பறவைப் பார்வையில் சென்னை மாநகரம் |
இன்று ஆகஸ்ட் 22, சென்னை தினம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு சென்னை என்று நிரந்தமாக அழைக்கப்பட்டு வரும் சென்னைக்கு 375 வயதாம், நினைக்கவே பெருமையாக இருக்கிறது, சென்னைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.எனக்கு உலகை புரிய வைத்த ஆசான் சென்னை,பணத்தை துரத்த வாய்ப்பளித்த சென்னை,
சென்னையை அதன் ஆட்சியாளர்கள் ஏறிவரும் மக்கள் தொகைக்கு தகுந்தவாறு urban design [நகர்ப்புற வடிவமைப்பு] செய்து சரியாக grid pattern ல் வடிவமைத்திருந்தால் ,இன்று நாம் காற்றுக்கு ஜன்னலை திறந்து வைத்தாலும் காற்று வராமல் புழுக்கத்தில் இருக்கும் நிலை இருந்திருக்காது,இந்தியாவில் சரியாக நகர்ப்புற வடிவமைக்கப்பட்டவை 28 நகரங்கள் ,அவற்றை இங்கே போய் படிக்கலாம்
இங்கே துபாயில் வீட்டு மனைக்கு plot கள் 45டிகிரி கோணத்தில் அமைந்திருக்கும், காற்று வரும் திசையில் நம்வீட்டின் வெளிப்புறச்சுவரும் அதிக ஜன்னல்களும் அமைக்க முடியும். தவிர சென்னையை இதன் சிஎம் டி ஏ திட்ட அதிகாரிகளும் சரிவர திட்டங்கள் இயற்றி சரியாக கடைபிடித்திருந்தால் , பல வீடுகளில் 2 அடி, 3அடி செட்பேக் கூட இல்லாமல் கட்டப்பட்டு காற்றும் வெளிச்சமும் புகமுடியாத நிலை இருந்திருக்காது. சென்னையில் தரைத்தளத்தில் குடியிருக்கும் மக்கள் படும் அவதி சொல்லில் வடிக்க முடியாது, முக்கிய தொல்லையாக நான் கருதுபவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்,ஆட்சியாளர்கள் நினைத்தால் இந்நிலை நிச்சயம் மாறும்.
- கொசுக்கடி ,
- சாக்கடை நாற்றம்,
- படபடப்பு கூட்டும் ஆட்டோ சைலன்சர் இரைச்சல்.
- கரண்ட் போகையில் காற்று வருமே என்று சன்னலை திறந்து வைத்துத் தூங்க முடியாது, பீரோ புல்லிங் திருடன் வந்து நேக்காக திருடிச்சென்று விடுவான்.
- சாலைகளும் சாக்கடைகளும் சரியாக திட்டமிட்டு வடிவமைக்கப்படாததால் அடை மழை நாளில் வீட்டுக்குள் மழைநீருடன், சாக்கடை நீர் புகும் அவலம் சொல்லில் வடிக்க முடியாது.
சென்னையில் நான் நடந்த தடங்களை திரும்பிப் பார்க்கிறேன்.
நான் பிறந்தது சென்னை தான், சிலவருடங்கள் மதுரையில் கழித்துவிட்டு, 1986ல் சென்னைக்கு வந்துவிட்டோம்.பல்லாவரத்தில் தான் வாசம்.மதுரையில் இத்தனை பின்கோடு, தபால்நிலையம், ரயில்நிலையம் பார்த்ததில்லை துறைமுகத்தை சுற்றி வளர்ந்த வட சென்னையில் நான் கால்வைக்கவே 10 வருடம் பிடித்தது,மீட்டர் கேஜ் ஓடிய தாம்பரம் டு பீச் வரை தான் சென்னை என நினைத்திருந்த எனக்கு அதையும் தாண்டி ப்ராட்கேஜ் ஓடும் வடசென்னை மிகுந்த ஆச்சர்யமூட்டியது,பெரம்பூர் என்னும் பெயரிலேயே 3 ரயில்நிலையங்களா என வியந்தேன்.
டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய ரயில் தான் உகந்தது என்பதால் ரயில் மார்கத்தில் அப்படி சுற்றியிருக்கிறேன்,கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி நடிகர் நடிகைகளின் வீடுகளை நேரில் பார்க்கலாம் என முயன்று களைத்திருக்கிறேன்.எனக்கு சென்னையில் மிகவும் பிரியமான இடம் பல்லாவரம் மலை,நிறைய படப்பிடிப்புகள் நடந்த இடம்,
அதற்கு 4 வழியாக போகலாம்,திரிசூலம் ரயிலடியில் இருந்து நடந்து 3கிமீ நடந்தால் மலைக்கு மேலே போய்விடலாம்,அல்லது பல்லாவரம் கல்லறை தோட்டம் வழியாக மேலே ஏறினால் 2 கிமீ,அல்லது ஈசுவரிநகர் மேடு வழியே ஏறீனால் 1.5கிமீ,அல்லது பழைய பல்லாவரம் பஞ்சபாண்டவர் மலை வழியே ஏறினால் 1.5கிமீ வரும்,சென்னையில் யாருமே போகத்துணியாத இடத்துக்கெல்லாம் நானும் நண்பனும் சைக்கிளில் போயுள்ளோம்.
அப்படி கீழ்கட்டளை,பெருங்குடி வழியாக போய் திருவான்மியூர் பீச்சுக்கு போனதை என்னவோ நாங்கள் பீச்சையே கண்டுபிடித்தது போல வகுப்பில் பேசுவோம்.தாம்பரம் அருகே தர்காஸ் என்று ஒரு இடம் உண்டு,அங்கு எல்லாம் போய் குட்டையில் ஆடியுள்ளோம்.அந்த இடத்துக்கருகே அதன் பின்னர் தான் கிஷ்கிந்தா எல்லாம் வந்தது.சென்னையில் எனக்கு பிடித்த இன்னொரு இடம் என்று சொன்னால் பட் ரோட்டில் இருக்கும் போர் நினைவுச்சின்னம்,அதை அத்தனை சுத்தமாக வைத்திருப்பர்,
அதற்கு பெரும் நிதி அகில உலக கல்லறைகள் நிதியம் வழங்குவதால் பளிங்கு போலான நிர்வாகம் சாத்தியமானது,அதை இன்னும் பார்க்காதவர்கள் போய் பாருங்கள். எனக்கு ரயில்நிலையங்களுக்கு பெயர் வைத்த வெண்ணைவெட்டிகளை அடிக்க ஆத்திரம் வரும்.பரங்கி மலை என பெயர் இருக்கும் ஆனால் அங்கேயிருந்து 4கிமீ நடந்தால் தான் புனித தோமையார் மலை வரும். பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரு பலகை மறக்க முடியாது.
திருநீர்மலை போக இங்கே இறங்கவும் என்று,அங்கே இருந்து திருநீர்மலை போக சுமார் 8கிமீ வரும்.அதற்கு பழந்தண்டலம் போக ஒரு பஸ் இருந்தது,குடிகாரர்கள் மட்டுமே ஏறுவர்,அப்போது திருநீர்மலை சாராய சாம்ராஜ்ஜியமாக விளங்கியது,குடிமகன்கள் நல்ல ஊரல் போட்டிருக்கும் இடமாக ஏறுவது இறங்குவதுமாக இருப்பர்,பஸ்ஸே ஆடிஆடித்தான் பல்லாவரம் செல்லும்,சாலை அப்படி.நான் சிறுவனாயிருக்கையில் பார்த்த ஏரிகள்,குளங்கள் இன்று இல்லை,இருந்தாலும் சாக்கடையாகி உள்ளது.
மழைக்காலத்தில் மட்டுமே அடையாரில் வெள்ளம் கரைபுரண்டு வரும். அங்கே போய் அட்டகாசம் செய்திருக்கிறோம்.அப்போது கண்டோன்மென்ட் பல்லாவரத்தில் இருந்து கவுல்பஜார் போகும் வழியில் பெரிய 50அடி விட்டம் கொண்ட மிலிட்டரி கிணறு ஏணியுடன் இருந்தது, வீட்டுப்பாடம் எழுதாததால் தண்டிக்கப்பட்ட சிறுவர்களை அங்கே பார்க்கலாம்,அத்தனி பெரிய கிணற்றை அதற்கு பின் நான் பார்த்ததே இல்லை.
சென்னையில் திரிசூலம் ரயிலடி மட்டும் புதியதாக இருக்கும்,ஏனைய நிலையங்கள் 1930களில் கட்டிமுடிக்கப்பட்டிருக்க,திரிசூலம் மட்டும் 1984-85ல் திறக்கப்பட்டது,ராஜீவ் காந்திக்காக விமான நிலையம் செல்லும் சாலையை இணைக்க அவசர அவசரமாக சுரங்கப்பாதையும் போடப்பட்டது என்பார்கள்.நீண்டநாட்களாக நான் விமானநிலைய வளாகத்தில் இருக்கும் சந்தியம்மன் கோவிலினால் திரிசூலத்துக்கு அந்த பெயர் வந்திருக்கும் என நினைத்தேன்,ஆனால் அங்கே ஆயிரம் வருட பழமைவாய்ந்த திரிசூலநாதர் பெயரால் என்று பின்னர் தான் தெரியும்,இன்னும் சென்னை பற்றி நிறைய எழுதுவேன்.