வெற்றி பெற்றவர்களையும் தோல்வியடைந்தவர்களையும் பிரித்துப் பார்க்கும் இந்த உலகத்தில், உண்மையில் வெற்றி என்பதற்கான அளவுகோல் என்ன?
அழகு, திறமை, பணம், புகழ், சமூக அங்கீகாரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடைந்துவிட்டால் மட்டுமே ஒருவர் வெற்றியாளராகிவிடுகிறாரா?
இத்தகைய கேள்விகளை நகைச்சுவையும் வலியும் கலந்த ஒரு குடும்பப் பயணத்தின் வழியாக முன்வைக்கிறது 2006ஆம் ஆண்டு வெளியான Little Miss Sunshine லிட்டில் மிஸ் சன்ஷைன்.
ஜொனாதன் டேட்டனும் வலேரி ஃபாரிஸும் இணைந்து இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், ஒரு சாதாரண குடும்பக் கதையைத் தாண்டி, மனிதர்களை வெற்றி, தோல்வி என்ற இரு பிரிவுகளுக்குள் அடைக்கும் சமூக மனப்பான்மையை நுட்பமாகக் கேள்விக்குள்ளாக்குகிறது.
திரைப்படத்தின் மிக முக்கியமான பலம் அதன் கதாபாத்திர வடிவமைப்பு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொருவரும் வெவ்வேறு கனவுகள், ஏமாற்றங்கள், மனக்காயங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றுடன் வாழ்கிறார்கள். ரிச்சர்ட் ஹூவர் (கிரெக் கின்னியர்), ஷெரில் ஹூவர் (டோனி கொலெட்), டுவெய்ன் ஹூவர் (பால் டானோ), பிராங்க் கின்ஸ்பர்க் (ஸ்டீவ் கேரல்), எட்வின் ஹூவர் (ஆலன் ஆர்கின்), ஆலிவ் ஹூவர் (அபிகெயில் பிரெஸ்லின்) ஆகியோரின் தனித்துவமான குணங்கள் குடும்ப உறவுகளுக்குள் இயல்பாகவே மோதல்களை உருவாக்குகின்றன.
இவர்களில் யாரும் முழுமையான நல்லவர்களாகவோ, முழுமையான குறைபாடுகள் கொண்டவர்களாகவோ சித்தரிக்கப்படவில்லை. ஒவ்வொருவரிடமும் பலவீனங்களும் முரண்பாடுகளும் இருக்கின்றன.
அந்தக் குறைபாடுகளை மறைக்காமல் வெளிப்படுத்துவதால்தான் கதாபாத்திரங்கள் செயற்கையான திரைப்படப் பாத்திரங்களாக இல்லாமல், நிஜ வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய மனிதர்களாகத் தோன்றுகிறார்கள்.
இயக்குநர்களின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க அம்சம், நகைச்சுவையையும் துயரத்தையும் தனித்தனியாகப் பிரிக்காமல் ஒரே வாழ்க்கை அனுபவத்தின் இரு பக்கங்களாகக் கையாள்வதாகும்.
குடும்பத்தினரின் இயலாமைகள் சில நேரங்களில் சிரிப்பை ஏற்படுத்துகின்றன; அதே மனிதர்களின் தனிப்பட்ட வேதனைகள் மனதை கனக்கச் செய்கின்றன. ஒரு தருணத்தில் நகைச்சுவையாகத் தோன்றும் சூழல், அடுத்த கணமே அதன் பின்னணியில் இருக்கும் மனித வலியை உணர்த்தக்கூடும்.
இந்த மாற்றங்கள் பார்வையாளரை உணர்ச்சிப்பூர்வமாகத் தயார்படுத்தாமல் இயல்பாக நிகழ்வதால், திரைப்படத்தின் நகைச்சுவை மலிவான கேலியாக மாறுவதில்லை. அதேபோல், துயரமான தருணங்களும் அளவுக்கு மீறிய உணர்ச்சிப் பிழிவாக மாறாமல் கட்டுப்பாட்டுடன் கையாளப்படுகின்றன. இதுவே இந்தப் படத்தின் துயர்நகைச்சுவைத் தன்மைக்கு அடிப்படையாக அமைகிறது.
மைக்கேல் ஆர்ன்ட் எழுதிய திரைக்கதையின் சிறப்பு, பல்வேறு மனநிலைகளைக் கொண்ட கதாபாத்திரங்களை ஒரே மையக் கருப்பொருளைச் சுற்றி இணைப்பதாகும்.
தனித்தனியாகப் பார்க்கும்போது அவர்களுடைய பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போலத் தோன்றலாம். ஆனால், மனிதர்களின் மதிப்பு அவர்களுடைய சாதனைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறதா என்ற அடிப்படைக் கேள்வி இந்தப் பாத்திரங்களின் வழியாகத் தொடர்ந்து வெளிப்படுகிறது.
வெற்றியை அடைவதற்கான வழிமுறைகள், தனிப்பட்ட லட்சியங்கள், சமூகத்தின் எதிர்பார்ப்புகள், தோல்வியை எதிர்கொள்ளும் விதம் ஆகியவை கதையின் உட்பொருளாக அமைகின்றன.
சிறுமி அழகிப் போட்டி என்ற மையப்புள்ளியைப் பயன்படுத்தினாலும், திரைப்படத்தின் கவனம் போட்டியின் மீதோ அதன் விதிமுறைகள் மீதோ மட்டும் தங்கிவிடுவதில்லை. ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டு மதிப்பிடும் மனப்பான்மையையே அது ஆராய்கிறது.
இந்தக் கருப்பொருளை இயக்குநர்கள் நேரடியான அறிவுரைகளாகவோ நீண்ட உரையாடல்களாகவோ முன்வைக்கவில்லை. கதாபாத்திரங்களின் செயல்கள், அவர்களுடைய முரண்பாடுகள், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் தருணங்கள் ஆகியவற்றின் வழியாகவே பார்வையாளரிடம் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
குறிப்பாக, வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மனிதர்களின் இயல்பான மகிழ்ச்சியையும் சுயமதிப்பையும் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைக் கதை அமைப்புக்குள் நுட்பமாகப் பதித்திருக்கிறார்கள்.
தோல்வி என்பது ஒரு மனிதனின் முழுமையான அடையாளமாகிவிட முடியுமா என்ற கேள்வியும் இதனுடன் இணைகிறது. இதனால் திரைப்படம் ஒரு குடும்பத்தின் பயணத்தைப் பற்றிய படமாக மட்டுமல்லாமல், சமூகத்தில் வெற்றிக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தைப் பற்றிய படமாகவும் விரிவடைகிறது.
நடிப்பில், ஆறு முக்கியக் கதாபாத்திரங்களையும் ஏற்றிருக்கும் நடிகர்கள் ஒருவருக்கொருவர் இடமளித்து இயல்பான குழு நடிப்பை உருவாக்கியிருக்கிறார்கள். கிரெக் கின்னியர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கைக்கும் உள்ளார்ந்த பாதுகாப்பின்மைக்கும் இடையிலான முரண்பாடு, ரிச்சர்ட் என்ற பாத்திரத்தை ஒரே பரிமாணத்தில் சுருக்கிவிடாமல் காக்கிறது.
டோனி கொலெட் குடும்பத்தின் பல்வேறு சிக்கல்களையும் சமாளிக்க முயலும் பெண்ணின் மன அழுத்தத்தையும் பொறுப்புணர்வையும் நம்பகமாக வெளிப்படுத்துகிறார்.
ஸ்டீவ் கேரல், தனது வழக்கமான நகைச்சுவை அடையாளத்திலிருந்து விலகி, அமைதியான வேதனையையும் மனத்தளர்ச்சியையும் வெளிப்படுத்தும் நடிப்பை வழங்கியிருக்கிறார்.
பால் டானோவின் கட்டுப்படுத்தப்பட்ட உடல்மொழியும் முகபாவனைகளும் அவரது கதாபாத்திரத்தின் தனிமை உணர்வை வலுப்படுத்துகின்றன.
ஆலிவ் என்ற சிறுமியாக நடித்துள்ள அபிகெயில் பிரெஸ்லினின் பங்களிப்பு படத்தின் உணர்ச்சிப்பூர்வமான மையங்களில் ஒன்றாக இருக்கிறது.
குழந்தைத்தனமான உற்சாகம், தன்னம்பிக்கை, அப்பாவித்தனம் ஆகியவற்றை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தியிருப்பது அவரது நடிப்பின் சிறப்பு. ஒரு குழந்தையின் ஆசையை பெரியவர்களின் உலகம் எவ்வாறு மதிப்பிடுகிறது என்ற முரண்பாட்டை அவரது இயல்பான நடிப்பு தெளிவாக்குகிறது.
எட்வின் ஹூவராக வரும் ஆலன் ஆர்கின், வெளிப்படையான முரட்டுத்தனத்திற்கும் நகைச்சுவை உணர்விற்கும் இடையே தனித்துவமான சமநிலையை உருவாக்குகிறார்.
அவரது நடிப்பில் உள்ள நேரடியான தன்மை, கதாபாத்திரத்தின் கடுமையான வெளித்தோற்றத்துக்குள் இருக்கும் மனிதத் தன்மையை உணரச் செய்கிறது. இந்தப் படத்திற்காக அவர் சிறந்த துணை நடிகருக்கான அகடமி விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அபிகெயில் பிரெஸ்லினும் அதே பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார்.
ஒளிப்பதிவாளர் டிம் சுஹர்ஸ்டெட்டின் பணி, திரைப்படத்தின் சாலைப் பயண அமைப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குடும்பத்தினர் அனைவரும் ஒரு பழைய வோக்ஸ்வாகன் வேனுக்குள் பயணிக்கும் காட்சிகள் படத்தின் காட்சிமொழியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குறுகிய இடத்தில் பல கதாபாத்திரங்கள் ஒன்றாக இருப்பதால் உருவாகும் நெருக்கடியையும், அவர்களுக்கிடையேயான மன இடைவெளியையும் காட்சிகளின் அமைப்பு உணர்த்துகிறது.
வேனுக்குள் வெவ்வேறு கோணங்களில் படம்பிடிக்க ஐந்து மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில வாகனங்கள் இயங்கும் வகையிலும், மற்றவை படப்பிடிப்புக்காகத் தனியாக அமைக்கப்பட்ட வகையிலும் இருந்தன. வேனுக்குள் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையையும் பதிவு செய்யும் வகையில் கேமரா அமைப்புகள் திட்டமிடப்பட்டிருந்தன.
இதனால் அந்த வாகனம் வெறும் போக்குவரத்துச் சாதனமாக இல்லாமல், கதாபாத்திரங்களின் மனநிலைகளும் உறவுகளும் வெளிப்படும் முக்கியமான காட்சியிடமாக மாறுகிறது.
படத்தொகுப்பாளர் பமீலா மார்ட்டினின் பணி, பல கதாபாத்திரங்களைக் கொண்ட கதையின் ஓட்டத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. தனிப்பட்ட அனுபவங்களையும் குடும்பத்தின் பொதுவான பயணத்தையும் ஒன்றோடொன்று இணைக்கும் திரைக்கதை அமைப்புக்கு ஏற்ப காட்சிகள் நகர்கின்றன.
படப்பிடிப்பும் திரைக்கதையின் நிகழ்வு வரிசையைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கதாபாத்திரங்களின் மனநிலை மாற்றங்களையும் அவர்களுக்கிடையேயான உறவுகளின் வளர்ச்சியையும் ஒரே தொடர்ச்சியான அனுபவமாக உணர முடிகிறது.
சிறிய இடத்தில் பலர் ஒன்றாக இருக்கும் காட்சிகளுக்கும், பரந்த சாலைப் பின்னணியில் அமைந்த காட்சிகளுக்கும் இடையே உருவாகும் வேறுபாடு படத்தின் காட்சியனுபவத்தை வளப்படுத்துகிறது.
இசை இந்தத் திரைப்படத்தின் உணர்ச்சித் தன்மையை உருவாக்குவதில் தனி இடம் பெறுகிறது. டெவோட்ச்கா இசைக்குழுவும் இசையமைப்பாளர் மைக்கேல் டன்னாவும் இணைந்து உருவாக்கிய பின்னணி இசை, படத்தின் துயர்நகைச்சுவை இயல்புக்கு ஏற்ற தனித்துவமான ஒலியுலகை அமைக்கிறது.
டெவோட்ச்காவின் ஏற்கெனவே வெளியான பாடல்களில் சிலவற்றைத் திரைப்படத்திற்கேற்றவாறு மாற்றியமைத்ததுடன், புதிய இசையையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
இசை வெறும் உணர்ச்சியைத் தூண்டும் பின்னணியாகச் செயல்படாமல், காட்சிகளின் மனநிலையுடன் இணைந்து பயணிக்கிறது. சூழலின் அபத்தத்தையும் மனிதர்களின் உள்ளார்ந்த ஏக்கத்தையும் ஒரே நேரத்தில் உணர்த்தும் வகையில் அதன் பயன்பாடு அமைந்துள்ளது.
சூஃப்ஜான் ஸ்டீவன்ஸின் பாடல்களும் திரைப்படத்தின் பாடல் தொகுப்பில் இடம்பெறுகின்றன. இசைத் தேர்வுகள் படத்தின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கும் முக்கிய அம்சமாக இருக்கின்றன.
கலை இயக்கம் மற்றும் ஆடை வடிவமைப்பிலும் திரைப்படத்தின் கருப்பொருளுடன் தொடர்புடைய தேர்வுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, அழகிப் போட்டி நடைபெறும் சூழலை உருவாக்குவதற்காக உண்மையான சிறுமி அழகிப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவமுள்ள சிறுமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்களுடைய நிஜப் போட்டிகளில் பயன்படுத்திய தோற்றங்களையும் நிகழ்ச்சி முறைகளையும் திரையிலும் வெளிப்படுத்தினர். போட்டியில் காணப்படும் ஆடைகள் மற்றும் பல உபகரணங்களையும் பங்கேற்ற சிறுமிகளின் பெற்றோர்களே வழங்கியிருந்தனர்.
இதனால் அந்தச் சூழல் வெறும் கற்பனையான மேடை அமைப்பாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட சமூக நிகழ்வின் நடைமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலிவின் உடலமைப்பைத் திரையில் வேறுபடுத்திக் காட்டுவதற்காக அபிகெயில் பிரெஸ்லின் சிறப்பு மெத்தைப் பொருத்திய உடையை அணிந்திருந்ததும், அவரது நடன நிகழ்ச்சிக்காக இரண்டு வாரங்கள் நடனப் பயிற்சி மேற்கொண்டதும் தயாரிப்பின் நுணுக்கமான அணுகுமுறையை எடுத்துக்காட்டுகின்றன.
இயக்குநர்கள் அழகிப் போட்டியைத் திரைப்படத்தின் மையப் பொருளாக மட்டும் அணுகாமல், மனிதர்களைத் தரவரிசைப்படுத்தும் சமூக மனநிலையை ஆராய்வதற்கான ஒரு பின்னணியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அழகு என்ற கருத்து எவ்வாறு ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் அடைக்கப்படுகிறது, குழந்தைகளின் இயல்பான தன்மை எவ்வாறு பெரியவர்களின் எதிர்பார்ப்புகளால் மாற்றப்படுகிறது, மற்றவர்களுடன் ஒப்பிடப்படுவது ஒருவரின் சுயமதிப்பை எவ்வாறு பாதிக்கிறது போன்ற கேள்விகள் இதன் வழியாக எழுகின்றன.
அதே நேரத்தில், குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் திரைப்படம் எளிமைப்படுத்திவிடுவதில்லை. அன்பு இருக்கிறது என்பதற்காக அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வார்கள் என்றோ, ஒரே குடும்பத்தில் இருப்பதால் எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திப்பார்கள் என்றோ அது கூறுவதில்லை. கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்புகளும் இருந்தாலும், மனிதர்களுக்கிடையே ஆதரவும் புரிதலும் உருவாகக்கூடிய சாத்தியத்தைத் தொடர்ந்து ஆராய்கிறது.
லிட்டில் மிஸ் சன்ஷைன் உலகளாவிய அளவில் நல்ல விமர்சன வரவேற்பைப் பெற்றது. ராட்டன் டொமேட்டோஸ் தளத்தில் 218 விமர்சனங்களின் அடிப்படையில் 91 விழுக்காடு நேர்மறையான மதிப்பீட்டையும், மெட்டாகிரிட்டிக்கில் 36 விமர்சனங்களின் அடிப்படையில் 100க்கு 80 மதிப்பெண்ணையும் பெற்றிருந்தது.
அதன் குழு நடிப்பு, இயக்கம், திரைக்கதை, நகைச்சுவை ஆகிய அம்சங்கள் பரவலாகப் பாராட்டப்பட்டன. சிறந்த திரைப்படம் உள்ளிட்ட நான்கு அகடமி விருதுப் பரிந்துரைகளையும் பெற்றது.
சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதையும் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றது. மேலும், சிறந்த திரைப்படத்திற்கான இன்டிபெண்டன்ட் ஸ்பிரிட் விருதையும், சிறந்த குழு நடிப்புக்கான திரை நடிகர்கள் சங்க விருதையும் பெற்றது.
இத்தகைய வரவேற்பு, சிறிய அளவிலான குடும்பக் கதையாகத் தொடங்கிய ஒரு திரைப்படம் பல்வேறு நாடுகளின் பார்வையாளர்களிடமும் தொடர்பை ஏற்படுத்தியதைக் காட்டுகிறது.
வெற்றியைப் பற்றிப் பேசும் பல திரைப்படங்கள் சாதனையின் உச்சத்தை அடைவதையே முக்கியமாகக் கருதுகின்றன. ஆனால் லிட்டில் மிஸ் சன்ஷைன் மனிதர்களின் குறைபாடுகளையும் தோல்விகளையும் மறைக்காமல் ஏற்றுக்கொள்வதன் வழியாக வேறொரு பார்வையை முன்வைக்கிறது. அதன் நகைச்சுவை மனிதர்களைக் கேலி செய்வதற்காக அல்ல; அவர்களுடைய முரண்பாடுகளுக்குள் இருக்கும் அபத்தத்தையும் அன்பையும் ஒரே நேரத்தில் உணரச் செய்வதற்காகப் பயன்படுகிறது.
குடும்பம் என்பது குறையற்ற மனிதர்களின் கூட்டமைப்பு அல்ல; ஒருவருடைய குறைகளை இன்னொருவர் ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளும் உறவுகளின் வெளி என்பதை இந்தப் படம் நமக்கு நினைவூட்டுகிறது.
சிரிப்பையும் நெகிழ்ச்சியையும் ஒரே அனுபவமாக இணைத்து, வெற்றி என்ற சொல்லின் பொருளையே மறுபரிசீலனை செய்ய வைக்கும் இந்தத் திரைப்படம், மனிதர்களை அவர்களுடைய சாதனைகளால் அல்ல, அவர்களுடைய தனித்துவத்தாலும் உறவுகளாலும் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படைப்பாகத் திகழ்கிறது.
==============================
படத்தின் கதை:-
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள அல்புகர்க் நகரில், ஷெரில் ஹூவர் (டோனி கொலெட்) தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறாள்.
அவள் இரண்டு குழந்தைகளின் தாய். குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்கள், கணவனின் தோல்விகள், வீட்டில் நிலவும் மனக்கசப்புகள் எனப் பல பிரச்சினைகளால் அவள் எப்போதும் மன அழுத்தத்துடன் இருக்கிறாள்.
அவளுடைய கணவன் ரிச்சர்ட் ஹூவர் (கிரெக் கின்னியர்), தன்னை ஒரு லைஃப்கோச்சாக வெற்றிகரமான ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் வாழ்க்கை வழிகாட்டியாகவும் நிலைநிறுத்திக்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறான்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றிப் பிறருக்குப் போதிக்க வேண்டும் என்பதே அவனுடைய லட்சியம். ஆனால், அவனுடைய சொந்த வாழ்க்கையிலேயே வெற்றி என்பது இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது.
அவன் உருவாக்கியுள்ள வெற்றிக்கான கொள்கைகளையும் வணிகத் திட்டங்களையும் குடும்பத்தினர் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் வீட்டில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
ஷெரிலுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த மகன் டுவெய்ன் ஹூவர் (பால் டானோ). அவன் பதின்ம வயதைக் கடந்து கொண்டிருக்கும் இளைஞன். ஜெர்மானியத் தத்துவஞானி நீட்சேவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டிருக்கும் அவன், தன்னுடைய இலக்கை அடையும் வரையில் யாரிடமும் பேசுவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருக்கிறான்.
அவனுடைய கனவு விமானப்படை விமானியாக, குறிப்பாகப் போர் விமானியாக மாற வேண்டும் என்பதுதான். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக அவன் கடுமையான மன உறுதியுடன் இருக்கிறான். அதனால் வீட்டில் இருப்பவர்களுடன் பேசாமல், தனக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக்கொண்டு வாழ்கிறான்.
ஷெரிலின் மூத்த சகோதரன் பிராங்க் கின்ஸ்பர்க் (ஸ்டீவ் கேரல்) என்பவனும் அந்த வீட்டில் தங்கியிருக்கிறான். அவன் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் புரூஸ்ட் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்யும் கல்வியாளர். ஓரினச்சேர்க்கையாளர் என்பதற்காகவும், தனது அறிவுத்திறன் மற்றும் கல்விசார் வாழ்க்கைக்காகவும் தனித்துவமான மனநிலையைக் கொண்டவன்.
அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியும் தனிப்பட்ட நெருக்கடிகளும் அவனைத் தற்கொலை முயற்சிக்குத் தள்ளியிருக்கின்றன. அந்த முயற்சிக்குப் பிறகு அவனைத் தனியாக விட்டுவிட முடியாத சூழல் உருவானதால், அவன் தனது சகோதரியின் குடும்பத்துடன் வசிக்கிறான்.
ரிச்சர்டின் தந்தை எட்வின் ஹூவர் (ஆலன் ஆர்கின்) என்பவரும் அந்த வீட்டில் இருக்கிறார். அவர் வயதானவர்; வாயில் வரும் வார்த்தைகளை மறைக்காமல் பேசுபவர். குறிப்பாக, அவர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளைச் சரளமாகப் பயன்படுத்துவார்.
முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த அவர், அங்கு ஹெராயின் போதைப்பொருளைப் பயன்படுத்தியதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதனால் மகன் ரிச்சர்டின் வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தில் மற்றவர்களுடன் ஒத்துப்போகாத தன்மை இருந்தாலும், ரிச்சர்டின் ஏழு வயது மகளான ஆலிவ் ஹூவருடன் (அபிகெயில் பிரெஸ்லின்) அவருக்கு அன்பு மிகுதியாக இருக்கிறது.
ஆலிவ் ஒரு அழகிப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறாள். அந்தக் கனவை நனவாக்குவதற்காக எட்வின் அவளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். மற்றவர்களைப் போலவே அவளும் அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை அவளுக்குள் வளர்க்கிறார்.
இப்படிப்பட்ட பல்வேறு மனநிலைகளையும் பிரச்சினைகளையும் கொண்டவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஆலிவின் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி வருகிறது. கலிபோர்னியா மாநிலத்தின் ரெடோண்டோ கடற்கரை நகரில் இரண்டு நாட்களில் நடைபெறவிருக்கும் “லிட்டில் மிஸ் சன்ஷைன்” என்ற சிறுமிகளுக்கான அழகிப் போட்டியில் பங்கேற்பதற்குத் தகுதி பெற்றிருப்பதாக ஆலிவுக்குத் தெரியவருகிறது.
இந்தச் செய்தி அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே அவளுடைய ஆசை என்பதால், அவளை அங்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்கிறார்கள்.
ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அனைவரும் விமானத்தில் பயணம் செய்வதற்கோ வேறு வசதியான போக்குவரத்தை ஏற்பாடு செய்வதற்கோ முடியாது.
எனவே, தங்களிடம் இருக்கும் பழைய மஞ்சள் நிற வோக்ஸ்வாகன் வேனைப் பயன்படுத்தி, சுமார் எண்ணூறு மைல் தொலைவில் உள்ள கலிபோர்னியாவுக்குச் சாலைப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார்கள்.
ஆலிவை அழைத்துச் செல்ல ரிச்சர்டும் ஷெரிலும் தயாராக இருக்கிறார்கள். எட்வினும் அவளுக்கு ஆதரவாகச் செல்ல விரும்புகிறார். பிராங்கையும் டுவெய்னையும் வீட்டில் தனியாக விட்டுச் செல்ல முடியாத சூழல் இருப்பதால், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.
இவ்வாறு, ஒருவருக்கொருவர் மனதளவில் ஒத்துப்போகாத ஆறு பேரும் ஒரே வேனில் ஏறி கலிபோர்னியாவை நோக்கிப் புறப்படுகிறார்கள்.
பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவர்களுடைய பழைய வேனில் முதல் பிரச்சினை ஏற்படுகிறது. வேனின் கிளட்ச் பழுதடைந்துவிடுகிறது.
இதனால் வழக்கம்போல வேனை இயக்க முடியாத நிலை உருவாகிறது. வேனை நகர்த்துவதற்கு ஒரு வழி மட்டுமே இருக்கிறது. வேனை முதலில் வேகமாகத் தள்ள வேண்டும். அது போதுமான வேகத்தை அடைந்ததும் ஓட்டுநர் மூன்றாவது கியரில் மாற்றி வேனை இயக்க வேண்டும்.
அதே நேரத்தில், வேனின் கதவு திறந்திருக்கும்போது ஓட்டுநர் உள்ளே குதித்து ஓட்டுநர் இருக்கையில் அமர வேண்டும். இதனால் ஒவ்வொரு முறையும் வேனை இயக்குவதற்காகக் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அதைத் தள்ள வேண்டியிருக்கிறது.
பின்னர் வேன் ஓடத் தொடங்கியதும் ஒருவர் ஓட்டுநர் இருக்கைக்குள் குதித்து அமர வேண்டும். இத்தகைய சிரமமான முறையில்தான் அவர்கள் பயணத்தைத் தொடர முடிகிறது.
வேனின் இயந்திரக் கோளாறுகள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான மனக்கசப்புகளும் பயணத்தின்போது வெளிப்படுகின்றன.
ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரச்சினைகள் இருப்பதால், ஒரே வாகனத்தில் நீண்ட நேரம் பயணம் செய்வது அவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், ஆலிவின் போட்டிக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால், அவர்கள் பயணத்தை நிறுத்த முடியாமல் தொடர்ந்து செல்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், எட்வினுக்காக ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஆபாசப் பத்திரிகைகள் வாங்கச் செல்கிறார்கள். அப்போது பிராங்க் எதிர்பாராத விதமாகத் தனது முன்னாள் காதலனைச் சந்திக்கிறான்.
அந்த முன்னாள் காதலன்தான் பிராங்கின் வாழ்க்கையில் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியவன். அவன் பிராங்கை விட்டு விலகி, பிராங்கின் கல்வித்துறையைச் சேர்ந்த போட்டியாளருடன் உறவு கொண்டிருந்தான். அந்தக் காதல் துரோகமும் அதனால் ஏற்பட்ட அவமானமும் பிராங்கைத் தற்கொலை முயற்சிக்குத் தள்ளியிருந்தன.
இப்போது அவனை மீண்டும் நேரில் சந்திப்பது பிராங்குக்கு மிகுந்த சங்கடத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்துகிறது. அவன் எதிர்பாராத இந்தச் சந்திப்பால் நிலைகுலைந்து போகிறான்.
இதற்கிடையில், ரிச்சர்டின் தொழில் வாழ்க்கையிலும் பெரிய பின்னடைவு ஏற்படுகிறது. அவனுடைய ஊக்கமூட்டும் பேச்சுத் தொழிலை வளர்க்கவும், அவன் உருவாக்கியுள்ள வணிகத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் முக்கியமான வாய்ப்பாக இருந்த ஒப்பந்தம் ஒன்று அவனுக்குக் கிடைக்க வேண்டியிருந்தது.
தொழிலதிபர் ஸ்டான் கிராஸ்மன் (பிரையன் கிரான்ஸ்டன்) என்பவருடன் ஏற்பட்டிருந்த அந்த ஒப்பந்தம் நிறைவேறினால், ரிச்சர்டின் தொழில் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று அவன் நம்பியிருந்தான். ஆனால் அந்த முக்கியமான ஒப்பந்தம் அவனுடைய கையை விட்டுப் போய்விடுகிறது.
இதனால் அவனுடைய தொழில் வளர்ச்சிக்கான நம்பிக்கை சிதைகிறது. குடும்பத்தின் பொருளாதாரச் சுமை ஏற்கெனவே அதிகமாக இருக்கும் நிலையில், இந்தத் தோல்வி அவனுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்போது, எட்வின் தனது அறையில் ஹெராயின் போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார்.
அவர் ஏற்கெனவே போதைப்பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். இந்தப் பயணத்தின்போதும் அந்தப் பழக்கத்தைத் தொடர்கிறார். ஆனால், இம்முறை அவர் அளவுக்கு அதிகமாக ஹெராயினைப் பயன்படுத்திவிடுகிறார்.
அதன் விளைவாக அவருக்கு உயிருக்கு ஆபத்தான அளவுக்கு போதை ஏறி, அவர் அதிகப்படியான போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழக்கிறார்.
எட்வின் திடீரென இறந்துவிடுவது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆலிவுடன் நெருக்கமாக இருந்த தாத்தா உயிரிழந்துவிட்டதால் அவளுக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
அதே நேரத்தில், குடும்பத்தினர் கலிபோர்னியாவில் நடைபெறவிருக்கும் அழகிப் போட்டிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள். எட்வினின் உடலை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் பயணத்தைத் தொடர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள், அவரது உடலை அங்கேயே விட்டுவிட்டு குடும்பத்தினர் செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள். இறந்தவரின் உடலைக் குடும்பத்தினர் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
இதனால் குடும்பத்தினர் ஒரு ஆபத்தான முடிவை எடுக்கிறார்கள். எட்வினின் உடலை மருத்துவமனையிலிருந்து ரகசியமாக வெளியே கொண்டுசெல்லத் திட்டமிடுகிறார்கள்.
மருத்துவமனையின் ஜன்னல் வழியாக அவரது உடலை வெளியே எடுத்துச் சென்று, அவர்கள் பயணம் செய்துகொண்டிருக்கும் வேனின் பின்புறப் பகுதியில் வைக்கிறார்கள். இவ்வாறு, உயிரிழந்த எட்வினின் உடலையும் தங்களுடன் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்கிறார்கள்.
இப்போது அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை அழகிப் போட்டியைச் சென்றடைவது மட்டுமல்ல; எட்வினின் மரணம் குறித்த உண்மையை வெளியில் தெரியாமல் மறைத்தபடி பயணத்தை முடிப்பதுமாக மாறுகிறது.
அவர்கள் வேனில் பயணத்தைத் தொடரும்போது, வேனின் ஒலிப்பான் தானாகவே தொடர்ந்து ஒலிக்கத் தொடங்குகிறது. அதை நிறுத்த முடியாததால், வேன் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
இந்தச் சத்தம் வழியில் காவல்துறையினரின் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு காவல்துறை அதிகாரி வேனை நிறுத்துகிறார்.
குடும்பத்தினர் ஏற்கெனவே எட்வினின் உடலை வேனில் மறைத்து வைத்திருப்பதால், அதிகாரி வேனைச் சோதித்தால் உண்மை வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் அந்த அதிகாரியின் கவனம் வேனில் இருந்த ஆபாசப் பத்திரிகைகளின் மீது திரும்புகிறது. அவற்றைப் பார்த்து அவர் அதில் ஆர்வம் காட்டுகிறார். இதனால் வேனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எட்வினின் உடலை அவர் கவனிக்காமல் போகிறார்.
அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் குடும்பத்தினர் காவல்துறை அதிகாரியிடமிருந்து தப்பித்து மீண்டும் பயணத்தைத் தொடர்கிறார்கள்.
பயணத்தின் இறுதிப் பகுதியில், டுவெய்னின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றக்கூடிய ஒரு உண்மை வெளிப்படுகிறது. அவன் இதுவரை போர் விமானியாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வந்திருக்கிறான்.
அந்த இலக்கை அடைவதற்காகவே பேசாமல் இருப்பது என்ற உறுதிமொழியையும் கடைப்பிடித்து வந்திருக்கிறான். ஆனால், அவன் நிறக்குருடு என்பதை அவன் இப்போது அறிந்துகொள்கிறான்.
நிறங்களைச் சரியாக வேறுபடுத்திப் பார்க்க முடியாத இந்தக் குறைபாடு, அவன் விரும்பிய விமானி வாழ்க்கைக்குத் தடையாக இருக்கிறது. இதனால் அவன் கனவு நிறைவேற முடியாது என்ற உண்மை அவனுக்குப் புரிகிறது.
தான் இத்தனை காலமாகக் கடைப்பிடித்து வந்த மௌன விரதத்துக்கும், எதிர்காலம் குறித்த நம்பிக்கைக்கும் இனி அர்த்தமில்லை என்று டுவெய்ன் உணர்கிறான்.
அவனுடைய கனவு சிதைந்துவிட்டதால் அவன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறான். இதுவரை யாரிடமும் பேசாமல் இருந்தவன் திடீரெனத் தனது மௌனத்தை உடைத்து, குடும்பத்தினர் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறான்.
அவர்களுடன் பயணம் செய்வதையே வெறுப்பதாகவும், அவர்களிடமிருந்து விலகிச் செல்ல விரும்புவதாகவும் உரக்கக் கத்துகிறான். அவனுடைய கோபம் குடும்பத்தினர் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்கிறது.
அந்த நேரத்தில் ஆலிவ் அவனிடம் மென்மையாக அணுகுகிறாள். அவனுடைய மனவேதனையைப் புரிந்துகொண்டு, அவனை அன்புடன் அணைத்துக்கொள்கிறாள். குடும்பத்தினர் மீது கோபம் கொண்டிருந்த டுவெய்னை, ஆலிவின் இந்த அன்பான அணைப்பு சற்றே அமைதிப்படுத்துகிறது.
அவன் தனது கோபத்தை உணர்ந்து, பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்கிறான். இதுவரை குடும்பத்தினருடன் பேசாமல் தனிமையில் இருந்த அவன், தனது மனவேதனையை வெளிப்படுத்திய பிறகு அவர்களுடன் மீண்டும் இணையும் ஒரு தருணம் உருவாகிறது.
இவ்வளவு பிரச்சினைகளையும் கடந்து குடும்பத்தினர் கலிபோர்னியாவை நெருங்குகிறார்கள். ஆனால் அழகிப் போட்டி தொடங்குவதற்கான நேரம் நெருங்கிவிட்டதால், அவர்கள் அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கடைசி நேரத்தில் போட்டி நடைபெறும் விடுதிக்கு வந்து சேருகிறார்கள். அங்கு சென்றதும் ஷெரில், ஆலிவை மேடைக்குச் செல்வதற்குத் தயார்படுத்தத் தொடங்குகிறாள். அதே நேரத்தில் ரிச்சர்ட், இறந்துபோன எட்வினின் உடலைப் பற்றிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.
பயணத்தின் போது நடந்த சம்பவங்களால் அவர்கள் ஏற்கெனவே களைத்துப் போயிருந்தாலும், ஆலிவின் போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் மற்ற சிறுமிகளைப் பார்த்ததும் குடும்பத்தினருக்கு இன்னொரு கவலை ஏற்படுகிறது. அந்தச் சிறுமிகள் அனைவரும் மிகவும் ஒல்லியான உடலமைப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் மேடையில் ஆடம்பரமான உடைகளுடன், விரிவான நடன அசைவுகளையும் ஒப்பனை முறைகளையும் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள்.
அவர்களுடைய நடனங்களும் மேடைத் தோற்றமும் மிகவும் திட்டமிட்ட முறையில் அமைந்திருக்கின்றன. அவர்களுடன் ஒப்பிடும்போது ஆலிவ் ஒரு சாதாரணச் சிறுமியாகத் தோன்றுகிறாள். அவள் மற்ற போட்டியாளர்களைப் போலப் பயிற்சி பெற்றவளும் அல்ல; அவர்களைப் போல ஆடம்பரமான நிகழ்ச்சியை வழங்கத் தயாராக இருப்பவளும் அல்ல.
இதனால் ஆலிவ் மேடையில் ஏறினால் அவள் மற்றவர்களால் கேலி செய்யப்படுவாளோ, அவமானப்படுத்தப்படுவாளோ என்ற அச்சம் ரிச்சர்டுக்கும் டுவெய்னுக்கும் ஏற்படுகிறது.
அவள் போட்டியில் பங்கேற்காமல் இருப்பதே நல்லது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவளை மேடைக்குச் செல்லவிடாமல் தடுக்க முயல்கிறார்கள். ஆனால் ஷெரில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
ஆலிவ் எப்படிப்பட்டவளாக இருக்கிறாளோ அப்படியே இருக்கட்டும்; அவள் விரும்பியதைச் செய்யட்டும் என்பதில் ஷெரில் உறுதியாக இருக்கிறாள். மற்ற போட்டியாளர்களைப் போல இருக்க வேண்டும் என்று ஆலிவை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறாள். எனவே, ஆலிவை மேடையில் ஏற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.
இறுதியில் ஆலிவ் மேடைக்குச் செல்கிறாள். அப்போது இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த அவளுடைய நடன நிகழ்ச்சி வெளிப்படுகிறது.
அவளுடைய தாத்தா எட்வின் அவளுக்குப் பயிற்றுவித்திருந்த அந்த நடனத்தை அவள் நிகழ்த்தத் தொடங்குகிறாள். ரிக்கி ஜேம்ஸின் “சூப்பர் ஃப்ரீக்” என்ற பாடலின் ரீமிக்ஸ் இசைக்கு ஏற்ப அவள் ஆடும் அந்த நடனம், உண்மையில் ஆபாசமான உடல் அசைவுகளையும் ஆடைகளை அகற்றுவது போன்ற தோற்றத்தையும் கொண்ட ஒரு நடனமாக இருக்கிறது.
அந்த நடனத்தின் மறைபொருள் என்ன என்பதே ஆலிவுக்குப் புரியவில்லை. தாத்தா தனக்குக் கற்றுக்கொடுத்த நடனத்தை மகிழ்ச்சியுடன் மேடையில் நிகழ்த்துகிறாள்.
ஆனால், அந்த நடனத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சிறுமிகளுக்கான அழகிப் போட்டியில் ஏழு வயது சிறுமி இத்தகைய நடனத்தை ஆடுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
பலர் கோபமும் அதிருப்தியும் அடைகிறார்கள். போட்டியை நடத்தும் அமைப்பாளரும் ஆலிவின் நடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவளை உடனடியாக மேடையிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோருகிறார்.
அந்த நேரத்தில் ரிச்சர்ட் தலையிடுகிறான். ஆலிவை மேடையிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றுவதைத் தடுக்கிறான். அவள் தனது நடனத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறான்.
இதுவரை ஆலிவின் நடனத்தைக் கண்டு அவமானம் ஏற்படுமோ என்று அஞ்சியிருந்த குடும்பத்தினர், இப்போது அவளுக்கு ஆதரவாக நிற்க முடிவு செய்கிறார்கள். ரிச்சர்டுடன் சேர்ந்து குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் மேடைக்குச் செல்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் ஆலிவுடன் சேர்ந்து அதே இசைக்கு நடனமாடத் தொடங்குகிறார்கள். இதனால் ஆலிவ் தனியாக மேடையில் அவமானத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. அவளுடைய குடும்பத்தினர் அனைவரும் அவளுடன் இணைந்து நடனமாடி, அவளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு குடும்பத்தினர் விடுதியின் பாதுகாப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இறுதியில், ஆலிவ் இனிமேல் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெறும் எந்த அழகிப் போட்டியிலும் பங்கேற்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட பிறகு குடும்பத்தினர் அனைவரும் மீண்டும் தங்களுடைய மஞ்சள் நிற வேனில் ஏறுகிறார்கள்.
வேனின் ஒலிப்பான் இன்னும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்தச் சத்தத்துடனேயே அவர்கள் அல்புகர்க் நகரை நோக்கித் தங்களுடைய திரும்பும் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
ஆலிவின் கனவை நிறைவேற்றுவதற்காகத் தொடங்கிய பயணம், வழியில் ஏற்பட்ட பல்வேறு இழப்புகள், தோல்விகள், அதிர்ச்சிகள், சண்டைகள், மனமாற்றங்கள் ஆகியவற்றைக் கடந்து, இறுதியில் குடும்பத்தினர் அனைவரும் ஒரே மேடையில் ஆலிவுடன் இணைந்து நிற்கும் நிகழ்வில் முடிவடைகிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்மூன்றாம்நூறு
#கீதப்ப்ரியன்பாஃப்டா
#கீதப்ப்ரியன்கோல்டன்க்ளோப்