பொக்கிஷம் திரைபடத்தின் கலை இயக்கம் ஒரு பார்வை!!!!

சேரன் தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத நம்பிக்கை, அவரின் இயக்கத்தில் வந்த எந்த படமும் எதாவதொரு நல்ல செய்தியை சொல்லாமல் விட்டதில்லை, அவர் என்றுமே விட்டேத்தியாக படம் எடுத்ததில்லை. அவரின் டூரிங் டாக்கீஸ் முழுவதும் படித்திருந்தால் அவர் இந்த உயரத்திற்கு வர எத்தனை உழைத்திருப்பார் என்பது விளங்கும். பொக்கிஷம், தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல் என்றால் மிகையில்லை, தமிழில் வெளிவந்த ஆகச்சிறந்த மாற்றுசினிமா என்றும் சொல்லலாம். உலகசினிமா நம் தமிழகத்திலும் எடுக்கமுடியும் என்பதற்கான அறிகுறி, இது போன்ற மாற்று சினிமாக்களை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க முன்வந்ததும், எங்குமே சமாதானம் செய்துகொள்ளாமல் நேர்த்தியாக இயக்கியும் நடிக்கவும் துணிந்தது நல்ல முயற்சி. சரி விடுங்கள்,காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல இப்போது கல்லடி சேரனுக்கு,அவர் இந்த படத்தின் கருவை கொரிய படத்தில் இருந்து திருடிவிட்டார் என்று, அது ஒரு அப்பட்டமான பொய்யே.தவிர தானம் வந்த மாட்டைத்தான்  மக்கள் பல்லை பிடித்துப்பார்ப்பார்கள் என்பது அறிவோம்.

யாரோ ஒரு வலைப்பூ நண்பர் தனது வலைப்பதிவில் பொக்கிஷம் விமர்சனத்தில் அப்படமே எடுக்க மொத்தமே 25 லட்சம் ரூபாய் தான் ஆகியிருக்கும் .என்று மதிப்பிட்டிருந்தார்.என் வீட்டு பாத்ரூமை சற்று பெரிதாக்கி கோப்பை மாற்றி டைல்ஸ் ஓட்ட எனக்கு ஒரு லட்சம் ரூபாய் ஆனது. அப்படிப்பட்ட ஒரு விலைவாசி உள்ள நாட்டில் இருந்து கொண்டு அந்த நண்பர் இதை எப்படி எழுதினார் என வியந்தேன்?

படம் ரொம்ப மெதுவாய் போகிறது என்பதை எல்லாம் ஒரு குறையாய் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன். கொஞ்சம் போல ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு,ஸ்பானிஷ் படங்கள் பார்த்து அதற்குண்டான பொறுமை எனக்கு வந்துவிட்டது.இன்றைய மக்களுக்கு பொறுமைக்கு பதிலாக பொறாமையே நிறைந்து காணப்படுகிறது.

டைரக்டர் நடித்தால் பிடிக்காது , அவர் முகம் முதிர்ந்துவிட்டது என்னும் கொள்கையும் ஏற்புடையதாய் இல்லை.இப்போது உள்ள விஜய்,சிம்பு, விஷால்,பேரரசு,சுந்தர்.சி போன்ற மகா எரிச்சல்களுடன் ஒப்பிடுகையில் சேரன் எவ்வளவோ தேவலை. அவர் தூணைப்பிடித்து மூக்கை உறிஞ்சி அழும் காட்சிகளை கொஞ்சம் தவிர்த்துவிட்டு தன் மிகை நடிப்பையும் சற்று திருத்திக்கொண்டாலே போதும். .நன்றாய் மிளிர்வார். சேரன் அடுத்த படமும் கதாநாயகனாகவே நடிக்கட்டும். எப்போதும் அழகானவன் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்ற அசிங்கமான மனப்பான்மையை ஒருவர் மாற்றிக்கொள்ளவேண்டும்.
1. பஸ்
பழைய பாணியிலான பஸ்கள் தேவைப்பட்டதும், சென்னையில் படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடும் வண்டிகளைத் தேடினோம். எதுவும் அமையவில்லை. பழைய பஸ்களை வாங்கி தற்போது உபயோகப்படுத்தி வரும் கல்லூரிகளில் எதிர்பார்த்தமாதிரி இல்லை. எனவே, மதுரை, கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பஸ்களைத் தேடியும் கிடைக்கவில்லை. தஞ்சை, திருச்சி பகுதிகளில் சில பஸ்கள் எதிர்பார்த்தமாதிரி இருந்தும், வாடகைக்கு கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. இந்நிலையில், காரைக்காலில் ஒரு தனியார் பஸ் நிறுவனம் வழித்தடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பஸ்களை வாடகைக்குத்தரவும், பஸ்களில் மாற்றங்கள் செய்து கொள்ளவும் அனுமதி தந்தனர். பின்னர், இரண்டு பஸ்களை எடுத்து வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் வண்ணங்கள், பொருட்கள் பெயர்ப்பலகைகள், இருக்கை அமைவு முறை என்று எல்லாவற்றையும் மாற்றியமைத்தோம். இரவு, பகலாக வேலைசெய்து நான்கு நாட்களில் தயார்செய்தோம்.
2. சென்னை வீடு
நாயகன் வசிக்கும் வீடு கதைப்படி சென்னையில், 1970ம் காலகட்டத்தியதாக இருக்க வேண்டும். பழைய சென்னையான, மைலாப்பூர், தி.நகர், வடசென்னை பகுதிகளில் நிறையத் தேடியும் எதிர்பார்த்த மாதிரி இல்லை அல்லது நாங்கள் விரும்பும் வீடுகளைத் படப்பிடிப்புக்குத் தருவதற்கு வீட்டு உரிமையாளர்கள் முன்வரவில்லை. இறுதியில், கோபிசெட்டிபாளையத்தில் அப்படியொரு வீடு அமைந்தது. சென்னை - நுங்கம்பாக்கம் பகுதியாக அந்தத்தெருவையே மாற்றி, வீட்டிலுள்ள நவீனப் பொருட்களை அகற்றி, முழுமையான பழைய வீடாக மாற்றினோம். இதற்கு ஐந்து நாட்கள் தேவைப்பட்டது.
3. பூட்டு
கல்கத்தா, சென்னை, நாகூர் என்று நாங்கள் படப்பிடிப்பு நடத்திய எந்தப் பகுதியிலும் பழையகால பூட்டுகள் கிடைக்கவில்லை. கடையில் விற்கப்படும் பூட்டுகள் தற்போது வட இந்தியத் தயாரிப்பாக இருக்கிறது. தவிர, திண்டுக்கல் பூட்டுகள் உற்பத்தி அறவே குறைந்து விட்டது. எனவே, பூட்டுகளைத் தேடியலைந்து கிடைத்த ஏமாற்றத்தையடுத்து, ஒவ்வொரு வீடாகச் சென்று பழைய பூட்டுகளை சேகரித்துப் பயன்படுத்தியுள்ளோம்.
4. லெனின்பெட்டி
கதாநாயகன் லெனின், பயணத்திற்காக பழைய மாதிரி தோல்பெட்டி தேவைப்பட்டது, சென்னையில் பாரிஸ், பூக்கடைபஜார், அண்ணாசாலை, தி.நகர் உள்ளிட்ட எந்தப் பகுதியிலும் அதுபோன்றதொரு பெட்டி கிடைக்கவில்லை. எனவே, தோல் மற்றும் ரெக்ஸின் பொருட்களைப் பயன்படுத்தி அதுபோன்றதொரு பெட்டியை உருவாக்கினோம்.
5. டைரி
படத்தின் இதயத்துடிப்பு டைரிகளும், கடிதங்களும்தான். 1970-ம் காலகட்டத்திய டைரிகளை வடசென்னைப் பகுதிகளிலுள்ள பழைய கடைகளில் தேடிக் கிடைக்கவில்லை. கடந்த 2008 டைரி வாங்குவது கூட சிரமம் என்று தெரிந்தது.  டைரி சேகரிப்பாளர்களிடம் விசாரித்தும் எழுதப்படாத எந்த டைரியும் கிடைக்கவில்லை. மேலும், 1970, 1971, 1972, 1973, 1974 ஆண்டுகளின் டைரிகள் மூன்று பிரதிகள் ஒரேமாதிரி வடிவமைப்பில் தேவைப்பட்டதால், ஐந்தாண்டு டைரிகளையும் டிசைன் செய்து, அதைப் பிரிண்ட் செய்வதற்காக, நவீன ரக பிரிண்டர் ஒன்றை விலைக்கு வாங்கி 15 நாட்கள் இரவு, பகலாக பணி செய்து உருவாக்கினோம்.
6. கடிதங்கள்
மிக முக்கியமான, கடிதங்களை, அஞ்சலகப் பொருட்களை நாமே தயார்செய்து விடுவது என்பதில் முன் கூட்டியே முடிவு செய்திருந்ததால், 1970ம் காலகட்டத்திய இன்லேண்ட், போஸ்டல் கவர்களை தேடிக் கண்டுபிடித்தோம். பின்னர், அதுபோன்ற மாதிரிகளை உருவாக்கி, சிறப்பு அனுமதியோடு பிரிண்ட் செய்தோம்.
7. ஹல்தியா ஹார்பர்
மேற்கு வங்கத்தில் நதிமுகத்துவாரத்தில் அமைந்திருக்கும் இயற்கைத் துறைமுகம் ஹல்தியா ஹார்பர். அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பு இடத்தைப் பார்வையிடச் சென்ற இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் புகைப்படம் எடுத்தபோது, பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, கேமராக்களைப் பறித்துக் கொண்டனர். மொழிப் பிரச்னை பெரிதாக இருந்த நிலையில், அங்கு கண்டெய்னரில் சரக்கு ஏற்றி இறக்கும், கிரேனில் பணிபுரிந்த தமிழர் ஒருவர், இயக்குனரை அடையாளம் கண்டு, உதவி செய்தார். ஹல்தியா ஹார்பரில் நடந்த முதல் படப்பிடிப்பு ‘பொக்கிஷம்’ தான்.
8. போஸ்டல் சீல்
போஸ்ட் ஆபிஸில் சீல் குத்தும் மர உருளைகள் மற்றும் தேதி சீல்களை தபால் துறையினர் தர மறுத்து விட்டனர். எனவே, அதுபோன்ற மாதிரிகளை உருவாக்கினோம். மரத்தில் கடைசல் செய்து பிடியும், அச்சுக்களுக்கு ரப்பரில் மாதிரியும் உருவாக்கினோம்.
9. மருத்துவமனை ஓவியங்கள்
சீதாலட்சுமி மருத்துவமனை வரவேற்பு ஹாலில், சுவர்களை அலங்கரிக்க பாரம்பர்ய முறையிலான ஓவியங்கள் தேவைப்பட்டது. ஒரே நாளில் அந்த வரவேற்பறை பணிகளை முடிக்க வேண்டியிருந்ததால், உடனடியாக சுற்றுவட்டாரத்தில் விசாரித்து, கோபியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று அங்கிருந்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பாரம்பர்ய தஞ்சாவூர் ஓவியங்களை கொண்டு வந்து பயன்படுத்தினோம்.
10. பெஞ்சுகள்
மருத்துவமனை வரவேற்பு ஹாலில் மரத்திலான சாய் பெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், முதலில் திட்டமிட்டிருந்தது வயரினால் பின்னப்பட்ட ‘எஸ்’ டைப் சேர்கள். அது சரியாக அமையாததால், மரத்தில் ஒரே மாதிரி சேர்களை அமைக்க முடிவு செய்து, பள்ளி, கல்லூரிகளில் தேடியதில் நவீனமாக மட்டுமே கிடைத்தது. பழைய பாணியில் கிடைக்காததால், ஒரே நாள் இரவில் சுமார் பத்து தொழிலாளர்கள் சேர்ந்து எட்டு சேர்களை உருவாக்கினார்கள்.
11. காலண்டர்
படத்தில், சென்னை, கல்கத்தா, நாகூர், காரைக்கால் என்று எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் காலண்டர்களை நாங்களே உருவாக்கினோம். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தேதி, கிழமை உள்ளிட்ட எல்லா விபரங்களுமே உண்மையானவை. குறிப்பாக, நாகூர் வீட்டில் இருக்கும் காலண்டரில் இருக்கும் முஸ்லிம் மாதங்கள், ஆண்டுகள் எல்லாமே தீவிர ஆய்வுக்குப் பிறகு 1970-ல் என்ன இருந்ததோ அதையே பயன்படுத்தியிருக்கிறோம். காரைக்கால் கல்லூரியில் திருவள்ளுவர் காலண்டர், கல்கத்தா வீட்டில் துர்கா காலண்டர் என்று எல்லாமே ஒரிஜினலைப் போன்ற விபரங்கள் உடையவையே.
12. புத்தகங்கள்
மருத்துவமனை, நதீராவின் வீடு, லெனின் கல்கத்தா வீடு, லெனினின் சென்னை வீடு ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புத்தகங்களை தேடிப்பிடித்து கிடைத்த பழையவற்றை, மெருகேற்றி அல்லது நகலெடுத்துப் பயன்படுத்தியுள்ளோம். பல புத்தகங்களின் முகப்புகளை நாங்களே உருவாக்கினோம்.
13. பாடப்புத்தகங்கள்
நதீரா மற்றும் அவரது தங்கை, லெனினின் தம்பி, நதீரா தோழி மற்றும் கல்லூரிப்பெண்களுக்கான பாடப்புத்தகங்கள் முழுவதும் உருவாக்கப்பட்டவைதான். அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பழைய பாணியிலான முகப்பை மாதிரியாக வைத்தும், தமிழ்நாடு நூற்பதிப்புக் கழகத்தின் பழைய புத்தகங்களை முன்மாதிரியாக வைத்தும் உருவாக்கினோம்.
14. கீதாஞ்சலி புத்தகம்
படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தாகூரின் கீதாஞ்சலி புத்தகம், கல்கத்தாவில் வாங்கப்பட்டது. கல்கத்தாவில் தாகூரின் வீடு மற்றும் அவருடைய விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் பெரிதான முயற்சிக்குக் பின்னர் பழைய பாணியிலான ‘கீதாஞ்சலி’ புத்தகங்கள் நான்கு பிரதிகளை வாங்கி பயன்படுத்தியுள்ளோம்.
15. கம்யூனிச புத்தகங்கள்
கம்யூனிச புத்தகங்கள் சிலவற்றை நண்பர்களிடம் தேடியலைந்து வாங்கினோம். சிலவற்றை தோழர்கள் கொடுத்தனர். மேலும் பலவற்றை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அமைந்திருக்கும் ம.சிங்காரவேலர் நூலகத்தில் இரவலாகப் பெற்று பயன்படுத்தியுள்ளோம். லெனின் சென்னை இல்லத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும், மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ புத்தகங்களை நாங்களே உருவாக்கினோம்.
16. இலக்கியப் புத்தகங்கள்
நிலா நீ வானம் பாடலின் ஒரு சரணத்தில் தமிழின் இலக்கியப் புத்தகங்கள் தேவைப்பட்டன. எனவே, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் பாரதியார் கவிதைகளை உருவாக்கினோம். அதின் முகப்பு அட்டைகள் மற்றும் எழுத்துருக்களில் எந்த நவீனத்தன்மையோ அல்லது 1970க்கு பிற்பட்ட விஷயங்களோ வந்துவிடாமல் முழுவதும் பழைய பாணியில் உருவாக்கினோம்.
17. நோட்டுகள்
கல்லூரி மற்றும் பள்ளி நோட்டுப்புத்தகங்கள் முழுவதும் ஒரிஜினல், அவற்றை நாங்கள் உருவாக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. அறுபது வருடங்களாகச் செயல்பட்டு வரும் ஒரு நோட்டுப்புத்தக விற்பனைக்கடையில் ஒரு ஓரத்தில் கண்டும் காணாமல் கிடந்த பழைய பாணி நோட்டுகளை வாங்கி பயன்படுத்தியுள்ளோம்.
18. விளம்பர போஸ்டர்கள்
மருத்துவமனை கேண்டீன், காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்கள் முழுவதும் 1970ம் காலகட்டத்திய விஷயங்களை உள்ளடக்கி ஒரிஜினல்கள். மாதிரிகள் முன்வைத்து அவற்றை நாங்கள் புதிதாகத் தயாரித்தோம்.
19. சினிமா போஸ்டர்கள்
படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர்கள் நாங்கள் உருவாக்கி, பிரிண்ட் செய்தவைகள். 1970-ம் காலகட்டத்திய படங்களில் சிலவற்றின் போஸ்டர்கள் கிடைக்கின்றன. ஆனால், அவை வண்ணத்தில், நவீன எழுத்துருக்களைக் கொண்டிருக்கின்றன. எனவே, பழைய போஸ்டர் விளம்பரங்களிலிருந்து உருவாக்கப்பட்டவையே அவை.
20. பணம், காசுகள்
பழைய பணம், நாணயங்களை மாதிரியாக வைத்து, நாணயங்கள் சேகரிப்பாளர்களிடம் விலைக்கு வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. பழைய நூறு ரூபாயின் தற்போதைய விற்பனை விலை ஆயிரம் ரூபாய்.
21. தொலைபேசி
பழைய மாதிரி நீண்ட வளைவில்லாத கேபிள்கள் கொண்ட போன்கள், பழம்பொருட்கடைகளிலும், சினிமா செட் ப்ராப்பர்டிஸ் கடைகளிலும் வாங்கப்பட்டவை.
22. அக்னாலட்ஜ்மெண்ட் கார்டு
தபால் சென்று சேர்ந்ததை உறுதிப்படுத்தும் இந்த கார்டை, முன்மாதிரியை வைத்து முறைப்படி அனுமதி பெற்று பிரிண்ட் செய்தோம்.
23. பஸ் டிக்கெட்
பழைய பாணியிலான வண்ணத்திலான, ஒரு நிறத்தில் அச்சுக்கோர்ப்பு மையத்தில் அச்சிடப்பட்ட பஸ் டிக்கெட்டுகளை, நாங்களும் அச்சுக்கோர்த்து அதன்படி உருவாக்கினோம்.
24. லெனின் சிலை
நாயகனின் வீட்டில் புத்தக அலமாரியில் இருக்கும் லெனின் சிலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் அலங்கரித்துக் கொண்டிருந்த ஒன்று. அது ரஷ்யாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த அன்புப் பரிசு.
25. தபால் பெட்டிகள்
இருவேறு தபால் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று கொல்கத்தாவில் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த 4 அடி உயரமுள்ளது. மற்றொன்று தகரத்திலான தொங்கும் பெட்டி. மேற்கண்ட பொருட்கள், தபால் துறையினர் தரவில்லை. எனவே, முன்மாதிரியை வைத்து நாங்களே வடிவமைத்தவைதான் இவைகள்.

26. டிராம்

கல்கத்தாவின் வடக்குப் பகுதியின் இன்றும் டிராம் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவை நவீன பாணியில் இருக்கின்றன. படத்துக்காக, ஒரு டிராம் வண்டியை ஒரு நாள் முழுதும் வாடகைக்கு எடுத்து, ஓரிரவில் அதற்கு வண்ணம் பூசி, சின்னம் வரைந்து, உள்புறங்களை மாற்றியமைத்தோம்.

27. துர்கா பூஜை

கல்கத்தா மண்ணின் விழாவான துர்கா பூஜை அங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ‘பொக்கிஷம்’ படப்பிடிப்பு நடந்த நாட்களில் அங்கு துர்கா பூஜை விழா. படத்துக்காக, ஒரிஜினல் பூசாரி, ஒரிஜினல் முரசு அடிப்பவர்களைப் பயன்படுத்தியுள்ளோம். ஒரிஜினலாக துர்கா பூஜை கொண்டாடப்பட்டு படமாக்கப்பட்டது.


28. துர்கா சிலைகள்

துர்கா, பிள்ளையார், முருகன், சரஸ்வதி, லெட்சுமி என்று ஐந்து சாமி சிலைகள் ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டது. முறைப்படி அவற்றுக்கு பூஜை செய்து, கொண்டுவரப்பட்டது. இந்த சிலைகள், வைக்கோல், மூங்கில், களிமண் ஆகியவற்றைக்கொண்டு பழைய மாதிரியில் உருவாக்கப்பட்டவை.

29. கோலம்

துர்காபூஜை நடந்த திறந்தவெளி மண்டபத்தில் சுமார் 20 அடி அகலம் - 20 அடி நீளம் கொண்ட கோலம் வரைவது வழக்கம். படப்பிடிப்பின்போது, கோலம் வரையும் தொழிலாளர்கள் கிடைக்காததால், சுமார் 13 மணிநேரம் செலவிட்டு கோலத்தை நாங்களே வரைந்தோம்.

30. பூ அலங்காரம்

துர்கா பூஜைக்காக வழியெங்கும், விழா மண்டபமெங்கும் பூக்களை சரஞ்சரஞ்மாக தொங்கவிடுவது கல்கத்தா வழக்கம். சுமார் 25 ஆயிரம் ரூபாய் செலவில் பூக்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டன. இந்த பூக்கள் முற்றிலும், 1970ம் காலகட்டத்திய இந்தியப் பூக்கள்தான். தற்போதைய இறக்குமதிப் பூக்களைப் பயன்படுத்தவில்லை.

31. வாழைப்பழம்

மருத்துவமனையில், வாழைப்பழங்கள் முற்றிலும் 1970ம் காலகட்டத்தில் வழக்கிலிருந்த ரகங்கள் மட்டுமே. 1980ல் அறிமுகமான பச்சை வாழைப் பழங்களைப் பயன்படுத்தவில்லை.

32. பிரட்

மருத்துவமனையில் கொடுக்கப்படும் பிரட் மற்றும் கவர்களுக்காக, பழைய டைப்பில் ரொட்டி தயாரிக்கச் சொல்லி வாங்கி வந்தோம். 1970ல் இருந்த மாடர்ன் பிரட் கவரின் மாதிரியை வைத்து நூற்றுக்கணக்கில் பிரிண்ட் செய்து பயன்படுத்தினோம்.

33. பெட்

மருத்துவமனையில் உபயோகப்படுத்திய பெட்கள், இரும்பிலான முற்றிலும் 1970ல் பயன்படுத்தப்பட்டவைகளே. டிராலி, வீல்சேர் ஆகியவைகளும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவையே.

34. உபகரணங்கள்

ஊசி, சிரிஞ்ச், மருந்து பாட்டில்கள், கத்தரி உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை உபகரணங்களும் 1970ல் பயன்படுத்தப்பட்ட ஒரிஜினல்கள் தான்.

35. சேர்கள்

படம் நெடுக பயன்படுத்தப்பட்டிருக்கும் சேர்கள், இரும்பு மற்றும் மரத்திலான பழையவைகள். தேடிப்பிடித்து கொண்டு வந்தோம்.

36. விக்டோரியா ஹால்

கல்கத்தாவின் தாஜ்மஹாலான விக்டோரியா ஹால் தற்போது டிரஸ்டினால் பராமரிக்கப்படுகிறது. பலத்த கண்காணிப்பில், தொன்மம் சற்றும் மறையாதிருக்கும் அந்த மாளிகையின் முன்பு படப்பிடிப்பு நடத்த பெரிதும் முயன்று அனுமதி வாங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளைக் கட்டுப்படுத்தி படப்பிடிப்பை எடுத்தோம்.

37. ஜீ.பி.ஓ

கொல்கத்தாவின் பழம்பெருமைகளில் ஒன்று கொல்கத்தா ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் எனப்படும் ஜீ.பி.ஓ., பிரிட்டிஷ் காலகட்டத்திய அந்தப் பெரும் கட்டிடம் இன்றும் மத்திய தபால் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. நிறையப் போராட்டத்துக்குப் பின்னர் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தது.Image

38. ஜீ.பி.ஓ., பொருட்கள்

கல்கத்தா ஜீ.பி.ஓ. வில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில், தபால் மை, தபால் சீல்கள், தபால் முத்திரை குத்துமிடத்தில் காட்டப்படும் தபால் பொருட்கள் அனைத்தும் அங்கு கேட்டு வாங்கிப் பயன்படுத்தியவை.

39. தபால் சாக்கு

தபால்களை மாநில வாரியாக ஏற்றி அனுப்பும் துணிப்பைகள் அனைத்தும் எங்களால் உருவாக்கப்பட்டவை. துணிப்பை, சீல், அரக்கு, நூல் என்று முறைப்படி அனைத்துப் பைகளும் தயாரிக்கப்பட்டன.

40. ஒற்றைப்படகு

கதைப்படி தேவைப்பட்ட ஒற்றைப்படகுக்காக, ஒரு மரப்படகை தேடிப்பிடித்து வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம். பயன்பாட்டில் இருந்து கொண்டிருந்த அந்தப் படகின் நிறத்தை மாற்றி, தோற்றத்தை மாற்றி, கடற்கரைக்கு இழுத்து வந்து படமாக்கினோம்.

41. மழைப்பொழிவு

‘பொக்கிஷம்’  படத்தில் மழை பொழியும் காட்சிகள் அனைத்தும், நிஜ மழையில் எடுக்கப்பட்டவேயே. கொல்கத்தாவில், தெருவெங்கும் வெள்ளம் வழிந்தோட, கேமராவை தண்ணீரில் வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன. நாகூரில், காரைக்காலில் என்று வரும் காட்சிகளும் இயற்கை மழையில் நனைந்தவை.

42. நாகூர் தர்கா

தொன்மை மிக்க நாகூர் தர்காவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘பொக்கிஷம். நாகூர் தர்கா நிர்வாகிகளின் பேரன்பு கலந்த ஒத்துழைப்புடன், இறை மாட்சிக்கு துளியும் களங்கம் வந்து விடாமல், மிக்க பொறுப்புணர்வுடன் அங்கு படப்பிடிப்பு வெவ்வேறு இரு தினங்களில் நடத்தப்பட்டது.

43. நாகூர் வீடுகள்

லெனின் நினைத்து பார்க்கும் காட்சிக்காக நாகூர் தர்கா எதிரே மற்றும் பக்கவாட்டில் அமைந்திருக்கும் இரண்டு வீடுகளில் படப்பிடிப்பை நடத்தினோம். இரு வீடுகளுமே நாற்பதாண்டுகள் பழமை நிறைந்தவை.

44. திட்டச்சேரி வீடு

நதீராவின் வீட்டுக்காக, ஒரிஜினல் முஸ்லிம் வீட்டைத்தேடி, கீழக்கரை, உத்தமபாளையம், நாகூர் பகுதிகளில் சுற்றியலைத்து கடைசியில் நாகூர் அருகே திட்டச்சேரியில் கண்டடைந்தோம். நாகூர் - நன்னிலம் சாலையில் இந்த ஊர் இருக்கிறது. ஊர் முழுக்க பாரம்பர்யம், பழமை வழியும் நீண்ட வீடுகள் இருக்கின்றன.

45. கல்கத்தா வீடு

கல்கத்தாவில் லெனின் வீடாகக் காட்டப்பட்டிருப்பது, துர்கா பூஜை நடப்பது, பூமிநாதன் வீடு ஆகிய அனைத்தும் அமைந்திருப்பது ‘லா ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் மிகப்பெரிய மாளிகையில்தான். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஜமீன் மாளிகை இது.

46. சிலை செய்யுமிடம்

கல்கத்தாவில் தொன்மம் நிறைந்த பகுதிகளில் ஒன்று குமாரடோலி. இங்குதான் சிலைகள் செய்யப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் நூற்றுக்கணக்கில் சிலைகள் செய்து கொண்டேயிருக்கிறார்கள். பூமிநாதன் சிலை செய்வது இங்கு படமாக்கப்பட்டது.

47. கப்பல்கள்

ஐஸ்வர்யா, இந்திய அரசின் எண்ணெய்க் கப்பல் ஆகியவற்றில் முறைப்படி அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தினோம். ஐஸ்வர்யா கப்பலின் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் தமிழர்களாக இருந்து எல்லா உபகரணங்களையும் வழங்கினர்.

48. கப்பல் கேப்டன்

லெனின் அறிமுகக் காட்சியை அடுத்து கேப்டனுடன் லெனின் பேசுவார். அவர் ஒரிஜினல் கப்பல் கேப்டன். படப்பிடிப்பு நடந்த கப்பலின் கேப்டன் அவர். வேண்டுகோளை ஏற்று நடித்துக் கொடுத்தார்.

49. தரங்கம்பாடி கடற்கரை

நாகூர் கடற்கரையாக, தரங்கம்பாடி கடற்கரை காட்டப்பட்டுள்ளது. தரங்கம்பாடி கோட்டையைத் தாண்டி இருந்த விசாலமான வெளியில் படகை அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.

50. தரங்கம்பாடி பள்ளி

தரங்கம்பாடி நகரம் பல நூற்றாண்டுகள் பழமையானது. அங்கிருக்கும், கிறிஸ்தவ பள்ளியை, காரைக்கால் அவ்வையார் கல்லூரியாக மாற்றி அமைத்து, பைபிள் வாசகங்களை இரவு, பகலாக மறைத்து படப்பிடிப்பு நடந்தது.

51. பாடல் கம்போஸிங்

‘பொக்கிஷம்’ படத்துக்கான பாடல் கம்போசிங், கேரளாவின் ஆழப்புழாவில் நடந்தது. படகில் இசைக்கருவிகளுடன் நாள்முழுதும் தண்ணீரிலேயே சுற்றியலைந்து நான்கு நாட்களில் அத்தனை பாடல்களும் கம்போஸ் செய்யப்பட்டன.

52. துப்பட்டி

நாகூரின் தொன்மையான பெருமைகளில் ஒன்று துப்பட்டி. தற்போது முஸ்லிம் பெண்கள் அணியும், பர்தாவுக்கு இணையானது துப்பட்டி. வெள்ளை நிறத்தில், சுமார் 14 அடி நீளமுள்ள துப்பட்டி நாகூருக்கே உரிமையான விஷயம். இந்தப்படத்தில், முஸ்லிம் பெண்கள் முழுக்க, முழுக்க துப்பட்டி அணிந்தே நடித்திருக்கிறார்கள். இதற்காக, பல ஒரிஜினல் துப்பட்டிகளையும், அதைப்போன்ற சிலவற்றை நாங்களும் உருவாக்கினோம்.

53. கோபி கிணறு

லெனினின் சென்னை வீட்டில், துணி துவைக்கும் இடத்தில் ஒரு கிணறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ததால், கிணறு ஒன்றை உருவாக்கினோம். அக்கம், பக்கத்தவர்கள் அதை நிஜக்கிணறு என்றே நம்பி விட்டனர்.

54. சீதாலட்சுமி மருத்துவமனை

1970ம் காலகட்டத்திய மருத்துவமனைக்காக, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் தேடியலைந்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த காலகட்டத்தில் கட்டப்பட்டு, அப்படியே இருக்கும் கோபி சீதாலட்சுமி மருத்துவமனையை தேர்வு செய்து, பல விஷயங்களை மாற்றியமைத்தோம்.

55. பெங்காலி பாடல்

படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ஜ் மோனே..’ பெங்காலிப் பாடலுக்காக, கல்கத்தா சென்றிருந்தபோது அங்கு ஒரு பாடலாசிரியரைத் தேர்வு செய்து எழுதி வாங்கினோம். அவரை சென்னை வரவழைத்து, பாடலைப் பதிவு செய்தோம். தற்போது தமிழில் பாடிக்கொண்டிருக்கும் உஜ்ஜெயினி அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். அவர் கல்கத்தாவைச் சேர்ந்தவர்.

56. மணல் வீதி

நதீரா வீடு இருக்கும் தெரு, கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதாக கதையில் இருக்கிறது. மேலும், அந்தக் காலகட்டத்தை உணர்த்தவேண்டியிருந்ததால், தார் ரோட்டை, மணல் கொட்டி மணல்வீதியாக மாற்றியமைத்தோம்.

57. புறாக்கள் தர்ஹா

நாகூர் தர்காவில் நிறைந்திருக்கும் புறாக்களும் படத்தில் நடித்திருக்கின்றன. தர்காவுக்கு முன் நதீரா நிற்கும் ஷாட் எடுத்துக் கொண்டிருந்தபோது, நாங்களே எதிர்பாராமல், தர்காவில் இருந்த புறாக்கள் பறந்த வானம் முழுவதையும் நிறைத்தன. அதுபோல, லெனின் தர்காவில் விசாரித்துத் திரும்பும்போதும் அவரது தலைக்கு மேலே புறாக்கள் பறந்தன.

58. ஸ்டேட்ஸ்மேன்

கல்கத்தாவில் பயன்படுத்துவதற்காக ஆங்கில நாளிதழ் தேவைப்பட்டது. அங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சாகிக்கொண்டிருக்கும் ‘ஸ்டேட்ஸ்மேன்’ ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, 1970ம் ஆண்டில் வெளியான நாளிதழை வாங்கி மறு உருவாக்கம் செய்தோம். அங்கு 50 ஆண்டுகால நாளிதழ்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

59. ஜனசக்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், ம.சிங்காரவேலர் நூலகத்தில் பழைய ஜனசக்தி நாளிதழ்களை வாங்கி மறு உருவாக்கம் செய்தோம்.

60. தீக்கதிர்

மதுரையின் தீக்கதிர் அலுவலகத்தில், தீக்கதிர் பழைய லோகோ வாங்கி ரீபிரிண்ட் செய்தோம்.

61.ஓவியங்கள் - நியோ ரியாலிசம்

கல்கத்தா லெனின் அறையில் இடம்பெற்றிக்கும் பெரிய அளவிலான இரண்டு ஓவியங்கள் பழைய பாணியிலான நியோ ரியாலிசத்தைச் சார்ந்தவை. அந்த ஓவியங்களை, பழைய ப்ரேம் பாணியில் சட்டமிட்டு மாட்டி வைத்தோம்.

62. திட்டச்சேரி வீட்டுப் பொருட்கள்

நதீரா வீட்டில் பயன்படுத்தப் பட்டிருக்கும் பொருட்கள் அனைத்துமே, 1970 மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்தவை. அந்தப் பொருட்களை திட்டச்சேரி, காரைக்கால் மற்றும் நிரவி ஆகிய ஊர்களில் வீடு, வீடாக தேடிச் சென்று வாங்கி வந்து பயன்படுத்தினோம். அங்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்.

63. மதுரை, காரைக்குடி பொருட்கள்

சைக்கிள் ஹெட்லைட், ஜூஸ்பிழியும் கண்ணாடி ஜூஸர், எனாமல் அடுக்கு கேரியர், பித்தளைச் சாமான்கள் மதுரை மற்றும் காரைக்குடியில் தேடியலைந்து வாங்கப்பட்டவை. 

64. காரைப்புயல்

காரைக்கால் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தபோது, ‘நிஷா’ புயல் தாக்குதல் இருந்ததால் சுமார் ஒருவாரம் படப்பிடிப்பு நடக்கவில்லை. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புயல், காரைக்காலில் கரை கடந்தது. இருந்தாலும், படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. புயலால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி கடற்கரை, படத்தின் 2வது பாதிக்கு ஏற்றவாறு பொருந்தியிருந்தது.

65. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட்

நதீரா படிப்பது காரைக்கால் அவ்வையார் மகளிர் கல்லூரியில். அவர் பஸ் ஏறும் காட்சிக்காக பஸ்ஸ்டாண்ட் தேடி தஞ்சை, திருச்சி, நாகை மாவட்டங்களில் பஸ் ஸ்டாண்ட்கள், தனியார் பஸ்டெப்போக்கள், அரசு பஸ்டெப்போக்களை தேடிப்பார்த்து சரிவராததால், காரைக்கால் பஸ் ஸ்டாண்டையே பயன்படுத்திக் கொண்டோம். அதற்கேற்ப, பஸ்ஸ்டாண்டிலிருந்த நவீனங்களை அலசி ஆராய்ந்து அகற்றினோம்.

66. ஹீரோயின் தோழி

நதீராவின் தோழி கேரக்டருக்காக, சென்னை, காரைக்கால், கோபி என்று பல பகுதிகளில் தேடியும் படப்பிடிப்புக்கு முதல்நாள் வரை கிடைக்கவில்லை. நதீராவின் தோழிகளாக நடிக்க வந்திருந்த கல்லூரி மாணவி ஒருவரே, தேர்வாகி தோழியாக நடித்தார்.

67. கல்கத்தா பெண்

கல்கத்தா லெனின் வீடு அருகில் வசிக்கும் பெண் கேரக்டருக்காக, கல்கத்தாவில் நான்கு நாட்கள் தேடியும் சரிவரவில்லை. கடைசியில், படப்பிடிப்புக்கு இரு தினங்கள் முன்னதாக தேர்வானவர்தான் படத்தில் நடித்திருக்கிறார். இவர், பெங்காலி டிவி தொடர்களில் பிரபலம்.

68. மவுத் ஆர்கன்

லெனின் வாசிப்பதற்காக பழைய பாணியிலான மவுத் ஆர்கனுக்காக, சென்னையின் அனைத்து இசைப்பொருட்கள் விற்பனைக் கடைகளில் தேடி கிடைக்கவில்லை. கடைசியில் திண்டுக்கல்லில் இருந்து நண்பர் ஒருவர் அனுப்பி வைத்த மவுத் ஆர்கனைத்தான் லெனின் படத்தில் வாசித்திருக்கிறார்.

69. குதிரை வண்டிகள்

குதிரை வண்டிகள் தமிழகத்தில் அரிதாகி விட்டன. கோபியில் கூண்டு வண்டிகள் தேடிப்பிடித்து கண்டுபிடித்தோம். காரைக்கால் படப்பிடிப்புக்கு, நாகப்பட்டினத்தில் இருந்து கூண்டு வண்டிகளை வரவழைத்தோம்.

70. சைக்கிள் ரிக்சா

கோபி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட சைக்கிள் ரிக்சாக்கள், திண்டுக்கல், மதுரையில் இருந்து லாரி மூலம் ஏற்றிக்கொண்டுவரப்பட்டவை.

71. இருசக்கர வாகனங்கள்

மருத்துவமனை காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்தும், 1970ம் காலகட்டத்தவை. அவற்றைப் பராமரித்து பாதுகாத்து வரும் ஒருவர் கோவையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரிடமிருந்து வரவழைத்தோம். லெனின் ஓட்டிச்செல்லும் மொபட் பிரெஞ்ச் நாட்டுத் தயாரிப்பு.

72. கல்கத்தா கைரிக்சா

தமிழகத்தில் ஒழிக்கப்பட்ட கைரிக்சாக்கள், கல்கத்தாவில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டோம்.

73. குல்மொஹர்

கதைப்படி தேவைப்படும், குல்மொஹர் மரத்திற்காக பல இடங்களில் தேடி, கடைசியில் திட்டச்சேரி பள்ளிவாசல் குளக்கரையில் கிடைத்தது. நதீரா கடிதம் படிப்பது இங்கு காட்சியாக்கப்பட்டது.

74. மோரிஸ் மைனர், டைகர், பென்ஸ், பியட்

காலம் மாறினாலும், கம்பீரம் குறையாத மோரிஸ் மைனர், பியட் கார்கள் காரைக்காலிலும், மோரிஸ் டைகர் கார் கல்கத்தாவிலும் பயன்படுத்தப்பட்டன. இரண்டையும் தேடிப்பிடித்து கொண்டுவந்தோம். கோபியில், பழைய பென்ஸ் காரை உபயோகப்படுத்தினோம்.

75. ஸ்டாம்புகள்

படத்தில் பயன்படுத்துவதற்காக 25க்கும் மேற்பட்ட, ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்டாம்புகளை முறையான அனுமதியோடு மறு உருவாக்கம் செய்தோம். காந்தி உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அத்தனை ஸ்டாம்புகளும் ஒரிஜினல் காலகட்டத்தைச் சேர்ந்தவை.

76. தபால் பொருட்கள்

மைக்குடுவை, மை, மை குத்தும் கட்டை, தேதி சீல், தபால் கவர்கள், காகிதங்கள் என்று தபால்துறை சார்ந்த அனைத்தையும் நாங்கள் உருவாக்கினோம்.

77. மரைன் என்ஜினியர் டிரஸ், சான்றிதழ்

லெனின் பயன்படுத்துவதற்காக மரைன் என்ஜினியர் உடை, அவரது சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும், 1970ல் மரைன் என்ஜினியராக பணிபுரிந்து தற்போது சென்னையில் வசிக்கும் ஒருவரிடம் வாங்கி மறு உருவாக்கம் செய்யப்பட்டவை.

78. பொக்கிஷப்பெட்டி

படத்தின் நாடித்துடிப்பான பொக்கிஷப் பெட்டிக்காக, நூற்றுக்கும் மேற்பட்ட பெட்டிகளைப் பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு பெட்டியே கடைசியில் பொக்கிஷப் பெட்டியானது. அந்தப்பெட்டியை, புதிதாகவும், பழையதாகவும் படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம்.

79. ஹவுரா பாலம்

காலங்களைத் தாண்டி நிலைத்து நிற்கும் ஹவுரா பாலம், எப்போதும் ஜனநெருக்கடியில் காட்சி தரும் ஒன்று. லெனின் ‘சோலோ’ காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

80. கல்கத்தா டாக்சி

கல்கத்தா என்றாலே கை ரிக்சாக்களும், மஞ்சள் நிறத்திலான டாக்ஸிகளும்தான். இப்போதும் டாக்ஸிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், 1970ல் இருந்த மஞ்சள் மேலே - கருப்பு கீழே என்ற முறை மாறி கருப்பு மேலேயும், மஞ்சள் கீழேயுமாக இருந்தன. பத்து டாக்ஸிகளை வாடகைக்கு எடுத்து, பெயிண்ட் மாற்றினோம்.

81. கல்கத்தா குடைகள்

கல்கத்தாவில் பயன்படுத்தப்பட்ட குடைகள் அனைத்தும், பழைய பாணியிலானவை. கதர்த்துணியில், மரக்கைப்பிடியில், இரும்புக்கம்பிகளில் அந்தக் குடைகளைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்தோம்.

82. காளிகாட்

கல்கத்தாவின் புகழ்பெற்ற காளி கோயில் இருக்குமிடம் காளிகாட். காளி கோயிலைச் சூழ்ந்திருக்கும் கடைகள் அனைத்திலும் பழைய பாணியிலான பொருட்களை வாங்கலாம். குடை, தகரப்பெட்டிகள், நார்க்கூடைகள் உள்ளிட்ட பெரும்பொருட்கள் இங்கும், சணல் பை உள்ளிட்ட பொருட்கள் குமாரடோலியிலும் வாங்கினோம்.

83. லெட்டர் பாக்ஸ் கல்கத்தா

கல்கத்தா நகரின் அனைத்து வீடுகளிலும், லெட்டர் பாக்ஸ் தொங்கிக் கொண்டிருக்கும். படத்திற்குத் தேவையான லெட்டர் பாக்ஸ், பழைய பொருட்கள் விற்கும் பல கடைகளில் ஏறி இறங்கி வாங்கி வந்தோம். லெனின் வீட்டு கேட்டில் இந்த பெட்டிதான் தொங்கிக் கொண்டிருக்கும்.

 84. புதுவை கல்வே கல்லூரி

பாண்டிச்சேரியில் உள்ள கல்வே கல்லூரி நூற்றாண்டுகள் பழமையானது. நதீரா போன் பேசுவது, பாடலின் சில காட்சிகள் காரைக்கால் கல்லூரியாக உருமாற்றப்பட்டு இங்கு படம்பிடிக்கப்பட்டது.

85. பனைமரச்சாலை

‘வரும் வழியெங்குமே..’ பாடலின் ஒரு ஷாட்டுக்காகவும், பஸ் போகும் வழியாகவும் பனைமரங்கள் நிறைந்த ஒரு சாலை தேவைப்பட்டது. மகாபலிபுரம் - திருப்போரூர் சாலையில் இது படமாக்கப்பட்டது. ‘மொழி இல்லாமலே..’ பாடலின் ஒரு பகுதி திட்டச்சேரி அருகே பனங்காட்டில் படமாக்கப்பட்டது.

86. துருக்கித்தொப்பி

சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலான, குஞ்சம் வைத்திருக்கும் துருக்கித்தொப்பி மிகவும் புகழ்பெற்ற இஸ்லாமியச் சின்னங்களில் ஒன்று. காலத்தை குறிக்கும் வகையில், படம் முழுக்க துருக்கித் தொப்பி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொப்பிகளில் பாதி பாரிமுனை பகுதியில் விலைக்கு வாங்கப்பட்டவை. மீதி, நாகூர் பகுதி முஸ்லிம் நண்பர்கள் தந்தவை.

87. ஜாக்கெட் ஸ்பிரில்

கல்கத்தாவில் தற்போது பெண்கள் அணியும் ஜாக்கெட்டில் எந்த வேலைப்பாடுமில்லை. ஆனால், 1970ல் ஸ்பிரில் வைத்து அணிந்திருக்கிறார்கள். படத்திற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஜாக்கெட் தயார் செய்யப்பட்டன.

88. லெனின் ஷு-பெல்ட்

லெனினின் ஷு மற்றும் பெல்ட் ஆகியவை, பழைய பாணியில் எங்களால் தயார் செய்யப்பட்டவை. இப்போது இந்த மாதிரி கடைகளில் கிடைப்பதில்லை.

89. துணி பட்டன்

நர்ஸ் - கம்பவுண்டர் உடைகளில் பட்டனைச் சுற்றி துணி இருக்கும். அதே மாதிரி வகையில் துணிபட்டன் தயார் செய்யப்பட்டு பயன்படுத்தினோம்.

90. சிகை - மீசை
லெனின் மட்டுமல்லாது, படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்கள் அனைவருக்கும் படப்பிடிப்புக்கு முன்னதாக தலைமுடியை வெட்டி, மீசையைக் குறைத்தோம்.

91. போலீஸ், கண்டக்டர், டிரைவர்

போலீஸ், கண்டக்டர், டிரைவர் ஆகியோரது உடைகளை நாங்கள் தயாரித்தோம். இவர்களுடைய தொப்பி, யூனிபார்ம் துணி ஆகியவை 1970ம் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டவைகளின் மாதிரி.

92. நாகூர் பழக்கூடை

லெனின் தன் அப்பாவுடன், நதீரா வீட்டுக்கு வரும்போது கையில் வைத்திருக்கும் பழக்கூடை, நாகூரில் வாங்கப்பட்டது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக வழக்கில் இருந்து தற்போது ஒழிந்து போன, பனை ஓலையில் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய கூடை அது.

93. போஸ்ட் ஆபிஸ் வீடு

நாகூர் போஸ்ட் ஆபிஸாக காட்டப்பட்டிருப்பது நிஜ போஸ்ட் ஆபிஸ் அல்ல. ஒரே நாள் இரவில் உருவாக்கப்பட்டது. அங்கு பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருட்களும் எங்களால் தயார் செய்யப்பட்டவை. பழைய கடிகாரம், காந்தி, நேரு புகைப்படங்கள் தேடிக்கொண்டுவரப்பட்டவை.

94. போஸ்ட்மேன் சீருடை – பேக்

போஸ்ட்மேன் சீருடையும், பேக்கும் பழைய பாணியில் உருவாக்கப்பட்டவை. அவர்களுக்குத் தொப்பி பழைய பாணியிலானது.

95. துறைமுகத் தொழிலாளர் சீருடை

துறைமுகத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் அணிந்திருக்கும் நீல நிறத்திலான சீருடை அனைத்தும் புதிதாகத் தயார் செய்யப்பட்டவை. தற்போது ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் அணிகிறார்கள். 1970ல் நீல நிறத்தில் மட்டுமே இருந்தன.

96. லெனின் உடைகள்

லெனின் பயன்படுத்தியிருக்கும் சட்டை, பேண்ட், மற்றும் வெள்ளை ஜிப்பாக்கள் 1970ம் பாணியிலானவை. பேண்டின் அகலம் மற்றும் சட்டையில் மடிப்புகள் ஆகியவை அப்போது உண்டு. அவற்றை மனதில் கொண்டு தயார் செய்யப்பட்டவை அவை.

97. ஹீரோயின் மணிபர்ஸ்

நதீரா வைத்திருக்கும் மணிபர்ஸ்கள், பாசியினால் செய்யப்பட்ட பழைய காலத்தியவை. கோபி மற்றும் திட்டச்சேரியில் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

98. குங்குமம்

நதீரா கண்ணாடி முன் வைத்துக் கொள்ளும் குங்குமம், பாரம்பர்ய முறைப்படி கையினால் தயாரிக்கப்பட்ட ஒரிஜினல் குங்குமம். ஒரிஜினல் குங்குமம் மட்டுமே வேண்டுமென்று தேடி வாங்கப்பட்டது அது.

99. திட்டச்சேரி மரத்தூண் - ஹால்

நதீரா வீட்டில் ஹாலில் இருக்கும் நீல நிறத்திலான இரண்டு மரத்தூண்கள் ஒரே மரத்தில் தேக்கில் செய்யப்பட்டவை. அவற்றைச் செம்மைப்படுத்தி, நீல நிறத்தில் வண்ணம் தீட்டினோம். ஹாலின் மேற்கூரை மரத்தில் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடியது. அவற்றையும், சரிசெய்து பயன்படுத்தினோம்.

100. தொழுகை விரிப்பு

நதீரா மற்றும் அவரது குடும்பத்தினர் தொழும் தொழுகை விரிப்புகள், பழைய பாணியிலான கையினால் நெய்யப்பட்ட சித்திர வேலைப்பாடுகளுடன் கூடியவை. பல இடங்களில் தேடிப்பிடித்து அதைப் பயன்படுத்தியுள்ளோம்.
=====0000=====
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)