கற்களுக்குள் ஒரு காந்தி - லாரி பேக்கர் (லாரி பேக்கர் பற்றிய விரிவான பதிவு ) கட்டுரை -சுகி

 நான் பென்னி குரியகோஸ் என்னும் கன்சர்வேஷன் கன்சல்டன்டிடம் 1999-2000 காலகட்டத்தில்  ட்ராஃப்ட்ஸ்மேனாக வேலை செய்துள்ளேன், அவர் ஏழைகளின் ஆர்கிடெக்டும்,குறைந்த பொருட்செலவில் தரமான அழகிய வீடுகள் என்ற குறிக்கோளை கடைசி வரை கடைபிடித்த லாரி பெக்கரிடம் உதவியாளராக இருந்தவர். சென்னை முட்டுக்காட்டில் அமைந்துள்ள பண்பாட்டு கலாச்சார மையமான தக்‌ஷின் சித்ராவின் எக்ஸிகுயூஷன் ஆர்கிடெக்டும் ஆவார். 

அந்தந்த ஊர்களுக்கே இருக்கும் வெர்னாகுலர் பாணியை பிரதிபலிக்கும் தக்‌ஷின் சித்ராவின் இந்து-திருவனந்தபுரம் வீடு,இந்து மனக்காவு-கோழிக்கோடு வீடு, தானியக்கிடங்கு கொண்ட கோட்டயம்-கூத்தாட்டுக்குளம் வீடு, புதுப்பள்ளி-கோட்டயம்-சிரியன் கிருஸ்துவர் வீடு மற்றும் ஏனைய வீடுகளுக்கு முழுமையான வரைபடங்கள் தயாரித்துள்ளேன்,அப்போதே பென்னி குரியகோஸ் மூலம் லாரி பெக்கர் பற்றி நிறைய கேட்டும்,தொடர்ந்து தேடிப் படித்தும் உள்ளேன். அந்த வகையில் சுகி எழுதிய இந்தக் கட்டுரையை மனதுக்கு நெருக்கமாக உணருகிறேன்.


 (குறிப்பு – இக்கட்டுரை அரவிந் குப்தா பேக்கர் குறித்து எழுதிய அறிமுக கட்டுரை மற்றும் தக்ஷின் சித்ராவை வடிவமைத்த பேக்கரின் சீடர்களின் ஒருவரான பென்னி குரியகொஸ் பேக்கரின் மறைவை ஒட்டி எழுதிய அஞ்சலி கட்டுரையையும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)
-சுகிசிறுவனாக அடுமனையில் தன் கையிருப்பை கொண்டு ரொட்டிகள் வாங்கி உண்பது அவருடைய வழக்கம். ஒரு மாபெரும் ரகசியத்தை அவர் அப்படித்தான் கண்டடைந்தார். ரொட்டிகள் வாங்க அவர் வழக்கமாக செலவழிக்கும் அதே தொகைக்கு இருமடங்கு அதிகமாக, ருசியில் எவ்வகையிலும் குறைவில்லாத உடைந்த ரொட்டிகளை வாங்க இயலும்.! அந்த வாழ்க்கை பாடத்தை என்றுமே அவர் மறக்கவில்லை.

திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ கடந்து செல்லும் எவரும் அந்த இந்தியன் காஃபி ஹவுஸ் கட்டிடத்தின் மீது விழி பதிக்காமல் கடக்க முடியாது. நான் திருவனதபுரத்திற்கு செல்லும்போதெல்லாம் பிரம்மாண்டமான கலோசியத்தின் ஒரு பகுதி போலிருக்கும் அந்த கட்டிடத்தில் சென்று தேங்காய் எண்ணெயில் சுடப்பட்ட மைதா பூரியையும், தொட்டுக்கொள்ள பீட் ரூட் உருளை குருமாவையும் ஒரு ஜன்னலோரம் அமர்ந்து அவசரகதியில் இயங்கும் உணவகத்தில் கொஞ்சம் நிதானமாக வேடிக்கை பார்த்தப்படி உண்டபடி அமர்ந்திருப்பது வழக்கம். அது லாரி பேக்கர் கட்டிய கட்டிடம் என்று அவரை பற்றி அண்மையில் வாசித்த போது தான் அறிந்துகொண்டேன். லாரி பேக்கர் எனும் வரலாற்று ஆளுமையை அறிந்து கொண்டதும், நான் உணவருந்திய எனக்கு பிடித்தமான கட்டிடம் அவர் கட்டியது என்று அறிந்து கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.
பேக்கர் மனைவி எலிசபெத்துடன்
லாரி பேக்கர் மிக முக்கியமான அதைவிட சுவாரசியமான ஆளுமை. 1917 ல் இங்கிலாந்தின் பிர்மிங்காமில் பிறந்த அவர் கட்டிடக் கலை பயின்று இரண்டாம் உலகப்போரின் போது க்வாக்கர் அமைப்பில் தன்னை இணைத்து கொண்டு சீனாவில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றியுள்ளார். ஊர்திரும்ப முடியாமல் பலகாலம் பம்பாயில் சிக்கிக்கொள்ள நேர்ந்தபோது ஒரு க்வாக்கர் நண்பர் வழியாக அவர் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த சந்திப்பு அவருடைய வாழ்க்கையையே மாற்றியது. 1943 ல் காந்தியை சந்தித்தார் பேக்கர். “நீங்கள் மேற்கிலிருந்து அறிவையும், தகுதியையும் கொண்டு வருகிறீர்கள், ஆனால் எங்கள் தேவைகளை உங்களால் புரிந்துகொள்ள இயலாமல் அதனால் எந்த பயனும் இல்லை. உண்மையில் பம்பாய் போன்ற பெருநகரங்களில் அல்ல, கிராமத்தில் அதிலும் எளிய மக்களுக்கு தான் நீங்கள் அதிகம் தேவை படுவீர்கள்” என்றார் காந்தி. ஏதோ ஒருவகையில் காந்தியின் மீது ஈர்ப்புகொண்டு மீண்டும் 1945 ல் இந்தியாவிற்கே திரும்பினார் பேக்கர்.

பழைய கட்டிடங்களை மருத்துவமனைகளாக மாற்றும் பணி அவரிடம் அளிக்கப்பட்டது. மிகக் குறைந்த நிதியே அவருக்கு அதற்கு ஒதுக்கப்பட்டதால், மூங்கில், கீற்று, லேட்டரைட், என்று அவர் பிர்மிங்காமில் கற்ற கட்டிடக் கலைக்கு சம்பந்தமில்லாத எளிய செலவற்ற பொருட்களை கொண்டு கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டியிருந்தது. அங்கு பொறியாளருக்கும், கட்டிடகலை நிபுனருக்கும் பெரிதாக வேலையில்லை என்று உணர்ந்தார். கட்டிடகலையின் அடிப்படை கோட்பாடுகள் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என்றாலும் அவர் கையாளவுள்ள புதிய பொருட்களின் இயல்பை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. அவர் தொழு நோய் மருத்துவமனை ஒன்றை அப்படித்தான் நிர்மாணித்தார்.

கோடை காலங்களில் லாரி பேக்கர் திபெத் செல்வது வாடிக்கை. பேக்கர் அங்கு தான் எளிமையான பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் இந்திய கட்டிடவியல் பற்றி ஒரு புரிதலை எட்டினார். 1962 சீன போர் அவர்களுக்கு இடையூறை உருவாக்கியது. அதற்கு பின்னர் கேரள மேற்கு தொடர்ச்சி மலையில் வாகைமான் அருகில் அவர்களுடைய வசிப்பிடம் மாறியது. கேரளத்தில் அவருடைய ஐம்பதாவது வயதில் தான் முறையாக கட்டிடகலை நிபுணராக தொழில் தொடங்குகிறார். 1950 – 70 வரையிலான காலகட்டங்களில் அவர் கட்டிய பல கட்டிடங்கள் ஆவணபடுத்தபடவில்லை. தமிழகத்தின் அழகியபாண்டியபுரத்தில் அவர் ஒரு தேவாலயம் கட்டினார். ஹோஷங்காபாத்தில் ஒரு அரசு சாரா அமைப்பிற்கு கட்டிகொடுத்த அலுவலக கட்டிடம், அலகாபாத் பல்கலைகழக கட்டிடங்கள், வேளாண்மை கல்லூரி கட்டிடங்கள், லக்னோவின் மாநில அருங்காட்சியகம் போன்றவை அதில் அடங்கும்.


எழுபதுகளில் பேக்கர் கேரளாவிற்கு வரும்போது வளைகுடா நாட்டில் பணிபுரிந்த மலையாளிகள் பெரும் தொகை செலவிட்டு பிரம்மாண்டமான கட்டிடங்களை கட்டுவது தான் வாடிக்கையாக இருந்தது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் ஒரே மாதிரியான வசிப்பிடம் கட்டிகொடுக்க முடியும் என்பதை பேக்கர் உணர்ந்தார். புது போக்குகளை உருவாக்கினார். “ இன்றைய இந்திய மக்களின் தேவைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அந்த தேவைகளை ஈடு செய்ய வேண்டும் எனில் பிரம்மாண்டமாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு ‘சிறியதே அழகு’ எனும் அடிப்படையை நோக்கி நகர வேண்டும்” என்று அவர் கருதினார்.

பேக்கர் பணி செய்யும் பாணி அலாதியானது. வீடு கட்டுவதற்கு அவசியமான பொருட்கள் வீடு கட்டப்படும் இடத்திலிருந்து ஐந்து மைல் சுற்றளவிற்குள் இருந்து பெறப்பட வேண்டும் என்பதே காந்தியின் எண்ணமாக இருந்தது. பேக்கர் இந்த கொள்கையை முழுவதுமாக இல்லையென்றாலும் முடிந்தவரை பின்பற்றினார் என்றே சொல்லவேண்டும். பிற கட்டிடக்கலை நிபுணர் போல் இல்லாமல், அவர் எந்த முன்வரைவையும் வைத்துகொள்வதில்லை, கட்டிடம் எழுப்பும் இடத்திற்கே சென்று நேரடியாக பணியாற்றி, பயன்படுத்தப்பட்ட கடித உரைகள், திருமண அழைபிதழ்கள் போன்ற உபயோகமற்ற துண்டு காகிதங்களில் அப்போதைக்கு அப்போது வடிவமைத்து கட்டிடத்திற்கு உயிர்கொடுப்பார்.

எதிரில் தச்சரோ கொத்தனாரோ நின்று வரைபடம் உருவாவதை வசதியாக பார்ப்பதற்கு ஏதுவாக அவரால் தலைகீழாக வரைய முடியும். அவர் தனக்கு கீழே பணிபுரிய சம்பளம் கொடுத்து எவரையும் அமர்த்திகொண்டதில்லை, ஏனெனில் அதற்கான செலவை நுகர்வோரிடமிருந்து பெற வேண்டியதிருக்கும், அது செலவீனத்தை அதிகரிக்கும்.

பேக்கரின் வரைபடங்கள் கட்டுமான களத்திலேயே உருவாகும் கையால் வரைந்த படங்களே
அவருடைய திட்டத்தை செயல்படுத்த பொறியாளரின் துணையை அவர் நாடியதில்லை, மாறாக நேரடியாக அவர் பயிற்றுவித்த கொத்தனார்களும் வேலையாட்களும் தான் பணியாற்றுவார்கள். அவரை பொறுத்தவரையில் கட்டிடக் கலை நிபுணர் கட்டுமானத்தில் ஈடுபடுவதில் ஒன்றும் தவறில்லை. பிகாசோவை வெறும் முன்வரைவுகள் வரைய சொல்லி, எப்படி வரைய வேண்டும் எனும் கட்டளைகளை பெற்றுக்கொண்டு, ஓவியம் படைக்க கூடாது என அறிவுறுத்த இயலுமா? என்று கேட்டார். மேலும் அவர்கள் பேக்கர் கட்டிடம் வேண்டும் என்பதாலேயே தன்னை நாடி வருகிறார்கள் என்பதால் தானே நின்று செய்து கொடுப்பது தான் முறை என்று எண்ணினார். பிற நிபுணர்கள் போல் பேக்கர் தாள்களில் கோடுகள் வரைவதுடன் நிறுத்திகொள்வதில்லை, தன்னளவில் அவர் சிறந்த தச்சனும், கொத்தனாரும் கூட.

அபரிமிதமான சூழலியல் பிரக்ஞை அவருக்கு உண்டு, அதிக ஆற்றலை உறிஞ்சும் முறுக்கு கம்பிகளையும் சிமிண்டையும் கண்ணாடிகளையும் அவர் பெரும்பாலும் பயன்படுத்தாமல் தவிர்த்தார். பல வண்ண உடைந்த கண்ணாடி குப்பிகளை சுவர்களில் பதித்து விதவிதமான வர்ண ஒளிகளை பிரதிபலிக்க செய்வது அவருக்கு பிடிக்கும். அவர் ‘எலிப் பொறி’ (rat trap model) பாணியில் கற்களை பயன்படுத்தியதால் 25% கற்கள் சேமிக்க முடிந்தது மட்டுமின்றி, சுவர் வெவ்வேறு பருவங்களுக்கும் தட்ப வெப்பங்களுக்கும் பொருந்துவதாக இருந்தது.

பேக்கருக்கு மறு சுழற்சியின் மீது பெரும் நம்பிக்கை உண்டு. மண்ணால் ஆன இந்திய வீடுகளை மீண்டும் கட்ட முடியும். உடைந்து போன கண்ணாடி சில்லுகளை தனது குளியலறையில் தரைக்கு பயன்படுத்தினார். மேற்கூரையில் உடைந்த டைல்ஸ்களை பொருத்தியதன் மூலம் முப்பது சதவிகிதம் கான்க்ரீட் பயன்பாடை அவரால் குறைக்க முடித்து. அதுவே பேக்கர் பாணி வீடுகளின் அடையாளமாக மாறிவிட்டது. இரும்பிற்கு பதிலாக மரக்கட்டைகளையும் மூங்கிலையும் பயன்படுத்தினார். அதன் மூலம் செலவு ஐந்தில் ஒரு பங்காக குறைந்தது. அத்துடன் நில்லாமல் செலவு குறைப்பது குறித்தும், வேறு சிலவற்றை குறித்தும் எளிய செயல் விளக்க புத்தகங்களை கைப்பட வரைந்த ஓவியங்களுடன் வெளி கொணர்ந்தார்.


“நாம் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு நாம் இந்தியர்களாக சிந்தித்து வடிவமைக்க வேண்டும்” என்பார். “நவீன இந்திய கட்டிடக்கலை என்று தனியாக ஒன்று உண்டா என்றால்! இல்லை. சீனா, ஜெர்மனி, பெரு மற்றும் இந்திய நாட்டில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை ஒரு பாலைவனத்தில் வைத்தால் அவைகளுக்கு இடையே ஏதேனும் வேறுபாடி உணர இயலுமா என்ன? இவைகளில் எது இந்தியாவிலிருந்து வந்தது? எது பெருவிலிருந்து வந்தது என பிரித்தறிய முடியுமா? ஆனால் இடு பொருட்கள் வேறானவை, வேறு மாதிரியான வானிலை கொண்டவை, வாழ்க்கை முறையும் வேறானவை”

“நான் பணி செய்ய தொடங்குவதற்கு முன், அவர்களுடைய கட்டிடம் எழபோகும் மனையை காண வேண்டும். அது எத்தகைய நிலம் என்பதை அறிய வேண்டும் என்பது மட்டுமல்ல (மேட்டு பகுதி, சரிவு போன்றவை), அங்கு என்ன மரங்கள் இருக்கின்றன என பார்க்க வேண்டும். மேலும் அவர்கள் நல்ல பார்வை கோணங்கள் வேண்டுகிறார்களா? தோட்டம் போடும் திட்டமுண்டா? பிராணிகள் வளர்ப்பதுண்டா? தண்ணீர் வசதி எப்படி? காற்றின் திசை மற்றும் மழையின் திசை எது? என பலவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் தான் இந்த கட்டிடத்தை பயன்படுத்த போகிறார்கள் நான் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”

பேக்கர் தன் பங்கிற்கு பல எதிர்ப்புகளையும் சந்தித்தார். ஒரு கேரள பொறியியல் கல்லூரியில் உரையாற்ற சென்ற போது அவர் அந்த கல்லூரி பேராசிரியர் வடிவமைத்த கட்டிடத்தை விமர்சித்தார் எனும் காரணத்திற்காக அவரை அதற்கு பின்னர் அழைக்கவே இல்லை. கேரள அரசு 1986 ல் செலவு குறைந்த கட்டிடங்களை எழுப்ப திட்டமிட்ட போது பேக்கர் பாணியிலான கட்டிடங்களை நிராகரிக்கும் போக்கையே பெரும்பாலான கட்டிடக்கலை நிபுணர்கள் முன்வைத்தனர். அதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் பகிரங்கமாக ஒரு கட்டிடக்கடை வல்லுநர் எழுந்து ‘இந்தக் கட்டிடங்கள் இன்னும் ஓராண்டு தாங்கினால் கூட அதிசயம் தான்’ என்றார், ஆனால் பேக்கர் எழுபதுகளில் கட்டிய கட்டிடங்கள் இன்றும் ஆரோக்கியமாக நின்று கொண்டு தான் இருக்கின்றன.

பேக்கரின் பிரத்யேக ரேட் ட்ராப் பாண்ட்மேசனரி [Rat Trap Bond] 

நுகர்வோர் நேரமாகிவிட்டது என அவரை நச்சரிக்கும் போது ‘ஏன் எனக்கு மாறுபட்டு சிந்திக்க கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க கூடாது?’ என வருந்துவார். ஒருமுறை ஒரு மேஸ்திரியை கடுமையாக கோபித்து கொண்டு பின்னர் அவரிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதிய தருணங்கள் கூட உண்டு. பொதுவாக கட்டிடக்கலை நிபுணர் கட்டுமானத்தில் ஈடுபடும் போது அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்களை கட்ட முடியாது என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் 85 வாக்கில் கேரளத்தில் மட்டும் அவர் சுமார் ஆயிரம் கட்டிடங்கள் எழுப்பியிருந்தார். அலுவலகத்தில் அமர்ந்து நுணுக்கமாக வரைய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் நேரம் மிச்சமாகிறது, மேலும் களத்திற்கு செல்வதால் நுகர்வோருக்கு தகுந்த மாற்றங்களை அப்போதைக்கு அப்போது பெரும் நஷ்டங்கள் ஏதுமின்றி செய்ய இயலும். கேரளம் தவிர வெளி மாநிலங்களிலும் நிறைய கட்டிடங்கள் எழுப்பியிருக்கிறார்.

மண்ணை கொண்டு பேக்கர் அதிக கட்டிடங்கள் கட்டவில்லை. மண்ணை கட்டியாக்கி அவர் கட்டியவற்றில் முக்கியமான கட்டிடங்களில் திருநெல்வேலி காது கேளோதோர் – வாய் பேசாதோர் பள்ளியும் ஒன்று. “எல்லோரையும் மண் வீடு கட்டிகொள்ள வேண்டும் என நான் கோரவில்லை, எல்லோரும் வீடு கட்டிகொள்ள வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன், அந்த இலக்கை மண்ணை கொண்டு மட்டுமே அடைய முடியும். கிராமங்களில் நாம் காணும் இல்லங்கள் குறைந்தது எழுபது என்பது வருடங்கள் பழமையானவை. மண் எளிதாக கிடைக்க கூடியது, அதிக ஆற்றல் தேவைபடாதது. இரும்பையும் கான்க்ரீடையும் கொண்டு தான் நாம் அத்தனை வீடுகளையும் கட்ட போகிறோம் என்றால் அது நம்மால் முடியவே முடியாது. இருபது முப்பது மில்லியன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அது மண்ணால் மட்டுமே முடியும்.”

நமது வீடுகளில் நமக்கு தங்குவதற்கு இடம் வேண்டும், தூங்குவதற்கு மூன்று இடங்கள் வேண்டும், தந்தையும் தாயும் உறங்க வேண்டும், ஆண் பிள்ளைகள் உறங்க வேண்டும், பெண் பிள்ளைகள் உறங்க வேண்டும். சமையலுக்கும் ஒரு இடம் வேண்டும். இவற்றில் சின்ன சின்ன மாறுதல்கள் தேவைப்படலாம். மண், லடேரிட், மூங்கில் கல் என பலவற்றை கொண்டு சாதிக்கலாம். கட்டிடவியல் என்பது எவை நல்லவையோ, எவை பயனுள்ளதோ, எவை நடைமுறைக்கு உகந்ததோ அவைகளை பற்றிய விதிமுறைகளின் தொகுப்பு தான். இவ்வகையில் இசைக்கு அது மிகவும் நெருக்கமானதும் கூட” என கருதினார்.

“அழகு என்பது உண்மையை பொருத்த ஒன்று தான். கல் கல்லை போல் இருக்க வேண்டும். செங்கல் அதைப்போல் இருக்க வேண்டும்.நாம் பொருட்களை அதன் இயல்புக்கு ஏற்ப பயன்படுத்தினால், பிரம்பு, மூங்கில், செங்கல், கல் என எது பயன்படுத்தினாலும் அதுவே அழகாக இருக்கும்.” எவ்வித அழகியலும் இல்லாத தட்டையான கான்க்ரீட் வீடுகள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் பேக்கர் முகப்பு சரிவுகளை அமைத்தார். மழை அதிகம் பொழியும் கேரளத்தில் மரபான வீடுகளின் கூரைகள் சரிவுடன் தான் கட்டப்பட்டன. அதையே பேக்கரும் கையாண்டார். இந்திய கட்டிடங்களின் மகத்தான பாரம்பரியங்களை அவர் உணர்ந்தே இருந்தார். திருவனந்தபுரத்தில் பழங்கால கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட ஆவன செய்யப்பட்ட போது அவர் அதை எதிர்த்தார். இங்கு கட்டப்படும் நவீன கட்டிடங்களுக்கும் கேரள சூழலுக்கும், அங்கு கிடைக்ககூடிய பொருட்களுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் எவ்வித தொடர்பையும் தன்னால் காண முடியவில்லை என்றார்.

பேக்கர் அகில உலகில் பல அங்கீகாரங்களை பெற்றிருந்தாலும், 1988 ல் இந்திய குடிமகனாக அங்கீகரிக்கபட்டதை மிகப் பெரிய பெருமையாக கருதினார். அதன் பின்னர் பத்ம ஸ்ரீ விருது அளித்து கவுரவிக்கபட்டார். பேக்கரும் அவர் மனைவி எலிசபெத்தும் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தனர். திலக் எனும் ஆண் பிள்ளையையும், வித்யா ஹெய்டி எனும் இரு பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்தனர். ஏப்ரல் ஒன்று, 2007 அன்று தன்னுடைய தொண்ணூறாவது வயதில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தார்.

பேக்கரின் மிக முக்கியமான பங்களிப்பு என்பது நவீன கட்டிடவியலில் உள்ள இந்தியத்தன்மை என்ன என்பதை இந்தியர்களுக்கு உணர்த்தியது. சூழலியல் பிரக்ஞையுடன், இயற்கையின் நீட்சியாக அதே சமயம் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் விதமாக, சிக்கனமாக மனிதர்களின் வசிப்பிடங்களை உருவாக்க முடியும் என உணர்த்தியது இந்தியர்களுக்கும் உலக மக்களுக்கும் அவரளித்த மகத்தான பங்களிப்பு என உறுதியாக கூறலாம்.

லாரி பேக்கர் வடிவமைத்து கட்டிய 3 மாடிகள் கொண்ட வீடு
 அவருடைய இரண்டு மேற்கோள்களை நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும்..“உயர் குடி, மத்திய வர்க்கம், ஏழை, பழங்குடிகள், மீனவர்கள் என வெவ்வேறு வர்க்கத்தினருக்காக நான் கட்டிடங்கள் கட்டுவதில்லை. நான் ஒரு மேத்யுவிற்கும், ஒரு பாஸ்கரனுக்கும், ஒரு முணீருக்கும், ஒரு சங்கரனுக்கும் தான் கட்டிடம் கட்டுகிறேன்.”

“இன்னும் எத்தனையோ மக்கள் கட்டிடம் என்று அழைக்கப்படும் ஒன்றுக்கு அருகில் கூட இல்லை என்பதை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டாமா? நாம், கட்டிடகலை நிபுணர்களாக, உயர்ந்த தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களாக, இந்த பிரம்மாண்ட தேவையை போக்க மிகக் குறைவாகவே செயல்படுகிறோம். கட்டிடத்தை விட்டுவிடுங்கள், சிறிய குடிசை கூட இல்லாமல் இருபது மில்லியன் குடும்பங்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். நாமும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதித்து கொண்டிருக்கிறோம் என்பது வெட்கக் கேடானது.”

பேக்கர் கவலைபட்டது நியாயம் தான். புள்ளி விவரங்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம். அந்த கேள்வி இன்னும் வீர்யமுடன் தான் இருக்கிறது. விடையை நோக்கிய பயணம் இன்னும் நெடுன்தொளைவை அடைய வேண்டியிருக்கிறது. 


====0000====
நண்பர்களே கட்டுரையை முழுதும் படித்து விட்டீர்களா?உங்களுக்கும்,லோ காஸ்ட் ஹவுசிங்,சஸ்டய்னபிள்,ஈகோ ஃப்ரெண்ட்லி ஹவுசிங் பாணியில் வீடு கட்டிக்கொள்ள ஆசை எழுந்தால் பாண்டிச்சேரியின் அருகே இருக்கும் ஆரோவில் எர்த் இன்ஸ்டிட்யூட்டை அணுகலாம்.
இந்த நிறுவனம் நம் கட்டுமானம் நடக்கும் இடத்தில் இருக்கும் மண்ணை வெட்டி எடுத்து சுத்தம் செய்து அதை அவர்களின் சிறப்பு பயிற்சி பெற்ற கட்டுமானக்குழுவினரால், கம்ப்ரெஸ்ட்  எர்த் ப்ளாக்குகளாக தயாரித்து, அதை நீரில் மூழ்கவிட்டு க்யூரிங் செய்து, கட்டுமானத்துக்கும் பயன்படுத்துகின்றனர், மிகவும் அவசியமான  இடங்களில் லின்டெல்கள், ரூஃப் ஸ்லாப்பிற்காக சிமென்ட் காங்கிரீட் பயன் படுத்துகின்றனர்,
இரும்புக் கம்பிகளும் அப்படியே, தவிர வீட்டின் கூரைகளுக்கு இவர்கள் ஃபில்லர் ஸ்லாப் மட்டுமே பயன் படுத்துகின்றனர், ஃபில்லிங்கிற்காக மங்களூர் ஓடுகளை யோ,அல்லது பான் ஓடுகளையோ கம்பிகளுக்கு இடையே அடுக்கி கூரைக்கு காங்கிரீட் ஜல்லி போடுகின்றனர்,இவர்களே 800 சதுர அடி முதலான நகரும் வீடுகளுக்கு [movable houses] டிசைன் செய்து கட்டுமானமும் மிக துரிதமாக செய்து தருகின்றனர்.http://www.earth-auroville.com/ மேலும் இந்த சிறப்பு பயிற்சியையும் அவ்வப்பொழுது ஆரோவில்லில் 15 நாள் பாடமாக வழங்குகின்றனர்.சுட்ட செங்கல்லை விட கம்ப்ரெஸ்டு மட் ப்ளாக் இன்னும் பலம் வாய்ந்தது,அளவு பெரியது,சுற்றுப்புறச் சூழலை கெடுக்காதது.இவர்களுடைய குழு தான் தியானலிங்கம் இருக்கும்,மேசன்ரி டோமை கட்டியவர்கள். http://www.earth-auroville.com/moveable_house_en.php

2 comments:

Meenakshisundaram Krishnasamy சொன்னது…

நல்ல பேக்கர் அறிமுக கட்டுரை நண்பரே. சென்னையில் இருப்பவர்கள் அவசியம் தக்சின் சித்ரா பார்க்க வேண்டும்.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

மிகவும் பயனுள்ள கட்டுரை.ஏனென்றால் நான் இனி மேல்தான் வீடு கட்ட வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)