ஒருவரை குறைசொல்வது, அவர் உயிருடன் இருந்தாலோ இல்லையென்றாலோ நம்மில் மிகவும் சகஜமே. இதோ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX-812) மங்களூர் விமான விபத்து நிகழ்ந்து உறவினரும் ஏகப்பட்ட கண்ணீருக்கிடையில் கிடைத்த உறவுகளின் எரிந்த மிச்சங்களை வாங்கிச்சென்று மரியாதையும் செய்தாகிவிட்டது, ஒரே உடலின் மிச்சத்தை மூன்று குடும்பங்கள் சொந்தம் கொண்டாடிய சோகமும் நடந்தது, என் அலுவலகத்தின் அருகே உள்ள க்ராசரி கடையின் கல்லாவில் அமர்ந்திருந்த முகம்மது என்பவரும் அதில் பயணித்து இறந்து போனதால் அவரின் சிரித்த முகத்தை காணமுடியவில்லை, மலையாள பண்பலை வானொலி வேறு அதில் பயணித்த 8 பேர் கள்ள பாஸ்போர்ட் வைத்திருந்தனர் என்று இறந்தவர்களுக்கு கறைபூசும் செயலையும் செய்தது, ஏர் இந்தியா கல்ஃப் ந்யூசில் முழுப்பக்க விளம்பரம் தந்து இறந்துபோனவர்களின் குடும்பத்தார் தகுந்தஆவணங்களை கொடுத்து உடனடியாக நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.,என்றாலும் விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரபூர்வமான செய்தி வரவில்லை.10,000 மணிநேரத்திற்கும் அதிகம் பறந்த, 19 முறை இதே மங்களூரில் தரை இறங்கிய அனுபவமும் வாய்ந்த பைலட் தவறு செய்திருக்க எத்தனை சதம் வாய்ப்பிருக்க முடியும்?சரி விபத்தை தடுக்க நம்மால் எதாவது செய்யமுடியுமா?நிச்சயம் முடியும்.
நம்மில் எத்தனை பேர் விமான பயணம் செய்கிறோம்,எத்தனை பேர் விமானம் புறப்படும் முன்னர் செல்போன் எமனை அணைக்கிறோம், விமானம் விமான நிலைய ஓடுதளத்தை தேடி அலைகையிலேயே நம்மில் நிறைய பேர் சிம்மை அமைதியாக மாற்றி உயிர்பித்தும் விடுகிறோம். அது விமானம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறும் தொலைதொடர்பு சிக்னல்களை தடுத்தாட்கொண்டு விமானத்தை கடைசிகட்ட சோதனைகளுக்கு ஆளாக்குவது என்பது திண்ணம். ஆகவே உங்கள் முன் யாரேனும் இந்த செயலை செய்தால் அவரை தடுங்கள், அவர் மீறி அதை முயன்றால் விமான பணியாளர்களிடம் சொல்லுங்கள், அவர்கள் உண்டு இல்லை என்று செய்து விடுவர். உங்கள் உயிருக்கு முன் இது *****க்கு சமம். இது விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. விமானம் தரையிறங்கிய பின்னர் செல்போன்களை உயிர்பிப்போம், இனி போக வேண்டாம் இன்னுயிர்கள், மனிதத்தை இப்படியாவது காப்போம். அறிவியல் சான்றுகளுடன் இதெல்லாம் ஒன்றும் விபத்துக்கு காரணமில்லை என ஆயிரம் விவாதம் செய்யட்டும்,இது உயிர் விஷயம்.இந்த சுட்டியையும் படியுங்கள்.