பரதம் படத்தில் வரும் ரகுவம்ஸபதே பரிபாலயமாம் முக்கியமான பாடல், அண்ணன் ராமனின் சிறப்பை பரதன் பாடுவது போன்ற பாடல், இது தாஸேட்டா தன் தனிக்கச்சேரிகளில் பாடும் பாடல்,
இது படத்தில் வரும் சிச்சுவேஷனும் அண்ணன் தம்பி பாசத்தை மிக அருமையாக பறைசாற்றும்,
அண்ணன் நெடுமுடி வேணுவின் குடிப்பழக்கத்தால் நின்று போன வெளியூர் கச்சேரி ஒன்றை, தம்புர் மீட்டும் தம்பி மோகன் லால் சடுதியில் பாடி குடும்பப் பெயரைக் காப்பாற்றுகிறார்.
அதிலிருந்து அண்ணனின் அந்திமம் துவங்குகிறது, ஆனால் இதற்கு மோகன்லால் காரணமல்ல, இனி அண்ணனை யாரும் புதிய கச்சேரிகளுக்கு ஒப்பந்தம் செய்யாமல், அதே வீட்டில் வசிக்கும் தம்பி மோகன்லாலையே கேட்கின்றனர்,
இது தான் இனி சாஸ்வதம் என அதை அண்ணனும் குடும்பமும் ஏற்கிறது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவான மோகன்லால் தீவிரமாக கச்சேரிகள் செய்யத் துவங்கும் தருணம்
அண்ணனின் ஆசிர்வாதம் வாங்கி, கோவையில் சென்று முதல் கச்சேரி செய்கிறார், அண்ணன் குடி போதையில் தம்பி பாடுவதை பார்வையாளராக அமர்ந்து
பார்த்தவர்,
தன் பாட்டன், தந்தை தான் பாடியதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு ஆலாபனை செய்யும் தம்பியை தள்ளாடியபடி மேடையேறிப் போய் உச்சி மோர்ந்து முத்தமிட்டு, தன் தங்க சங்கிலியையும் அணிவித்தபின் மேடை இறங்கியவர், மனதில் எந்த காழ்ப்புணர்வுமின்றி புதிய உதயம் ஒன்றைத் தேடிச் செல்வார்
மிக அற்புதமான காட்சி அது, லோஹிததாஸ் மற்றும் சிபி மலயில் இருவர் தந்த ஒப்பற்ற படைப்புகளில் பரதம் முதன்மையானது, மிகுந்த பரவசமானது, அத்தனை அற்புதமான படைப்பு பரதம்,
லாலேட்டன், நெடுமுடி வேணு, லட்சுமி, ஓடுவில் உண்ணிகிருஷ்ணன் , முரளி, ஊர்வசி, கவியூர் பொன்னம்மா என மிக அருமையான காஸ்டிங் இப்படத்தின் பலம், ரவீந்திரன் மாஷேவின் இசை, தாஸேட்டனின் குரல் என இப்படத்தின் பாடல்கள் அத்தனை சிறப்பு பெற்றவை
படம் பற்றி எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்