பேர்ட்மேன் தி அன்எக்ஸ்பெக்டட் விர்சூ ஆஃப் இக்னரன்ஸ் Birdman The Unexpected Virtue of Ignorance 2014


Birdman  The Unexpected Virtue of Ignorance  2014 ஆம் ஆண்டு வெளியான  அமெரிக்கத் திரைப்படம்.

இத்திரைப்படத்தை அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இன்யாரிட்டு இயக்கியுள்ளார்.
இது  நையாண்டி , விந்தை, சர்ரியலிச கருப்பு நகைச்சுவை  நாடகத் திரைப்பட வகையை சேர்ந்த படைப்பு,அகந்தையை வென்றவன் சுதந்திரப் பறவை; அங்கீகாரத் தவிப்பே மனிதச் சிறை என்பதே இதன் பெயர் காரணம்.

ஹாலிவுட்டில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற சூப்பர்ஹிரோ கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு பின்னர் மங்கிப்போன ஒரு நடிகர், தனது திரைவாழ்வை மீட்டெடுக்க போராடுவதை இந்தப்படம் விவரிக்கிறது.

அவர் ரேமண்ட் கார்வர் எழுதிய ஒரு சிறுகதையை மேடை நாடகமாக தழுவி எழுதி, இயக்கி, அதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் உளவியல் மற்றும் நடைமுறைச் சிக்கல்களே இதன் மையக்கதையாகும்.

இத்திரைப்படத்தின் ஆழமான அடிநாதம்  மனிதனின் அகந்தை, போலிப் புகழுக்கான ஏக்கம் மற்றும் சுய அங்கீகாரத்திற்கான தவிப்பு ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் ஒரு நளினமான உளவியல் போராட்டமாகும்.

இந்தத் திரைப்படம் ஒரு கலைஞனின் திரைவாழ்வு மீட்டெடுப்பைப் பற்றிப் பேசினாலும், அதன் அடிப்படையான கருப்பொருள் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் போலி ஆளுமைக்கும் உண்மைத் தன்மைக்கும் இடையிலான மோதல்தான்.

கதாநாயகன் தனக்குக் கிடைத்த உலகளாவிய வணிகப் புகழை வெறுக்கவும் முடியாமல், அதே சமயம் உண்மையான கலைவடிவமாகத் தான் கருதும் நாடக மேடையில் தன்னை நிரூபிக்க முடியாமல் தவிக்கிறார்.

மனிதன் தன் கடந்த கால வெற்றிகளின் நிழலிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் அவஸ்தையை அவரது உள்மனக்குரலான பேர்ட்மேன் கதாபாத்திரம் மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.

சமகாலச் சமூகத்தில் ஒரு மனிதனின் மதிப்பு என்பது அவனது உண்மையான திறமையால் தீர்மானிக்கப்படுகிறதா அல்லது சமூக ஊடகங்களின் வைரல் பரவல்களாலும் போலி விளம்பரங்களாலும் தீர்மானிக்கப்படுகிறதா என்ற தற்காலக் கலாச்சாரக் கேள்வியும் இப்படத்தின் அடிநாதமாக விளங்குகிறது.

மனிதன் தன் மீதான சுயக் கட்டுப்பாட்டை இழந்து, பிறரது பாராட்டுகளுக்காகவும் அங்கீகாரத்திற்காகவும் ஏங்கித் தவிக்கும்போது அவனது அக உலகம் எவ்வாறு சிதறடிக்கப்படுகிறது என்பதையும், அதிலிருந்து அவன் பெறும் இறுதிக்கட்ட விடுதலையையும் இப்படம் மிகவும் தத்துவார்த்தமாக விவரிக்கிறது.

மைக் கீட்டன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க எட்வர்ட் நார்டன் , எம்மா ஸ்டோன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் தங்களின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒரு மேடை நடிகரின் அக உலகப் போராட்டத்தையும் அவதிப்படும் மனநிலையையும் நடிகர்கள் தத்ரூபமாகப் பிரதிபலித்துள்ளனர்.

இயக்குனர் அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இன்யாரிட்டு மனித வாழ்வின் திருத்த முடியாத தொடர் ஓட்டத்தைக் காட்சிப்படுத்த விரும்பினார்.

அதற்காக ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ஒரே ஒரு தொடர்ச்சியான காட்சியாக நகர்த்துவது போன்ற மாயையைத் தன் அசத்தலான இயக்கத்தின் மூலம் மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை இம்மானுவேல் லுபெஸ்கி கையாண்டுள்ளார். மிகக் குறுகிய நாடக மேடைப் பாதைகளிலும் நியூயார்க் நகர வீதிகளிலும் கேமராவை நடிகர்களோடு தடையின்றி நகர்த்தி, எடிட்டிங் வெட்டுகள் ஏதுமின்றி படம் முழுவதையும் ஒரே ஷாட்டில் பார்ப்பது போன்ற பிரம்மாண்டமான ஒளிப்பதிவு நுட்பத்தை அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

இப்படம் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் 87 வது அகாடமி விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த அசல் திரைக்கதை மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய நான்கு முக்கிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்தது.

72 வது கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதுகளையும் இப்படம் தட்டிச்சென்றது.

ஒளிப்பதிவாளர் இம்மானுவேல் லுபெஸ்கி இந்தத் திட்டத்தை முதலில் கேட்டபோது முற்றிலும் நிராகரிக்கவே நினைத்தார்.

ஸ்டுடியோ செட் வேலைகள், நீளமான ஷாட்டுகள் மற்றும் நகைச்சுவை ஜானர் ஆகிய மூன்றும் அவருக்கு சற்றும் உடன்பாடில்லாத அம்சங்களாக இருந்தன.

ஆனால் இயக்குனர் இன்யாரிட்டுவின் பிடிவாதமான ஆலோசனைகளுக்குப் பிறகு சவாலை ஏற்றுக்கொண்டார்.

இந்தத் திரைப்படத்திற்கு முன்னுதாரணமாகக் கொள்ள உலகில் எந்த ஒரு திரைப்படமும் அதுவரை கிடையாது என்பதால், ஒளிப்பதிவை எப்படித் தொடங்குவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.

இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சோனி ஸ்டுடியோவில் கேன்வாஸ் துணிகளையும் ஸ்டாண்டுகளையும் கொண்டு ஒரு தற்காலிக போலி மேடையை  உருவாக்கினர். அங்கு கேமராவை வைத்து ஆட்களை நடக்கவிட்டு ஒரு வரைபடத்தை முதலில் தயார் செய்தனர்.

நியூயார்க்கில் உள்ள உண்மையான பிராட்வே தியேட்டரைப் பெறுவதற்கு பல வாரங்கள் ஆனதால், அதுவரை காஃப்மேன் அஸ்டோரியா ஸ்டுடியோவிலேயே பெரும்பாலான ஒத்திகைகள் நடந்தன.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், படம் எடுக்கப்பட்ட விதம் ஒரு தலைகீழ் செயல்முறையாகும் .

அதாவது ஒரு படத்தை எடுத்து முடித்த பிறகுதான் எடிட்டிங் செய்வார்கள். ஆனால் இதில் ஒத்திகையின் போதே ஒளிப்பதிவாளர் பதிவு செய்த காட்சிகளை எடிட்டர்கள் உடனுக்குடன் வெட்டிப் பார்த்து, படத்தின் வேகத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே கணக்கிட்டு வடிவமைத்தனர்.

படப்பிடிப்பின் போது கேமரா தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதால் செட் டிசைனர் தனித்துவமான கண்ணாடிகளையும் மேஜைகளையும் உருவாக்கினார்.

கேமரா திரும்பும்போது அதன் பிரதிபலிப்பில் கதாநாயகனின் முகம் மட்டுமே தெரிய வேண்டுமே தவிர, பின்னால் இருக்கும் கேமரா குழுவினர் யாருடைய நிழலும் விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தனர்.

ஒளிப்பதிவுக் குழுவினர் காலடி எடுத்து வைக்கும் படிக்கட்டுகள் கூட, ஸ்டெடிகேம் ஆபரேட்டரின் காலணி அளவிற்கு ஏற்ப சற்று அகலமாகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டன.

படம் முழுக்க ஒரே ஷாட்டாகத் தெரிய வேண்டும் என்பதால், வசனத்திலோ அல்லது ஒரு நடிகரின் அசைவிலோ ஒரு சிறிய தவறு நடந்தாலும், முழுமையாக ஆறு அல்லது ஏழு நிமிடங்கள் எடுக்கப்பட்ட காட்சி அப்படியே ரத்து செய்யப்பட்டு, மீண்டும் முதலிலிருந்து இருபது முறைக்கும் மேலாக எடுக்கப்பட்டது.

டைம்ஸ் சதுக்கத்தில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற காட்சிகள் அங்குள்ள பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தெரியாமல் ரகசியமாக எடுக்கப்பட வேண்டியிருந்ததால், ஒளிப்பதிவுக் குழுவினருக்கு வெறும் இரண்டு டேக் வாய்ப்புகள்  மட்டுமே தரப்பட்டு அந்தப் பிரம்மாண்டமான காட்சியை அவர்கள் துல்லியமாகப் பதிவு செய்து முடித்தனர்.

இயக்குனர் இன்யாரிட்டு, ஜாஸ் டிரம்ஸ் கலைஞர் அன்டோனியோ சான்செஸை அணுகி படம் முழுக்க வெறும் டிரம்ஸ் ஒலியை மட்டுமே கொண்டு பின்னணி இசை அமைக்கக் கேட்டபோது சான்செஸ் முற்றிலும் மிரண்டு போனார்.

சினிமா வரலாற்றில் அதுவரை வெறும் டிரம்ஸ் கருவிகளை மட்டுமே பிரதானமாகக் கொண்டு ஒரு முழு நீளப் படத்திற்கு இசை அமைக்கப்பட்ட முன்னுதாரணமே கிடையாது என்பதால் சான்செஸுக்கு இது ஒரு பயமுறுத்தும் சவாலாக இருந்தது.

தொடக்கத்தில் திரைக்கதையைப் படித்துவிட்டு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி டிரம்ஸ் தீம்களை சான்செஸ் முன்கூட்டியே தயார் செய்தார்.

ஆனால், இன்யாரிட்டுவுக்கு அந்தத் திட்டமிட்ட இசை வடிவம் பிடிக்கவில்லை. அவருக்குத் தேவைப்பட்டது முற்றிலும் தன்னிச்சையான, அந்த நொடியில் பிறக்கும் தாள லயம்  மட்டுமே.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இருவரும் ஸ்டுடியோவிற்குள் நுழைந்தனர். அங்கு இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் சான்செஸிடம் விவரிப்பார்.

பின்னர் சான்செஸ் டிரம்ஸை வாசிக்கத் தொடங்க, இன்யாரிட்டு தன் கைகளை உயர்த்தி சைகை காட்டுவார். ஒரு கதாபாத்திரம் கதவைத் திறக்கும் போதோ, அல்லது ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதோ இன்யாரிட்டு தன் வாயால் சில ஒலிகளை எழுப்பி தாளத்தின் வேகத்தை மாற்றியமைப்பார்.

இந்த அசாதாரண ஒத்திகை முறையில் சுமார் எழுபது இசை மாதிரிகள்  பதிவு செய்யப்பட்டன. படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்கள் நடிக்கும் போது அவர்களின் நடையையும் வசனத்தின் வேகத்தையும்  ஒழுங்குபடுத்த இந்த டிரம்ஸ் ஒலிகளையே இயக்குனர் பயன்படுத்தினார்.

அதாவது காட்சியைப் பார்த்து இசை அமைக்காமல், இசையைக் கேட்டு நடிகர்கள் தங்களின் நடிப்பு வேகத்தைத் தீர்மானித்தனர்.

இதன் காரணமாகவே, பின்னாட்களில் படத்தின் அதிகாரப்பூர்வ இசை வட்டு  வெளியான போது பெரும் வரவேற்பைப் பெற்றது.

இருப்பினும், ஆஸ்கார் விருதுக் குழு இந்தத் திரைப்படத்தின் பின்னணி இசையை இறுதிப் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கியது ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

படத்தில் டிரம்ஸ் இசையோடு சேர்த்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் புகழ்பெற்ற கிளாசிக்கல் இசைக் கோவைகளும் பயன்படுத்தப்பட்டிருந்ததால், அசல் டிரம்ஸ் இசையின் தனித்துவம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அகாடமி கமிட்டி சான்செஸின் அசல் இசையை நிராகரித்தது.

இன்யாரிட்டுவும் சான்செஸும் முறையிட்டும் கூட ஆஸ்கார் குழு தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

திரைக்கதை ஆசிரியர்களான நிகோலஸ் ஜியாகோபோன், அர்மண்டோ போ மற்றும் அலெக்சாண்டர் டினெலாரிஸ் ஆகிய மூவரிடமும் இயக்குனர் இன்யாரிட்டு இந்தத் திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கப் போவதாகக் கூறியபோது, அவர்கள் மூவருமே "இது தற்கொலைக்குச் சமமான முயற்சி, கண்டிப்பாய் சாத்தியமில்லை" என்று கூறி இன்யாரிட்டுவை தடுத்து நிறுத்தவே முயன்றனர்.

ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களும் இந்த யோசனையைக் கேட்டுவிட்டு படத்திற்குப் பணம் தர மறுத்துவிட்டனர்.

வெவ்வேறு நாடுகளில் வசித்து வந்த இந்த நான்கு எழுத்தாளர்களும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஸ்கைப்  வீடியோ கால்கள் மூலமாகவும், நள்ளிரவு இரண்டு மணி மின்னஞ்சல்கள் வழியாகவுமே விவாதித்து இந்த விசித்திரமான திரைக்கதையை எழுதி முடித்தனர்.

எடிட்டிங் செய்ய முடியாத படம் என்பதால், எந்த ஒரு காட்சியையும் பின்னாட்களில் நீக்க முடியாது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு வசனத்தையும் காகிதத்திலேயே செதுக்க வேண்டியிருந்தது.

தொடக்கத்தில் இன்யாரிட்டுவின் மனதில் மைக் கீட்டனை கதாநாயகனாகப் போடும் எண்ணம் துளிகூட இல்லை. ஆனால் திரைக்கதை முழுமையடைந்த கணத்தில், கீட்டனைத் தவிர வேறு யாரும் இதற்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று முடிவெடுத்தார்.

மைக் கீட்டன் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட போது, இயக்குனர் தன்னை வைத்து ஏதேனும் பகடி செய்கிறாரா அவர் நிஜ வாழ்க்கையிலும் பேட்மேன் படங்களுக்குப் பிறகு புகழிழந்தவர் என்பதால் என்று நேரடியாகவே இன்யாரிட்டுவிடம் கேட்டு தெளிவு பெற்றார்.

படத்திற்கு நிதி திரட்டுவதில் பெரும் இழுபறி நீடித்தது. ஃபாக்ஸ் சர்ச்லைட் நிறுவனம் முதலில் பட்ஜெட் அதிகம் என்று பின்வாங்கியது.

பின்னர் நியூ ரீஜென்சி நிறுவனம் இணைந்த பிறகே நிதி கிடைத்தது. ஆரம்பத்தில் எட்வர்ட் நார்டன் நடித்த மைக் ஷைனர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது ஜோஷ் ப்ரோலின்  ஆகும்.

கடைசி நேரத்தில் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடிகளால் அவரால நடிக்க முடியாமல் போக, நார்டன் உள்ளே வந்தார்.

எட்வர்ட் நார்டன் இந்தத் திரைக்கதையைத் தனது நண்பர் மூலம் பெற்று, நள்ளிரவில் படித்து முடித்தபோது,
பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து கொள்ளும் அளவிற்குத் தனியாகச் சிரித்துள்ளார்.

மறுநாளே இன்யாரிட்டுவைச் சந்தித்து, தியேட்டர் உலகின் நிஜமான ஆழம் தெரிந்த ஒருவரைத்தான் இந்த பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி அந்த வாய்ப்பை வாங்கியுள்ளார்.

இயக்குனர் இன்யாரிட்டு, படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிலிப் பெட்டிட் என்ற உலகப் புகழ்பெற்ற கயிறு நடனக் கலைஞர் இரண்டு உயரமான கட்டிடங்களுக்கு நடுவே கயிற்றில் நடக்கும் "மேன் ஆன் வயர்"  புகைப்படத்தை விநியோகித்தார்.

நாம் அனைவரும் இப்போது இந்த ஆபத்தான கயிற்றில்தான் நடக்கப் போகிறோம், விழுந்தால் மரணம் என்ற ஒருவித பதற்றத்துடனேயே ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் நடத்தி முடித்தார்.

திரைப்படத்தின் எடிட்டர்களான டக்ளஸ் க்ரைஸ் மற்றும் ஸ்டீபன் மிரியோன் ஆகிய இருவருக்கும் இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய அக்னிப்பரீட்சையாக இருந்தது.

வழக்கமான திரைப்படங்களில் ஒரு காட்சியின் வேகத்தை எடிட்டிங் வெட்டுகள் மூலமாகக் கூட்டிக்குறைக்க முடியும். ஆனால், இதில் இயக்குனர் அந்தப் பாதுகாப்பு வலையை  முற்றிலும் அறுத்தெறிந்து விட்டதால், எடிட்டர் டக்ளஸ் க்ரைஸ் படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு நாளும் தளத்திலேயே அமர்ந்து காட்சிகளை எப்படி இணைப்பது என்று கேமரா குழுவோடு விவாதிக்க வேண்டியிருந்தது.

கேமரா வேகமாக சுழலும் போதோ  அல்லது ஒரு நடிகரின் உடலின் மீது கேமரா கடக்கும் போதோதான் அடுத்த காட்சிக்கான ஒட்டுவேலையை அவர்களால் செய்ய முடிந்தது.

படத்தின் கணினி வரைகலை பணிகளை மாண்ட்ரியல் நகரைச் சேர்ந்த ரோடியோ எஃப்எக்ஸ்  நிறுவனம் மேற்கொண்டது. படத்தின் தொண்ணூறு சதவீத பிரேம்களில் இவர்களின் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டது.

நாடக மேடையின் பின்னணி அறைகளில் ஏகப்பட்ட கண்ணாடிகள் இருந்ததால், கேமரா நகரும் போது அதில் தெரியும் கேமரா மேன் மற்றும் பிற குழுவினரின் பிம்பங்களை டிஜிட்டல் முறையில் ஒவ்வொன்றாக நீக்குவது இவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது.

இதற்காகப் பிரத்யேகமாக கண்ணாடியின் அழுக்குகளை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, பின்னர் குழுவினர் இல்லாத டிஜிட்டல் பின்னணியை உருவாக்கி ஒட்டினர்.

கதாநாயகன் நியூயார்க் நகர வீதிகளில் காற்றில் பறப்பது போன்ற புகழ்பெற்ற காட்சிக்காக மட்டும் சுமார் மூன்று வாரங்கள் முன்கூட்டியே கணினியில் அனிமேஷன் வரைபடம்  தயாரிக்கப்பட்டது.

ஒளிப்பதிவாளர் லுபெஸ்கி ஒரு லாரியின் மீது கேமரா  பொருத்தி நியூயார்க் தெருக்களின் பின்னணியை மட்டும் தனியாகப் படம் பிடித்தார்.

பின்னர் மாண்ட்ரியல் ஸ்டுடியோவில் மைக் கீட்டனை பச்சைத் திரைக்கு முன்னால் நிறுத்தி, நியூயார்க் கட்டிடங்களின் செங்கல் நிறப் பிரதிபலிப்பும், வானத்தின் நீல நிற வெளிச்சமும் அவரது முகத்தில் கச்சிதமாக விழும் வகையில் எல்இடி பேனல்களைக் கொண்டு ஒளியமைப்பைச் செய்து அசத்தினர்.

ஒலி வடிவமைப்பாளர் மார்ட்டின் ஹெர்னாண்டஸ் இப்படத்தின் ஒலியமைப்பிற்காகப் புதிய உத்தியைக் கையாண்டார்.

வழக்கமாக கேமரா கோணம் மாறும்போது பின்னணிச் சத்தத்தின் தன்மையும் மாறும். ஆனால் இதில் காட்சிகள் நதியின் ஓட்டத்தைப் போலத் தொடர்ச்சியாக இருந்ததால், கேமரா நகர நகர ஒலியின் திசையும் அதற்கேற்ப துல்லியமாக மாறிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

குறிப்பாக, நாடக மேடையில் எட்வர்ட் நார்டன் போதையில் குளறுபடி செய்யும் காட்சியில், தியேட்டர் பார்வையாளர்களின் விதவிதமான எதிர்வினைகளை  ஒலியாக வடிவமைக்க மட்டும் ஐந்து ஒலி வடிவமைப்பாளர்கள் தொடர்ந்து நான்கு மாதங்கள் உழைத்தனர்.

இறுதியாக, டெக்னிகலர் நிறுவனத்தின் ஸ்டீவன் ஸ்காட் தலைமையிலான குழுவினர் இப்படத்திற்கான வண்ணத் திருத்தங்களை  மேற்கொண்டனர்.

எடிட்டிங் வெட்டுகள் இல்லாத ஒரு படத்தில், கேமரா ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு நகரும் போது மாறும் ஒளியமைப்பிற்கு ஏற்ப, வண்ணக் கலவையும் பார்வையாளர்களுக்குத் தெரியாமல் இயல்பாக மாற வேண்டும்.

இதற்காக நகரும் காட்சிகளுக்கு இடையே பிரத்யேக டிஜிட்டல் வெட்டுகளை உருவாக்கி, மென்பொருட்களின் உதவியோடு வண்ணங்களை ஒன்றோடு ஒன்று இழைத்தனர்.

மைக் கீட்டனின் முகம் எவ்வித ஒளியமைப்பிலும் தெளிவாகத் தெரிவதற்காக, நகரும் கேமராவிற்கு ஏற்ப அவரது முகத்திற்கான பிரகாசத்தை கைகளாலேயே அனிமேஷன் செய்து சரிசெய்தனர்.

திரைக்கதை எழுதப்பட்ட போது இப்படத்திற்கு முற்றிலும் வேறொரு சுவாரஸ்யமான கிளைமாக்ஸ் யோசித்து வைக்கப்பட்டு, பாதிப் படப்பிடிப்பு வரை அதுவே இறுதி முடிவாகவும் இருந்தது.

அந்த அசல் கதையாடலின்படி, நாடக மேடைக் காட்சிகளுக்குப் பிறகு தியேட்டரின் மேக்கப் அறைக்குள் உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜானி டெப் அமர்ந்திருப்பது போலக் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

அவரது பின்னணியில் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்  படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். ஜானி டெப் தனது புகழ்பெற்ற ஜாக் ஸ்பாரோ குரலில் அந்த போஸ்டரைப் பார்த்து, நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று கேட்பது போலவும், வணிகக் சினிமாவின் முடிவில்லா சுழற்சியை ஒரு நையாண்டியோடு முடிப்பது போலவுமே முதலில் திட்டமிடப்பட்டது.

ஆனால், இந்த முடிவு மிகவும் அற்பமாக இருக்கும் என்று உணர்ந்த இயக்குனர் இன்யாரிட்டுவுக்கு, ஒரு நாள் இரவில் வந்த கனவின் மூலமே தற்போது படத்தில் இருக்கும் அந்த மாயாஜால மருத்துவமனை ஜன்னல் கிளைமாக்ஸ் உருவானது.

படப்பிடிப்பு தளம் எப்போதுமே ஒரு போர்க்களம் போன்ற அழுத்தத்துடனேயே காணப்பட்டது. ஏனெனில், ஒரு காட்சியில் நாற்பதிற்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பங்களிப்பு ஒரே நேரத்தில் கச்சிதமாக அமைய வேண்டியிருந்தது.

ஒவ்வொரு நாளும் ஒரு நீண்ட காட்சியை எவ்விதத் தவறும் இன்றிப் படம்பிடித்து முடித்ததும், ஒட்டுமொத்தப் படப்பிடிப்புத் தளமும் ஒரு நிஜமான தியேட்டர் நாடகம் வெற்றிகரமாக முடிந்ததைப் போலக் கத்திக் கூச்சலிட்டு, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நடிகை எம்மா ஸ்டோன் ஒரு காட்சியில் வேகமாகத் திரும்பி நடக்கும்போது கேமரா கோணத்தைவிட ஒரு நொடி முன்கூட்டியே திரும்பியதால், ஒட்டுமொத்த ஆறு நிமிடக் காட்சியும் வீணாகிப்போனது.

இருப்பினும், இந்த அதீதக் கட்டுப்பாடான சூழல்தான் தங்களுக்குள் இருந்த சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வர உதவியதாக நடிகர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

ரேமண்ட் கார்வர் எழுதிய சிறுகதையை நாடகமாகப் பயன்படுத்தும் உரிமை  கிடைப்பதில் தயாரிப்புத் தொடக்கத்தில் பெரும் சவால் நீடித்தது.

ஒருவேளை உரிமை மறுக்கப்பட்டால் ஒட்டுமொத்தத் திரைக்கதையையும் மாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், கார்வரின் மனைவியும் எழுத்தாளருமான டெஸ் காலகர் திரைக்கதையைப் படித்துவிட்டு, இதன் நகைச்சுவைத் தன்மையைப் பாராட்டி உடனடியாக அனுமதி வழங்கினார்.

மேலும், படத்தின் மேக்கப் அறை கண்ணாடியில் புகழ்பெற்ற எழுத்தாளர் சூசன் சோண்டாக்கின் வரிகள்  மறைமுகமாக எழுதப்பட்டிருந்ததும், கதாநாயகனின் வீழ்ச்சியை கிரேக்கக் கதைகளின் ஈகாரஸ்  பாத்திரத்தோடு ஒப்பிட்டு விமர்சகர்கள் கொண்டாடியதும் இப்படத்தின் கலை மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியது.

இறுதியாக, 2014 ஆம் ஆண்டு வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் தொடக்கத் திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு உலகக் கவனத்தை ஈர்த்த இப்படம், ஆஸ்கார் வரலாற்றில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் 16.5 மில்லியன் டாலர் எடுக்கப்பட்டு, எடிட்டிங் வெட்டுகள் இன்றி சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற ஒரு அரிய சாதனையைப் படைத்தது.

அத்தோடு, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நூறு சிறந்த திரைப்படங்களின் வாசகர்கள் தேர்வுப் பட்டியலில் இப்படம் முக்கிய இடத்தைப் பிடித்து, உலகத் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத காவியமாகத் தன் பயணத்தை நிறைவு செய்தது.

============================
ரிகன் தாம்சன் (மைக் கீட்டன்) என்பவர் 1989 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில் ஒரு புகழ்பெற்ற திரைப்பட முத்தொகுப்பில் பேர்ட்மேன் என்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற ஒரு மங்கிப்போன நடிகர் ஆவார்.

அவர் தன் கடந்த காலப் போலிப் புகழின் அடையாளமாக விளங்கும் பேர்ட்மேன் கதாபாத்திரத்தின் கிண்டலான மற்றும் விமர்சனப் போக்கிலான உள்மனக் குரலால் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்.

அதுமட்டுமன்றி, ரிகன் தனக்கு காற்றில் மிதக்கும் லெவிடேஷன் சக்தியும், பொருட்களைத் தொடாமல் நகர்த்தும் டெலிகினெசிஸ் சக்தியும் இருப்பதாக அடிக்கடி கற்பனை செய்து பார்க்கிறார்.

இந்த நிலையில், அவர் இழந்த தன் கலை அங்கீகாரத்தை மீண்டும் மீட்டெடுப்பதற்காக ரேமண்ட் கார்வர் எழுதிய "வாட் வி டாக் அபௌட் வென் வி டாக் அபௌட் லவ் "என்ற புகழ்பெற்ற சிறுகதையைத் தழுவி, அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, பிராட்வே மேடையில் ஒரு நாடகமாக அரங்கேற்ற தீவிரமாக முயல்கிறார்.

ஆனால், அவரது உள்மனதில் ஒலிக்கும் பேர்ட்மேன் குரலோ, அவர் மீண்டும் வணிக ரீதியிலான பிரம்மாண்ட திரைப்பட உலகிற்கே திரும்ப வேண்டும் என்றும், அதுதான் அவரது உண்மையான அடையாளம் என்றும் வற்புறுத்துகிறது.

இந்த நாடகத்தை ரிகனின் சிறந்த நண்பரும் அவரது வழக்கறிஞருமான ஜேக் (சாக் கலிஃபியானாகிஸ்) தயாரித்து வருகிறார். இந்த நாடகத்தில் ரிகனின் காதலியான லாரா (ஆண்ட்ரியா ரைஸ்பரோ) மற்றும் பிராட்வே உலகிற்குப் புதியவரான லெஸ்லி (நவோமி வாட்ஸ்) ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

ரிகனின் மகளும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வந்தவருமான சாம் (எம்மா ஸ்டோன்) என்பவருடன் ரிகன் மீண்டும் ஒரு நல்ல தந்தைக்கான உறவை ஏற்படுத்த முயலும் வேளையில், சாம் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றுகிறார்.

நாடகத்தின் முதல் முன்னோட்டக் காட்சிக்கு  முந்தைய நாள், ரிகனின் திறமையற்ற சக நடிகரான ரால்ஃப் (ஜெரமி ஷாமோஸ்) என்பவரின் தலையில் தற்செயலாக ஒரு விளக்கு சாதனம் விழுந்து அவர் காயமடைகிறார்.

இதையடுத்து லெஸ்லியின் பரிந்துரையின் பேரில், ரால்ஃபிற்குப் பதிலாக அவளது காதலனும், மேடை நாடக உலகில் மிகவும் திறமையானவனும், அதே சமயம் தற்பெருமை மிக்கவனும், கணிக்க முடியாத கோபக்காரனுமான மெத்தட் ஆக்டர் மைக் ஷைனர் (எட்வர்ட் நார்டன்) என்பவரை ரிகன் ஒப்பந்தம் செய்கிறார்.

ஆனால், நாடகத்தின் ஆரம்பக்கட்ட முன்னோட்டக் காட்சிகள் மிகவும் மோசமான தோல்வியாக அமைகின்றன.

நாடகத்தின் முதல் காட்சியின் போது, மேடையில் வைக்கப்பட்டிருந்த போலி மதுபானத்திற்குப் பதிலாக சாதாரணத் தண்ணீர் இருந்ததைக் கண்டு மைக் கோபமடைந்து தனது கதாபாத்திரத் தன்மையிலிருந்து விலகி நாடகத்தைக் கெடுக்கிறார்.

மற்றொரு காட்சியின் போது, லெஸ்லியுடன் நடிக்கும் பாலியல் காட்சியின் போது அவளை நிஜமாகவே வன்புணர்வு செய்ய முயல்கிறார்.

மேலும், மேடையில் பயன்படுத்தப்படும் போலித் துப்பாக்கி பார்ப்பதற்கு இயற்கை எழிலுடன் அசலாக இல்லை என்றும் பொதுவெளியில் கத்துகிறார்.

இதற்கிடையே, சாம் கஞ்ஜா புகை பிடிப்பதை ரிகன் கண்டு பிடித்து அவளைக் கடிந்து கொள்ளும்போது, சாம் மிகக் கோபமாக ரிகனைத் திருப்பித் தாக்கிப் பேசுகிறாள்.

ரிகன் தற்கால உலகிற்கு முற்றிலும் தேவையற்றவர் என்றும், இந்த நாடகத்தை அவர் கலைக்காகச் செய்யாமல் தன் சொந்தத் தற்பெருமைக்காகவும் அகந்தைக்காகவும் மட்டுமே செய்கிறார் என்றும் கூறி அவமானப்படுத்துகிறாள்.

இதற்கிடையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் மைக்கின் நேர்காணல் ஒன்று வெளியாகிறது.

அதில், ரிகன் தனக்கு ஏன் இந்த நாடகத்தைச் செய்ய வேண்டும் என்று கூறிய தனிப்பட்ட காரணங்களை மைக் திருடித் தன் சொந்தக் காரணமாகக் கூறிப் பேட்டி அளித்திருப்பதை ரிகன் படிக்கிறார்.

இதனால் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, அது ஒரு பெரிய கைகலப்பாகவும் சண்டையாகவும் மாறுகிறது.

நாடகத்தை இத்துடன் நிறுத்திவிடலாம் என்று ரிகன் நினைக்கும் போது, தயாரிப்பாளர் ஜேக் அவரைச் சமாதானப்படுத்தி நாடகத்தைத் தொடர்ந்து நடத்த ஒப்புக்கொள்ள வைக்கிறார்.

நாடகத்தின் இறுதி முன்னோட்டக் காட்சியின் போது, மேடைக்கு பின்புறத்தில் மைக்கும் சாமும் முத்தமிட்டுக் கொள்வதை ரிகன் பார்க்கிறார்.

இதனால் மனமுடைந்து தியேட்டருக்கு வெளியே புகை பிடிக்கச் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக தீயணைப்பு அவசரக் கதவு மூடிக்கொண்டு அவரது ஆடை அதில் மாட்டிக்கொள்கிறது.

வேறு வழியின்றித் தன் உள்ளாடையுடன் மட்டுமே ரிகன் பரபரப்பான டைம்ஸ் சதுக்கத் தெருக்களில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே நடந்து வந்து, தியேட்டரின் முன்வாசல் வழியாக பார்வையாளர்களுக்கு இடையே புகுந்து மேடைக்கு வந்து தனது இறுதிப் பகுதியை நடித்து முடிக்கிறார்.

நாடகம் முடிந்ததும் அவரது ஆடை மாற்றும் அறைக்கு வரும் சாம், ரிகனின் இந்த செயல் மிகவும் விசித்திரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்ததாகக் கூறுகிறாள்.

மேலும், அவர் உள்ளாடையுடன் டைம்ஸ் சதுக்கத்தில் ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவிட்டதையும், அதன் மூலம் அவருக்குப் லட்சக்கணக்கான புதிய ரசிகர்கள் உருவாவதால் இது நாடகத்தின் வெற்றிக்கு எப்படியெல்லாம் உதவும் என்றும் விளக்குகிறாள்.

மன உளைச்சலில் இருக்கும் ரிகன் ஒரு மதுபான விடுதிக்குச் செல்லும்போது, அங்கு மிகவும் செல்வாக்கு மிக்க நாடக விமர்சகரான தபிதா டிக்கின்சன் (லிண்ட்சே டங்கன்) என்பவரைச் சந்திக்கிறார்.

தபிதா ரிகன் போன்ற ஹாலிவுட் வணிக நடிகர்கள் மீது தனக்கிருக்கும் வெறுப்பை வெளிப்படையாகக் கூறுகிறாள்.

மேலும், அவரது நாடகத்தை தான் பார்க்கப் போவதே இல்லை என்றும், பார்க்காமலேயே தனது கடுமையான விமர்சனத்தின் மூலம் அந்த நாடகத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போவதாகவும் சபதமிடுகிறாள்.

இதனால் விரக்தியடைந்த ரிகன் ஒரு பாட்டில் விஸ்கியை வாங்கி முழுமையாகக் குடித்துவிட்டு, தியேட்டருக்குச் செல்லும் வழியில் ஒரு கடையின் வாசலிலேயே மயங்கி விழுகிறார்.

மறுநாள் காலை கடுமையான தலைவலியுடன்  தியேட்டரை நோக்கி நடக்கும்போது, அவரது உள்மனப் பேர்ட்மேன் உருவம் மீண்டும் தோன்றி, இந்த நாடகத்தைக் கைவிட்டுவிட்டு மீண்டும் பேர்ட்மேன் படத்தின் நான்காம் பாகத்தை எடுக்க வற்புறுத்துகிறது.

அந்த மனநிலையில், ரிகன் தான் மேன்ஹாட்டன் நகரின் கட்டிடங்களுக்கு மேலே காற்றில் பறப்பது போலக் கற்பனை செய்து, பறந்து வந்து தியேட்டரின் வாசலில் இறங்குகிறார்.

நாடகத்தின் அதிகாரப்பூர்வமான தொடக்க இரவன்று , காட்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக அரங்கேறுகின்றன.

இடைவேளையின் போது தன் அறைக்கு வரும் முன்னாள் மனைவி சில்வியா (அமி ரையான்) என்பவரிடம் ரிகன் ஒரு ரகசியத்தை அமைதியாக ஒப்புக்கொள்கிறார்.

பல வருடங்களுக்கு முன்பு தனக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை சில்வியா கண்டுபிடித்தபோது, தான் கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றதை விவரிக்கிறார்.

மேலும், தனக்கு பேர்ட்மேன் குரல் கேட்பதையும் கூறுகிறார், ஆனால் சில்வியா அதை ஒரு மனநலப் பாதிப்பு என்று நினைத்து அலட்சியப்படுத்துகிறாள்.

சில்வியா வெளியேறியதும், ரிகன் நாடகத்தின் இறுதி தற்கொலைக் காட்சிக்காகப் பயன்படுத்தும் போலித் துப்பாக்கிக்கு பதிலாக ஒரு உண்மையான துப்பாக்கியை எடுத்துக்கொள்கிறார்.

நாடகத்தின் உச்சக்கட்டக் காட்சியின் போது, மேடையில் ரிகனின் கதாபாத்திரம் தற்கொலை செய்துகொள்ளும் இடத்தில், ரிகன் நிஜமாகவே துப்பாக்கியால் தன் தலையில் சுட்டுக் கொள்கிறார்.

இதைப் பார்த்த பார்வையாளர்கள் அது ஒரு நிஜமான நடிப்புத் நுட்பம் என்று நினைத்து எழுந்து நின்று கைதட்டி  ஆரவாரம் செய்கிறார்கள்.

மறுநாள் ரிகன் ஒரு மருத்துவமனையில் கண்விழித்துப் பார்க்கிறார். அவர் சுட்டுக் கொண்டதில் அவரது மூக்கு மட்டுமே சிதைந்து போயிருந்ததும், அது அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதையும் அறிகிறார்.

தியேட்டர் விமர்சகர் தபிதா டிக்கின்சன் தனது நாளிதழில் ரிகனின் தற்கொலை முயற்சியை ஒரு புதிய அசாத்திய நடிப்பு முறை என்று தப்பாகப் புரிந்து கொண்டு, நாடகத்தைப் பாராட்டி மிக உன்னதமான ஒரு நேர்மறை விமர்சனத்தை எழுதியிருக்கிறாள்.

சாம் அவரைப் பார்க்க மலர்களுடன் வருகிறாள், மேலும் ரிகனுக்காகத் தான் உருவாக்கிய ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்துவிட்டதைக் காட்டி மகிழ்ச்சியடைகிறாள்.

பூக்களை வைப்பதற்கு ஒரு பூச்சாடியைக்  கண்டுபிடிப்பதற்காக சாம் அறையை விட்டு வெளியே செல்கிறாள். அந்த நேரத்தில் ரிகன் கழிவறைக்குச் சென்று தன் முகத்தில் இருக்கும் கட்டுகளைப் பிரித்து, வீங்கியிருக்கும் தன் புதிய மூக்கைப் பார்க்கிறார். பின்னர் கண்ணாடி வழியாகத் தன் பின்னால் இருக்கும் பேர்ட்மேன் உருவத்திற்கு விடைதருகிறார்.

பின்னர் ஜன்னலுக்கு வெளியே பறக்கும் பறவைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு, ஜன்னலைத் திறந்து அதன் விளிம்பில் ஏறி நிற்கிறார்.

பூச்சாடியுடன் அறைக்குள் திரும்பும் சாம், ரிகன் இல்லாத வெற்று அறையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, திறந்திருக்கும் ஜன்னலை நோக்கி ஓடி வருகிறாள்.

முதலில் கீழே தரையைப் பார்த்துப் பதற்றமடையும் சாம், பின்னர் மெதுவாகத் தன் பார்வையை மேலே வானத்தை நோக்கி உயர்த்தி, அங்கு ஏதோ ஒரு அதிசயத்தைக் காண்பது போலப் புன்னகைக்கிறாள். அத்துடன் படம் கவித்துவமாக நிறைவடைகிறது.

இத்திரைப்படம் சமகால மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான பல தத்துவார்த்தச் செய்திகளை வழங்குகிறது.  மனிதன் தன் வாழ்வின் உண்மைத் தன்மையை உணராமல் பிறரது பாராட்டு, சமூக அங்கீகாரம் மற்றும் போலிப் புகழுக்காக ஏங்கும்போது அவனது அக உலகம் எவ்வாறு சிதறடிக்கப்படுகிறது என்பதுதான் இதன் முக்கிய செய்தி.

நாம் யார் என்பதை நமக்குள் தேடாமல், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற பிம்பத்தின் பின்னால் ஓடுவதே மனித துயரங்களின் தொடக்கம் என்பதை ரிகன் தாம்சன் பாத்திரத்தின் மூலம் இப்படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

கடந்த கால வெற்றிகளின் நிழலிலும், இழந்த இளமையின் நினைவுகளிலும் தேங்கி நிற்பது ஒரு மனிதனை தற்கால வாழ்க்கையிலிருந்து முற்றிலும் துண்டித்துவிடும் என்ற எச்சரிக்கையையும் இப்படம் தருகிறது.

தன் அகந்தையை  ஒரு மாற்று உருவமாக மாற்றி, தனக்குத் தானே சித்திரவதையை உருவாக்கிக் கொள்ளும் மனித மனதின் விசித்திரத்தை இது அம்பலப்படுத்துகிறது.

கலைக்கும் வணிகத்திற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டைப் பற்றிப் பேசும் இப்படம், இன்றைய சமூக ஊடகக் கலாச்சாரத்தையும் கூர்மையாக நையாண்டி செய்கிறது.

ஒரு மனிதனின் உண்மையான திறமையோ அல்லது அவனது ஆழமான கலை முயற்சியோ தற்கால உலகில் எளிதாகக் கவனிக்கப்படுவதில்லை,

மாறாக, அவன் உள்ளாடையுடன் தெருவில் ஓடி வைரலாகும் ஒரு விபத்தே அவனை ஒரே இரவில் உலகப் புகழ்பெற்றவனாக மாற்றுகிறது என்ற கசப்பான உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஒரு மனிதன் எப்போது தனக்கு வெளியேயுள்ள போலி பிம்பங்களை உடைத்து, பிறரின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தன் அகந்தையைக் கடந்து செல்கிறானோ, அப்போதுதான் அவனுக்கு உண்மையான விடுதலையும் மன அமைதியும் கிடைக்கும் என்ற உன்னதமான தத்துவத்தை இப்படம் தன் இறுதிப்பகுதியின் வழியாக நமக்கு உணர்த்துகிறது.

#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) ஆஸ்கர் (102) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)