ஜூனோ Juno 2007
ராட்டட்டூய் Ratatouille 2007
ஒரு சிறந்த சமையல்காரராக மாறுவதற்கு மனிதனாக தான் பிறந்திருக்க வேண்டுமா?
திறமைக்கும் படைப்பாற்றலுக்கும் பிறப்பிடம், உருவம், சமூக அடையாளம் போன்றவை தடையாக இருக்க முடியுமா?
இத்தகைய கேள்விகளை ஒரு சிறிய எலியின் கனவின் வழியாக நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்த கலை அனுபவமாக மாற்றுகிறது பிராட் பேர்ட் இயக்கியுள்ள ‘ராட்டட்டூய்’ Ratatouille 2007.
உணவு, சமையல் கலை, படைப்பாற்றல், தனித்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தப் படம், குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் என்ற வரம்பைக் கடந்து, கலைஞனின் மனநிலையையும் அவனது திறமையை உலகம் எவ்வாறு அணுகுகிறது என்பதையும் ஆராய்கிறது.
பாரீஸ் நகரத்தைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தின் மிக முக்கியமான பலம் அதன் உலக உருவாக்கம். அந்த நகரத்தின் காதல் உணர்வு நிறைந்த சூழலையும், உணவகங்களின் நுட்பமான பணிச்சூழலையும், சமையலறையின் பரபரப்பையும் இயக்குநர் தனித்துவமான காட்சிமொழியில் உருவாக்கியிருக்கிறார்.
பாரீஸ் நகரத்தின் சூழலை நெருக்கமாகப் புரிந்துகொள்வதற்காக இயக்குநர் பிராட் பேர்ட், தயாரிப்பாளர் பிராட் லூயிஸ் மற்றும் படக்குழுவினர் அந்நகருக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அங்குள்ள உணவகங்களையும் நகரச் சூழலையும் நேரடியாகக் கவனித்த அனுபவம், படத்தின் காட்சிகளில் இயல்பாக வெளிப்படுகிறது.
நகரத்தின் அழகை வெறும் பின்னணியாகப் பயன்படுத்தாமல், அதன் பண்பாட்டு அடையாளத்தையும் உணர்வையும் காட்சிகளுக்குள் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைக்கதையின் தனித்துவம் அதன் மையக் கருத்தில் இருக்கிறது. சமையலறை என்பது ஒழுங்கு, பயிற்சி, அனுபவம், திறமை ஆகியவை ஒன்றிணையும் இடம். அத்தகைய சூழலில் வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மாறான ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு கலைத்திறனைப் பற்றிய விவாதத்தை உருவாக்குவது சுவாரசியமான தேர்வு.
சமையல் என்பது உணவைத் தயாரிக்கும் தொழில் மட்டுமல்ல; அது கற்பனை, உணர்வு, தனிப்பட்ட பார்வை ஆகியவற்றின் வெளிப்பாடு என்பதையும் படம் வலியுறுத்துகிறது.
கலைப்படைப்பின் மதிப்பை அதன் படைப்பாளியின் அடையாளத்தை வைத்து அளவிட வேண்டுமா, அல்லது அதன் தரத்தையும் உண்மையான திறமையையும் வைத்து மதிப்பிட வேண்டுமா என்ற கேள்வியும் இதன் அடிப்படையில் எழுகிறது.
ரெமி (பேட்டன் ஓஸ்வால்ட்) என்ற கதாபாத்திரத்தின் உருவாக்கம் படத்தின் உணர்ச்சிகரமான மையமாக அமைகிறது.
சுவை மற்றும் மணத்தை நுட்பமாக உணரும் அதன் திறன், உணவைப் பற்றிய காட்சிகளை வெறும் காட்சிப்பொருளாக இல்லாமல் உணர்வுகளின் அனுபவமாகவே மாற்றுகிறது.
அதன் கனவும் கலை மீதான ஈடுபாடும் கதாபாத்திரத்திற்கு தனித்துவமான ஆழத்தை வழங்குகின்றன. ஆல்ஃப்ரெடோ லிங்குவினி (லூ ரோமானோ) என்ற கதாபாத்திரத்துடன் தொடர்புடைய நகைச்சுவை அம்சங்கள் உடல் மொழியையும் அசைவுகளையும் மையமாகக் கொண்ட காட்சிகளுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்குகின்றன.
கோலெட் (ஜெனீன் கரோஃபாலோ) கதாபாத்திரம் வழியாக தொழில்முறை சமையலறையின் பயிற்சி, ஒழுக்கம், அனுபவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.
அன்டன் ஈகோ (பீட்டர் ஓ’டூல்) போன்ற கதாபாத்திரங்கள் படத்தின் கலைநோக்கையும் மதிப்பீடு குறித்த சிந்தனையையும் வலுப்படுத்துகின்றன.
குரல் நடிப்பு இந்த அனிமேஷன் உலகிற்கு உயிரூட்டுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான குரல் அடையாளம் அமைக்கப்பட்டிருப்பதுடன், அவற்றின் குணநலன்களும் உணர்ச்சிகளும் குரலின் ஏற்ற இறக்கங்கள் வழியாக வெளிப்படுகின்றன.
கதாபாத்திரங்களின் பிரெஞ்சு உச்சரிப்புகளை இயல்பாகவும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் அமைக்க நடிகர்கள் முயற்சி செய்துள்ளனர்.
குறிப்பாக, நகைச்சுவை நிறைந்த உடல் அசைவுகளுக்கும் குரல் வெளிப்பாட்டிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு படத்தின் பொழுதுபோக்கு அம்சத்தை மேம்படுத்துகிறது.
தொழில்நுட்ப ரீதியாகப் படத்தின் மிகப் பெரிய சாதனை உணவுப் பொருட்களை உயிரோட்டத்துடன் உருவாக்கியிருப்பதாகும்.
கணினி வழி உருவாக்கப்படும் உணவுக் காட்சிகள் உண்மையான உணவைப் போலக் கவர்ச்சியாகத் தோன்ற வேண்டும் என்பது படக்குழுவினருக்கு முக்கியமான சவாலாக இருந்தது.
இதற்காக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த சமையல் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றதுடன், அனிமேஷன் கலைஞர்கள் சமையல் பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்றனர்.
உணவகத்தின் வணிகச் சமையலறை எவ்வாறு இயங்குகிறது என்பதையும் உணவுப் பொருட்களின் தன்மைகளையும் நேரடியாகப் புரிந்துகொண்டனர்.
சமையல் கலை குறித்த இந்த விரிவான ஆய்வு, திரையில் உணவு தயாரிக்கப்படும் ஒவ்வொரு தருணத்திற்கும் நம்பகத்தன்மையை அளிக்கிறது.
பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் மேற்பரப்பில் ஒளி ஊடுருவி வெளிப்படும் தன்மையை உருவாக்குவதற்காக ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஒளி சார்ந்த தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தினர்.
உணவுப் பொருட்களின் இயற்கையான தோற்றத்தையும் அசைவையும் மேம்படுத்த புதிய கணினி நிரல்களும் பயன்படுத்தப்பட்டன.
உணவின் சுவையை நேரடியாகக் காட்ட இயலாத அனிமேஷன் ஊடகத்தில், வண்ணங்கள், வடிவங்கள், ஒளி மற்றும் இசை ஆகியவற்றின் மூலம் சுவையை உணர்த்தும் காட்சிமொழி உருவாக்கப்பட்டுள்ளது.
சுவையை அனுபவிக்கும் மனநிலையை உருவகப்படுத்தும் வண்ணமயமான காட்சிகள், படத்தின் கலைத்தன்மைக்கு புதிய பரிமாணத்தைச் சேர்க்கின்றன.
உணவு என்பது கண்களால் பார்க்கப்படும் பொருள் மட்டுமல்ல, மனதிலும் நினைவுகளிலும் பதியும் அனுபவம் என்பதைக் காட்சிகளின் வழியாக உணர்த்துகிறது.
எலிகளின் உடல் அசைவுகளையும் தோற்றத்தையும் உருவாக்குவதிலும் படக்குழு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.
அவற்றின் பழக்கவழக்கங்களை அறிந்த நிபுணரிடம் ஆலோசனை பெற்றதுடன், உண்மையான எலிகளின் ஓட்டம், உடல் அசைவு, ரோமங்கள், மூக்கு, காதுகள், பாதங்கள், வால் ஆகியவற்றை நீண்ட காலம் கவனித்து அனிமேஷன் வடிவமைத்தனர்.
இதனால் கதாபாத்திரங்கள் வெறும் மனித உருவம் பெற்ற விலங்குகளாகத் தோன்றாமல், அவற்றுக்குரிய இயல்பான உடல் மொழியுடன் காட்சியளிக்கின்றன. படத்தின் அனிமேஷன் பாரம்பரியமான ஒவ்வொரு பிரேமையும் தனித்தனியாக உருவாக்கும் முறையில் அமைந்துள்ளது.
இயக்கப் பதிவு தொழில்நுட்பத்தைச் சார்ந்திராமல் கலைஞர்களின் நுணுக்கமான உழைப்பின் மூலம் அசைவுகள் வடிவமைக்கப்பட்டிருப்பது அதன் தொழில்நுட்ப அணுகுமுறையின் முக்கிய அம்சமாகும்.
ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பில் ஆழமான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமையலறையின் உலோகப் பாத்திரங்கள், செப்புப் பொருட்களின் மினுமினுப்பு, உணவுப் பொருட்களின் மேற்பரப்புகள், பாரீஸ் நகரத்தின் கற்கள் பதிக்கப்பட்ட தெருக்கள் என ஒவ்வொரு காட்சியிலும் பல்வேறு பொருட்களின் தன்மைகள் தெளிவாக வெளிப்படுகின்றன.
நீர் சார்ந்த காட்சிகளிலும் அதன் இயக்கம், ஒளி பிரதிபலிப்பு, ஈரப்பதத்தின் தாக்கம் போன்றவை நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நீரில் நனைந்த ஆடைகளின் தோற்றத்தை உண்மைக்கு நெருக்கமாக உருவாக்குவதற்காகப் படக்குழுவினர் நேரடி சோதனைகளையும் மேற்கொண்டனர்.
இத்தகைய ஆய்வுகளின் பலன், காட்சிகளின் நம்பகத்தன்மையில் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியும் வெறும் அலங்காரமாக இல்லாமல், அந்தச் சூழலின் உணர்வையும் செயல்பாட்டையும் பார்வையாளருக்குக் கடத்துகிறது.
இசையமைப்பாளர் மைக்கேல் ஜியாகினோவின் பங்களிப்பு படத்தின் பாரீஸ் நகரச் சூழலுக்கு ஏற்ற தனித்துவமான இசை அனுபவத்தை வழங்குகிறது.
பல்வேறு இசை வகைகளையும் கருவிகளையும் இணைத்துப் பின்னப்பட்ட பின்னணி இசை, கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப தனித்தனி இசைக் கருப்பொருள்களைக் கொண்டுள்ளது.
ரெமியின் கனவுகளையும் அதன் குடும்பச் சூழலையும் பிரதிபலிக்கும் இசை வடிவங்கள் வேறுபட்ட உணர்வுகளை உருவாக்குகின்றன. ரெமி மற்றும் லிங்குவினி ஆகியோருடன் தொடர்புடைய நட்பு சார்ந்த இசைக் கருப்பொருளும் அவர்களுக்கிடையிலான உறவின் தன்மையை இசை வழியாக உணர்த்துகிறது.
பிரெஞ்சு பாடகி கமீல் பாடிய ‘லு ஃபெஸ்தான்’ என்ற பாடல், படத்தின் இசை அடையாளத்திற்கு முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது.
இசை, உரையாடல், காட்சியமைப்பு ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து உணவு சார்ந்த உணர்வுகளைப் பார்வையாளருக்கு அனுபவமாக மாற்றுகின்றன.
இயக்குநர் பிராட் பேர்டின் அணுகுமுறையில் நகைச்சுவையும் உணர்ச்சியும் சமநிலையுடன் இடம்பெறுகின்றன. உடல் அசைவுகளை மையமாகக் கொண்ட நகைச்சுவைக் காட்சிகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்திருப்பது படத்தின் வேகத்தையும் பொழுதுபோக்கு அம்சத்தையும் வலுப்படுத்துகிறது.
அதே நேரத்தில், கலைப்படைப்பின் மதிப்பு, திறமைக்கான அங்கீகாரம், குடும்ப உறவுகள், நட்பு, தனித்துவம் போன்ற கருத்துகளையும் படத்தின் அடிப்படைப் பார்வையில் இணைத்துள்ளார்.
குறிப்பாக, ஒரு படைப்பாளியின் திறமை வெளிப்படுவதற்கு அவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் இங்கு முக்கியமான கருத்தாக அமைகிறது.
படைப்பாற்றலை ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்திற்குள் அடைத்துவிட முடியாது என்ற மனிதநேயப் பார்வையும் படத்தின் தனித்துவத்திற்கு வலு சேர்க்கிறது.
திரைப்படம் வெளியானபோது அதன் திரைக்கதை, அனிமேஷன், நகைச்சுவை, குரல் நடிப்பு மற்றும் இசை ஆகியவை பரவலான பாராட்டுகளைப் பெற்றன.
உலகளாவிய வசூலிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற இப்படம், உலகம் முழுவதும் சுமார் 623.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.
80வது அகாடமி விருது விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்றதுடன், சிறந்த அசல் திரைக்கதை, இசை, ஒலித்தொகுப்பு, ஒலிக்கலவை உள்ளிட்ட பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டது.
பல்வேறு சர்வதேச விருது அமைப்புகளிலும் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக 2016ஆம் ஆண்டு பிபிசி நடத்திய சர்வதேச விமர்சகர்களின் வாக்கெடுப்பிலும் இடம்பிடித்தது.
‘ராட்டட்டூய்’ திரைப்படத்தின் உண்மையான சிறப்பு, ஒரு வித்தியாசமான கற்பனைக் கருத்தை அழகான அனிமேஷன் காட்சிகளாக மாற்றியிருப்பதில் மட்டும் இல்லை.
திறமை, கனவு, கலை மீதான ஈடுபாடு ஆகியவற்றுக்கு எல்லைகள் விதிக்க முடியாது என்ற கருத்தை நகைச்சுவை, இசை, தொழில்நுட்பம், மனித உணர்வுகள் ஆகியவற்றுடன் இணைத்திருப்பதில்தான் இதன் ஆழம் இருக்கிறது.
உணவை உருவாக்கும் சமையல்காரனின் கலைநோக்கையும், ஒரு படைப்பை மதிப்பிடும் பார்வையாளரின் மனநிலையையும் ஒரே நேரத்தில் சிந்திக்க வைக்கிறது.
குழந்தைகள் காட்சிகளின் கவர்ச்சியையும் நகைச்சுவையையும் ரசிக்கலாம்; பெரியவர்கள் அதன் கலை, உழைப்பு, அங்கீகாரம் குறித்த சிந்தனைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.
அனிமேஷன் என்பது கற்பனை உலகத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, ஆழமான மனித உணர்வுகளையும் வாழ்க்கை சார்ந்த கேள்விகளையும் வெளிப்படுத்தும் வலிமையான திரைப்பட மொழி என்பதை உணர்த்தும் படைப்பாக ‘ராட்டட்டூய்’ வெளியாகி இருபதாம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
=====================================
படத்தின் கதை:-
பாரீஸ் நகரின் புறநகர்ப் பகுதியில், வயதான ஒரு பெண்ணுக்குச் சொந்தமான வீட்டின் மேல்மாடியில் எலிகளின் கூட்டம் ஒன்று வாழ்ந்து வருகிறது.
அந்தக் கூட்டத்தில் ரெமி (பேட்டன் ஓஸ்வால்ட்) என்ற இளம் எலியும் இருக்கிறது. மற்ற எலிகளைப் போல உணவைப் பசியைப் போக்குவதற்காக மட்டும் பார்க்காமல், அதன் மணம், சுவை, தன்மை ஆகியவற்றை நுட்பமாக உணரும் திறன் ரெமிக்கு இருக்கிறது.
அதன் மோப்ப சக்தியும் சுவையைப் பகுத்தறியும் ஆற்றலும் மற்ற எலிகளைக் காட்டிலும் அதிகம். மனிதர்களின் சமையல் கலையின் மீது அதற்கு அளவற்ற ஆர்வம்.
குறிப்பாக, சமீபத்தில் இறந்துபோன பிரபல பிரெஞ்சு சமையல் கலைஞர் அகஸ்ட் குஸ்டோவை அது தனது ஆதர்ச முன்மாதிரியாகக் கருதுகிறது.
குஸ்டோவின் சமையல் நிகழ்ச்சிகளையும் அவரது சமையல் புத்தகத்தையும் பார்த்துப் படித்து, ஒருநாள் தானும் ஒரு சிறந்த சமையல்காரராக வேண்டும் என்று கனவு காண்கிறது.
ஆனால் ரெமி வாழும் எலிகள் கூட்டத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு உணவு என்பது உயிர்வாழ்வதற்கான தேவை மட்டுமே.
அதன் அண்ணன் எமில் (பீட்டர் சோன்), தந்தையும் எலிகள் கூட்டத்தின் தலைவனுமான ஜாங்கோ (பிரையன் டென்னஹி) உள்ளிட்ட அனைவரும் மனிதர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.
மனிதர்கள் வாழும் இடங்களுக்குச் செல்வதும் அவர்களுடைய சமையலறைகளில் நுழைவதும் ஆபத்தானது என்று நம்புகிறார்கள்.
உணவின் மணத்தை நுட்பமாக அறியும் ரெமியின் திறமை முதலில் குடும்பத்தினருக்குப் பயனுள்ளதாகத் தெரிகிறது.
உணவில் கலந்திருக்கும் எலிக்கொல்லி விஷத்தின் மணத்தைக் கண்டுபிடித்து, மற்ற எலிகள் விஷம் கலந்த உணவைச் சாப்பிடாமல் தடுக்கிறது.
இதனால் ஜாங்கோ, கூட்டத்திற்காகத் திருடி வரப்படும் உணவுப் பொருட்களில் விஷம் கலந்திருக்கிறதா என்று மோப்பம் பிடித்துச் சோதிக்கும் பொறுப்பை ரெமியிடம் ஒப்படைக்கிறான்.
ஆனால் ரெமிக்கு அந்த வேலை திருப்தி அளிப்பதில்லை. குப்பையிலிருந்து கிடைக்கும் உணவைச் சோதிப்பதைவிட, மனிதர்களின் சமையலறையில் புதிதாகத் தயாரிக்கப்படும் உணவைச் சுவைத்து, சமையல் கலையைக் கற்றுக்கொள்ளவே அது விரும்புகிறது.
அந்த வீட்டின் உரிமையாளரான மேபெல் (சாலி கெல்லர்மேன்) என்ற வயதான பெண், தனது வீட்டின் மேல்மாடியில் எலிகள் கூட்டமாக வாழ்வதைக் கண்டுபிடிக்கிறாள்.
இதனால் அங்கு வாழ்ந்த எலிகள் அவசரமாக அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. மற்ற எலிகளுடன் ரெமியும் தப்பிச் செல்லும்போது, தனது விருப்பமான சமையல் கலைஞர் அகஸ்ட் குஸ்டோவின் சமையல் புத்தகத்தை எடுக்க மீண்டும் வீட்டிற்குள் செல்கிறது.
அந்த அவசரத்தில் தனது குடும்பத்தினரிடமிருந்து பிரிந்துவிடுகிறது. தனியாகிவிட்ட ரெமி, எங்கு செல்வது என்று தெரியாமல் அலைகிறது.
அப்போது அதன் கற்பனையில் குஸ்டோ தோன்றி அதற்கு வழிகாட்டுவது போலத் தோன்றுகிறார். அவரது ஊக்கத்தால் ரெமி சுற்றுப்புறத்தை ஆராய்ந்து செல்கிறது. இறுதியில் பாரீஸ் நகரில் அமைந்துள்ள குஸ்டோவின் பெயரைக் கொண்ட உணவகத்தின் கூரையை அடைகிறது.
அந்த உணவகத்தின் தற்போதைய உரிமையாளரும் தலைமைச் சமையல்காரருமான ஸ்கின்னர் (இயன் ஹோல்ம்), முன்பு குஸ்டோவிடம் துணைச் சமையல்காரராகப் பணியாற்றியவர்.
குஸ்டோ இறந்த பிறகு உணவகத்தின் பொறுப்பை அவர் ஏற்றிருக்கிறார். அந்த உணவகத்தில் ஆல்ஃப்ரெடோ லிங்குவினி (லூ ரோமானோ) என்ற இளைஞன் புதிதாகக் குப்பைகளை அகற்றும் பணியாளராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறான்.
சமையல் அனுபவம் இல்லாத அவன், உணவகத்தின் சமையலறையில் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து வருகிறான்.
ரெமி கூரையிலிருந்து கீழே உள்ள சமையலறையைப் பார்க்கும்போது, லிங்குவினி ஒரு பெரிய பாத்திரத்தில் தயாரிக்கப்பட்ட வெங்காயத்தாள் சூப்பைக் கெடுத்துவிட்டு, அதைச் சரிசெய்ய முயன்று கொண்டிருப்பதைக் கவனிக்கிறது.
அந்தச் சூப்பைச் சரிசெய்ய முடியாமல் லிங்குவினி தடுமாறுவதைக் கண்ட ரெமி, அங்கிருந்து தப்பிச் செல்வதைவிட உணவைச் சரிசெய்ய முடிவு செய்கிறது.
சமையலறைக்குள் நுழைந்து, தனக்குத் தெரிந்த சமையல் நுட்பத்தைப் பயன்படுத்தி சூப்பின் சுவையை மேம்படுத்துகிறது.
இதற்கிடையில் லிங்குவினி அதைக் கவனித்துவிடுகிறான். ரெமியைப் பிடித்துக்கொண்டு, அது அங்கு இருப்பதை ஸ்கின்னரிடம் தெரியப்படுத்தாமல் மறைக்கிறான்.
சூப் தயாரானது குறித்து ஸ்கின்னருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. லிங்குவினியிடம் அந்தச் சூப்பைப் பற்றி விசாரித்து அவனை எதிர்கொள்கிறார்.
அந்த நேரத்தில் சூப் தவறுதலாக வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறப்படுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக அதைச் சுவைத்தவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
சூப் வெற்றிபெற்றதால் உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட பிரச்சினை தற்காலிகமாகத் தணிகிறது. அந்த உணவகத்தில் பணிபுரியும் ஒரே பெண் சமையல்காரரான கோலெட் டாட்டூ (ஜெனீன் கரோஃபாலோ), லிங்குவினியை வேலையிலிருந்து நீக்க வேண்டாம் என்று ஸ்கின்னரிடம் வலியுறுத்துகிறாள்.
குஸ்டோவின் புகழ்பெற்ற வாசகமான “யாராலும் சமைக்க முடியும்” என்ற கொள்கையை நினைவுபடுத்தி, வாடிக்கையாளர்கள் விரும்பிய உணவைத் தயாரித்ததற்காக ஒருவரைத் தண்டிப்பது அந்த உணவகத்தின் பெயருக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று எடுத்துரைக்கிறாள்.
இதனால் ஸ்கின்னர் லிங்குவினியைத் தொடர்ந்து பணியில் வைத்திருக்க ஒப்புக்கொள்கிறார்.
ஆனால் ஸ்கின்னருக்கு அந்தச் சூப்பை உண்மையில் யார் தயாரித்தார்கள் என்பது தெரியாது. லிங்குவினியே அதைச் செய்ததாக அவர் நினைக்கிறார்.
எனவே அதே சூப்பை மீண்டும் தயாரித்துக் காட்டுமாறு லிங்குவினியிடம் கட்டளையிடுகிறார். அப்போது சமையலறையில் மறைந்திருக்கும் ரெமியை ஸ்கின்னர் பார்த்துவிடுகிறார்.
எலி உணவகத்திற்குள் இருப்பதைக் கண்டு கோபமடைந்து, அதை வெளியே எடுத்துச் சென்று கொன்றுவிடுமாறு லிங்குவினியிடம் உத்தரவிடுகிறார்.
லிங்குவினி ரெமியை எடுத்துக்கொண்டு தனியாகச் செல்லும்போது, அந்த எலி தன்னிடம் பேசுவதைப் புரிந்துகொள்கிறது என்பதை உணர்கிறான்.
ரெமியும் அவனுடைய பேச்சைப் புரிந்துகொள்கிறது. இதனால் ஆச்சரியமடைந்த லிங்குவினி, சமையல் செய்வதில் ரெமியின் உதவியைப் பெற முடிவு செய்கிறான்.
ரெமியும் தனது சமையல் திறமையை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பு என்பதை உணர்கிறது. இருவரும் இணைந்து செயல்படுவதற்கான வழியைத் தேடுகிறார்கள்.
அப்போது ரெமிக்கு ஒரு புதிய வழி தெரியவருகிறது. லிங்குவினியின் தலையில் அணிந்திருக்கும் சமையல்காரரின் தொப்பிக்குள் மறைந்துகொண்டு, அவனுடைய தலைமுடியை இழுப்பதன் மூலம் அவனது உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிகிறது.
கயிற்றால் கட்டப்பட்ட பொம்மையை இயக்குவது போல, தலைமுடியை வெவ்வேறு திசைகளில் இழுத்து லிங்குவினியின் கைகளையும் உடலையும் இயக்குகிறது.
இதன் மூலம் லிங்குவினியின் உடலைப் பயன்படுத்தி ரெமி சமையல் செய்ய முடிகிறது. மனிதர்களுக்கு எலி சமையல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில், லிங்குவினி சமையல்காரராக வெளியில் தோன்றவும், ரெமி மறைந்திருந்து உணவைத் தயாரிக்கவும் இருவரும் முடிவு செய்கிறார்கள்.
அவர்கள் முதலில் கெட்டுப்போன வெங்காயத்தாள் சூப்பை மீண்டும் தயாரித்து அதன் சுவையைச் சரியாக உருவாக்குகிறார்கள்.
அதன் பிறகு உணவகத்தில் தொடர்ந்து சமையல் செய்கிறார்கள். லிங்குவினி சமையல் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதால், கோலெட் அவனுக்குப் பயிற்சி அளிக்க நியமிக்கப்படுகிறாள்.
ஆரம்பத்தில் அவனுக்குப் பயிற்சி அளிப்பதில் அவளுக்கு விருப்பம் குறைவாக இருக்கிறது. ஆனால் லிங்குவினி அவள் கூறும் அறிவுரைகளைக் கவனமாகப் பின்பற்றி, அவற்றைச் செயல்படுத்த முயற்சிப்பதைப் பார்த்ததும் அவனிடம் படிப்படியாக நல்ல எண்ணம் ஏற்படுகிறது.
இதனால் லிங்குவினி சமையலறையின் நடைமுறைகளையும் சமையல் பணிகளையும் கற்றுக்கொள்கிறான். மறுபுறம், ரெமி அவனுக்கு உதவியாக இருந்து உணவுகளைத் தயாரிக்கிறது. இருவரின் கூட்டுச் செயல்பாட்டால் உணவகத்தில் சமையல் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இதற்கிடையில் ரெமி தனது குடும்பத்தினரையும் எலிகள் கூட்டத்தையும் மீண்டும் சந்திக்கிறது. தனது அண்ணன் எமிலையும் தந்தை ஜாங்கோவையும் சந்தித்த பிறகு, தான் இனிமேல் அந்த உணவகத்திலேயே தங்கி சமையல் செய்ய விரும்புவதாக ஜாங்கோவிடம் தெரிவிக்கிறது.
ஆனால் மனிதர்களுடன் பழகுவதும் அவர்களுடைய இடங்களில் வாழ்வதும் எலிகளுக்கு ஆபத்தானது என்று ஜாங்கோ நம்புகிறான்.
அந்த ஆபத்தை ரெமிக்குப் புரியவைக்க, மனிதர்களால் அழிக்கப்பட்ட எலிகளின் உடல்களைக் காட்டுகிறான். மனிதர்கள் எலிகளை எவ்வாறு கொல்கிறார்கள் என்பதையும், அவர்களிடம் நெருங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் உணர்த்த முயற்சிக்கிறான்.
இருந்தாலும் ரெமி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. தந்தையின் எச்சரிக்கையை மீறி மீண்டும் உணவகத்திற்குச் செல்கிறது.
இதே நேரத்தில் ஸ்கின்னரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பிரச்சினை உருவாகிறது. லிங்குவினியின் மறைந்துபோன தாயிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை அவர் கண்டுபிடிக்கிறார்.
அந்தக் கடிதத்தின் மூலம் லிங்குவினி, குஸ்டோவின் மகன் என்பது ஸ்கின்னருக்குத் தெரியவருகிறது. இதனால் உணவகத்தின் உண்மையான வாரிசு லிங்குவினிதான் என்பதும் வெளிப்படுகிறது.
இந்தச் செய்தி ஸ்கின்னருக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் உணவகத்தின் உரிமையைத் தொடர்ந்து தன்னிடமே வைத்துக்கொள்ள அவர் விரும்புகிறார்.
எனவே இந்தத் தகவல் உண்மையா என்பதை உறுதிப்படுத்துவதற்காகத் தனது வழக்கறிஞரிடம் விசாரிக்கச் சொல்கிறார். வழக்கறிஞரும் லிங்குவினி குஸ்டோவின் மகன் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
இதனால் லிங்குவினிக்கே உணவகத்தின் உரிமை கிடைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த உண்மையை லிங்குவினி அறிந்துகொள்ளாமல் தடுக்க ஸ்கின்னர் அதற்கான ஆதாரங்களைக் கொண்ட கடிதத்தை ஓர் உறைக்குள் மறைத்து வைக்கிறார்.
ஆனால் ரெமி அந்த உறையைக் கண்டுபிடித்துவிடுகிறது. ஸ்கின்னருக்குத் தெரியாமல் அந்த ஆதாரத்தை எடுத்துக்கொண்டு லிங்குவினியிடம் கொண்டு சேர்க்கிறது.
கடிதத்தின் மூலம் தனது தந்தை குஸ்டோ என்பதையும், உணவகத்தின் உண்மையான வாரிசு தான்தான் என்பதையும் லிங்குவினி அறிந்துகொள்கிறான்.
இதனால் ஸ்கின்னரின் உரிமை முடிவுக்கு வருகிறது. அவர் உணவகத்திலிருந்து நீக்கப்படுகிறார். லிங்குவினி தலைமைச் சமையல்காரராகப் பதவி உயர்வு பெறுகிறான்.
அதன்பிறகு உணவகத்தின் நிலைமை சிறப்பாக மாறுகிறது. ரெமி தயாரிக்கும் புதிய உணவுகள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.
உணவகத்தின் புகழ் மீண்டும் உயர்கிறது. லிங்குவினியின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது. கோலெட்டுடன் அவனுக்கு நெருக்கம் உருவாகி, இருவரும் காதல் உறவில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.
இதனால் லிங்குவினியின் வாழ்க்கையில் கோலெட்டுக்கு முக்கியமான இடம் கிடைக்கிறது. ஆனால் ரெமிக்கு இந்த மாற்றம் தனிமை உணர்வை ஏற்படுத்துகிறது.
லிங்குவினியுடன் இணைந்து சமையல் செய்து வந்தாலும், அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தனக்கான இடம் குறைந்து வருவதாக ரெமி உணர்கிறது.
இதற்கிடையில், உணவகத்தின் முன்னாள் புகழ்பெற்ற சமையல்காரர் குஸ்டோவின் உணவகத்தை முன்பு கடுமையாக விமர்சித்த உணவு விமர்சகர் அன்டன் ஈகோ (பீட்டர் ஓ’டூல்), அந்த உணவகத்தின் புதிய புகழைப் பற்றிய செய்தியைக் கேட்கிறார்.
குஸ்டோவின் உணவகத்திற்கு முன்பு குறைந்த மதிப்பீடு வழங்கியவரும் அவர்தான். அந்த விமர்சனத்திற்குப் பிறகு தான் குஸ்டோ இறந்துபோனார்.
இப்போது அதே உணவகம் மீண்டும் புகழ்பெறத் தொடங்கியிருப்பதால், அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஈகோ விரும்புகிறார்.
எனவே லிங்குவினியிடம் தொடர்புகொண்டு, மறுநாள் உணவகத்திற்கு வந்து மீண்டும் மதிப்பீடு செய்யப்போவதாக அறிவிக்கிறார்.
இந்த அறிவிப்பு உணவகத்திற்கு மிக முக்கியமானதாகிறது. ஏனெனில் ஈகோவின் விமர்சனம் உணவகத்தின் புகழையும் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடியது.
இந்தச் சூழலில் ரெமிக்கும் லிங்குவினிக்கும் இடையே ஏற்கெனவே உருவாகியிருந்த மனக்கசப்பு மேலும் அதிகரிக்கிறது.
ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, உணவகத்தின் வெற்றிக்கும் புதிய உணவுகளுக்கும் காரணம் தான்தான் என்று லிங்குவினி கூறுகிறான்.
உண்மையில் அந்த உணவுகளைத் தயாரிப்பது ரெமி என்பதால், தனது உழைப்புக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ரெமி வருத்தமடைகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அவர்களுடைய கூட்டணி முறிந்துபோகும் நிலை உருவாகிறது.
லிங்குவினி மீது ஏற்பட்ட கோபத்தால் ரெமி பழிவாங்க முடிவு செய்கிறது. தனது எலிகள் கூட்டத்தினரை அழைத்துக்கொண்டு உணவகத்தின் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளுக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களைத் திருடத் தொடங்குகிறது.
இந்தச் செயல் உணவகத்தின் பணிகளுக்கு இடையூறாக அமைகிறது. இதற்கிடையில், ரெமியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் லிங்குவினி அங்கு வருகிறான்.
ஆனால் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் எலிகள் கூட்டம் புகுந்து பொருட்களைச் சிதறடிப்பதைக் கண்டு கடுமையாகக் கோபமடைகிறான்.
ரெமியையும் அதன் கூட்டத்தினரையும் உணவகத்திலிருந்து வெளியேறுமாறு விரட்டுகிறான். உணவகங்கள் பூச்சிகளையும் எலிகளையும் எவ்வாறு நடத்துமோ அப்படியே இனிமேல் அவற்றையும் நடத்துவேன் என்று எச்சரிக்கிறான். இதனால் மனமுடைந்த ரெமி அந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறது.
மறுநாள், உணவகத்திற்கு வரவிருந்த அன்டன் ஈகோவின் மதிப்பீடு முக்கியமானதாக இருக்கும் நிலையில், ரெமி தனியாக இருக்கிறது.
இதற்கிடையில், ரெமியின் சமையல் திறமையை ஏற்கெனவே கவனித்திருந்த ஸ்கின்னர், அதைத் தனது வணிகத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிடுகிறார்.
ரெமியைப் பிடித்து, அதன் உதவியுடன் புதிய உறையிடப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறார். அதற்காக ரெமியைப் பிடித்து அடைத்து வைக்கிறார்.
அதே நாளில் அன்டன் ஈகோ உணவகத்திற்கு வருகிறார். வழக்கமான உணவுப் பட்டியலிலிருந்து தனக்கான உணவைத் தேர்ந்தெடுக்காமல், அன்றைய சமையல்காரர் தன்னுடைய மிகச் சிறந்த உணவைத் தயாரித்துத் தர வேண்டும் என்று சவால் விடுக்கிறார்.
லிங்குவினியின் சமையல் திறமையைச் சோதிக்க விரும்பும் அவர், தனக்குப் பிடித்தமான உணவைத் தயாரித்துத் தருமாறு எதிர்பார்க்கிறார்.
ஸ்கின்னரும் இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். லிங்குவினி தோல்வியடைவதைப் பார்க்க வேண்டும் என்பதால், ஈகோவுக்குப் பரிமாறப்படும் அதே உணவைத் தனக்கும் தருமாறு கேட்கிறார்.
இதற்கிடையில் ஸ்கின்னரால் பிடிக்கப்பட்டிருந்த ரெமியை அதன் தந்தை ஜாங்கோவும் அண்ணன் எமிலும் சேர்ந்து விடுவிக்கிறார்கள்.
அவர்களின் உதவியால் ரெமி மீண்டும் உணவகத்திற்குத் திரும்புகிறது. அங்கு ரெமி இல்லாமல் லிங்குவினியால் சமையல் செய்ய முடியாமல் தவிப்பது தெரியவருகிறது.
உணவகத்தின் மற்ற சமையல்காரர்கள் ரெமி திரும்பி வருவதைக் கண்டு அதை அழிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் லிங்குவினி குறுக்கிட்டு ரெமியைப் பாதுகாக்கிறான்.
ரெமியின் உதவியால்தான் இதுவரை உணவுகளைத் தயாரித்ததாகவும், அதன் சமையல் திறமையே உணவகத்தின் வெற்றிக்குக் காரணம் என்றும் உண்மையை வெளிப்படுத்துகிறான்.
ரெமியிடம் மன்னிப்பும் கேட்கிறான். அதன்பிறகு அங்கிருந்த சமையல்காரர்களிடமும் உண்மையை விளக்குகிறான்.
ஆனால் மனிதர்களுக்குப் பதிலாக ஓர் எலி சமையல் செய்தது என்ற உண்மையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
லிங்குவினி கூறியதை நம்பாமல், அவன் மனநிலை சரியில்லாதவன் என்று கருதுகிறார்கள். அதனால் உணவகத்தில் பணிபுரிந்த சமையல்காரர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்கள்.
இதனால் ஈகோவுக்கான உணவைத் தயாரிக்க வேண்டிய நேரத்தில் உணவகத்தில் சமையல்காரர்கள் யாரும் இல்லாத நிலை உருவாகிறது.
கோலெட்டும் முதலில் அங்கிருந்து சென்றுவிடுகிறாள். ஆனால் பின்னர் ஒரு புத்தகக் கடையின் சாளரத்தில் குஸ்டோவின் புகழ்பெற்ற வாசகமான “யாராலும் சமைக்க முடியும்” என்பதை நினைவுபடுத்தும் வாசகத்தைக் காண்கிறாள்.
அந்தக் கொள்கையை நினைத்துப் பார்த்த பிறகு, லிங்குவினிக்கும் ரெமிக்கும் உதவ மீண்டும் உணவகத்திற்குத் திரும்புகிறாள்.
மறுபுறம், ஜாங்கோவும் ரெமியின் செயல்பாட்டைக் கவனித்து தனது எண்ணத்தை மாற்றிக்கொள்கிறான். மனிதர்களை எப்போதும் ஆபத்தானவர்களாகவே கருதிய அவன், ரெமிக்காக லிங்குவினி துணிந்து நின்றதைப் பார்த்து வியக்கிறான்.
ரெமியின் திறமையையும் உறுதியையும் உணர்ந்து, மனிதர்களைப் பற்றிய தனது பழைய எண்ணத்தை மறுபரிசீலனை செய்கிறான்.
பின்னர் எலிகள் கூட்டத்தினர் அனைவரையும் அழைத்து உணவகத்திற்கு வருகிறான். ரெமியின் தலைமையில் அவர்கள் சமையல் செய்ய உதவ வேண்டும் என்று முடிவு செய்கிறான்.
உணவகத்தின் சமையலறையில் வேலை செய்வதற்கு முன் எலிகள் அனைத்தும் பாத்திரம் கழுவும் இயந்திரத்தில் நன்றாகச் சுத்தம் செய்யப்படுகின்றன.
அதன் பிறகு ரெமி ஒவ்வொரு எலிக்கும் தனித்தனியான பணிகளைப் பிரித்துக் கொடுக்கிறது. சமையலறையில் ஒழுங்கான பணிமுறையை உருவாக்கி, எந்த உணவுக்கு என்னென்ன பொருட்கள் தேவை, அவற்றை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துகிறது.
எலிகள் அனைத்தும் ஒன்றிணைந்து உணவுகளைத் தயாரிக்கத் தொடங்குகின்றன. லிங்குவினி சமையலறையில் சமையல் செய்ய முடியாததால், வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் பணியை ஏற்றுக்கொள்கிறான்.
அதற்காகச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட காலணிகளை அணிந்து, உணவகத்தின் மேசைகளுக்கு இடையில் வேகமாகச் சென்று உணவுகளைப் பரிமாறுகிறான்.
இந்தச் சமயத்தில் ஸ்கின்னரும் சுகாதார ஆய்வாளரும் உணவகத்தின் செயல்பாட்டில் தலையிட முயற்சிக்கிறார்கள்.
ஆனால் எலிகள் அவர்களைப் பிடித்து, கட்டி, வாயையும் அடைத்து, உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் பூட்டி வைக்கின்றன. இதனால் ரெமியின் தலைமையில் சமையல் பணிகள் தடையின்றித் தொடர்கின்றன.
அன்டன் ஈகோவுக்காக ரெமி ஒரு சிறப்பான உணவைத் தயாரிக்கிறது. அது பிரெஞ்சு உணவான ராட்டட்டூயின் மாறுபட்ட வடிவமான கான்ஃபி பையால்டி.
அந்த உணவை ஈகோ சுவைத்தவுடன், அவருக்குள் எதிர்பாராத ஓர் உணர்வு எழுகிறது. தனது சிறுவயதில் தாயார் சமைத்த உணவைச் சுவைத்தபோது ஏற்பட்ட நினைவு திடீரென அவருக்குத் திரும்புகிறது.
அந்த உணவின் சுவை அவரைச் சிறுவயதிற்கே அழைத்துச் செல்கிறது. தாயின் சமையலை நினைவுபடுத்தும் அந்த அனுபவத்தால் அவர் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகிறார்.
அந்த உணவைத் தயாரித்த சமையல்காரரைச் சந்திக்க வேண்டும் என்று ஈகோ விரும்புகிறார். ஆனால் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அனைவரும் சென்ற பிறகுதான் அவருக்கு ரெமி அறிமுகப்படுத்தப்படுகிறது.
சமையல்காரர் ஒரு எலி என்பதை அறிந்ததும் ஈகோ அதிர்ச்சியடைகிறார். இருந்தாலும் தான் சுவைத்த உணவின் தரத்தையும் அதனால் ஏற்பட்ட உணர்வையும் அவர் மறுக்க முடியவில்லை.
மறுநாள் ஈகோ தனது விமர்சனத்தை எழுதுகிறார். குஸ்டோவின் “யாராலும் சமைக்க முடியும்” என்ற கொள்கையின் உண்மையான பொருளை இப்போது புரிந்துகொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
ரெமியின் சமையல் திறமையைப் பாராட்டி, அந்த உணவகத்தின் உணவு மிகச் சிறந்தது என்று புகழ்கிறார். ஆனால் அந்த உணவைத் தயாரித்தது ஓர் எலி என்ற உண்மையைத் தனது விமர்சனத்தில் வெளிப்படுத்துவதில்லை.
இதற்கிடையில் ஸ்கின்னரும் சுகாதார ஆய்வாளரும் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
உணவகத்தின் சமையலறையில் எலிகள் கூட்டமாக இருப்பதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக சுகாதார விதிகளின் அடிப்படையில் குஸ்டோவின் உணவகம் மூடப்படுகிறது.
உணவகம் மூடப்பட்டதால் ஈகோவுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த உணவகத்தைப் புகழ்ந்து எழுதிய விமர்சனத்தின் காரணமாகவும், உணவகம் மூடப்பட்டதாலும் அவர் தனது வேலையையும் புகழையும் இழக்கிறார்.
உணவகம் மூடப்பட்ட பிறகு ரெமி, லிங்குவினி, கோலெட் ஆகிய மூவரும் இணைந்து புதிய உணவகம் ஒன்றைத் தொடங்குகிறார்கள்.
அதற்கு ‘லா ராட்டட்டூய்’ என்று பெயரிடுகிறார்கள். ஈகோவும் அந்தப் புதிய உணவகத்தில் முதலீடு செய்கிறார். முன்பு கடுமையான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றிருந்த அவர், இப்போது அந்த உணவகத்திற்கு அடிக்கடி வந்து உணவருந்துகிறார்.
இதற்கிடையில் ரெமியின் எலிகள் கூட்டத்தினர் புதிய உணவகத்தின் மேல்மாடியில் குடியேறுகிறார்கள். அந்த இடமே அவர்களுடைய புதிய வீடாக மாறுகிறது.
ரெமி தனது குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கும்படியும், தனது சமையல் பணியைத் தொடரும்படியும் புதிய வாழ்க்கை அமைகூறி தருணத்தில் படம் நிறைகிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்மூன்றாம்நூறு
#கீதப்ப்ரியன்பாஃப்டா
#கீதப்ப்ரியன்கோல்டன்க்ளோப்
தி கோல்டன் காம்பஸ் The Golden Compass 2007
ஒரு மனிதனின் ஆன்மா அவனிடமிருந்து பிரிந்து, தனித்துவமான விலங்கு வடிவில் அவனுடனேயே வாழ்ந்தால் அந்த உலகம் எப்படி இருக்கும்?
மனிதர்களின் நம்பிக்கைகள், சிந்தனைகள், சுதந்திரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகார அமைப்பு ஒன்று அந்த உலகை ஆட்சி செய்தால், அதன் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?
இத்தகைய அதீத கற்பனைக்குள் பார்வையாளரை அழைத்துச் செல்லும் திரைப்படம்தான் கிறிஸ் வீட்ஸ் இயக்கியுள்ள தி கோல்டன் காம்பஸ் The Golden Compass 2007.
பிலிப் புல்மனின் நார்தர்ன் லைட்ஸ் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், வழக்கமான மாயாஜாலச் சாகசத் திரைப்படத்தின் எல்லைகளைத் தாண்டி, அதிகாரம், அறிவு, நம்பிக்கை, தனிமனிதச் சுதந்திரம் போன்ற கருத்துகளைத் தனது கற்பனை உலகின் வழியாக அணுகுகிறது.
வேற்று உலகம் ஒன்றை உருவாக்கியிருக்கும் இதன் உலகக் கட்டமைப்பு, நமக்குப் பரிச்சயமான சமூக அமைப்புகளையும் முற்றிலும் புதுமையான கற்பனைக் கூறுகளையும் இணைக்கிறது.
மனிதர்களின் ஆன்மா விலங்கு வடிவில் வெளிப்படுவது, குழந்தைப் பருவத்தில் அந்த விலங்குகள் பல்வேறு வடிவங்களை எடுப்பது போன்ற கற்பனைகள், திரைப்படத்தின் அடிப்படைத் தனித்துவத்தை உருவாக்குகின்றன.
இவை வெறும் காட்சிக் கவர்ச்சிக்கான அம்சங்களாக இல்லாமல், மனிதனின் உள்ளுணர்வுக்கும் தனித்த அடையாளத்துக்கும் இடையிலான உறவைப் பற்றிய சிந்தனையைத் தூண்டுகின்றன.
இயக்குநர் கிறிஸ் வீட்ஸ் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால், விரிவான இலக்கியக் கற்பனை உலகை இரண்டு மணி நேரத்திற்குள் திரைமொழியாக மாற்றுவதாகும்.
நீண்டகாலத் தயாரிப்புத் திட்டமிடல், திரைக்கதை மாற்றங்கள், இயக்குநர் மாற்றம் எனப் பல தடைகளைக் கடந்து உருவான இப்படத்தில் அந்தச் சவாலின் தாக்கம் தென்படுகிறது.
பல கதாபாத்திரங்களும் புதிய உலகின் விதிகளும் கருத்துகளும் குறுகிய நேரத்தில் அறிமுகப்படுத்தப்படுவதால், சில இடங்களில் கதை சொல்லல் வேகமாக நகர்கிறது.
கதாபாத்திரங்களின் மனநிலையையும் உறவுகளையும் விரிவாக உணர்வதற்குக் கிடைக்கும் நேரம் குறைகிறது. இதனால் கற்பனை உலகின் செறிவுக்கும் திரைக்கதையின் சுருக்கத்திற்கும் இடையில் ஒரு சமநிலையற்ற தன்மை உருவாகிறது.
இருப்பினும், திரைப்படத்தின் மையக் கற்பனையைத் திரையில் உருவாக்கியிருக்கும் விதம் பாராட்டத்தக்கது.
குறிப்பாக, ஒவ்வொரு மனிதருடனும் இணைந்திருக்கும் விலங்கு வடிவ ஆன்மாக்கள், அந்த உலகின் இயல்பான அங்கங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றின் அசைவுகள், தோற்றங்கள், மனிதர்களுடனான தொடர்புகள் ஆகியவற்றை நம்பகமாக உருவாக்குவதில் கணினி வரைகலைத் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கவசம் அணிந்த பனிக்கரடிகள் போன்ற கற்பனை உயிரினங்களின் உருவாக்கமும் அவற்றின் உடல்மொழியும் காட்சிகளுக்கு வலிமை சேர்க்கின்றன.
இந்தக் காட்சியமைப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், திரைப்படத்தின் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இதற்காக அகாடமி விருதிலும் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைக் கழக விருதிலும் சிறந்த காட்சித் தொழில்நுட்பத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் காஸ்னரின் தயாரிப்பு வடிவமைப்பு, இப்படத்தின் கற்பனை உலகிற்கு தனித்த அடையாளத்தை அளிக்கிறது.
நமக்குத் தெரிந்த கட்டிடக்கலை, பொருட்கள், பண்பாட்டு அடையாளங்கள் ஆகியவற்றுடன் வேறொரு உலகத்திற்குரிய கற்பனைக் கூறுகளை இணைக்கும் அணுகுமுறை இதில் காணப்படுகிறது.
ஆக்ஸ்போர்டின் வரலாற்றுச் சூழலை நினைவூட்டும் கட்டிடங்கள், அதிகார அமைப்பின் பிரம்மாண்டமான இடங்கள், பனிப்பிரதேசங்களின் இயற்கைச் சூழல் என வெவ்வேறு காட்சிப் பின்னணிகள் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே ஆகிய இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் அரங்குகளில் உருவாக்கப்பட்ட காட்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து விரிந்த உலக அனுபவத்தை வழங்குகின்றன.
கலை இயக்கம் வெறும் பின்னணியாகச் செயல்படாமல், அந்த உலகின் அரசியல் அமைப்பு, சமூக வேறுபாடுகள், வாழ்க்கை முறை ஆகியவற்றையும் உணர்த்துகிறது.
ஹென்றி பிராமின் ஒளிப்பதிவு, இந்தக் கற்பனை உலகின் வெவ்வேறு நிலப்பரப்புகளையும் அதன் பிரம்மாண்டத்தையும் திரையில் வெளிப்படுத்த உதவுகிறது.
உட்புறக் கட்டிடங்களின் செழுமைக்கும் பனிப்பிரதேசங்களின் திறந்த வெளிக்கும் இடையே உருவாகும் காட்சியியல் வேறுபாடு, உலகின் பரந்த தன்மையை உணர்த்துகிறது.
ஆடை வடிவமைப்பும் கதாபாத்திரங்களின் சமூக நிலை, அதிகாரம், பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, கணினி வரைகலை ஆகியவை ஒரே கற்பனை உலகின் பகுதிகளாகச் செயல்படுகின்றன.
நடிப்பில் டகோட்டா ப்ளூ ரிச்சர்ட்ஸ் ஏற்றுள்ள லைரா பெலாகுவா கதாபாத்திரம் படத்தின் மைய ஈர்ப்பாக அமைகிறது. இது அவரது முதல் நடிப்புப் பணி என்ற பின்னணியில், கற்பனை உலகின் மையத்தில் இருக்கும் இளம் கதாபாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
குழந்தைத்தனமும் துணிச்சலும் ஆர்வமும் கலந்த அணுகுமுறை, கதாபாத்திரத்தின் தனித்தன்மையை உணர்த்துகிறது.
நிக்கோல் கிட்மேன் நடித்துள்ள மரிசா கோல்டர் கதாபாத்திரம், அழகிய தோற்றத்திற்குப் பின்னால் அதிகாரமும் மர்மமும் கலந்த ஆளுமையைக் கொண்டிருக்கிறார்.
அவரது நடிப்பு, கதாபாத்திரத்தின் வெளிப்புற வசீகரத்திற்கும் உள்ளார்ந்த கடுமைக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது.
டேனியல் கிரேக் நடித்துள்ள லார்ட் அஸ்ரியல், மர்மமும் அறிவார்ந்த தேடலும் நிறைந்த ஆளுமையாக உருவாக்கப்பட்டுள்ளார்.
சாம் எலியட்டின் லீ ஸ்கோர்ஸ்பி கதாபாத்திரம், அனுபவமும் நகைச்சுவை உணர்வும் கொண்ட தனித்துவமான மனிதராகப் படத்திற்கு வேறொரு சுவையை அளிக்கிறது.
ஈவா கிரீன் நடித்துள்ள செரஃபினா பெக்காலா, கற்பனை உலகின் மாயத்தன்மையை வலுப்படுத்துகிறார்.
இயன் மெக்கெல்லனின் குரலில் உயிர்பெறும் ஐயோரெக் பைர்னிசன், கவசம் அணிந்த கரடியின் கம்பீரத்தையும் தனித்துவமான ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது.
ஃப்ரெடி ஹைமோரின் குரல் நடிப்பில் உருவாகும் பன்டலாமெய்ன், லைராவின் உலகத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கும் உணர்வைத் தருகிறது.
அலெக்சாண்டர் டெஸ்ப்ளாவின் இசை, படத்தின் கற்பனைத் தன்மைக்கும் உணர்ச்சிச் சூழலுக்கும் துணையாக அமைகிறது.
இசையின் மூலம் உலகின் மர்மம், பிரம்மாண்டம், சாகச உணர்வு ஆகியவை வலுப்பெறுகின்றன. கேட் புஷ் எழுதி பாடியுள்ள ‘லைரா’ பாடல் இறுதிப் பெயர்ப்பட்டியலில் இடம்பெறுகிறது. இசையும் காட்சிகளும் இணைந்து திரைப்படத்தின் தனித்துவமான கற்பனைச் சூழலை உருவாக்குகின்றன.
திரைப்படத்தின் முக்கியமான கருத்தியல் அடுக்கு, அறிவுக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான உறவாகும். மக்களின் நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் கட்டுப்படுத்தும் அமைப்பு, தனக்குச் சாதகமான கருத்துகளையே உண்மையாக நிலைநிறுத்த முயல்கிறது.
அறிவியல் தேடல், புதிய கண்டுபிடிப்புகள், கேள்வி கேட்கும் மனப்பான்மை ஆகியவை அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படும்போது உருவாகும் முரண்பாடுகளை இப்படம் கற்பனையான மத அமைப்பின் வழியாக வெளிப்படுத்துகிறது.
இந்த அமைப்பு ஒரு குறிப்பிட்ட மத நிறுவனத்தின் நேரடி உருவகமாக அமையாமல், பிடிவாதமான கொள்கைகளைக் கொண்ட எந்த அதிகார அமைப்பையும் நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாவலில் இருந்த மத அதிகாரத்தின் மீதான நேரடியான விமர்சனம் திரைப்பட வடிவத்தில் மென்மையாக்கப்பட்டுள்ளது. இதனால் மூலப் படைப்பின் கருத்தியல் கூர்மை குறைந்திருப்பதாக உணர முடிகிறது.
இந்த மாற்றம் திரைப்படத்தின் அடிப்படை நோக்கத்தையும் அதன் கலைச் சுதந்திரத்தையும் பற்றிய விவாதத்தை உருவாக்குகிறது. ஒரு நாவலைத் திரைப்படமாக மாற்றும்போது அதன் நீளம், காட்சிமொழி, பார்வையாளர் வட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்வது இயல்பானது.
வெளியீட்டுக்கு முன்பே மதம், நம்பிக்கை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைச் சுற்றி எழுந்த விவாதங்கள் படத்தின் பொதுவான வரவேற்பில் தாக்கத்தை ஏற்படுத்தின.
மத அமைப்புகளை விமர்சிக்கும் படைப்பாக இதனைப் புரிந்துகொண்ட சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன; மறுபுறம், அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் சிந்தனையை குழந்தைகளும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இந்த விவாதங்கள் படத்தின் கருத்தியல் பின்னணியைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால் திரைப்படத்தின் கலை மதிப்பை அந்த விவாதங்களுக்குள் மட்டுமே சுருக்கிவிட முடியாது. அதிகாரம், சுதந்திரம், அறிவுத் தேடல் ஆகியவை எந்தக் காலத்திலும் பொருத்தமுடைய கேள்விகள் என்பதே இதன் அடிப்படை வலிமை.
வணிக ரீதியாக உலகளவில் 372 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலித்திருந்தாலும், 180 மில்லியன் டாலர் தயாரிப்புச் செலவைக் கருத்தில் கொண்டால் அதன் வெற்றி எதிர்பார்த்த அளவிலான தொடர்ச்சியை உருவாக்கவில்லை.
விமர்சன வரவேற்பும் கலவையாகவே அமைந்தது. காட்சித் தொழில்நுட்பம், நடிப்புத் தேர்வு, கற்பனை உலகின் உருவாக்கம் ஆகியவை பாராட்டப்பட்ட அதே நேரத்தில், வேகமான கதை சொல்லல், போதிய வளர்ச்சியடையாத சில கதாபாத்திரங்கள், மூலப் படைப்பின் கருத்தியல் ஆழம் குறைக்கப்பட்டமை ஆகியவை குறைகளாகச் சுட்டப்பட்டன.
திட்டமிடப்பட்டிருந்த அடுத்தடுத்த திரைப்படங்கள் உருவாகாததும், இந்தப் படத்தின் தனித்துவமான கற்பனை உலகை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்பை முடிவுக்குக் கொண்டுவந்தது.
தி கோல்டன் காம்பஸ் முழுமையான கதை அனுபவத்தை வழங்குவதில் சில வரம்புகளைக் கொண்டிருந்தாலும், கற்பனை உலகைத் திரையில் உருவாக்கிய தொழில்நுட்பத் திறன், அதன் காட்சியமைப்பின் செழுமை, அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பற்றிய அடிப்படைக் கேள்விகள் ஆகியவற்றால் தனித்த அடையாளத்தைப் பெறுகிறது.
பிரம்மாண்டமான காட்சிகளைக் கடந்து, மனிதன் எதை நம்ப வேண்டும், எதைத் தேட வேண்டும், எதைக் கேள்வி கேட்க வேண்டும் என்பதைச் சிந்திக்கத் தூண்டும் கற்பனைத் திரைப்படமாக இது அமைகிறது.
அதன் குறைகளையும் உணர்ந்துகொண்டு பார்க்கும்போது, காட்சிப் புதுமையையும் கருத்தியல் விவாதத்தையும் ஒரே அனுபவத்தில் இணைக்க முயன்ற ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக தி கோல்டன் காம்பஸ் நினைவில் நிற்கிறது.
=====================================
படத்தின் கதை
வேற்று உலகம் ஒன்றில் நடைபெறும் இந்தக் கதையில், மக்களின் நம்பிக்கைகளையும் வாழ்க்கையையும் மதகுருமார்களின் ஆட்சிக் குழுவான மாஜிஸ்டீரியம் கட்டுப்படுத்துகிறது.
அந்த உலகில் ஒவ்வொரு மனிதரின் ஆன்மாவும் அவர்களுடைய உடலுக்கு வெளியே ஓர் உயிரினத்தின் வடிவில் துணையாக வாழ்கிறது.
அந்த உயிரினம் 'டேமன்' என்று அழைக்கப்படுகிறது. மனிதரும் அவர்களுடைய டேமனும் எப்போதும் அருகருகே இருக்க வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் அவர்களுடைய மனநிலைக்கு ஏற்ப டேமன்களின் உருவம் மாறிக்கொண்டே இருக்கும். பருவ வயதை அடைந்ததும் அவை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் நிலைத்துவிடும்.
லைரா பெலாகுவா (டகோட்டா புளூ ரிச்சர்ட்ஸ்) என்ற சிறுமி பெற்றோரை இழந்த அனாதை.
ஆக்ஸ்போர்டில் உள்ள ஜோர்டன் கல்லூரியில் அவள் வளர்க்கப்படுகிறாள். அவளுடன் எப்போதும் இருக்கும் டேமன் பான்டலெய்மன் (ஃப்ரெடி ஹைமோர்). லைராவின் மாமாவான லார்ட் அஸ்ரியல் (டேனியல் கிரேக்), அந்தக் கல்லூரியுடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளரும் பயணியுமாவார்.
அவர் நீண்ட காலமாக 'டஸ்ட்' எனப்படும் மர்மமான அண்டத் துகள்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். இந்தத் துகள்களைப் பற்றிப் பேசுவதையே மாஜிஸ்டீரியம் தடை செய்துள்ளது.
வட துருவப் பகுதியில் டஸ்ட் இருப்பதாகவும், அந்தத் துகள்கள் எண்ணற்ற உலகங்களை ஒன்றோடொன்று இணைக்கும் தன்மை கொண்டவை என்றும் அஸ்ரியல் கண்டறிகிறார்.
அவர் தனது ஆய்வுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிக் கல்லூரியில் விளக்குகிறார்.
அவரது கோட்பாடு உண்மையென நிரூபிக்கப்பட்டால், உலகின் மீது மாஜிஸ்டீரியம் வைத்திருக்கும் கட்டுப்பாடு பாதிக்கப்படும் என்பதால், இந்த ஆய்வே அவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
இருந்தாலும், அஸ்ரியலின் அடுத்த வடதுருவப் பயணத்திற்குக் கல்லூரி நிதியுதவி வழங்குகிறது.
இதற்கிடையில், குழந்தைகளைக் கடத்தும் ஒரு குழு பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. அந்தக் குழுவினர் 'கோப்ளர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.
லைராவின் நெருங்கிய நண்பனான ரோஜர் பார்ஸ்லோ (பென் வாக்கர்), ஜோர்டன் கல்லூரியில் சமையலறைப் பணியில் இருக்கும் சிறுவன். பில்லி கோஸ்டா (சார்லி ரோவ்) என்ற இளம் ஜிப்ஷிய சிறுவனும் கடத்தப்படுகிறான்.
இவ்வாறு பல குழந்தைகள் காணாமல் போவதால், அவர்களைப் பற்றிய கவலை லைராவுக்கு அதிகரிக்கிறது.
இந்தச் சூழலில், கல்லூரிக்கு நெருக்கமானவராக அறிமுகமாகும் செல்வந்தப் பெண் மரிசா கல்டர் (நிக்கோல் கிட்மன்), லைராவைத் தன்னுடன் லண்டனுக்கு வந்து தங்குமாறு அழைக்கிறார்.
லைரா அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு, கல்லூரியின் தலைவர் அவளிடம் ஒரு முக்கியமான பொருளை ஒப்படைக்கிறார்.
அது அஸ்ரியலுக்குச் சொந்தமானதும், உண்மையை வெளிப்படுத்தும் கருவியுமான அலெத்தியோமீட்டர் ஆகும்.
திசைகாட்டியைப் போன்ற இந்தக் கருவி, அதன் குறியீடுகளைப் புரிந்துகொள்ளத் தெரிந்தவர்களுக்கு உண்மையை அறிய உதவும். இதை யாரிடமும் காட்டாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், குறிப்பாக கல்டரிடம் இதைப் பற்றிச் சொல்லக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
லண்டனில் ஆரம்பத்தில் அன்பாக நடந்துகொள்ளும் கல்டர், லைரா டஸ்ட் பற்றித் தனக்குத் தெரியும் என்று பெருமையாகப் பேசுவதை அறிந்ததும் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்கிறார்.
டஸ்ட் பற்றிப் பேசக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கிறார். இதனால் கல்டரின் உண்மையான நோக்கம் குறித்து லைராவுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.
பின்னர், குழந்தைகளைக் கடத்தும் கோப்ளர் குழுவின் தலைவியே கல்டர் என்பதை லைரா கண்டறிகிறாள்.
மேலும், அலெத்தியோமீட்டரைத் திருடுவதற்காக கல்டரின் டேமன் முயற்சி செய்கிறது.
இதையடுத்து லைராவும் பானும் அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர். ஆனால் கோப்ளர்கள் அவர்களைப் பிடித்துவிடுகின்றனர்.
அந்த நேரத்தில் ஜிப்ஷியர்கள் லைராவைக் காப்பாற்றுகின்றனர். அவர்கள் படகுகளில் பயணம் செய்து வாழும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கடத்தப்பட்ட குழந்தைகளில் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதால், அவர்களை மீட்பதற்காக வடக்கு நோக்கிப் பயணம் செய்யத் தயாராகியுள்ளனர்.
லைராவும் அவர்களுடன் இணைகிறாள். அவர்களுடைய பயணத்தின் அடுத்த முக்கிய இடம் நார்வேயின் லாப்லாந்து பகுதியில் உள்ள ட்ரோல்சுண்ட் துறைமுகம்.
ஜிப்ஷியர்களில் மூத்தவரான ஃபார்டர் கோரம் (டாம் கர்ட்னே), லைராவிடம் இருக்கும் அலெத்தியோமீட்டரை அடையாளம் கண்டுகொள்கிறார்.
அவரது வழிகாட்டுதலுடன் லைரா அந்தக் கருவியின் குறியீடுகளைப் படித்து அதன் மூலம் கிடைக்கும் தகவல்களைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்கிறாள்.
அப்போது சூனியக்காரர்களின் தலைவியான செரஃபினா பெக்கலா (ஈவா கிரீன்), வானில் பறந்து வந்து ஜிப்ஷியர்களின் கப்பலை அடைகிறாள்.
கடத்தப்பட்ட குழந்தைகள் போல்வாங்கர் என்ற மாஜிஸ்டீரியத்தின் சோதனை நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாக லைராவிடம் தெரிவிக்கிறாள்.
இதற்கிடையில், கல்டர் மாஜிஸ்டீரியத்துடன் இணைந்து செயல்படுகிறார்.
லைராவைக் கண்காணிப்பதற்காக விஷம் கொண்ட இரண்டு இயந்திர ஈக்களை அனுப்புகிறார்.
அவை சிறிய உளவு கருவிகளாகச் செயல்படுகின்றன. அவற்றில் ஒன்றை ஃபார்டர் கோரம் பிடித்து ஒரு சிறிய உலோகப் பெட்டிக்குள் அடைத்து மூடிவிடுகிறார். மற்றொன்று தப்பிச் சென்றுவிடுகிறது.
மறுபுறம், அஸ்ரியல் பனிக்கரடிகளின் ராஜ்ஜியமான ஸ்வால்பார்டை அடைகிறார்.
அங்கு சாமோயெட் இனத்தைச் சேர்ந்தவர்கள் அவரைப் பிடிக்கின்றனர். அவர்கள் கல்டரால் பணியமர்த்தப்பட்டவர்கள்.
பின்னர், பனிக்கரடிகளின் அரசனான ராக்னர் ஸ்டர்லூசன் (இயன் மெக்ஷேன்), அஸ்ரியலைச் சிறையில் அடைக்கிறான். ராக்னர் முன்பு ஆட்சியில் இருந்தவரிடமிருந்து அரியணையைக் கைப்பற்றியவன்.
ட்ரோல்சுண்டில் லைரா, லீ ஸ்கோர்ஸ்பி (சாம் எலியட்) என்ற டெக்சாஸ் நாட்டைச் சேர்ந்த வானூர்தி ஓட்டுநரைச் சந்திக்கிறாள்.
அவன் வெப்பக் காற்று பலூனில் பயணம் செய்பவன். தன்னுடன் சேர்ந்து பயணிக்கத் தகுதியான நண்பனான அயோரெக் பைர்னிசனை (இயன் மெக்கெல்லன்) லைராவுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறான்.
அயோரெக் ஒரு கவசம் அணிந்த பனிக்கரடி. அவன் முன்பு பனிக்கரடிகளின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்தவன்.
போரில் தோல்வியடைந்ததால் அவமானத்துடன் நாடு கடத்தப்பட்டிருக்கிறான். அவனுடைய கவசம் பறிக்கப்பட்டிருப்பதால், அவன் தனது உண்மையான வலிமையையும் மரியாதையையும் இழந்த நிலையில் வாழ்கிறான்.
ஃபார்டர் கோரமும் லைராவும் அலெத்தியோமீட்டரின் வழிகாட்டுதலுடன் அயோரெக்கின் கவசம் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கின்றனர்.
மாஜிஸ்டீரியத்தின் உள்ளூர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கவசத்தை மீட்டுக் கொடுக்கின்றனர்.
தனது கவசத்தை மீண்டும் அணிந்துகொண்ட அயோரெக், லீ ஸ்கோர்ஸ்பியுடன் சேர்ந்து ஜிப்ஷியர்களின் வடக்கு நோக்கிய பயணத்தில் இணைகிறான்.
அலெத்தியோமீட்டர் காட்டும் வழியைப் பின்பற்றி லைரா ஒரு இடத்தை அடைகிறாள்.
அங்கு பில்லி கோஸ்டாவைக் காண்கிறாள். அவன் மனநிலை பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருக்கிறான்.
அவனுடைய டேமனுக்குப் பதிலாகக் காய்ந்த மீன் ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறான்.
கோப்ளர்கள் குழந்தைகளின் உடலிலிருந்து அவர்களுடைய டேமன்களைப் பிரிக்கும் 'இன்டர்சிஷன்' என்ற அறுவைச் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி சோதனைகள் செய்திருப்பதை லைரா அறிகிறாள்.
இந்தச் செயல்முறை மனிதருக்கும் அவர்களுடைய ஆன்மாவின் உருவமான டேமனுக்கும் இடையிலான தொடர்பைத் துண்டிக்கிறது.
லைரா பில்லியை மீண்டும் அவனுடைய தாயான மா கோஸ்டாவிடம் (கிளேர் ஹிக்கின்ஸ்) அழைத்துச் செல்கிறாள்.
ஆனால் அவர்கள் ஜிப்ஷியர்களின் முகாமுக்குத் திரும்பியதும், சாமோயெட் குழுவினர் அந்த முகாமைத் தாக்குகின்றனர்.
அந்தத் தாக்குதலில் லைரா பிடிபடுகிறாள். அவளைப் பனிக்கரடிகளின் அரசனான ராக்னரிடம் அழைத்துச் செல்கின்றனர்.
லைரா கடத்தப்பட்டதை அறிந்த அயோரெக்கும் லீயும் அவளைப் பின்தொடர்கின்றனர். லீ தனது வெப்பக் காற்று பலூனில் அவர்களைத் தேடிச் செல்கிறான்.
ராக்னர், அயோரெக்கை எதிர்கொண்டால் அவனைத் தனது படையினரின் உதவியுடன் எளிதில் வீழ்த்திவிடலாம் என்று நினைக்கிறான்.
இதை உணர்ந்த லைரா ஒரு தந்திரம் செய்கிறாள். ராக்னருக்கு தனக்கென ஒரு டேமன் வேண்டும் என்ற ஆசை இருப்பதை அறிந்த அவள், தான் அயோரெக்கின் டேமன் என்று அவனிடம் கூறுகிறாள்.
அயோரெக்கை நேருக்கு நேர் போரில் கொன்றுவிட்டால் அவனுடைய டேமனைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்று ராக்னரை நம்ப வைக்கிறாள்.
இதனால் ராக்னர் தனது படையினரின் உதவியின்றி அயோரெக்குடன் தனிப்பட்ட போரில் ஈடுபட ஒப்புக்கொள்கிறான்.
போரின் தொடக்கத்தில் ராக்னர் வெற்றி பெறுவது போலத் தோன்றுகிறது. ஆனால் அயோரெக் தனது பலம் குறைந்துவிட்டதைப் போல நடித்து ராக்னரை ஏமாற்றுகிறான்.
சரியான தருணத்தில் எதிர்த்துத் தாக்கி ராக்னரைக் கொல்கிறான். இதன் மூலம் தனது தந்தைக்குப் பழிவாங்குவதுடன், பனிக்கரடிகளின் அரியணையையும் மீண்டும் கைப்பற்றுகிறான்.
அதன்பிறகு அயோரெக் லைராவை போல்வாங்கர் சோதனை நிலையத்திற்குக் கொண்டுசெல்கிறான். அந்த இடத்தை அடைவதற்கு முன்பு ஒரு ஆழமான பிளவைக் கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதன் குறுக்கே மிகவும் குறுகிய பனிப்பாலம் ஒன்று அமைந்திருக்கிறது. அயோரெக்கால் அந்தப் பாலத்தில் லைராவுடன் செல்ல முடியாததால், அவள் தனியாக அதைக் கடக்க வேண்டியிருக்கிறது.
லைரா மறுபுறத்தை அடைந்ததும் அந்தப் பனிப்பாலம் உடைந்து விழுகிறது.
போல்வாங்கர் நிலையத்தை அடைந்த லைரா, அங்கு தனது நண்பன் ரோஜரை மீண்டும் சந்திக்கிறாள். ஆனால் அங்குள்ள விஞ்ஞானிகள் அவளைக் கண்டுபிடித்துவிடுகின்றனர்.
லைராவையும் பானையும் பிடித்து இன்டர்சிஷன் அறைக்குள் கொண்டு செல்கின்றனர். அங்கு அவர்களுடைய டேமன்களிலிருந்து பிரிக்கும் சோதனைக்கு உட்படுத்தப்படவிருந்த நிலையில், இருவரும் மயக்கமடைகின்றனர். அப்போது கல்டர் அங்கு வந்து லைராவைக் காப்பாற்றுகிறார்.
பின்னர் லைரா கல்டரின் அறையில் விழித்தெழுகிறாள். அப்போது கல்டர், இன்டர்சிஷன் சோதனையை ஏன் நடத்துகிறார்கள் என்பதை விளக்குகிறார்.
குழந்தைகளின் டேமன்கள் பருவ வயதில் நிலையான உருவத்தை அடையும் போது, டஸ்ட் அவர்களைத் தீய வழியில் பாதிக்கும் என்று மாஜிஸ்டீரியம் நம்புகிறது.
அந்தப் பாதிப்பிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகவே அவர்களுடைய டேமன்களிலிருந்து பிரிக்கும் இந்தச் சோதனை நடத்தப்படுவதாகக் கூறுகிறார்.
அதன்பிறகு கல்டர் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறார். தானே லைராவின் தாய் என்றும், சில காரணங்களால் குழந்தையாக இருந்த லைராவைத் தன்னிடமிருந்து பிரித்து ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.
இதைக் கேட்ட லைரா, அஸ்ரியல் தனது மாமா என்று இதுவரை நினைத்திருந்த உறவு உண்மையில் வேறானது என்பதைப் புரிந்துகொள்கிறாள். அஸ்ரியல்தான் தனது தந்தை என்பதை உணர்கிறாள்.
கல்டர் லைராவிடம் இருக்கும் அலெத்தியோமீட்டரைக் கேட்கிறார். ஆனால் லைரா அதை அவரிடம் கொடுக்காமல், ஃபார்டர் கோரம் பிடித்து உலோகப் பெட்டிக்குள் அடைத்துவைத்திருந்த இயந்திர உளவு ஈயை அவரிடம் கொடுக்கிறாள்.
அந்தப் பெட்டியைத் திறந்ததும் அதிலிருந்த ஈ கல்டரைக் கொட்டுகிறது. அதன் விஷத்தால் கல்டர் மயக்கமடைந்து விழுகிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் லைரா, குழந்தைகளைப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இன்டர்சிஷன் இயந்திரத்தை அழிக்கிறாள்.
இதனால் அங்கு வெடிப்புகளும் குழப்பமும் ஏற்படுகின்றன. லைரா மற்ற குழந்தைகளை அழைத்துக்கொண்டு நிலையத்திலிருந்து வெளியேறுகிறாள்.
ஆனால் வெளியே அவர்களுக்காக மற்றொரு ஆபத்து காத்திருக்கிறது. டாடர் இனத்தைச் சேர்ந்த காவலர்களும் அவர்களுடைய ஓநாய் வடிவ டேமன்களும் குழந்தைகளை வழிமறிக்கின்றனர்.
அப்போது அயோரெக், லீ ஸ்கோர்ஸ்பி, ஜிப்ஷியர்கள் மற்றும் செரஃபினா தலைமையில் பறந்து வரும் சூனியக்காரர்கள் அங்கு வந்து சேர்கின்றனர்.
அவர்கள் டாடர் காவலர்களுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடிக்கின்றனர். இதனால் லைராவும் மற்ற குழந்தைகளும் மீட்கப்படுகின்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பிறகு, லீ ஸ்கோர்ஸ்பி தனது வெப்பக் காற்று பலூனில் லைரா, ரோஜர், அயோரெக் மற்றும் செரஃபினாவை ஏற்றிக்கொண்டு வடக்கு நோக்கிப் புறப்படுகிறான்.
அவர்கள் அஸ்ரியலைத் தேடிச் செல்கின்றனர். பயணத்தின்போது செரஃபினா ஒரு தீர்க்கதரிசனத்தை லைராவிடம் தெரிவிக்கிறாள்.
வரவிருக்கும் மாஜிஸ்டீரியத்துக்கு எதிரான போரில் லைரா முக்கியப் பங்கு வகிக்க வேண்டியிருக்கும் என்பதே அந்தத் தீர்க்கதரிசனம்.
மாஜிஸ்டீரியம் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பல உலகங்களையும் கட்டுப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவள் விளக்குகிறாள்.
இதைக் கேட்ட லைரா, மாஜிஸ்டீரியத்தின் கட்டுப்பாட்டையும் அதன் திட்டத்தையும் எதிர்த்துப் போராட உறுதி கொள்கிறாள்.
அஸ்ரியலைத் தேடும் பயணம் தொடரும் நிலையில், வரவிருக்கும் போரில் தானும் ஈடுபட வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவள் வடக்கு நோக்கிப் பயணிக்கையில் படம் நிறைகிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்மூன்றாம்நூறு
#கீதப்ப்ரியன்பாஃப்டா
#கீதப்ப்ரியன்bafta