திங்களாழ்ச்சே நல்ல திவசம் (1985)இயக்குனர் பத்மராஜனின் முக்கியமான படம்,இது தாய்ப்பாசத்தை அவளின் அருமையை தியாகத்தை பிரதானமாக பேசிய படம், கூட்டுக்குடும்பங்கள் சிதறி தனிக்குடித்தனங்கள், முதியோர் இல்லங்கள் துவங்கிய மத்திய 80 களில் சரியான தருணத்தில் வெளிவந்த படம், இதற்கு சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது.
கவியூர் பொன்னம்மா இதில் ஜானகியம்மா என்ற விதவைத்தாய், அவருக்கு இரு மகன்கள்,திருமணமாகி இறந்து போன ஒரு மகள் (ஆனால் படத்தில் காட்சி இல்லை ) ஆனாலும் இருவரும் பணி நிமித்தம் வெளியூர்களில் உள்ளனர், மூத்தமகன் கரமண பம்பாயில்,இளைய மகன் மம்மூட்டி துபாயில் ,கவியூர் பொன்னம்மா வசிக்கும் பெரிய தோட்டத்துடன் கூடிய பூர்வீக விடு கல்ஃப்காரன் மம்மூட்டியின் பெயரில் இருக்கிறது, வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே மகன்களின் கூடடைதல், மகள் உயிருடன் இல்லாததால் அவரின் மகன் அசோகன் பாட்டியையும் தனக்குப் பிடித்த மூத்த மாமன் பெண்ணையும் காண இந்த விடுமுறைக்கு வருகிறார்.
மம்மூட்டியின் அண்ணன் கரமண ஜனார்த்தனன் நாயர், அவர் பணத்தின் மீது பூதி அற்றவர், சொந்த ஊர், சொந்த வீடு, அம்மா என தனிப் பிரியம் கொண்டவர், அவர் மனைவி ஸ்ரீவித்யா, கணவரின் வேலை பம்பாயில், குடும்பமே அங்கே, மத்திய அரசு பணியில் கிடைக்கும் ஊதியம் பெருநகரில் குடியிருந்து இரு மகள்களைப் படிக்க வைக்கவே சரியாக உள்ளது,மூத்த மகன் கரமணயின் மனைவி ஸ்ரீவித்யாவுக்கு பம்பாயில் வீடு வாங்குவது ஒன்றே ஒரே ஆசை,ஆனால் கணவர் கரமணக்கு கடனின்றி இருப்பதைக் கொண்டு வாழ்வதே ஆனந்தம்,
இந்த கோடை விடுமுறைக்கு முதலில் மூத்த மகன் கரமணயின் குடும்பம் சொந்த ஊர் வருகின்றனர், மூத்த மகன் மகள்கள்,
இரண்டாம் மகன் மம்மூட்டிக்கு விடுமுறை கிடைக்க இழுபறியாகி தாமதமாக ஊருக்கு வருகிறார், கல்ஃப்காரனான மகன் மம்முட்டிக்கு அம்மாவின் அருமை தெரிவதில்லை,
பணத்தின் மீதான பூதி அதிகம், அந்த கோடை விடுமுறைக்கு நிறைய எதிர்கால திட்டங்களைத் தீட்டிக் கொண்டு வந்திருக்கிறார்.
அம்மாவுக்கு மகன் மருமகள் பேத்திகளைப் பார்த்ததும் கொள்ளை ஆனந்தம், ஆனால் மகனுக்கோ அந்த தாய்ப்பாசம் புரிவதில்லை, உயிருள்ள அம்மாவின் மீது வராத பிடிப்பு உயிரற்ற அடுக்கு மாடி வீடு வாங்குவதில் தான் இருக்கிறது.
மலையாளிகளின் முக்கிய ஆசை பெங்களூரில் குடியேறுவது, இவர் பெங்களூரில் உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க பாதிப்பணம் ,பெரும்பணம் தந்துவிட்டார்.
அம்மா இருக்கும் போதே மனைவியின் சொல்படி, கணவன் பெயரில் மாற்றியிருக்கும் இந்த வீட்டை விற்று வரும் தன் பங்குத் தொகையில் அந்த பெங்களூர் அடுக்குமாடி வீட்டிற்கு மீதத்தொகையை அடைக்க எண்ணியிருக்கிறார்.
இப்போது இளைய மகன் மற்றும் இரு மருமகள்களின் பிடிவாதம் வென்று அந்த பூர்வீக வீடு விற்க முடிவாகிறது, வீட்டை வாங்க அருகாமையில் வசிக்கும் அச்சன்குஞ்சு சம்மதிக்கிறார், வீட்டின் முன் இருந்த லட்சணமுள்ள பெரிய பலா மரமும் அவர் அந்த வீட்டை வாங்க ஒரு முக்கிய காரணம்.
அம்மா கவியூர் பொன்னம்மா வீட்டையும் தன் தோட்டத்தையும் பசுவையும் கதறக் கதற பிரிந்து முதியோர் இல்லம் சென்றவள்,தன்னை முதியோர் இல்லத்தில் யாரும் வந்து பார்க்கக் கூடாது என்கிறாள், அப்படிச் சென்றவள் ஒரு வாரம் கூட உயிரோடில்லை,
அவள் தூங்குகையில் நெஞ்சுவலியில் உயிர் துறந்துவிட்டிருக்கிறாள், டெலிபோனில் அந்த செய்தி கேட்கும் மகன் மம்முட்டி அழுது கொண்டே அம்மா இறந்த விஷயத்தை குடும்பத்தாருக்குச் சொல்கிறார்.
அம்மாவின் உடலை வீட்டுக்கு கொண்டு வருகிறார்கள், அவள் விரும்பிய படியே அந்த பெரிய பலா மரத்தை வெட்டி விட்டு அந்த விறகு கொண்டே எரியூட்டி மரியாதை செய்ய விழைகிறார் மூத்த மகன் கரமண, தம்பி மம்மூட்டிக்கு இதில் சிறிதும் உடன்பாடில்லை.
அது அம்மா தமாஷுக்கு சொன்னது என்கிறார் மம்மூட்டி, ஆனால் கரமண எனக்கு அது பற்றி எனக்கு கவலையில்லை, சவத்தை தூக்க விருப்பமிருப்பவர் தூக்கலாம் என்று சொல்ல மம்மூட்டி அம்மாவை தோளில் சுமக்கிறார்.
சில நாட்களில் மூத்தவர் கரமணயின் குடும்பம் டாக்ஸியில் பொருட்களை கட்டிக் கொண்டு ரயிலுக்கு கிளம்புகிறது,இனி உறவென்று சொல்லிக்கொள்ள இவர்கள் மட்டுமே, அடிக்கடியோ நேரம் கிடைக்கையிலோ கடிதம் எழுத மறக்க வேண்டாம் என ஒருவருக்கு ஒருவர் உறுதி தந்தும் கேட்டுக் கொண்டும் பிரிகின்றனர்.
மகன் மம்முட்டிக்கு அம்மாவின் பிரிவு உடம்பில் மெல்லக் கொல்லும் விஷமாகவே ஊறுகிறது,அவரை மெல்ல நிலைகுலைக்கிறது
மறுநாள் காலை வீட்டை வாங்குவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற அச்சன்குஞ்சு வருகிறார்,மம்மூட்டி அவரிடம் ஏகவசனத்தில் சீறுகிறார்,வாக்கு தந்தால் அதன்படி நடக்கவேண்டாமா? என் விடுமுறையை உனக்காக
வீணடிக்கமுடியுமா?
எப்போது உனக்கு வீட்டை வாங்க முடியும் ? எனக் கேட்க, அச்சன் குஞ்சு ,தான் வீட்டை வாங்கவில்லை என்கிறார், இவர் காரணம் கேட்க, வீட்டின் தோட்டத்தில் இருந்த பெரிய பலாமரத்தை வெட்டி விட்டீர்கள், அம்மாவின் சவத்தையும் அங்கே வைத்து எரியூட்டிவிட்டீர்கள்,
உங்கள் அம்மா வீடு வாங்க நான் வந்த போதே விற்க மனமில்லை என்றவர், இப்போது ஆவியாக அங்கே இங்கே தெரிவாரோ என்ற பயம் உள்ளது என்றது தான் தாமதம் , அம்மாவின் பிரிவுத்துயர் மொத்தத்தையும் ஆத்திரமாக மாற்றி இவரை கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டே போய் வாசலில்
தள்ளி விரட்டுகிறார் மம்மூட்டி, மனைவியையும் அடித்து விடுகிறார்.
அப்போதும் இவரின் அம்மா ஏக்கம் கொண்ட மனம் அடங்கவில்லை, வீட்டினுள் இருந்த விலையுயர்ந்த அஃறினை பொருட்களான கலர் டிவி விசிஆர் ,ஸ்பீக்கர்,கண்ணாடி சாமான் என தூக்கிப் போட்டு நொறுக்குகிறார்.
இரவு படுக்கையில் மனைவி இவரின் மனக்கிலேசத்தை அறிந்தவர் வீட்டைப் பூட்டிவிட்டு நாம் துபாய் போகலாம் என்கிறார், இவர் அப்படி செய்தால் வீடு இரண்டு நாளில் குப்பையாகும், அம்மாவுக்கு மேலும் துக்கமாகும்,அது வேண்டாம்,
நாம் இருப்பதை வைத்து இங்கேயே அம்மாவின் நிழலில் வசிப்போம், அம்மாவின் பசுவை வளர்ப்போம்,இங்கு அம்மாவின் வாஞ்சை அவர்களை நன்றாக்கும்,எளிமையாக வாழ்வோம் என்று மனைவி தந்த விமான டிக்கட்களை கிழித்துப் போடுகிறார்,
அங்கே தூங்கிக் கொண்டிருந்த மகள்கள் எழுந்து கோபம் நீங்கிய அப்பாவை அணைத்துக் கொள்கின்றனர்,மனைவி உன்னிமேரியும் புன்னகைக்கிறார்.
படத்தில் மூத்த மகன் கரமணயின் ப்ரி டிகிரி படிக்கும் மகளுக்கும் அவளின் முறைப்பையனான அசோகனுக்கும் அரும்பும் காதல் மிகவும் ரசமான ஒன்று, ஜானகியம்மாவின் பணிப்பெண் அம்மிணி அற்புதமான கதாபாத்திரம், கம்பன் வீட்டுக் கட்டுத்தறி உவமை போலவே பப்பேட்டா படைக்கும் பணிப்பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் இத்திரி கூடுதல் மிடுக்கிகள்
இப்படம் இன்று வரை ஒரு க்ளாஸிக், இப்படத்தில் ஒரு அழகான பாடல் உண்டு , பனி நீருமாயி என்ற வாணி ஜெயராம் பாடிய பாடல், படத்தின் இசை ஷ்யாம், படத்தின் ஒளிப்பதிவு வசந்த் குமார்,படம் அவசியம் பாருங்கள்.
PS:நம்மூரில் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது போல கேரளத்தில் திங்களாழ்ச்ச ( திங்கட்கிழமை)நல்ல திவசம்,அம்மா ஜானகியம்மா வளர்க்கும் பசு ஞாயிற்றுகிழமையன்று கன்று ஈனுகிறது, அம்மாவுக்கு அந்த நல்ல செய்தி ஒரு நாள் கூட நிலைக்காமல் வீடு விற்க முடிவு செய்கின்றனர் இளைய மகனும் மருமகளும், திங்கட்கிழமையே அவர் முதியோர் இல்லம் செல்கிறார் அம்மா,
பசுவின் கர்ப்ப காலமும் ஒன்பது மாதங்களாகும், இந்தப் படத்தில் வரும் பசு நிறைமாத கர்ப்பிணியாக படப்பிடிப்பிற்குக் கொண்டு வந்தனராம், அது கன்றைப் பிரசவிக்கப் போராடிய நான்கு மணி நேரத்தையும் 800 அடிகளில் படம் பிடித்தாராம் பப்பேட்டா,
படத்தில் அந்த பிரசவக் காட்சி ஐந்து நிமிடங்கள் வரும், படத்தின் இந்த பூர்வீக வீடு திருவனந்தபுரத்தில் ப்ரவச்சம்பலம் என்ற ஊரில் இருந்தது,அங்கே முழுப்படப்பிடிப்பையும் நடத்தினார் பப்பேட்டா.
பப்பேட்டாவின் திரைப்படங்களில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது, பணம் பணம் என்று பல வருடங்களாக முடிவே தெரியாமல் துரத்திக்கொண்டிருக்கையில் இந்த படத்தின் முடிவு அதை தெளிவாக்கியது,பற்றிய புலிவாலை விட வைத்தது, வீட்டாருடன் சொந்த ஊரில் இருப்பதே போதும் என்பதை சாத்தியப்படுத்திய ஒரு அற்புதமான படம்.
#பப்பேட்டா,#பி_பத்மராஜன்,#கவியூர்_பொன்னம்மா,#கரமண_ஜனார்த்தனன்_நாயர்,#மம்மூட்டி,#ஸ்ரீவித்யா,#உன்னிமேரி,#ஷ்யாம்,
# திங்களாழ்ச்ச_நல்ல_திவசம்