'மிஸ்டர் ஹப்லாட்' (Mr Hublot): ஆஸ்கர் வென்ற அனிமேஷன் குறும்படம்
2013 ஆம் ஆண்டு வெளியானது.
இதன் இயக்கம் லோரண்ட் விட்ஸ் மற்றும் அலெக்சாண்டர் எஸ்பிகாரெஸ் ஆவர்.
லக்ஸம்பர்க் - பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பாக வெளியான இந்த 11 நிமிட நீள ஆங்கில அனிமேஷன் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 86-வது அகாடமி விருதுகளில் 'சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான' ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது.
இப்படத்தின் ஆழமான மையக்கருத்து இயந்திரத்தனமான, இறுக்கமான வாழ்வியல் விதிகளையும் கடந்து நிற்கும் நிபந்தனையற்ற அன்பும், அதற்காக மனிதன் மேற்கொள்ளும் சுய மாற்றமுமாகும்.
மிஸ்டர் ஹப்லாட் என்ற கதாபாத்திரம் கடுமையான மனக்கட்டாயக் குறைபாட்டால் சூழப்பட்டு, எந்தவொரு மாற்றத்தையும் விரும்பாமல், தனக்கென வகுத்துக்கொண்ட ஒரு குறுகிய ஒழுங்குமுறைக்குள் வாழும் மனிதனின் பிரதிபலிப்பு.
ஆனால், எதிர்பாராமல் அவரது வாழ்க்கைக்குள் நுழையும் அந்த ரோபோ நாய், அவரது அத்தனை அன்றாடப் பழக்கவழக்கங்களையும், வாழ்விடத்தின் அமைதியையும் தலைகீழாக மாற்றி
அமைக்கிறது.
உயிரற்ற இயந்திரங்களால் நிறைந்த ஒரு நகரத்தின் பின்னணியில், இயந்திரமாக மாறிவிட்ட மனிதனுக்குள் இன்னும் எஞ்சியிருக்கும் ஈரப்பதத்தை இப்படம் மிக நுட்பமாகப் பேசுகிறது.
தனக்காக இந்த உலகத்தை மாற்ற முயலாமல், தான் நேசிக்கும் ஒரு ஜீவன் சுதந்திரமாக வாழ்வதற்காகத் தன் ஒட்டுமொத்த உலகத்தையே, அதாவது தன் வாழ்விடத்தையே மாற்றிக்கொள்ளத் துணியும் அன்பின் எல்லையற்ற தியாகமே இப்படத்தின் உண்மையான அடிநாதம்.
'மிஸ்டர் ஹப்லாட்' படத்தின் தனித்துவமும் ஆஸ்கர் வெற்றிக்கான காரணமும்
இப்படம் ஆஸ்கர் விருதை வென்றதற்குக் காரணம், அதன் மிகச்சிறந்த அனிமேஷன் தொழில்நுட்பமும், உணர்வுபூர்வமான கதைசொல்லலும் கச்சிதமாக இணைந்ததுதான்.
ரோபோக்களும் இயந்திரங்களும் நிறைந்த 'ஸ்டீம்பங்க்' உலகத்தை, வெறும் கற்பனையாகக் காட்டாமல், தூசிகளும் துருக்களும் படிந்த மிக எதார்த்தமான பின்னணியாக செதுக்கியிருந்த காட்சி வடிவமைப்பு இதன் முதல் தனித்துவம்.
வார்த்தைகளோ வசனங்களோ இல்லாத மௌனப் படமாக இருந்தாலும், மிஸ்டர் ஹப்லாட்டின் கண்கள், அவரது நெற்றியில் ஓடும் எண்கள் மற்றும் உடல் மொழியின் மூலமாகவே அவரது மனக்கட்டாயக் குறைபாட்டையும் அவருக்குள் ஏற்படும் பாசப் போராட்டத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்திய விதம் அசாத்தியமானது.
விஞ்ஞானப் புனைகதை போன்ற ஒரு பின்னணியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதில் ஒரு மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள உன்னதமான பிணைப்பை, மிக மென்மையான நகைச்சுவையுடனும் நெகிழ்ச்சியான திருப்பத்துடனும் விவரித்த திரைக்கதை உலகளாவிய ரசனையை ஈர்த்தது.
இயந்திரத்தனமான ஒரு சூழலில், உயிரற்ற இரு வடிவங்களுக்கு இடையே ஒரு ரோபோ மனிதன் மற்றும் ரோபோ நாய் பொங்கும் அன்பையும் ஆன்மாவையும் திரையில் கொண்டு வந்த அனிமேஷன் நேர்த்திக்காகவே இப்படம் மிக தகுதியாக ஆஸ்கர் விருதை வென்றது.
இப்படத்தின் காட்சி வடிவம் கணினித் தொழில்நுட்பமும், சிற்பக்கலையின் ஆளுமையும் இணைந்த ஒரு அசாத்தியமான படைப்பாகும்.
சிற்பக் கலைஞர் ஸ்டீபன் ஹாலக்ஸ் வடிவமைத்த விசித்திரமான கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, முப்பரிமாண கணினி அனிமேஷன் முறையில் இந்த உலகம் செதுக்கப்பட்டது.
வெறும் தட்டையான சித்திரங்களாக இல்லாமல், நிஜமான இரும்பு, செம்பு, திருகுகள் மற்றும் துருப்பிடித்த எந்திரப் பாகங்களின் தன்மையைத் திரையில் கொண்டுவர மேற்பரப்பு வடிவமைப்பு மற்றும் ஒளியமைப்புத் தொழில்நுட்பங்கள் மிக நுணுக்கமாகப் பயன்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு காட்சியிலும் பின்னணியில் இயங்கும் எந்திரங்கள், காற்றில் மிதக்கும் தூசுப்படலம் மற்றும் புகையின் அசைவுகள் என அனைத்தும் அனிமேஷனின் இறுதிச் செயலாக்கத்தில் அசாத்தியமான எதார்த்தத்தை உருவாக்கின.
வசனங்கள் இல்லாத ஒரு கதையில், நாயகனின் முகபாவனைகள், அவரது நெற்றியில் சுழலும் எண்கள் மற்றும் பல அடுக்குக் கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் வெளிச்சம் ஆகியவற்றின் வழியே உணர்ச்சிகளை வெளிப்படுத்திய அனிமேஷன் நேர்த்தி இப்படத்திற்குத் தனித்துவமான உயிர்ச்சக்தியை வழங்கியது.
வசனங்களே இல்லாத இக்குறும்படத்தில், கதையின் ஓட்டத்தையும் உணர்வுகளையும் பார்வையாளர்களுக்குக் கடத்தும் முதன்மை மொழியாக இசையே செயல்படுகிறது.
பிரான்சுவா ரூசலோவின் பின்னணி இசையும், 'லி-லோ' குழுவினரின் பாடல்களும் இணைந்து இந்த இயந்திர உலகிற்குத் தேவையான ஆன்மாவை வழங்கியுள்ளன.
படத்தின் தொடக்கத்தில் மிஸ்டர் ஹப்லாட்டின் இயந்திரத்தனமான அன்றாட வாழ்க்கையையும், அவரது மனக்கட்டாயக் குறைபாட்டையும் ழவிவரிக்கும் விதமாக ஒலிகளும் இசைக் கோவைகளும் மிகத் துல்லியமான கால இடைவெளிகளுடன், சற்று இறுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அந்த குட்டி ரோபோ நாய் வீட்டிற்குள் நுழைந்த பிறகு, இசையின் தன்மை மெல்ல மாறி, ஒரு மென்மையான பாசப் பிணைப்பை வான்வழியே பரவச் செய்கிறது.
குறிப்பாக, நாய் அசுரத்தனமாக வளர்ந்து சிக்கலை உண்டாக்கும் போது எழும் பதற்றமான பின்னணி ஒலிகளும், இறுக்கமான கிளைமாக்ஸ் திருப்பத்தில் வெளிப்படும் நெகிழ்ச்சியான இசையும் படத்தின் உணர்ச்சித் தீவிரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றன.
செயற்கையான எந்திர ஒலிகளுக்கு நடுவே, மனித நேயத்தின் ஈரப்பதத்தை இசைக்கருவிகளின் நாதத்தின் மூலம் வெளிப்படுத்திய விதம் இப்படத்தின் அபாரமானதாகும்.
===============================
படத்தின் கதை:-
நெரிசல் மிகுந்த, இயந்திரங்கள் நிறைந்த ஒரு 'ஸ்டீம்பங்க்' வகை கற்பனை நகரத்தில் வாழும் மிஸ்டர் ஹப்லாட், நெற்றியில் ஓடோமீட்டர் போன்ற கவுண்டருடனும், பல அடுக்குக் கண்ணாடிகளுடனும் விசித்திரமாகக் காட்சியளிக்கிறார்.
இவருக்கு வீட்டின் விளக்குகளைப் பலமுறை ஆன்-ஆஃப் செய்வது, சுவரில் இருக்கும் படங்களை மில்லிமீட்டர் பிசகாமல் நேராக அடுக்குவது எனத் தீவிரமான மனக்கட்டாயக் குறைபாடு (OCD) பழக்கவழக்கங்கள் உள்ளன.
ஒரு நாள், தெருவில் குப்பை வண்டியில் சிக்கவிருந்த, குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு குட்டி ரோபோ நாயைக் காப்பாற்றித் தன் சிறிய வீட்டிற்குள் அழைத்து வருகிறார்.
நாட்கள் செல்லச் செல்ல, அந்த ரோபோ நாய் அசுர வேகத்தில் பிரம்மாண்டமாக வளர்ந்து வீட்டின் பொருட்களைச் சேதப்படுத்தத் தொடங்குகிறது.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஹப்லாட், ஒரு திருப்புளியுடன் அந்த ரோபோவைத் தாக்கப் போவதை கண்ணுருகிறோம்.
ஆனால், கதையின் இறுதியில் நெகிழ்ச்சியான திருப்பம் வெளிப்படுகிறது. ஹப்லாட் தன் செல்லப் பிராணியை அழிக்கவில்லை.
மாறாக, அது தாராளமாக வாழ்வதற்காகத் தன் சிறிய வீட்டை விட்டுவிட்டு, தெருவுக்கு எதிரே இருக்கும் ஒரு பெரிய கிடங்கிற்கு குடிபெயர்ந்திருக்கிறார்.
அன்பிற்காகத் தன் வாழ்விடத்தையே மாற்றிக்கொண்டாலும், புதிய வீட்டிலும் ஹப்லாட் தன் பழைய OCD பழக்கவழக்கங்களைத் தொடர்வதுடன் இப்படம் நிறைவடைகிறது.
'மிஸ்டர் ஹப்லாட்' படம் உணர்த்தும் செய்தி
அன்பும் பரிவும் நம்மை வந்தடையும் போது, நாம் காலம் காலமாகப் பற்றிக்கொண்டிருக்கும் பிடிவாதமான பழக்கவழக்கங்களும் சுயநலக் கோடுகளும் சுக்குநூறாக உடைந்துவிடும் என்பதே ஆகும்.
ஒரு குறுகிய வட்டத்தில், தனக்கான விதிகளோடு வாழும் மனிதன், இன்னொரு ஜீவனின் துயர் கண்டு இரங்கும்போது அவனுக்குள் உண்மையான மாற்றம் தொடங்குகிறது.
நேசம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது நேசிக்கப்படும் உயிரின் வளர்ச்சிக்காக நம்மையே நெகிழ்த்திக்கொள்வதும், நம் வசதிகளைத் தியாகம் செய்வதுமாகும் என்பதை ஹப்லாட்டின் முடிவு உணர்த்துகிறது.
இயந்திரமயமாகிவிட்ட நவீன உலகில், தனிமைக்குள் சுருங்கிவிடாமல் பிறிதொரு உயிரின் மீது காட்டும் கருணையே மனித வாழ்வை முழுமையாக்குகிறது என்ற உன்னதமான வாழ்வியல் உண்மையை இக்குறும்படம் மிக அழகாகப் பதிவு செய்கிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு