இந்த நான்கு வருட சிறை தண்டனை 66 கோடிகளுக்கு கிடைத்ததல்ல!!!, கும்பகோணம் மகாமகம்
உயிர்பலிகள், பெண் அதிகாரி முகத்தில் ஆசீட் வீச்சு, கண்ணியமானவர்கள் மீது
கட்டவிழ்த்த கஞ்சா வழக்குகள், நேர்மையான அதிகாரிகள் சகாயம் போன்றோரை
பந்தாடிய ஈனச் செயலகள், அப்புறம் சமீபத்திய முகலிவாக்கம் கட்டிட விபத்தின்
மீதான அலட்சியப் போக்குகள் போன்றவற்றுக்கு கிடைத்த தண்டனை தான். தெய்வம்
நின்று கொன்றுள்ளது. இது திருந்த கொடுத்த கால இடைவேளை, இதிலாவது அவர் தன்னை
திருத்திக்கொள்ள வேண்டும்,வரலாறு மிகவும் முக்கியம் என்பதால் இதை இங்கே பதிகிறேன்.மற்றபடி ஒரு தண்டனை அடைந்த பெண்மணியை கிண்டல் செய்வது என் நோக்கமல்ல.
பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை இப்போது பரபரப்பின் உச்சத்தில்!
ஆரம்பத்தில் பெங்களூரு நகரத்தின் மையப்பகுதியில்தான் மத்திய சிறைச்சாலை
இருந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் 1997-ம் ஆண்டு கர்நாடக
முதல்வராக ஜே.ஹெச்.பட்டேல் இருந்தபோது, பெங்களூரின் புறநகர் பகுதியான
நாகநாதபுரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட 18 ஏக்கர் பரப்பளவில் பரப்பன அக்ரஹாரா
சிறைச்சாலை வளாகம் அமைக்கப்பட்டது. இந்தச் சிறைச்சாலையை 1998-ல் இந்திய
பிரதமராக இருந்த தேவகவுடா திறந்து வைத்தார்.
இது, எலெக்ட்ரானிக் சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. சிறைக்குள்ளேயே நூலகம், மருத்துவமனை, கோயில்கள் உள்ளன.
அங்குதான் ஜெயலலிதா இப்போது சிறை வைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 27-ம்
தேதி மாலை 5.30 மணிக்கு சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அக்டோபர் 2-ம் தேதி
வரையிலான 120 மணி நேர ரிப்போர்ட் இது!
காரில் சுற்றிய நாற்காலி
ஜெயலலிதா ஒரு பொருளைப் பயன்படுத்தத் தொடங்கினால் சென்டிமென்டாக அதே
பொருளையேதான் எப்போதும் பயன்படுத்துவார். புதிய பொருட்களை அவ்வளவு
சீக்கிரமாகப் பயன்படுத்த மாட்டார். இது அவருடைய பழக்கம். போயஸ் கார்டன்
வீட்டிலிருந்து தீர்ப்புக்காக ஜெயலலிதா பெங்களூரு புறப்பட்டு வரும்போதே
அவருடைய நாற்காலியும் சைரன் பொருத்தப்பட்ட காரில் வந்து சேர்ந்தது. அந்த
நாற்காலி நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
நீதிபதி குன்ஹா தீர்ப்பு அறிவித்து, ஜெயலலிதா சிறைக்குள் சென்ற பிறகு
அந்த நாற்காலியைச் சிறைக்குள் கொடுப்பதற்கு பெரும் முயற்சிகள் நடந்தன.
சிறைத் துறை அதிகாரிகள் அதை அனுமதிக்கவில்லை. அதனால், அந்த நாற்காலி
ஹோட்டலுக்கும் சிறைக்கும் காரில் பயணித்த வண்ணம் இருந்தது. ஐந்து நாட்கள்
போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 2-ம் தேதி நாற்காலி உள்ளே சென்றது.
அம்மாவின் உணவு வாகனம்
வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதி தரப்பட்டு உள்ளது. சைரன்
பொருத்தப்பட்ட TN 04 CG 3000 காரில்தான் ஜெயலலிதாவுக்கு மூன்று வேளையும்
உணவுகள் கொண்டு வரப்படுகின்றன. அக்டோபர் 28-ம் தேதி எலெக்ட்ரானிக் சிட்டியை
அடுத்த பொம்மனஹள்ளி ஏரியாவில் உள்ள அடையார் ஆனந்த பவனில் உணவு வாங்கி
வரப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதாவின் சமையல்காரர் வீரப்பெருமாளை
பெங்களூருக்கே அழைத்து வந்து வீடு எடுத்து, சமையல் செய்து மூன்று வேளையும்
உணவு கொண்டு வரப்படுகிறது. இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம், சான்ட்விச்
போன்றவை அவருக்காகக் கொண்டுவந்து தரப்படுகின்றன.
‘மேடம் ஆரோக்கியமா இருக்காங்க!’
ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பரிசோதிக்க அவருடைய குடும்ப டாக்டர்
சாந்தாராம் இங்கு வந்துள்ளார். அப்போலோ மருத்துவமனை டீமோடு சிறைக்குள்
செல்ல பலமுறை சிறைத் துறை அதிகாரியை அணுகிப் பார்த்தார். சிறைத் துறை
அதிகாரிகள், ”சிறைத் துறை விதிகளுக்கு உட்பட்டுத்தான் நடந்துகொள்ள
முடியும். சிறைக்குள்ளேயே மருத்துவமனை உள்ளது. மேடம் ஆரோக்கியமாக
இருக்கிறார். உங்களுக்கு ஏதாவது சலுகை காட்டினால் பிறகு அது எங்களுக்குப்
பெரிய சிக்கலாகிவிடும். சுரங்க முறைகேட்டில் சிக்கிய கர்நாடக முன்னாள்
அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மூன்று வருடங்களாக சிறைக்குள் இருக்கிறார்.
உங்களுக்கு ஏதாவது சலுகைகள் கொடுத்தால் அவர்களும் எதிர்பார்ப்பார்கள்.
தயவுசெய்து சிறைத் துறை விதிகளுக்கு உட்பட்டு எதுவாக இருந்தாலும்
கேளுங்கள். செய்து கொடுக்கிறோம். விதிகளுக்குப் புறம்பாக எதுவும் எங்களால்
செய்ய முடியாது” என்று கூறிவிட்டனர்.
‘அக்காவை ஆண்டவன் கைவிட மாட்டார்!’
ஜெயலலிதாவின் உறவினர் என்று சொல்லப்படும் சைலஜாவும், அவரது மகள்
அம்ரிதாவும் ஜெயலலிதாவைப் பார்க்க சிறைக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்களைச்
சிறைக்குள் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி மேல்
கேள்வி கேட்டனர். அப்போது அவரைச் சூழ்ந்துகொண்ட அ.தி.மு.க தொண்டர்கள்,
”அம்மா! அம்மா!! உங்க அக்கா எப்போ வெளியில வருவாங்க? அம்மாவை
வெளியில்கொண்டு வர ஏற்பாடு பண்ணுங்கள்” என்று கதறி அழுதனர். அவர்களைப்
பார்த்து சைலஜா, ”நிச்சயம் அக்கா கூடிய சீக்கிரத்தில் வெளியில்
வந்துடுவாங்க. அக்கா எவ்வளவோ மக்களுக்கு நல்லது செஞ்சிருக்காங்க. அக்காவை
ஆண்டவன் கைவிட மாட்டார். அக்கா மீது சுமத்தப்பட்ட இந்தப் பொய்யான
குற்றச்சாட்டில் இருந்து கூடிய விரைவில் வந்துடுவாங்க. அதுவரை நீங்கள்
பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க
அ.தி.மு.க-வினருக்கு வேண்டுகோள் வைத்தார்.
திரும்பிப்போன தமிழக முதல்வர்!
பன்னீர்செல்வம் முதல்வர் என்று தீர்மானிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை இரவே
ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசி பெற்று, பதவி ஏற்பதாகச் சொன்னதால் அனைத்து
மீடியாக்களின் பார்வையும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையை நோக்கியே இருந்தது.
ஆனால் அன்று இரவு அவர் வரவில்லை. அடுத்த நாள் திங்கள்கிழமை காலை
ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசி பெற இருப்பதாகச் சொல்லப்பட்டதால் காலை 6
மணிக்கே பத்திரிகையாளர்கள் குவிந்தனர். ஆனால், வரவில்லை. பதவி ஏற்ற
திங்கள்கிழமை இரவு சிறைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சிறைக்கு வராமல் மௌடன்
ரோட்டில் உள்ள லீலா பேலஸ் அருகே உள்ள மைத்ரி ஹோட்டலுக்குச்
சென்றுவிட்டார். அடுத்த நாள் வருவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால்,
கடைசிவரையில் சிறைக்கு வராமலேயே சென்னைக்குத் திரும்பிவிட்டார்
பன்னீர்செல்வம்.
”இந்திய அரசியல் அமைப்பில் பற்றுகொண்டு அதன் சட்ட திட்டங்களுக்கு
உட்பட்டுதான் முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்கிறார். அவர் இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அரசியல்
அமைப்புச் சட்டத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனைக் கைதியாக
சிறையில் இருக்கும் ஒருவரை முதல்வர் பார்ப்பது பெரும் சட்ட பிரச்னை
ஆகிவிடும்” என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மூத்த சட்ட
ஆலோசகர்கள் அறிவுறுத்தியதால் சிறைக்குச் செல்லாமல் திரும்பி சென்னைக்கு
சென்றுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
வீரபாண்டியார் வழியில் அ.தி.மு.க அமைச்சர்கள்!
கடந்த தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி
ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் ஆறு பேர் கொலை வழக்கில் குற்ற
விசாரணைக் கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது
வீரபாண்டி ஆறுமுகம் சைரன் வைத்த அரசு வாகனத்தில் தேசியக் கொடியோடு
சிறைக்குச் சென்று பாரப்பட்டி சுரேஷைப் பார்த்துவிட்டு வந்தது பெரும் சட்ட
விதி மீறல் என்று ஜெயலலிதாவே அறிக்கைவிட்டார். ஆனால் ஜெயலலிதா குற்றவாளி என
நீதிமன்றம் அறிவிக்கப்பட்டு தண்டனைக் கைதியாக உள்ளே இருக்கும்போது வனத்
துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு
வெங்கடாசலம் ஆகியோர் சைரன் வைத்த அரசு வாகனத்தில் தேசிய கொடியோடு சிறைச்
சாலை வளாகத்துக்குள் சென்றார்கள். எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியைக்
கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றார்.
காரப் பொரியும் கடலை உருண்டையும்!
முதல் மூன்று நாட்கள் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள்,
மேயர்கள் மற்றும் நகர, ஒன்றியச் செயலாளர்கள் உட்பட அ.தி.மு.க-வைச் சேர்ந்த
அனைவரும் வந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.
இதனால் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பாகவே
இருந்தது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின.
இப்போது காலை 10 மணிக்கு மேல் ஒரு சில அமைச்சர்கள், எம்.பி-க்கள்,
எம்.எல்.ஏ-க்கள் மட்டும் வருகிறார்கள். சிறைச்சாலை வளாகத்துக்குள் காரப்
பொரியையும் கடலை உருண்டையும் சாப்பிட்டுவிட்டு, பொழுது சாய்ந்ததும்
புறப்பட்டுவிடுகின்றனர். அதனால், பரப்பன அக்ரஹாரா ரோடு வெறிச்சோடி
காட்சியளிக்கிறது.
”முன்பே தயார் ஆனது!”
ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பாக பத்மாவதி என்ற காவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்தான் ஜெயலலிதாவின் தேவைகளைக் கவனிக்கிறார்.
உள்ளே என்ன நடக்கிறது? சிறையில் இருந்த சில காவலர்களிடம் விசாரித்தோம்.
”தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று மாலை ஜெயலலிதாவுக்கு படபடப்பும் முதுகு
வலியும் இருந்தது. ‘என் ஃபேம்லி டாக்டர்தான் செக் பண்ண வேண்டும்’ என்றார்.
அதற்கு சிறைத் துறை அனுமதிக்கவில்லை. சிறை வளாகத்துக்குள் இருக்கிற
மருத்துவமனையில் உடல் முழு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவருக்கு
கைதி எண் 7402 கொடுக்கப்பட்டு வி.வி.ஐ.பி அறை கொடுக்கப்பட்டது. சசிகலா
(கைதி எண் 7403), சுதாகரன் (கைதி எண் 7404), இளவரசி (கைதி எண் 7405)
ஆகியோரும் வி.ஐ.பி அறைகளில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வி.வி.ஐ.பி அறை ஒரு வாரத்துக்கு
முன்பாகவே தயார் செய்யப்பட்டது. ஆனால் யாருக்காக என்பது தெரியாது. அந்த
அறையில் ஏற்கெனவே கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இருந்திருக்கிறார்.
நல்ல வசதியான அறைதான். ஒரு ஃபேன், டிவி, குளிர்சாதனப் பெட்டி, அகலமான
கட்டில், இந்தியன் டைப் டாய்லெட் என பல வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டுள்ளன. முதல்நாள் அன்று இரவு ஜெயலலிதா மௌனமாகவும் இறுக்கமான
மனநிலையிலும் இருந்தார். முதல்நாள்
தூங்கவில்லை. முதுகு வலிப்பதாகவும் தைராய்டு பிரச்னை இருப்பதாகவும்
சொன்னார். சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனைக்குக் கூப்பிட்டுப் பார்த்தோம்
வரவில்லை. அவரின் பக்கத்து அறைகளில் சசிகலா, இளவரசி இருக்கிறார்கள்.
அவர்களிடம் ஜெயலலிதா மேடம் பேசவில்லை.
சசிகலா அன்று இரவு முழுவதும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருந்தார்.
‘அழாதீங்க மேடம். நாங்கல்லாம் இருக்கிறோம்’ என்றோம். கேட்கவே இல்லை. ‘அக்கா
சாப்பிட்டாங்களா? தூங்குறாங்களா?’ என்று விசாரித்துக்கொண்டே இருந்தார்.
இளவரசி, கொஞ்சம் தைரியமாகக் காணப்பட்டாலும், ரொம்ப வருத்தமாக இருந்தார்.
சுதாகரன் யாரிடமும் பேசாமல் முற்றும் துறந்த முனிவரைப் போல முழு
தியானத்திலேயே இருக்கிறார். முதல்நாள் இரவில் நான்கு பேரும் சரியாகத்
தூங்கவில்லை. சாப்பிடவும் இல்லை” என்றார்.
‘சென்னா இதினி!’
”ஜெயலலிதா தினமும் விடியற்காலை சீக்கிரமாகவே எழுந்து சூடாக எனர்ஜி
ட்ரிங்ஸ் சாப்பிட்டுவிட்டு அவங்க ஹால் வெளியே வாக்கிங் போகிறார். உள்ளே
கொடுக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவது இல்லை. அவருடைய டிரைவர் கொண்டுவரும்
உணவுகளைத்தான் சாப்பிடுகிறார். காலையில் இரண்டு இட்லி, மதியம் தயிர் சாதம்
அல்லது சாம்பார் சாதம், இரவு சப்பாத்தி அவ்வப்போது பழங்கள்
சாப்பிடுகிறார்.
தினமும் மூன்று நாளிதழ்கள் கொடுக்கப்படுகின்றன. அவருக்கு நிறைய
புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். எப்போதும்
வாசித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் கன்னடத்தில், ‘மேடம் சென்னா இதிரா?’
(மேடம் நல்லா இருக்கீங்களா?) என்று கேட்டால் ‘சென்னா இதினி’ (நல்லா
இருக்கேன்) என்று மௌன புன்னகையோடு சொல்லுகிறார். மற்றபடி யாரிடமும் பேசுவது
இல்லை. ஒரு குழந்தை கோபித்துக்கொண்டு யாரிடமும்
பேசாமல் அமைதியாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார். அவரைப்
பார்த்து என்னால் தாங்க முடியவில்லை. கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். ‘அழ
பேடா…’ என்று எங்களைத் தேற்றினார். அப்போதுதான் அவரை தமிழக மக்கள் ‘அம்மா’
என்று அழைப்பதன் அர்த்தத்தை உணர்ந்தேன்” என்றார் அந்த பெண் ஊழியர்.
யாரையும் சந்திக்கவில்லை!
பன்னீர்செல்வம் வந்ததைப் பற்றி கேட்டபோது, ”சனிக்கிழமை சிறைக்குச்
செல்வதற்கு முன்பு பன்னீர்செல்வத்தைப் பார்த்து இரண்டு முறை பேசினார்.
அதற்குப் பிறகு யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. அவருடைய பர்சனல்
டிரைவருக்கு மட்டும் தனக்கு தேவையானவற்றை சொல்லி அனுப்புகிறார். அதை உடனே
அவரது டிரைவர் வாங்கி வந்து தருகிறார். மேடம் அறையில் டி.வி இருக்கிறது.
ஆனால் அதை சரியாகப் பார்ப்பது இல்லை. மாலை நேரத்தில் கொஞ்ச நேரம்
பார்ப்பார். மற்றபடி முழு வாசிப்பில்தான் இருக்கிறார். திங்கள்கிழமைகூட
எப்போதும் போலத்தான் டி.வி ஆன் செய்யச் சொல்லிப் பார்த்தார். பெரிய ஆர்வம்
காட்டவில்லை” என்றனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பாதுகாப்புப் பிரிவில் இருந்த
கருப்பசாமி மட்டும் இன்னும் பெங்களூரில் இருந்து கிளம்பவில்லை. அங்கிருந்து
பணிகளை கவனித்து வருகிறார்?!
நன்றி- ஜூனியர் விகடன்