பெண்ணை மைய கதாபாத்திரமாகக் கொண்டு நகரும் உலக சினிமாக்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் மரியா ஃபுல் ஆப் க்ரேஸ், மிக யதார்த்தமான அசல் உலக சினிமா
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் எத்தனை வளம் இருந்தும் , வேலை வாய்ப்பு , உழைப்புக்கேற்ற ஊதியமோ இல்லாத நிலை, பச்சை மரகதம் விளையும் பூமி, இங்கு பூக்கும் ரோஜா உலகெங்கிலும் பொக்கேக்களாக ஏற்றுமதியாகிறது,
நம் ஊரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் போல அங்கே பொக்கே நிறுவனங்கள் தான் இளம்பெண்களின் வேலை வாய்ப்புக்கு ஆதாரம். அங்கே வேலையில் தன் மேலதிகாரியுடன் பகைத்துக் கொண்டு , வேலையை விட்ட மரியாவுக்கு வீட்டு செலவுகள் அச்சுறுத்துகிறது,
தனக்கு விருப்பமில்லாத காதலானால் உருவான கரு தன் வயிற்றில் , ஆனால் அவனை மணக்கவும் விருப்பமில்லை, காதலனால் ஏமாற்றப்பட்ட வாழாவெட்டி அக்கா,அவளின் கைக்குழந்தை, விதவை அம்மா, தன் பாட்டி என பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற மயூல் (பொதி சுமக்கும் கோவேறு கழுதை ) ஆகிறாள்,
ம்யூல்களை அமெரிக்கா அனுப்பும் தரகன் பராங்க்ளினுடன் தலைநகர் பகோட்டா சென்று போதை மருந்து வியாபாரியை சந்திக்கிறாள்.
கொலம்பிய பூமியின் கஞ்சா வருசநாட்டு கஞ்சாவுக்கும் மேலான வீர்யம் கொண்டது, உலக அளவில் அதற்கு மிகவும் கிராக்கி, அந்த 24 காரட் சுத்தத்தன்மை மிகுந்த போதைப் பொருளை கேப்சூல்களாக ஆக்கி, வயிற்றில் சுமந்து அமெரிக்காவில் கொண்டு சேர்ப்பதே இந்த ம்யூல்களின் வேலை,
ஒரு கேப்சூலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்றாலும் , மாட்டிக் கொண்டாலோ, கேப்சூல் வயிற்றில் கிழிபட்டு உயிரிழந்தாலோ கம்பெனி பொறுப்பேற்காது, கேப்சூல்களில் ஒன்று குறைந்தாலும் இங்கே இருக்கும் கொலம்பிய ஏஜண்ட்கள், வீட்டிலிருக்கும் கடைசி நாய்குட்டி வரை கொன்று விடுவர், இத்தனை ஆபத்தையும் உணர்ந்து அமெரிக்கா பயணிக்கும் மரியாவுடன் நாமும் பயணிக்கிறோம்.நாமும் படபடக்கிறோம், நாமும் அழுகிறோம், சிரிக்கிறோம், அது தான் ஒரு அசல் உலக சினிமா நமக்குள் செய்யும் மாற்றம்,
இதை தமிழில் அயன் என்ற படத்தில் நண்டு ஜெகன் என்பவரை வைத்து சிதைத்தனர், மனசாட்சி என ஒன்று இருந்தால் அந்த செக்மென்டை அப்படி சிதைத்திருக்க மாட்டார்கள்.ஒரிஜினலுக்கு மரியாதை செய்வது ஒரு கலை, அது எல்லோருக்கும் கைவராது
இந்த நடிப்பு ராட்சசி மரியாவுக்கு ( Catalina Sandino Moreno )இப்போது 36 வயதாகிறது, இப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் இவருக்கு சரியாக கொடுத்திருக்கின்றனர்.
எப்போதெல்லாம் போலியான படைப்புகளால் அயற்சி உண்டாகிறதோ அப்போதெல்லாம் இப்படத்தைப் பார்ப்பேன்,
உலக சினிமா ரசிகர்களை என்றும் ஏமாற்றாத ஒரு படம், இது பார்த்து முடிந்த பின் ருமேனிய திரைப்படமான 4 month 3 weeks 2 days later படத்தை ஓட விட்டு பார்ப்பது என் வழக்கம்.
#மீள்_பதிவு
#மரியா_ஃபுல்_ஆஃப்_க்ரேஸ்,#Maria_Full_of_Grace