
தன் இருபதுகளில் இருக்கும் லார்ஸ் (Ryan Gosling ) கூச்சமும் , தாழ்வு மனப்பான்மையின் உச்சமும் கொண்டவன், பிறப்பிலேயே தாயை பறிகொடுத்தவன், தந்தையின் அரவணைப்பும் இன்றி வாழ்ந்தவன், பெண்ணுடன் பழகும் வாய்ப்பு இருந்தும் ஒதுங்கிப்போகிறான்.ஊரில் வயதான பெண்மணிகளிடம் மட்டும் கொஞ்சமாக பேசுகிறான். தன் அம்மாவின் உல்லன் சால்வையை எப்போதும் ஏக்கத்துடன் அணிகிறான்.பெண்ணின் ஸ்பரிசம் இல்லாமலே கனடாவின் குளிரிலும் வாழ்கிறான்.
பெண்ணின் ஸ்பரிசம் உடலுறவில் முடியும். அதன் மூலம் குழந்தை பெற்றால் துணையின் உயிருக்கே ஆபத்து என்னும் அபத்தமான பயத்தினை ஆழ்மனதில் கொண்டிருக்கிறான்.உடன் பணியாற்றும் மார்கோ (KelliGarner) இவனின் அன்புக்கு ஏங்க , இவன் ஒதுங்கிப்போகிறான்.அவள் மீது இவனுக்கு உள்மனதில் அன்பு இருந்தாலும் வெளிக்காட்டாமல் இருக்கிறான்.தன் மனம் போன போக்கில் நடக்கிறான்.
மிக அன்பான தன் அண்ணன் கஸ் (Paul Schneider ) மற்றும் அண்ணி காரெனிடம் (Emily Mortimer ) கூட அதிகம் பேசாமல்,பழகாமல் கேரேஜ் வீட்டில் போய் தங்குகிறான். சரி பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டாலோ , திருமணமானாலோ சரியாகிவிடும் என அண்ணனும் அண்ணியும் நினைத்திருக்க, இவன் வழிக்கு வருவதுபோல் தெரியவில்லை . அன்பான அண்ணி கர்ப்பமாகிறார், இதை கேள்விப்பட்ட இவனுக்கு இன்னும் ஏக்கம் அதிகமாகி,இனி அண்ணியின் ஆதரவோ, சாஃப்ட்கார்னரோ தனக்கு கிடைக்காது என எண்ணிய லார்ஸ் தன் அலுவலக சகாவின் உதவியுடன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு அனாடமி கரெக்டட் செக்ஸ் டாயை (பாலுணர்வு இச்சை தீர்க்கும் பொம்மை) ஆர்டர் செய்து தருவிக்கிறான். அது ஒரு 5’6” உயரமுள்ள அழகிய இளம் பெண்போல தோற்றமளிக்கிறது.அதனோடு நில்லாமல் கிளர்ச்சியூட்டும் அங்கங்களும்,பெண்ணுறுப்பும் கொண்டுள்ளது,

மேலும் தாங்கள் இருவரும் நன்கு பழகும் வரை பியங்காவை மாடியிலிருக்கும் இறந்து போன தன் அம்மாவின் படுக்கை அறையிலேயே தங்க வைக்க அனுமதியும் கேட்டு வாங்குகிறான்.மூன்று வேளையும் அவளுக்கு உணவு தயாரிக்கும் வேலையும் அவளை குளிக்க வைத்து உடை மாற்றும் வேலையும் அண்ணிக்கு வாய்க்கிறது,லார்ஸின் அண்ணனுக்கு அவளை தூக்கிப்போய் படுக்கையில் , காரில் , வீல்சேரில் வைக்கும் வேலை வாய்க்கிறது.லார்ஸும் அவளுடனே உணவு மேசையில் அமர்ந்து அவளுக்கும் தட்டில் பரிமாறச் செய்து சாப்பிடுகிறான். லார்ஸின் அண்ணன் இந்த முட்டாள் தனத்தை கண்டு கோபமுற்றாலும் மனைவியின் வேண்டுகோளின் படி அடக்கி வாசிக்கிறான்.
அவர்கள் இவனுக்கு பிடித்துள்ள மன நோயை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தெளியவைக்க முடியும் என்கின்றனர்.ஊரில் உள்ள அனைவரிடமும் லார்ஸ் மிக அன்புடன் பழகியவன்,தாயில்லாப் பிள்ளை என்ற செல்லம் வேறு ,ஊரில் உள்ள அனைவரும் லார்ஸின் அண்ணன் அண்ணியின் வேண்டுகோளுக்கிணங்க அந்த பொம்மைப் பெண்ணை உயிருள்ள பெண்ணாகவே நடத்துகின்றனர்.
இதற்கிடையில் லார்ஸ் நன்கு படித்த பியங்கா வீணாக வீட்டில் இருக்கக்கூடாது என தொண்டு நிறுவனத்தின் பள்ளிக்கூடத்தில் கல்வி போதிக்க கொண்டுவிடுகிறான். இதற்கிடையில் ஒருநாள் லார்ஸ் பியங்கா மிகவும் சோர்வாக இருக்கிறாள் என முறையிட அவளை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்கின்றனர், இவர்களின் குடும்ப மருத்துவர் டாக்மரிடம் காட்ட, அவரும் இந்த நாடகத்தில் பங்கேற்று பியன்காவிற்கு குறைந்த ரத்தாழுத்தம் உள்ளது அவளை வாராவாரம் மருத்துவமனைக்குகூட்டி வரப் பணிக்கிறார். அவ்வேளைகளில் பியங்காவை வெளியில் அமரவைத்துவிட்டு இவனுக்கு கவுன்சிலிங் செய்கிறார். வெறும் கைகளுடன் அவனை தொட அவன் தொட்ட இடம் நெருப்பு போல எரிகிறது என்கிறான், அவனுக்கு படிப்படியாக டச் தெரபியும் தருகிறார். பெண் தீண்டினால் ஒன்றும் ஆகாது,ஸ்பரிசம் இனியது என புரியவைக்கிறார்.அவன் அலுவலகத்தில் மார்கோ வேறு நபருடன் டேட்டிங் செய்கிறாள், இப்போது இவனுக்கு அது மிகவும் உறுத்துகிறது.
*லார்ஸ் பியங்கா ஒரு பொம்மை என்பதை உணர்ந்தானா?
*மார்கோவை வாழ்க்கைத்துணையாக ஏற்றானா?
*அவன் அண்ணன் , அண்ணியுடன் இணைந்தானா?
போன்றவற்றை வேடிக்கையான விந்தையான நிகழ்வுகளை,உடனே டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
முழுக்கதை வேண்டுவோர் காணொளியை தாண்டிவந்து படிக்கவும்:-
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
படத்தின் காணொளி
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
சில நாட்களில் லார்ஸ் பியங்கா தன்னுடன் நேரம் செலவிடமாட்டேன் என்கிறாள் என புகார் கூறுகிறான். அண்ணியைப் பார்த்து நீங்கள் பியங்காவை பார்த்துக் கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்,சுய நலமாய் இருக்கிறீர்கள் என கோபமாக பேச, அண்ணி கோபமாக அவனுக்கு பதிலடி கொடுக்கிறாள். அப்போதும் அவனின் மன நிலையை குத்திப்பேசவில்லை, அண்ணன் கஸ்ஸிற்கு பொறுமை எல்லை மீறி பியங்கா ஒரு காம இச்சை தீர்க்கும் பொம்மை. என்று முகத்தில் அடித்தாற்போல புரியவைக்கிறான். அப்போதும் இவன் திருந்தியபாடில்லை. இவன் அலுவலகத்தில் மார்கோவின் காதல் முறிந்துவிட இவன் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான், அவளுடன் பவுலிங் பாயிண்டிற்கு சென்று அவள் உற்சாகமாக பவுலிங் விளையாட வேடிக்கை பார்க்கிறான் . பின்னர் வீடு வரை நடக்கையில் அவள் அவனை விரும்புவதாய் சொல்ல , இவன் நாம் பியங்காவிற்கு துரோகம் செய்யக்கூடாது என அவளை விட்டு விலகுகிறான்.
அப்போது பிரிய முடிவெடுத்து, முதன்முறையாக கையுறைகளை கழற்றிவிட்டு ஒரு பெண்ணுடன் கைகுலுக்குகிறான்.அப்போது ஏற்ப்பட்ட இளம் பெண்ணின் ஸ்பரிசமும் உள்ளங்கைச்சூடும் அவனுக்கு என்னமோ செய்கிறது.இந்த உணர்வு பியங்காவிடம் பழகுகையில் ஏற்படவேயில்லை என்பதை புரிந்து கொள்கிறான்.இவன் உள்மனதில் நாடகம் இறுதிக்கட்டத்திற்கு நகர்கிறது.
வீட்டிற்கு போனதும் பியங்கா பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறாள் என கூறி அந்த பொம்மையை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனை கூட்டி செல்கிறான்.மருத்துவர் டாக்மர் பியங்கா கூடிய விரைவில் இற்ந்துவிடுவாள்,ஆகவே அவளின் கடைசி விருப்பம் ஏதேனும் இருந்தால் நிறைவேற்ற சொல்ல, இவன் அவளை கைதாங்கலாக அழைத்துபோய் வழக்கமாக அவளுடன் டேட்டிங் செல்லும் ஏரிக்கரைக்கு செல்கிறான். அங்கு அவளை முத்தமிட ,இவனுக்கு அந்த உற்சாகமோ கிளர்ச்சியோ எழவே இல்லை, என்ன இழவுடா இது ? வெறும் பொம்மை போல என உணர்ந்தவன்.
உடனே பியங்கா இறந்துவிட்டாள் என எல்லோரிடம் சொல்கிறான். அவளுக்கு நல்அடக்கமும் நடக்கிறது, இவ்வளவு காலமும் தன் மனதுள் போட்ட நாடகமும் நிறைவடைகிறது.இவன் பாட்டுக்கு நடனமாடிய ஊரார் அனைவரும் பியங்காவின் சவ அடக்கத்தில் கலந்து கொள்கின்றனர்.
அப்போது அங்கே வந்த மார்கோ பியங்காவின் கல்லறைக்கு மலர்கள் தூவ , லார்ஸ் அவளின் கையைப்பிடித்தபடி ஒரு வாக் போகலாமா? எனக் கேட்டு, கூட்டிபோகிறான்.அதோ அவன் முழு ஆண்மகனாய் ஆகியே விட்டான். அண்ணன் அண்ணிக்கும் ஊராருக்கும் ஆனந்தக்கண்ணீர்.அவர்கள் இனி நடிக்க வேண்டாம் பாருங்கள்.
இதில் லார்ஸாக வந்த ரயான் கோஸ்லிங் தத்ரூபமாக தன் நடிப்பை வெளிக்காட்டிய விதம் நிச்சயம் எல்லோரையும் கவரும். இவர் ஃப்ராக்சர் என்னும் படத்திலும் சர்.அந்தோனி ஹாப்கின்ஸுடன் போட்டியிட்டு நடித்திருப்பார்.இவர் படங்களில் நடிப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும்.
அண்ணன் கஸ்ஸாக வந்த பால் ச்னீடர் நடிப்பில் கலக்கியிருந்தார். இவர் ப்ராட்பிட்டுடன் இணைந்து அசாசினேஷன் ஆஃப் ஜெஸ்ஸி ஜேம்ஸிலும் கலக்கியிருப்பார்.
அண்ணியாக வந்த எமிலி மார்டைமர் படு பாந்தம். நல்ல நடிப்பு இவர் ஏற்கனவே பின்க் பாந்தர், ரெட்பெல்ட் போன்ற படங்களில் நடித்தவர்.
படத்தின் இயக்கம் க்ரெக் கிலெப்ஸி , அற்புதம் மெதுவாய் செல்லும் இப்படிப்பட்ட கதையினூடே இழையோடும் அன்பு, கருணை, நகைச்சுவை , மெல்லிய சோகம் என சரியான படைப்பு. முள்ளின் மேல் போட்ட துணியை பக்குவமாய் கையாண்டிருக்கிறார்.கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தால் காதில் பூசுற்றும் கதை,லூசுத்தனம் என்று தோன்றும் அபாயம் அதை திறம்பட வெற்றிகொண்டு சாதித்த குழுவுக்கு சபாஷ்.
பிண்ணனி இசையும் ஒளிப்பதிவும் மிக அருமை. உலக சினிமா ரசிகர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் நிச்சயம். 106 நிமிடங்கள்= ஒர்த்திட்
படத்தில் வந்த கதாபாத்திரங்களையும் தொழில் நுட்ப கலைஞர்களையும் அறிய அழுத்தவும்