தி ஜங்கிள் புக் The Jungle Book 2016


The Jungle Book   தி ஜங்கிள் புக் திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளியானது.
இப்படத்தின் இயக்கம் ஜான் ஃபேவ்ரோ . இத்திரைப்படம்  கற்பனை சாகசப் படம்.

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்த இத்திரைப்படம், 1967 ஆம் ஆண்டு வெளியான அதே பெயரிலான அனிமேஷன் படத்தின் நேரடி ஆக்ஷன் மற்றும் புகைப்பட எதார்த்தமான அனிமேஷன் மறுஆக்கம். 

இது ருட்யார்ட் கிப்ளிங்கின் கதைகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது. காட்டில் ஓநாய்களால் வளர்க்கப்படும் மௌக்லி என்ற சிறுவன், ஷேர்கான் என்ற புலியின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க தன் விலங்கு பாதுகாவலர்களுடன் மேற்கொள்ளும் சுய கண்டுபிடிப்பு பயணமே இப்படத்தின் கதை.

இத்திரைப்படத்தின் அடிநாதம்  ஒரு தனித்து விடப்பட்ட மனித சிறுவன் சவால்கள் நிறைந்த இயற்கையோடு இணைந்து வாழ்ந்து, தன் தனித்துவமான திறமைகளைக் கொண்டு தனது சுய அடையாளத்தைக் கண்டறிவதாகும்.

விலங்குகளின் உலகமான காட்டில் வளரும் மௌக்லி, தான் ஒரு மனிதன் என்பதால் மற்ற ஓநாய்களைப் போல ஓடவோ அல்லது வேட்டையாடவோ முடியாமல் தவிக்கிறான்.

 காட்டின் விதிகளுக்குள் தன்னை பொருத்திக் கொள்ள அவன் போராடும்போது, மனித குலத்திற்கே உரிய கருவிகளை உருவாக்கும் சிந்தனைகளும் தந்திரங்களும் அவனுக்குள் இயல்பாகவே வெளிப்படுகின்றன. 

காட்டின் தலைவர்கள் இந்த மனித தந்திரங்களை ஆபத்தானவை என்று கருதினாலும், இறுதிப் போரில் தீய சக்தியான ஷேர்கானை வீழ்த்த அவனது இந்த மனிதத்துவமே அவனுக்குப் பேருதவியாக மாறுகிறது.

அதே வேளையில், இத்திரைப்படம் குடும்பம் என்பது இரத்த உறவால் மட்டும் உருவாவது அல்ல, மாறாக அன்பு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது என்பதை ஆழமாக உணர்த்துகிறது. 

தன்னைத் தத்தெடுத்து வளர்த்த ஓநாய் தாய் ரக்ஷா, வழிகாட்டியான கருஞ்சிறுத்தை பகீரா மற்றும் உற்ற நண்பனான கரடி பாலு ஆகியோரின் கூட்டு அரவணைப்பிற்குள் மௌக்லி தனக்கான உண்மையான குடும்பத்தைக் காண்கிறான்.
மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவையும் இத்திரைப்படம் புதிய கோணத்தில் பேசுகிறது.

 ருட்யார்ட் கிப்ளிங்கின் அசல் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் இயற்கை என்பது மனிதனால் வெல்லப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

 ஆனால், இந்த மறுஆக்கத்தில் மௌக்லி மனிதர்களின் உலகமான மனிதக் கிராமத்திற்குச் செல்லாமல், காட்டைத் தனது சொந்த வீடாகவும், அங்கிருக்கும் விலங்குகளைத் தனது குடும்பமாகவும் ஏற்றுக்கொள்கிறான். 

காட்டை அழிவிலிருந்து காப்பாற்றி, அதன் இயற்கை சமநிலையைப் பாதுகாக்கும் ஒரு பொறுப்பான காவலனாக அவன் உருவெடுப்பதன் மூலம், மனிதனும் இயற்கையும் இணைந்து வாழ வேண்டும் என்ற உன்னதப் பண்பே இப்படத்தின்  அடிநாதமாகிறது.

படத்தில் மௌக்லியாக நீல் சேத்தி என்ற சிறுவன் மனித கதாபாத்திரத்தில் நேரடியாக நடித்துள்ளார். 

மற்ற விலங்கு கதாபாத்திரங்களுக்கு பில் முர்ரே, பென் கிங்ஸ்லி, இத்ரிஸ் எல்பா, லுபிடா நியாங்கோ, ஸ்கார்லெட் ஜோஹான்சன், ஜியான்கார்லோ எஸ்போசிட்டோ மற்றும் கிறிஸ்டோபர் வாக்கன் ஆகியோர் தங்களின் குரல் மற்றும் அசைவுப் பதிவு மூலம் நடிப்புத் திறனை வழங்கியுள்ளனர். 

குறிப்பாக பில் முர்ரே, இத்ரிஸ் எல்பா மற்றும் பென் கிங்ஸ்லி ஆகியோரின் குரல் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இயக்குனர் ஜான் ஃபேவ்ரோ முந்தைய அனிமேஷன் படத்தின் மகிழ்ச்சியான ஆன்மாவை தக்கவைத்துக்கொண்டு, அதே நேரத்தில் அதிக எதார்த்தத்துடனும் சாகசத்துடனும் கதையை இயக்கியுள்ளார்.

 இயற்கை  பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்ற தற்கால சிந்தனையை இயக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை பில் போப் கையாண்டுள்ளார். 

லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஒலிப்பதிவுக்கூட அரங்குகளில் மட்டுமே இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. 

விலங்குகள் மற்றும் காடுகளின் பின்னணியை உருவாக்க கணினி மூலம் உருவாக்கப்பட்ட இமேஜரி தொழில்நுட்பம் மற்றும் எதார்த்தமான அனிமேஷன் முறையை ஒளிப்பதிவுடன் இணைந்து பயன்படுத்தியுள்ளனர்.

இத்திரைப்படம் அதன் அசாத்தியமான காட்சி விளைவுகளுக்காக 89 ஆவது அகாடமி விருதுகளில் சிறந்த காட்சி விளைவுகளுக்கான ஆஸ்கார் விருதை வென்றது.

 மேலும் 22 ஆவது கிரிடிக்ஸ் சாய்ஸ் விருது மற்றும் 70 ஆவது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளையும் பெற்று சாதனைகளைப் படைத்துள்ளது.

 படத்தில் வரும் காடுகளும் விலங்குகளும் பார்ப்பதற்கு அசல் நிஜ உலகம் போல தோன்றினாலும், முழுத் திரைப்படமும் இந்தியாவின் எந்தவொரு காட்டிலும் படம்பிடிக்கப்படவில்லை.

 ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் நடுப்பகுதியில் உள்ள ஸ்டுடியோ அரங்கிற்குள்ளேயே பிரம்மாண்டமான நீல மற்றும் பச்சை மேட் பின்னணி திரைகளுக்கு முன்னால் மட்டுமே நடத்தப்பட்டது.

இயக்குனர் ஜான் ஃபேவ்ரோ விலங்குகளின் அசைவுகளும் அவை பேசும் விதமும் பார்வையாளர்களுக்கு எவ்வித செயற்கைத்தனமும் இல்லாமல் இயல்பாகத் தெரிய வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். 

இதற்காக வால்ட் டிஸ்னியின் பழைய அனிமேஷன் படங்களான ஸ்னோ ஒயிட் மற்றும் பாம்பி போன்ற படங்களை ஆய்வு செய்து, மனிதப் பண்புகளை விலங்குகளுக்குள் கொண்டு வரும் வித்தையைக் கற்றுக்கொண்டார். 

படத்தில் வரும்  எழுபதுக்கும் மேற்பட்ட இந்திய விலங்கினங்களை நிஜ அளவை விடவும் நூற்றி ஐம்பது சதவீதம் பெரியதாகக் கணினியில் வடிவமைத்து, திரையில் ஒரு பிரம்மாண்டமான ஆபத்தான சாகச உணர்வை உருவாக்கினர்.

மனித கதாபாத்திரமாக நடித்த சிறுவன் நீல் சேத்தி, இல்லாத விலங்குகளிடம் பேசுவது போலவும் வெற்றுத் தரையில் ஓடுவது போலவும் நடிக்க வேண்டிய சவால் இருந்தது.

 அவனது நடிப்பு இயல்பாக வர வேண்டும் என்பதற்காக ஜிம் ஹென்சன் நிறுவனத்தின் பொம்மலாட்டக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, விலங்குகளின் வடிவத்திலான தற்காலிகப் பொம்மைகளை சிறுவனுக்கு முன்னால் அசைத்து நடிக்க உதவினர். 

சில காட்சிகளில் இயக்குனர் ஜான் ஃபேவ்ரோவே நேரில் அந்தப் பொம்மைகளை இயக்கிச் சிறுவனுடன் உரையாடினார்.

விலங்குகளுக்குக் குரல் கொடுத்த முன்னணி நடிகர்களின் நிஜ முக பாவனைகளும் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டன.

 உதாரணமாக, கரடி பாலுவின் கதாபாத்திரத்திற்குப் பில் முர்ரே குரல் கொடுக்கும்போது அவரது புருவங்களை உயர்த்தும் பழக்கத்தையும், கிங் லூயி கதாபாத்திரத்திற்குப் பின்னால் இருக்கும் கிறிஸ்டோபர் வாக்கனின் முகச் சுருக்கங்களையும் அனிமேஷன் கலைஞர்கள் அப்படியே விலங்குகளின் முகத்தில் கொண்டு வந்தனர்.

படத்தின் இசை அமைப்பிலும் ஒரு வியப்பூட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இயக்குனர் ஃபாண்டா சவுண்ட் எனப்படும் ஒலித்தொழில்நுட்ப முறையை டால்பி அட்மாஸ் மூலம் மறுஉருவாக்கம் செய்தார். 

இதன் காரணமாகத் திரையரங்கில் படம் பார்க்கும்போது, இசைக்கருவிகளின் ஒலிகள் ஒட்டுமொத்த அரங்கையும் சுற்றி நகர்வது போன்ற அலாதியான அனுபவம் பார்வையாளர்களுக்குக் கிடைத்தது. 

கிங் லூயி என்ற குரங்கு போன்ற பிரம்மாண்ட கதாபாத்திரத்தை வடிவமைத்தபோது, அது இந்தியாவில் வாழாத ஒராங்குட்டான் வகையைச் சேர்ந்தது என்ற உண்மையை உணர்ந்து, இந்திய வரலாற்றோடு பொருந்திப்போகும் அழிந்துபோன கிகாந்தோபிதேகஸ் என்ற வரலாற்றுக்கு முந்தைய காலத்து மாபெரும் குரங்கினமாக அதனை மாற்றி அமைத்ததும் திரைக்குப் பின்னால் நடந்த ஒரு சுவையான வரலாற்றுத் திருத்தமாகும்.

படத்தில் வரும் அடர்ந்த இந்தியக் காடுகளின் பின்னணியை அப்படியே டிஜிட்டல் திரையில் கொண்டு வருவதற்காக, இந்தியாவெங்கும் உள்ள சுமார் ஆயிரம் தொலைதூரக் காட்டுப் பகுதிகள் அனிமேஷன் குழுவினரால் மிக நுணுக்கமாகப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 

மரங்களின் இலைகள், பாறைகளின் அமைப்புகள் மற்றும் மண்ணின் நிறம் வரை அனைத்தையும் சேகரித்து, கணினி மென்பொருட்கள் மூலம் ஒரு அசல் இந்தியக் காட்டுச் சூழலைத் தத்ரூபமாக மறுவடிவமைப்பு செய்தனர்.

விலங்குகளின் உடலமைப்பை உருவாக்குவதில் அனிமேஷன் துறையின் உச்சக்கட்டத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. 

குறிப்பாக, விலங்குகளின் தோலுக்குக் கீழே இருக்கும் தசை நார்களின் அசைவுகளையும், அவை ஓடும்போது ஏற்படும் சதை அதிர்வுகளையும் துல்லியமாகக் காட்டுவதற்காக மூவிங் பிக்சர் கம்பெனி என்ற நிறுவனம் ஒரு பிரத்யேகப் புதிய மென்பொருளையே உருவாக்கியது. 

இதன் மூலமே சிங்கம், புலி போன்ற விலங்குகளின் ஒவ்வொரு அடியும் நிஜ விலங்குகளைப் போன்றே திரையில் அதிர்வை ஏற்படுத்தின.

நடிகர்களின் தேர்விலும், கதாபாத்திரங்களின் பாலின மாற்றத்திலும் இயக்குனர் சில துணிச்சலான முடிவுகளை எடுத்தார். 

முந்தைய 1967 ஆம் ஆண்டு அனிமேஷன் படத்தில் ஆண் கதாபாத்திரமாக இருந்த 'கா' என்ற மாபெரும் மலைப்பாம்பின் பாத்திரத்தை, இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரமாக மாற்றினார்.

 பழைய படம் முற்றிலும் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்திருப்பதாக உணர்ந்த இயக்குனர், அதற்கு ஒரு சமநிலையைக் கொண்டு வரவும், அதே நேரத்தில் மௌக்லியின் கடந்த காலத்தைக் காட்டும் ஒரு மர்மமான கண்ணாடியாக அந்தப் பாம்பின் பாத்திரத்தை மாற்றவும் ஸ்கார்லெட் ஜோஹான்சனை அந்தப் பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்தார்.

படத்தின் இறுதிப் பகுதியில் வரும் புத்தகக் காட்சிக்கு ஒரு அலாதியான அனிமேஷன் பாரம்பரியப் பின்னணி உள்ளது. பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோவின் அப்போதைய முதன்மை அதிகாரி ஜான் லாசிட்டரின் ஆலோசனையின் பேரில், பழைய 1967 ஆம் ஆண்டு படத்தின் ஆரம்பத்தில் வரும் அதே அசல் நிஜப் புத்தகத்தை, இந்தத் திரைப்படத்தின் இறுதிப் பெயர்ப் பட்டியலில் கொண்டு வந்து டிஸ்னி ரசிகர்களுக்கு ஒரு பெரிய நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தனர்.

 ஆரம்பத்தில் வரும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சின்னமான கோட்டையை, நவீன டிஜிட்டல் முறையில் காட்டாமல், 1960களின் பாரம்பரிய அனிமேஷன் பாணியில் கைகளால் வரையப்பட்ட மல்டிபிளேன் கேமரா தொழில்நுட்பத் தோற்றத்தில் உருவாக்கியதும் ரசிகர்களைக் கடந்த காலத்திற்குக் கூட்டிச் சென்ற ஒரு சுவாரஸ்யமான கலைப் படைப்பாகும்.

 குறிப்பாக, படத்தின் ஹிந்திப் பதிப்பிற்காக இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இர்ஃபான் கான், பிரியங்கா சோப்ரா, ஓம் பூரி மற்றும் நானா படேகர் ஆகியோர் ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர். 

இதில் ஒரு வியப்பூட்டும் விஷயம் , 1990களில் இந்தியாவில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜங்கிள் புக் ஷோனன் மௌக்லி' என்ற அனிமேஷன் தொடரில் ஷேர்கான் கதாபாத்திரத்திற்குப் பேசிய அதே நானா படேகரே, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நவீனப் படத்திலும் அதே பாத்திரத்திற்கு மீண்டும் குரல் கொடுத்து ரசிகர்களைக் கடந்த கால நினைவுகளில் மூழ்கடித்தார்.

இந்தியப் பதிப்பிற்கான விளம்பர பிரச்சாரத்திலும் ஒரு உன்னதமான இசை மறு உருவாக்கம் நிகழ்ந்தது. தொண்ணூறுகளின் இந்தியக் குழந்தைகள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த "ஜங்கிள் ஜங்கிள் பாத் சலி ஹை" என்ற புகழ்பெற்ற பாடலை, அதே அசல் பாடலின் இசையமைப்பாளர்களான விஷால் பரத்வாஜ் மற்றும் பாடலாசிரியர் குல்சார் ஆகியோரைக் கொண்டு டிஸ்னி நிறுவனம் மீண்டும் புத்தம் புதிய வடிவில் தற்காலத்திற்கு ஏற்பப் பதிவு செய்தது. 

இந்த ஒற்றைப் பாடல் இந்திய ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

படத்தின் இசையமைப்பில் பழம்பெரும் பாடலாசிரியர் ரிச்சர்ட் எம். ஷெர்மன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பங்களித்தார். 

1967 ஆம் ஆண்டின் அசல் படத்திற்குத் தனது சகோதரருடன் இணைந்து பாடல்களை எழுதிய அவர், இந்த நவீனப் படத்தில் கிங் லூயி கதாபாத்திரம் பாடும் "ஐ வான்'னா பி லைக் யூ" என்ற உலகப் புகழ்பெற்ற பாடலின் வரிகளை, கிறிஸ்டோபர் வாக்கனின் தனித்துவமான பேசும் பாணிக்கும் அவரது வயதிற்கும் ஏற்றவாறு சில வரிகளை மாற்றி அமைத்துக் கொடுத்தார். 

அதேபோல், இறுதிப் பெயர்ப் பட்டியலில் ஒலிக்கும் "ட்ரஸ்ட் இன் மீ" என்ற பாடலை பிரபல இசைத் தயாரிப்பாளர் மார்க் ரான்சன் முற்றிலும் புதிய பாணியில் ஸ்கார்லெட் ஜோஹான்சனின் குரலில் தயாரித்திருந்தார்.

நடிகர் கேரி ஷாண்ட்லிங் இப்படத்தில் இக்கி என்ற முள்ளம்பன்றி கதாபாத்திரத்திற்குத் தனது குரலை வழங்கியிருந்தார்.

 இதுவே அவரது வாழ்நாளின் இறுதிப் பங்களிப்பாக அமைந்தது; துரதிர்ஷ்டவசமாகப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே அவர் இயற்கை எய்தியதால், அவரது குரல் பதிவு இப்படத்தின் மிக உணர்வுபூர்வமான ஒரு நினைவாக மாறியது. 

1967 அசல் படத்தில் சேர்க்கப்படாமல் டிஸ்னியால் நிராகரிக்கப்பட்ட 'ராக்கி' என்ற காண்டாமிருகக் கதாபாத்திரத்தின் பழைய வரைபடங்களை மீட்டெடுத்து, இந்த நவீனப் படத்தில் ரஸ்ஸல் பீட்டர்ஸின் குரலில் ஒரு புதிய கதாபாத்திரமாக உலவ விட்டதும் டிஸ்னி அனிமேஷன் வரலாற்றின் சுவடுகளைக் கௌரவிப்பதாக அமைந்தது.

==============================
படத்தின் கதை:-

1890களில் இந்தியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மௌக்லி (நீல் சேத்தி) என்ற ஆதரவற்ற மனித சிறுவன் அகிலா (ஜியான்கார்லோ எஸ்போசிட்டோ) என்பவரின் தலைமையிலான ஓநாய் கூட்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகிறான். 

ஒரு நாள், கடும் கோடைக் காலத்தின் போது காட்டின் நீர்நிலைகள் வற்றிப்போக, காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் எஞ்சியிருக்கும் சிறிதளவு நீரைப் பருகுவதற்காக 'அமைதிப் பாறை' என்ற இடத்தில் ஒன்றுகூடுகின்றன.

 விலங்குகளுக்கு இடையே இருக்கும் பழங்கால சமாதான உடன்படிக்கையின்படி எந்த விலங்கும் அங்கே வேட்டையாடக் கூடாது என்ற விதிமுறை இருந்தாலும், அந்த இடத்திற்கு திடீரென வரும் கொடூரமான பெங்கால் புலியான ஷேர்கான் (இத்ரிஸ் எல்பா), மௌக்லியின் மணம் வீசுவதைக் கண்டு அவனைக் கொல்லப் போவதாக எச்சரிக்கிறது. 

தங்களின் வறட்சிக் காலம் முடியும் வரை மட்டுமே இந்தச் சமாதானம் நீடிக்கும் என்றும், கோடை முடிந்ததும் மனித சிறுவனான மௌக்லியைத் தனக்கு இறையாக்க வேண்டும் என்றும் கூறிவிட்டுச் செல்கிறது.

 கோடைக் காலம் முடிந்து காட்டில் மழை பொழியத் தொடங்கியதும், ஓநாய் கூட்டம் மௌக்லியைத் தங்களுடனேயே வைத்திருப்பதா அல்லது காட்டிற்கு வெளியே அனுப்புவதா என்று தீவிரமாக விவாதிக்கிறது. 

தனது ஓநாய் குடும்பத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மௌக்லி தானே காட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறான். 

அவனைப் பத்திரமாக அருகில் உள்ள மனிதர்கள் வாழும் கிராமத்திற்கு அழைத்துச் செல்லக் கருஞ்சிறுத்தையான பகீரா (பென் கிங்ஸ்லி) முன்வந்து அவனுடன் பயணத்தைத் தொடங்குகிறது.

மனித கிராமத்தை நோக்கி அவர்கள் செல்லும் வழியில், எதிர்பாராத விதமாக ஷேர்கான் புலி அவர்கள் மீது பாய்ந்து பதுங்கித் தாக்குகிறது. 

பகீரா புலியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க, மௌக்லி அங்கிருந்து தப்பியோடுகிறான். காட்டில் புலியின் பயத்தால் மிரண்டு ஓடும் காட்டெருமைகளின் பிரம்மாண்டமான கூட்டத்திற்கு நடுவே மறைந்து கொண்டு, மௌக்லி புலியின் பிடியில் இருந்து தந்திரமாகத் தப்பிக்கிறான். 

அவ்வாறு தப்பிச் செல்லும் மௌக்லி, காட்டின் இருண்ட மற்றும் மர்மமான பகுதியில் கா (ஸ்கார்லெட் ஜோஹான்சன்) என்ற கவர்ச்சியான இந்திய மலைப்பாம்பைச் சந்திக்கிறான்.

 அந்தப் பாம்பு தனது கண்களால் மௌக்லியை  (ஹிப்னாடிசம்) செய்து தன் வசப்படுத்துகிறது. அந்த மாயையான சூழலில், மௌக்லி தன் கடந்த காலத்தின் காட்சிகளைக் காண்கிறான்.

 அதில், அவனது சிறுவயதில் அவனது உண்மையான தந்தை ஒரு குகையில் தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு ஷேர்கான் புலியிடமிருந்து மௌக்லியைக் காப்பாற்றப் போராடுவதையும், அந்தப் புலி அவனது தந்தையைக் கொல்வதையும் காண்கிறான். 

மேலும், காடுகள் மற்றும் விலங்குகளைத் தொட்டாலே சாம்பலாக்கும் 'சிவப்பு மலர்' எனப்படும் நெருப்பின் அழிவு சக்தியைப் பற்றியும், மனிதர்கள் மட்டுமே அதனை உருவாக்க முடியும் என்பதையும் அந்தப் பாம்பு மௌக்லிக்கு விளக்குகிறது. 

பேசி முடித்த கையோடு மௌக்லியை விழுங்குவதற்காக அது நெருங்கும்போது, பாலு (பில் முர்ரே) என்ற ஒரு சோம்பேறி கரடி திடீரெனப் பாய்ந்து மௌக்லியை அந்தப் பாம்பின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறது.

தன்னைக் காப்பாற்றியதற்காக கரடி பாலுவுக்குக் கைம்மாறு செய்ய நினைக்கும் மௌக்லி, உயரமான பாறைகளில் இருக்கும் தேன்கூடுகளில் இருந்து பாலுவிற்காகத் தேனை எடுத்துக் கொடுக்கிறான்.

 மௌக்லியின் இந்தத் தந்திரமான உபகரணங்களைப் பயன்படுத்தும் திறமையைக் கண்ட பாலு, காட்டில் பனிக்காலம் வரும் வரை தன்னோடு தங்கியிருந்து தேன் எடுத்துத் தருமாறு மௌக்லியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறது.

 இதற்கிடையில், மௌக்லி காட்டை விட்டுச் சென்றதை அறிந்த ஷேர்கான் புலி, ஓநாய்களின் தலைவனான அகிலாவைக் கொன்று பாறையிலிருந்து கீழே தள்ளிவிடுகிறது. 

மேலும், மௌக்லியைத் தேடி வரவழைப்பதற்காக ஒட்டுமொத்த ஓநாய் கூட்டத்தையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து மிரட்டி வைக்கிறது.

 மௌக்லியைத் தேடி வரும் பகீரா, அவன் மனித கிராமத்திற்குச் செல்லாமல் கரடி பாலுவுடன் சேர்ந்து காட்டில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு கடும் கோபமடைகிறது. 

ஆனால், பாலு பகீராவைச் சமாதானப்படுத்தி அன்றிரவு அங்கேயே தங்கி உறங்க வைக்கிறது. அன்று இரவு, காட்டு யானைகளின் கூட்டம் ஒன்று பள்ளத்தில் விழுந்த தங்களின் குட்டியை மீட்க முடியாமல் தவிப்பதைக் காணும் மௌக்லி, தான் தயாரித்த கொடிகளின் உதவியால் அந்த யானைக்குட்டியைக் காப்பாற்றுகிறான்.

 இதைக் காணும் பாலு, மௌக்லியை ஷேர்கான் குறிவைப்பதையும் அவனது உயிருக்கு இருக்கும் ஆபத்தையும் உணர்ந்து, அவனைக் காட்டில் வைத்திருக்க விரும்பாமல், மனமே இல்லாமல் அவனைக் கடிந்து பேசி மனித கிராமத்திற்குப் போகுமாறு விரட்டுகிறது.

பாலுவின் பேச்சால் மனமுடைந்து செல்லும் மௌக்லியை, காட்டில் வாழும் 'பந்தர்-லோக்' எனப்படும் குரங்குகளின் கூட்டமும் ஹூலாக் கிப்பன்களும் திடீரெனக் கடத்திச் செல்கின்றன. 

அவை அவனை ஒரு பழங்கால இடிந்த அரண்மனையில் வசிக்கும் தங்களின் தலைவனான கிங் லூயி (கிறிஸ்டோபர் வாக்கன்) என்ற பிரம்மாண்டமான கிகாந்தோபிதேகஸ் குரங்கிடம் கொண்டு சேர்க்கின்றன.

 மனிதர்கள் அனைவருக்கும் நெருப்பை உருவாக்கும் ரகசியம் தெரியும் என்று நம்பும் கிங் லூயி, மௌக்லியிடம் அந்த நெருப்பைத் தனக்குத் தரும்படி கேட்கிறது. 

அதற்குப் பதிலாக ஷேர்கான் புலியிடமிருந்து அவனுக்கு முழுப் பாதுகாப்புத் தருவதாகப் பேரம் பேசுகிறது. 

மௌக்லியை மீட்க அங்கு வரும் பாலு குரங்கின் கவனத்தைத் திசைதிருப்ப, பகீரா மௌக்லியை ரகசியமாக வெளியேற்ற முயல்கிறது.

 ஆனால், இவர்களின் தந்திரம் கண்டுபிடிக்கப்பட, கிங் லூயி மௌக்லியைத் துரத்துகிறது. அந்த இடிபாடுகளுக்குள் மௌக்லியைத் துரத்தும் போது, அவனது வளர்ப்புத் தந்தை அகிலாவை ஷேர்கான் புலி கொன்றுவிட்ட செய்தியை லூயி மௌக்லியிடம் உளறிவிடுகிறது.

 லூயியின் கடுமையான ஆவேசத் தாக்குதலால் அந்தப் பழங்காலக் கோட்டை அதன் மேல் விழுந்து நொறுங்குகிறது. அகிலா இறந்த செய்தியைத் தன்னிடம் மறைத்ததற்காகப் பகீரா மற்றும் பாலு மீது மிகுந்த கோபமடையும் மௌக்லி, ஷேர்கானை நேரடியாகப் பழிவாங்கத் துணிகிறான்.

மௌக்லி நேராக மனிதர்கள் வாழும் கிராமத்திற்குள் நுழைந்து, அங்க எரியும் ஒரு தீப்பந்தத்தைத் திருடிக்கொண்டு காட்டை நோக்கி ஓடுகிறான்.

 அவன் ஓடும் வழியில் தீப்பொறிகள் விழுந்து, காடு முழுவதும் காட்டுத்தீ பரவத் தொடங்குகிறது. 

எரியும் தீப்பந்தத்துடன் காட்டின் நடுவே ஓநாய்கள் மற்றும் விலங்குகளின் முன்னால் வந்து நிற்கும் மௌக்லியைப் பார்த்து, அவன்தான் காட்டுக்குத் தீ வைத்து விலங்குகளின் எதிரியாக மாறிவிட்டான் என்று ஷேர்கான் புலி குற்றம் சாட்டுகிறது. 

விலங்குகள் தன் கையில் இருக்கும் நெருப்பைக் கண்டு பயப்படுவதைக் கவனிக்கும் மௌக்லி, தான் காட்டின் விலங்குதான் என்பதை நிரூபிக்கத் தீப்பந்தத்தை ஆற்றில் தூக்கி எறிகிறான்.

 தீப்பந்தம் அணைந்த அடுத்த நொடி, ஷேர்கான் மௌக்லியை நோக்கிக் பாய்கிறது. ஆனால், அவனைக் காப்பாற்ற பாலு, பகீரா மற்றும் ஓநாய் தாய் ரக்ஷா (லுபிடா நியாங்கோ) தலைமையிலான ஓநாய்கள் புலியை எதிர்த்துப் போரிடுகின்றன. 

அவை புலிக்கு முட்டுக்கட்டைப் போட, அந்த இடைவெளியில் மௌக்லி எரியும் காட்டுக்குள் ஓடித் தப்பிக்கிறான்.
காட்டுக்குள் மௌக்லியைத் துரத்திச் செல்லும் ஷேர்கான், மற்ற அனைத்து விலங்குகளையும் தனது பலத்தால் வீழ்த்திவிட்டு மௌக்லியை நெருங்குகிறது.

 மௌக்லி திட்டமிட்டுப் புலியை ஒரு காய்ந்த, பட்டுப்போன மரத்தின் உச்சிக்கு வரவழைக்கிறான். 

மரத்தின் மெல்லிய கிளையின் நுனிக்குச் சென்று, புலியைக் கோபமூட்டும் வகையில் வசைபாடுகிறான். கடும் ஆத்திரமடைந்த ஷேர்கான் புலி, மௌக்லி இருக்கும் கிளையின் மீது பாய்கிறது. 

மௌக்லி தான் தயாரித்த கொடியைப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குத் தாவுகிறான். ஆனால், புலியின் மாபெரும் எடையைத் தாங்க முடியாமல் அந்த மரக்கிளை ஒடிந்து விழ, ஷேர்கான் நேராகக் கீழே எரியும் காட்டுத்தீக்குள் விழுந்து மடிகிறது. 

காடு அழிவதைத் தடுக்க, மௌக்லி தான் முன்பு காப்பாற்றிய காட்டு யானைகளின் கூட்டத்திற்குச் சைகை மூலம் கட்டளையிடுகிறான்.

 யானைகள் ஆற்றின் திசையைத் திருப்பிவிட்டு காட்டுத்தீயை முழுமையாக அணைக்கின்றன. இதன் பிறகு, மௌக்லி மனித கிராமத்திற்குச் செல்லாமல் காடே தனது உண்மையான வீடு என்று முடிவு செய்கிறான். 

தனது மனிதத்துவத் தந்திரங்களையும் உபகரணங்களையும் காட்டின் நன்மைக்காகப் பயன்படுத்தத் தொடங்குகிறான். 

இறுதியாக, ஓநாய் கூட்டத்தின் மத்தியிலும், தனது காப்பாளர்களான பாலு மற்றும் பகீராவின் அன்பான அரவணைப்பிலும் மௌக்லி காட்டின் ஒரு பகுதியாக மகிழ்ச்சியோடு வாழ்கிறான்.

இத்திரைப்படம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும், நவீன சமூகத்திற்கும் மிக முக்கியமான மூன்று வாழ்வியல் செய்திகளை மிக ஆழமாக உணர்த்துகிறது.

இத்திரைப்படம் மனிதர்களாகிய நமக்குக் கொடுக்கும் மிக முக்கிய செய்தி, மனிதன் இயற்கையை அடக்கி ஆள நினைப்பதை விட்டுவிட்டு, அதனோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். 

மனித குலத்தின் பேராசையையும், காடுகளை அழிக்கும் நவீனத் தொழில்நுட்பங்களையும் குறிக்கும் குறியீடாகவே இதில் 'நெருப்பு'  காட்டப்படுகிறது. மௌக்லி இறுதியில் அந்த நெருப்பை ஆற்றில் எறிந்துவிட்டு, காட்டின் இயற்கைச் சமநிலையைக் காக்க யானைகளின் உதவியோடு ஆற்றைத் திருப்பி நெருப்பை அணைக்கிறான்.

 மனிதன் நினைத்தால் இயற்கையை அழிக்கவும் முடியும், அதே மனிதன் நினைத்தால் தன் புத்திசாலித்தனத்தால் இயற்கையைக் காக்கவும் முடியும் என்ற மிக உன்னதமான சுற்றுச்சூழல் செய்தியை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
காட்டில் வாழும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் 'காட்டின் விதிமுறைகளுக்கு' கட்டுப்பட்டு வாழ்கின்றன.

 வறட்சிக் காலத்தில் 'அமைதி உடன்படிக்கை' மூலம் தங்களின் பசி, பகைமைகளை மறந்து ஒரே நீர்நிலையில் நீர் பருகுவது, சமூகத்தில் நாம் எப்படி ஒருவருக்கொருவர் மதிப்பளித்து, சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதியாக வாழ வேண்டும் என்ற சமூக ஒழுக்கத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

சமூகம் உங்களை எப்படி மாற்ற நினைத்தாலும், உங்களுக்கே உரிய தனித்துவமான திறமைகளை நீங்கள் கைவிடக் கூடாது என்ற செய்தியை மௌக்லி கதாபாத்திரம் உணர்த்துகிறது. 

காட்டின் விதிகள் மற்றும் மற்ற விலங்குகளின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மௌக்லி தன்னை ஓநாயாக மாற்றிக்கொள்ள முயன்று தோற்கிறான். 

ஆனால், அவனது மனித சிந்தனையும், கருவிகளை உருவாக்கும் தந்திரமுமே அவனது தனித்துவம் என்பதை உணரும்போது அவன் பலசாலி ஆகிறான். நம்மிடம் இருக்கும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட தனித்துவமான திறமைகளை நாம் பலவீனமாகக் கருதாமல், அதைச் சரியான வழியில் பயன்படுத்தினால் எந்தவொரு பெரிய சவாலையும் எதிர்கொள்ளலாம் என்பதே இப்படம் நமக்குத் தரும் அழுத்தமான செய்தியாகும்.

#கீதப்ப்ரியன்ஆஸ்கர்


Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) ஆஸ்கர் (89) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)