ஆய்வக எலியாக தன்னை மாற்றி பல சோதனைகளுக்கு உள்ளாக்கிக்கொண்டார். ஒரு படத்தை தனது வழியிலேயே சுயமாக நின்றுதான் உருவாக்க வேண்டும் என்பதை அவர்தான் உணரவைத்தார். இன்னொரு பெரிய தாக்கம் திருபாய் அம்பானி. நான் அவர் கதையைப் படித்திருக்கிறேன். குரு படத்திலும் பணியாற்றினேன். அவர் எந்த உதவியும் இல்லாமல் போராடியவர். பின்வாங்காமல் இருந்தவர்.

திரைத்துறைக்கு வரும்போது உங்களுக்கும் காட்பாதர் என்று யாரும் இங்கே இல்லை. நீங்களும் கடுமையாகப் போராடியே வந்துள்ளீர்கள். உங்கள் போராட்டம் நிறைந்த வாழ்க்கையில் கடுமையான காலகட்டம் எது?
பிறர் நினைப்பதுபோல அத்தனை கடினமானதல்ல எனது போராட்டம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று உள்மனம் சொல்லிவிட்டால், நீங்கள் அதை நோக்கிச் சென்று அதைச் செய்வீர்கள். எனது போராட்டம் என்று பிறர் கூறுவதை நான் உண்மையில் போராட்டம் என்றே அழைக்கமாட்டேன். இவற்றை எல்லாம் செய்தபோது நான் குஷியையே அடைகிறேன். பாஞ்ச் படம் வெளியீட்டின்போதுதான் கடுமையான சூழ்நிலை. நான் முதலில் இயக்கிய திரைப்படமான அது வெளிவருவதற்குத் திணறியது. அதைவிட கடுமையான காலகட்டம் எதுவெனில் எனது திருமணப் பிரிவு தான்.

எல்லாமே குழப்பமாக இருந்த அந்த காலகட்டத்தில் திரைப்படக் கனவே வேண்டாம் என்று தோன்றியதா?
அந்த காலகட்டம் சற்று நீளமானது. ஆனால் எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. சினிமா செய்வதை விட்டுவிட்டு எனக்கு என்ன செய்யத் தெரியும்? இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்.
பாஞ்ச், தணிக்கைக்குழுவினரிடம் மாட்டிக்கொண்டது. ஒரு சினிமா இயக்குநராக, இதுபோன்ற ஒரு கலாசார கண்காணிப்பு அமைப்பு நமக்கு அவசியமா? ஒரு படத்தை பார்ப்பது தொடர்பாக மக்கள் தானே முடிவெடுக்கவேண்டும்?
நமது சமூக அமைப்பு மற்றும் பார்வையாளர்களிடம்தான் பிரச்னையுள்ளது என்று எண்ணுகிறேன். அது தணிக்கைத் துறையின் பிரச்னை அல்ல. தணிக்கைக் குழுவினரை நெருங்கிப் பார்த்தபோது அவர்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை உணர்ந்தேன். தணிக்கைத் துறைக்கு தன்னாட்சி கொடுக்காத அமைப்பால் அவர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர். பிராணிகள் நல வாரியம், தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் அமைப்புகள், சுகாதார அமைச்சகம் என எல்லா இடத்திலிருந்தும் அவர்களுக்கு அழுத்தங்கள் உள்ளன. தணிக்கைத் துறையை யாரும் சுதந்தரமாகப் பணியாற்ற விடுவதில்லை. மக்களிடமிருந்தும் அவர்களுக்கு அழுத்தங்கள் உள்ளன. உங்களுக்கு ஒரு படம் பிடிக்கவில்லையெனில் நீதிமன்றம் போகலாம். ஆனால் இங்கோ, போராடத் தொடங்கிவிடுகின்றனர். ஒருகட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக அது மாறிவிடுகிறது. கடைசியில் பழி, தணிக்கைத் துறையினர்மீது போடப்படுகிறது. ஓர் அமைப்பாக மக்களிடம்தான் பிரச்னை இருக்கிறது.
 
காட்சிகளை வெட்டாமலோ, தடை விதிக்காமலோ ஏ சான்றிதழ் கொடுத்துவிடுவது சரியான செயலாக உள்ளதா?
அடல்ட் திரைப்படம் என்பதற்கான அர்த்தத்தை இன்னும் பலர் முழுமையாகப் புரிந்துகொள்ள வில்லை. முதலில் நிறைய பேர் சினிமாத்துறையில் ஈடுபடுவது மோசம் என்ற பழைய மனநிலையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை. சினிமாவுக்குள் நுழைபவர்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்வார்கள் என்றே இன்னும் பலர் எண்ணுகின்றனர். அதேபோலத் தான் ஏ படம் என்பதைப் பற்றியும் அசிங்கமானது, மோசமானது, செக்ஸ் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றெல்லாம் நினைக்கின்றனர். ஏ படத்தைப் பார்ப்பது குறிப்பாக குழந்தைகளைப் பாழாக்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஒரு தீவிரமான அரசியல் படத்திற்குக் கூட ஏ சான்றிதழ் தரலாம். ஆனால் ஏ படங்களை நம் மக்கள் ஒழுக்கத்தோடு மட்டுமே தொடர்புகொண்டு பார்க்கின்றனர்.

தேவ் டி படம் மிகத் தைரியமாக எடுக்கப்பட்ட படம். தணிக்கைக் குழுவினர் அந்தப் படத்தை வெளியிடமாட்டார்கள் என்று பயந்தீர்களா? அதன் காட்சிகளை வெட்டிவிடுவார்கள் என்று எப்போதாவது நினைத்தீர்களா?
இல்லை. அப்படி நினைத்திருந்தால் என்னால் படம் செய்யமுடிந்திருக்காது. பார்வையாளர்கள் விரும்புவார்களா, விரும்பமாட்டார்களா என்று யோசித்துக்கொண்டு இருந்தால் சினிமாவில் ஈடுபடுவது சாத்தியம் அல்ல. நான் என்ன நினைக்கி றேனோ, அதை உருவாக்கும் சுதந்தரத்துடன் எனது படத்தை உருவாக்குகிறேன். அதைப் பார்க்கும் ரசனையை பார்வையாளர்கள் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் அதை ரசிக்கும்வரை நான் பொறுமையாக முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.

அபய் மற்றும் கல்கியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?
அபய் அந்தப் படத்தின் பகுதியாக ஏற்கெனவே முடிவு செய்யப் பட்டிருந்தார். நாங்கள் சேர்ந்து குடித்துக்கொண்டிருந்தபோதே அது முடிவாகிவிட்டது. நவீனகாலச் சூழலில் தேவதாஸ் கதையைச் செய்வது பற்றிய யோசனையோடு அவர் வந்தார். அபய்யை எனக்கு படம் எடுப்பதற்கு முன்பே தெரியும். கல்கி நடிகர்கள் தேர்வின்போது வந்தார். அவரை எங்கள் தயாரிப்பாளர்கள் அழைத்து வந்தனர். அவரை நான் படத்துக்குத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்கள். நான் அத்தனை நிச்சயமாக இல்லை. ஆனால் பிறகு, எல்லாமே மாறியது...எல்லாம்(சிரிக்கிறார்)

உங்கள் படங்களுக்கான கருவை எப்படிப் பிடிப்பீர்கள்?
எங்கிருந்தெல்லாமோ வரும். புத்தகங்கள், பிறரின் வாழ்க்கை, நிகழ்வுகளை வாசிப்பது, மக்களின் நெருக்கடிகள், போராட்டங்கள் என்று படிக்கும்போதெல்லாம் என்னுடைய போராட்டம் என்பது ஒன்றுமே இல்லை என்று உணர்வேன். என்னைவிட எத்தனையெத்தனை நெருக்கடிகளை இவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை உணரும்போது பெரிய புரிதல் எனக்கு வரும். அதுதான் என்னைத் தூண்டி என்னை மாறிய நபராக உணரவைக்கும்.

படத்தை இயக்கும்போது படைப்புரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதா?
எனது முதல் படமான பாஞ்சில் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. பிறகு அப்படியான எதுவும் இல்லை. நான் என்ன செய்கிறேன் என்று அப்போது பலருக்கும் விளங்கவில்லை. இவன் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறான் என்றுதான் எல்லாரும் நினைத்தனர்.

திரைப்பட விமர்சனம் உங்களைப் பொறுத்தவரை முக்கியமா?
என் படத்தில் நட்சத்திரங்கள் இல்லை. என் படம் மட்டுமே நட்சத்திரமாக இருக்கமுடியும். விமர்சகர்கள் பாராட்டினால்தான் பார்வையாளர்கள் அரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள். இல்லையெனில் பார்க்கமாட்டார்கள். யாராவது ஒருவரின் அபிப்ராயத்தைப் படிக்காமல் படம் பார்க்கப் போவதில்லை. அதனால் விமர்சகர்கள் முக்கியமானவர்கள்தான்.

உங்கள் படங்களில் பெரிய நட்சத்திரங்கள் இல்லை. ஏன்?
உண்மைத் தன்மை இல்லாத படங்களை எனக்கு எடுக்கத் தெரியாது. நான் எதார்த்த படங்களையே எடுக்க விரும்புகிறேன். உதாரணத்திற்கு, அசலான இடங்களிலேயே படங்கள்  எடுப்பதை விரும்புகிறேன். பெரிய நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு என்னால் தெருக்களில் படமெடுக்க முடியாது. அது ஒரு பிரச்னையாக இருக்கும். அவர்களால் கூட்டம் ஏற்படும். அதனால் படப்பிடிப்பு சிக்கலாகும்.

போதைப்பொருட்கள் மற்றும் குடியின் பிடியில் சிக்கி மீண்டவர் நீங்கள். நிறைய இளைஞர்கள் வாழ்க்கையின் விரக்தியைப் போக்க இதற்கு அடிமையாகின்றனர். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நிறைய பேர் என்னதான் இருக்கிறது. பார்க்கலாம் என்ற குறுகுறுப்புக்காக இவற்றை நாடுகின்றனர். நீங்கள் மன அழுத்தத்தோடு இருந்தால் அதிலிருந்து விலகுவதற்கு இந்த போதை நிச்சயத் தீர்வு அல்ல. தற்போது நான் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என்னை அது எந்த அளவுக்குச் சீரழித் துள்ளது என்று தெரியும். அதனால் இந்தப் போதைகளை நான் யாருக்கும் பரிந்துரைக்கமாட்டேன்.  
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) ஆஸ்கர் (115) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)