மகிழ்ச்சி [Magizhchi][2010]


ண்பர்களே!!!,
நேற்று தான் மகிழ்ச்சி திரைப்படம் காண வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவை அது அளித்தது, இதை ஏன் சினிமா ஆர்வலர்கள் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள்? என்னும் கேள்வியும் தொக்கி நின்றது.
எழுத்தாளர் நீல.பத்மநாபனின் தலைமுறைகள் என்னும்  நாவலை நண்பர் செ.சரவணகுமாரின் அறிமுகம் மூலமே நான் அறிவேன், அதன் கதையையும் அவரின் இந்த பதிவின் மூலமே அறிந்திருந்த எனக்கு அதை உடனே பார்க்க ஆவல் எழுந்தது.

சென்னையில் எங்கு தேடியும் இந்த படத்தை பற்றிய தகவலே இல்லை.நிறைய பேர் இந்த படத்தை பார்க்க விரும்பியதையும் நான் அறிவேன்.யாரும் இவ்வளவு நல்ல திரைப்படத்தை வாங்கி திரையிடுவதில் ஆர்வம் காட்டாதது வியப்பையும் வேதனையையுமே தந்தது. மக்களின் ஆர்வம் டிவி சீரியல்கள் மீது அதீதமாக படிந்துவிட்டதால் இன்றைய இயக்குனர்கள் யாரும் ஒரு சமூகத்தாரை மையமாக வைத்து பின்னப்படும் குடும்பக்கதைகளை எடுக்க துணிவதேயில்லை, மாயாண்டி குடும்பத்தார், வம்சம் போல விதிவிலக்குகள் இருந்தாலும் அவை சாதிச்சண்டை, பங்காளிகளுக்குள் அடிதடி போன்றவையையே முன்னிறுத்தி பயணிக்கும்,

து போல அதிகம் கொண்டாடப்பட்ட  படைப்பிலக்கியத்தை திரையில் வடிக்கும் போது கூட எழுத்தாளரின் அசலான படைப்பை திருத்தியோ மாற்றியோ செய்யத்துடிக்கும் இயக்குனரின் அதிமேதாவித்தனமே தெரியும், இதில் அதிர்ஷ்டவசமாக தலைமுறைகள் நாவலே தெரிகிறது, இது எழுத்தாளர் நீல.பத்மனாபனுக்கு கிடைத்த மரியாதையாகவே கண்டேன். அவருக்கு முழுமையாக க்ரெடிட்டும் கொடுத்திருப்பது,இயக்குனர் வி.ஏ கௌதமனின் நேர்மையை பறை சாற்றுகிறது.  மேலும் இவர் தமிழில் பேசப்பட்ட இது போன்ற படைப்புகளை  திரையில் வடிக்கவேண்டும், இவரின் ப்ரொடக்‌ஷனுக்கு பெயரே அதிர்வு திரைப்பட்டரையாம், இயக்குனர் எல்லாவற்றையுமே சிறந்த கலை நுணுக்கத்துடன் அணுகியிருக்கிறார் என்பது படம் பார்த்தால் ஒருவருக்கு புரியும்.

டம் உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ,என்ற குறிப்புக்கு பிறகு வண்ண ஓவியங்களை வைத்துச் சொல்லப்படும் பலநூற்றாண்டு வருடத்துக்கு முன் வாழ்ந்த தங்கம்மை, தாயம்மை என்னும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய நேரேஷன் ஃப்ளாஷ்பேக்கை நாம் பார்க்கிறோம், இது மிக எளிமையும் அருமையாகவும் எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம்  அரசனுக்கே குலஅபிமானத்தால் பெண் தரமறுத்து  தங்கம்மை, தாயம்மை  இருவரையும் உயிருடன் புதைத்த நகரத்தார் வம்சம் பற்றியும் அவர்களுக்கு தங்கள் சாதி எவ்வளவு உயரியது? என்றும் அறிகிறோம்.அதன் பின்னர் சமகாலத்தில் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து இரணியல் என்னும் சிற்றூரில் வந்து குடியேறிய ஏழூர்ச்செட்டி வம்சத்தின் மூன்றாம் தலைமுறையில் உண்ணாமலை ஆச்சியின் [சுகுமாரி] குடும்பத்திற்குள் நாம் நுழைகிறோம்.

ண்ணாமலை ஆச்சியின் பேரனாக திரவி என்னும் பாத்திரம்,டீச்சர் ட்ரெயினிங் முடித்துவிட்டு வேலைக்கு காத்திருக்கிறார்.,அவரைவிட ஒன்றரை வயது மூத்த அன்பு சகோதரி நாகு என்ற நாகம்மை  எனும் மற்றொரு பாத்திரம். திரவிக்கு தங்கையாக விசாலம் என்னும் இன்னொரு பாத்திரம். இயக்குனர் கௌதமனே திரவி என்னும் பிரதான பாத்திரத்தில் நடித்ததும் அழகு. ஏனைய நகரத்தார் இன ஆண்கள் ஆடை அலங்காரங்களில் ஆர்வமின்றி எளிமையாகவே இருப்பர். அவர்களுக்கு முக்கியம் குடும்பம், தொழில், இறைவழிபாடு. அதற்கு எளிய தோற்றமுள்ள இவர் பாந்தமாய் பொருந்தினார். 

குழலி என்னும் பாத்திரத்தில் நடிகை அஞ்சலி திரவிக்கு முறைப்பெண்ணாக வந்தார் நல்ல அழகும் குறும்புத்தனமான நடிப்பையும் இவர் கண்ஜாடைகளாலேயே வெளிக்காட்டியிருந்தும், அவருடன் நீரில் நனைந்து இயக்குனர் இரண்டு பாடல்களை செய்தும் தானே கதாநாயகன் எனும் ஆசையில், கதாநாயகியை நனையவிட்டு தோலுரித்து காட்டியும், தொன்று தொட்டு இயக்குனர்கள் செய்யும் தவறையே செய்துள்ளார்.இடுப்பு தொப்புள் காட்டினால் தான் விரசம் கிடையாது, கதைக்கு அவசியமில்லாத, அஞ்சலி  முதல் மரியாதை ராதா போல சீலை அணிந்து  ஆற்றில் அருவியில் நனைந்து புரண்டு பாடி ஆடும், இரண்டு பாடல்களுமே எனக்கு அநாவசியமாய் பட்டது, வினியோகஸ்தர்களுக்காக கூட வைத்திருக்கலாம், அதற்கு பதில் நாவலில் வரும்  சின்ன  சின்ன டீடெய்ல்களை படமாக்கியிருக்கலாம் என்பதே என் ஆதங்கம். விட்டுவிடுவோம். 

முக்கியமாக சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரம் கூணாங்கனிப்பாட்டா [வி.எஸ்.ராகவன்] இவரை எல்லோரும் பாட்டா என்கிறனர்,அப்படி ஒரு அன்பான யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் மனிதர், இவரை பாலச்சந்தர் தயாரித்த டீவி சீரியல்களில் பார்த்து எனக்கு  மிகவும் பிடிக்கும் ,மூத்த தலைமுறை மனிதராக இருந்தாலும் இளையதலை முறையின் கருத்துக்களுக்கு மிகவும் மதிப்பளிக்கிறார். இவரின் தங்கை தான் உண்ணாமுலை ஆச்சி. புதிய தலைமுறையின் முற்போக்கு கருத்துக்களே சற்றும் ஒவ்வாத ஆச்சிக்கு மெதுவாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் மைய பாத்திரம் பாட்டாவுக்கு. பாட்டாவிற்கு பொணமு ஆச்சி, அணஞ்சிப்பிள்ளை ஆச்சி என இரு மனைவிகளும், ஊருக்கு வெளியே அம்முக்குட்டி எனும் மலையாளிப் பெண்மணியின் தொடர்பும் உண்டு. அம்முக்குட்டியின் மூலம் ஒரு அழகியபேத்தியும் உண்டு. அந்தப்பெண் திரவியை ஒருதலையாகக் காதல் செய்கிறாள். திரவி தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என்றிருக்கிறாள். தாத்தா பாட்டா தன் இளமைக்காலங்களில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு, தன் சொத்துக்க்களை பெண்சுகத்திலேயே அழித்திருக்கிறார். இப்போது மத்தளம் போல இரண்டு மனைவிகளிடமும் ஏச்சுபேச்சுடன் அடிவாங்குகிறார்.

யக்குனர் சீமானுக்கு நடிப்பு மிக இயல்பாய் வருகிறது, அவர் இனிமுழுநேர குணச்சித்திர நடிகராகவே ஆகலாம். இதில் திரவியின் தாழ்த்தப்பட்ட சமூக நண்பன் குற்றாலமாக வருகிறார். ஒரு காட்சியில் இன்று மொச்சை மூட்டை சகாயவிலைக்கு கிடைத்தது அதுதான் வாங்கிவந்து தெருத்தெருவாய் போய் கூவி விற்றேன், என்று திரவியிடம்  சொல்லியபடி மொச்சை மூட்டை கட்டப்பட்ட சைக்கிளை தள்ளிக்கொண்டே சட்டையை அணிவார். நாவலை முழுக்க ஒன்றி படித்திருந்தால் ஒழிய , இப்படி கதாபாத்திரமாக  மாறமுடியாது. தன் ஆடி அடங்கிய பக்கவாதம் தாக்கிய அப்பாவை தனிஆளாக பார்த்துக்கொள்கிறார். சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுயமரியாதையுடனான முற்போக்கு சிந்தனைகளுடன்  வாழும் பாத்திரம் இவருக்கு மிகவும் பொருந்தி வந்துள்ளது.கஞ்சா கருப்பும் உண்டு, இரண்டு மூன்று காட்சிகளில் வருகிறார்.அவ்வளவுதான்.

டத்தில் வரும் கொடியபாத்திரம் என்றால் அது புத்தன் தெருவைச் சேர்ந்த செவந்த பெருமாள் [சம்பத்] பாத்திரமே, இவன் திரவியின் சகோதரி நாகுவை  ஆறு மாதத்திற்கு முன்பு  தான் விமரிசையாக,சீர் செனத்தி வலியக்கேட்டு வாங்கி திருமணம் முடித்தான். மளிகைக்கடை நடத்தும் இவன் மைனர் போல உடுத்திக்கொள்கிறான், புல்லட்டிலும் வலம் வருகிறான். ஒரு நடிகன் வரைந்து கொள்வது போன்ற மீசையுடன்  இருக்கும் ஒரு தடிப்பயல், ஆண்மைக் குறைபாடுமுள்ளவன்.  ஊரார் முன்னர் தன் குறை எடுபடக்கூடாது என்று, நாகம்மையை வெறும் எட்டே மாதத்தில் வாழாவெட்டியாக திருப்பி அனுப்பிவிடுகிறான்.  நகரத்தார் சமூகத்தில் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதொ அதே போன்றே பெண்ணுக்கும் சம உரிமை உண்டு.ஆண் தொழிலை கவனித்தால்,பெண் வீட்டு நிர்வாகத்தை கவனிப்பாள்,விவாகரத்து என்பதே கேட்க முடியாத சமூகம்.அப்படி ஒரு சமூகத்தில் கட்டிய மனைவிக்கு செவந்த பெருமாள் கூசாமல் வன்கொடுமை செய்கின்றான்.

திரவியின் தந்தை நாகரு பிள்ளை எவ்வளவோ கெஞ்சியும் ஊரைக்கூட்டி பேசியும் நாகுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான் இந்த கிராதகன். அவன் அம்மாவோ படு கிராதகி, கொலைபாதகி,அரிசியில் கற்களை பொறுக்காமல்  தான் சோறு வடித்துவிட்டு, பழியை மருமகள் மேல் கூசாமல் சுமத்தி அடியும் சித்திரவதையும் மகனிடமிருந்து வாங்கித்தரும் இழிபிறவி. நாகம்மை பிள்ளை பெறவே தகுதியில்லாதவள் என்றும்,அவள் ஒரு பெண்ணே அல்ல,  என்றும் அவளை புண்படுத்தி நடைபிணமாக்கும் இவனின் பாத்திரம் , காணும் யாருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும். திரவிக்கு அவன் படித்த அரசுப்பள்ளியிலேயே ஆசிரியர் வேலை கிடைக்கிறது, அதுவும் அவனுக்கு பாடம் நடத்திய   மோசஸ் வாத்தியார்[பிரகாஷ்ராஜ்] தலைமையிலேயே கிடைக்கிறது, அவருக்கும் பெருமையோ பெருமை. அது முதலே திரவிக்கு மிகுந்த பக்கபலமாய் ஆகிறார் மோசஸ் வாத்தியார்.

ரு நாள் மோஸஸ் வாத்தியாரும் திரவியும்  நாகுவை  ஊரின் பெண் மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துப்போகிறார்கள். மருத்துவர் சகோதரி நாகுவை நன்கு பரிசோதித்த பின்னர்  நாகுவிடம் எந்த குறையும் இல்லை, செவந்தபெருமாள் தான் ஆண்மையற்றவன். என்னும் சுடும் உண்மையை இருவக்கும் உரைக்க கொதிக்கின்றனர். அதன் பின்னர் அக்காவின் கணவன் செவந்த பெருமாளிடம் வீறுகொண்டு எகிறும் திரவியின் கோபம் மிக மிக யதார்த்தம். பெண்களின் மீது படத்தில் பிரயோகிக்கப்படும் காலால் நெஞ்சில் மிதிப்பது, சோற்றில் கண்டெடுத்த கல்லைக்கொண்டே நாகுவின் கையை கீறி ரத்தம் வர காயப்படுத்துவது, உயிரோடு மண்ணை தள்ளிமூடுவது, போன்ற வன்முறை மிகுந்த ஆயாசத்தை தருகிறது, இருந்தாலும் நாவலில் இருக்கும் டீடெய்லை அவர் பின்பற்றியிருக்கக்கூடும் என்பதால் விட்டுவிடுவோம்.

வாழாவெட்டியான மூத்த சகோதரி நாகுவை மறுமணம் செய்து கொண்டு நல்லபடியாக வைத்து வாழத்துடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நண்பன் குற்றாலம். இதை துணிந்து ஏற்றுக்கொண்ட திரவியும் சகோதரி நாகுவும்.  இதை அறவே ஏற்றுக்கொள்ள மறுக்கும் மூத்த தலைமூறை பெரிசுகள் உண்ணாமுலை ஆச்சி, பாட்டா, நாகரு பிள்ளை அவர் மனைவி ஆகிய நால்வரும். அடுத்து திருமணத்துக்கு காத்திருக்கும் வயதுக்கு வந்த தங்கை விசாலம் வேறு,  நாகுவின் திருமணம் செய்ய வாங்கிய கடனில் அடமானத்தில் இருக்கும் வீடு ஒரு பக்கம்,  தன் பெண் குழலிக்கு திரவியுடன் உடனே திருமணத்தை நடத்தத்துடிக்கும் தாய்மாமன் மறுபக்கம், பொய்த்துப் போகும் அபாயத்தில் திரவி குழலியின் காதல்,!!! ....

இனி என்ன ஆகும்?!!! அருமையாக திரைப்படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.  ஒருவருக்கு நாவலை படிக்கும் அனுபவம் வாய்க்கிறது. சில குறைகள் இருந்தாலும் பெரிதாக தெரியவில்லை. தமிழில் இது போல படைப்புகள் எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்து வருவது, இது போன்ற படங்களுக்கு மக்களாகிய நாம் கொடுக்கும் வரவேற்பை பொறுத்தே அமைகிறது.   படத்தின் ஒளிப்பதிவும் ,இரண்டு பாடல்களும்,இசையும் பிண்ணணி இசையும்  மிகமிக நன்றாக இருந்தது,நாம் வித்யாசாகரை மிகவும் இழக்கிறோம் அவர் இப்போது மலையாளத்தில் கோலோச்சுகிறார்.,  ஆகமொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒரு குடும்பப்படம்.


ந்த பொருளுக்குமே விளம்பரம் அவசியமாகிறது, உணவுப்பண்டத்தை தவிர இன்றைய உலகில் எல்லாவற்றையுமே கூவிக்கூவி விற்க வேண்டியதாயுள்ளது. இலக்கியம் நிறைய மக்களை சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் இப்படி பாடுபட்டு படம் எடுத்துவிட்டு அதற்கான மார்க்கெட்டிங்கை, விளம்பரத்தை அளிக்கத் தவறியது விந்தையும் வேடிக்கையாயும் உள்ளது, தமிழ் திரையுலகின் பகாசுரர்களான சன் குழுமம், அல்லது ரெட் ஜெயண்ட்டிடம் இதை விற்றிருந்தாலும் நிறைய மக்களை சென்று சேர்ந்திருக்குமே!!! என்ற ஆதங்கம் எழுந்தது . அவர்கள் நினைத்தால் காக்கை குருவியைக் கூட ஊர்ப்பருந்தாக்கி உயரப்பறக்கவைப்பார்களே?!!!, உலகமகா சாமர்த்தியசாலிகள்.

இது நண்பர் செ.சரவணகுமார் எழுதிய தலைமுறைகள் புத்தக விமர்சனத்தின்   சுட்டி. இதில் நாவலைப்பற்றிய சீரான அலசலையும் கதையையும் ஒருவர் படிக்கலாம்.
மகிழ்ச்சி=பெருமகிழ்ச்சி
=======00000=======
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
=======00000=======

23 comments:

இராமசாமி சொன்னது…

நண்பா எங்க கிடைச்சது இந்த படம் உங்களுக்கு.. நானும் தேடிக்கிட்டே கிடக்கேன் .. கிடைக்க மாட்டேங்கிது ....

sakthistudycentre-கருன் சொன்னது…

Nice

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இராமசாமி,
ஊரில் கழுத விட்டை கைநிறைய ரோட்டுமேலேயே கிடைக்கிறது.ஆனால் இதுபோல நல்ல படைப்புகள் காத தூரம் போய் வாங்கவேண்டியுள்ளது.

டிவிடி ரிப் டவுன்லோட் செய்து பார்த்தேன்.லின்க் கொடுத்திருக்கிறேனே,அதில் விரைந்து தரவிறக்குங்க நண்பா

@சக்தி ஸ்டடி செண்டர்
மிக்க நன்றி நண்பரே

எஸ்.கே சொன்னது…

ரொம்ப அழகான உணர்வுகள் கொண்ட படம் போல தெரிகிறது!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@எஸ்கே,
நண்பா ஆமாம்,அவசியம் பாருங்க

வினோத் கெளதம் சொன்னது…

குரு வழக்கம்போல் அருமையான விமர்சனம்..அட்டகாசமான படைப்பு.
இவரோடைய ஆட்டோ ஷங்கர் மற்றும் சந்தனக்காடு தொடர் பார்த்து இருக்கிங்களா..இரண்டுமே ஒளிபரப்பான காலக்கட்டங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றன..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வினோத்
குரு,அப்புடியா,இவர்தானா அந்த கௌதமன்? மறந்தே இருந்தேன், தகவலுக்கு நன்றிய்யா.படத்துக்கு எந்த டிவியில விளம்பரம் போட்டாங்கன்னே புரியல.இதுபோல படங்களுக்கு விளம்பரம் இல்லாம போனதால தான் எந்திரன் கொடுத்த விளம்பர தொல்லையின் ஆதிக்கம் புரிந்ததுய்யா.

நிலா முகிலன் சொன்னது…

அருமை. பாத்துற வேண்டியது தான்.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நல்ல படங்களுக்கு தியேட்டரே கிடைப்பது இல்லை.தென்மேற்க்கு பருவக்காற்று விகடன் விமர்சனம் பார்த்து படம் பார்க்க துடிக்கிறேன்.கோவை மாநகரில் ஒரே வாரத்துக்குள் தூக்கிவிட்டார்கள்.இளைஞன் படத்தை நாலு தியேட்டரில் ஒட்டுகிறார்கள்.ஈ,கொசு ஏன் மூட்டைப்பூச்சி கூட தியேட்டரில் இல்லை.

Rafeek சொன்னது…

மந்திரப்புன்னகை, நகரம் மறுபக்கம் ஆகிய படங்களுடன் வந்த இத்திரைப்படம் .. சத்யம்,PVR,Inox போன்ற நல்ல திரையரங்குகள் கிடைத்தும்.. தொடர்ச்சியாக இரு வாரங்கள் கலைஞர் டிவி,ஒரு வாரம் சன் டிவி மற்றும் சின்ன சேனல்கள் என்று புரோமோஷனும் செய்யப்பட்டது.விகடனில் 40 மார்கும் பெற்றது. ஆனால் பதிவுலகில் உங்கள் ப்ளாக்கையும் சேர்த்தால் கூட.. 5 விமர்சனங்கள் மட்டுமே தேறும். சன் டிவி அசுர விளம்பரம் செய்தால் அதனை திட்டி கொண்டே 100 ப்ளாக்கிற்கு மேல் எந்திரன் விமர்சனம் செய்கிறோம். படு மொக்கை படங்களுக்கு திட்டி கொண்டே விமர்சனம் எழுதும் உண்மைதமிழன்,கேபிள் சங்கர் ஆகியோரும் விமர்சனமோ ஊக்குவிக்கும் கட்டுரையோ எழுதவில்லை. இயக்குனர் தயாரிப்பாளரின் நிதி நிலைமையோ இன்னும் மோசம்..விரைவில் “வெள்ளிப்பரிசில்” காணலாம்.

Kannan சொன்னது…

அண்ணாச்சி, நான் படம் அதிகம் பார்ப்பது இல்லை. ஆனால் இந்த படத்தை பார்க்க தோணுகிண்றது. விமர்சனம் அருமை.படம் பார்த்து விட்டு பின்னுட்டம் இடுகின்றேன். வாழ்த்துக்கள்.

kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/

R.Kamal சொன்னது…

உங்கள் தேர்வு அருமையாக தான் இருக்கும், கண்டிப்பாக பார்த்து விடுகிறோம். நன்றி!

vkjvinoth சொன்னது…

நண்பா மிக அருமையான விமர்சனம், நான் இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை எல்லா தமிழ் வெப்சைட்களிலும் தேடிப்பார்த்தேன் ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. உண்மையாகச் சொன்னால் திரைப்படத்தை ௩ நாட்களுக்கு முன்னர் தான் பார்த்தேன் அதன்பின்பு தான் உங்களுடைய விமர்சனத்தை காண நேர்ந்தது. அருமை நண்பா உங்களது பணி தொடர வாழ்த்துக்கள் .

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@நிலாமுகிலன்
நன்றி நண்பரே பாருங்க அவசியம்

@உலகசினிமா ரசிகன்
முற்றிலும் உண்மை தலைவரே.
இளைஞன் கட்டைல போகன்னு சாபம் கொடுக்கலாம்னு இருக்கு.

@ரஃபீக்
நானே தாமதமாய் பார்த்து தொலைத்தேனே என வேதனைப்பட்டேன்.
இந்த படத்தை பத்தி இலக்கியவாதிகள் கூட சொல்லாதது அவர்தம்
படைப்புகளுக்கு கிடைக்காத மரியாதை இதற்கு கிடைத்துவிட்டதே என்னும் வயிற்றெரிச்சலையே காட்டுகிறது.சாரு பார்த்திருந்தால் நிச்சயம்
தன் கட்டுரை மூலம் பலருக்கு சிபாரிசு செய்திருப்பார்.

@கண்ணன் அபுதாபி
நண்பா நலமா?படம் பாருங்க சீக்கிரம்
மிக்க நன்றி,

@ஆர்.கமல்
நண்பரே முதல் காட்சியில் வரும் ஐந்து நிமிட abstract stroke ரக வாட்டர் கலர் ஓவியங்கள் மிகமிக அருமை,உங்கள் நினைவு வந்துவிட்டது,நீங்கள்
இதுபோல ஓவியங்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,அதற்கு வழி அமையவேண்டும்.பார்ப்போம்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@vkjvinoth
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

கோவி.கண்ணன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

அந்தப் படத்தை பார்க்க என்னுடன் சேர்ந்து திரையரங்கிற்கே (சிங்கப்பூர்) மொத்தம் ஆறே பேர்கள் வந்திருந்தார்கள்.

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமை கார்த்திகேயன். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். படம் பற்றிய பரவலான விமர்சனங்கள் நமது வலையுலகில் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. இது பற்றிய எனது வருத்தத்தை எனது பதிவில் சொல்லியிருந்தேன். இப்போது நீங்கள் மகிழ்ச்சி பற்றி எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நானும் மூன்று தினங்களுக்கு முன்னர் தான் படத்தைப் பார்த்தேன். எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவிற்கு சிறப்பாகவே எடுத்திருக்கிறார் கௌதமன். படத்தில் பல இடங்களில் நாவலின் உயிரோட்டம் காணாமல்போய் வெறும் சினிமாவாக மட்டுமே இருந்தது. சில குறைகள் இருந்தாலும் இப்படி ஒரு சினிமா வந்திருப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.

விரைவில் மகிழ்ச்சி பற்றி எனது வலையில் எழுதுகிறேன்.

நன்றி கார்த்திகேயன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கோவியார்
அப்படியா?
அண்ணே மிகவும் வருந்தமாயுள்ளது

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@செ.சரவணகுமார்.
நண்பரே,நான் உங்களிடம் இருந்து இந்த பதிலை எதிர்ப்பார்த்திருந்தேன், உங்களின் தீர்க்கமான நாவலைப்பற்றிய அலசலின் மூலமே அந்த நாவலைப்பற்றிய தரிசனம் எனக்கு கிடைத்தது, கிளைமாக்ஸ் மாற்றியிருப்பார். மற்றும் கதை நடக்கும் காலகட்டத்தை அழுத்தமாக பதியாமல் விட்டவை,திணிக்கப்பட்ட பாடல்கள்,வட்டார வழக்கை முழுமையாக பயன்படுத்தாதது என குறைகள் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்,ஆனால் படைப்பாளிக்கு இது போல கௌரவம் கிடைப்பது அரிது,என்பதால் பெரிதாக குறை தெரியவில்லை. முடிந்த அளவிற்கு பட்ஜெட்டை குறைக்க பாடுபட்டிருக்கிறார்.தவிர படத்தில் ஏராளமான நட்சத்திரப்பட்டாளம் வேறு உண்டு. எல்லோருக்கும் பங்களித்திருக்கிறார். என்பது சொல்லப்படவேண்டிய ஒன்று.
====
நீங்கள் அவசியம் படத்தினைப் பற்றிய அலசலை முன் வைக்க வேண்டும், அது கௌதமனுக்கு எதிகாலத்தில் குறைகளை களைந்துகொள்ள மிகவும் உதவக்கூடும், குறைந்தபட்சம் இது பற்றி ஆரோக்யமான விவாதம் எழுந்தது என்றளவிற்கேனும் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடும்.

பின்னோக்கி சொன்னது…

’அந்த’க் குடும்பத்தினர் வெளியீடு செய்யாத எந்த படமும், மக்களைச் சென்றடைவது கடினம் என்ற நிலை இருக்கிறது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பின்னோக்கி
நண்பரே,நலமா?
வேலை மிகவும் அதிகமா?
பதிவிடுவதே இல்லையே?
அந்த குடும்பம் மட்டும் கல்லா கட்டினால் போதும் என்று நினைக்கின்றனர்.

மைதீன் சொன்னது…

  விமர்சனத்தோடுநில்லாமல்சுட்டி கொடுத்ததற்க்கு நன்றி!!! 

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)