கேரளா கஃபே [Kerala Cafe] [மலையாளம்] [2009]

அருமை நண்பர்களே!!!
நலம் தானே? இங்கே 2 மாதங்களாக மீண்டும் அமீரகத்தில் வேலையில் உள்ளேன், 8 மணிநேர வேலையும்,5 மணிநேர பயணமாக வாழ்க்கை ஓடுகிறது, பயணத்தில் ஊடே நிறைய படம் பார்க்க  மீள் பார்வை பார்க்க நேரம் கிடைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் உண்டு.

அப்படி மீள் பார்வை பார்த்ததில்,கேரளா கபே என்னும் படம் அநேகம் பேரால் வெகுவாக பாராட்டப்பட்ட ஒரு படைப்பும் உண்டு,10 படைப்பாளிகள் ஒன்றாகக் கூடி மலையாள சினிமாவுக்குச் செய்த ஒரு உன்னத போர்ட்ஃபோலியோ எனலாம், உலகம் ஒரு நாடக மேடை ,இங்கு எதிர்ப்படும் ஒவ்வொருவரும் ஒரு நடிகர் தான், ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் தரப்பட்டு அதில் செவ்வன நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் நாம் என்பது தான் எத்தனை உண்மை? மலையாள திரை உலகினை பார்க்கையில் வியப்பும் பொறாமையும் ஒருங்கே ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.

ஒன்றை மிஞ்சும் மற்றொரு படைப்பை  கண்டு இன்னும் தேடத்துடிக்கிறது நெஞ்சம்.மிடுக்கன்மார்கள்,ரசம் கொண்ட மனிதர்கள்.எப்படி எல்லாம் கதை வடிக்க சாத்தியப்படுகிறது இவர்களால்,படத்தின் மாந்தர்கள் அனைவருமே அன்றாடம் நாம் வாழ்வில் எங்கோ எப்படியோ காணும் பிறவிகள் தாம்.அழுகை ஆனந்தம், வியப்பு, கோபம் என மாறி மாறி நம்மை பயணிக்கச்செய்யும் ஓர் உயர்ந்த படைப்பு.எவ்வளவு நல்ல படைப்பை பார்க்க நேர்ந்தாலும் உடனே எழுதிவிட கைவர மாட்டேன் என்கிறது, உள்ளுக்குள்ளேயே அசைபோட்டு ட்ராஃப்டில் வைத்து வெளியிடுவதற்குள்ளே மாமாங்கம் ஆகிவிடுகின்றது.

படத்தின் முத்தான பத்து இயக்குனர்கள் லால் ஜோஸ், ஷாஜி கைலாஷ், அன்வர் ரஷீத், ஷ்யாமா பிரசாத், உன்னி கிருஷ்ணன், நடிகை ரேவதி, அஞ்சலி மேனன், பத்ம குமார், சங்கர் ராமகிருஷ்னன், உதய் ஆனந்தன் ஆவர்.

கேரளா கபே என்னும் பெயர் போகிற போக்கில் வைத்து விடவில்லை,கேரளா கஃபே ஒரு ரயில் நிலைய உணவகம்,ஒரு காலை தொடங்கி இரவு வரை ஒரு ரயில்வே உணவு விடுதியில் வந்து போகும் மாந்தர்கள் கீழ்வரும் பத்து கதைகளில் சம்மந்தப்படுவோர் ஒரே இழையில் கூடும் இடம், இப்படத்தின் 10 கதைகளுடைய களங்கள் வெவ்வேறானவை ஆனால் அவற்றை ஒன்றாய் இணையச்செய்யும் புள்ளி தான் இந்த கேரளா கஃபே.

படத்தின் 10 கதைகளே இருந்தாலும் அவற்றின் ஏனைய மாந்தர்கள் ஒன்றாய் சந்தித்து ரயில் பிடிக்கச் செல்லும் நிகழ்வு எனக்கு 11ஆம் கதையாய்த் தோன்றியது,உலக சினிமா என்று கர்வப்பட்டு சொல்லக்கூடிய படைப்பு,என்ன தான் அரசியல்,மொழி,இனத்தால் வேறுபட்டாலும்,முல்லை பெரியாற்றின் தண்ணீர் தர மறுத்தாலும்,அகில இந்திய அளவில் தமிழனுக்கு துரோகம் நினைத்தாலும் சேட்டன் மார்களை இடது கையால் புறம் தள்ளிவிட்டு நல்ல சினிமா பற்றி சிந்திக்க முடியவில்லை.

1.நோஸ்டால்ஜியா

பத்ம குமார் இயக்கியது,துபாயில் வசதியாய் இருக்கும் திலிப் நவ்யா நாயர் தம்பதிகளுக்கு எல்லாம் இருந்தும்,சமூகத்தில் இன்னும் நன்றாக வாழ் வேண்டும் என்னும் வெறி உந்த திலீப் தன் இரு மகள்களை 2 லட்சம் ஃபீஸ் கட்டி தன் ஊரில் உள்ள கான்வெண்ட் போர்டிங் ஸ்கூலில் சேர்த்து விட்டு வருகிறார்,தன் தாய் தந்தை வாழும் பரம்பரை தரவாடு வீட்டை 25 வில்லாக்களாக மாற்றிக்கட்டி விற்க தன் பெற்றோர் அனுமதி இன்றி பில்டரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பண பரிவர்த்தனையும் செய்கிறார்.

 துபாயில் வேலை செய்யும் நண்பனிடம் தன் குடும்ப கஷ்டத்தை சொல்லி 3லட்சம் கடனும், தன் குறைந்த படிப்பிற்கு ஏற்ற வேலையும் கேட்டு அவ்வப்போது நச்சரிக்கும் கேரளா கஃபேயில் சர்வராக வேலை செய்யும்  நண்பனுக்கு சாமர்த்தியமாக டிமிக்கி கொடுக்கும் திலீப்பை நாம் இதில் பார்க்கிறோம், அவனுக்கு வருடத்தில் 11 மாதம் பாலைவனத்தில் கழிந்தாலும் அதுவே மனதுக்கு பிடிக்கிறது,அநேக நாட்கள் அதை வைது தாய்நாட்டை பார்த்து ஏங்கினாலும், அவன் தாய் நாட்டில் இறங்கியவுடன் அந்த பற்று போய்விடுகிறது, தாய் நாட்டை ஏசத்துவங்கிடும் ஒரு ஜென்மம்.

அவன் மனம் மீண்டும் அப்பாலைவனம் செல்லவே தவிக்கிறது,அதை இந்த கதையின் ஊடாக நன்றாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.இவனின் பணத்தாசைக்கு இவனது 2 மகள்களின் எதிர்கால டாக்டர் படிப்பையும், விமரிசையாக செய்ய எண்ணும் அவர்களின் திருமணத்தையுமே காரணமாக சொல்லி வரும் தந்தைமார் உலகின் பொதுவான படைப்பு.

2.ஐலாண்ட் எக்ஸ்ப்ரெஸ்
ஷங்கர் ராமக்கிருஷ்ணன் இயக்கியது சுகுமாரி, ப்ரித்விராஜ், ஜெயசூர்யா, ரகுமான்கான் ஏனையோர் நடித்தது. கதிகலக்கும் ஒரு கதை, நம் குடும்பத்தில் 21 வருடங்கள் முன்பு யாரேனும் ரயில் பயணத்தில் ரயில் பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து இறந்துபோன 120 பேர்களில் ஒருவராய் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப்பார்க்கவே வயிற்றை பிசைகிறது அல்லவா?, ஆனால் இது எங்கோ நடக்கும் யதார்த்தம் தானே? தினசரி நாளிதழ்களில் ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் இதுபோல படிக்கிறோம் தானே?அது போல 21 வருடங்களாய் குறிப்பிட்ட அதே நாளில் அந்த ஆற்றுக்கு பாலத்தின் கீழே கூடி அவ்விபத்தில் உயிர் விட்டோருக்கு நீத்தார் கடன் கொடுக்கும் ஒரு சாராரின் கதை இது,

மிகவும் சக்தி வாய்ந்த ஒரு படைப்பு.இதில் உயிர் நீத்த நண்பனால் அன்று விபத்தில்  ஆற்றில் காப்பாற்றப்பட்ட ப்ரித்விராஜ் நண்பனுக்கு தான் எழுதிய புத்தகத்தை சமர்பிக்க அந்த ஆற்றுக்கு தோழியுடன் வருவது அழகு,அதே ஆற்றில் தன் மகனை இழந்த சுகுமாரி,தன் தாயை இழந்த ராணுவ வீரன் ஜெயசூர்யா இருவருக்கும் ரயில் நிலைய காத்திருப்பாளர் அறையில் நிகழும் பாசப்பிணைப்பான காட்சிகள் மிக நன்றாக வந்திருந்தது,அந்த ரயிலை ஓட்டியவர் குற்ற உணர்வின் உச்சத்தில் தனி அறையில் வசிப்பது பாந்தம்,இதனூடே மனைவியை பறிகொடுத்த ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் வீரர் ரகுமான்கானின் கதையும் சொல்லப்படுதல் அழகு.
3.லலிதம் ஹிரண்யம் 
ஷாஜி கைலாஷுக்கும் சுரேஷ் கோபிக்கும் என்ன ஒரு ஜென்மாந்திர தொடர்போ? எவ்வளவு படம் ஒன்றாக செய்திருக்கின்றனர்,இதுவும் மகத்தான ஒன்று. சுரேஷ் கோபி, ஜோதிர்மயி மற்றும் தான்யா நடித்துள்ள கதை ,மிகவும் வித்தியாசமான கதை. கணவனின் வேறொரு பெண்ணுடனான உடல் தொடர்பை கணவனின் உயிருடன் இருந்த போதும் இறந்த பின்னரும் மன்னிக்கும், அவனுக்கு அளித்த சத்தியத்தை காப்பாற்றும் ஒரு பெண்ணின் கதை, கணவன் செய்த தவற்றை சிறு குழந்தை செய்த தவற்றுடன் ஒப்பிட்டு மன்னிக்கும் ஒப்பற்ற மனைவியின் கதையும்கூட, சக்களத்திக்கு தன் கணவனுக்கு பின்னர் மனைவியே வாழ்க்கை  தரும் படம். நிச்சயம் பாராட்ட வேண்டிய படைப்பு.
 4.ம்ருத்யுஞ்ஜயம்  (மரணத்தை வெல்லுதல்)

உதய் ஆனந்த்  இயக்கியது, இயக்குனர் ஃபாஸில் மகன் பாஹத் ஃபாஸில், திலகன், ரீமா கல்லிங்கல் நடித்தது,ஒரு பாரம்பரியம் மிக்க பாழடைந்த வீட்டில் இருக்கும் பேய்களும்,அதை டாகுமெண்டரி எடுக்க வரும் ஒரு நவநாகரீக இளைஞனும், அவ்வ்வீட்டுக்கு பாத்தியதைப்பட்ட மந்திர தந்திர விற்பன்ன முதியவரும், அவரது பேத்தியையும் சுற்றி பின்னப்பட்ட திகில் கதை, இறுதியாய் முதுகுத்தண்டில் ஐஸ் கட்டியை வைத்தால் போல சில்லிட வைக்கும் படைப்பு. திலகன் எப்பேர்ப்பட்ட ஒரு ஆளுமை,நான் சொன்னேன்ல கேட்டாயா?  எக்காளம் பேசிய இளைஞன் பிணத்திடம் போய் பேய் இருந்துச்சுல்ல?!!! என்று பார்க்கும் ஒரு தொனியும் இறுமாப்பும், அதை மறக்கவே முடியாது.

5.ஹாப்பி ஜர்னி

உஸ்தாத் ஹோட்டல் திரைக்கதை ஆசிரியர் அஞ்சலி மேனன் இயக்கியது, ஜகதி ஸ்ரீகுமார் பாத்திரம் நாமே பல காலம் நம் வாழ்வில் செய்திருப்போம், நித்யா மேனன் கதாபாத்திரம் எதிர்பாராத ஒன்று,இன்றைய நவநாகரீக மங்கைகள் என்ன புத்தி சாருர்யமும் மதி நுட்பமும் கொண்டவராக இருக்கின்றனர்,அது போல ஒரு பெண்ணிடம் வாய் கொடுத்து பல்பு வாங்கும் நடுத்தர சபலிஸ்ட் பாத்திரம் ஜகதிக்கு,என்ன நடிகன்,இந்த வேடமெல்லாம் எம்மாத்திரம் இவருக்கு.

கூடவே சிரிப்பும் லேசான பயமுமாய் நாமும் பயணிக்கிறோம்.நல்ல திறமையான ஆக்கம்.கேரளா கபேயில் உணவு மேசையில் வந்து அமரும் ஜகதியின் அருகே ஒரு நவநாகரீக நங்கை வந்து அமர அவர் அலறி அடித்துக்கொண்டு வேறு மேசைக்கு ஓடும் காமெடி எல்லோரையும் கவரும் என்பேன்.இது போல மனைவியை ஏய்க்கும் யாரும் ஒருகணமாவது யோசிப்பர்,
 6.அவிராமம்

உன்னி கிருஷ்ணன் இயக்கியது , சித்திக், ஸ்வேதா மேனன் நடித்த படம்.என்ன ஒரு ரசமான நடிகை?!!!ஒழிமுறி படத்தில் காளிப்பிள்ளை கதா பாத்திரமே இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை, என்ன ஒரு நல்ல படைப்பு என வியக்க வைக்கும்,ரிசசன் பாதிப்பால் மனமுடையும் கணவன் என்றுமில்லா திருநாளாக மனைவியை தாய்வீட்டுக்கு சந்தோஷமாக ரயில் ஏற்றிவிட்டு வரும் கதை, மனைவிமார்களை கணவன்மார்களால் எக்காலத்திலும் ஏமாற்றவே முடியாது,காலத்துக்கும் கூடவே வரும் ஒரு ஒப்பற்ற பந்தம் அவள்.

கணவனின் முகத்தடுமாற்றத்தை கண நேரத்தில் கிரகித்து அவன் வாழ்வில் தடுமாற நினைக்கும் அந்த முக்கியமான தருணத்தில் வந்து அழைப்பு மணியை ஒலிக்கும் அந்த வல்லமை நல்ல மனைவிக்கு தான் கை வரும், ப்ரைவேட் ஃபினான்ஸில் ஏதாவது மாட்டிக்கொண்டாயா?என்று அவனுக்கு வரும் போன் அழைப்பை அவன் ஏற்று பேசும் தொனியிலேயே கண்டு பிடிக்கும் அந்த கணம் முக்கியமானது, பெண்களுக்கு எல்லா ரகசியங்களையும் உடனே தெரிந்து கொண்டுவிட வேண்டும், அது பல சமயங்களில் நன்மையிலும் முடிகிறது என்பது மன நிறைவை தருகிறது, இது போல சம்பவம் எல்லா தடுமாற்றம் கொண்ட கணவன்களது வாழ்விலும் நிகழ்ந்தால் அது வரமாகும்.மார்வெல்லஸ் படைப்பு

7.ஆஃப் ஸீஸன்

ஷ்யாமா பிரசாத் இயக்கியது , ரிசசன் பாதிப்பு தான் இதற்கும் கதைக்களன். ரிசசன் கொடுமையால் அமெரிக்காவும் ஐரோப்பாவுமே நாதியற்றிருக்க இந்தியாவுக்காவது போய் வேலை தேடுவோம் என வரும் போர்ச்சுகீஸு நாட்டு தம்பதியிடம் தன் வழமையான கைவரிசையை காட்டி பல்பு வாங்கும் டூரிஸ்ட் கைடின் கதை, இதில் ஒரு தெரு நாய் நடிகர்களை விட மிக நன்றாக நடித்திருந்தது.ஒரு திருஷ்டியான பாகம் எனலாம்.
8.ப்ரிட்ஜ்

ஒரு மகனால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டியையும் தூக்கி எறியப்பட்ட ஒரு பூனை குட்டியையும் இணைக்கும் கதை, உஸ்தாத் ஹோட்டல் இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியது, கல்பனா, ஆதாமிண்ட மகன் அபு பட புகழ் சலீம் குமார் நடித்தது. இதில் ஒரு பூனைக்குட்டி   மிக அருமையாக பங்களித்திருந்தது, சிறுவன் நடிப்பு மிக அருமையாக இருந்தது , இரு புறக்கணிக்கப்பட்ட ஜீவன்கள் ஒன்றை ஒன்று நைச்சியமாக பற்றிக்கொள்ளும் கதை. இதே கதையில் வேறொரு இழையில் வரும் தாயிழந்த சிறுவன் தந்தைக்கு பயந்து வளர்க்கும் தெருப்பூனை,தந்தையால் குப்பையில் வீசப்பட, மகன் பூனைமேல் பாசமிகுதியால் ஜுரத்தில் பிதற்றும் தருணம் நம் நெஞ்சம் நோகும்.

மிகவும் சக்தி வாயந்த மனதை நகர்த்துகின்ற ஒரு படைப்பு, நாம் அன்றாட வாழ்விலே சாலையில் காணும் கைவிடப்ப்பட்ட முதியோர்கள் எப்படி அங்கே வந்து சேர்ந்திருப்பர்?!!!,அவர்களுக்கு இந்த  உலகம் எப்படி அடைக்கலம் தந்தது என்பதை டீடெய்லாக சொல்லும் படைப்பு இது,அன்று ஒரு நாள் வயதான பார்வை மங்கிய தன் அம்மாவுக்கு விருப்பமாக எல்லா கடமையையும் அவளின் கைபிடித்து நகரத்துக்கு கூட்டிச்சென்று செய்யும் மகன், அப்படி ஒரு புள்ளியில் மனம் மாறிவிட்டு, அவளை திரையரங்கின் இடைவேளையில் தன் வறுமையின் கையாலாகாத்தனத்தின் உச்சத்தில் தனியே விட்டுவிட்டு திரும்புகையில் அவருடன் சேர்ந்து நாமும் அழுவோம். அன்வர் ரஷீத்துக்கு இது தன்னிகரில்லாத போர்ட்ஃபோலியோ.
9.மகள் 

நடிகை ரேவதி இயக்கிய படம், இது ஒருங்கே ஏழ்மை,சட்ட விரோத தத்தெடுத்தல், கட்டாய விபச்சாரம் என மூன்று தளங்களிலும் பயணிக்கிறது, நாகர்கோயிலில் நடக்கும் கதை, பெரும்பகுதி தமிழிலேயே எடுக்கப்பட்ட்டுள்ளது, தவிர மலையாளிகள் பாஷாபிமானம் இல்லாமல் சப் டைட்டில் கூட இல்லாமல் தமிழ் வசனங்களை அனுமதிப்பது நீண்ட நாளாகவே வியப்பளிக்கிறது. மற்றொரு உதாரணமாய் சமீபத்திய டயமண்ட் நெக்லேஸ் படத்தில் வரும் தமிழ்பேசும் நர்ஸ் கதாபாத்திரத்தை சொல்வேன்.

ஏழாம் உலகம் புதினத்தில் பழனியில் ஒரு சேரியின் ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கும் தம்பதியினர்,  பழனியின் திருவிழாக்கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர் சிறுமிகளை கடத்தி வந்து கண்களில் திராவகம் ஊற்றி,சூடு வைத்து குருடாக்கி முகம் சிதைத்து அண்டர்க்ரவுண்ட் பிசினஸாக செய்வர். பண்டாரத்திடம் உருப்படிகளாக அவர்களை வாங்கிக் கொள்ள  வற்புறுத்துவர், பண்டாரம் அரைமனதுடன் அவர்களை வாங்கவும் பயமாயிருக்கும், வாங்காமல் விடவும் மனமிருக்காது அப்படி ஒரு மனநிலையில் 3000 என்றால் வாங்கலாம் என்பார்.

அப்படி ஒரு டார்க்தீம் இதில், கல்லுடைக்கும் தொழில் செய்யும் தம்பதியரின் மூன்று குழந்தைகளில் மூத்த மகள் இனி தத்துப்போகிற இடத்திலாவது நன்றாயிருப்பாள், தம்பியை தங்கையை பள்ளியில் படிக்க உதவிசெய்வாள் என ஊர் பேர் தெரியாதவரிடம் பணம் பெற்றுக்கொண்டு பெற்றோரே விற்கும் அவலம், அந்த பிஞ்சை கேரளா கஃபேயின்  ஃபேமிலி ரூமில் வந்து அப்பெண்ணுக்கு தூக்கமாத்திரை தந்து தூங்கச்செய்து வேறொரு விபச்சார பிம்பிடம் விற்கும் கொடூரம்,அவளை பெரும் தொகை கொடுத்து வாங்கி தோளில் தூக்கிசெல்லும் விபச்சார பிம்ப்பாக வரும் காமெடி நடிகர் சசி கலிங்காவை மறக்கவே முடியாது.ஒரு சாதாரண மயிலிறகு கூட இதில் கவிதையாக நடித்துள்ளது.

10.புறம் காழ்ச்சல்கள்

லால் ஜோஸ் இயக்கியது ,ஒரு மனைவியால் கைவிடப்பட்ட கணவன் சீனிவாசனின் நினைவலைகளில் விரிகிறது,மொத்த பத்தில் இது முத்தானது, கடந்த கால நினைவலைகளில் மூழ்கி தன் மனைவி வேலை பார்த்த அணைக்கட்டு அலுவலகத்தை பல வருடங்கள் கழித்து வெளியே நின்று பார்க்க பஸ்பிடித்து வரும் ஒரு பாத்திரம் .

தான் ஓரு ஊர், மனைவி ஓர் ஊர் என வேலை செய்கையில் மனைவி அணைக்கட்டு அலுவலகத்தில் முறை தவறிப்போய்விட இவரின் ஏமாற்றத்தை சொல்லும் கதை, சட்டென வேறொரு புள்ளியில் பயணிக்கிறது, சக கோபக்கார பயணியான மம்முட்டி  5 நிமிட தேநீர் இடைவெளிக்காக நிறுத்தப்பட்ட பேருந்தை, அதட்டல் போட்டு இயக்கச் செய்து இவர் அருகே வந்து அமர்கையிலேயே தொடங்கும் விறுவிறுப்பு, இறுதிக்காட்சியில்  அதற்காக சொல்லப்படும் நியாயம் நம் நெஞ்சில் சம்மட்டி அடியாக இறங்குகிறது.

மம்முட்டிக்கு இந்த நடிப்பு அல்வா சாபிடுதல் மாதிரி, கூடவே சீனீவாசன் வேறு , சீனிவாசன் சக உள்ளூர் பயணி மம்மூட்டியிடம் சகஜமாய் பழக வேண்டி கேட்கும் கேள்விகள் , இந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து எத்தனை அடி உயரம்? மம்மூட்டி எனக்கு தெரியாது,

உடனே அவர் விட்டுவிடாமல் அவர் இந்த அணை நீர்மட்டம் இவ்வருடம் எவ்வளவு உயரம் எனக் கேட்க, கோபமான மம்மூட்டி இறங்கிப்போய் பார்த்துவிட்டு வரவேண்டியது தானே?!!! என்னும் பதிலும் செம கலக்கல், இறுதியாய் கேரளா கஃபேவின் உணவு மேசையில் சீனிவாசன் தன் டைரியில் எழுதும் குறிப்பில் அன்றைய நினைவலைகளில் தன் ஊர் பேர் மனைவி எல்லாம் மறந்து அந்த முகம் மட்டுமே உடன் வருவதாய் எழுதும் இடம் மிக அருமை.

உலக சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத கொண்டாடவேண்டிய படத்தில் இதுவும் ஒன்று, எழுதாமல் விடுவதைக் காட்டிலும் தாமதமாகவேனும்  எழுதுவது நன்று என எழுத வைத்த ஒரு படம். டோண்ட் மிஸ் இட்!!!

புறம்காழ்ச்சல்கள் கதையின் யூட்யூப் காணொளி:-படங்கள் நன்றி கூகுள்,விக்கிபீடியா,யூட்யூப்
======00000======

10 comments:

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப்பின் போட்ட ‘பிள்ளையார் சுழி’ அமர்க்களம்.

உலகசினிமாவை ரசிப்பவர்களுக்கு அரசியல் தடையாக இருக்காது...இருக்கக்கூடாது.
பாக்கிஸ்தான் ‘காமோஷ் பானியை’ கொண்டாடுபவர்கள் நாம்.

பசியோடு இருக்கிறோம்.
பதிவு இடுங்கள்.

www.rasanai.blogspot.com சொன்னது…

hai gp
welcome back miss you at 10th ciff.
do not remember all the stories in kerala cafe. recollected now. liked aviramam (husband suicide wife rescued film) as you said tourist film is not worth for this film. other stories salim kumar and jagathi also was good. last one mammooty acted film was a real story happened in a flight passenger conversation published in the readers digest. execution was good but the story script writer RD illurunthu suttathu pidikkavillai. overall a good experience.
thodarnthu ezhuthungal. how is life there. hope you are ok keep in touch.
anbudan
sundar g rasanai chennai

www.rasanai.blogspot.com சொன்னது…

gp
enjoyed "Red dog" your review and screened at ciff. remembered you at that time. my friend came for the first time to intl film festival watched red dog as his first film and he understood the usual commercial tamil cinema and a feel good movie of world standards. because of your review only we both of us enjoyed more. thanks.
expecting your form back to blog. keep posting. praying for your good health and relaxing time in between.
anbudan
sundar g rasanai chennai.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@உலக சினிமா ரசிகன்

தலைவரே நலமா?எப்போதும் தரும் உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@சுந்தர்
சார் நலமா?இந்த முறை திருவிழாவில் கலந்து கொள்ளமுடியாமல் வருந்தினேன்,உங்களை நினைத்துக்கொண்டேன்,உங்கள் நண்பர் நலமா?ஓய்வில் போன் செய்கிறேன் சார்.உங்கள் அன்புக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சார்.

பாரதிக்குமார் சொன்னது…

சார் வணக்கம் ... மாதங்களில் மிக சிறந்த மார்கழியில் மீண்டும் உங்கள் பதிவோடு பயணிக்க மகிழ்வாய் இருக்கிறது அமர்க்களப்படுத்துங்கள் .. அருமையான படைப்போடுதான் வருகை தந்து இருக்கிறீர்கள் .. வாழ்த்துக்கள் தொடர்ந்து வருவேன் உங்களோடு ...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அருமை நண்பர்,
பாரதிகுமார்,நலமா?உங்கள் ஊக்கத்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) சொன்னது…

நான் பார்க்க நினைத்து, மறந்து போன படங்களில் ஒன்று. மீண்டும் பார்க்க தூண்டும் அளவிற்கு உங்களது விமர்சனம். நன்றி தோழரே.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நண்பர் வைகையின் சாரல்,என்ன ஒரு பெயர்,நானும் மதுரை தான்,அவசியம் படம் பாருங்க.நன்றி

www.rasanai.blogspot.com சொன்னது…

hai gp
wish you and your family a happy healthy prosperous successful satisfied new year 2013. keep blogging. film festivalil thaan spl screeningil aaranya kaandam paarthaen. definitely a world class tamil cinema.
anbudan
sundar g rasanai chennai

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)