கடலுக்கு அப்பால் நாவல் - ப.சிங்காரம்


ப.சிங்காரம் எழுதிய கடலுக்கு அப்பால்  தமிழ் புனைவிலக்கியத்தில் மிகவும் முக்கியமானது, இலக்கிய ஆர்வலர்கள் யாரும் தவறவிடக்கூடாத படைப்பு, ஏன் எனில் இது பேசும் வெளி மிகப்பெரியது, இதன் மொழி வீச்சு மிகவும் அரியது, எழுத்தாளர் ப.சிங்காரம் எந்த சமரசமுமின்றி நன் நாவலில் ஒரு பர்மியன் பேசினால் பர்மீஸிலேயே எழுதுகிறார், மலேயென், பேசினால், மலேயாவிலேயே, ஜப்பானியன் என்றால் ஜப்பானிஸிலேயே எழுதுகிறார், இது நாவல் எழுதப்பட்ட காலகட்டத்துக்கு மிகவும் புதுமையான முயற்சியாகும், மேலும் இது ஒருங்கே நம்பிக்கை, பண்பாடு, காதல்,போர், வீரம், தீரம், பக்தி, அறம்,அந்நிய கலாச்சாரம்,சாகசம்,தாய்மை,இழப்பு, வஞ்சம், ஏமாற்றம், நட்பு, தேற்றுதல் என விரிவாக அலசுகிறது,

எழுத்தாளர் ப.சிங்காரம் 1920ல் பிறந்தார். 1938 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருக்கும் மேடான் நகரில் ஒரு மார்க்கா என்றழைக்கப்படும் வட்டிக்கடையில் வேலை செய்யச் சென்றிருக்கிறார். உலகப்போர் நடந்த 1939 முதல் 1945 ஆண்டுகளை, ஜப்பானியர்களும், இந்திய தேசிய ராணுவமும் தாக்கம் செலுத்திய வரலாற்றுத் தருணங்களை, நேரடியாக ரத்தமும் சதையுமாக கண்ணுற்றார். இவர் யுத்த சூழலில் தன் மனைவியையும் அவரது பிரசவத்தில் குழந்தையுடன் பறிகொடுத்தவர்,அந்த வடுவிலிருந்து மீண்டு இத்தகைய படைப்பை தந்துள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. 

இவர்  1946ம் வருடம்  ப்ரிட்டிஷ்-இந்தியாவுக்கு திரும்பினார். மதுரை தினத்தந்தியில் செய்திப்பிரிவில் பணிக்கு சேர்ந்தார். 1950ஆம் ஆண்டு   ‘கடலுக்கு அப்பால்’ நாவலை தன் இந்தோனேஷிய,மலேய,பர்மா நாட்டின் பணிக்கால நினைவடுக்குகளில் இருந்து எழுதினார். மறுமணமே செய்து கொள்ளாமல் தன்   வாழ்நாட்களை  [சுமார் 51 ஆண்டுகள்] YMCA விடுதியில் தனியே கழித்தார்.தன் வாழ்நாள் சேமிப்பையும் தனக்கு வந்த ஷேமநல நிதி சுமார் 7 லட்சம் ரூபாயையும் பொதுவுக்கு எழுதி வைத்து விட்டு தன் 77ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்,சமகால இலக்கியவாதிகள் எவருடனுமே தொடர்பின்றியே வாழ்ந்திருக்கிறார்,

 இவர் தன் வாழ்நாளில் மற்றொரு படைப்பாக புயலிலே என்னும் தோணி என்னும் நாவலும் எழுதியுள்ளார்,அது 1962 ஆம் ஆண்டு பெரும் தடைகளுக்கு இடையே வெளிவந்தது.இந்த இரண்டு நாவல்களுமே இதன் புதுமைக்காக அன்றைய இன்றைய இலக்கியவாதிகளால் வெகுவாக சிலாகிக்கப்படுபவை.  இவரது வாழ்க்கையே ஒரு சுவையான பல திருப்பங்கள் நிறைந்த ஒரு நாவல் போன்றது என்றால் மிகையில்லை, இவரது கடைசிக் காலத்தில் சி.மோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுடன் இவருக்கு பரிச்சயம் ஏற்பட்டதை படித்தேன். இவரும் பாரதியை போன்றே வாழும் காலத்தில் புகழ் கிடைக்காத கலைஞனே.

நாவலில் மற்றொரு சிறப்பம்சமாக பகடிக்காகவோ திணிப்பாகவோ எந்த சாதியையும் இவர் கிண்டல் செய்யவில்லை, எந்த இடத்திலும் வர்ணணைக்கு  வேண்டிக்கூட ஆபாசம் விரசமொழி எங்கும் இல்லை  ,தவிர இது வரை தமிழில் யாரும் கையாளாத ஒரு கதைக்களம் நம்முள் ஒரு மனச்சித்திரமாக     விரிகிறது. பாசாங்கில்லாத சமரசமற்ற எழுத்து நடை நம்மை விறுவிறுப்பைக்கூட்டி படிக்க வைக்கிறது.

செட்டி நாடு என்றழைக்கப்படும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், கோனாப்பட்டு,ஆத்தங்குடி,கானாடுகாத்தான்,சிறுவயல் என ஒன்றிறண்டு ஊருக்காவது போய் வந்து கொண்டிருக்கிறேன். அனைத்துமே டெம்ப்ளேட் போன்ற அமைப்பைக் கொண்ட 200 வருடங்களுக்குள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட மிக அழகிய கிராமங்கள். ஊருக்குள் அம்மன் கோவில், தேர் முட்டி, ஒரு சிவன் கோவில்,குடிக்க ஒரு ஊருணி, குளிக்க ஒரு ஊருணி, ஒரு நகரத்தார் கைங்கர்ய தர்ம ஸ்தாபன பள்ளிக்கூடம், கடைவீதி, மழை பெய்தால் நேராக ஊருணிக்குள் போய் விழும்படியான சேகரிப்பு முறை, அத்தனையும் நகரத்தார் என்றழைக்கப்படும் செட்டியார் சமூகம் ஊருக்கு அளித்த கொடை அவை,

 முக்கியமாக ஓங்கு தாங்காக அமைந்த அரண்மனை போன்ற நகரத்தார் வீடுகளை குறிப்பிட்டே ஆகவேண்டும்.ஒரே நாளில் சேர்த்த பொருளல்ல அவை,1818 ம் ஆண்டு ஆரம்பத்தில் வட்டிக்கடைத் தொழில் துவங்கிய நகரத்தார்கள்,தலைமுறை தலைமுறையாக இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோநேசியா, ஜாவா, சுமத்ரா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்ற செட்டியார் சமூகம் மார்க்கா என்னும் லேவா தேவித் தொழிலை விஸ்தரித்து.அங்கே கார்பொரேட்டு வங்கிகளுக்கு சமமாக வட்டிக்கடைத் தொழிலை வாழையடி வாழையாக நீதி நேர்மையுடன் நடத்தி வந்தனர். அதை நாவலில் நாம் கதையோட்டத்தில் விரிவாக அறிகிறோம்,

இப்போது எப்படி வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறோமோ அதே போல ராமநாதபுர மாவட்டத்தின் இளைஞர்கள் 5 முதல் 7 வருட ஒப்பந்தத்தில் வட்டிக்கணக்கு பற்று வரவு எழுதவும் வசூலிக்கவுமென்றே அந்த மார்க்காக்களுக்கு சென்றுள்ளனர் என அறிகையில் வியப்பு மேலிடுகிறது, அங்கே  பர்மியர்களுக்கும், இந்தோநேசியர்களுக்கும், சீனர்களுக்கும், மலேயர்களுக்கும் அவர்கள் வியாபாரம் செய்ய வட்டிக்கு பணம் தந்து வாங்கி அதை லட்சமாக பெருக்கி, தங்கள் வீட்டை,ஊரை இப்படி மாற்றினர் என்றால் மிகையில்லை,

மேலே சொன்னது போலவே நாவலில் மிக முக்கிய பாத்திரமான வானாயினா என்னும் வயிரமுத்துப்பிள்ளை, தன் செவப்பட்டி கிராமத்தில் இருந்து பெட்டியடிப்பையனாக பர்மாவிற்கு ஒப்பந்தத்தில் சென்று அடுத்தாளாகி, மேலாளாக[ஏஜென்ட்] உயர்ந்தவர், இப்போது சொந்தமாக மார்க்கா வைத்திருப்பவர்.,இந்த நிலைக்கு வர அவர் பட்ட பாடும்,தன் மார்க்கா தொழிலை கட்டிக்காக்க அவர் கடைபிடிக்கும் விதிகளும் அபாரமானவை.இன்று நாம் காணும் கேட்கும் தண்டல்,கந்து வட்டி,மீட்டர் வட்டி போன்றதல்ல செட்டிமாரின் மார்க்கா என்னும் வட்டிக்கடை வியாபாரம்,அதற்கு முக்கியத் தேவையே பணிவு,தெளிவு,எந்த சூழ்நிலையிலும் கோபப்படாமல்,கடன் வாங்கியவன் அடித்தாலும் வாங்கிக்கொண்டு,விடாப்பிடியாக வட்டியையும் அசலையும் வசூல் செய்யும் திறமை கொண்டவர்,தன் வேலையாட்களையும் அவ்வண்ணமே இருக்க எதிர்பார்ப்பவர்.

தன் நண்பனின் மகனான செல்லையா,ஆங்கிலம் படித்திருக்க இவரை மிகவும் கவர்கிறான்,நண்பனிடம் வலியப்போய் செல்லையாவை தன்னுடன் வேலை செய்ய அழைத்துப்போகிறார், பின்னர் தன் மனைவியையும் மகள் மரகத்தையும் தன்னுடன் அழைத்தவர்,தன் மகள் மரகதத்தை செல்லையாவுக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்,அதன் மூலம் தன் மார்க்காவை பினாங்கிலேயே பெரிய மார்க்காவாக விஸ்தரிக்க நினைக்கிறார். இவரது வாழ்வில் பேரிடியாக  இரண்டாம் உலகப்போர்  மூள, தன் ஒரே மகனை ஜப்பானியரின் விமான குண்டு வீச்சுக்கு பலி கொடுக்கிறார்,

செல்லையாவை அடுத்தாளாக கூட்டி வந்து குறுகிய காலத்தில் மேலாளாக்கி அழகு பார்த்தவர் வனாயினா, தன் அழகு மகள்  மரகததை  அவனுக்கு திருமணம் செய்து தந்து, மார்க்காவையும் அவனிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தவர் எண்ணத்தில் மண் விழுந்தது போல செல்லையா நேதாஜியின் சேனைக்கு போய் சேர்ந்து விடுகிறான். அவன் சேனைக்கு சென்றது அவருக்கு அறவே பிடிக்கவில்லை.போர் தர்மம் தன் தொழிலுக்கு உகந்ததல்ல என்பதை உறுதியாக நம்புகிறார். தன் 20 வயது மகனை ஜப்பானின் குண்டு வீச்சுக்கு பினாங்கு வீதியில் பலி கொடுத்ததையும் அவர் மறக்க வில்லை,மகனின் சடலத்தை தேடி எடுத்து தன் தோளில் தூக்கி வந்த செல்லையாவின் மேல் அதீத அக்கரையும்,நன்றியுணர்வும் இருந்தாலும் என் பேச்சை மீறி சேனைக்கு சென்றுவிட்டானே? என்னும் தன் அகங்காரம் செல்லையா மரகதத்தின் காதலை பிரிக்க நினைக்கிறது,போரினால் சுமார் 4 வருடங்களாக நின்று போன நாகப்பட்டினம்-பினாங்கு கப்பல் போக்குவரத்தை ப்ரிட்டிஷார் மீண்டும் எப்போது துவக்குவார்,அப்போது மனைவியையும்,மகள் மரகதத்தையும் ஊருக்கு அனுப்பி ,தன்னிடம் மேலாளாக இருக்கு நாகலிங்கத்துக்கு மகளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்,

வனாயினா மனைவிக்கும் பினாங்கில் இருக்க இருப்பு கொள்ளவில்லை, ஆனால் கப்பல் விடுவதற்கு முன் கடலில் மிதக்கும் நீர்கண்ணி வெடி குண்டுகளை ப்ரிட்டிஷார் தேடி அகற்றுவதை கேட்டதும் நிம்மதியுறுகிறாள், செல்லையாவை தன் மகன் போலவே நினைக்கிறாள்,அவனை மருமகனாக வரித்துக்கொள்ள இவர்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறாள்,தண்ணீர்மலையான் அருளால் செல்லையாவின் மேலே கணவர் கொண்டிருக்கும் கோபம் விரைவில் தீரும் என நம்புகிறாள்,

செல்லையா இரண்டாம் உலகப் போரில் நேதாஜியின் சேனையில் ஒரு ஆகச்சிறந்த வீரனாக இருந்தவன்,  போரில் அணுகுண்டு வீசப்பட்டு,ஜப்பான் தோல்வியை ஒப்புக்கொண்ட நிலையில் ,நேதாஜியும் விமான விபத்தில் உயிரிழக்க,அவரின் சேனையில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள், அதில் ஏனையோர் மார்க்காவில் வேலைபார்த்தோர், மீண்டும் தங்கள் பழைய தொழிலுக்கே திரும்ப முடிவு செய்கின்றனர், அதில் செல்லையாவும் அடக்கம், 24 வயதிலேயே வீரமும்,புத்தி சாதுர்யமும்,பன்மொழி பேசும் திறமையும்,நல்ல அழகும், உடற்கட்டும் பொருந்திய செல்லைய்யாவிற்கு  போர் முடிவுற்ற சூழலில்  வேலை இல்லை. எனவே மீண்டும் பழைய மேலாள் வேலைக்கு திரும்ப முடிவு செய்து தன் முதலாளி வனாயினாவிடமே வருகிறான்.ஆனால் முதலாளியின் மனதை செல்லையாவால் மாற்ற முடியவில்லை.கரைக்க முடியாத கற்பாறையாக இருக்கிறார் வனாயினா.

சில இடங்களில் நாம் நாயகன் செல்லையாவுக்காகவும் மரகதத்துக்காகவும் அப்படி வருந்துகிறோம்,ஆனால் அந்த வருத்தத்தையும் வானாயினா மீதான கோபத்தையும் கடைசி அத்தியாயத்தில் மரகதத்தின் அப்பா வானாயினாவுக்கு சாதகமாக திருப்பிவிடுகிறார் ப.சிங்காரம்.

அந்த இடம் அபாரமானது,நண்பன் மாணிக்கம் போல நகமும் சதையும் போன்ற நண்பன் கிடைக்க ஒருவர் கொடுத்து வைக்க வேண்டும்,காதல் தோல்வியால் மனம் துவளும் செல்லையாவுக்கு மட்டுமல்ல நமக்கும் மருந்து போன்றன அவனது வார்த்தைகள்.அவன் சங்க கால தமிழ் இலக்கியத்தை மாந்தர்களை பகடி செய்யும் இடம் அனைத்துமே ரசமானவை.

எழுத்தாளர் ப.சிங்காரம் 12 வருடம் கழித்து தான் எழுதப்போகும் புயலிலே ஒரு தோணி நாவலுக்கு கடலுக்கு அப்பால் நாவலிலேயே அச்சாரம் வைத்து உள்ளார் ,என்பதை எண்ணி வியந்தேன்,அப்போதே ப்ரிக்வெய்ல்,சீக்வெய்ல் பற்றி எல்லாம் சிந்தித்திருக்கிறார் பாருங்கள். செல்லையாவிற்கு பாண்டியன் என்னும் வீரனும் மலேயாவுக்கு வரப்போவதாக   ஒருவர் வழி மறித்துச் சொல்ல, செல்லையா மனதுக்குள் இப்படி சிலாகிப்பதாக வருகிறது. பாண்டியன்,!!! மாவீரன். தமிழறிஞன். அவனும் மாணிக்கமும் கிண்டலும் தர்க்கமுமாய் தமிழ் ஆராய்ச்சி நடத்துவதை நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே. இந்தோனேசியாவுக்குத் திரும்பியிருக்கிறானே. மீண்டும் அவனைப் பார்க்க முடியுமா? அங்கு வாளா இருப்பானா? மாட்டான். புரட்சிப் படையில் சேர்வது திண்ணம். அவன் ரத்தத்திலேயே புரட்சி கலந்து போயிருக்கிறது. 

எல்லாம் கைமீறிப்போய்விட்ட  பொழுது   ஒரே ஒருக்க ,.. உன் முகத்தை இரண்டு கைகளால் தொடணும் மரகதம்!!! செல்லையாவின் குரல் , தாயிடம் ஒரே ஒரு மிட்டாய் கேட்கும் சிறுவனின் கெஞ்சல் போல குழைந்தது  என்று எழுதுகிறார் ப.சிங்காரம்,எத்தனை எளிய ஆனால் சக்திவாய்ந்த எழுத்து நடை பாருங்கள்.
அதே மரகதம் நான் ஒண்ணு சொல்றேன். கேப்பிகளா ?!!!   சொல்லு   ... நீங்க கல்யாணம் செஞ்சு பொட்டச்சி பிறந்தா?!!! மரகதம்னு பேரு வைங்க!!! என யதார்த்தமாக முடிக்கிறாள், யாரும் யாரையும் காயப்படுத்தாமல் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

காதலில் தோல்வியுற்றதால் உலகமே இருண்டுவிட்டது, வாழ்க்கையே தன்னை கைவிட்டுவிட்டது என தளர்ந்து இருந்த செல்லையா ,  நண்பன் மாணிக்கம் மூலம்  தன்னையே அறிந்து கொள்வதை  ப.சிங்காரம் மிகச்சிறப்பாக நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார்.

நாவலில் ப.சிங்காரம் குறிப்பிடும் பல இடங்கள் இன்று இல்லை,அவ்வளவு ஏன்?1960லேயே வழக்கொழிந்துவிட்டதாக ப.சிங்காரம் குறிப்பிடுகிறார். காலஓட்டத்தில் இன்னும் காணாமல் போகாமல் இருப்பது நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே ஒட்டி உறவாடும் தண்ணீர்மலையான் சுவாமி திருக்கோவில் மட்டும் தான்.அதைப் பற்றி படிக்க சுட்டி. அவசியம் படிக்கவும்.
புயலிலே ஒரு தோணியும் கடலுக்கு அப்பால் நாவலுக்கு ஈடான ஒரு ஆக்கம்,அதை இரண்டாம் முறையாக வாசிக்கிறேன்,அத்தனை சுவாரஸ்யம் நிறைந்தது,நேதாஜி சுபாஷ் சந்திர போஸை வரலாற்று பாடங்களில் மட்டுமே படித்திருக்கிறோம்,அவரை இதில் ரத்தமும் சதையுமாக கண்ணுறுகிறோம், மிக அருமையான நாவல்,விரைவில் அதற்கும் எழுதுவேன். 

கடலுக்கு அப்பால்+புயலிலே ஒரு தோணி ஹார்ட் பவுன்ட் புத்தகம் நற்றினை பதிப்பகத்தாரின் மிக் தரமான வெளியீடாக அகநாழிகை புத்தகக் கடையில் கிடைக்கிறது .விலை ரூ:-350

நாவல் பற்றி சி.மோகன் எழுதிய குறிப்பு:-
கடவுளின் சிரிப்பில் உருவான நாவல்கள்
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.
  

3 comments:

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

எழுத்துக்கள் என்ன சாதிக்கும் என்பதற்கு இந்த சிலாகிப்பே போதுமானது.

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

செட்டி நாடு என்றழைக்கப்படும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், கோனாப்பட்டு,ஆத்தங்குடி,கானாடுகாத்தான்,சிறுவயல் என ஒன்றிறண்டு ஊருக்காவது போய் வந்து கொண்டிருக்கிறேன். அனைத்துமே டெம்ப்ளேட் போன்ற அமைப்பைக் கொண்ட 200 வருடங்களுக்குள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட மிக அழகிய கிராமங்கள். ஊருக்குள் அம்மன் கோவில், தேர் முட்டி, ஒரு சிவன் கோவில்,குடிக்க ஒரு ஊருணி, குளிக்க ஒரு ஊருணி, ஒரு நகரத்தார் கைங்கர்ய தர்ம ஸ்தாபன பள்ளிக்கூடம், கடைவீதி, மழை பெய்தால் நேராக ஊருணிக்குள் போய் விழும்படியான சேகரிப்பு முறை, அத்தனையும் நகரத்தார் என்றழைக்கப்படும் செட்டியார் சமூகம் ஊருக்கு அளித்த கொடை அவை,

முக்கியமாக ஓங்கு தாங்காக அமைந்த அரண்மனை போன்ற நகரத்தார் வீடுகளை குறிப்பிட்டே ஆகவேண்டும்.ஒரே நாளில் சேர்த்த பொருளல்ல அவை, தலைமுறை தலைமுறையாக இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோநேசியா, ஜாவா, சுமத்ரா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்ற செட்டியார் சமூகம் மார்க்கா என்னும் லேவா தேவித் தொழிலை விஸ்தரித்து.அங்கே கார்பொரேட்டு வங்கிகளுக்கு சமமாக வட்டிக்கடைத் தொழிலை வாழையடி வாழையாக நீதி நேர்மையுடன் நடத்தி வந்தனர் என்பதை நாவலில் விரிவாக அறிகிறோம்,

முற்றிலும் உண்மை.

Subramaniam Yogarasa சொன்னது…

அருமையான விமர்சனப் பகிர்வு!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)