அருமை நண்பர்களே!!!
நலம் தானே?!!!வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.எல்லோரும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள். ஐந்து வருடங்கள் கழித்து என் வீட்டாருடன் இந்த தீபாவளியை கொண்டாடுகிறேன், சென்னையில் புயல் வேறு உருவாயிருப்பதால் எங்கிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது,எங்கு நோக்கிலும் வாகனங்கள் எங்காவது போயும் வந்தும் கொண்டிருக்கிறது,இன்று கூட வேலை வைத்து பழி தீர்த்துக்கொண்ட முதலாளிகளை என்ன செய்தால் தீரும்?காலை 1மணி நேரம்,மாலை 1.5மணி நேரம் போக்குவரத்து நெரிசல். தீபாவளிக்கு துணிகள் முன்னமே வாங்கிவிட்டதால் கடைசி நேர அலைச்சல் எனக்கு இல்லை,எந்தப் படத்துக்கும் முன்பதிவும் செய்யவில்லை.
இன்று காலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் ஆர்மி கேம்பில் இருக்கும் பட்டாசு கடையில் இருந்து 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினேன், அதே பட்டாசுகளை மாலை தி.நகரில் உள்ள மொத்த கடையில் சென்று மேலும் கொஞ்சம் வாங்கலாம் என விலை கேட்டேன்,இங்கே அதே பட்டாசின் மதிப்பு 2000 க்கும் மேலே வருகிறது,மகள் வெடித்துப்பார்த்ததில் மிக நன்றாக வெடிக்கிறது, யாருக்கேனும் பட்டாசு வாங்கவேண்டும் என்றால் அங்கே இருக்கும் 3க்கும் மேற்பட்ட ராணுவவீரர் நடத்தும் கடைகளில் சென்று வாங்குங்கள்.40வகை வெடிகள் கொண்ட கிஃப்ட் பாக்ஸ்450 தான்,1000 ரூபாய்க்கு வாங்கினாலே 3குழந்தைகள் வெடிக்கலாம்,சென்னை புறநகர்வாசிகளுக்கு இது ஒரு சின்ன தகவல் பகிர்வு.மீண்டும் எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்வது எப்படி?
தீபாவளி திருநாள் வந்தாலே கொண்டாட்டம் தான். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார். அப்போது, பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் "பவுமன்' என்ற மகனைப் பெற்றாள் பூமாதேவி. அவன் சிறப்பாக தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான். பூமியில் இறந்தவர்கள் மடிந்தேயாக வேண்டும் என்ற பிரம்மா, அவன் பல லட்சம் ஆண்டுகள் வாழ வரம் தந்ததோடு, எந்த சக்தியால் அவனுக்கு அழிவு வரவேண்டும் எனக் கேட்டார். தன்னைப் பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என அவன் வரம் பெற்றான்.
ஆண்டுகள் கடந்தன. நரகாசுரன் தான் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பூலோகத்தினரை மட்டுமல்ல, தேவர்களையும் கொடுமை செய்தான்.நரகர் எனப்படும் மனிதர்களுக்கு எதிரானவன் என்பதால் "நரகாசுரன்' என்று பெயர் பெற்றான். கலவரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பெற்ற பிள்ளையென்றும் பாராமல், மகனை அழிக்க முடிவெடுத்தார் விஷ்ணு. அந்தப் பிறவியில் விஷ்ணு கிருஷ்ணனாகவும், பூமாதேவி, சத்யபாமாவாகவும் பூலோகத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள். அவளுக்கு நரகாசுரன் தான் தன் மகன் என்ற விபரம் பிறவி மாறிவிட்டதால் மறந்து விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணன், அவளை தேரோட்டச் சொல்லி, நரகாசுரனை அழிக்க கிளம்பினார். இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் மயங்கி விழுவது போல நடித்தார். தன் கணவரை காப்பாற்ற வேண்டுமென்ற ஆதங்கத்தில், சத்யபாமா நரகாசுரன் மீது அம்பெய்தாள். அவன் இறந்து போனான். அதன்பிறகே அவன் தன் மகன் என தெரிய வந்தது.
நரகாசுரன் இறந்ததும் மக்கள் ஆனந்தமாக வீடுகளில் தீபமேற்றுவதை சத்யபாமா கவனித்தாள். தன் கணவரிடம், ""என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உலகில் இவனைப் போல ஒரு பிள்ளை பிறக்கக்கூடாது என்பதை எதிர்கால உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் இவனது மரணத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்த பிறகு செய்யும் எண்ணெய் குளியல், என் மகன் இறப்பைப் பொறுத்தவரை புனிதமாக்கப் பட வேண்டும். அன்று கங்காதேவி, ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் எழுந்தருள வேண்டும். எண்ணெயில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும்,'' என வேண்டினாள். பெருமாளும் அவ்வாறே வரமளித்தார். இரக்கம் மிக்க பூமாதேவி, அதிகாலை குளிரில் மக்கள் நடுங்கக்கூடாது என்பதற்காக வெந்நீரில் குளிக்கவும் அனுமதி பெற்றுத் தந்தாள்.
சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு நாழிகை முன்னதாக (48 நிமிடம்) குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை 5.30க்குள் எண்ணெய் குளியலை முடித்து விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி. நாளை அமாவாசையும் வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.
குளிக்கும் முறை: நல்லெண்ணெயில் இஞ்சித்துண்டு, பூண்டு சில பற்கள், மிளகு இரண்டு, சிறிய வெங்காயம், விரலிமஞ்சள் துண்டு, சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் ஆறியதும், வீட்டில் பெரியவர், சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும். குளிப்பவருக்கு ஒருவர் தண்ணீர் எடுத்துக் கொடுக்க அதை அவர் வாங்கிக் குளிக்க வேண்டும். குளியலுக்குப் பின் தீபாவளி பூஜையை முடித்து, சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்பே புத்தாடை அணிய வேண்டும். வெறும் வயிற்றில் புத்தாடை அணிவது சாஸ்திரப்படி உகந்ததல்ல.
====0000====