லால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஸக்காரியாயுடே கர்ப்பிணிகள் [സക്കറിയായുടെ ഗർഭിണികൾ ] [Zachariayude Garbhinikal] [மலையாளம் ][2013]



க்காரியாயுடே கர்ப்பிணிகள் படம் பார்த்தேன், படத்தின் தலைப்பை பார்த்தவுடன் லால் தான் ஸக்காரியா,அவரின் மனைவிமார் ஒரே சமயத்தில் கர்ப்பம் தரித்தனரோ? என குழப்பியது, நல்ல வேளை அப்படி இல்லை,ஸக்காரியா [லால்] ஒரு கைனகாலஜிஸ்ட்,தனியார் மகப்பேறு மருத்துவமனையும் வைத்திருக்கிறார்,அவரிடம் தற்சமயம் மருத்துவ ஆலோசனை செய்து வரும் 4 +1 பெண்களின் கதை இது,அந்த +1 என்று சொன்னது ஸக்காரியாவிடம் வேலை பார்க்கும் ஃபாத்திமாவின் உபகதை.

இந்த 5 கதைகளுமே கேரளாவில் உண்மையாகவே நடந்தவை என்பதும் ஒரு சிறப்பு, செவிலியர் ஜாஸ்மின் ஜெனிஃபர் [கீதா ] 40 வருடங்களாக கர்த்தரின் சேவையில் வாழ்ந்தவர் கன்னி மேரியைப் போல ஆடவருடன் கலக்காமலே தாயாக விரும்புகிறார்,கேரளம் முழுக்க இது தான் பேச்சாக இருக்கிறது, 52 வயதான  பெண்மணியான இவர்  செயற்கை பரிசோதனைக்குழாய் கருத்தரிப்பு [artificial insemination. ]மூலம் கருத்தரிக்கிறார்,இவருக்கு ஸக்காரியா தான் ஆலோசனையும் தொடர் சிகிச்சையும் வழங்குகிறார்.

இன்னொரு பெண்ணான அனுராதா கோடீஸ்வர மோட்டார் ரேஸ் வீரரின் மனைவி,அவர் முன்பே ஆண்மை இழந்தது தெரியாமல் பணத்துக்காக வயதான அவரை திருமணம் செய்து கொள்ள , அவரோ ஒர் ரேஸ்  விபத்தில் தண்டுவடத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிவர,அவரின் நண்பன் ஒருவரின் கள்ளக்காதல் வலையில் விழுந்தவள் கருத்தரிக்கிறாள்,கரு 4 மாத வளர்ச்சி அடைந்துள்ள நிலை, இரட்டைக் குழந்தை வேறு, கருவை கலைக்கவே முடியாத நிலை,கணவன் இறந்தவுடன் அவரின் குழந்தையாக இதை வெளியுலகிற்கு அறிவிக்க எண்ணி அவரின் இறுதி நாட்களை எண்ணுகிறாள், ஆனால் அவர் அற்புதம் ஒன்று நிகழ தேறி வருகிறார், கள்ளக் காதலனோ கருவை கலைக்கவேண்டும் என்கிறான்,இவருக்கு ஸக்காரியா தான் ஆலோசனையும் தொடர் சிகிச்சையும் வழங்குகிறார்.

அடுத்த பெண்ணாக நம் ரேணிகுண்டாவில் பார்த்த சனுஷா,சாய்ராவாக வருகிறார்,இவர் 17 வயது +2 படிக்கும்  பள்ளி மாணவி,தான் சுமக்கும் கருவுக்கு காரணமானவர் யார் எனக் கேட்கக்கூடாது, கருவைக் கலைக்க அறிவுருத்தக் கூடாது, கருவினால் தன் படிப்பு பாதிக்கக்கூடாது,பிள்ளை பெற்றவுடன் அதை பிள்ளைப்பேறு இல்லாத நல்ல தம்பதியருக்கு தத்து கொடுக்க உதவ வேண்டும் என்னும் நிபந்தனைகளுடன் ஸக்காரியாவிடம் சிகிச்சைக்கு வருகிறாள்,இவள் கதையையும் பத்மராஜன் எழுதிய முக்கியமான சிறுகதையான மூவந்திக்கும் இயக்குனர் ஒரு அற்புதமான கனெக்‌ஷனை வைத்திருக்கிறார், அந்த சிறுகதையை அனிமேஷன் ஃப்ரேம்களாக படமாக்கியிருந்தார்,

அது கடைசி ரீலில் வரும்,அதனால் காபிரைட் வழக்கு பிரச்சனையில் மாட்டி,சாட்டிலைட் உரிமத்தில் சமரசம் செய்து கொண்டு படத்தை வெளியிட்டுள்ளார்,ஆனால் அந்த கனெஷன் மிகவும் அற்புதமான ஒன்று,இந்தப் படத்தை உலகசினிமாவாக மாற்றும் ஒரு தரமான இணைப்பு அந்த கனெக்‌ஷன்.சனுஷாவின் அப்பாவை நோட் செய்து கொள்ளுங்கள்,இந்த பீடோஃபைல், இன்ஸெஸ்ட் தகப்பன் வேடத்தில் நடிக்க எத்தனை நெஞ்சுரம் வேண்டும்,அதை தயங்காமல் சாதித்துக் காட்டியுள்ளார்   நம் ரவீந்தர்  ,அவர் கண்ணாடி போட்டு சிகையலங்காரத்தையும் மாற்றியதால் முதலில் அடையாளமே தெரியவில்லை.

மற்றுமொரு பெண்ணாக டாக்டர் ஸக்காரியாவின் மனைவி ஸூஸன்[ஆஷா சரத்]இவர்களுக்கு மணமாகி 20 வருடங்களாகவே குழந்தை இல்லை,சனுஷாவை பிள்ளைப்பேறுக்காக தன் வீட்டிலேயே தங்க வைக்கும் இவர் சனுஷாவை தன் குழந்தையைப் போல எண்ணி தாயாகாமலே தாய்மை அடைகிறாள்.அது மிக நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது,தன் வயிற்றில் தலையனையை கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக போட்டோவுக்கு போஸ் தரும் அந்த தருணம், பிள்ளையில்லாதவர் வேதனையை சொல்லாமல் சொல்லும்.

அடுத்த பெண்ணாக ஃபாத்திமா[ரீமா கல்லிங்கல்]இதில் கொச்சையாக  மலையாளம் பேசுகிறார்[மெட்ராஸ் பாஷை போல],அதை அசல் மலையாளிகளுக்கு நன்கு இனம் காண முடியும், சூஸனைப் போன்றே இவரும் கர்ப்பிணி அல்ல, பெற்ற தந்தை விட்டு ஓடியிருக்க, வளர்த்த அம்மா நர்சிங் படிக்க வைத்து மரித்தும் போயிருக்க, தம்பியுடன் தனியாக வசிக்கிறாள், ஸக்காரியா கர்ப்பிணிகளுக்கு மட்டுமே மனமிறங்குபவர் , என்னும் உண்மையைக் கேட்ட மாத்திரத்தில் இவர் வேலைக்கு தாமதமாக வந்ததன் காரணத்தை கோபமாகக் கேட்கும் ஸக்காரியாவிடம் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமலே தான் கர்ப்பம் என்கிறார்,

இதனால் அவளுக்கு ஸக்காரியாவிடமும்,தன் வீட்டு எஜமானரிடமும்,  பேருந்திலும், சமூகத்திலும் பல சலுகைகள் கிடைக்கிறது, இவளுக்கு  இரவுப் பணியே வழங்கப்படுவதில்லை,  எல்லாவற்றிற்கும் மேலாக இவள் கணவன் விட்டு ஓடிப்போய்விட்டான் என்னும் பொய்யை நம்பிய சக ஊழியன் அஜ்மல் இவளுக்கும் இவளின் சிசுவுக்கும் வாழ்க்கை தர தயாராகிறான், அவையெல்லாம் மிகவும் யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

படம் அவசியம் பாருங்கள்,ஆபாசம் எங்குமே இல்லை, ஆனாலும் வயது வந்தோர் மட்டும் பார்க்க வேண்டிய படம், படம் தரவிறக்க லின்க்,சப்டைட்டிலும் உடன் கிடைக்கிறது.
https://torrentz.eu/328243ce434d01d5e3a5a3af17c5938972ebe7b0

பிஃபோர் த ரெயின்ஸ் [Before the Rains][2007][இந்தியா]


ந்தோஷ்சிவன் இயக்கிய பிஃபோர் த ரெயின்ஸ் என்னும் படம் மீண்டும் பார்த்தேன்,சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படங்களில் மகர மஞ்சு, உருமி என ஏகம் குப்பைகள், இது மற்றும் டஹான் மட்டுமே தப்பிப்பிழைத்த படங்கள் என்பேன், 2001 ஆம் ஆண்டு வெளியான  யெல்லோ ஆஸ்பால்ட் என்னும் இஸ்ரேலிய நாட்டுப் படத்தை திரைவிழாக்களில் கண்டு மிகவும் சிலாகித்த சந்தோஷ் சிவன் அதற்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக அப்படத்தைத் தழுவி தயாரித்து இயக்கிய படம் பிஃபோர் த ரெய்ன்ஸ்.படத்தின் சிறப்பே அதன் கதை,லொக்கேஷன் மற்றும் காஸ்டிங் என்பேன்.

யெல்லோ ஆஸ்பால்ட்-மூலப் படத்தின் போஸ்டர்
யெல்லோ ஆஸ்பால்ட் என்னும் இஸ்ரேலியப் படமும் நான் பார்த்திருக்கிறேன், அது நிகழ்காலத்தில் நடக்கும் கதை, அரேபியப் பாலைவனத்தின் சூழலில் நடக்கும் நெறியில்லா காதலையும் காமத்தையும் பறைசாற்றும் படம், இப்படம் ப்ரிட்டிஷ் இந்தியாவின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியில் மலபாரில் நடக்கும் கதை, ஆனால் அதே நெறியில்லா காதலும் காமமும் மட்டும் உண்டு. இதுவரை நான் கண்ட ரீமேக் படங்களில் மூலத்தை விட மிக அற்புதமாக வந்த தழுவல் இது தான் என்பேன். இப்படத்தை பாலா பார்த்திருந்தால் பரதேசி படத்தினை இன்னும் நன்றாக கொண்டு வந்திருக்க முடியும், உள்ளூரில் எடுக்கப்பட்ட உலகசினிமாவின் தரத்துக்காக சொன்னேன். பரதேசியில் செழியனின் ஒளிப்பதிவு மிக அருமையாக இருந்தும் பொருந்தாத காஸ்டிங், செட், கதை, திரைக்கதையினால் விழலுக்கு இறைத்த நீரானது எல்லோருக்கும் தெரிந்ததே.

1937 ஆம் ஆண்டு, மலபார் பிரதேசம், மேற்குத் தொடர்ச்சி மலைகளினூடே பழங்குடிகள் வசிக்கும் ஓர் அழகிய மலைக்கிராமம், ஊரினூடே ஆறும், அருவியும் கொண்ட எழில் பரப்பும் உண்டு, சுதந்திரப் போராட்டம் சூடு பிடித்திருக்கும் காலகட்டம், ஏற்கனவே அடர்ந்த காடுகளை அழித்து ஆங்கிலேய அதிகாரிகளின் டீ எஸ்டேட்டுகளும் ,அவற்றுக்கான சாலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன,

இப்போது குறுமிளகு,ஏலக்காய்,லவங்கம்,பட்டை போன்றவற்றை பயிரிடத் தோதான நிலப்பரப்பை தேர்ந்தெடுத்து அதற்கு தனியார் மலைச்சாலை உருவாக்கி, அவற்றை ஆங்கிலேயெ கனவான்களுக்கு தனித்தனி எஸ்டேட்டுகளாக பிரித்து விற்க, ஹென்ரி மூர் [Linus Roache ]என்னும் ஆங்கிலேய டவுன்ப்ளானிங் இஞ்சினியர் அவ்வூருக்கு வருகிறார்,இவருக்கு என்று எழில் கொஞ்சும் ஒரு ஆங்கிலேயெ கிராமப்புர வீடு போல அமைத்துக் கொள்கிறார், அழகிய மனசாட்சிக்கு பயந்த மனைவி லாரா [Jennifer Ehle], புத்திசாலியான மகன் பீட்டர் என்று அழகிய குடும்பம்,

சஜ்ஜனி,லாரா,பீட்டர்
நம்பிக்கையான உதவியாளன் டீ.கே,நீலன் [ராகுல் போஸ்] அழகிய வேலைக்காரி சஜ்ஜனி [நந்திதா தாஸ்] என வாழ்க்கை சாஹேப்புக்கு மிக ரம்மியமாகப் போகிறது, இவரின் நம்பிக்கையான உதவியாளன் நீலனின் உழைப்பை கண்டு மெச்சிய மூர் சாஹேப் அவனுக்கு தன்னுடைய ப்ரிடீஷ் பிஸ்டலை பரிசளிக்கிறார்.அவனுடைய உதவியின்றி சாலை திட்டமிடுதல் பணி நடந்தேறியிருக்காது என்று புகழ்கிறார், வரும் மழைக்காலத்துக்கு முன்பாக திட்டமிட்டபடி சாலையை அமைக்க இவனையே பெரிதும் நம்பியிருப்பதாகச் சொல்கிறார், அமைக்கவிருக்கும் சாலைக்கு அவனுடைய பெயரை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என அதீதமாகப் புகழ்கிறார்.

நீலன் நேர்மையும் நல்ல உழைப்பும் கொண்டவன்,ஆங்கிலம் நன்றாக பேச ஆரம்பித்திருக்கிறான், இப்போது நல்ல வேலையும், அதற்கேற்ற சம்பளமும், மூர் சாஹேப்பின் வீட்டின் அவுட் ஹவுஸிலேயே இவனுக்கு தங்கும் இடமும் கிடைக்க மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறான், தன் வயதான அப்பா, அம்மாவை அடிக்கடி தன் கிராமத்திலும் சென்று பார்த்து வருகிறான், இவனுக்கு உறவிலேயே பெண் நிச்சயிக்கப்பட்டிருக்க,அவன் திருமணத்தில் பிடிப்பின்றி இருக்கிறான். இவன் அப்பா [திலகன்] தான் அவ்வூரின் தலைவர், அவருக்கு மகன் ப்ரிட்டிஷாருக்கு பணியாளாக இருப்பது பிடிப்பதில்லை, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதையே விரும்புகிறார்.

மூர் சாஹேப்பின் மனைவியும் ,மகனும் ஒரு மாதம் கோடை விடுமுறையை கழிக்க லண்டன் செல்கின்றனர், ஒரு பழமொழி சொல்லுவர். கிளி போல பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி தேடும் ஆணின் நெஞ்சம் என்று, இவர் முரணாக தன் பேரழகு வேலைக்காரி சஜ்ஜனிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து, அவளின் கணவன் அவளுக்கு காட்டாத அன்பை திகட்ட திகட்ட பொழிந்து, அவளை மடித்து வழிக்கு கொண்டு வந்து விடுகிறார், வீட்டுக்குள் புணர்ந்து திகட்டிய பின்னர் இயற்கை சூழலிலும் புணர எண்ணியவர்கள், மலைத்தேன் எடுக்க ஒருவரும் அறியா வண்ணம் ஜீப்பில் சென்று  அருவி திட்டுக்கு மேலே ரசித்துப் புணர்கின்றனர். அதை இரு சிறுவர்கள் மாங்காய் பறிக்க வந்துவிட்டு பார்த்தும் விடுகின்றனர்.

அன்றைய தினம் வீடு திரும்பி மற்ற காரியம் முடிக்க மிகவும் தாமதாமாகி விட்டபடியால், மூர் சாஹேப் நீலனை அழைத்து, சஜ்ஜனியை அவளின் கிராமத்தில் விட்டு வரச் சொல்கிறார், சஜ்ஜனி மீது நீலனுக்கு பள்ளிப் பிராயத்திலிருந்தே ஒரு ஈர்ப்பு இருக்கிறது, ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள். சஜ்ஜனி பெற்றோர் இல்லாதவள், ஒரே தம்பி மனஸ் [இந்த்ரஜித் சுகுமாரன்] மட்டும் தான், ஊரின் பெரியவர்கள் சஜ்ஜனிக்கு பொருத்தமான துணையாக சற்றே வயது முதிர்ந்த, எழுதப் படிக்காத ரஜத் [லால்] ஐ திருமணம் செய்து வைத்தும் விடுகின்றனர்.

இருவருக்கும் ஏழாம் பொருத்தம், அழகிலோ, அறிவிலோ, ரசனையிலோ ஒத்துப்போவதில்லை, தவிர ரஜத் வெகு முரடன் வேறு, அடிப்பவன், பெண்ணடிமையை விரும்புபவன், இவற்றிற்கெல்லாம் எதிர் மறையாக அதீத அழகுணர்ச்சிக்கு ரசனையுடன் அன்பை பொழியும் மூர் சாஹேப்பிடம் சஜ்ஜனி விழுந்து விடுகிறாள், பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று தெரிந்தாலும் அவள் அதற்கெல்லாம் பயப்படவில்லை, சாஹேப் தன்னுடன் ஓடி வந்து கூட வாழ்வான் என்று நம்பியிருக்கிறாள்.

அன்று நீலன் சஜ்ஜனியை வீட்டில் விட்டு வர, ரஜத் இவனை வெறுப்பாக பார்த்தவன், சஜ்ஜனியிடம் ஏன் தாமதம் ? எங்கே போய் சுற்றிவிட்டு வருகிறாய்? என்று கதவடைத்துவிட்டு அடித்து துன்புறுத்தி விசாரிக்கிறான், அவன் பிடியில் இருந்து விலகி துரிதமாக இரவுக்கு சமைத்தும் விடுகிறாள், அங்கே சஜ்ஜனியின் தம்பி மனஸ், நீலனைப் பார்த்தவன் இரவு கட்டாயமாக அங்கே சாப்பிட்டுப்போகச் செல்கிறான்,இருவரும் பால்ய சிநேகிதர்கள், அங்கே நீலன் சாஹேப் தனக்கு பரிசளித்த ப்ரிடிஷ் பிஸ்டலை நண்பனுக்கு பெருமையுடன் காட்டுகிறான், அவன் அதை வியப்பு மேலிட தடவிப் பார்க்கிறான்.

இப்போது கோடை விடுமுறை முடிந்து மூர் சாஹேப்பின் மனைவியும், மகனும் வந்துவிடுகின்றனர்,அவளுக்கு மூர் சாஹேப் இருக்கும் இடமே சொர்க்கமாகப் படுகிறது, தான் உல்லாசமாக குளிப்பதற்கு ஒரு பீங்கான் குளியல் தொட்டியையும் லண்டனிலிருந்து இறக்குமதி செய்து இவர்களின் குளியலறையில் நிறுவுகிறாள். நீலன் நிறைய படிப்பதை அறிந்து அவனுக்கு பெட்டி நிறைய புத்தகங்களையும் லண்டனிலிருந்து கொணர்ந்து பரிசளிக்கிறாள், இப்படி அங்கே அனைவருக்கும் மிக அன்பான எஜமானியாக நடந்து கொள்கிறாள். சாஹேப்பின் மனைவி எத்தனை நல்லவள் என்றாலும் வேலைக்காரி சஜ்ஜனிக்கு அவள் சக்களத்தியாகவே படுகிறாள். இப்போது மூர் சாஹேப்பிடம் மிகவும் அன்பையும் கோபத்தையும் ஒருங்கே  பொழிய ஆரம்பித்து விடுகிறாள் சஜ்ஜனி, சாஹேப்பும் அதை தடுக்கவில்லை,யுத்த களத்திலும் இரட்டை சந்தோஷம் காண்கிறார் சாஹேப்.

இப்போது வழக்கம் போல தாமதமாக வீட்டுக்கு போகும் சஜ்ஜனி,பூனை போல சமையல் செய்கிறாள், வெந்நீர் விளாவி,கணவன் ரஜத்தின் களைத்த கால்களுக்கு ஒத்தடமும் கொடுக்க விழைகையில், அந்த மூர்க்கன், இவளை நீ தேன்காட்டுக்குள் போனாயா?!! கண்ட சாட்சியுண்டு,மறைக்காதே!!! என்று கேள்விகளால் துளைத்து அடித்து துவைக்கிறான்,அவள் மௌனம் சாதித்தவள் சாஹேப்பின் பெயரை காட்டிக்கொடுக்கவேயில்லை, இனி அடி பொறுக்க முடியாது என்னும் நிலையில் தப்பி ஓடுகிறாள்.

இப்போது,சாஹேப் தன் வீட்டில் வைத்து தனக்கு சாலைப் பணிக்கு வங்கிக்கடன் வாங்கித்தரும் குடும்ப நண்பர் சார்லஸுக்கு இரவு விருந்து அளிக்கிறார். அப்போது இவரின் நாய் மிகவும் குலைக்க,இவர் திருடன் நுழைந்திருக்கக்கூடும் என்று தன் ரைஃபிளுடன் சென்று பார்க்க,அங்கே பலத்த ரத்த காயங்களுடன், சஜ்ஜனி இருட்டில் புதர் அருகே படுத்திருக்கிறாள், சாஹேப்பிடம் இனி தன்னால் பொறுக்க முடியாது, கணவனும் ஊராரும் சேர்ந்து தன்னை தூக்கில் ஏற்றி கொன்றுவிடுவர், தன்னுடன் ஓடி வந்து எங்கேயாவது கண்காணாத இடம் போய் வாழ வருமாறு அழைக்கிறாள், இவரை மிகவும் விரும்புவதாயும், இவரின் அன்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் சொல்கிறாள்,சஜ்ஜனி.சாஹேப் அதை ரசிக்கவில்லை.

இப்போது துப்பாக்கியுடன் போன மூர் சாஹேப்பை காணவில்லை என்று லாரா ,சார்லசைப் போய் பார்க்க அனுப்ப, அவர் அந்த பண்ணையை சுற்றித்தேடுகிறார், சஜ்ஜனியை அப்படியே தூக்கி வந்த மூர் சாஹேப் நீலனின் அவுட் ஹவுசுக்குள் நுழைகிறார், எப்படியாவது இவருக்கு உதவ நீலனை வேண்டுகிறார். தனியே அழைத்து பணம் தந்து அவளை கண்காணாத இடத்துக்கு கொண்டு போய் விடச் சொல்லுகிறார், நீலன் அவளை ஜீப்பில் அழைத்துப்போய் ஆற்றில் ஒரு படகுக்காரனிடம் பேசி அவளை வடக்கே ஏதாவது தொலைவான ஊரில் கொண்டு போய் விடுமாறு சொல்கிறான்,

படத்தில் வரும் மலைச்சாலை உருவாக்க காட்சி
இவள் சாஹேப்புடன் தன்னுடன் படகில் இணைந்து கொள்வார் என நினைக்க, நீலன் அவர் வரமாட்டார்,அவருக்கு சாலை,அதனால் கிடைக்கும் பணம்,அவர் மனைவி,அவர் மகன் தான் முக்கியம்,நீ அவரை மறப்பது தான் நல்லது என்று, பணத்தை அவளிடம் திணித்து கண்காணாத இடம் போகச் சொல்கிறான், ஏற்கனவே உன்னை ஊரும் உறவும் ஒதுக்கியது போலத்தான், எஞ்சியிருப்போரையாவது நிம்மதியுடன் வாழவிடு என கெஞ்சுகிறான் நீலன். அவள் கடைசி வரை நம்பவேயில்லை,சாஹேப்பின் அன்பை இவள் பெற்றதை பொறுக்காத நீலன் தான் இவர்களை பிரிக்கிறான் எனக் கொதிக்கிறாள்,அப்படியென்றால் ஊருக்குள் வா என்று நீலன் இழுக்க வேறு வழியில்லாமல் படகில் ஏறி பயணிக்கிறாள்.

இப்போது சஜ்ஜனியைக் காணவில்லை என்று அவளின் தம்பி மனஸ் மூர் சாஹேப்பின் வீட்டிற்கே தேடி வருகிறான், நீலனிடம் ஏதாவது தெரியுமா? எனக்கேட்கிறான்.இவர்கள் நேற்றே அவள் கிராமத்துக்கு திரும்பி விட்டாளே, என பதிலுரைக்கின்றனர்,

அன்று இரவு அதே போல நாய் குலைக்க,குதிரையும் ஓலமிட சாஹேப்பைத் தேடி யட்சினி போல சஜ்ஜனி நீலனின் அவுட் ஹவுசுக்குள்ளே வந்து குத்துக்கல் போல அமர்ந்து கொள்கிறாள், நீலன் என்னடா ஒண்ட வந்த பிடாரியாக திரும்பி விட்டாளே!!! என பயந்து போகிறான், சத்தம் கேட்டு சாஹேப்பும் அங்கே வர, சஜ்ஜனி ஓடிப்போய் அணைத்துக்கொள்கிறாள், நீலனைப் பற்றி புகார் செய்கிறாள்,சாஹேப் அவளை விலகியவர்,நீலனிடம் சொல்லி நான் தான் உன்னை வெளியூருக்கு அனுப்பச்சொன்னேன், நீ இங்கே இருந்தால் ஊரார் இங்கே வந்து உன்னை, நீலனை, என்னை என் குடும்பத்தையே அழிப்பார்கள், விலகிவிடு என்கிறார், அவரால் அவள் கண்ணை பார்த்து பேசமுடியவில்லை, அதை சாக்காய் வைத்து,என்னை விரும்பவில்லை என்று கண்ணைப்பார்த்து சொல்லுங்கள் என்கிறார்,சாஹேப் நான் உன்னை விரும்பவில்லை என்று சொல்ல,அங்கே நீலனின் ப்ரிட்டீஷ் பிஸ்டால் வெளியே இருக்க ,அதை சட்டேன்று எடுத்து தன் நெஞ்சில் பதித்து சுட்டுக்கொண்டு சரிகிறாள் சஜ்ஜனி.எல்லாம் முடிந்து விடுகிறது,சஜ்ஜனியை தோளில் அணைத்து கேவுகிறார் சாஹேப்.பின் தலை தெரிக்க வீட்டுக்குள் போனவர்.

அங்கே,மூரின் மனைவி கிராமபோனின் பலத்த சத்த இசையுடன் குளியல் தொட்டி நீரில் உல்லாசமாய் குளித்துக்கொண்டிருப்பதால் அவளுக்கு துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை என அறிகிறார்,இவர் அவளிடம் குதிரை லாயத்தின் தாழ்ப்பாள் பெயர்ந்து விட்டபடியால நானும் நீலனும் அதை இரவே சரி செய்யப்போகிறோம், நீ பூட்டிக்கொண்டு தூங்கு என்று சட்டையை மாட்டிக்கொண்டு வருகிறார்,

இப்போது நீலனுக்கும் சாஹேப்புக்கும் பிணத்தை மறைப்பதைத் தவிர வேறு வழியில்லை,சாஹேப்பின் நெறி தவறிய உறவு சஜ்ஜனியின் தற்கொலையில் முடிந்து, ஊராரின் கொலைவெறியை தூண்டி விட்டால் என்ன ஆகும் என அஞ்சுகிறான், சாஹேப் கல்லை கட்டி ஆற்றில் விட்டு விடுவோம் என்று சொல்ல, நீலனுக்கு ஜலசமாதி செய்வது பிடிக்கவில்லை, தற்கொலை செய்துகொண்ட அவளின் ஆன்மா அலையாமல் இருக்க அதை எரியூட்டுவதே சிறந்தது என்கிறான். ஆனால் சாஹேப் அந்த சிதையின் புகை நம்மை காட்டிக்கொடுத்துவிடும், என மறுத்து போர்வையில் சஜ்ஜனியை சுற்றி நிறைய கற்களை அதனுடன் அடுக்கி, அதை ஆற்றில் மூழ்கடிக்கின்றார்

இனி என்ன ஆகும்?
சஜ்ஜனியை தேடும் அவளின் சகோதரனுக்கு சஜ்ஜனியின் சவம் கிடைத்ததா?
சஜ்ஜனி சுட்டுக்கொண்ட நீலனின் துப்பாக்கியை அவர்கள் என்ன செய்தனர்?
தன் விருப்பத்திற்குரிய வேலைக்காரி சஜ்ஜனி காணாமல் போனதை அறிந்த சாஹேப் மனைவி லாரா என்ன செய்தார்?
தன்னிடம் அடிவாங்கி ஓடிப்போன மனைவி சஜ்ஜனியை ரஜத் தேடினானா?
மிகவும் கட்டுப்பெட்டியான அந்த கிராம மக்கள் ஓடிப்போன சஜ்ஜனியைப் பற்றி என்ன நினைத்தனர்?
சாஹேப்பின் ஒரே கனவான அந்த மலைச்சாலைப் பணிகள் நிறைவேறியதா? போன்றவற்றை படத்தில் பாருங்கள்.

படத்தின் ஒளிப்பதிவும் இசையும் இரு கண்கள் , பார்வையாளர் நெஞ்சை விட்டு அத்தனை எளிதில் அகலாத படம், படத்தில்  Mark Kilian இசையும் காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி உறவாடும் மாயாஜாலத்தைப் பாருங்கள். படத்தில் ராஜா ரவிவர்மா தன் தைல ஓவியங்களில் உபயோகப்படுத்திய எஃபெக்டுகளும், டோன்களும் நந்திதாதாஸின் தோன்றும் ஃப்ரேம்களில் பின்பற்றப்பட்டு,அதை உபயோகப்படுத்தி, அவரை எத்தனை அழகாக காட்ட முடியுமோ அத்தனை அழகாக ஒரு சகுந்தலை ஓவியம் போல காட்டியுள்ளார் சந்தோஷ் சிவன்.

படத்தின் ஒளிப்பதிவுக்கு இன்ஸ்பிரேஷனாக பதேர் பாஞ்சாலிக்கு ஒளிப்பதிவு செய்த Subrata Mitra.வின் புகழ்பெற்ற ஆக்கங்களை கிரகித்து உள்வாங்கி காட்சியமைத்திருப்பதும், அது தந்த அற்புதமான ரிசல்டுமே இதன் கூடுதல் சிறப்பு, ராகுல் போஸ் நடிப்பைப் பற்றி ஒருவர் சிலாகிக்காமல் இருக்க முடியாது,பேரலல் சினிமாவின் நம்பிக்கை ஒளி,இவரின் ஜாப்னிஸ் வைஃப், மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் வரிசையில் இதுவும் இவரின் நடிப்புக்கு சிறந்த போர்ட்ஃபோலியோ, இவரின் அப்பாவாக திலகன், நண்பனாக ஸ்ரீஜித் சுகுமாரன்,வேலைக்காரி சஜ்ஜனியாக நந்திதா தாஸ் அழகிய வேலைக்காரி வேடத்துக்கென்றே பிறந்தவர் போல,தொடர்ந்து அழகி,1947 எர்த்,பின்னர் இந்தப்படத்திலும் அழகிய வேலைக்காரி வேடம் இவருக்கு, சஜ்ஜனியின் கோபக்கார கணவனாக லால்,மூர் சாஹேப்பின் நல்ல மனைவி லாராவாக Jennifer Ehle என்று மிக அற்புதமான காஸ்டிங், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்று மிக அற்புதமான உருவாக்கப்பட்ட படம்.உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத படைப்பு.


படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

ஷட்டர் ഷട്ടർ [ Shutter ][2012][மலையாளம்]

நாடக நடிகரும், நாடக எழுத்தாளருமான ஜாய் மேத்யூவை நீங்கள் ஆமென் படத்தில் தலைமைப் பாதிரியாராகவும்,அன்னாயும் ரசூலும் படத்தில் அன்னாவின் ஒருவார்த்தை கூட பேசாத குடிகார அப்பாவாகவும் பார்த்திருப்பீர்கள்,அவர்  இயக்கிய படம் தான் ஷட்டர்,கத்தியின்றி ரத்தமின்றி ஒரு அட்டகாசமான லோ பட்ஜட் த்ரில்லர், க்ரைம்,பிகமி, செக்ஸ், ராபரி, டகாய்டி, இன்ஸெஸ்ட் வகை படங்கள் கூட கொடுக்காத ஒரு படபடப்பை கொடுத்த படம்,படத்துக்கு உயர்தர ஹைக்கூ கவிதை போலான ஒரு முடிவு என சிறப்பான இயக்கம்.படத்தை தயாரித்திருப்பது இயக்குனர் ரஞ்சித்.

இயக்குனர் ஜாய் மேத்யூ
லாலின் படங்கள் நான் விரும்பிப் பார்ப்பேன்,அற்புதமான நடிகர்,தலப்பாவு மற்றும் ஒழிமுறியில் மிகசிறப்பான நடிப்பை ஈந்திருந்தார்.இந்த படத்தின் டைட் க்ளோசப் காட்சிகளில் இதுவரை ஒருவர் லாலின் நடிப்பை தெரியாமல் இருந்தால் நிச்சயம் உணர்ந்து கொள்வர்.இரட்டை போனஸாக படத்தில் மகாநடிகன் சீனிவாசனும் உண்டு,ட்ராஃபிக் படத்தில் இவரின் நடிப்பு ஜவ்வு போன்ற அத்திரைக்கதையினால் விழலுக்கு இரைத்த நீரானது,இதில் மிக அற்புதமான இயக்குனர் பாத்திரம்,ரசிகர் மனதை நிறைக்கும்.விலைமாதுவாக நடித்த நடிகை சஜிதா அருமையாக பங்களித்திருந்தார்.இவர் ஒரு தேர்ந்த நாடக நடிகை ஆவார்.ஆட்டோ ட்ரைவர் சூராவாக வந்த வினய் ஃபோர்ட் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நல்ல நடிகர்,புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் நடிப்பு மாணவர்,இவர் நடித்து 2009ல் வெளிவந்த ரிது மற்றும் 2012ல் வந்த ப்ரபுவிண்டே மக்கள் படங்களிலும் மனிதர் மிக அருமையாக பங்களித்திருப்பார், கம்யூனிசம்,நாத்திகம்,ஆத்திகம்,யோகம்,தாந்த்ரிக் என்று அதன் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்த நல்ல வித்தியாசமான கதைக்களன் அது, அதில் ஒரு பறக்கும் ஆசனம் போடுவாரே பார்க்கனும்.வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்,அதிலும் இவரின் உழைப்பு புரியும்.


ஷட்டர் படம் இரண்டு பகல்கள், மூன்று இரவுகளில் நடக்கும் கதை. கதை நடைபெறும் இடம் கோழிக்கோடு நகரின் புறநகர் பகுதி. கல்ஃபில் பணிபு‌ரியும் ரஷீத் மிகவும் கண்டிப்பானவர்,சந்தேக புத்தியும் எதைப்பற்றியுமே முன்முடிவும் கொண்டவர். தன் மகள் நைலாவுக்கு 17 வயதாகின்றது,காதல் கத்தரிக்காய் என்று விழுந்துவிடக்கூடாது  என்னும் பதட்டத்தில் அவளுக்கு ஒரு கல்ஃப் மாப்பிள்ளையை நிச்சயித்து அவனின் விடுமுறைக்காக காத்திருக்கிறார்,இவருக்கு குறைவாக படித்த அழகிய மனைவியும்,ஒரு சிறிய மகளும் கூட உண்டு,பெரிய மகள் நைலாவுக்கு தொடர்ந்து படிக்கத் தான் ஆசை,அதற்கு கட்டுப்பெட்டியான மனைவியின் துணையுடன் முட்டுக்கட்டை போடுகிறார்.

இவரின் கல்ஃப் வருமானத்தில் கொஞ்சம் பெரிய வீட்டைக் கட்டி முன்னே உள்ள இடத்தில் வரிசையாக கடைகள் கட்டி வாடகைக்கும் விட்டுள்ளார், அதில் ஒரு கடை மட்டும் இவரும் இவரின் நண்பர்களும் இவர் விடுமுறையில் வரும் போது குடித்து கும்மாளமடிக்கவென்றே வைத்திருக்கிறார், பக்கத்து ஹாரன் ரிப்பேர் கடைக்காரன் கடையை காலி செய்யாமல் வழக்கும் போட்டு இவருக்கு தண்ணி காட்டுகிறான், இது ஒரு கதை.

மற்றொரு கதையாக ஒரு வழக்கொழிந்து போன ஒரு பரிட்சார்த்த சினிமா இயக்குனர் மனோஹரன்[சீனிவாசன்], தன் கம்பேக் படம் ஒன்றிற்காக மீண்டும் தயாராகிறார், கதை,திரைக்கதை,காஸ்டிங் எல்லாம் கழிந்த நிலையில் நடிகனின் கால்ஷீட் மட்டும் தேதி தட்டுகிறது, அதற்கான சிரமங்களை களையும் வேலையில் மும்முறமாக இருக்கிறார், இவருக்கு பழைய சினிமா தயாரிப்பாளர்களும்,டெக்னீஷியன்களும் இன்னும் தொடர்பில் இருக்கின்றனர்,தான் மீண்டும் சினிமாவில் நிரூபனம் ஆவோம் என்று நம்புகிறார்.

இவர்கள் இருவரையும் இணைக்கும் ஒரு கதாபாத்திரமாக ஆட்டோ டிரைவர் சூரா[வினய் ஃபோர்ட்],இயக்குனர் மனோஹரன் சூராவின் ஆட்டோவில் தன் திரைக்கதை குறிப்புகள் வைத்துள்ள பையை தவறவிடுகிறார்.அதே ஆட்டோக்காரர் அன்றைய தினம் வேறு சவாரிகளை முடித்தபின்னர் தன் நண்பர் குழுவில் இருக்கும் கல்ஃப் வாசி ரஷீத்திற்கு ஃபுல் பாட்டில் விஸ்கி வாங்கிக்கொண்டு போய் தருகிறான்,அவர் காலால் இட்ட வேலையை இவன் தலையாய் செய்வதற்கு காரணம்,ரஷீத் இவனுக்கு சரியாக்கி தரேன் என்று சொன்ன கல்ஃப் வேலைதான்,சூராவின் ரிங் டோனாக அனுராக விலோசனனாகி என்னும் நீலத்தாமரா படத்தின் வித்யாசாகர் இசையில் உருவான பாடலை வைத்திருந்தனர்,மிக அற்புதமான பாடல்,நானும் சில காலம் அதை ரிங் டோனாக வைத்திருந்தேன்.

அங்கே வைத்து ரஷீத் தன் உள்ளூர் நண்பர்களுடன் குடிக்கிறார்,இப்போது அவர்களுடன் ஒரு லாரி டிரைவரும் இணைந்து கொள்கிறார்,அவர் தன் வீர பிரதாபமாக தான் லாரி ஓட்டிச் செல்கையில் புணர்ந்த விலைமாதுக்களையும், அவர்களின் ஒத்துழைப்பையும் பிரஸ்தாபிக்கிறார், லாரிக்கார நண்பருக்கு வீட்டில் இருந்து மொபைலில் அழைப்புகளாக வருகிறது, ரஷீத் இதற்காகவே பரிவாடிகள் துவங்கும் முன்பே செல்போன் சனியனை வீட்டில் விட்டு வந்து விட்டார், வீட்டில் மனைவியோ இவருக்காக சாப்பாடு எடுத்து வைத்து விட்டு காத்திருக்கிறார், மகள்களுக்கு அப்பா வந்து விடுவார் என்னும் நம்பிக்கை, இப்போது மணி 12ஐ நெருங்குகிறது,

ஃபுல் பாட்டில் விஸ்கியும் தீர்ந்துவிடுகிறது, மற்றையோர் வீட்டுக்கு பறக்க, லாரி காரருக்கும்,ரஷீதுக்கும் மட்டும் இன்னும் குடிக்க வேண்டும் என்னும் ஆசை,கடை சாத்தியிருந்தாலும் ஷட்டருக்கு கீழே அதிக காசுக்கு வாங்க முடியும் என்ற தைரியம் வர,ஆட்டோவில் புறப்படுகின்றனர்,எறும் போதே லாரிகாரருக்கு வீட்டில் இருந்து அழைப்பு மீண்டும் வர, இது சரிவராது என்று அவர் கழண்டுகொள்கிறார், சூரா ஆட்டோவை அணைத்துவிட்டு வீட்டுக்கு போகலாம் இல்லையா? என்று கேட்க, இவரின் துபாய் ஷோக்கு, இல்லை ஒயின்ஷாப்புக்கு விடு என்கிறார், ஒயின்ஷாப் அருகே உள்ள பஸ்ஸ்டாப்பில் நடுத்தர வயது சுடிதார் மங்கையை சந்தேகக்கண்ணுடன் பார்க்கிறார்,சபலம் தட்டுகிறது, ஆட்டோ கிளம்புகையில் சூராவிடம் சொல்லி அப்பெண்ணை நூல்விட்டுப்பார்க்க சொல்கிறார்,

அவன் பயப்பட தைரியம் சொல்லி அனுப்புகிறார்,அவளை நெருங்கிய சூரா வருவாயா?என்று பயத்துடன் கேட்க,எத்தனை பேர் என்று அவள் எதிர்கேள்வி கேட்கிறாள்,அவன் குஷியானவன், எனக்கு அல்ல,என் அண்ணனுக்கு என்கிறார்,ஏன் நீ என்னை உறவுகொள்ள மாட்டாயா?என்று அவள் கேலி செய்ய,இவன் நெளிகிறான்,வண்டியில் ஏறும் முன்னர் பணம் பற்றி கறாராக பேசிவிடுகிறாள்,ஒரே ஆள் தான் என்று கண்டீஷன் போடுகிறாள்,

அவளுக்கு ரஷீதின் ஆஜானுபாகுவான அதே சமயம் வெகுளியான  தோற்றமும் பிடிக்க ஆசையுடன் வருகிறாள்,இப்போது பல லாட்ஜுகளுக்கும் ஏறி இறங்கியும் ரூம் கிடைக்கவில்லை, சரி சேற்றில் காலை வைத்தாகிவிட்டது, இனி பின்னால் வருவது ஆகாது,அப்புறம் முழுப்பணமும் வீண் என்று அதிக ரிஸ்க் எடுத்து தன் கடைக்குள்ளே அவளை ஏற்றி, ஷட்டரையும் சாத்துகின்றனர். சூராவை அவள் தனக்கு மிகவும் பசி என்று பரோட்டாவும் பீஃப் கறியும் வாங்கி வர சொல்கிறாள்,

அவன் இவர்களின் வசதிக்காக வெளியே ஷட்டரை தாழ் போட்டு, பூட்டும் போட்டு விட்டுப் போகிறான்.  அவளின் பேச்சு, அத்தனை சத்தம் கொண்டதாயிருக்கிறது,இவருக்கு வியர்த்து விடுகிறது, நண்பனின் விலைமாதுவுடனான வீர தாபம், இவருக்கு சபலத்தை தூண்டி விட்டாலும் காரியம் என்று வருகையில், இவருக்கு கைகூடவில்லை, பயத்தில் எச்சில் விழுங்குகிறார், அவளுக்கு நிமிடத்துக்கு ஒரு முறை மொபைல் சனியனில் அழைப்புகள் வர, அவள் அலறிக்கொண்டு பேசுகிறாள், இவர் நடுங்கிப்போகிறார், கடையின் பின்சுவரில் உள்ள  வெண்டிலேட்டரில் ஏறிப்பார்த்து,  தன் வீட்டில் விளக்கெறிகிறதா? என்று பார்க்கிறார்.

அதற்குள்ளாக அந்த விலை மாது தான் கொண்டு வந்திருந்த ஒரு ஏர்பேக்கில் இருந்து தன் நனைந்துபோன சுடிதார் துணிகளை உரிமையாக அங்கே கட்டப்பட்டிருக்கும் கொடியில் காயப்போடுகிறாள், அங்கே இருக்கும் ஹாஃப் பாட்டிலை திறந்து, தனக்குள் சரித்துக்கொள்கிறாள், சைட் டிஷ் இல்லையா? என்று எள்ளலுடன் இவரை வைகிறாள், சரி வேகமாய் வந்து என்னை முயங்கு, எனக்கு 12-30க்கு போகவேண்டும்,இல்லையென்றால் ஓவர் ஸ்டேக்கு காசு அதிகம் தரவேண்டியிருக்கும் என்கிறாள்,

இவருக்கு பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்தது போல ஒரு நிலை,இவருக்கு அந்த பூகம்பத்திலும் ஒரு கிளுகிளுப்பு வேண்டியிருக்கிறது, இல்லை என்றால் வீணாக காசு தரவேண்டுமே என்று,அங்கே ஒரு ரப்பர் பாயை போட்டு உறங்கும் அவளை பின்னால் சென்று தொட, அவள் வேகமாய் எழுந்திருக்கிறாள்,இவர் பதட்டத்திலும் பயத்திலும் எலி எலி என்று பொய் சொல்கிறார், அவள் எலியை அடிக்க தேடுகிறாள்.

இப்போது இயக்குனர் மனோஹரன் தன் வாழ்ந்து கெட்ட பழைய தயாரிப்பாளர் நண்பருடன் அவரது அம்பாசடர் காரில் வைத்து மது அருந்துகிறார், மனோஹரன் எடுக்க இருக்கும் படத்தில் அவரது பழைய படத்தில் உபயோகிக்காமல் விட்ட ஒரு பாடலை இடைச்சொருக வேண்டுகிறார்.இவர் கவலையுடன் தன் கைப்பை ஆட்டோவில் வைத்து காலையில் காணாமல் போய்விட்டது, நாளை படவிஷயமாக அவசரமாக எர்னாகுளம் போகவேண்டும், என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்க, இப்போது பரோட்டா வாங்கும் ஹோட்டலில் வைத்து இயக்குனர் மனோஹரனை பார்க்கிறான் சூரா, தானே போய் அவரின் பையை ஒரு கடையில் பத்திரமாக வைத்துள்ளேன் என்று கூறுகிறான்,

இப்போது இழந்த நம்பிக்கையை திரும்ப பெறுகிறார் மனோஹரன்,அவரின் தயாரிப்பாளர் நண்பர் சடுதியில் இரண்டும் ஸ்மால் ஃபிக்ஸ் செய்து பை திரும்ப கிடைத்த மகிழ்ச்சிக்கு குடி என்று அவருக்கும்,சூராவுக்கும் நீட்ட,சூரா மறுக்கிறான், நான் குடித்தால் போலீஸ் என்னை பிடிக்கும் என்கிறான். அவர், உன் வாழ்வில் ஒரு பழைய தயாரிப்பாளருடன் மது அருந்திய சம்பவத்தை இழக்காதே!!! ,இந்தா என்று அன்புடன் திணிக்க,அதை ஒரே கல்பில் அடித்துவிட்டு, பையை எடுத்துத்தர மனோஹரனையும் அங்கே கடைக்கு அழைத்து போகிறான்,

இப்போது இரவு வாகன சோதனையில் இருக்கும் கறாரான போலீசிடம் வசமாக மாட்டிக்கொள்கிறான் சூரா, அவர்களிடம் மனோஹரன் சட்டமும் சவடாலும் பேச, இருவரையும் கசவை என்னும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப்போகின்றனர், மனோஹரனுக்கு ,அவர் நண்பர் அங்கே அதே ஸ்டேஷனில் எஸ் ஐயாக இருப்பதால் பெருமிதம் பொங்க, அங்கே செல்கிறார், இவர் கெட்ட நேரம், அவர் அங்கே வீட்டுக்கு போய்விட்டிருக்கிறார். தவிர பனிஷ்மெண்ட் ட்ரான்ஸ்ஃபரில் அங்கே வந்த அவர் போலீஸ் நண்பர், ஓவர் டைம் வேலை செய்வதில்லை,

வீட்டுக்கு போனதுமே செல் போன் சனியனை அணைத்துவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார், இனி அவர் ஸ்டேஷன் வருவதற்கு காலை 9-30 ஆகும், அதுவரை இருவராலுமே வெளியே நகர முடியாது,கடைக்குள்ளே இருவரையும் வைத்து பூட்டிவிட்டு வந்த சூரா,பயத்தில் நடுங்குகிறான்,ரஷீத் அவர்களி வீட்டாரிடமும்,சுற்றத்தாரிடமும் நல்ல மரியாதையை கொண்டவர்,அவர் இந்த சபலத்தால் படப்போகும் அவமானம் சூராவை நடுங்க வைக்கிறது,ஏதோ ஒரு நினைவில் ரஷீதின் மொபைலில் அழைத்து தான் குடித்திருப்பதால் போலீசிடம் மாட்டி உள்ளேன்,ஷட்டரை திறக்க காலை 10 மணி கூட ஆகும் என்று பயத்துடன்ஒப்பிக்க,எதிர் முனை மௌனம் சாதிக்கிறது,யார் எடுத்தது? என்று குழம்புகிறான் சூரா,நாக்கை கடித்துக்கொள்கிறான்,அவர்கள் போய் உடனே திறந்துவிட்டாள் போச்சே!!!போச்சே என அலறுகிறான்.

இப்போது மூடிய ஷட்டருக்குள்,ரஷீத்துக்கு இன்றைய இரவு தூங்காமலே கழிகிறது,அவளுக்கு போன் அழைப்பு வரா வண்ணம் சைலண்டில் போடுகிறார்,மெல்ல வீட்டை பார்க்கிறார்,தூங்கும் அவளுக்கு இப்போழுது பசி வாட்ட ஆரம்பிக்கிறது,அவள் இவரிடம் திரும்பி எப்படியாவது ஷட்டரை திறக்க வழி பார் என்று கத்த ஆரம்பிக்கிறாள்,இவர் அவளுக்கு பணம் கொடுத்து சிறிது நேரம் அவள் வாயை அடக்கி வைக்கிறார்,சிறிது நேரம் கழித்து அவள் மீண்டும் பினாத்த ஆரம்பித்து விடுகிறாள்,பசியால் என்னால் சாக முடியாது என்கிறாள். இவர் பொறுமை இழந்து அவளை அடித்து விடுகிறார்,அவள் மேலும் கத்த வாயை துணி கொண்டு கட்டியும் விடுகிறார்.அங்கே இருக்கும் கடப்பாரை கொண்டு ஷட்டரின் பூட்டை திறக்க முயன்றும் முடியவில்லை.பயம் கூடுகிறது.

அன்று காலையில் தான் பக்கத்து  ஹாரன் ரிப்பேர் கடைக்காரனுக்கும் ரஷீதுக்கும் தள்ளுமுள்ளு வேறு ஆகியிருக்கிறது,அவர்கள் கடையை காலை 8மணிக்கு திறந்தால் 10மணிக்கு தான் மூடுவர்,இவனுக்கு பயத்தில் வயிற்றை கலக்குகிறது,யாரிடமும் சொல்லி திறக்கவைக்க முடியாத இக்கட்டான கவுரவ பிரச்சனை, இனி என்ன ஆகும்?!!!படத்தை அவசியம் பாருங்கள்,பார்ப்பவர்கள் முடிவை யாரிடம் சொல்லாதீர்கள்,அது புதிதாக பார்ப்பவருக்கு பதட்டமான உணர்வை தக்க வைக்க உதவும்.

படத்தின் நகைச்சுவைகள் சிரிப்பு மத்தாப்புகளாக கதையின் ஊடாகவே வருகின்றன,தன் காணாமல் போன பையை எதிர்பார்த்து காத்திருக்கும் மனோஹரனுக்கு அவரின் லாட்ஜ் மேனேஜர் ஒரு பார்சல் வந்திருக்கிறது என்று சொல்லி ஒரு கவரை கொடுக்க அதில் நடிக்க வாய்ப்பு கேட்டு போட்டொக்கள் அடங்கிய ஆல்பமாயிருக்கிறது,அதை பார்த்து சலித்துக்கொள்ளும் சீனிவாசன் முகபாவணை சான்சே இல்லை,இவர் சூராவின் ஆட்டோவில் பயணிக்கும் போது அவன் இன்றைய சினிமாக்களைப் பற்றி விவரித்து,சினிமான்னா அப்படி இருக்கனும் இப்படி இருக்கனும் என்று ஐடியா கொடுக்க,இவர் நீயே எடேன் என்று மடக்க,இவன் அது என் வேலை இல்ல சாரே என்று வழிய,பின்னே ரோட்டை பார்த்து ஓட்டு என்று சொல்லும் இடம் எல்லாம் சான்சே இல்லை,இவரின் மகன் வினித் சீனிவாசனுக்கு இவர் அப்பாவை நடிப்பில் மிஞ்சுவதே வாழ்நாள் சாதனையாக இருக்கும். 

இப்படம் கேரளாவில் நடந்த 17வது சர்வதேச திரைப்பட விழாவில்  ஆடியன்ஸ் விருது வென்றது. 9வது துபாய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டைப் பெற்றது. தேசிய விருதையும் இப்படம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருவிருதுகூட படத்துக்கு கிடைக்கவில்லை.தேசிய விருதின் பிராந்திய ஜூ‌ரியாக இருந்த இயக்குனர் டாக்டர் பைஜுவின் மட்டமான அரசியல்தான் தனது படத்துக்கு விருது கிடைக்காததற்கு காரணம் என்று தனது முகநூலில் காட்டமாக அவரை விமர்சித்தார் மேத்யூ. அவரது போன் நம்பரையும் அதில் தெ‌ரிவித்திருந்ததால் பைஜுக்கு அனானிமஸ் போன் கால்கள் கண்டபடி வந்திருக்கின்றன எனப்படித்தேன்.என்னைப் பொறுத்த வரை விருதுகள் எல்லாம் ஒரு படத்தின் தரத்தை நிர்ணயம் செய்வதில்லை,படத்தின் பரீட்சார்த்தமான,பிழையில்லாத ஆக்கமே அதன் தரத்தை நிர்ணயம் செய்யும்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-

தலப்பாவு [Thalappavu] [மலையாளம்] [2008]

ருமை நண்பர்களே,நலம் தானே?!!! இந்த பதிவின் வாயிலாக என் இனிய 2013 வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் ஒரு நல்ல உலக சினிமாவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,தலப்பாவு என்னும் படம் நீண்ட நாட்களாக பார்க்க எண்ணியிருந்தும் தரமான டிவிடி கிடைக்காதமையால் பார்க்க முடியாமல் இருந்தது, சமீபத்தில் வந்த ஒழிமுறி என்னும் படம் மிகவும் பிடித்துப்போய்விட, அதனை இயக்கிய மதுபால் தான் தலப்பாவுவின் இயக்குனர் என்பது நினைவுக்கு வர உடனே தருவித்து பார்த்துவிட்டேன்,மிக நல்ல நேர்த்தியான படைப்பை இத்தனை நாள் பார்க்காமல் விட்டிருக்கிறேன்.

இங்கே இரு விஷயம் பொதுவானவை ஓவர்ரேட்டட், அண்டர்ரேட்டட், தகுதியானவனுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போவதும், தகுதில்லாதவனுக்கு அது விரைந்து கிடைப்பதும் தான். தமிழ்நாட்டில் இதே போன்ற வரலாற்று நிகழ்வுகள் நூற்றுக்கணக்கானவை உண்டு, ஆனால் அவற்றை சுயவரலாறாகவோ ஆவண ஆக்கமாகவோ எழுத்தில் கொண்டுவரும் துணிவு எந்த ஒரு புகழ்பெற்ற இலக்கியவாதிக்கும் இருந்ததில்லை என்பது கண்கூடு.

 1968-டிசம்பர் 25 ஆம் நாள் தஞ்சைமாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடிய அப்பாவி கூலித்தொழிலாளர்கள் அயோக்கிய பண்ணையார்  கோபால கிருஷ்ண நாயுடுவால் ஒரு குடிசைக்குள்ளே தஞ்சம் புகுந்திருக்க,  நயவஞ்சகமாக குடிசைக்கு வெளியே தீவைக்கப்பட்டு அவ்விரவில் 44 உயிர்கள் தீக்கிரையாக்கப்பட்டனர். அது சமீபத்தில் தான் ராமையாவின் குடிசை என்னும் புத்தகமாக வெளிவந்து இப்போது எளிமையான ஆவணப்படமாக ஆகியிருக்கிறது,ஆனால் இது போதாது,வெகுஜனத்துக்கு கடத்த சினிமா தான் நல்ல மீடியம்.

கீழ்வெண்மணியில் எரித்து கொல்லப்பட்ட 44 பேரில் பதிநான்கு குழந்தைகளும் 22 பெண்களும் அடக்கம். அந்த அப்பாவி கூலித்தொழிலாளர்களை எரித்துக் கொன்ற அதிபயங்கரத்தை எழுத்திலோ சினிமாவிலோ  இலக்கியவாதிகளோ சினிமா படைப்பாளிகளோ முன்னின்று ஆவணப்படுத்தவில்லை என்னும் குறை இப்படம் பார்க்கையில் நேர்ந்தது, அவ்வளவு நேர்த்தியான படைப்பு இது, நடந்த சம்பவத்தின் வீர்யத்தை நம்முள்ளே உணரவைக்கும் படைப்பு,  அங்கே தோழர் வர்கீஸ் என்றால் இங்கே தோழர் பக்கிரிசாமி.

தோழர் வர்கீஸ்
ஆனால் தோழர் வர்கீஸுக்கு கிடைத்த அங்கீகாரம் தோழர் பக்கிரிசாமிக்கு கிடைகாதது சோகம்,  இன்னும் கீழ்வெண்மணிக்கு நியாயம் கிடைக்காதது வெட்கக்கேடு,  ஒரே ஆறுதல் அன்று தீயில் இறந்த தாயின் புதல்வன் ஒருவனால் 12 வருடம் கழித்து கயவன் கோபால கிருஷ்ண நாயுடு கத்திக்குத்து வாங்கி கிழித்து போடப்பட்டு இறந்தது தான்,எப்போதும் அப்பாவி மக்களுக்கான நேமம்,  நியாயம் எல்லாம் சட்டத்தின் வெளியே தான் கிடைத்திருக்கின்றன என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கீழ்வெண்மணி.

கேரளாவில் செண்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸில் 35 வருடங்களுக்கும் மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு யதார்த்தமான போலீஸ்காரரின் சத்தியசோதனை தன்வரலாற்று புத்தகமான நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் அது தமிழில் குளச்சல் மு.யூசுப் அவர்களால் நல்ல ஜீவனான நடையில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது,அதன் மூலமான “ஞான் ஜீவிச்சு அந்திண்டே தெளிவு” என்னும் புத்தகத்தில் இருந்து சில பக்கங்களை எடுத்துக்கொண்டு தலப்பாவு என்னும் மிகச்சிறந்த நான்லீனியர் ஆக்கமாக படைத்திருக்கும் மதுபாலையும், தயாரிப்பாளர் நடிகர் மோகனையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.

=====

கேரளாவின் வயநாடு மாவட்டம் கன்னட நிலச்சுவான்தார்களிடம் பட்ட கொடுமைகளை உரைக்கும் களத்தில் ,1970களின் நக்ஸலைட் யுக பிண்ணனியில் துவங்குகிறது.

உள்ளூர் பழங்குடி விவசாயிகளும் வெளியூரில் இருந்து வந்து சுயதொழில் செய்து பிழைக்க குடும்பத்துடன் வரும் ஏழைகளும் தம் பாடுபட்டு சேர்த்த பணத்தை கிருஷ்ணணேண சைவர் (அதுல் குல்கர்னி) என்னும் நிலச்சுவாந்தாருக்கு கொடுத்துவிட்டு, அங்கே இருக்கும் செம்மண்ணை வெட்டி எடுத்து விற்று பிழைப்பை நடத்துகின்றனர், சைவர் பழங்குடிகளின் நிலத்தையும் அதிகாரமாக பிடுங்கிக்கொண்டு அவர் வீட்டுப்பெண்களையும் வலுக்கட்டாயமாக கைப்பற்றி  தேவைப்பட்ட பொழுது புணர்கிறார்,தடையாக இருக்கும் அப்பெண்களின் கணவன்மாரை தூக்கில் தொங்கவிடுகிறார். போலீசாரும் சைவர் தரும் கையூட்டுக்காக இறந்தோரை சைவருக்கு வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வக்கில்லாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக வழக்கை பொய்யாக முடிக்கின்றனர்.

ஆட்சியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் சைவருக்கு உறு துணையாக நிற்கின்றனர்,அவர்களுக்கு சைவரின் பண்ணை வீட்டில் மது,மாமிசமும் பழங்குடிப்பெண்களும் விருந்தாக்கப்படுகின்றனர், அங்கே இதை தட்டிக்கேட்பதற்கு செம்படை உருவாகிறது. அவர்கள் தங்களை நக்ஸலைட்டுகள் என கூறிக்கொள்கின்றனர்,பழங்குடிகள் அவர்களை மிகவும் மதித்து சகாவு என அழைக்கின்றனர். அதில் அந்தப்பகுதி நக்ஸலைட் தலைவனாக தோழர் ஜோசப்பை (ப்ரித்விராஜ்) நாம் பார்க்கிறோம். சைவரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாக, ஒரு நாள் கொட்டும் மழையில் நக்ஸலைட்டுகள் சைவர் வீட்டில் நுழைகின்றனர், அங்கே  ஏழை மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டு  சைவரிடம் இருக்கும் சொத்து ஆவணங்களை பறித்துச் செல்ல ஆயத்தமாகின்றனர், அங்கே சைவருக்கும் ஜோசப்புக்கும் கைகலப்பு முற்றி,  ஜோசப் சைவரை தாக்கி அரிவாளால் வெட்டிக்கொல்கிறார். அங்கே இருந்த சிறைபிடிக்கப்பட்ட பெண்களுக்கு புது விடியல் பிறக்கிறது,சைவர் இறந்ததற்கு அவர் மனைவிக்கு கூட கண்ணீர் வரவில்லை,ஆனால் போலீசாருக்கு பெருத்த நஷ்டம் விளைகிறது,பொன்முட்டை இடும் வாத்தை அறுத்து விட்டார் போல கொதிக்கின்றனர் சி ஆர் பி போலீசார்.

படமே தோழர் ஜோசப், தன் கூட்டத்தில் இருக்கும் துரோகி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வரப்பட்டு, லட்சுமணன் பிள்ளை என்னும் மேல் அதிகாரியால் மிரட்டப்பட்டு ஜோசப்பின் நண்பர் காவலர் ரவீந்திரன்பிள்ளை (லால்) ஜோசப்பை என்கவுண்டர்  செய்வதில் இருந்தே துவங்குகிறது. அற்புதமான ஒளிப்பதிவும், பிண்ணணி இசை சேர்ப்பும் இப்படத்துக்கு மாபெரும் பலம் என்பேன்.


நிகழ்காலத்தில், மனசாட்சியின் உந்துதலாலும் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் விரக்தியினாலும்  ஓய்வுபெற்ற காவலர், முழுநேரக் குடிகாரர் ரவீந்திரன் பிள்ளை, நக்சலைட் தோழர் ஜோசப்பை தான்தான் மேலதிகாரியால் மிரட்டப்பட்டு கொன்றேன் என்று வழக்கு தொடுத்து தாமே பிரதிவாதியாக நின்று வாக்குமூலமும் கொடுக்கிறார், என்னை இந்த கொலைபாதகத்துக்கு உட்படுத்திய மேலதிகாரிகளுடன் நான் சிறையில் ஒரு நாளை கழித்தாலே அது எனக்கு கிடைத்த வெற்றி என்று பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் முழங்குகிறார்.

35 வருடங்களாக இவருடனே பயணிக்கும் இறந்த தோழர் ஜோசப்பின் ஆவியாக ப்ரித்விராஜ்,இது வரையிலும் செய்த எல்லா பாத்திரங்களையும் விஞ்சி நிற்கும் ஒரு அற்புதமான பாத்திரம்,இடது கண் போலீசாரின் ஷூ காலால் நசுக்கப்பட்டு வீங்கிய முகத்துடனும்,நெஞ்சில் துளைத்த துப்பாக்கி ரவையினூடே படியும் குருதியுடனும் அவர் எந்நேரமும் காவலர் ரவீந்திரன் பிள்ளையின் மனசாட்சியாய் இறந்த பின்னரும் வாழ்ந்திருக்கிறார்.மிகக் கவித்துவமான படைப்பு இவரின் பாத்திரம்.

35ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் மனம்மாற என்ன காரணம்? இத்தனை நாள் இவரை ஆட்டிப்படைத்த உயிர்ப்பயம் விலக என்ன காரணம்?அந்த என்கவுண்டர் படுகொலைக்குப் பின்னர் மேலதிகாரிகளின் மேல் விளைந்த பயத்தாலும், மனசாட்சியாலும்  ஒருங்கே தாக்கப்பட்டு முழுநேர குடிகார நடைபிணமாகிறார் ரவீந்திரன் பிள்ளை. ஆசை மனைவி அண்ணன் பாதுகாப்பில் இவரை பிரிகிறார்,மகன் தறிகெட்டு திருடனாகிறான், காவலரை தாக்கியதால் சிறை செல்கிறான், மகனின் குடும்பத்தையும் வயதான தாயின் மருத்துவச்செலவையும் முன்னிருந்து நடத்த வேறு வழி தெரியாத மகள் விபச்சாரத்தில் இறங்குகிறாள்,முதலில் வீட்டு வாடகைக்காக வீட்டு சொந்தக்காரருக்கு இரையானவள் அடுத்தடுத்து ஒவ்வொருவருக்காக இரையாகிறாள், இதனிடையே மிகவும் பிரியத்துக்குறிய மனைவியும் பாம்பு கடித்து இறக்கிறாள், இவர் எதனால் இப்படி முழுநேரக்குடிகாரரானார் என்னும் உண்மையை இதுநாள் வரை மனைவியிடம் கூட மறைத்து நடைபிண வாழ்வை வாழ்ந்திருக்கிறார் ரவீந்திரன் பிள்ளை.

இப்போது தன் தள்ளாமையில் தன் கூடவே பெற்ற மகளும் வந்து சேர்ந்துவிட மிகவும் மகிழ்ச்சியில் இருந்த ரவீந்திரன் பிள்ளை தன் மகளை ஊரார் வாயால் பெரிய தொழில்காரி என கேட்கையிலேயே  சுக்கு நூறாக உடைகிறார், இழப்பதற்கு இனி ஒன்றுமில்லையே இனியும் என்ன மௌனம் என்று தோழர் ஜோசப் இவரிடம் தோன்றி உரைக்கயில் பொறுத்தது போதும் என்னும்  முடிவுக்கு வந்தவர் தன்னையே குற்றவாளியாக்கி மேலதிகாரிகளையும் அதில் இணைத்து வழக்கு தொடுக்கிறார்.

முழுப்படமுமே ஆலப்புழையில் ரவீந்திரன் பிள்ளை வீட்டிலும், வயநாட்டில் ரவீந்திரன் பிள்ளையின் செண்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஸ்டேஷனிலும் என்று கழிகிறது. ரவீந்திரன் பிள்ளையின் அன்பான அழகான மனைவியாக ரோஹிணி, 1947ல் இந்தியாவுக்கு ஸ்வாதிந்திரியம் கிட்டியது என உரக்கப் படித்துக்கொண்டே இருக்கும் மகன்,இவர் குடிகாரனானதும் அப்பாவை திட்டாதே அம்மா என அழுது உருகும் மகள்என அபாரமான பாத்திரப்படைப்பு. ரவீந்திரன் பிள்ளையின் பள்ளியில் உடன் பயிலும் கிருத்துவப்பெண்ணாக சாரா,மிக அற்புதமான காதல்கதை இழை அது. அவர்களின் குடும்பம் தொழில் நிமித்தம் வேற்றூர் செல்ல இவர் சிறு பருவத்து காதல் இழை அறுகிறது.சாராவாக வரும் தன்யா மேரி மிக ந

வயநாட்டுக்கு வேலை நிமித்தமாக வரும் ரவீந்திரன் பிள்ளை போலீசாருக்கு சைவர் வைக்கும் கறி விருந்தில் விதவை வேலைக்காரியாக  சாராவைச் சந்திக்கிறார். அவளது கணவன் அநியாயமாக சைவரால் தூக்கில் ஏற்றி கொல்லப்பட்டிருக்க,இவளை முழுநேர கொத்தடிமையாக ஆசை நாயகியாக மாற்றி விடுகிறான் சைவர்,சைவராக அதுல் குல்கர்னி,அந்த சிறிய நயவஞ்சகம் காட்டும் கண்கள் நன்றாக நடித்துள்ளது.


ரவீந்திரன் பிள்ளையும்    தோழர் ஜோசப்பும் சந்தித்துக்கொள்ளும் தருணங்கள் மிகவும் சுவையானவை. ரவீந்திரன் பிள்ளை எந்த அளவுக்கு கோழையோ தோழர் அந்த அளவுக்கு வீரம் பொருந்தியவராக வருகிறார்.இருவருக்குமான கூரிய வசனங்கள் அருமையானவை. அதில் ஒரு காட்சியாக அரசுப்பேருந்தில் மீன் கூடையுடன் ஏற முற்படும் சாந்தம்மாவை நடத்துனர் திட்டி இறக்கிவிட அங்கே தோன்றும் தோழர் ஜோசப் நடத்துனருடன் வாதம் செய்து இந்த வயதான அம்மாவை நான் என் அம்மாவாக பார்க்கிறேன்,தன் அம்மா ஒவ்வொரு பேருந்தாக கைகாட்டி யாரும் ஏற்றிக்கொள்ளாமல் ஏமாந்து நிற்பதை பார்க்க நினைக்கும் மகன் உங்களில் யாரேனும் இருந்தால் இந்த பாட்டியம்மா பேருந்தில் வருவதற்கு ஆட்சேபம் செய்யலாம் என்கிறார்,அருகே அமர்ந்திருக்கும் ரவீந்திரன் பிள்ளை இவரை ஸ்நேகமாக பார்த்து புன்னகைக்க ,இவர் யார் என்ன என விசாரித்துவிட்டு,அவர் போலீஸ் என்றதும்,ஒரு ஏழை வஞ்சிக்கப்படும் போது அதை கண்டும் ரசிப்பதில் ஒரு போலீஸும் அடக்கம் என்பதை நினைத்து வெட்க்கப்படுகிறேன்,பின்னே உங்கள் நேமம் நேமத்துடன் தானே செல்லும் என்று சொல்லும் இடம் எல்லாம் அருமை.

மது பாலுக்கு பேருந்து நடத்துனருக்கும் ஏதாவது கசப்பான சம்பவம் இருக்குமா?அல்லது உண்மையாகவே கேரள பேருந்து நடத்துனர் இப்படித்தானா?என தெரியவில்லை, இவரின் சமீபத்திய படமான  ஒழிமுறியிலும்  தொடர்ந்து பேதியாகிக்கொண்டிருக்கும் தன் மகனை மருத்துவமனை கொண்டு செல்ல மல்லிகா கேரளா அரசு பேருந்தில் ஏற முற்படுவார், ஆனால் நடத்துனர் ச்சீ என்ன நாற்றம்? ,இதனுடனா இந்த பேருந்தில் வருகிறாய்? பின்னால் நேசமணி (பேருந்து)வருவான் ,அதில் வா என விரட்டுவான், இதற்கும் அதற்கும் ஏதோ தொடர்பிருப்பது போல் பட்டது.

படத்தில் இன்னொரு காட்சியாக தோழர் ஜோசப்பும் சக நக்ஸல் தோழர்களும் ஓர் இரவில் சிஆர்பி காவல் நிலையத்தைச் சூறையாடி, அங்குள்ள காவலர்களை தாக்கிவிட்டு,ஒருகாவலரின் தோள்பட்டையையும் வெட்டிவிட்டு, துப்பாக்கிகளை திருடிச் செல்வர். அங்கே ரவீந்திரன் பிள்ளை பயந்து நடுங்கி பதுங்கியிருக்க,தோழர் ஜோசப் அவரை மட்டும் பார்த்து சிரித்து விட்டு தாக்காமல் செல்வார்.இக்காட்சியும் மிக அருமையான ஒன்று.

பின்னர் ஒரு நீரோடையின் வழியே தம் மறைவிடத்துக்கு ஜோசப் ரவீந்திரன் பிள்ளையை பழங்குடிகளுடனும் சாராவுடனும் கூட்டிச்செல்வார்,அங்கே ரவீந்திரன் பிள்ளையின் காலில் அட்டை ஏறி கடிக்கத்துவங்கும்,பிள்ளை அதை நசுக்க விழைவார்,தோழர் ஜோசப் அதை தடுத்து தீக்குச்சி பொருத்தி அதை சுட்டு நீக்குவார், இதை கை கொண்டு நசுக்கினால் அட்டையின் பல் சதையில் இறங்கி பழுத்து வீங்கிவிடும்,இந்த கொடுமை  வயநாட்டின் ஒவ்வொரு  ஏழைக்கும், பழங்குடிக்கும் அன்றாடம் பழக்கப்பட்ட ஒன்று என்று சொல்வார்,அந்த அளவில் தான் அன்றைய கிராமங்கள் வசதிகளை கொண்டிருந்தன. அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை.

நிலச்சுவாந்தார் சைவர் கொடூரமாக கொல்லப்பட்ட மறுநாள் காவல்துறை மேலதிகாரிகள் முதலில் சாராவை சந்தேகித்து விசாரித்து  துன்புறுத்தி, அவளிடமிருந்து ஒன்று விஷயம் பெறமுடியாமல் போக பழங்குடி ஒருவனை விலைக்கு வாங்குகின்றனர், அவன் இவரை காட்ட்சிக்கொடுக்கும் முன்னர் சர்ச்சில் வந்து தன் உயிருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என வேண்டிக்கொண்டு தன் சிலுவை கோர்த்த மாலையை சர்ச்சின் வெளியே கழற்றி  விட்டு செல்கிறான், அவனுக்கு காட்டிக்கொடுக்கையில் இறையுருவத்துடன் காட்டிகொடுப்பது தவறு என தோன்றியிருக்கும் போலும், அதனூடே அங்கே சர்ச்சில் இயேசுவின் உரையாக என்னுடன் கை நனைக்கும் ஒருவன் என்னை இன்று காட்டிக்கொடுப்பான் என்னும் வசனம் பாதிரியார் சொல்ல அது நல்ல குறியீடாக அமைந்தது.

தோழர் ஜோசப்பை என்கவுண்டர் செய்து கொன்றுவிட்ட பின்னர்,ரவீந்திரன் பிள்ளை தன் ஊரான ஆலப்புழைக்கே  வந்து தொடர் விடுமுறை எடுக்கிறார், நிறைய தற்காலிக வேலை நீக்கம் போன்றவற்றையும் சந்திக்கிறார்.முதலில் இவருக்கு மிகவும் அரவணைப்பாக இருக்கும் மனைவி கார்த்யாயினி,ஒரு நாள் இவர் உடன் வேலை பார்க்கும் இரு போலீசார் வந்து இவரைப் பற்றியும் இவரின் முன்னாள் காதலி சாரா பற்றியும் அபாண்டமாக பொய்களை அவிழ்த்துவிட்டு அங்கே இவர் குடிப்பதில்லை என கொளுத்திப்போட,இவர் குடும்பமே சின்னாபின்னாமாகிறது.என்ன தான் தன் காதலி சாரா பற்றி ரவீந்திரன் பிள்ளை முன்பே மனைவிடம் சொல்லியிருந்தாலும் போலீசார் இவர் தோழர் ஜோசப்பை சுட்ட விஷயத்தை வெளியே உளறாமல் இருக்க இவர் மனைவியிடம் சொன்ன  வதந்தியை  நம்பி இவர் மனைவி இவரை பிரியும் இடம் சோகம்.

விவாகரத்து வாங்கித்தரும் தரகராக,கிடைத்த வேலைகளைச் செய்யும் ஆல் இன் ஆலாக வரும் ஜெகதியை மறக்கமுடியாது, அதே ஜெகதி இவர் மனைவி இறந்த பின்னர் இவரின் குடும்பத்தை பிரித்த குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் சவ வீட்டில் ஓதுகின்ற ராமாயணம், சாத்தான் வேதம் ஓதுவது போலிருந்தது.மைத்துனனாக வருபவரும்,ரவீந்திரன் பிள்ளையின் பக்கத்துவீட்டில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நண்பரும் அவர் மனைவியும் ஒவ்வொரு சூழலிலும் பிள்ளையின் மீது காட்டும் நட்பும்,நேசமும்நெகிழ்ச்சியுடன் குறிப்பிடத்தக்கது.

படத்தின் முடிவுக்காட்சி மிகவும் அருமையானது, பல உலக சினிமாக்களில் இவ்வகை வித்தையை நான் கண்டிருக்கிறேன். இது இன்னும் புதுமையானது, ஒருவழியாக வழக்கு தொடங்கியது, பிள்ளைக்கு மிகுந்த மன நிம்மதியை தருகிறது,நெஞ்சில் உள்ள பாரத்தை இறக்கியாகிவிட்டது, மகள் தொழிலுக்கு போயிருக்கிறாள்,மகன் சிறையில் அது மட்டுமே வருத்தம்.யாரோ சில போலீசார் நலம் வாழ அவர்கள் விடுத்த கொலை மிரட்டலுக்கு இவர் தந்த கூலி கொஞ்ச நஞ்சமா?போதும் என்று முடிவெடுக்கிறார்.

தான் தோழர் ஜோசப்பை கொலைசெய்த முன்பு வரை போலீஸ் சீருடை அணிந்தாரே? அதே ஆவல் பொங்க இவர் நீண்டநாட்களுக்கு பின் தன் காவலர் சீருடையை எடுத்து அணிகிறார். தன் கைப்பையையும் எடுத்துக் கொள்கிறார். அங்கே இவர் மனசாட்சியாக உடன் வசிக்கும் தோழர் ஜோசப் ”இவர் இன்னும் குழம்பிப்போய் தான் இருக்கிறார்” என்னும் நினைவிலோ? என்னமோ கொட்டாங்குச்சியில் பொருத்தப்பட்ட மெழுவர்த்தி கைவிளக்குடன் இவரின் வீட்டுக்கு வருகிறார்.விளக்கை ஊதி அணைக்கிறார்.

போகலாமா? என்று கேட்டு பிள்ளையையும் உடன் கூட்டிக்கொள்கிறார், மீண்டும் மெழுகு வர்த்தியை ஏற்ற முற்படும் தோழரை , பிள்ளை வேண்டாம்!!! அது தான் நிலாவெளிச்சம் இருக்கிறதே ? என்று தடுத்து உடன் செல்வார். மறு நாள் பிள்ளையின் சவமரியாதை நடக்கிறது, அங்கே ஜெகதியின் குரலில் ஓதப்படும் ராமாயணத்தை நாம் கேட்கிறோம்.

சவம் புறப்பட்ட பின்னர் வீட்டை பெருக்கும் பக்கத்து வீட்டு பெண்மணி அங்கே தோழரால் விட்டுசெல்லப்பட்ட கொட்டாங்குச்சி கைவிளக்கை எடுத்துப்பார்ப்பது போல படம் முடிகிறது, இது எனக்கு மிகவும் புதிராகவும், கனவுலகையும் நனவுலகையும் முடிச்சுப்போட்டாற்போல போன்ற ஒரு சிந்தனையின் ஊடே “இவ்விளக்கு இன்னும் யாருக்கேனும் தேவைப்படக்கூடும் “ ஒரு செய்தியாக முடிந்தால் போல இருந்தது. மிக நல்ல வாசிப்பு அனுபவம் தந்த ஒரு புதினம் போல ஒரு படம்,உலக சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத மற்றொரு படைப்பு.
=====
திரைப்படத்தின் யூட்யூப் முன்னோட்ட காணொளி


Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) ஆஸ்கர் (115) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)