சென்னை சர்வதேசத் திரைப்படத் திருவிழாவில் கண்ட "The Last Execution" (2021), கிழக்கு ஜெர்மனியின் (GDR) இருண்ட பக்கங்களை ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்த ஒரு மாபெரும் கலைப்படைப்பு.
இயக்குநர் ஃபிரான்சைஸ்கா ஸ்டன்கெல், ஒரு வரலாற்றுத் துயரத்தை வெறும் ஆவணமாகக் காட்டாமல், தனிமனிதனின் தார்மீகச் சிதைவை விவரிக்கும் உளவியல் அதிர்ச்சியாகச் செதுக்கியுள்ளார்.
ஜனநாயகம் என்ற பெயரையே நகைப்புக்கிடமாக்கிய அந்த நாட்டில், லட்சிய விஞ்ஞானி ஃபிரான்ஸ் வால்டரின் மேதமை எப்படி உளவுப்பணியால் சுரண்டப்படுகிறது என்பதை அவர் மிக நேர்த்தியாகக் கையாண்டுள்ளார்.
நடிகர் லார்ஸ் ஐடிங்கர், பிரான்ஸ் வால்டராக உலகத் தரம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு புத்திசாலித்தனமான விஞ்ஞானி, குற்ற உணர்ச்சியால் மதுவுக்கு அடிமையாகி, உடல் மெலிந்து, ஒரு நடைப்பிணமாக மாறும் அந்த மாற்றத்தை அவரது கண்கள் அசாத்தியமாகப் பிரதிபலிக்கின்றன.
அவருக்கு இணையாக, மேலதிகாரியாக வரும் தேவிட் ஸ்ட்ரைசோ, ஒரு அதிகார வர்க்கத்தின் வஞ்சகத்தையும் குரூரத்தையும் அமைதியான முகபாவனைகளிலேயே கடத்துகிறார். இவர்களின் நடிப்பு, பார்வையாளர்களை அந்த 1981-ஆம் ஆண்டின் இறுக்கமான சூழலுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜோஹென் ஸ்டாக்கர், படத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப மங்கிய நீல நிற மற்றும் சாம்பல் வண்ண அமைப்பை கையாண்டுள்ளார். அடுக்கக வீட்டின் சொகுசு ஒருபுறம் இருந்தாலும், கேமரா கோணங்கள் அந்த வீட்டையே ஒரு சிறைச்சாலை போலக் காட்டுகின்றன.
படத்தின் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு அந்தப் பதற்றத்தை பார்வையாளர்களின் நரம்புகளில் கடத்துகிறது; தொலைபேசி ஒட்டுக்கேட்பின் மெல்லிய சத்தம் முதல், அந்த 'பாயிண்ட் பிளாங்க்' துப்பாக்கிச் சூட்டின் அதிர்வு வரை ஒருவிதமான சிறைக்குள் பிடிபட்ட உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது.
இப்படம் சர்வதேச அளவில் பெரும் அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. மியூனிக் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை இப்படம் தட்டிச் சென்றது. 1981-இல் கொல்லப்பட்ட விஞ்ஞானி வெர்னர் டெஸ்ஃபேயின் கதையை உலக சினிமா மேதமையுடன் கூறும் இப்படம், 1987-இல் மரண தண்டனை ஒழிக்கப்படும் முன் நடந்த அந்த கடைசிப் படுகொலையைத் திரையில் ஆவணப்படுத்தியுள்ளது.
ஒரு விஞ்ஞானியின் ஆன்மா அதிகாரத்தால் எப்படிச் சிதைக்கப்படுகிறது என்பதையும், காலத்தின் தேவையற்ற பலியாக அவர் மாறுவதையும் விவரிக்கும் இப்படம், சரித்திரத் திரைப்பட ஆர்வலர்கள் தவறவிடக் கூடாத ஒரு பொக்கிஷம்.
படத்தின் கதை:-
கிழக்கு ஜெர்மனி அல்லது GDR -German Democratic Republic என்றாலே 'Trabant' கார்கள் முதல் அரசு பயங்கரவாதம் வரை ஒரு வித பைத்தியக்காரத்தனம் நிறைந்த நாடாகவே வரலாற்றில் அறியப்படுகிறது.
ஜனநாயகம் என்ற பெயரையே நகைப்புக்கிடமாக்கிய அந்தச் சூழலில், லட்சிய விஞ்ஞானியான ஃபிரான்ஸ் வால்டர் தனது முனைவர் பட்ட ஆய்விற்காக பெரும் பாராட்டுப் பெறுகிறார்.
1981-ஆம் ஆண்டு, 40-களின் தொடக்கத்தில் இருக்கும் அவருக்கு ஒரு மதிப்புமிக்க பேராசிரியர் பதவி வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரை செய்கிறது.
ஆனால், அந்தப் பதவியைப் பெறுவதற்கு முன்னால், கிழக்கு ஜெர்மனி அரசின் மாநில பாதுகாப்பு சேவை (State Security Service - HVA) அவரை ஒரு உளவுப்பணி அதிகாரியாகச் செயல்படக் கோருகிறது.
இது ஒரு தற்காலிகப் பணி என்று கூறி, குதிரைக்குக் கேரட் கட்டுவதைப் போல அவரை அதிகாரிகள் ஆட்டுவிக்கின்றனர்.
அவருக்குச் சொகுசுக் கார், மிகச்சிறந்த உட்புற அலங்காரத்துடன் கூடிய பெரிய அடுக்கக வீடு, எல்பி டர்ன்டேபிள், உயர்தர மது வகைகள் என அனைத்தையும் தந்து ஆசை காட்டுகின்றனர்.
அவர் தனது காதலியைத் திருமணம் செய்து கொள்கிறார்.
திருமண விழாவில் GDR அதிகாரிகள் அவர்களுக்கு இரண்டு 'சர்ஃபிங்' படகுகளைப் பரிசாகத் தருகின்றனர். வால்டரின் மனைவிக்கு 'சர்ஃபிங்' பிடிக்கும் என்று அவர்கள் உளவறிந்து தந்துள்ளனர், ஆனால் நிதர்சனத்தில் அவருக்குச் சர்ஃபிங் செய்யத் தெரியாது. இதுதான் GDR உளவுத்துறையின் லட்சணம் மக்களின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பதில் அவர்கள் அத்தனைத் தீவிரமாக இருந்தனர்.
வால்டருக்கு வழங்கப்பட்ட முதல் பெரிய பணி மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் சென்று ஹாம்பர்க் எஸ்.வி அணிக்காக விளையாடும் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ஹார்ஸ்ட் லாங்ஃபீல்டை மீண்டும் கிழக்கு ஜெர்மனிக்குக் கொண்டு வருவது.
இதற்காக அவர் தனது சக ஊழியர் டிர்க் என்பவருடன் இணைந்து மேற்கு ஜெர்மனிக்கு ரகசியப் பயணங்களை மேற்கொள்கிறார்.
மேற்கு ஜெர்மனிக்குச் சென்ற ஃபிரான்ஸ் வால்டர் மற்றும் டிர்க் குழுவினர், கால்பந்து வீரர் லாங்ஃபீல்டை எப்படியாவது கிழக்கு ஜெர்மனிக்குத் திரும்பக் கொண்டுவரக் கொடூரமானத் திட்டங்களைத் தீட்டுகின்றனர்.
இதற்காக லாங்ஃபீல்டின் சக வீரரான போடோ ரென்னரை ஒரு பாலியல் வலையில் சிக்க வைக்கின்றனர். அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி அவரை மிரட்டி, லாங்ஃபீல்டின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய ரகசியத் தகவல்களைச் சேகரிக்கின்றனர்.
இன்னொரு பக்கம், கிழக்கு ஜெர்மனியில் இருக்கும் லாங்ஃபீல்டின் மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகப் பொய்யான மருத்துவ அறிக்கையை தயார் செய்கின்றனர். அவருக்குக் கட்டாய கீமோ வேதிச்சிகிச்சையை தொடங்கி, தன் மனைவியைக் காப்பாற்ற லாங்ஃபீல்ட் மீண்டும் கிழக்கு ஜெர்மனிக்குத் திரும்புவார் என அவர்கள் கணக்குப்போடுகின்றனர்.
ஒரு மனிதனின் பாசம் மற்றும் பயத்தை வைத்து அரசு விளையாடும் இந்த விபரீத விளையாட்டு, வால்டரை நிலைகுலையச் செய்கிறது.
வால்டர் தனது பணியின் ஒரு பகுதியாக, அப்பாவி மக்களின் பலவீனங்களைப் படமெடுத்து மிரட்டுவது மற்றும் அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புக் குரலை ஒடுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்.
அவரது மேலதிகாரிகள் இன்னும் மோசமானவர்கள்; GDR அகதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை உளவியல் ரீதியாக அழிப்பதையே இலக்காகக் கொண்டு இயங்குகின்றனர். இவர்களது மிரட்டல் தாங்க முடியாமல் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தனது அன்றாட வாழ்க்கையே ஒட்டுக்கேட்பு மற்றும் சக ஊழியர்களின் கண்காணிப்பால் நிறைந்திருப்பதை வால்டர் உணர்கிறார்.
போலி கடிதங்கள், தவறான மருத்துவச் சான்றுகள், 24/7 கண்காணிப்பு மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு என இந்த நச்சுச் சூழலில் அவர் ஒரு கைதியாக மாறுகிறார். தான் ஒரு லட்சிய விஞ்ஞானி என்பதிலிருந்து விலகி, ஒரு கொடூரமான குற்றவாளியாக மாற்றப்படுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இந்த மனிதாபிமானமற்ற சூழல் ஃபிரான்ஸ் வால்டரை உள்ளுக்குள் சிதைக்கத் தொடங்குகிறது. குறிப்பாக, லாங்ஃபீல்ட் தனது வீட்டின் குளியலறையில் சடலமாகக் கண்டெடுக்கப்படுவது அவரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அது தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டாலும், தன் கைகள் ரத்தத்தால் கறைபடிந்துவிட்டதை அவர் உணர்கிறார்.
தனது காதல் மனைவியிடம் கூட அவரால் எதையும் பகிர முடியவில்லை. "எந்த வேலையையும் மனைவியிடம் சொல்லக் கூடாது" என்ற கடுமையான விதி, அவர்களின் தாம்பத்திய உறவை மெல்லக் கொல்கிறது.
தனிமையில் பேசக்கூட முடியாத அளவுக்குத் தனது வீடும் ஒட்டுக்கேட்கப்படுவதை உணர்ந்த வால்டர், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். மெல்லிய இதயம் கொண்ட அவர், இந்தத் துயரத்தைத் தாங்க முடியாமல் மதுவுக்குத் தஞ்சம் புகுகிறார்.
அவர் சரியாகச் சாப்பிடாமல் உடல் மெலிந்து, ஒரு நிழலைப் போலத் திரிகிறார். தான் சக்தியற்றவன் என்பதை உணர்ந்த அவர், மனைவியிடமிருந்தும் தன்னைச் சந்தேகப்படும் அதிகாரிகளிடமிருந்தும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.
இந்த வேலையைத் தன்னால் தொடர்ந்து செய்ய முடியாது என்றும், மீண்டும் மேற்கு ஜெர்மனிக்கு அகதியாகத் தப்பிச் செல்வதே ஒரே வழி என்றும் அவர் முடிவு செய்கிறார். ஆனால் அதற்கு வலுவான ஆதாரங்கள் தேவை. எனவே, ஒரு துணிச்சலான மற்றும் ஆபத்தான முடிவை எடுக்கிறார். தனது அலுவலகத்தின் ரகசியத் தானியங்கிப் பெட்டகத்திலிருந்து , மேற்கத்திய நாடுகளிடம் அடைக்கலம் கேட்கத் தேவையான ரகசிய ஆவணங்களைத் திருடுகிறார்.
அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்தபோதிலும், உளவுத்துறையின் கண் எப்போதும் அவர் மீதே இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அவர் ஆவணங்களைத் திருடியதை அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுகின்றனர்.
ஏற்கனவே 'ஷுல்டே' என்ற சக அதிகாரி ரகசிய ஆவணங்களுடன் மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றதால், GDR அரசு மிகுந்த ஆத்திரத்தில் இருந்தது. அந்த ஆத்திரத்திற்கு இப்போது வால்டர் பலியாகிறார். நாட்டின் இறையான்மைக்கு எதிரான நம்பிக்கை துரோகக் குற்றத்திற்காக அவர் கைது செய்யப்படுகிறார்.
ஃபிரான்ஸ் வால்டர் கைது செய்யப்பட்ட பிறகு, அவருக்கு "முயற்சிக்கப்பட்ட மற்றும் முழுமையடைந்த உளவு வேலை" மற்றும் "நம்பிக்கை துரோகம்" ஆகிய குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இது ஒரு சாதாரணத் தண்டனை அல்ல; கிழக்கு ஜெர்மனியின் அரசு பயங்கரவாதத்தின் உச்சகட்ட வடிவம். இதுவரை 267 பேரை GDR அரசு இப்படித்தான் மரண அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளது. கைதிக்குத் தன் மரணம் எப்போது என்று தெரியாது.
விலங்கிட்டு அழைத்துச் செல்லப்படும் அவர், அந்த அறைக்குள் நுழைந்தவுடன், எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி பின்னந்தலையில் மிக நெருக்கமான தொலைவில் சுடப்படுவார்.
1981-ஆம் ஆண்டு, லட்சிய விஞ்ஞானி ஃபிரான்ஸ் வால்டருக்கு (நிஜ வாழ்வில் வெர்னர் டெஸ்ஃபே) இந்தத் தண்டனைதான் நிறைவேற்றப்பட்டது. மிக நெருக்கமான தொலைவிலிருந்து சுடப்படும் அந்த முறைக்கு 'Nahschuss' என்று பெயர்.
சுடப்பட்ட உடனேயே அவரது உடல் எரிக்கப்பட்டு, அடையாளங்கள் இன்றி அழிக்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனியில் நிறைவேற்றப்பட்ட கடைசி மரண தண்டனை இதுதான். அதன் பிறகு 1987-இல் GDR மரண தண்டனையை முழுவதுமாக வழக்கொழித்தது.
1990-இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் இணைந்த பிறகு, 1998-ஆம் ஆண்டு ஜெர்மன் நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது.
அன்று வால்டருக்கு (டெஸ்ஃபே) மரண தண்டனை வழங்கிய நீதிபதிகளும், அதற்குப் பரிந்துரைத்த வழக்கறிஞரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
டெஸ்ஃபேவுக்கு வழங்கப்பட்ட தண்டனை சட்டவிரோதமானது என்றும், அது "நீதியை வளைத்த செயல்" (Rechtsbeugung) என்றும் நீதிமன்றம் கூறியது. லூட்ஸ் ஈஜென்டோர்ஃப் என்ற நிஜ கால்பந்து வீரரின் மர்ம மரணம் முதல் வெர்னர் டெஸ்ஃபேயின் கொலை வரை, GDR அரசு செய்த அத்தனை அக்கிரமங்களுக்கும் வரலாறு ஒரு கட்டத்தில் நீதி கேட்டது.
"The Last Execution" திரைப்படம், ஒரு மனிதன் எப்படி அமைப்பால் நசுக்கப்படுகிறான் என்பதை ரத்தமும் சதையுமாக விவரிக்கிறது.
சரித்திரத் திரைப்பட ஆர்வலர்கள், குறிப்பாக பனிப்போர்க்கால அரசியலையும் உளவுத்துறையின் இருண்ட பக்கங்களையும் அறிய விரும்புவோர் இந்தப் படத்தை எக்காரணம் கொண்டும் தவறவிடாதீர்கள். ஒரு லட்சிய விஞ்ஞானியின் வாழ்வு, ஒரு போலியான ஜனநாயகத்தின் பலிபீடத்தில் எப்படிச் சிதைந்தது என்பதை இந்தப் படம் நம் இதயத்தை உலுக்கும் விதமாகச் சொல்கிறது.