
எதிர்பார்க்காத திருப்பங்கள் துரோகம் , வக்கிரம், குரூரம், குருதி, வன்முறை இவர்களின் எல்லா படைப்புகளினூடே நீக்கமற நிறைந்திருக்கிறது கூடவே நீதி போதனையும். என்னவோ இவர்கள் செய்யும் நீதி போதனை மட்டும் அனைவருக்கும் பிடிக்கவே செய்கிறது, இந்த படமும் கூடத்தான்.
இவர்களின் காமிரா ஜாலங்கள் ஒவ்வொன்றும் கவிதைகள் என சொல்லுவேன். எல்லாமே ஐலெவல் க்ளோஸ் அப் ஷாட்டுகளாய் வைத்து நடிகரின் முகபாவத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் , இது எப்போதுமே எனக்கு வியப்பை வர வழைப்பவை. இந்த படத்தில் கருப்பு வெள்ளையில் வித்தை காட்டுகின்றனர்.அதில் என்ன ஒரு விந்தை என்றால் இவர்கள் பயன்படுத்திய ஒளியுத்தியும் உபகரணங்களும் ஐம்பதுகளில் பயன்படுத்தியவையே,ஆகவே நமக்கு இது 1950களில் எடுத்த படம் போலவே எண்ண வைக்கிறது,இறுதியில் நமக்கு கிடைப்பது மிக அற்புதமான நியோ நாய்ர் வகை ப்ளாக் ஹ்யூமர் விருந்து.படம் பார்த்தவுடன் கருப்பு வெள்ளை மீது ஒருவருக்கு காதல் வந்துவிடும்.
படத்தின் கதை:-
எட் க்ரேனுக்கும் இந்த கள்ளக் காதல் விவகாரம் தெரியாமல் இல்லை, இவரது குறியெல்லாம் எப்படியாவது குறுக்குவழியில் பணக்காரனாவதிலேயே உள்ளது. போதாத குறைக்கு ஒருநாள் இவனிடம் வந்து முடிவெட்டிக்கொள்ள வந்த டோலிவர் என்னும் பிஸினெஸ்மேன் புதிதான டெக்னாலஜியான நீரில்லாமல் சலவை செய்யும் முரையான ட்ரை க்ளீனிங் பற்றி சொல்லிவிட்டு,பார்ட்னராக சேர்ந்தால் சொற்ப காலத்திலேயே பணக்காரனாக முடியும் ,அதற்கு 10000$ செலுத்தி பார்ட்னராக ஆள் இருந்தால் சொல்லு, எனச் சொல்லி அகல,எட் மனக்கோட்டை கட்டி,சதித்திட்டம் தீட்டுகிறார்.
தன் மனைவியின் கள்ளக்காதலனும் அவள் முதலாளியுமான பிக் டேவை டெலிபோனில் மிரட்டி உன்னுடைய அக்கவுண்டண்டுடனான கள்ளக்காதல் உறவை உன் மில்லியனர் மனைவியிடம் சொன்னால் நிமிடத்தில் நீ வீதிக்கு வந்துவிடுவாய், அது குறித்த நிறைய ஆதாரங்கள் வைத்துள்ளேன் என மிரட்ட, பிக் டேவ் பயந்து எட் க்ரேனை அழைத்து இது போல என்னை ஒருவன் பிளாக் மெயில் செய்கிறான், என கள்ளக்காதல் பிரச்சனையை சொல்லாமல் , ஆலோசனை கேட்க, எட் க்ரேன் அவன் ஆதாரத்துடன் தான் மிரட்டுகிறான்,பணத்தை கொடுத்துவிடு என சொல்கிறார்.
அங்கு சென்றவுடன் இவனிடம் டோல்லிவர் என்னும் ஒருவன் என்னிடம் இதே கள்ளக்காதல் விவகாரத்தை சொல்லி 10000$ பணம் கேட்டு மிரட்டினான் என்றும், அவனை முறையாக விசாரித்ததில் முன்பு போன் செய்து மிரட்டி பணம் பெற்றவன் யார்? என தெரிந்துவிட்டது என்கிறான். இவர் முகத்தில் ஈயாடவில்லை, பயத்தில் வியர்க்க,
இவரை பிக் டேவ் பலம் கொண்டமட்டும் கழுத்தை நெரிக்கிறான். கண்ணாடி ஜன்னலில் இவர் தலையை வைத்து அழுத்தி கழுத்தை நெரிக்க கண்ணாடியே நொறுங்குகிறது, இவர் சுதாரித்து அருகே மேசையில் இருந்த சுருட்டு நறுக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு பிக் டேவின் கழுத்து நரம்பில் மின்னல் வேகத்தில் சொருகி வெளியே இழுக்க, பிக் டேவுக்கு பூச்சி கடித்தது போல இருந்து பின்னர் குருதி பிரவாகமெடுத்து பொங்குகிறது. பிக் டேவ் இறந்ததை உறுதி செய்துகொண்டு கைரேகையை அழித்துவிட்டு அமைதியாக வீடு வர மனைவி டோரிஸ் அன்று காலை இவர்கள் சென்று வந்த திருமணத்தில் உட்கொண்ட மதுவினால் ஏற்பட்ட உச்சக்கட்ட போதையில் தூங்கிகொண்டிருக்க.
பொழுதுவிடிந்ததும்,இவர் பிழைப்பை பார்க்க கிளம்பி விட்டார்,பணம் போன யோசனையில் மிகவும் சோகமாய் முடி வெட்டிக்கொண்டிருக்க, அங்கு வந்த டிடெக்டிவ்கள் இருவர்,இவரை தனியே அழைத்துப்போய் இவர் மனைவி தன் தன் முதலாளியை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விசாரனைக்காவலில் வைக்கப்பட்டுள்ளாள் என்றும், அவளுக்கு நல்ல வழக்கறிஞரை அமர்த்தி வழக்காடுமாறும் சொல்லிவிட்டு அகல, இவருக்கு பணம் போன சோகத்தோடு குற்ற உணர்வும் மனைவியின் மீது பரிதாபமும் சேர்ந்துகொள்ள, சிறையில் சென்று மனைவியை பார்த்து அவளின் மேக்கப் சாதனங்கள் ,சிகரெட் மற்றும் மாற்று உடைகளை தருகிறார்.
அன்று இரவே இறந்து போன பிக் டேவின் மனைவி இவனை சந்திக்க வருகிறாள், தன் கணவனின் கொலையை இவரின் மனைவி டோர்ரீஸ் செய்திருக்க முடியாது என்கிறாள்,தன் கணவருக்குக்கும் UFO (வேற்றுகிரக வாசிகளும் பறக்கும் தட்டுகளும்) வுக்கும் தொடர்பு இருக்கிறது அவர்கள் தான் இவரை ஏதொ செய்திருக்கின்றனர், என உறுதியாக சொல்லுகிறாள், இதை தானே வந்து சாட்சியாகவும் சொல்லப்போவதாக சொல்லுகிறாள். இவருக்கு கொலையை யாராவது ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி தானே?
நகரிலேயே மிகப்பிரபலமான வழக்கறிஞர் ஃப்ரெட்டி ரீடன்ச்னீடரை தன் நண்பர் அறிவுறையின் படி அணுக, அவரின் முதற்கட்ட ஃபீஸ் அட்வான்சுக்கும்,வந்து போகும்,தங்கும் ஸ்டார் ஹோட்டல் பில்லுக்கும் ஏகத்துக்கும் பணம் தேவைப்பட , தன் மைத்துனன் ஃப்ரான்க் இப்போது இருக்கும் சொந்த கட்டிடத்தையும் சலூனையும் வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி கட்ட வழக்கு சூடு பிடிக்கிறது.
இவரின் மனைவி குற்றம் செய்யாததால் தைரியமாக இருக்க, வழக்கறிஞர் ஃப்ரெட்டி இறந்து போன பிக் டேவின் பூர்வீகத்தை துப்பறிய ப்ரைவேட் டிடக்டிவை அமர்த்துகிறார், அவன் ஒரே இரவில் அவன் வரலாற்றையே கொண்டுவருகிறான்,அதில் பிக் டேவ் சண்டைக்கு அலைபவன் என்றும், ஹோமோசெக்சுவல் என்றும், முன்பு அமெரிக்க ராணுவத்தில் இருந்த போதே அடிக்கடி வம்பு தும்புகளில் மாட்டி பெயர் கெட்டு , கட்டாய ஓய்வு பெற்றவன் என்றும், அவன் முன்பு எல்லோரிடமும் பெருமையாக சொன்னது போல போரில் சாகசங்கள் எதுவும் செய்தவனில்லை என்றும் கண்டறிந்து வந்து சொல்கிறான். இதை தெரிந்து கொண்ட எவனோ ஒருவன் பிக் டேவை மிரட்டியதால் அவர்கள் இருவருக்கும் கைகலப்பு ஆகி பிக் டேவ் கொலையாகி இருக்கலாம், என்றும் வழக்கை ஜோடித்து பயணிக்க திட்டமிடுகிறார் வழக்கறிஞர்
வழக்கறிஞர் தங்கும் காஸ்ட்லி ஸ்டார் ஹோட்டல் அறைக்கும் , சாப்பிடும் காஸ்ட்லி குஸின் உணவுக்கும் தகுந்த பலன் இருக்கும் என்றே எட் க்ரேனும் ஃப்ரான்கும் நினைக்க, எதிர்பார்த்ததைவிட வழக்கு மெதுவாகவும், அரசு தரப்பு சாட்சி விசாரணைகள் பலமாகவும் இருக்கிறது. இதனால் மனம் நொந்த மைத்துனன் ஃப்ரான்க் மதுவுக்கு அடிமையாகிறான். சலூனுக்கே வருவதில்லை, இருந்தாலும் எட் க்ரேனுக்கு அதில் எந்த வித மன வருத்தமும் இல்லை, வங்கிக்கு மாத வட்டியை இவர் உதவிக்கு இன்னொருவனை அமர்த்திக்கொண்டு வேலை பார்த்து சரியாக கட்டி வருகின்றார்,
மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியாக மனைவி சிறைக்கு சென்றும் இவருக்கு அதிர்ஷ்டம் அடித்து சலூனுக்கு முதலாளியும் ஆகி விட்டாரே! அது தான் மகிழ்ச்சிக்கு முதல் காரணம் . இப்போது குஷி மூடில் வெறும் நாற்பதுகளில் இருக்கும் நம் எட் க்ரேனுக்கு மாலை வேளைகள் கழிக்க வசதியாக நண்பரின் வீடும் அவரின் அழகிய பதின்ம வயது மகள் பிர்டியின் (ஸ்கார்லெட் ஜோஹன்ஸன்) பியானோ இசையும் இலவசமாய் கிடைக்க, மனிதர் செமையாக ரிலாக்ஸ் செய்கிறார்.
ஒருவழியாக வழக்கு விசாரணை வந்தேவிட, அனைவரும் ஆஜர், இன்னும் அவன் மனைவி மட்டும் வரவில்லை, கோர்ட்டில் மைத்துனன் ஃப்ரான்க்கிற்கோ கோபம் பொத்துக்கொண்டு வருகிறது, காஸ்ட்லி வழக்கறிஞர் வாதாடுவதைக் காண வந்தவன் இன்னும் வழக்கு ஆரம்பிக்காமல் இருக்க கோபமாக கத்துகிறான். அப்போது நீதிபதியும் வந்துவிட அவரது காதில் டிடக்டிவ்கள் ஏதோ கிசுகிசுக்க, நீதிபதி வழக்கறிஞரின் காதில் கிசுகிசுக்க, காஸ்ட்லி வழக்கறிஞர் கோபமாகி கேஸ் பேப்பர்களை கிழித்து போடுகிறார்,
தன் சர்வீஸில் இது போல எப்போதும் சந்தித்ததில்லை என கோபமாக வெளியேற. பின்னர் இவரின் மனைவி விசாரணைக்கு வர எத்தனிக்கையில் எதற்கோ பயந்து தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தது தெரியவருகிறது. இப்போது வெளியே இவருக்கு துயர முகமாக இருந்தாலும், உள்ளே இன்முகம் தான். இன்னும் சில நாட்களில் மைத்துனனும் குடித்தே பரலோகம் போய்விடுவான், வங்கி கடனையும் அடைத்து விட்டால் இந்த சொத்தும் தனதே என மனப்பால் குடிக்கிறார்.
அன்று வழக்கம் போல முடி திருத்திக்கொண்டிருக்கையில் மீண்டும் இரண்டு டிடக்டிவகள் இவரை தனியாக பாருக்கு அழைத்துப்போய் தங்களுக்கு சரக்கும் இவருக்கு காபியும் தருவித்துக்கொண்டு , மிகவும் தயங்கி இவரின் மனைவிக்கு பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்துவிட்டது, அதில் அவள் கருவுற்றிருந்தாள், எனவும் சொல்லி இவரைத் ஆறுதலாய் தேற்ற , இவர் சிறிதும் சலனமில்லாமல் நாங்கள் சில வருடங்களாகவே உடலுறவு கொண்டதில்லை,எனவே ஆறுதலுக்கு அவசியமில்லை, என சொல்லிவிட்டு கிளம்புகிறார். தன் மனைவி தூக்கு மாட்டிக்கொண்டதன் பிண்ணணி இப்போது இவருக்கு புரிகிறது.
இப்போது கவலை தோய்ந்த முகத்துடன் மாலை வேளைகளில் நண்பரின் வீட்டுக்கு சென்று அவரின் அழகிய பதின்ம வயது மகளின் பியானோ இசையை வாசிக்க சொல்லி கேட்டு ஃபீலிங்ஸ் காட்டுகிறார், ஆனால் உள்ளுக்குள் மனிதர் செமையாக ரிலாக்ஸ் செய்கிறார்.
அந்தப் பெண் பிர்டி(ஸ்கார்லெட் ஜோஹன்ஸன்) எங்கு சென்று பியானோ வாசித்தாலும் போய் லயித்து நிற்பதை வழக்கமாக்கிக்கொள்கிறார்.வெகுவாய் புகழ்கிறார்.அப்படி ஒரு சமயம் அந்தப்பெண் தன் காதலுடன் நின்று பேசும் போதும் இவர் வெளியில் சிரித்து உள்ளே புழுங்கி வாழ்த்துகிறார்.
வரும் வழியில் கார் ஓட்டிக்கொண்டே அந்த இசைவல்லுனரை திட்டிக்கொண்டே வர, பிர்டி இவரை மிகவும் தோழமையுடன் தேற்றுகிறாள், இவ்வளவு மென்மையான மனிதருக்கு மனைவி இல்லையே? என வருந்துகிறாள்.அவரின் உதட்டில் மென்மையாக முத்தமிடுகிறாள்.இவர் குஷியாக, அவரின் தொடையில் கை வைத்தவள் ,இன்னும் அத்து மீறி , இதில் ஒன்றும் தவறில்லை என எடுத்த எடுப்பில் அவருக்கு வாய்ப்புணர்ச்சி அளிக்க எத்தனிக்க, இது என்னடா இது? எடுத்தவுடனே டேக் ஆஃப் ஆகுது இது கருமம்னு , இவர் நிலை தடுமாறி அவளை விலக்க, அவள் மறுத்து கிழவருக்கு ஆறுதல் கொடுத்தே தீருவேன் என அடம் பிடிக்க.
இவர்களின் கார் எதிரே வந்த இன்னொரு காருடன் மோதி தூக்கி எறியப்பட்டு , இவருக்கு நினைவு தப்ப, கண் விழித்தால் இரண்டு டிடக்டிவ்கள் முகத்தில் விழிக்க வேண்டியிருக்க, இவர் மீண்டும் கண்களை மூட எத்தனிக்க, அந்த டிடக்டிவ்கள் இவர் பெயரை சொல்லி இது எத்தனை? என கேட்டு இவரை மடக்க, இவர் குட்டி ஷோக்கில் பிர்டி என்ன ஆனாள்? எனகேட்க? அவளுக்கு கழுத்தில் முறிவு ஆனால் உயிர் பிழைத்து விட்டாள். ஆனால் உங்களை நாங்கள் இரட்டைக் கொலை குற்றத்திற்காக கைது செய்கிறோம் என்கின்றனர். இவர் மீண்டும் மயங்கி விழுகிறார்.
1.ஆக்சுவலாக இவர் எப்படி மீண்டும் டிடக்டிவ்களிடம் மாட்டினார்?
2.அது என்ன இரட்டைக் கொலை?
3.இவருக்கு நாமம் போட்ட டோலிவர் எங்கே போனான்?
4.இவரின் தளிர் விட்ட காதல் கைகூடியதா?
5.இவருக்கு சார்பாக வாதாட வழக்கறிஞர் கிடைத்தார்களா?அதற்கு இவரிடம் பணம் இருந்ததா?
1.ஆக்சுவலாக இவர் எப்படி மீண்டும் டிடக்டிவ்களிடம் மாட்டினார்?
2.அது என்ன இரட்டைக் கொலை?
3.இவருக்கு நாமம் போட்ட டோலிவர் எங்கே போனான்?
4.இவரின் தளிர் விட்ட காதல் கைகூடியதா?
5.இவருக்கு சார்பாக வாதாட வழக்கறிஞர் கிடைத்தார்களா?அதற்கு இவரிடம் பணம் இருந்ததா?
போன்ற கேள்விகளுக்கு இந்த சுட்டியில் படத்தை தரவிறக்கி பார்த்து விடைகண்டுகொள்ளுங்கள்,சரியான எண்டர்டெயின்மெண்டுடன் கூடிய பளாக் ஹ்யூமர் நிச்சயம். படத்தின் ஒளிப்பதிவு ஒரு கவிதை, இசை சேர்ப்பு மிகவும் அருமை, பில்லி பார்ப் தார்ண்டனின் சீரியஸான நடிப்பு கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்.இவரின் சிறந்த நடிப்புக்காக ஸ்லிங் ப்ளேட் என்னும் படத்துக்காக 1996 ஆண்டு ஆஸ்கர் வாங்கியவர்.மனிதர் ஒரு சூரப்புலி,இனி இவரின் படங்கள் ஒவ்வொன்றாய் பார்க்க வேண்டும்.
கோயென் பிரதர்ஸின் பெரும்பாலான எல்லா படங்களிலும் வரும் கைதேர்ந்த நடிகையான ஃப்ரான்கஸ் மெக்டார்மண்ட் இதிலும் அருமையான நடிப்பால் நம்மை கவர்கிறார். கணவனிடம் சிகரட் ஒரு பஃப் வாங்கி இழுத்து விட்டு ஸ்டைலாய் புகை விட்டுக்கொண்டே எனக்கு கால்களை ஷேவ் செய்து விடு என அலட்சியமாக சொல்லும் இடம் அருமை.
வழக்கறிஞராய் வந்த டோனி ஷால்ஹாப் செம ப்ரொஃபெஷனல் , தும்மினாலும் பில் போடும் ரகம், சரியான சிரிப்பு இவர் வரும் காட்சிகளில். பிர்டியாக வந்து பியானோவை மீட்டி நம் மனதையும் மீட்டிச் செல்லும் ஸ்கார்லெட் ஜோஹஸன் அட்டகாசமான அழகு. ஆனால் கடைசியில் இப்படி இறங்கி விட்டது தான் உறுத்தல்.
மற்றபடி கிளாஸிக்,டார்க் ஹ்யூமர் ஜெனர் விரும்பிகள் தவறவிடக்கூடாத படம்.
முழுக்கதையும் படிக்க நைனைப்போர் படத்தின் காணொளியைத் தாண்டி வந்து படிக்கவும்
====================
எட் க்ரேனுக்கு செத்தே இருக்கலாம் போல இருக்கிறது.முதலில் பிர்டி இறந்திருப்பாள் போல , அது தான் நம்மை கைது செய்கின்றனர், என நினைக்க, டோல்லிவர் என்னும் பிஸ்னெஸ் மேன் காருக்குள்ளேயே வைத்து கொலை செய்யப்பட்டு,மூழ்கடிக்கப்பட்டு, அழுகிய நிலையில் காரையும் பிணத்தையும் ஏரியில் கண்டெடுத்ததாகவும் அவன் வைத்திருந்த ப்ரீஃப்கேஸில் இருந்த டாகுமெண்டுகளில் இவர் டோலிவருக்கு 10000 $ தந்த விபரமும் இருந்ததால் மிக எளிதாக மாட்டினார் என்றும் தெரியவர, இவருக்கு தலை சுற்றுகிறது.
மேலும் இவர் மனைவி எழுதிய கணக்கு புத்தகத்தில் பற்று வைக்கப்பட்டிருந்த 10000$ தான் இவர் டோலிவருக்கு தந்த பணம் என் உறுதியாகி, இவள் மனைவி கொலைக் குற்றமற்றவள் என உறுதியாகிறது.பணத்தை இவர் திருடியதை பிக் டேவ் கண்டுபிடித்ததால் பிக் டேவையும் பிஸினெஸ் டீலிங்கில் சச்சரவு வந்ததால் டோல்லிவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக குற்றம் சாற்றப்படுகிறது (டோலிவரை கழுத்தை அறுத்து கொலை செய்தது பிக் டேவ்) பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இவர் செய்யாத கொலைக்கு மாட்டிக்கொண்டார்.
இப்போது இவரின் மைத்துனன் ஃப்ரான்கின் வீட்டை மீண்டும் தன் வழக்கு செலவுக்காக மறு அடகு வைத்து வைத்து, அதே காஸ்ட்லி வழக்கறிஞரை வாதாட அமர்த்துகிறார். ஆனால் வழக்கு தொடங்குகையிலேயே இவரின் குடிகார மைத்துனன் ஃப்ரான்க் குறுக்கிட்டு இவரை அடித்து நையப்புடைக்க, பணப்பேயான வழக்கறிஞர் இனி பணம் பெயராது என்று வழக்கை கைகழுவிவிட்டு ஓட்டம் எடுக்க,
அரசு தரப்பில் இவருக்காக ஆஜரான ஏப்பை சோப்பையான வழக்கறிஞர் இவரை குற்றத்தை ஒத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்த, இவரும் வேறு வழி தெரியாமல் ஒத்துக்கொள்ள , இவருக்கு எலக்ட்ரிக் சேரில் வெகு சீக்கிரம் சாவுக்கு நுழைவு டிக்கெட் கிடைக்கிறது.இவர் செய்த குற்றங்கள் கண்முன் வந்து போகின்றன.டெத் ரோவில் இருக்கும் போதெ ஒரு துப்பறியும் மாத இதழ் இவரை அணுகி இவரின் சொந்தக்கதையை எழுதச்சொல்ல,ஒரு வார்த்தைக்கு 1 செண்ட் கிடைக்கிறதே என இவரும் சுவாரஸ்யமாக எழுதுகிறார்.(அப்போதும் விடாத பணத்தாசை)
அப்படி சிறையில் தூங்குகையில் இவர் கனவில் UFOவின் பறக்கும் தட்டையும் வேற்றுகிரக மனிதர்களையும் காண்கிறார்.இவருக்கு எல்லாமே புதிராக இருக்கிறது, இறுதி நாளும் வருகிறது. இவரை சிறை அதிகாரிகள் எலக்ட்ரிக் சேருக்கு கூட்டிப்போய் ஃபார்மாலிட்டி செய்கின்றனர். (அற்புதமான வித்தியாசமான வெண்ணிற தண்டனை அறை செட்)
இவர் பரலோகம் போய் அங்கு தன் மனைவியிடம் நடந்தவற்றையும் தன்நிலை விளக்கத்தையும் அளிக்க தன்னை தயார் படுத்திக் கொள்கிறார். ஆனால் இவர் செய்த தவறுகளுக்கு மனம் வருந்தவில்லை .இவரின் கால்கள் சவரம் செய்யப்பட்டு எலக்ட்ரிக் கண்டக்டர்கள் பூட்டப்பட்டு ,எலக்ட்ரிக் சேரில் அமர்த்தி , முகத்தை மூடி, மின்சாரம் பாய்ச்சப்படுகிறது.படம் அமைதியாக முடிகிறது.என்ன நண்பர்களே பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது எத்தனை உண்மை?
==========================